அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


திரு. வி. க. கூறுகிறார்!
2

ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும், காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட!

தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறைபற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம். அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர். ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும், முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும்.

காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது. கொள்கை வலிவு அதனிடம் இல்லை. ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால் ஈர்த்திடும் சக்தி கிடையாது என்கிறோம். இது உண்மையுங்கூட. கொள்கை வலிவு இழந்துவிட்டது, காங்கிரஸ் கட்சி என்பது வரையில்.

ஆனால் கொள்கையாளர்கள் இருந்த நாட்களை விட ஓட்டு வேட்டையில் வல்லவர்கள் சேர்ந்திருக்கும் இந்த நாட்களில் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள்மீது வலைவீசும் சக்தி வளர்ந்திருக்கிறது.

தம்பி! காங்கிரஸ் தூய்மை மிக்கதாக, நாட்டு மக்கள் அனைவரும் "பயபக்தி விசுவாசம்' செலுத்திடத்தக்க நிலையினதாக இருந்த போது, தேர்தலில் வெற்றிபெற அந்தக் கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் தூய்மை இழந்த இன்றைய நிலையில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

தூய்மை மிக்க தேசிய ஸ்தாபனமாகக் காங்கிரஸ் விளங்கியபோது, காங்கிரசின் பெயரால் யாரை நிற்க வைத்தாலும் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றனர்.

மக்கள் அதுபோன்றே, தேர்தலில் யார் நிற்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மகாத்மா கட்சிக்கு ஓட்டுப்போட முனைந்தனர்.

யாரை நிற்க வைத்தாலும் என்று நான் மரியாதைக்காகச் சொன்னது, காங்கிரசின் பேரால் எதை நிற்க வைத்தாலும் என்பதாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வளர்ந்திருந்த ஒரு எழுச்சியூட்டும் வரலாறு அந்த அளவுக்கு வலிவளித்தது முதன் முறை. ஆனால் ஒரே ஒரு முறைதான்!

அடுத்த முறையே, காங்கிரஸ், யாரை நிறுத்தி வைத்தாலும் என்ற பேச்சை விட்டுவிட்டது.

காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பெருமையைப் பற்றிக் கூறியதுடன், தேர்தலுக்கு நிற்பவரின் நாட்டுப் பற்று, தொண்டு, தியாகம், அறிவாற்றல் ஆகியவை பற்றியே அதிகமாக, விளக்கமாகப் பேசித்தான் ஓட்டுக் கேட்க முடிந்தது.

அந்த அளவு மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டிருக்கிறது இடையில்.

பிறகோ, காங்கிரசுக் கட்சியின் பேரால் தியாகிகள், அறப்போர் வீரர்கள், அஞ்சா நெஞ்சினர், அண்ணல் காந்தியாரின் வழி நின்றிடுவார் என்போர்களைத் தேர்தலிலே நிற்க வைக்கவில்லை.

அவர்களின் தொகை குறைந்துகொண்டு வந்ததும் அவர்களிலே பலர், காங்கிரசாட்சியின் போக்கு கண்டு மனம் வெதும்பி, கட்சியைவிட்டு வெளியேறிவிட்டதும் இதற்கான காரணங்கள் என்று கொள்ளலாம்.

தியாகிகளுக்குப் பதிலாக, கனதனவான்களைத் தேடிப் பிடித்தனர்.

கட்சியின் சாதனைகள் பற்றிப் பெருமிதத்துடன் பேசி ஓட்டுக் கேட்பதற்குப் பதிலாக, வேட்பாளர்களின் நாட்டுப் பற்று, தியாக உள்ளம், மக்கள் தொடர்பு ஆகியவை குறித்து எடுத்துக் கூறி ஓட்டுக் கேட்பதற்குப் பதிலாக,

இவர் இந்தப் பகுதியில் மிக்க செல்வாக்குள்ளவர்,
பெரிய நிலச்சுவான்தாரர், கோயில் தர்மகர்த்தா,
சத்திரம் சாவடி கட்டியவர்,
ஆயிரம் பேர்களுக்குப் பிழைப்பு தருகிறார், தமது தொழிலகங்களில்.

இவருடைய பேச்சைத் தட்டி நடந்திடுவோர் எவரும் இந்தப் பக்கத்திலே கிடையாது.
இவர்தான் இங்கு ஜாதித் தலைவர் - குலத் தலைவர் - பெரிய தனக்காரர்.
இவர் பாளையக்காரர் பரம்பரை, ஆள் அம்பு இவரிடம் ஏராளம்

என்ற இவ்விதமான நாமாவளி பாடி ஓட்டுக் கேட்டிடலாயினர்.

காங்கிரசுக் கட்சி அதற்குள் அந்த விதமாக, பெரிய புள்ளிகளிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது.

தம்பி! கோவை சுற்றுப் பயணத்தின்போது கேள்விப்பட்டேன். இப்போதைய அமைச்சர் இருக்கிறாரே, பழைய கோட்டை பட்டக்காரர் - காங்கிரசல்லவா அவர் - அவருடைய, தகப்பனார் காங்கிரசை எதிர்த்துத் தேர்தலிலே நின்று தமது செல்வம், செல்வாக்கு, ஆள்கட்டு எல்லாவற்றையும் காட்டியும், குட்டபாளையம் பெரியசாமி என்ற காங்கிரஸ்காரரால் தோற்கடிக்கப்பட்டார். பெரியசாமி என்பவர் சிறு நிலச்சுவான்தாரர்தானாம்.

காங்கிரஸ் என்ற அமைப்புக்கு அன்று இருந்து வந்த அப்பழுக்கற்ற செல்வாக்கைக் காட்டுகிறது அந்த நிகழ்ச்சி.

இன்று அவர் திருக் குமாரர், காங்கிரசின்மீது பழி தீர்த்துக்கொண்டுவிட்டார்!

எந்தக் காங்கிரஸ் என் தகப்பனாரைத் தோற்கடித்ததோ அந்தக் காங்கிரஸ் இன்று என் அரண்மனைத் தாழ்வாரத்தில்! அதன் தலைவர்கள் என் எதிரில் சிரித்த முகத்துடன்! அதன் தொண்டர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர!

இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப் படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்?

தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும் போது, தூக்கிவர ஆளா அனுப்ப வேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார் மன்றாடியார்! தம்பி! இடையிலே காங்கிரசுக் கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டி நேரிட்டுவிட்டது.

மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகிவிட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார்.

ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு, வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்திவிட்டது.

மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில் அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்துவிட்டிருக்கிறது.

இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு,

பணம்
ஜாதிச் செல்வாக்கு
துணிந்த நடவடிக்கை

என்பவைகளைக் கொண்டது.

தூக்கிவாடா அவளை! கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை! - என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள் இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக்கொண்டுவிட்டதால்,

ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு, தேர்தல் வெற்றியிலே நம்பிக்கைகொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது?

அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்.
அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப்படுகிறார்கள்.
வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள்.
வரிச் சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள்.
நித்த நித்தம் துப்பாக்கிச் சத்தம்! பிணம்!
நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது.
நாணயத்தின் மதிப்பே கெட்டுப்போய்விட்டிருக்கிறது.

ஏற்றுமதி வளரவில்லை, இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை.

உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.

இவை வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா? நம்பிக்கை யூட்டும் குறிகளா?

நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள் மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை!

எதனால் பிறந்தது இந்தத் துணிவு?

சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும், நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான் தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.

ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது, வெறும் கட்சிக் கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும் மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம் என்று பொருள்.

காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!

காட்டாட்சியினரால் உருக்குலைக்கப்பட்ட உத்தமர்கள் ஏராளம்!

வீடு இழந்தவர்கள், விழி இழந்தவர்கள், வாழ்வு இழந்தவர்கள், தன்மானமேகூட அழிக்கப்பட்டுவிட்ட வர்கள் ஏராளம்.

அவர்களெல்லாம் கொட்டிய குருதி, வடித்த கண்ணீர், எழுப்பிய பெருமூச்சு, காலவேகமாக, காட்டாட்சியினரின் பிடியைத் தளர்த்திற்று.

சிற்றரசர்கள்
ஜெமீன்தாரர்கள்
மிட்டா மிராசுகள்

போன்றோரின் ஆர்ப்பரிப்பும் அட்டகாசமும் ஆதிக்கமும், குறைக்கப்பட்டது. அவர்களின் கெடுமதியும் கொடு நினைப்பும் புற்றுக்குள் அரவமென்று ஒடுங்கிற்று. ஏழை விழித்துக் கொண்டான்! பாட்டாளி கேள்வி கேட்கிறான்! அழுத கண்களிலே அனல் கிளம்புகிறது! கூப்பிய கரத்தினர், கொடு வாள் தூக்கும் நிலை வந்திடுவது தெரிகிறது! காலம் மாறிவிட்டது! இனி நமது காட்டாட்சி நடவாது!! - என்று எண்ணி, அத்தகைய ஆதிக்கக்காரர்கள் தமது "தர்பாரை' நிறுத்திக்கொள்ளத் தலைப்பட்டனர்.

அந்த நேரமாகப் பார்த்துத்தான் வெறும் கட்சி ஆதிக்கத்துக்காக வேண்டி அந்தக் காட்டாட்சி நடத்திடுவோரை, காங்கிரஸ் தலைவர்கள் அழைத்துவந்து அவர்களிடம் அரசியலை ஒப்படைத்திருக்கிறார்கள்.

முடிந்துவிட்டது நமது ஆதிக்கம் என்றெண்ணி மூலைக்குச் சென்றுவிட்டவர்களுக்கு, காங்கிரசின் மூலவர்கள் முதல் தாம்பூலம் கொடுத்து, கூடத்தில் கொலு இருக்கச் சொல்லுகிறார்கள்.

கொடுமை! கொடுமை! அது மட்டுமல்ல தம்பி! இது எத்தகைய எதிர்காலத்தை உருவாக்கும் என்று உணர்ந்திடக் கூடிய எவரும் இதனை மடைமை! மடைமை என்றே கூறுவர்.

முதலாளிகளையே, வேட்பாளர்களாக நிறுத்த முனைகிறார்கள். இது கட்சிக்கோ, நாட்டுக்கோ, நாட்டுக்குத் தேவையான சோஷியலிசத்துக்கோ நல்லது அல்ல என்று மனம் குமுறி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பலர், டில்லிக் கூட்ட மொன்றில் பேசியதுபற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது மாளவியா எனும் மற்றோர் காங்கிரஸ் தலைவரும் மாரடித்து அழுகிறார், இப்படியா முதலாளிகளுக்கு இடம் கொடுப்பது; காங்கிரசுக் கட்சி அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறதே, நாடு கெடுமே; சோஷியலிசத் திட்டம் பாழ்படுமே என்றெல்லாம்.

கேட்பவர்கள் யார்? அவர்கள் வெகுதூரம் சென்று விட்டார்கள்; இனித் திரும்பி வருவது இயலாத காரியம். அவர்கள் மிக இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டுவிட்டனர்; இனி அவர்களைப் பிரித்துவிடுவது முடியாத காரியம்.

தம்பி! வளர்ந்துவிட்டிருக்கும் எதிர்ப்பை அழித்தொழிக்க, காங்கிரசுக்கு, தனக்குள்ளே வலிவு போதுமானதாக இல்லை; ஆகவே சீமான்களின் வலிவைத் துணையாகப் பெறுகிறது. சீமான்களைக்கொண்டு, இந்த எதிர்ப்பை முறியடிக்கத் திட்டமிடுகிறது. மக்களின் உரிமைக் குரலை அடக்கிட மமதையாளர்களின் துணையைத் தேடிப் பெறுகிறது. அந்த மமதையாளர்கள்,

"கைத் திறனும் வாய்த் திறனும் கொண்ட மக்கள், கண்மூடி மக்களது உடைமை எல்லாம் கொத்திக்கொண்டு ஏப்பம் விட்டவர்''

என்பதனை அறிந்து, அவர்களை ஏவிவிட்டு ஜனநாயகத்தைச் சிதைத்திடத் துணிந்துவிட்டனர்.

ஆகவே இம் முறை நாம் தேர்தலிலே ஈடுபடுவது, கட்சியின் வெற்றிக்காக என்ற குறுகிய நோக்குடன் அல்ல; அரசியல் ஆதிக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க என்பதனை உணர்ந்திட வேண்டும்.

ஆகவே நமது பணியிலே தம்பி! உணர்ச்சி பக்குவப்படுத்தப் பட்டதாகி பயன்படுத்தப்பட வேண்டும்.

மிகப் பெரிய காரியத்தை மேற்கொண்டுவிட்டோம்.

மிகப் பயங்கரமான ஒரு வளையத்தை உடைத்துப்போட முனைந்திருக்கிறோம்.

மிகக் கேவலமான ஒரு கூட்டுச் சதியை உடைத்தெறியும் காரியத்தை மேற்கொண்டுவிட்டிருக்கிறோம்.

இதற்குத் தேவைப்படும் ஆற்றலை நாம் நமது உணர்ச்சி மூலம் பெறுகிறோம்.

பெற்றுள்ள உணர்ச்சி, என் உள்ளத்திலே தளராத நம்பிக்கையைத் தந்துள்ளது.

திரு. வி. க-யாணசுந்தரனாரின் கருத்தினை, இதுபோது கண்டேன். நாம் மேற்கொண்டுள்ள பணிக்கு மிக மிகத் தேவைப்படும் அறிவுரை அஃது என்பதனால் அதனைத் துவக்கத்தில் அளித்துள்ளேன்.

உணர்ச்சி ஒரு செல்வம்.

அதனை அடக்கி ஆண்டிடின் பலன் கிடைத்திடும்.

அண்ணன்,

20-11-66