அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


திரு. வி. க. கூறுகிறார்!
1

உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் கிடைக்கும்!
அகல் விளக்கே போதும் இருள் போக்கிட !
உணர்ச்சி ஊட்டச் சென்றேன்; உன்னத உணர்ச்சி பெற்றேன்!
கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா?
நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை!
அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!

தம்பி!

"உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன் அடைவதே அறிவுடைமையாகும்.''

அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப் பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு. வி. க-யாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன் - அஃது தமிழரின் இதயத்தில பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும்.

உணர்ச்சி ஒரு செல்வம்!

அடக்கி ஆண்டிடின் தக்க பலன் கிட்டும்.

எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும் பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார் களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாக! எடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக்கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின் இணையில்லா விழிப்புணர்ச்சி என்று எண்ணத்தக்க நிலைமை! காண்கின்றேன், களிப்புக் கடலில் மூழ்கிடுகின்றேன். எத்தனை கடமை உணர்ச்சி இவர்கட்கு! உழைத்திடும் உத்தமர்களாம் இவர்கள் ஊர் சீர்படப் பாடுபட்டாக வேண்டும் என்ற பண்பு மிக்கோராகவன்றோ விளங்குகின்றனர். ஏழ்மை! நலிவு! வாழ்வின் சுமை! எல்லாவற்றையும், தாங்கித் தாங்கிக் கூனிப்போய்க் குறுகிப்போய், எதிலும் ஈடுபாடு கொண்டிடத்தக்க தெம்பு அற்றுப்போய், "இருக்கின்றோம் இறந்துபட! இறந்துபடும் வரையில் இடர்ப்பாட்டில் உழல்கின்றோம்! என்னே இவ்வாழ்க்கை! எதற்கோ இவ்வாழ்க்கை!' என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்திடும் இவர்களா, நாடு, மொழி, வளம், உரிமை, நல்லறம், நல்லாட்சி என்பனபோன்ற இலட்சியங்களை உணர்ந்து அவைதமைச் செயலிலே கண்டிட கிளம்பிடப் போகிறார்கள் என்ற ஐயப்பாடு குடையும் நிலையினனாகப் புறப்பட்ட என்னையே, அவர்கள் தமது ஆர்வத்தினால், சலியாத உழைப்பினால், தளராத ஊக்கத்தினால், புது நம்பிக்கை கொண்டிடச் செய்துவிட்டனரே!

நான் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டிடச் சென்றேன்! அவர்களல்லவா எனக்கு உன்னதமான உணர்ச்சியினைத் தந்துள்ளனர்.

ஏதாகிலும் கிடைத்திடாதா, கிழங்கு கிளிஞ்சல் போன்றவையேனும் என்றெண்ணிப் பூமியினைக் குடைந்திடும்போது, தங்கப்பாளம் கரத்தினில் தட்டுப் பட்டால் பெறுபவன் எத்துணை மகிழ்ச்சி பெற்றிடுவான். அந்நிலையன்றோ எனக்கு!

உணர்ச்சி ஒரு செல்வம்! உண்மை! அந்தச் செல்வத்தைக் குவியல் குவியலாக, குன்றன்ன அளவினதாகக் காண்கின்றேன்; ஒவ்வோர் நாளும்; ஒவ்வோர் இடத்திலும்.

காலையிலே, மேயரும், மாவட்டச் செயலாளரும், மணிமொழியாரும் மற்ற நண்பர் சிலரும் மாநில மாநாட்டுக்கான "திடல்' காண அழைத்துச் சென்றனர். சென்ற இடத்திலே, எத்தனை இனிய முகங்கள், நட்பு மொழிகள், வரவேற்கும் கண்கள்!

இடத்திலே கள்ளி காளான் நிரம்ப உள்ளனவே என்கின்றேன்; இதுதான் இடம் என்று தீர்மானித்துவிடுங்கள், எட்டே நாளில் இந்த இடம் பட்டுப்போல பளபளக்கிறது பாருங்கள் என்கிறார்கள்.

இங்கேதான் மாநாடாம்! மாநில மாநாடாம்! தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் வெளியிட அமைகின்ற மாநாடாம்! நமது பக்கத்தில்! நமது பேட்டையில்! நமது வட்டத்தில்! - என்றெல்லாம் பரிவுடன் பேசுகின்றனர். கழகத்திடம் அவர்கள் கொண்டுள்ள பாசம், வைத்துள்ள நம்பிக்கை தூய்மையானது; அது வளர்ந்தபடியும் இருக்கிறது. வஞ்சகத்தாலும் சதிச் செயலாலும் அதனை வீழ்த்திடவோ குன்றச் செய்திடவோ முடியவில்லை. காலைக் கதிரவன்போன்ற ஓர் எழிலுடன், உயிரூட்டம் தரும் சக்தியுடன், அந்த எழுச்சி விளங்குகிறது.

கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைத்திட முடியாத கருவூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது; உண்மை உழைப்பாளரின் உணர்ச்சி எனும் செல்வம்.

ஆடவர் மட்டுமல்ல தாய்மார்கள்; வாலிபர் மட்டுமல்ல, முதியோர்கள், சிறார்கள்; எல்லோரிடமுமே இந்த உணர்ச்சி ததும்பிடக் காண்கின்றேன்; உள்ளன்பு இருந்திடக் காண்கின்றேன். கண்டதும் ஓர் கனிவு! சொல் கேட்டதும் ஓர் பற்று! அழைத்ததும் ஓர் பாசம்! இதனைவிடச் சிறந்ததோர் செல்வம் எங்கும் இருந்திட முடியாது.

பெருமழையால் வீடிழந்து விம்மிக் கிடந்திடு வோரைக் காணச் செல்கின்றேன், அவர்கள் வாழ்த்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள்!

அண்ணன் வந்தானாமே, உங்கள் அண்ணன்! என்ன கொண்டுவந்து தந்தான்? உமது அல்லலைப் போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான்? - என்று கேமொ ழி பேசிடக்கூடச் சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள், நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள்? அண்ணன் வந்தான்! எமது அல்லலைக் கண்டான்! ஆவன செய்திடுவான்!! என்றல்லவா நெஞ்சம் நெகிழக் கூறுகின்றனர்! அத்தகைய உள்ளன்பும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன், பெருமகிழ்வு கொண்டேன். ஆனால் மறுகணமோ கவலை என் மனத்தினைக் குடைந்தெடுக்கலாயிற்று.

இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சிப் பெருக்கையும், துச்சமென்று எண்ணி அல்லவா, ஆளவந்தார்கள், மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர். அகந்தை அது என்போம். ஆயினும் எதனால் பிறந்துளது அந்த அகந்தை? இத்தனைத் தெளிவாக ஏழை எளியோர், பாட்டாளி, விவசாயி கழகப் பற்றினைத் தெரிவித்திடுவது கண்டும் ஆளவந்தார்கள், மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெறப் போவதாக, எந்தத் தைரியத்தினால் கூறுகின்றனர்?

எழுச்சி இருக்கிறது நிரம்ப, ஆனால் ஏழையரிடம்!

ஏழையர் விலை கொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள்.

உணர்ச்சி இருக்கிறது நிரம்ப!

ஆனால் அந்த உணர்ச்சியை மங்கச் செய்திடலாம், மடியச் செய்திடலாம் காசு வீசி!

இவ்விதமாகவன்றோ, தம்பி! காங்கிரஸ் கட்சியினர் எண்ணு கின்றனர். ஏழையர்! ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம், பணத்தால் அடித்து வீழ்த்திவிடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர்.

மனித இதயத்தை, தன்மானத்தை, உரிமை உணர்ச்சியை, கொள்கைப் பற்றை, அவ்வளவு மலிவான பண்டமாக அல்லவா கருதுகின்றனர்! பணம் பெருத்தான்கள்! கேவல ஜென்மங்கள் என்றல்லவா கருதுகின்றனர் ஏழையரை!

இதனை எண்ணும்போதுதான் தம்பி! கவலை என் உள்ளத்தைப் பிய்த்துத் தின்னுகிறது.

காங்கிரஸ் ஆளவந்தார்கள் எண்ணுவதுபோல, ஏழையர் வீழ்ந்துபடுவர் என்ற அச்சம் அல்ல எனக்கு; எங்ஙனம் அவ்விதமான அச்சத்தை நான் கொள்ள முடியும்? நான் காணும் கண்ணொளி பாவனையா? நான் கேட்டிடும் பாசப் பேச்சு? பாவனையா? இல்லை! இல்லை! முக்காலும் இல்லை! இதயம் பேசுகிறது! உணருகின்றேன்! ஆகவே அவர்களை விலைகொடுத்து ஆளவந்தார்கள் வாங்கி விடுவர் என்ற அச்சம் நான் கொண்டிடவில்லை!

நான் கவலைகொள்வதற்குக் காரணம், பெரும் பாலான மக்களை ஏழ்மையிலே தள்ளி வைத்துள்ள எத்தர்கள், வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல, கேவலப்படுத்தவும் துணிகின்றனரே என்பதுதான்.

மந்தகாச வாழ்வு நடாத்தும் சீமானின் மாளிகைகளிலே கொள்ளை இலாபமடிக்கும் வணிகக் கோட்டங்களிலே கூடிப்பேசுகின்றனர், தம்பி! கொந்தளித்தபடி இருக்கும் இந்த எழுச்சியை எப்படி வீழ்த்துவது என்பதுபற்றி, போர் முறை வகுக்கிறார்கள்.

எதிர்த்துத் தாக்குவதா?
சுற்றி வளைத்துக்கொள்வதா?
பக்கவாட்டத்திலே பாய்ந்துபிளப்பதா?
கோட்டைக்குள்ளே குத்துவெட்டு எழச்செய்வதா?

எந்த முறையிலே தாக்குதலை அமைத்துக்கொள்வது என்று சூழ்ச்சி வகுத்தபடி உள்ளனர். காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள ஓட்டுகள் சிதறிடாதபடி பார்த்துக்கொள்ள, மும்முனைப் போட்டியைத் தவிர்த்திட வேண்டும் என்பதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடினும்,

ஏதாகிலும் ஒரு கட்சியைக் கிளப்பிவிட்டோ, தனிப்பட்டவர்களைத் தூபம் போட்டோ, மும்முனைப் போட்டியை உண்டாக்கியே தீருவது என்பது காங்கிரஸ் காரரின் சூழ்ச்சித் திட்டங்களிலே ஒன்று.

இதனை அவர்கள் மிக வலிவுள்ள திட்டமென்றும் நம்புகின்றனர்.

தி. மு. கழகம் மிக மிகச் சாமான்யர்களாலே நடத்தப்பட்டு வருவது. அதன் வளர்ச்சி கண்டு அருவருப்புக்கொண்டோர் உளர்; அவர்களைத் தட்டிவிட்டுப் போட்டியை மூட்டிவிடலாம் என்று கருதுகின்றனர்.

தம்பி! முதன் முதல் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்றபோது, காங்கிரசைக் காலமெல்லாம் எதிர்த்து வந்தவர் ஒருவர் - ஆனால் நமது கழகம் அல்ல - என்னைத் தருவித்து, தமது வாழ்த்தையும் பாராட்டுதலையும் தெரிவித்ததுடன், இந்த விதமான வெற்றியும் வளர்ச்சியும் கழகத்துக்குக் கிடைத்திடும், அதிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் என்று நான் எண்ணிடவே இயலவில்லை. எப்படியோ நல்ல இடம் கிடைத்து விட்டது, இனி அதனைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுரைத்தார். மகிழ்ச்சி அடைந்தேன். "இதுவரையில் கழகத்துக்கு ஆதரவு காட்டாதிருந்து வந்தவர்களெல்லாம்கூட, இது வளருகிற கட்சிதான் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டதால், இனி ஆதரவு அளித்திட முன்வருவார்கள்' என்று பேசி என் ஆவலைக் கிளறினார்.

அந்த ஆவலுடன் எனக்கோர் ஐயப்பாடு கிளம்பிற்று. ஆதரவு கிடைத்திடும் என்கிறாரே, எந்த இடத்து ஆதரவோ என்பது பற்றிய ஐயப்பாடுதான்! அவரே அதனைப் போக்கி விட்டார்; "நான் சில கம்பெனிகளுக்குச் செல்ல முடியும், ஆதரவு காட்டச் சொல்லி, அவர்களுக்கெல்லாம் சில இலட்சங்களை நன்கொடையாகக் கொடுப்பது என்பது மிக எளிதான காரியம்'' என்றார்.

கிணறு வெட்டுகிறார், கிளம்புவது கிளம்பட்டும் என்று எண்ணிக்கொண்டு நான் ஏதும் பேசாதிருந்தேன்; அவர் தமது பேச்சைத் தொடர்ந்தார்.

"ஒரு காரியம் செய்ய வேண்டும் நீங்கள் தொழில்களை - பஸ்கள் போன்ற தொழில்களை - தேசிய மயமாக்க வேண்டும் என்ற பேச்சை விட்டுவிட வேண்டும்; அது சரியான திட்டமல்ல; அதனை மட்டும் கழகம் மறுத்துவிடுமானால், தொழிற் கோட்டங்கள் உமது கழகத்துக்கு நன்கொடை தந்திடத் தாராளமாக முன்வரத் தயக்கம்கொண்டிடா'' என்றார்.

புரிகிறதல்லவா, தம்பி! நமது கொள்கையை விலை பேசுகிறார்! என்னிடம்! எந்தக் கொள்கையைக் கூறி மக்களின் பேராதரவைப் பெற்றோமோ, அதே கொள்கையை, கம்பெனி களிடம் நன்கொடை வாங்கிட, "விட்டுவிட'ச் சொல்லுகிறார்!!

நமது வளர்ச்சியும் வெற்றியும் அவருடைய மனத்திலே அந்த அளவுக்குத்தான் மதிப்பைக் கொடுத்தது.

நான் கோபம் கொள்ளவில்லை, வீண் வேலை அல்லவா? அவர், அவருடைய "அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

கழகம் வளர வளர இதுபோல வளைந்து கொடுக்கும் என்ற நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை வீசிடலாம், ஏதாவது பிடிபடக்கூடும் என்ற நப்பாசை கொண்டோர் சிலர் உளர்.

அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்துவிடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.

ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக நம்பிக்கொண்டிருப்பது, உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது, ஓடி ஆடி, உணர்ச்சியைப் பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு. வி. க.வின் மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி பயன் பெற்றிட முனைய வேண்டும்.

மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது.

அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.

உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி! அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமது பணி நின்று நிதானமாக, தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே.

இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக்கொண் டிருக்கும் இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து தொண்டாற்றப் போகிறார்கள்? இடையிலே சோர்ந்துபோவர், தளர்ந்து போய்விடுவர் என்று நம்புகின்றனர்.

கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக.
கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக.
முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக.

ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் காரணமாகவே அலுத்துப் போய்விடுவர், தொடர்ந்து பணியாற்றும் இயல்பு எழாது, வலிவு இராது, பழக்கம் இல்லை, பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.

ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன். அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன்.

தொகுதியின் அமைப்பு, வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள் உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர்? ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பனபோன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட் டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும்.

பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஓட்டுச் சாவடி சென்றாக வேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக

ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்று விடுகிறது.