அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


திரும்பிப்பார்!
2

கா. க. : நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தி. மு. க. தலைவர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்!

தி. மு. க. : நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால், விலகியவர்கள் தி. மு. கழகத்தையே தங்கள் இஷ்டப்படி மாற்றிவிட இடம் கிடைத்திருக்குமே. முடிந்ததா? அவர்களை நேசிக்க, ஆதரிக்க, கொண்டாட, தி. மு. க.வினர் தயாராக இருந்தனரே தவிர, கண்களை மூடிக்கொண்டு பின்பற்ற வில்லை! "கோடை இடியாக இருக்கலாம் பேச்சில் - ஆனால், பேசும் பொருள் கழகம் ஒப்புக்கொண்டிருக்கும், திராவிட நாடு இலட்சியமாக இருக்கவேண்டும் - அதற்கு மாறாக இருந்தால், மதிப்பளிக்கக் கழகம் முன் வராது! "என்ன அருமையான வாதம்' என்று கழகம் பாராட்டும். எப்போது? கொள்கைக்காக வாதாடுகிறபோது! கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முனைந்தால், இடமளிக்காது. ஒன்று உமக்குச் சொல்கிறேன், நண்பரே! விலகியவர்களில் விருதுடையோர், இருக்கிறாரே, அவர் இந்த 12 ஆண்டுகளில் கழகத்தில், எது நினைத்தாலும் நடந்தது! எந்தத் தீர்மானம் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டனர், ஓட்டுக்கூட எடுக்காமல். ஏன்? கழகத்துக்காக அரும்பாடுபடுகிறார்! கழகக் கொள்கையைப் பரப்பும் ஆற்றல் மிக்கவர்! அவர் விருப்பத்தை மதித்து நிறைவேற்றுவது, அவரை உற்சாகப்படுத்தும், மேலும் உழைத்திடும் ஊக்கம் அளிக்கும், என்பதனால். ஆனால், கொள்கைக்கு உலை வைக்கக்கூடும் என்ற நிலை வந்தது. அவர்தான் கழகத்தைவிட்டு வெளியே போகவேண்டி வந்ததே தவிர, கழகம் ஏமாளியாகி, அவர் காட்டிய இடத்திலே கையெழுத்திடும் கதியற்ற நிலைபெறவில்லை. கண்டனையே! கருத்திலே தெளிவு ஏற்படவில்லையா?

கா. க. : ஆயிரத்தெட்டுப் பேசு - அக்கறை இல்லை. திராவிட நாடு பிரச்சினைக்குச் சரியான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

தி. மு. க. : இது சரியான எதிர்ப்பு என்று கூறும்போது என்ன பொருள்? இதுவரையில், நீங்கள் நடத்தி வந்தது. "சோடை', "சொத்தை' என்பதுதானே. உங்களுடைய தலைவர்களை ஏனய்யா இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்?

கா. க. : எங்களுடைய தலைவர்கள் சொல்லிக்கொண்டு வந்ததைத்தான், இப்போது, உங்களிடமிருந்து விலகியவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

தி. மு. க. : அப்படியா! புதிதாக ஒரு காரணமும் காட்ட வில்லையா?

கா. க. : புதிதாகவா! ஏது புதிது! திராவிட நாடு கூடாது என்பதற்கான காரணம் முழுவதும், எங்கள் தலைவர்கள் ஏற்கனவே கூறியதுதானே!

தி. மு. க. : அதைத்தான், இந்தப் புதியவர்கள் பேசுகிறார்கள், என்கிறீர்.

கா. க. : ஆமாம்! வேறே என்ன புதிதாக இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்?

தி. மு. க. : அப்படியானால், அந்தக் காரணங்களை, உங்கள் தலைவர்கள் காட்டிப் பேசியபோது கிடைக்காத பலன், இப்போது, புதியவர்கள் பேசுவதாலே எப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொதுமக்கள், உங்கள் தலைவர்களுக்கு அளித்த மதிப்பைவிட, வெல்வாக்கைவிட, புதியவர்களுக்கு அளிக்கிறார்கள், அளிக்கப்போகிறார்கள்! என்பது பொருளா?

கா. க. : சுற்றி வளைத்துப் பேசிப் பேசி சிக்கலை உண்டாக்கப் பார்க்கிறாய். . .

தி. மு. க. : செச்சே! எனக்கென்னப்பா அதனால் இலாபம், திராவிட நாடு திட்டத்தை எதிர்ப்பதற்காகப் புதியவர்கள் கூறும் காரணம், யாவும் பழசு; எங்கள் தலைவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கூறினவை என்றும் சொல்கிறீர்கள்; அதேபோது இந்தப் புதியவர்களின் எதிர்ப்பினால் திராவிட நாடு திட்டத்துக்கு ஆபத்து நிச்சயம் வரப் போகிறது என்கிறீர்கள். பொருத்தமாக இல்லையே! ஒன்று காரணமாவது புதிதாக, அதிக வலிவுள்ளதாக இருக்க வேண்டும். அல்லது புதியவர்கள், நேருவைவிட, மொரார்ஜியைவிட, கிருஷ்ணமேனனைவிட, காமராஜரை விட, சுப்ரமணியத்தைவிட, வெங்கட்ராமனைவிட, சிவஞானக் கிராமணியாரைவிட, அறிவாற்றலுள்ளவர்கள் என்றாவது இருக்கவேண்டும். இந்த இரண்டிலே எது உண்மை என்பது, உன்னுடைய கருத்து?

கா. க. : இரண்டுமே உண்மை அல்ல. ஏணி வைத்து எட்டினாலும், எங்கள் நேரு இருக்கிற இடத்துக்கு அருகேகூட இவர்கள் வரமுடியுமா? இவர்கள் இத்தனை வருஷம் இருந்த இடத்தையே தங்கள் வழிக்குக் கொண்டுவரும் அளவுக்குக் கூடச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதுதான், வெட்ட வெளிச்சமாகிவிட்டதே. இவர்களைப் போய், உலகம் புகழும் எங்கள் நேருபிரானுடன் ஒப்பிட்டுப் பேசுவதே கூடப் போக்கிரித்தனம் என்போம். ஆமாம், சகித்துக் கொள்ளமாட்டோம். உண்மையைச் சொல்வதனால் நேருபிரானுடைய அறிவுரையைக் கேட்டுப் புதியவர்களின் முதல்வர், திருந்தினார், புத்தறிவு பெற்றார் என்று பொருள்.

தி. மு. க. : அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையே. . .

கா. க. : நேருவைவிடத் தாங்கள் பெரியவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்று பேசுகிறார்களா?

தி. மு. க. : பேசவில்லை! ஆனால் செயல்? நேருவினால், திராவிட நாடு திட்டத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பது தெரிந்திருந்தும், இப்போது இவர்கள் தங்களால், அது முடியும் என்று கிளம்புவது எதைக் காட்டுகிறது? நேருவால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதை, அந்த நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நேருவைப்பற்றி மட்டமான அபிப்பிராயமும், தங்கள் அறிவாற்றலைப்பற்றி மிக அதிகமான மதிப்பும் கொண்டிருப்பதனால், இது புரியவில்லையா?

கா. க. : துணிந்து சொல்லட்டுமே பார்ப்போம், அப்படி.

தி. மு. க. : ஏன், இப்போது சொல்லவேண்டும்? பைத்தியக் காரர்களா அவர்கள்! வசமாகச் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள் காங்கிரஸ்காரர் - அவர்களைப் பயன்படுத்தி விளம்பரம், செல்வாக்குப் பெற்றுக்கொள்ளலாம். அதைச் சாதித்துக்கொள்கிறவரையில், பல்லைக் கடித்துக்கொண்டு, பண்டித நேருவைப்பற்றி அதிகம் பேசாமல் இருக்கலாம் என்பது புதியவர்கள் திட்டம். இது புரியாமல், நீங்கள் பூமுடித்துப் பொட்டுவைத்து விடுகிறீர்கள்.

கா. க. : அவர்கள் தங்கள் "சுய ரூப'த்தைக் காட்டத் தொடங்கினால், நாங்கள் சும்மாவிடமாட்டோம்.

தி. மு. க. : சும்மாவிடாமல், சுருட்டி எடுத்துக்கொண்டு வந்து விடுவீர்கள், இப்போது நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் விளம்பரச் செல்வாக்கை!

கா. க. : ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

தி. மு. க. : வெறும் சொல்லலங்காரம்! நீங்கள் இப்போது செய்து வரும் தவறின் பலனை நிச்சயம் ஒருநாள் அனுபவித்தே தீருவீர்கள், சாபம் அல்ல! நடைபெறப்போவதை, முன்கூட்டியே சொல்வது. எப்போது திராவிட நாடு திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டதோ, உடனே அப்படிப் பட்டவர்களுக்கு வேறு, தன்னலத் திட்டமோ, தம்மைப் பற்றிய அதிக கணக்குள்ள மதிப்பீடு போட்டுக்கொள்ளும் சுபாவமோ இல்லையென்றால், என்ன தோன்றவேண்டும்? இடித்து இடித்துச் சொன்னார் நேரு அப்போதெல்லாம் கேட்கவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினோம்; ஏதேதோ ஏசினோம் காங்கிரஸ் தலைவர்களை; அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் - என்றல்லவா, எண்ணம் எழவேண்டும். எழுந்ததா? இல்லை! புதியவர்கள், எங்களுக்கு மட்டும் அல்ல - இப்போதும் - உங்கள் நேருவுக்கும் சேர்த்துத்தான் "ஞானோபதேசம்' செய்கிறார்கள். அது புரியாமல் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டு ஆடுகிறாய். திராவிட தேசியம் என்பது மாயை என்று மட்டும் சொல்லவில்லை. இந்தியத் தேசியம் என்பது மாயை என்றுதான் சொல்கிறார்கள். திராவிட தேசியம் பேசும் எங்களைப்பற்றி என்னென்ன கூறுகிறார்கள்?

கா. க. : அறிவிலிகள்! சுயநலக்காரர்! எத்தர்கள்! வரலாறு தெரியாதவர்கள்!

தி. மு. க. : இவ்வளவு நாகரிகமாக அல்ல. நாகரிகப் பேச்சிலே அதிக பயிற்சி கிடையாது அவர்களுக்கு. மிகக் கேவலமாக ஏசுகிறார்கள், எங்களை. ஏன்?

கா. க. : கவைக்குதவாத திராவிட தேசியம் பேசுவதால்.

தி. மு. க. : கவைக்குதவாதது திராவிட தேசியம் மட்டுமா? இந்தியத் தேசியமும் அப்படித்தான் என்றும் பேசுகிறார்கள். மறந்துவிடலாமா?. . .

கா. க. : மறந்துவிடவில்லையே.

தி. மு. க. : அப்படியானால், கவைக்குதவாத தேசியங்கள் இரண்டு. ஒன்று திராவிட தேசியம் - மற்றொன்று இந்திய தேசியம். திராவிட தேசியம் பேசுவோரை என்னென்ன இழி மொழியால் ஏசுகிறார்களோ, அது அவ்வளவும் கவைக்குதவாத இந்திய தேசியம் பேசுவோருக்குந்தானே பொருந்தும்.

கா. க. : அப்படிப் பேசினால் சும்மாவிடமாட்டோம்.

தி. மு. க. : சூரப்புலிகள்தான்! இதுவரை பேசியதற்கு என்ன செய்துவிட்டீர்கள்? விளம்பரச் செல்வாக்குப் பெற உங்களிடம் வருகிற நேரத்திலாவது, மன்னிப்புக் கேட்கச் சொன்னீர்களா? பசி உங்களுக்கு அவ்வளவு! வீசி எறிந்தாலும் விழுந்தடித்துக்கொண்டுபோய் எடுத்துப் புசிக்கிறீர்கள். ஆதித்தனாருக்கு இருக்கும் ரோஷ உணர்ச்சி உங்களுக்குக் காணோமே! தமிழ் நாடு தனி நாடு என்ற உரிமை அரசாக இராது என்று புதியவர் பேசிக் காட்டியவுடன், ஆதித்தனார், இது சுதந்திரத் தமிழ் நாடு ஆகாது! எனவே, நாம் இதை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார். வேண்டுமானால், சிவஞானக் கிராமணியார், புதிய கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்று யோசனை கூறினார். அவருக்கு நான் இளைத்துப் போவேனோ என்ற முறையில், சிவஞானக் கிராமணியார், பிரிவினைக்கான உரிமை என்ற பேச்சு இருக்கிற இடத்தில், நான் சேரமாட்டேன்; என் "பாரம்பரியம்' அதற்கு இடங் கொடுக்காது என்று அறிவிக்கிறார். அவர்கள் காட்டும் "ரோஷ உணர்ச்சி' உங்களுக்கு இருந்தால், இந்திய தேசியம் மாயை என்று பேசுபவரை, நாங்கள் மதிக்க, ஆதரிக்க, தூக்கிவிட முடியாது என்றல்லவா கூறி இருக்கவேண்டும். செய்தீர்களா? இல்லை. ஏன்? தி. மு. கழகத்தை ஒழிக்க இவரை ஏவிவிடலாம் என்ற நப்பாசை. ஏன் அந்த நப்பாசை? நீங்கள் முயன்று பார்த்துத் தோற்றுவிட்டீர்கள். நீங்கள் தோற்றுவிட்ட பிறகு, புதியவர் வெற்றிபெறுவார் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது? உங்களுக்கு உங்களுடைய அறிவாற்றலில் நம்பிக்கை இல்லை. எது கிடைத்தாலும் சரி என்று அலைகிறீர்கள். உங்கள் தலைவர்களைக்கூட, அவர்கள் மதிக்க மறுக்கிறார்கள்.

கா. க. : எங்கள் தலைவர்களை அவர்கள் மதிப்பு குறைவாகப் பேசவில்லை.

தி. மு. க. : இந்திய தேசியம் என்பதும் திராவிட தேசியம் போலவே, மாயை என்பது என்னவாம்! திராவிட தேசியம் 12 வருட முயற்சி! உங்கள் இந்திய தேசியம்? 1885 லிருந்து ஆரம்பமான முயற்சி! இரண்டும் தவறு என்று மாமேதை கூறுகிறார் - மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறீர்களே தவிர, மறுத்திடத் துணிவு பிறக்கிறதா? எங்கிருந்து பிறக்கும்? மாமிச மலையே என்றார்! சோற்றுத் துருத்தியே! சொரணை கெட்ட ஜென்மமே! உருவாரங்களே! மண்டைக்கனம் பிடித்ததுகளே என்றெல்லாம், உங்கள் தலைவர்களை ஏசினர். என்ன செய்தீர்கள்?

கா. க. : விவரமறியாது பேசும் இதுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிட்டோம்.

தி. மு. க. : அதேதானய்யா, இப்போது, தி. மு. க. மேற்கொள்ளும் போக்கு. கூட இருந்தபோது சோடசோபசாரம் செய்தவர்கள்தான், இன்று எரிச்சல் காரணமாக, ஏசுகிறார்கள் - பொருட்படுத்தத் தேவையில்லை என்று இருந்துவிடுகிறார்கள் கழகத்தவர். எப்படி, அன்று, இவர்கள் நேருவிலிருந்து வெங்கட்ராமன் வரையில் நாக்கில் நரம்பின்றி ஏசினாலும் உங்களுக்கு உங்கள் தலைவர் களிடத்திலோ, கட்சியிடத்திலோ மதிப்பும் அன்பும் துளியும் குறையவில்லையோ, பழுதுபட வில்லையோ, அதேபோலத்தான், குலவிக் கிடந்தவர்கள், குடவிளக்கு எடுத்தவர்கள், சாமரம் வீசியவர்கள் இன்று ஏசுவதால், எங்கள் கழகத்தவரிடமோ கழகத்திடமோ, கொள்கை யிடமோ எமக்குத் துளியும் மதிப்புக் குறையவில்லை. தெரிகிறதா? ஆகையால், காங்கிரஸ் நண்பனே! இந்த மண்குதிரை மீதேறி, ஆற்றினைக் கடக்கலாம் என்று எண்ணிவிடாதே. மக்கள் கேட்பது இதனைப்பற்றி அல்ல.

கா. க. : கழகம் உடைபட்டுவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தி. மு. க. : அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டாலும், நீங்கள் இருக்கிறீர்களே, தூபமிட! தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் சிலகாலம்தான் இது இனிக்கும் - பிறகு புளித்துப் போய்விடும். இப்போதோ ஒன்றாக இருந்தபோது புகழ்ந்த வாய்தான்; இப்போது நாராசம் வெளிவருகிறது அதிலிருந்து என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையிலேயே மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது, பேதமை. மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது, யார் விலகினார்கள்? அதனால் என்ன நஷ்டம் என்பதல்ல! ஏனெனில், ஒவ்வொரு கட்சியிலும், சிலர் விலகுவது என்பது நடைபெற்றபடிதான் இருக்கும் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். விலகியோர்கூட அமைத்த கட்சியிலிருந்தே இப்போது விலகிவருவோர் பட்டியல் பார்க்கிறார்கள். பத்து நாட்களுக்கு முன்பு காங்கிரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டுக் காங்கிரசைவிட்டு வெளியேறினார் சாக்சேனா என்ற காங்கிரஸ் தலைவர். இப்போது பொது மக்கள் அறிந்துகொள்ள விரும்புவ தெல்லாம், அவர் ஏன் விலகினார்? இவர் ஏன் விம்முகிறார் - என்பது அல்ல. ஏன் இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே விலைவாசி விஷம்போல் ஏறியபடி இருக்கிறது? இதைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத ஆட்சியும் ஒரு ஆட்சியா? அப்படிப்பட்ட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், கட்சியும் ஒரு கட்சியா? அதற்கா மறுபடியும் "ஓட்' அளித்து ஆளச் செய்வது? என்ற இந்தப் பிரச்சினைபற்றி. அடுக்களை காட்டுகிறது ஆட்சியின் அலங்கோலத்தை. இதை எப்படிச் சமாளிப்பது என்பதிலே அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, யாரார் தி. மு. கழகத்தின்மீது பாய்வார்கள், காய்வார்கள், அவர்கள் உமிழ்வது என்ன என்று அக்கறையாகக் கவனித்து அதைக் கையில் ஏந்திக்கொண்டு வந்து ஊரூருக்கும் காட்டி, பார்த்தீர்களா! பார்த்தீர்களா! என்று பேசுவதையா, வேலையாக வைத்துக்கொள்ளவேண்டும்?

கா. க. : நாங்கள் ஒன்றும் அந்த வேலையில் இல்லை.

தி. மு. க. : உங்கள் ஏடுகளிலே, இப்போது இடம் பிடித்துக் கொண்டிருப்பதே, இந்த எச்சில், ஏப்பம், தூற்றல், மாற்றம், நாராசம், இவைதானே! பாரேன் நீயே. மக்கள், இதைப் பார்த்துவிட்டு, உணவுப்பொருள் விலை எவ்வளவு ஏறினாலும் பரவாயில்லை என்றா, மனத்திருப்தி அடைவார்கள்? உங்கள் ஆட்சியின் இலட்சணத்தால் ஏற்பட்ட மொழிச்சண்டை காரணமாகப், பத்துப்பேர் போன மாதம்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாலி அறுத்தவர்கள் கதறும்போது, பார்! பார்! படித்துப்பார்! புதிய கட்சியினர், தி. மு. க.வை வெளுத்துவாங்குகிறார்கள் என்று காட்டியா சமாதானம் செய்யப்போகிறீர்கள்? வரிக் கொடுமை தாக்குகிறது - முதலாளித்தனம் பொருளாதாரத் துறையின் கழுத்தை நெரிக்கிறது - கடன் சுமை முதுகை முறிக்கிறது! மக்கள் இவைகளுக்குச் சமாதானம் கேட்கிறார்கள் - தி. மு. கழகத்தைப்பற்றி விலகியவர்கள் என்னென்ன ஏசுகிறார்கள் என்பதா, நீங்கள் தர இருக்கும் சமாதானம்? காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டுள்ள கேடு பாடுகளை, நாங்கள் எடுத்துக் கூறும்போது, விலகியவர் களை விட்டு ஏசச் செய்துவிட்டால், மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? நாங்கள் கேட்கமாட்டோமோ? முட்டாள்கள் கூட்டத்தார் ஆளவந்தார் முந்நான்கு வருடங்கள் போனபின்பும் கெட்டோமே! ஆடைக்கும் நிழலினுக்கும் கிள்ளுகிற பசிதீர்க்கும் உணவினுக்கும் கொட்டாவி விட்டோமே! விடுகின்றோமே! குறையாத வறுமைக்கே ஆளானோமே! பட்டாயே தமிழா! இம்மடையர் ஆளும் பாரதத்தின் ஒற்றுமையா இன்னும் கேட்பாய்.

கா. க. : இப்படித்தான், ஆபாசப் பாடல் பாடுவீர்கள். இதையுந்தான் விலகியவர்கள் கண்டிக்கிறார்கள். அவர்கள் பேச்சிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதில்லை. முட்டாள் என்றும் மடையர் என்றுமா, ஆட்சியில் உள்ளவர்களை ஏசுவது? இது ஒன்று போதுமே, உங்களை ஒடுக்கியாகவேண்டுமென்பதற்கான காரணம். பிரிவினை வேண்டுமாம் - பிரிவினை - நடவாது தம்பி! தலைகீழாய் நின்றால்கூட நடவாது.

தி. மு. க. : "வடநாடா? தென்னாடா? யாருரைத்தார்? வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஓரினத்தார் நடவாது! நடவாது! பிரிவினைத் தீ நம் நாட்டைப் பாழாக்கும் விடவே மாட்டோம்!! படிதாண்டாப் பத்தினிகள் முழங்கினார்கள் பண்டிதரோ அவர் வாயைத் திறக்கக் கூறி, பிடிமண்ணைத் திணிக்கின்றார்! மெல்கின்றார்கள். பிறிதொன்றைப் போட்டாலும் விழுங்குவார்கள்.''

கா. க. : பாடு! உனக்கு வேறு எப்படிப்பட்ட பாட்டுப் பாடத் தெரியப்போகிறது. இப்படி எல்லாம் பாடினால், எப்படி உங்களோடு அறிவாளிகள் இருப்பார்கள்?

தி. மு. க. : ஐயா! பேரறிவாளரே! இந்தப் பாடல்கள், இப்போது, நாங்கள் கட்டிவந்து பாடுவது அல்ல. எங்களைவிட்டுப் பிரிந்தவர்களிலே ஒருவர் பாடிவிட்டுப் போனதுதான்.

கா. க. : இவ்வளவு கடுமையாகவா?

தி. மு. க. : கவிதை, ஐயா! கவிதை!! இவருடைய கவிதா சக்தி, முன்பு உங்கள் கட்சியைத் துளைக்கப் பயன்பட்டது; இப்போது எங்களைத் தூற்றப் பயன்படுத்தப்படுகிறது.

கா. க. : இந்தப் பாடலிலே உள்ள கடுமொழியைக் கேட்டால், இப்படிப்பட்டவர் மாறிவிடக்கூடியவர் என்று எவரும் கூறமாட்டார்களே! தெளிவே கிடையாதா இவர்கட்கு?

தி. மு. க. : "காலையில் மலரும் எண்ணம் கண்துயின்றெழுங் காலத்தில் மூலையில் விழுமோ, இல்லை மூளைதான் மூன்றோ நான்கோ? மாலையின் "மயக்கம்' மீண்டும் மாலையே தெளியும் போலும்''

கா. க. : ஒரே கவிதை மயமாகவே இருக்கிறதே, என்னப்பா?

தி. மு. க. : இதுவும் விலகியோர் விட்டுச்சென்ற கவிதைதான். நீங்கள், கொள்கை காரணமாகச் சிலர் பிரிந்து சென்றார்கள் என்றுதான் பேசக் கேட்டிருக்கிறார்கள். பலர் அவர்கள் பாதை தவறிச் சென்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள்.

கா. க. : அதற்கு ஒரு கவிதை கூற எண்ணமோ?

தி. மு. க. : இல்லை ஐயனே! இல்லை! இதற்கு உரைநடைக் கவிதை உரைத்திடுவோம். கேண்மின்.

கா. க. : கூறுமின்!

தி. மு. க. : "அன்னவனுக்கு ஆசைகள் காட்டிப் புகழ்பல பாடி மக்கள் மன்றத்திலிருந்து வழிபிரித்தெடுத்துச் செல் கின்றார்கள். எந்த மனமும் புகழுரைகளுக்கு இரையாகும். இது இயற்கையின் சக்தி.''

கா. க. : புகழ்தேடிப்போனால், திறமை இருந்தால், மக்கள் தராமலா போவார்கள்?

தி. மு. க. : "இந்த மக்கள் பொல்லாதவர்கள்! இப்படி அப்படி இம்மி அளவு பெயர்ந்தானெனினும் பேசி மறுப்பர்.''

கா. க. : திறமையைப் பாராட்டுவார்கள் அல்லவா?

தி. மு. க. : "இந்த உலகம் திறமையை மட்டும் தனியாய்ப் பிரித்து மதிப்பதே இல்லை. திறமை பிறகு; எம்மோடு உமக்குத் தொடர்பு எவ்வளவு'' இதுதான் மக்கள்.

கா. க. : இதுவும் விலகியவர்கள் முகாமிலிருந்துதானா?

தி. மு. க. : ஆமாம்! அவர்களைக் காட்டி, எம்மை வாட்டிட நினைப்பது, எவ்வளவு கடினம் என்பது புரிகிறதல்லவா? எனினும், அவர்களிடம் எமக்கு இரக்கம்தான் எழுகிறது. "எங்கிருந்தாலும் நண்பனே! உன்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்துப் பின் நட. பின்னால் நிற்கும் தலைவர்களைவிட, முன்னால் நிற்கும் மக்கள் வலுவினர். சற்றுத் திரும்பிப் பார்! உன் சிந்தனை மாறும்.'' தம்பி! இந்த உரையாடல், உனக்கும், உன் மூலம் நாட்டவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? அதனால் அதனை இங்கு அளித்தேன். கருத்திற்கொள்க! கடமையறிந்து காரியமாற்றுக! வெல்க!

அண்ணன்,

4-6-61