அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தென்னகம் பொன்னகம்
2

தம்பி! அமைச்சருக்குங்கூட, இந்தத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றால், மற்றையோர் குறித்துக் கூறவா வேண்டும். உதட்டளவில், "ஏக இந்தியா' பேசிடினும், அவர்தம் உள்ளத்திலே, தமிழ் இனம் என்று உணர்ச்சி இருந்திடத்தான் செய்கிறது - சிறிதளவு உறங்கும் நிலை!! அந்த உறக்கத்தை நீக்கிடத்தான், உன் பணி!!

"ஏக இந்தியா' பேசுவதும், அதற்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், தாம் சுமந்து கொண்டுள்ள கடமை களிலே ஒன்று என்று, கருதிக்கொண்டு காரியமாற்றிவரும் அமைச்சர்களும், இன உணர்ச்சி பெறத்தக்க விதத்திலே, பலன் தந்துள்ள பணியினைத், தம்பி! நீ, பத்தே ஆண்டுகளிலே, வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறாய். தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்று வருகிறது, எனவேதான், தென்னகம் பொன்னகம் ஆகும் என்ற நம்பிக்கை என் போன்றாருக்கு.

என்ன அண்ணா! இப்போதுதான், ஜெர்மன் நாட்டு நிபுணர்கள், சேலத்து இரும்பு, இரும்புதான் என்று ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. நீயோ, தென்னகம் பொன்னகம் என்று திருப்புகழ் பாடுகிறாய்-!! என்று கேட்கிறாயா, தம்பி! கேட்கத்தான் செய்வாய். ஆனால் நான், காரணமற்றுக் கூறுவேனா? இன்றும் நமது நாட்டிலே இரும்பு தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் துரைத் தனத்தில் உள்ள சிலர்போல மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை; விழித்தெழுந்து கேட்கிறார்கள்; வீர முழக்கம் செய்கிறார்கள். விலாநோகச் சிரித்து ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று, தென்னகம் வளரத்தான் வேண்டும். வேண்டாமென்று கூறுவோமா நாங்களும் வலியுறுத்திக்கொண்டுதான் வருகிறோம் என்று பேசுகிறார்கள்.

தம்பி! தெற்கு வடக்கு என்று பேசுவது பத்தாண்டுகளுக்கு முன்பு கேலிக்குரியதாக கண்டனத்துக்கு உரியதாகக் கருதப்பட்டது, அறிவாய்; அறிந்து ஆயாசப்பட்டுமிருக்கிறாய். அறிவேன்.

இப்போது, தெற்குக் குறித்துப் பேசுவது, தென்னகத்துக்குத் தொழில் வளர்ச்சி வேண்டும், கனிப்பொருளைக் கண்டறிய வேண்டும், கனரகத் தொழில் வளரவேண்டும் என்று கேட்பது, எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தேவையான ஒரு பேச்சு ஆகிவிட்டது. கவனித்தனையா? காங்கிரஸ் தலைவர்களேகூட, இப்போது, இந்தப் "பாணி'யில் பேசுவதிலே முனைந்து நிற்கிறார்கள். தூங்கிக் கிடக்கும் இரும்பினை, வெட்டி எடுத்து வெளியே கொண்டு வருவதிலே கிடைத்திடும் இலாபத்தைவிட, அதிக அளவு இலாபமல்லவா, இன்று காங்கிரஸ் தலைவர்களே, தென்னகம் குறித்த தங்கள் எண்ணத்தை, அச்சத்தை விட்டுத்தொலைத்துப் பேசுவது.

அவர்களுந்தான், பாபம், எதற்கென்று பயப்படுவார்கள்?

தென்னகம் என்று பேசினால், மேலிடம், "ஏதேது! நீயுமா; கழகமொழி பேசுகிறாய். இதற்குக் கதர் ஒரு கேடா! இதற்கோ? "கனம்' ஆக்கிவிட்டது. உமது உள்ளம், விரிவாக இருக்கும், வடக்கு, தெற்கு என்ற பேதபுத்தி உமக்கு ஏற்படாது, எமக்கு ஏன் இரும்புத் தொழிற்சாலை இல்லை; உரம் அத்தனையும் அங்குதானா உற்பத்தி செய்யவேண்டும்; இங்கு ஏன் கூடாது? என்றெல்லாம் கேட்கிற "சின்னப்புத்தி' உமக்கு ஏற்படாது; பாரதம்போல் உமது நோக்கம் விரிந்து பரந்து நிற்கும் என்றல்லவா எண்ணினோம்; எரிச்சலூட்டும் விதமாகப் பேசுகிறீர்களே! குறுகிய மனப்போக்கைக் காட்டுகிறீர்களே! கெடுமதி கொண்ட பின், அமைச்சர் என்று இருக்கலாமா? பாரதம் இதனைச் சகித்துக்கொள்ளுமா!!'' - என்று அறைவார்களே என்ற அச்சம், நமது அமைச்சர்களுக்கு. அந்த அச்சம் காரணமாக, வடக்காவது தெற்காவது என்று பேசி வந்தனர்.

ஆனால், தம்பி! நமது கழகம், தக்க காரணங்களைக் காட்டி, வாதாடி, மக்கள், இந்தப் பிரச்சினையை உணரும்படி செய்து விட்டது. பட்டிதொட்டிகளிலெல்லாம், கேட்கிறது, "வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது' என்ற முழக்கம். வளம் கொழுக்கிறது வடக்கே, வாட்டம் கொட்டுகிறது தெற்கே என்ற உண்மை, நல்லோர் உள்ளமெல்லாம் பதிந்துவிட்டது. அமைச்சர்கள் செல்லுமிடமெல்லாம், கேட்கிறது, எழுச்சி முரசொலி! அவர்கள், தமது கட்சியினருடன் கூடிப் பேசும்போதெல்லாம், இந்தப் பிரச்சினை முன்னிடம் பிடித்துக் கொண்டு, வாட்டி எடுக்கிறது. எண்ணிப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். அமைச்சரின் மேடை முழக்கம் முடிந்த பிறகு, அவருடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றோரிடம் அவர் பேசுவதாக இருப்பின், என்னென்ன பேச்சு நடைபெறும் என்பது.

"ரொம்பக் களைத்துவிட்டீர்கள்' என்கிறார் மின்சார விசிறி ஓடிக் கொண்டிருப்பதையும் மறந்து, விசிறி கொண்டு, பணிவிடை செய்தபடி, ஒரு கனவான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை' என்று உபகாரம் பேசுகிறார், அமைச்சர்.

"உமக்கு இருக்கும் களைப்பைவிடவா, அமைச்சருக்கு' என்று கேட்டுக் குத்துகிறார் காங்கிரஸ் தொண்டர். கனவான், அமைச்சர் வரவேற்பு விழாவுக்காக, நூறு எதிர்பார்த்துச் சென்று, இருபது மட்டுமே பெற்றதால் ஏற்பட்ட எரிச்சல் தொண்டருக்கு. தொண்டர்தம் பெருமை கூறவும் போமோ என்ற அரசியல் அறிந்தவர் கனவான்; எனவே அவர், தொண்டரின் கேலிப்பேச்சுக்கு மறுப்புரை கூறாமல், இளிக்கிறார் புன்னகை என்று எண்ணிக்கொண்டுதான்.

"தொடர்ந்து ஒரு நாலு கூட்டம், இப்படிக் காரசாரமாக இருக்க வேண்டும். பயல்களுடைய கொட்டம் அப்போதுதான் அடங்கும்'' என்று பாராட்டுகிறார் தொண்டர்.

"ஆமாமாம்' என்று ஆமோதிக்கிறார் கனவான்.

"மாதத்துக்கு ஒரு கூட்டம், முறையாக நடத்த வேண்டும்'' என்கிறார் வக்கீல் வேலை பார்க்கும் பிரமுகர்.

"அடுத்த மாதம், கட்டாயம் வரவேண்டும்'' என்று கூறுகிறார் தொண்டர்.

"எப்படி முடியும்? அடுத்த மாதம், முதல் வாரம், டில்லிக்குப் போகவேண்டுமே...'' என்கிறார் அமைச்சர்.

கனவான் சிரிக்கிறார். ஏனெனில், அவருடைய மோட்டார் ஓட்டி, காங்கிரஸ் அமைச்சர்கள், எதற்கும் டில்லிக்குச் சென்று வரவேண்டிய அவலநிலை இருப்பதைக் கண்டித்துப் பாடும் "காவடிப்' பாட்டை அவர் கேட்டிருக்கிறார்.

"என்ன விஷயமாக?' என்று குறுக்குக் கேள்வி போடுகிறார், வக்கீல். "உணவு மண்டலம் விஷயமாகத்தான்' என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தொடர்ந்து, உரையாடல் நடக்கிறது, சூடு பிடித்ததும்.

"என்ன சொன்னாலும் மண்டையில் ஏறமாட்டே னென்கிறது.''

"ஆமாம் புத்தி கூர்மையே கிடையாது.''

"புத்தி தீட்சணியம் தென்னாட்டவருக்குத்தான்.''

"தென்னாட்டுக்காரர்கள் மட்டும துணைநிற்கா விட்டால், நாறிப்போயிருக்கும், எல்லாத்துறைகளும்.''

"வடக்கத்திக்காரன்களுக்கு, ஒரு விவரமும் புரிவதில்லை.''

"ஆமாம், வடக்கே எம். ஏ. படித்தவனை, இங்கே நம்ம மெட்ரிக் படித்தவன் மடக்கிவிடுவான்.'' "பணம் சேர்க்கத் தெரியும், வடக்கே உள்ள ஆசாமிகளுக்கு.''

"தொழில் நுட்பம் தெரிகிறது, அங்கே இருப்பவர்களுக்கு.''

"எல்லாம் இங்கே மட்டும் தொழில் நுட்பம் தெரியாதா? தெரியும். பெரிய தொழில் நடத்தப் பணம் வேண்டும் கோடி கோடியாக. அது இல்லை இங்கே.''

"அது அந்த மார்வாடிகளுக்குத்தான் முடியும், பணம் தேட, பெற.''

"காரணம் என்ன? பெரிய பெரிய பாங்க் எல்லாம் அங்கே.'' "வெளிநாட்டுக் கடன்கூட, அங்கேதான்.''

"ஆமாம், வெளிநாட்டானும், வடக்கே உள்ளவர்களுக்குக் கிடைக்கும் பாங்க் வசதியைப் பார்த்துத்தான், கடன் கொடுக்கிறான்.''

"தொழில் ஆரம்பிக்க அனுமதி கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. டில்லிக்கு அல்லவா போகவேண்டி இருக்கிறது.''

"என்ன செய்வது, சட்டம் அப்படி இருக்கிறது.''

"என்ன சட்டம்! பெரிய சட்டம்! நமது குடுமியை அவனிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, சட்டம் சட்டம் என்று பேசினால், என்ன பலன்.''

"அடித்துக் கேட்க வேண்டும், இனி.'' "அதிகமாக அதட்டிக் கேட்டால், கிடைப்பதும் குறைந்து விடும்.'' எத்தனை நாளைக்கு அப்படிப் பயப்பட்டுக் கொண்டிருப்பது. நாம் பயப்படப் பயப்பட அவன் கொழுக்கிறான்.''

"அதைத்தான், அந்தப் பயல்களும் சொல்லுகிறார்கள் - வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது என்று.''

"இந்தக் கூச்சலும் இல்லை என்றால், நமக்கு இப்போது கிடைக்கிறதே இதுகூடக் கிடைக்காது.''

"அது ஒரு விதத்திலே நியாயம்தான். ஆனால் நாட்டைத் துண்டுபோடுவது சரியாகுமா? ஒற்றுமை கெட்டுவிடுமே.''

"ஒற்றுமை, ஒற்றுமை என்று நாம்தான் பேசுகிறோம். வடக்கே பார்த்தீர்களா? ஒரு பம்பாய் பட்டினத்துக்கு எத்தனை மண்டைகள் உடைந்தன?''

"பழுத்த தேச பக்தர் ஆனேகூட, கிளர்ச்சி செய்கிறாராமே.''

"ஆமாமாம்! அந்தந்த இராஜ்யக்காரனும், தன் உரிமைக்காகப் போராடுகிறான்.''

"இப்படியே, போனால் என்ன ஆவது?''

"என்ன ஆகும்! திராவிட நாடு திராவிடருக்கே!''

தம்பி! இதே வாசகங்கள் பேசப்படுகின்றன என்று கூறவில்லை - இந்த முறையில், இந்தக் கருத்துப்படப் பேசப்படுகிறது. என்ன பொருள் என்கிறாய் இதற்கு? தடுமாறிக்கிடப்பவர்களும், தெளிவும் துணிவும் பெற்று வருகிறார்கள் என்பதுதான்.

துணிவு இல்லை இந்த அமைச்சர்களுக்கு! தென்னகத்தின் உரிமைக்காக வாதிட, போரிடத் துணிவு இல்லை என்று நமது கழகம் பேசிவருகிறதல்லவா?

அது, நமது அமைச்சர்களுக்கு இப்போதுதான், சுருக் கென்று தைத்திருக்கிறது. இரண்டு மூன்று மந்திரிகள், "நாங்கள் கோழைகள் அல்ல! வடநாட்டுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல! வடநாட்டுக்காரனிடம் நாங்கள் பயப்படவில்லை. அடங்கி நடக்கவுமில்லை. எங்களுக்கு என்ன அவர்கள் எஜமானர்களா? எங்களுக்கு எஜமானர்கள் இங்கே உள்ள மக்கள், வடநாட்டுக் காரரல்ல'' என்று பேசி வருகிறார்கள்.

வீரப் பேச்சு - ஒப்புக்குப் பேசினாலும் - கேட்கச் சுவையுள்ளதாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சி முறை இருக்கும் விதம், இங்குள்ளவர்கள், டில்லியிடம் சென்று, கை ஏந்தவேண்டிய அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைக்கிறது. அதை மீறியோ, புறக்கணித்தோ, அமைச்சர்கள் இயங்கவே முடியாது. கூட்டுக்குள் இருக்கும் பறவை, சிறகடித்துக் காட்டினாலும், வெளியேவந்து, விண்ணிலே பறந்திடவா முடியும்! அதுபோலத்தான், நமது அமைச்சர்களும், தமது வீரதீரம்பற்றி மேடையிலே ஆயிரம் முழக்கினாலும், நடைமுறையிலே கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில்தான் உள்ளனர்.

இதை உணர்ந்து மக்கள் கேட்கும்போது, அமைச்சர்கள், சில வேளைகளிலே, உண்மையைக் கக்கியும் விடுகிறார்கள்.

"எங்களுக்கு உள்ள அதிகாரம் இவ்வளவுதான். இந்தக் காரியம் (டில்லி) மத்திய சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும்'' என்று, எதற்கெடுத்தாலும் இரும்புத் தொழிற்சாலை துவக்குவதிலிருந்து, கரும்பாலை அமைப்பது வரையில், அரிசி கொள்முதல் செய்வதிலிருந்து புளி ஏற்றுமதியைத் தடுப்பது வரையில், கூறவேண்டி வருகிறது.

இது விளக்கம். நிலைமைக்கு விளக்கம்.

ஆனால், பிரச்சினைக்கு இது பரிகாரமாகாது.

பீடித்திருப்பது காசநோய் என்று மருத்துவர் கண்டறிந்து கூறிவிட்டால், நோயாளி திருப்தி பெற்றுவிட மாட்டான். அதற்கு, என்ன மருந்து? என்பதுதான் அவனுக்கு உள்ள கவலை. அதைத்தான் அவன் கேட்பான்.

அஃதேபோல, அமைச்சர்கள், டில்லிக்கு உள்ள அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எப்படிக் கிடைத்தது என்ற சட்டவிளக்கத்தையும் கூறிவிட்டால், தெளிவு கிடைக்கும்; ஆனால் மனக்குமுறல் அடங்கிவிடாது.

ஏன் அப்படி ஒரு முறை இருக்க வேண்டும்?

எல்லாம் உயிர்ப்பிரச்சினையையும், டில்லியிடம் ஒப்படைத்து விட்டு, ஏன், இங்கு செயலாற்ற முடியாதவர்களாக இருக்கிறீர்கள்?

அதிகாரமற்ற ஆட்சியால் என்ன பலன்?

முறையை மாற்றுங்கள்! புதுச்சட்டம் இயற்றுங்கள்.

நமது அரசு, முழு உரிமை பெற்றதாக அமைய வேண்டும். இவ்விதம், மக்கள் மன்றத்தில் இப்போதே பேசுகிறார்கள். இன்னும் சில நாட்களிலே, காங்கிரஸ் கமிட்டிகளிலேயே, வெளிப்படையாகப் பேசப்போகிறார்கள்.

தம்பி! தென்னகம் பொன்னகமாகும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணம், நான், மேலே கூறியவைகளுக்கான அறிகுறிகளை, நிழலுருக்களைக் காண்கிறேன் என்பதுதான்.

இந்த நல்ல சூழ்நிலை மேலும் நேர்த்தியானதாக ஒரே ஒரு வழி உண்டு. அதுதான் 1962-ல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில், நாம் பெற்றுள்ள புதியவலிவினை விளக்கிடத்தக்க அளவிலே, வெற்றி பெற்றுக்காட்டுவது. நமது தேர்தல் முழக்கமே இதுதான், தம்பி! தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும் என்பதுதான்.

இனம், மரபு, வரலாறு என்பவை வழங்கிடும், உணர்ச்சியைப் பெற்றுள்ள, எழுச்சிபெற்ற எவருக்கும், ஏற்புடைய இலட்சியம் இது; தென்னகம் பொன்னகம் ஆக வேண்டும் என்பது, அந்த இலட்சியத்தை இங்கும் பரவிடச் செய்திடும் ஆற்றல், உனக்கு உண்டு. அறிந்து அகமகிழ்கிறேன் நான். அறிந்து அச்சமடைகிறார்கள், மாற்றார். தூற்றினால், நீ துவண்டுவிடுவாய் என்று எண்ணுகிறார்கள். தூற்றிய கனகவிசயன் தலைமீது கல்லேற்றிய சேரன், தமிழன்! அதனை நாமறிவோம்; நம்மை நடப்பிணமாக்கிட ஏக இந்தியா பேசிடும் ஏகாதிபத்திய வாதிகட்கு அது தெரியாது.

கல்லைத் தலையில் ஏற்றியது அந்த நாட்களில்.

இப்போது, தென்னகம் பொன்னகம் என்ற சுவைமிகு, பயன்தரும் சொல்லினை, அனைவர் நெஞ்சிலும் பதியவைப் பதுதான், நாம் மேற்கொள்ளவேண்டிய முறை.

கருவில் உருவாகி வரும் குழவி, காலால் உள்ளே மெள்ள உதைத்திடுவது உணர்ந்து, கவர்ச்சிமிகு புன்னகை புரிவாள், பூவை! தென்னகம் பொன்னகம் என்ற கருத்துக்கு நெஞ்சிலே இடமளித்துள்ளோர் அனைவரிடமும் காணப்படும் புன்னகை, அத்தகையது. புன்னகைக்குக் காரணம் என்ன? புதிய உற்சாகத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்போரிடம்,

தென்னகம் என்னகம்
தென்னகம் பொன்னகம்
தென்னகம் நல்லகம்

என்பதனை விளக்கிக் கூறு, தம்பி! பார்! பிறகு! படைதிரண்டிடும்! பகை மருண்டிடும்! வெற்றி பூத்திடும்! விழிகள் களிநடமிடும்! தென்னகம் பொன்னகமாகி நம்மை மகிழ்விக்கும்.

அண்ணன்,

15-5-1960