அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


திரும்பிப்பார்!
1

தி. மு. கவும் காங்கிரசும் -
விலகியோர் விருது பெறுதல் -

தம்பி!

"முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார்
முந்நான்கு வருடங்கள் போன பின்பும்
கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும்
கிள்ளுகிற பசி தீர்க்கும் உணவினுக்கும்
கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே!
குறையாத வறுமைக்கே ஆளானோமே!
பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும்
பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.''

எனக்கு உள்ளபடி கோபம் - என்னதான் "கிள்ளுகிற பசி' இருந்தாலும், ஆட்சி நடத்தும் கட்சியினரை, முட்டாள் என்றும் மடையர் என்றும் மிகக் கேவலமான முறையிலே ஏசுவது கேட்டு. பாட்டாக இருந்தால் மட்டுமென்ன, இப்படியா, தேள்போலக் கொட்டவேண்டும். வள்ளுவர் பன்னிப்பன்னிச் சொல்கிறாரே, கனியிருக்கக் காய் கொள்ளற்க என்று. ஏன் இந்தத் தம்பி இவ்வளவு கடுமொழியைக் கவிதை வடிவாக்கித் தரவேண்டும் என்று கோபம். வேண்டாம், தம்பி, நான் இதுபோன்ற கவிதைகளை இதழில் வெளியிட முடியாது என்று கண்டிப்பாகவே சொன்னேன். பாடிக்காட்டிய தம்பி, கையில் ஒரு கத்தை காகிதம் வைத்திருக்கக் கண்டேன் - சரி - சரி - இதுபோல நிறைய இருக்கும் போலிருக்கிறது; வெளியிடச் சொல்லிக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில், அவ்விதம் சொன்னேன். என் கோபத்தை அந்தத் தம்பி பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை.

"அண்ணா! இப்போது நான் பாடிய கவிதை, இதழில் வெளியிடுவதற்காக, நான் கொண்டுவந்திருப்பது அல்ல, ஏற்கனவே இதழில் வெளியிடப்பட்டு, நமது கழகத்தவர் படித்தது'' என்றான். சொல்லிவிட்டு, "அண்ணா! வார்த்தைகளின் கடினம் இருக்கட்டும்; கடுமொழி கூடாது என்ற தங்கள் பேச்சை நான் தட்டி நடக்கவில்லை; ஆனால் இதை எடுத்து வீசிய பிறகுதான் வெகுண்டெழுந்து வாதிட்ட தோழர் ஓட்டம் பெருநடையாகச் சென்றுவிட்டார்'' என்றான் அந்தத் தம்பி.

"வாதிட்டனையா? எவரிடம்? ஏன்? நான், கேட்போரிடம், விளக்கம் உரைத்திடச் சொன்னேனேயன்றி, வாதிடவா சொன்னேன். வாதம் நடந்தது என்று சொல்லுகிறாய், என்னென்ன வம்புச்சண்டை போட்டுவிட்டனையோ என்றெண்ணி கலக்கமடைகிறேன். நடந்தது என்ன? கூறப்பா!'' என்று கேட்டேன்.

"பிரிவினை நடைபெறாதாம் அண்ணா! திருஇடம் அமைக்கவிடமாட்டார்களாம்! தீர்த்துக் கட்டிவிடுவார்களாம், அந்தத் திட்டத்தை. தீப்பொறி பறக்கப் பேசினால்கூட, நான் கவலைப்படமாட்டேன் - உனக்கே தெரியும் - உன் தம்பியாவதற்கு முன்பு தொட்டதற்கெல்லாம் கோபம் வரும் - மட்டிப்பயலே! என்றுதான், எவன் எதிர்த்தாலும் பேசுவேன் - பெட்டிப்பாம்பு ஆகிவிட்டேன், உன் பேச்சைக் கேட்டுக்கேட்டு - அதனால் இப்போது கோபம் எழவில்லை - ஆனால் மிகக் குறும்பாகப் பேசினார் ஒரு நண்பர். தாள முடியவில்லை. கடைசியில், அவருக்கு, இந்தக் கவிதையைத்தான் கொடுத்தனுப்பினேன். - இன்னொன்றும் சேர்த்து. அவர் பிரிவினை கூடாது! வடநாடு தென்னாடு என்று பேசுவது ஆகாது! என்று பேசினார்; அதற்காக ஒரு கவிதை!'' என்றான், தம்பி. "அது என்ன கவிதையோ!'' என்று நான் கேட்க, தம்பி அதனையும் பாடிக் காட்டினான்.

"வடநாடா தென்னாடா? யாருரைத்தார்!
வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார்.
நடவாது! நடவாது! பிரிவினைத் தீ
நம் நாட்டைப் பாழாக்கும்; விடவே மாட்டோம்!''

படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள்
பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக்கூறி
பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள்!
பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்.''

"நடந்ததைக் கேள் அண்ணா! என் நண்பன், எப்போது இவ்வளவு பழுத்த காங்கிரஸ்வாதியானானோ தெரியவில்லை. அவனுடைய அப்பா, சேர்த்த சொத்து அவ்வளவும், கள்ளுக் கடை நடத்தியதில் கிடைத்தது. இவனோ கல்லூரியில், வெள்ளையன்போலத்தான் உடுத்திக்கொண்டு வருவது வாடிக்கை. இப்போது, குடும்பமே காங்கிரசாம்! கூடல்துறை கட்டும் "காண்ட்ராக்ட்' இவன் அப்பாவுக்கு. அமைச்சர் வந்திருந்தார் விழாவுக்கு. காங்கிரஸ் பக்தி முற்றிவிட்டது மகனுக்கு, என் நண்பனுக்கு. வேண்டுமென்றே, என்னிடம் வம்புக்கு வந்தான் - நமது கழகத்திலிருந்து சிலர் விலகியதைக் காரணமாகக் காட்டி. எங்கள் உரையாடலைக் கூட்டாமல் குறைக்காமல் தீட்டிவந்திருக்கிறேன்; நாட்டவர் அறிவது நலன் பயக்கும் என்ற எண்ணத்தில்'' - என்று கூறி, கையில் வைத்திருந்த கட்டுரைச் சுருளைக் கொடுத்தான். படித்துப் பார்த்தேன் - பாட்டுக்கள் தவிர, மற்றவை பலன் தருவனவென்று தெரிந்தது. இதோ, அது.

காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?

தி. மு. க. தொண்டர்: குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . . .

கா. க. : ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்கு கிறார்கள், நாள் தவறாமல்.

தி. மு. க. : அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் திட்டத்தை எந்த நேரத்தில் கெடுத்துவிடுவார்களோ என்று நிலை இருப்பதுதான் ஆபத்து; அனாவசியமான குழப்பம் தருவது.

கா. க. : போனவர்கள் போகட்டும் என்கிறாயா?

தி. மு. க. : அப்படிச் சொல்லுவேனா? கூடப் பழகியவர்கள், கழகம் வளர்த்தவர்கள், பிரிந்து போகிறார்கள் என்றால், அலட்சியம் காட்ட முடியுமா? வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன செய்யலாம்? அவர்களுக்கு மனம் அப்படி ஆகிவிட்டது.

கா. க. : கழகம் கலகலத்துத்தானே போகும்?

தி. மு. க. : எதனால்?

கா. க. : விலகிச் சென்றவர்கள் பலமுள்ளவர்கள் - செல்வாக் குள்ளவர்கள் - கழகத்தின் முதுகெலும்பு - ஜீவநாடி.

தி. மு. க. : அடே அப்பா! இவ்வளவு புகழ்ச்சியா, அவர்கள் விலகியவுடன்! இங்கு அவர்கள் இருந்தபோது, கிள்ளுக் கீரை என்றீர்கள்; தள்ளு குப்பையில் என்றீர்கள். எங்களோடு இருந்தபோது எருக்கம்பூ! இப்போது மணமல்லி! எங்களோடு இருந்தபோது கூழாங்கல்! இப்போது வைரம்! இப்படி இருக்கிறது உங்கள் நோக்கும், போக்கும்.

கா. க. : உவமானம் பேசிப்பேசித்தானே ஊரை மயக்குகிறீர்கள்.

தி. மு. க. : அதென்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாயே! உன் வாயிலே உவமானம் நுழையாதா? பேசித்தான் பாரேன்!

கா. க. : நான் சொல்கிறேன், இப்போது உங்கள் கழகத்தை விட்டுப் போய்விட்டவர்கள் பலசாலிகள் - புத்திசாலிகள் - செல்வாக்கானவர்கள். அவர்கள் பிரிந்த பிறகு, கழகம் கலையும், கரையும், ஒழியும். . .

தி. மு. க. : பேச்சிலே பொருளே இல்லையே! நீ சொல்வதுபோல, விலகிச் சென்றவர்கள் மிகுந்த பலசாலிகள், செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், அவர்கள் அல்லவா, தங்கள் வழிக்குக் கழகத்தை மாற்றி மற்றவர்களைத் துரத்திவிட்டுக் கழகக் காவலராகியிருப்பார்கள். இது புரியப் பிரமாதமான அறிவுகூடத் தேவையில்லையே -

கா. க. : அப்படியென்றால், அவர்கள் பிரிந்ததால், கழகத்துக்கு நஷ்டம் இல்லவே இல்லையா. . .?

தி. மு. க. : ஏன் இல்லை! கஷ்டமும் உண்டு, நஷ்டமும் உண்டு.

கா. க. : அப்படிச் சொல்லு. இப்படி, உங்கள் கழகத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்; இனி எப்படி உங்கள் கழகம், வாழும் வளரும்?

தி. மு. க. : இராசகோபாலாச்சாரியார் உங்கள் காங்கிரசைவிட்டு விலகித் தனிக்கட்சி அமைத்து, உங்கள் வண்டவாளங்களை வெளுத்துக் கட்டுகிறாரே, உங்கள் காங்கிரஸ் கட்சி கலைந்ததா, கரைந்ததா, குலைந்ததா? நீங்கள் என்ன மூலையில் முக்காடிட்டா உட்கார்ந்துவிட்டீர்கள்?

கா. க. : ஒரே ஒரு ஆசாமி. . . .?

தி. மு. க. : இப்போது அவர் ஆசாமி! முன்பு? ஆச்சார்ய சுவாமி!

கா. க. : அவர்தானா, காங்கிரஸ்?

தி. மு. க. : காங்கிரசுக்கு வேதம், உபநிஷத், கீதை எல்லாம் அவர் பேச்சிலே கிடைக்கிறது என்று சொன்ன தேசிய வாய்தானேயப்பா, உன்னுடையது?

கா. க. : ஒரே ஒருவர் - பெரியவர் - போய்விட்டார். . . . .

தி. மு. க. : அவர் மட்டுமா? ஜெயப்பிரகாஷ்நாராயண் - டாக்டர் லோகியா - அசோக்மேத்தா - ஆச்சார்ய கிருபளானி -

கா. க. : பழைய கதை. . . .

தி. மு. க. : இராமசாமி படையாச்சி - காரைக்குடி கணேசன். . .

கா. க. : விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்.

தி. மு. க. : எங்களைவிட்டுப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, இருக்கும் விரல் போதாமல், இரவல் வாங்க வேண்டி வருகிறதா!

கா. க. : கொள்கைச் சண்டை - தத்துவத் தகராறு - எங்கள் கட்சியில். . . .

தி. மு. க. : அப்படியா! பலே! பலே உத்திரப்பிரதேசத்தில் சம்பூரணானந்தாவுக்கும் குப்தாவுக்கும் நடந்தது தத்துவச் சண்டையா? ஓடி ஓடித் தீர்த்துவைக்க முயன்றாரே நேரு பண்டிதர்! ஓயாமல் நடந்ததே தகராறு. சிரிப்பாய்ச் சிரித்ததே ஊர். பதவிச் சண்டை அல்லவா, அது!

கா. க. : அந்த ஒரு அசங்கியம் நடந்தது உண்மைதான்.

தி. மு. க. : ஒன்றே ஒன்றா! ஏனப்பா, பீகாரிலே, சின்னா கோஷ்டிக்கும் ஜெயின் கோஷ்டிக்கும் "சடுகுடு' விளையாட்டா நடந்தது? அதுவும் பதவிச் சண்டைதானே! ஒரிசாவிலே, மேத்தாப்புக்கும் மற்றக் காங்கிரசுத் தலைவர்களுக்கும் நடந்தது என்ன "மாடுபிடி' சண்டையா? பதவிதானே! மைசூரில், ஜட்டிக்கும் நிஜலிங்கப்பாவுக்கும் நடந்தது என்ன? பந்தாட்டப் போட்டியா? பதவிச் சண்டைதானே? ஆந்திராவில், சஞ்சீவய்யாவுக்கும் சுப்பா ரெட்டியாருக்கும் நடந்தது என்ன, சங்கீத ஆவர்த்தனமா? சண்டைதானே, பதவிக்காக! பஞ்சாபிலே, கெய்ரான் கோஷ்டிக்கும், மற்றக் காங்கிரஸ் கோஷ்டிக்கும் என்ன நடந்தது? பதவிச்சண்டை அல்லவா? கேரளத்திலே, காங்கிரசுக்குள், கோஷ்டிச்சண்டை இல்லையா!! இவ்வளவுக்குப் போவானேன், டில்லி பாராளுமன்றத்திலே கட்சித் துணைத்தலைவர் யார் என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஏற்பட்ட போட்டி, நேரு பண்டிதரையே கிடுகிடுக்க வைத்துவிட்டதே. பதவிச் சண்டை அல்லவா அது?

கா. க. : சரி, காங்கிரஸ் கட்சியிலும் பதவிச்சண்டை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதெல்லாம் கடைசியிலே தீர்க்கப்பட்டுப் போய்விட்டனவே தவிர, தெருச்சண்டையாகவா உருவெடுத்தது?

தி. மு. க. : தெருச்சண்டையைவிட மோசமான செயலெல்லாம் நடந்ததே! ஒரு கோஷ்டியை எதிர்த்து இன்னொரு கோஷ்டி கையெழுத்து வாங்குவது! கண்டன அறிக்கைகள் வெளியிடுவது! மறுப்புக் கூட்டங்கள் போடுவது! இதெல்லாம் தரமான, காரியமா? உங்கள் கட்சித் தலைவர் சஞ்சீவிரெட்டியாரே கட்சிக்குள்ளே இருக்கும் தகராறுகளை, வெளியே பேசாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாரே, கவனம் இல்லையோ! நாங்கள் ஆளும் கட்சி அல்ல. எதிர்க்கட்சி. அதிலும் துவக்கி 12 - வருடமாகிறது. உங்கள் கட்சியோ, ஆட்சி நடத்தும் கட்சி! ஊருக்கு உபதேசம் செய்யும் கட்சி! பாருக்கெல்லாம் பஞ்சசீலம் போதிக்கும் கட்சி! அதனுடைய இலட்சணம் இப்படியா இருப்பது? உங்கள் உடலில் குருணி அழுக்கை வைத்துக்கொண்டு, எங்களைக் கேலிசெய்ய வந்து விட்டீர்களே; வெட்கமில்லையா, உங்களுக்கு?

கா. க. : எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும், கடைசியில், எங்கள் கட்சியிலே கட்டுப்பாடு வெற்றி பெறும்; கட்சிதான் பெரிது என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

தி. மு. க. : அப்படி இருந்திருந்தால், ஆந்திரத்து ரங்கா, இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தானே இருந்திருக்க வேண்டும்! இல்லையே!!

கா. க. : அவருக்குப் பதவிமோகம்; அதனால் தனிக்கட்சி துவக்கினார்.

தி. மு. க. : அப்படியா! உங்கள் கட்சியிலிருந்து, யாராவது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விலகிவிட்டால், அதற்குக் காரணம் அவர்களுக்குள்ளே பதவிமோகம்! எங்களிட மிருந்து எவரேனும் விலகிவிட்டால், அது வீரம், விவேகம், தியாகம்! அப்படித்தானே!!

கா. க. : சிலபேர் இருக்கிறார்கள் எங்களிடமும் சுயநலமிகள். . .

தி. மு. க. : அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற கட்சியிலேயே, சிலர் சுயநலமிகளாக இருக்கிறார்கள்; தங்கள் சுயநலம் பலிக்கவில்லை என்றால், வெளியே போய்விடுகிறார்கள்; புதுக்கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால், அதிக அனுபவம் பெறாத, எங்கள் கட்சியிலே, சிலர் கட்டுப்பாட்டுக்கு மதிப்புத் தரவில்லை என்பதிலே, வியப்பு என்ன இருக்கமுடியும்? ஒன்று கேட்கிறேன். சொல். இந்த 12 வருடங்களில், எங்கள் கழகத்தைவிட்டு வெளி யேறிய "குறிப்பிடத்தக்கவர்கள்' எத்தனை பேர்? உங்கள் கட்சியிலே, எத்தனை பேர்? கணக்குச் சொல்லு பார்ப்போம்!!

கா. க. : அதெல்லாம் தெரியாது எங்களுக்கு. உங்களோடு இருந்தவர், இப்போது திராவிட நாடு வேண்டாம் என்கிறார், அதுதான் முக்கியம்.

தி. மு. க. : திராவிட நாடு கூடாது என்று, உங்கள் மேலான தலைவர்கூடத்தான் சொன்னார். வேறு எத்தனையோபேர் சொன்னார்கள். அதனால் என்ன? பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று! வேறென்ன? அந்த அளவுக்குக்கூட, "மவுசு' ஏற்பட்டதற்குக் காரணம் உங்கள் பத்திரிகைகள் கொடுக்கும் விளம்பரம். அதைக் கண்டதுமே, புத்தியுள்ள வர்களுக்கு, உண்மை புரிந்துவிட்டதே! நீங்கள் தூக்கி விடுகிறீர்கள் - தூபம் போடுகிறீர்கள் என்ற உண்மை.

கா. க. : நாங்கள் ஒன்றும் அவர்களைத் தேடிக்கொண்டு ஓடவில்லை; ஆள்பிடிக்க! அவர்களாகத்தான் இளித்துக் கொண்டு எங்கள் தயவைத் தேடிவருகிறார்கள்.

தி. மு. க. : பொறு, அப்பா, பொறு இதற்குள், அவர்களை ஏச ஆரம்பித்துவிடாதே. இன்னும், அவர்களை எங்கள் பேரில் ஏவி எவ்வளவோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளவேண்டி இருக்கிறது; இதற்குள் நீங்கள், ஒருவரை ஒருவர் கேவலமாகப் பேசிக்கொள்ளாதீர்கள்.

கா. க. : எங்களுக்கொன்றும் அவர்கள் தயவு தேவை இல்லை.

தி. மு. க. : அப்படிச் சொல்லிவிடலாமா? திராவிட நாடு பிரச்சினையை எதிர்க்க உங்களுக்கு இன்று கிடைத் திருக்கிற ஒரே ஒரு "ஆயுதம்' இதுவல்லவா! இதைத்தானே "மலை'போல நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.

கா. க. : அப்படியே ஒன்றும் இல்லை.

தி. மு. க. : சொல்லிவிட்டால் போதுமா! செயல், காட்டுகிறதே, உங்களுக்கு இருக்கிற பஞ்சப்புத்தியை. திராவிடநாடு பிரச்சினையை எதிர்க்க நேருவும் மொரார்ஜியும் போதவில்லை உங்களுக்கு. காமராஜரும் சுப்பிரமணியமும், இதற்குத் தக்கவர்கள் என்ற தைரியம் வரவில்லை உங்களுக்கு.

கா. க. : சொன்னோமா, அப்படி?

தி. மு. க. : சொல்லவேண்டுமா! நேருவும் மொரார்ஜியும் காமராஜரும் சுப்ரமணியமும் இருக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினையை ஒழித்துக்கட்ட என்ற தைரியம் உங்களுக்கு இருந்தால், இப்படி, யார் கிடைப்பார்கள், தூபம் போட்டு ஆட்டிவைக்கலாம் என்று அலைந்து திரிவீர்களா? உங்கள் தலைவர்களின் பேச்சு, நாட்டிலே செல்லவில்லை என்பது உங்கள் எண்ணம். இப்போது, எங்களிடமிருநது பிரிந்து வந்தவர்களைப் பிடித்துக்கொண்டு, கரை சேரலாமா என்று பார்க்கிறீர்கள். "எங்களோடு இருந்தவர்கள்' என்பதற்கே, இவ்வளவு செல்வாக்கு! பார்த்தீர்களா!!

கா. க. : நாங்கள் ஒன்றும், திராவிட நாடு பிரச்சினையை ஒழிக்க, உங்களுடைய மாஜித் தோழர்களை நம்பிக்கொண்டு இல்லை. எங்களுக்கு எங்கள் சொந்த வலிவிலே, நம்பிக்கை இருக்கிறது.

தி. மு. க. : ரோஷம் இருக்கிறது - பேச்சில்! செயலில் காணோமே! உள்ளபடி உங்களுக்கு உங்கள் சொந்த வலிவிலே நம்பிக்கை இருந்தால், எங்கள் மாஜி நண்பர்களின் பேச்சை இந்த அளவுக்கு வேதம்போலாக்கி, உச்சரித்துக்கொண் டிருப்பீர்களா! பஜனையல்லவா பாடுகிறீர்கள்! அவரே சொல்கிறார்! அவரே எதிர்க்கிறார்! அவரே திராவிட நாடு கற்பனை என்று கூறுகிறார் - என்று ஏகாரம் போடுகிறீர்களே, இது எதைக் காட்டுகிறது? எங்கள் பேச்சுத்தான் செல்லாக்காசாகிவிட்டது, உங்களோடு இருந்தவர்களே, சொல்கிறார்களே - எங்கள் பேச்சைக் கேட்காது விட்டுவிட்டாலும், இவர்கள் பேச்சையாவது கேட்கக்கூடாதா என்று "சிபாரிசு'க் கடிதம் வாங்கிக் கொண்டல்லவா வருகிறீர்கள்.

கா. க. : எங்களுக்கு ஒன்றும் அவர்கள் "சிபார்சு' தேவையில்லை.

தி. மு. க. : அந்த "சிபார்சு'க் கடிதத்தை நீட்டுவது தவிர, உங்களுக்கு இப்போது வேறு வேலையே காணோமே.

கா. க. : உங்களோடு இருந்த ஒருவர் திராவிட நாடு கூடாது என்று பேசினால், நாங்கள் அதை எடுத்துக் கூறக்கூடாதா?

தி. மு. க. : கூறலாம், நண்பரே! தாராளமாகக் கூறலாம். ஆனால் எப்படி? இத்தனை காலம், அந்தகாரத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு, இப்போதுதான் அறிவுக்கண் திருந்திக்கொண்டவர்களை வாழ்த்துகிறோம். இனியேனும் அவர்கள் நல்வழி நடப்பார்களாக!! - என்று இப்படி அல்லவா இருந்திருக்கவேண்டும் உங்கள் பேச்சு! அப்படியா இருக்கிறது! பசித்தவனுக்குப் பனம்பழம் கிடைத்ததுபோல அல்லவா, அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்!!

கா. க. : ஐயோ, பாவம்! இத்தனை காலமாகத்தான் கெட்டு அலைந்துகிடந்தார்களே, இப்போது நல்ல புத்தி ஏற்பட்டது, இனி நல்லவழி நடப்பார்கள் என்று எதிர்பார்த்து, நாலு நல்ல வார்த்தை சொல்லுகிறோம்.

தி. மு. க. : திராவிட நாடு திட்டத்தை அவர்கள் எதிர்க்க ஆரம்பித்த உடனே, அறிவாளரே வருக! ஆண்மையாளரே வருக! நாணயவான்களே வருக! நேர்மையின் பிறப்பிடமே! இருப்பிடமே! முடிவிடமே! வருக! வருக! என்று அர்ச்சிக்கிறீர்கள் - உங்களைப்பற்றி அவர்கள் சொன்னது என்ன? இப்போதும் சொல்வது என்ன? என்பதுபற்றித் துளிகூட எண்ணிப் பார்க்காமல், இப்போதாவது, உங்களை, உங்கள் தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்களா?

கா. க. : தங்கள் மாஜித் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள்.

தி. மு. க. : அது போதும் என்கிறீர்களா? இதுதான் பஞ்சப் புத்தி என்பது! உங்கள் தலைவர்களை மதிக்கிறார்களா என்றுகூடக் கவனிக்கமாட்டீர்கள் போலிருக்கிறது! ஐயா! அவர்களுக்குத் தங்கள் மாஜித் தோழர்கள் - ஆகியோரிடம் மதிப்புப் போய்விட்டது; மனம்போன போக்கில் ஏசுகிறார்கள். ஆனால், கவனித்துப் பார்த்தால் தான், உங்களுக்கு உண்மை தெரியும். அவர்களுக்கு, முன்பு இருந்த இடத்துத் தலைவர்களிடம் மதிப்புக் கெட்டு விட்டதும், என்ன செய்கிறார்கள்? தாங்களே "மதிப்பு'த் தேடும் தலைவர் ஆகிறார்கள்! புரிகிறதா! உங்கள் தலைவர்களிடம் "மதிப்பு'க் காட்டவில்லை. காட்டுவ தானால், "தேசபக்தர்களே! தேசியத் தலைவர்களே! உங்கள் வார்த்தைகளை மதிக்காமல், உண்மையை உணராமல், இதுநாள் வரையில் உழன்று கிடந்தோம். புத்தி வந்தது. பிழை பொறுத்திடுக! மன்னித்திடுக!'' என்று இறைஞ்சி, காங்கிரஸ் தலைவர்களை ஏத்தி ஏத்தித் தொழுது, மன்னிப்புபெற மண்டியிட்டுக் கிடப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வது என்ன? தி. மு. க.வைத் திட்டு கிறார்கள் - காங்கிரசைப் போற்றவில்லை! தி. மு. க. தலைவர்களை வசைபாடுகிறார்கள் - காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தவில்லை. புரிகிறதா நிலைமை? உண்மை தெரிகிறதா? தி. மு. க. தலைவர்களைத் தூற்றி, உங்கள் தலைவர்களைப் போற்றவில்லை, உங்கள் நாக்கிலே தேன்தடவி, உங்கள் உதவியைப் பெற்று, அவர்கள் தலைவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். இது தெரியாமல், தி. மு. க. தலைவர்களைத் தூற்றப் புதியவர்கள் கிடைக்கிறார்களே என்ற அற்ப சந்தோஷத்திலே நீங்கள் மூழ்கி ஏமாளிகளாகிறீர்கள்.