அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தென்னகம் பொன்னகம்
1

தாயும் மகனும், கருத்துக் கதை -
தமிழ் மரபு மறக்கப்பட்ட சோகம் -
டில்லியின் அதிகாரம்

தம்பி!

வழக்கப்படி, இயலாதார், நான் அடுக்குமொழி கூறுகிறேன் என்று அங்கலாய்த்துக் கொள்ளட்டும் - எனக்கென்னவோ, நாளெல்லாம் நாம் அனைவருமே, "தென்னகம் பொன்னகம்' என்று கூறிக், கூறும்போதே கிடைத்திடும் தேனினுமினிய சுவையினைப் பெற்றிட வேண்டுமெனத் தோன்றுகிறது. உண்மையினை உணராதாரும், உரிமை உணர்ச்சியினைப் பெற்றிடாதவரும், நாம் கூறுவதை வெற்றுரை என்று பழிக்கின்றனர்; உணர்ந்த பின்னும் பழித்துப் பேசிடின், உள்ளபடி கவலையும் ஓரளவு கலக்கமும் நமக்கு ஏற்படவேண்டும்; ஆனால், நமது இலட்சியத்தை வெற்றுரை என்று கூறுவோரில் மிகப் பெரும்பாலோர், உண்மையினை உணராதார்; எனவேதான், அவர்தம் கூற்று, கூச்சலளவிலே வளரும் போதுகூட எனக்குச் சீற்றம் பிறப்பதில்லை. நாம் எதை அறிந்து, அகமிக மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வயப்பட்டிருக்கிறோமோ, அதனை அவர்கள், இன்னமும் அறிந்துகொண்டாரில்லை; அதனால்தான் அவர்கட்கு, எழுச்சி ஏற்படவில்லை. உண்மையை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்பதுமட்டுமல்ல, உண்மை அல்லாத ஒன்றினை அவர்கள் மிகப் பெரிய உண்மை, மறுத்திடவொண்ணா உண்மை என்று நம்பிக்கொண்டும் உள்ளனர்; எனவேதான், அவர்களிடம் எழுச்சி ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; குறைமதி அவர்தம் கோபத்தைக் கிளறியும் விட்டுவிடுகிறது. என் செய்வர்!

* * *

"ஐயய்யோ மகனே!' என்று அலறியபடி ஓடோடிவந்து, கீழே வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டு, கோவெனக் கதறுகிறாள் தாய். மகன், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கால் இடறிக் கீழே வீழ்ந்தான். கனி பறிக்கத்தான் சென்றான், கருந்தேள் கொட்டிவிட்டது, வீழ்ந்தான் கீழே: கீழேயோ ஓர் கருங்கற் பாறை; பாறையிலே மண்டை மோதிற்று; மோதவே, மூளை குழம்பிப்போய்விட்டது; நினைவு அழிந்துபட்டது; தன்னைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு அழுபவள், தன்னைப் பெற்றவள் என்பதுகூடத் தெரியவில்லை அவனுக்கு; வெறிச் சென்று பார்க்கிறான்; விவரம் தெரியாமல் பேசுகிறான்; எழுந்தோட முயற்சிக்கிறான்; இளிக்கிறான்; எதிர்ப்பட்டோரை இடிக்கிறான்.

மகனுடைய நிலை கண்டு, தாய், மேலும் கதறுகிறாள். "மகனே! மகனே! இப்படிப் பாரடா, அப்பா! இதோ, பார்! ஒரு ஆபத்தும் இல்லை, உனக்கு; நான் இருக்கிறேன், உன்னைக் காப்பாற்ற! என்னைப் பாரடா, மகனே! இப்படிப் பார்! என் முகத்தைப் பார்!'' என்று பேசுகிறாள்... நினைவு இழந்தவனோ இடிஇடியெனச் சிரித்துவிட்டு, "இவள் எப்படி இங்கு வந்தாள்? கடை வீதியில், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னமல்லவோ, இந்த மூதாட்டி? இவள் என்னைத் தன் மகனென்று சொல்கிறாளே'' என்று கூறுகிறான்; கைகொட்டி நகைக்கிறான்; கூடி நிற்போரைக் கண்டு, "காணீர் இவள் பேதமையை! நான், இவள் மகனாம்!'' என்று கூறிக்கெக்கலி செய்கிறான்.

மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததால், நினைவு அழிந்துவிட்டது. பெற்றெடுத்த தாயையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, என்பதைத் தாய் தெரிந்துகொள்கிறாள். சொல்லொணாத் துயரம் இதயத்தைப் பிய்த்தெறிகிறது; எனினும் இந்தச் சமயம், புலம்ப அல்ல, மகனுடைய மனக்குழப்பத்தைப் போக்கும் மருந்துதேட, என்பதனை உணர்ந்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஆமடா மகனே, ஆமாம்! நான் ஆப்பம் சுட்டு விற்கும் அன்னம்தான். உன் அன்னை அல்ல.'' என்று கூறி, அவனைச் சாந்தப்படுத்தி, தக்கதோர் மருத்துவனை நாடி, அவர் தந்திடும் மூலிகையினை முறை தவறாதபடி பயன்படுத்தி, குளிர் நீரில் குளிப்பாட்டியும், குறிஅறிந்து மருந்தூட்டியும், மனம் கோணாமற் பேசியும், மகனைக், கண்ணினைக் காத்திடும் இமை எனக் காத்துவருகிறாள். மனக்குழப்பம் நீங்குகிறது: நைந்து போயிருந்த நினைவுத்தொடர், மீண்டும் சரியாகிவிடுகிறது; தூசி துடைக்கப்பட்ட கண்ணாடி போலாகிறது மனம்; கூட இருந்து, இன்முகங் காட்டி மருந்தூட்டி வருபவள், தன் தாய் என்பது தெரிகிறது; உடனே உணர்ச்சி வயப்பட்டு தாளைப் பற்றிக்கொண்டு, தழதழத்த குரலில், "தாயே! தாயே! நாயேன் செய்த பிழை பொறுத்திடுவாய்'' என்று கூறுகிறான். "மீண்டும் பெற்றேன் என் மகனை'' என்றெண்ணிப் பூரிக்கிறாள் தாய்.

* * *

இடையே ஓர் கதையோ? அது எற்றுக்கோ! என்கிறாயா தம்பி! கதை அல்ல. கருத்து விளக்கம், கதை வடிவம்.

கனி பறிக்கச் சென்றவனைக் கருந்தேள் கொட்டிடக், கால் இடறிக் கீழே வீழ்ந்து பாறையிலே மண்டை மோதி, மனம் குழம்பிப்போய்த், தாயைக்கூட அடையாளம் தெரிந்து கொள்ளாதிருந்த மகன்போலப் புகழேணியின் உச்சி சென்ற தமிழ் இனம், நச்சரவம் போன்ற பிற இனத் தொடர்பினால் தாக்கப்பட்டுத் தடுமாறிக் குப்புறக் கீழே வீழ்ந்து, அதிர்ச்சியினால், தன் மரபு குறித்த நினைவும் கெட்டு, தாயகம் எது என்பதனையும் மறந்து, மனம் குழம்பி, வேறோர் பூமியினைத் தாயகம் என்று குளறிட நேரிட்டது.

பரணிபாடித் தரணி ஆண்ட தமிழ் இனமல்லவோ, நீ? என்று கேட்ட காலை, "தாசன் நான்! தமிழில் பேசுகிறேன், எனினும் நான் வணங்கும் தெய்வங்களுக்கு உகந்த மொழி சமஸ்கிருதம், அந்த வடமொழியே, தேவபாஷை! என் நாடு பாரதம், இமயம் முதல் குமரிவரை உள்ளதோர் புண்யபூமி!'' என்று கூறலானான், தடுமாறித் தவித்த தமிழன். விந்தியம் மறந்தான், இமயம் நோக்கித் தொழுதான். காவிரியின் புகழ்பாடத் தயங்கினான் - கரம்புகளைக் கழனிகளாக்கி வாழ்க்கையை வளமாக்கிய பொன்னியை மறந்தான், கண்காணாத் தொலைவினிலே ஓடிடும் கங்கையினைப் புகழ்ந்து, கர்மம் யாவும் நீக்கிடும் புனித கங்கை என்று போற்றிடலானான். சேரனையும் சோழனையும் செந்தமிழ்ப் பாண்டியனையும் தன்முன்னோர் என்று கூறக் கூசினான், இக்ஷ்வாகு பரம்பரை, ரவிகுலச் சோமன் என்று பேசிடத் தலைப்பட்டான். தொல்காப்பியம் என்றால் என்ன? என்று கேட்டிடவும், பாகவதம் படித்திடவும் முற்பட்டான்!

பெற்ற தாயை அறிந்து கொள்ள முடியாமல், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னம் அல்லவோ? என்று கேட்ட நினைவு இழந்த மகனைவிட, இரங்கத்தக்க நிலையினைப் பெற்றான், தமிழன்.

அவன் நிலையினை மேலும், அழுத்தமானதாக்கிடத்தக்க தோர் சூழ்நிலை வேறு உருவாயிற்று; ஆங்கில அரசு நம்மைப் பிடித்துக்கொண்டது. அதனை அகற்றவேண்டி, அனைவரையும் ஒரு முகாமுக்குள் கொண்டுவர வேண்டியதாயிற்று. ஆகவே, தமிழ் இனம் பிற இனம், தமிழ் மரபு மற்றையோர் மரபு என்பனபற்றிப் பேசவும், எண்ணிடவுங்கூட நேரம் இல்லை; வெள்ளையன் அந்நியன்; அந்நியன் விரட்டப்படவேண்டும்; அதற்கு வீரம் மிகவும் வேண்டும்; அறிவாற்றல் கொண்டோர் அனைவரும் ஒன்று திரண்டு நின்றிடவேண்டும்; அதிலே வடக்கு என்றோ தெற்கு என்றோ பேதம் பேசுதல் ஆகாது என்று "தேசியம்' பேசப்பட்டது: அந்தத் "தேசியம்' ஏற்றுக்கொள்ளவும் பட்டது. எனவேதான், வங்கத்து சட்டர்ஜியும், வலங்கைமான் சத்தாரும், பாஞ்சாலத்து லஜபதியும், பாஞ்சாலங்குறிச்சி சிதம்பரனாரும், அலகாபாத் மோதிலாலும், சேலத்து ஆச்சாரியாரும், பம்பாய்ப் பட்டினத்து வாடியாவும், ஈரோட்டுப் பெரியாரும், கவிஞர் தாகூரும், கர்மவீரர் கலியாணசுந்தரனாரும், முகுந்தலால் சர்க்காரும், சர்க்கரைச் செட்டியாரும் - என்று இப்படிப் பலரும் ஒன்றுபட்டு நின்றனர்; ஒருபொது நோக்கத்துக்காக; பொது எதிரியை விரட்ட; வெள்ளை ஆட்சியை நீக்கிட,

அதன் பயனாக நன்மை ஒன்று விளைந்தது, வெள்ளை ஆட்சி ஒழிந்தது.

எதிர்பாராத வகையில் தீமை ஒன்று வந்துற்றது; தமிழன், தன் இனம், மரபு, நாடு, மறந்ததே, அந்தத் தீமை.

அந்தத் தீமையின் விளைவாக ஏற்பட்டதே தடுமாற்றம், அந்தத் தடுமாற்றத்தினால், தமிழன் தமிழ்நாடு என்பதனை மறந்து, பாரதநாடு, இந்தியா என்ற கற்பனைக்கு ஆட்பட்டு, நிலைகெட்டு நிற்கலானான். தம்பி! நமது இயக்கம், இந்த நிலையினை மாற்றிட வெகுபாடு படவேண்டியதாயிற்று. மருத்துவனாகி, மனக்குழப் பத்தை நீக்கவேண்டிய வேலையில் ஈடுபட வேண்டிவந்தது. அதிலே ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. தாயே! தாயே! என்று, நினைவு திரும்பப் பெற்ற மகன் பாசத்தோடு பேசிடுவதுபோல, இப்போது, எவரும், தமிழ்! தமிழ் இனம்! தமிழ்நாடு! என்று பற்றுக்கொண்டு பேசிடக் கேட்கிறோம். பாசத்தைக் காட்டிக்கொள்ள முன்வருவது காண்கிறோம். தெளிவு பிறந்திடக் கண்டு மகிழ்ச்சிகொள்கிறோம்.

தமிழ் இனம்! மரபு! தமிழ் மன்னர்கள்! - என்றெல்லாம் பேசுவது! பத்தாம்பசலிப் பேச்சு என்று செப்பினார், கல்வித்துறை அமைச்சர் சுப்பிரமணியனார், சென்ற ஆண்டுகூட. அத்துணை முற்போக்காளரோ அமைச்சர் பெருமகனார் என்று கேட்டிடத் தோன்றும், சேரசோழபாண்டியர் குறித்துப் பேசப்படுவது கேட்டுமட்டுந்தான், இந்தக் கற்றறிவாளர், "செச்சே! ஈதென்ன, பத்தாம்பசலிப் பேச்சாக இருக்கிறதே'' என்று ஏளனம் செய்கிறார். அனுமார், மாகாளி, இராமாயணம், பாரதம் போன்றவை குறித்துப் பேசப்படும்போது அல்ல!! அப்போது, அவர் நெஞ்சு நெக்குருகிக் கண்ணீர்மல்கி நிற்கும் காட்சி அளிக்கிறார்.

தமிழ் இனத்தை விழிப்புறச் செய்யும் ஆற்றல், சேரசோழ பாண்டியர் பற்றிய பேச்சு எழும்போது கிடைக்கிறது, அமைச்சர் அதனைத்தான் விரும்பவில்லை. பொதுவாக, "பத்தாம்பசலி' அவருக்குப் பிடிக்காது என்பதல்ல, பழமையை அவர் பஞ்சாமிருதமாகக் கருதிப் பருகித்தான் வருகிறார்.

தமிழ் இனம், மரபு பற்றிய பேச்சே, "பத்தாம்பசலி' என்று கூறிய, அதே அமைச்சர் பத்து நாட்களுக்கு முன்பு, தமிழ் இனமக்களைப் பழிக்கலாமா!! என்று எழுச்சி பொங்கிடக் கேட்டிருக்கிறார், ஒரு பொதுக்கூட்டத்தில்.

அமைச்சரை, மாற்றுக் கட்சியினர், ஏசுகின்றனராம்! அது குறித்துத் தமது கவலையைக் கொட்டிப் பேசுகிறார் அமைச்சர்.

"என்னைத் திட்டுகிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். தனிப்பட்ட முறையிலே, என்னைத் திட்டிக்கொள்ளட்டும். வருத்தமில்லை ஆனால், நான் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச்சனல்லவோ! அந்த நிலையில் உள்ள என்னைத் திட்டுவது, தமிழ் இனத்தைப் பழிப்பதாகாதோ! அங்ஙனம் தமிழ் இனத்தைப் பழிக்கலாமோ!'' - என்ற கருத்துப்படக், "கனம்' பேசியிருக்கிறார்.

தமது நோக்கம் போக்கு ஆகியவைபற்றி எவர் மறுப்புரை கூறினாலும், அது, அமைச்சருக்கு அவரை ஏசுவதுபோலத் தோன்றுகிறதேயன்றி, ஏசிப்பேசும் போக்கினை எதிர்க்கட்சிகள் கொண்டில்லை. அந்த ஏகபோக உரிமை ஆளுங் கட்சியின் அறைபறை நாவினருக்கே உண்டு. எனவே, அமைச்சர், அது குறித்து ஆயாசப்படுவதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஆகவே, அவருடைய உரையில், அந்தப் பகுதியை நாம் பொருட்படுத்தவும் தேவையில்லை. அந்தப் பேச்சோடு பேச்சாக, அமைச்சர், தமிழ் இனம் என்று எடுத்துக் காட்டுகிறாரே, அதுதான், தம்பி! என்னை உலுக்கிவிட்டது. ஆச்சரியம் எனக்கு! ஈதென்ன, வேடிக்கை! ஏக இந்தியா பேசிடும் இணையிலா வீரர், பாரத நாட்டின் புகழ்பாடி மற்றையோரைச் சாடிடும் தீரர், தமிழ் இனம் என்று பேசுகிறாரே! எப்போது இவருக்கு இந்தப் பற்று ஏற்பட்டது? இவருக்குத்தான், தமிழன், வங்கத்தான், மராட்டியன், பஞ்சாபி, என்றெல்லாம் பேசுவது, பிற்போக்காளர் போக்கு என்ற பெருநோக்கு உண்டே! இவர், எதற்காகத், தமிழ் இனம் என்று பேசவேண்டும் - என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கணம், ஆச்சரியமே என்னைத் தாக்கிற்று. பிறகோ, என்னதான், "ஏக இந்தியா' பேசிவந்தாலும், இயல்பு அடியோடு அழிந்தா போய்விடும் - இன உணர்ச்சி உருக்குலைந்து இருக்கலாமே தவிர, ஒரேயடியாகவா அழிந்தொழிந்து போயிருக்கும். அவரும் தமிழர்தானே; மரபின் மாண்பு அதிகம் மங்கிட இடங்கொடாதிருந்துவரும் கொங்குநாட்டவர் அல்லவா! எனவேதான், தமிழ் மரபுபற்றிய நினைவு எழுகிறது!! என்று விளங்கிற்று.