அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தீவில் தங்கியவன் கதை
2

ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.

பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே சிலராகிலும், "சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப் பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேபேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய "விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன் - பொறுத்திடுக! - திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக்கூடினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில் - தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் - அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப் பேசினார்.

திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது! நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும். "விடுதலை பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே'' என்று கூறிவிடவேண்டும்! நாம், ஏன் நம்முடைய உடைமையை உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது?'' என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில். கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில் கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்றுகூடச் சொல்லலாம்!!

"அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் "அன்பர்' முன்னின்று நடத்தட்டும் - நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்'' என்று கூறினேன் - தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட "பொறுமை'யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் "பொறுமை'யாக இருக்க முடியும்!!

வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருடைய, பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்துகொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.

குருஷேவின் கோபமோ, ஐசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக்கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும் - எனவேதான், அவர்களின் போக்குபற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.

தனிப் பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

காரணமற்றுக் கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.

ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப் பட்டதுண்டா?

இங்கிலாந்து நாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பல முறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத்தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.

ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.

எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள் என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது "செய்தி' என்றே நம்பப்பட்டது.

"கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்.''

"தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது.''

"கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்.''

"இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்.''

"நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க.''

"பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!''

"ஆமாம்! உடனே! இப்போதே.''

"போர்! போர்! போர்!''

அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில் தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகை யில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று, இந்த விதப் பேச்சு! தம்பி! போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில்தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதைவெட்டிப் போட்டுவிடவுமில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர் மூண்டிட, பலருக்குக் கண் போயிற்று, கால் போயிற்று, கரம் போயிற்று, சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.

இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும் - அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர் களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே - விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.

எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும் என்ற பயம் இருக்கிறது.

பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்துவிட்டிருக்கிறது.

பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர் - விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார், நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர் என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.

உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, ஐசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர்; அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்து கூறலாம்.

தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி. வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில்சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.

"தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால்கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்றான் பரிவுடன்.

"பரவாயில்லை. இடம் கிடைத்ததே, அது போதும்'' என்றார், அவர்.

இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, "ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம். கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் விட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?'' என்றான்.

விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு'' என்றான்.

"அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?'' என்று சிறிது கோபத்துடன் கூறினான்.

"வேதாந்தியா... யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!'' என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.

"கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி!''

"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''

"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க...''

பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.

நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.

இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழி மொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.

அதுபோன்றே தம்பி! பெருந்தலைவர்களில் தமக்கு பிடித்த மானவரைப்பற்றி "விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! என்று அந்தத் தலைவர்கள், கூறிடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.

ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக்கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச் செய்ய அல்ல - கெடுக்கத்தான் பயன்படுகின்றன.

மிகச் சிலர் தவிர, பலரும் தமக்குள்ள வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை. "விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் "சிந்தனை'யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.

தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ளவேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் "கருத்து' கவைக்கு உதவாது.

பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.

இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது என்று கூறலாம்.

மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடுபட்டிருக்கின்றனர்.

மிகந்த பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.

குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று ஐசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டு விட்டால், அவர்கள் இருவரும், ஐசனோவரின் அணியில் இருக்கக் கடமைப் பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைந்திடப் பாடுபட்டனர் - பண்பு அதுவன்றோ!

பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ, தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இந்நேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.

"விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை!'' என்று தூண்டிவிடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.

பிரான்சு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்க முடியும்.

எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப் பெரிய நாடுகள் செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க, ரஷ்யா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால் தரத்திலே உயர்ந்தோராயினர்.

இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை ஆகியவற்றை எடுத்துக்கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு - நடைபெறாத மாநாடு - இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.

இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர் பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப்புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.

உங்களுக்கு ஏற்படலாமா இந்த அவமதிப்பு!

எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்! - என்று தூண்டிவிட்டிருப்பர் - பிறகு? போர்தான். இரத்தம்கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட அந்த முதலாளிகள்.

இரண்டு உலகப் பெரும் போர்களின்போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், "தூபம்' வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.

அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிக மிக, உதவிற்று.

இத்தகைய, சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று, மாக்மிலன், தெ'கோல் போன்றார், இடைவிடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகைநீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது; ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான் மிஞ்சும்.

இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர்வெறி ஒடுங்கிவிடுகிறது.

போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துவிட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.

தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம். அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான்.

ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப் பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது - இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.

கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!

"எம்மோடு வரச் சம்மதமா?'' என்று கேட்கிறான், படகில் வந்தோன்.

"ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,'' என்றான்.

கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப்பிறந்தவன்!

ஆம், தம்பி! வாழப்பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.

அண்ணன்,

29-5-1960