அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தியாக வரலாறுகள்
பாரதிதாசன் பிரிவு
1

தம்பி!

இன்று நீக்ரோக்களுக்குக் கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே தீர்க்கப் பட்டிருக்கிறது. துவக்க நாட்களில், இந்தப் பிரச்சினை குறித்து உலகு துடித்தெழ, இந்தத் தியாகத் தீயில், தூயவர் வீழ்ந்துபட்டிருக்கிறார்.

இதுபோன்ற தியாக வரலாற்று நிகழ்ச்சிகளைப் படிக்கும் போதுதான், நாம் மேற்கொண்ட அறப்போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் இழப்பும் இன்னலும் மிகச் சொற்பம் - அற்பம் - என்ற மெய்யுணர்வு ஏற்படுகிறது - அதுமட்டுமல்லாமல், பெரிய பிரச்சினைகளைத் தீர்த்திட எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றாக வேண்டும் என்ற தெளிவு பிறக்கிறது.

இந்த உணர்ச்சி உள்ளத்தைத் தடவிக்கொடுக்கும் நிலையில், உறங்கச் செல்கிறேன்.

11-4-1964

வேதனை தரத்தக்க இழப்புகள் குறித்த பட்டியலில் மற்றும் ஒரு பெயர் இணைக்கப்படவேண்டி நேரிட்டுவிட்டதை இன்றைய பத்திரிகை அறிவித்தது. நாச்சியார்கோயில் தவுல் வித்வான் ராகவப்பிள்ளையின் திடீர் மறைவுபற்றிப் படித்து மிக்க வேதனைப்பட்டேன். தமிழக இசை உலகுக்கு இதுவும் மிகப் பெரிய இழப்பு. எனக்குற்ற நண்பர்களில் இவரும் ஒருவர். இவரும், காருகுறிச்சியுடன் காஞ்சிபுரம் எங்கள் இல்லத்திற்கு, திருமணத்தின்போது வந்திருந்து இசை விருந்தளித்தார். காருகுறிச்சியைவிட இவரை எனக்கு அதிக ஆண்டுகளாகத் தெரியும். மிக்க அன்புடன் பழகுபவர். தவுல் வாசிப்பில் இவருடைய தனித்திறமையை அனைவரும் அறிவர். இவருடைய புலமையை அறிந்த அனைவரும் நெஞ்சம் திடுக்கிடத்தக்க விதமான மறைவு இவருடையது.

நான் சோர்வாகக் காணப்பட்டதை எண்ணியோ என்னவோ இங்கு என்னுடைய நண்பர்கள், என்னுடைய பயண அனுபவங்களைப்பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அரித்துவாரம், டேராடன், சாரன்பூர், காசி, சாரநாத், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய பல இடங்களுக்குச் சென்று வந்ததுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். எத்தனை பெரிய பெரிய நகர்கள் போய்வந்தாலும், சென்னைபோல, மனதுக்கு நிம்மதி தரத்தக்க இடம் இல்லை என்ற என் எண்ணத்தையும் கூறினேன். சென்னை மேலும் எழில் நகராவதற்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம்.

கடந்த நாலைந்து நாட்களாகவே கையில் வகுறை ந்திருந்தாலும், மிகவும் பளுவாக இருப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி. இதன் காரணமாக, நூற்பு வேலை செய்யவில்லை. இன்றுதான மறுபடியும் நூற்பு வேலையில் சிறிது நேரம் ஈடுபட்டேன்.

என்ன காரணத்தினாலோ, நாலைந்து நட்களாக நாங்கள் இருக்கும் பகுதியின் முன்வாயில் இரும்புக் கம்பிக் கதவைப் பூட்டியே வைக்கிறார்கள். சிறையில், முறைகள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குக் காரணம் புரிவதில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

பல செய்திகளால் ஏற்பட்டிருந்த மனவருத்தத்தைப் போக்குவதுபோல, இன்று மாலை பரிமளம் என்னைக் காண வந்திருந்தான். இன்றுடன் பரீட்ஷை முடிவுற்றதாகவும் கொன்னான். உடன் யாரும் வரவில்லை. ஆகவே நீண்டநேரம் பரிமளத்திடம் குடும்ப விஷயமாகவும், பொது விஷயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் இளைத்துக் காணப்படுவதாகவும் சொன்னான் - எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

ஆப்பிரிக்க பூபாகத்தைப்பற்றி ஆங்கிலேயர்கள் "விநோதமான' முறையில், கதைகள் எழுதுவது வாடிக்கை. அங்கு பூர்வீகக்குடிகள் மனித மாமிசம் தின்பவர்கள், மாய மருத்துவக்காரரிடம் சிக்கிக் கிடப்பவர்கள் என்றெல்லாம் எழுதுவது வழக்கம். பிற நாடுகளையும், பிடித்தாட்டும் ஏகாதிபத்திய உணர்ச்சிக்கு உணவளிக்க, இதுபோல எழுத தலைப்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். இத்தகைய முறையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில ஏடு படித்தேன். எந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டிருந்த போதிலும், அதைப் படிக்கும்போது, ஆப்பிரிக்க பூபாகத்தின் இயற்கைச் செல்வம் எவ்வளவு அளவுகடந்து இருக்கிறது என்பதைத்தான் உள்ளபடி உணர முடிகிறது. அந்த இயற்கைச் செல்வத்தை, விடுதலைபெற்ற ஆப்பிரிக்க நாடுகள் தக்க முறையில் பயன்படுத்தினால், இந்த நூற்றாண்டு ஆப்பிரிக்க மக்களின் புதுவாழ்வு நூற்றாண்டாகும் என்று தோன்றுகிறது.

12-4-1964

காக்கைக் குருவிகளெல்லாம், எங்களைக் கேலி செய்வது போலக் கூச்சலிட்டு, மரங்களிலே தாவிக்கொண்டிருந்தன - இன்று 5-30க்கே, எங்களை அறைகளிலே போட்டு பூட்டி விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் அறைக்குள் அனுப்பப்பட்டோம். உள்ளே போவதற்கு முன்பு, ஒரு மணி நேரம் வரையில், மிகப் பயங்கரமான கூச்சல் - கதறல் - நாங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்துப் பகுதியில், வேட்டையாடப்பட்ட மிருகம், வெகுண்டெழுந்து கதறுவதுபோன்ற கூச்சல். காரணம் கேட்டோம். ஒரு ஆயுள் தண்டனைக் கைதிக்கு மனம் குழம்பிப்போய் இவ்விதம் கூச்சலிடுவதாகச் சொன்னார்கள். உட்புறத்தில் இதுவரை இருந்து வந்தானாம். கதறிக் கதறிக் களைத்துபோய்ப் பிறகு பேச்சற்றுக் கிடக்கும் நிலை மேலிட்டு விட்டது என்று எண்ணுகிறேன்.

இன்று பிற்பகல், சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு விழாபற்றி இன்றைய பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.

எனவே நண்பர்கள் அதுபற்றிக் கேட்டார்கள் - நான் அங்குச் சென்று வந்த நிகழ்ச்சிப்பற்றிக் கூறினேன். அதைத் தொடர்ந்து, விஜயநகரம் - ஹம்பி இடிபாடுகள்பற்றிப் பேச்சு எழுந்தது. அங்கு நான் கண்டவைகள்பற்றியும் கூறினேன்.

சென்ற ஆண்டு நான் சிரவணபெலகோலா பற்றி எழுதியதைப் படித்துவிட்டு, தான் போய் பார்த்துவிட்டு வந்ததாக, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி என்னிடம் கூறினார்.

போகப்போகிறார்களோ இல்லையோ, இங்கு இந்த நிகழ்ச்சிபற்றி நான் கூறியதைக் கேட்ட நண்பர்கள், பல இடங்களுக்குச் சென்றுவரப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

அரக்கோணம் ராமசாமி, தனது தொகுதியில் உள்ள மகேந்திரவாடி என்ற ஊரையும், ஏரியையும் நான் அவசியம் வந்து பார்க்க வேண்டும் - அந்த இடம் பல்லவர்கள் காலத்தது என்று கூறினார். வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

ஷேக் அப்துல்லா நிலைமைபற்றியும், கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுபற்றியும், இங்கு நண்பர்கள் திகைப்புடன் பேசிக் கொண்டுள்ளனர்.

13-4-1964

நேற்றுப்போலவே இன்று மாலையும் புத்தாண்டுக்காக விடுமுறையாம் - விடுமுறை என்றால் கைதிகளுக்கு மாலை ஆறு மணிக்குள் கூடு என்பது நிலைமை.

இன்று காலையிலேயே, கவலை தரும் செய்தி - ஆசைத்தம்பி, அறிவழகன் தோற்றுவிட்டதாக. அவர்கள் தேர்தலில் ஈடுபட்ட செய்தி அறிந்தபோதே கவலைப்பட்டேன் - அந்தத் தேர்தல் முனைகள் (உள்ளாட்சி மன்றங்கள் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி) நமது கழகத்துக்குப் போதுமான தொடர்பு உள்ளவைகள் அல்ல. அந்த முனைகளில் செல்வாக்குப் பெறும் வழிமுறைகள், நமக்கு இன்னும் சரியானபடி பிடிபடவில்லை. எனவே, அந்தத் தொகுதிகளில் கழகத் தோழர்கள் தேர்தலில் ஈடுபடுவது, மிகமிகத் துணிகரமான முயற்சி என்று கூறவேண்டும். என்றாலும், எப்படியும் அந்த முனைகளிலும் நாம் ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் ஈடுபடத்தானே வேண்டும். இது, முதல் முயற்சி என்ற அளவில் திருப்திபட்டுக் கொள்ள வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன்.

இந்த இரு தொகுதிகளிலும், அதிலும் குறிப்பாக உள்ளாட்சி மன்றத் தொகுதிகளில் வாக்காளர்களாக உள்ளவர்களில் எந்தக் கட்சியினர் அதிகம் என்று நண்பர்கள் கேட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆளுங் கட்சியைச் சேர்ந்து விடுபவர்கள் - ஜஸ்டிஸ் கட்சி ஆளுங் கட்சியாக இருந்தபோது, அதிலே இருந்தனர்; இப்போது காங்கிரசில் உள்ளனர் - அவர்கள் மட்டுமல்ல, "பெரிய புள்ளிகள்' என்பவர்களே அவ்விதம்தான் என்று நான் கூறினேன். மாவட்ட வாரியாக, எந்தெந்தப் பெரிய புள்ளிகள், முன்பு ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள் இப்போது காங்கிரசில் சேர்ந்துள்ளனர் என்பதுபற்றி நண்பர்கள் கணக்கெடுத்தனர். இதழில், செட்டி நாட்டரசர் முத்தைய்யா செட்டியார், சென்னை மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது என்று அன்பழகன் சுட்டிக் காட்டினார். அவருடைய தம்பி இராமநாதன் செட்டியார், டில்லி பாராளுமன்ற உறுப்பினர் - காங்கிரஸ் கட்சி; அதுகூட வேடிக்கை இல்லை, ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக விளங்கிய "பொப்பிலி ராஜா'வின் மகன், பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி என்று நான் கூறினேன். பெரிய புள்ளிகள் போக்கு இதுதான் என்று நண்பர்கள் கூறி வருந்தினர்.

நேற்றும் இன்றும், "சாடர்லீ சீமாட்டியின் காதலன்' என்ற புத்தகம், ஆபாசமானது என்று தடை செய்யப்பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்குபற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் கருத்து, நடை இரண்டுமே, நம்மைத் தூக்கிவாரிப் போடக்கூடியது. சாடர்லீ சீமாட்டி, மணமானவள் - கணவன், உலகப் பெரும்போரில் குண்டடி பட்டதால், இடுப்பிலிருந்து செயலற்ற உடல்நிலை பெற்று விடுகிறான். சாடர்லீ சீமாட்டி, சீமானுடைய நண்பனிடமும், பிறகு, தோட்டக்காரனிடமும் தொடர்பு கொள்கிறாள். இதிலே தோட்டக்காரனிடம் கொண்ட தொடர்பு தொடர்கிறது - சீமாட்டிக்கு அவனிடம் இணைந்துவிட வேண்டும் என்ற துணிவு பிறக்கிறது; அவனும் மணமானவன்; முரடன். இருவரும் தத்தமது "விவாகத்தை' விடுதலை செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, கண்காணா இடம் சென்று வாழவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இது கதை. பச்சை பச்சையாகவும், புட்டுப் புட்டுக் காட்டுவதாகவும், ஆபாசமான சொற்களைக் கொண்டதாகவும், நடை.

"இந்த ஏடு, ஆபாசமானது, படிப்பவரின் மனதைக் கெடுத்து, ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பாழாக்கிவிடும், ஆகவே இது தடை செய்யப்படவேண்டும்' என்பது வழக்கு.

வழக்குத் தொடுத்தது பிடிட்டிஷ் அரசு. புத்தகம் வெளியிட முன்வந்தது, பென்குவின் புத்தக நிலையத்தார்.

இந்த நூலின் ஆசிரியர் டி. எச். லாரன்ஸ் என்பார் இலக்கியத் துறையில் வித்தகர் என்ற விருது பெற்றவர். அவருடைய கதைகள் - கட்டுரைகள் - கவிதைகள், இலக்கியச் செறிவுள்ளன என்பதற்காக பல பல்கலைக் கழகங்களில் பாட நூற்களாகவும் ஆராய்ச்சிக்குரிய நூற்களாகவும் இடம் பெற்றுள்ளன. இந்த நூற்றாண்டின் இணையில்லா இலக்கியப் பேராசிரியர் வரிசையில், லாரன்சுக்குச் சிறப்பிடம் இருக்கிறது.

லாரன்சின் மேதைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மற்றொன்றும் கூறலாம். அவருடைய நூல்களைப்பற்றியும் அவருடைய திறமைபற்றியும் மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டும் 800!

லாரன்சின் புகழ், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சாடர்லி சீமாôட்டி எனும் ஏட்டின் கருத்தும் நடையும் படிப்போருக்கு ஒரு குமட்டலைத் தருவதாக உள்ளது.

எனினும் வழக்கு நடைபெற்று, "புத்தகம் வெளியிட்டதிலே குற்றம் ஏதுமில்லை' என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆபாசமானது என்று கருதத்தக்க விதமாக, கருத்தும் நடையும் இருப்பினுங்கூட, பெரிய இலக்கிய மேதையான லாரன்சு, அந்த ஏட்டின் மூலம், மண வாழ்க்கை தூய்மையானது, தேவையானது, கனிந்திருக்கவேண்டியது என்ற பண்பைத்தான் விளக்க முற்பட்டிருக்கிறார், என்ற காரணம் ஒப்புக்கொள்ளப் பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஏடுபற்றி பல்கலைக்கழக இலக்கியப் பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், மனோதத்துவ ஆசிரியர்கள், மார்க்கத் துறை வித்தகர்கள், கல்விக்கூட அதிபர்கள், தமது கருத்தினைச் சான்றாக அளித்துள்ளனர்.

வழக்கிலே, இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடிய முறை மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

படிப்போரை மகிழ்ச்சியும் பயனும் கொள்ளச் செய்யும் விதமான ஏடு, இந்த வழக்கு பற்றிய ஏடு.

எல்லாவற்றையும் விட, என் மனதைப் பெரிதும் ஈர்த்த பகுதி, மிகப் பெரிய இலக்கிய மேதையான லாரன்சு இதுபோல எழுதியுள்ளாரே என்பதற்காக, பேனா பிடித்தவனெல்லாம் இதுபோன்ற கதையையும், நடையையும் எழுத முற்பட்டுவிடக் கூடாது என்று, லாரன்சின் ஏட்டுக்காக வாதாடிய வழக்கறிஞரே அறிவுரை கூறியிருக்கும் பகுதிதான்.

வழக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது - 1960-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபதாம் நாள் துவக்கம்.

எந்த ஏடுபற்றி வழக்கு நடைபெற்றதோ, அந்த ஏட்டின் ஆசிரியரான லாரன்சு இப்போது இல்லை - அவர் மறைந்து ஆண்டு முப்பதாகிறது.

14-4-1964

வழக்கமான, "கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி' இன்று. நாங்களும் எதுவும் பேசுவதில்லை. அதிகாரிகளும் எங்களை ஒன்றும் கேட்பதில்லை. கைதி உடையில் வரிசையாக நிற்கிறோம் - அதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடுகிறார்கள். இது ஒவ்வொரு கிழமையும். இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாவதற்கு ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தலாம்போல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும், எந்த அதிகாரிகள் கைதிகளைப் பார்க்கிறார்களோ, அவர்களேதான், அன்றும் பார்க்கிறார்கள். சிறையின் நிலைமை, கைதிகளின் நிலைமை இவற்றை அன்று ஊரிலுள்ள பொறுப்புள்ள சிலருக்குக் காட்டும் முறையில் இந்த நிகழ்ச்சியைமாற்றி அமைத்தால், ஓரளவுக்குப் பயன் ஏற்படலாம் - மாநகராட்சி மன்றத் தலைவர் - மேயர் - இந்த நிகழ்ச்சியில் ஒரு முறை கலந்துகொள்வது, மற்றோர் முறை சுகாதாரத் துறை பெரிய அலுவலர் கலந்துகொள்வது, மற்றோர் முறை, விடுதலையான கைதிகளின் நல்வாழ்வுக்காக உள்ள அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வது என்று இவ்விதமாக ஏதாகிலும் மாற்றம் ஏற்படுத்துவது தேவை என்று நினைக்கிறேன்.

பொழுதுபோக்காக "ஓவியம்' வரையலாம். அதற்கான தீட்டுக்கோல், கலவைகள் தருவிக்கிறேன் என்று சுந்தரம் சொன்னார் - அவர் கேட்டுக்கொண்டபடி எடுத்து வந்தார்கள் - ஆனால் அவைகளை "அனுமதிக்க முடியாது' என்று சிறை அதிகாரிகள், திருப்பி அனுப்பிவிட்டனர். இவ்விதம் பொருளற்ற கட்டுத்திட்டங்கள் கையாளப்படுகின்றன. கைதிகளை இவ்விதம் நடத்தினால்தான். அவர்களுக்கு தண்டனையை அனுபவிக்கி றோம் என்ற உணர்ச்சி ஏற்படும் என்ற ஒரு பழைய காலக் கருத்துத்தான் இன்றும் அமுல் செய்கிறது. அரசியல் கிளர்ச்சி காரணமாகச் சிறை புகுந்துள்ளவர்களுக்கும் இப்படி வீணான கட்டுத்திட்டம் தேவைதானா, என்று மேல்மட்டத்தில் எண்ணிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. நன்கு பதப்படுத்தப்படாத பஞ்சு - அதை நூற்பதிலேயே, எத்தனை நேரம்தான் காலத்தை ஓட்ட முடியும்? தோட்ட வேலையாவது செய்யலாம், தச்சு வேலையாவது பழகலாம் - என்றெல்லாம் நண்பர்கள் கூறிக் கொள்கிறார்கள். சலிப்பு, நேரக்கேடு, பத்திரிகைகளின் மூலம், நமது கழகத் தோழர்கள் என்னென்ன விதமாகப் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்து அகமகிழ்கிறோம் - அதேபோது, உடன் இருந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டுகிறது. இன்று நண்பர்கள், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடத்திலே வழக்குகள் முடிவுபெறாததால், காவலிலே மாதக்கணக்காக அடைபட்டுக் கிடக்கும் மதுரை முத்து, கோவிந்தசாமி போன்ற நண்பர்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவித்தார்கள். தூத்துக்குடியில் நடைபெற்றது போல, விரைவாக வழக்கு நடத்தப்படவேண்டும் என்று எங்களைப் போலவே, பலரும் கருதத்தான் செய்வார்கள்.

அறுபது வயதுக்கு மேலான முதியவர் - குடும்பம் நடத்த வேண்டிய நிர்பந்தத்திலிருந்து விடுபட முடியாத நிலையில் ஊரூராகச் சுற்றி, சாமான்களை விற்பனை செய்யும் வேலையைச் செய்து, உடல் இளைத்து, உள்ளம் வாடி, ஆவி சோர்ந்துபோகும் கட்டத்தில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள் - முப்பது, முப்பத்தைந்து வயதில், குடும்பத்தை நடத்திச்செல்லும் பொறுப்பில் அவர்கள் இருவரும் வெற்றி காணவில்லை. தகப்பனோ பிள்ளைகள், மணிமணியானவர்கள், குடும்பத்தை மிக மேல் நிலைக்குக் கொண்டு வரத்தக்க அறிவாற்றல் படைத்தவர்கள் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை சிதையும் நிகழ்ச்சி ஏற்படுகிறது - மனமுடைந்து மாண்டு போகிறார்.

நெஞ்சை உருக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள, இந்தக் கருத்து விளக்க ஆங்கில ஏடு ஒன்று படித்தேன்.

இதுபோல், தமிழகத்தில், பல்லாயிரக்கணக்கில் தகப்பன்மார்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமைகளைப் பற்றி எண்ணிக்கொண்டேன். நொந்த உள்ளத்துடன், படுத்துப் புரண்டபடி இருந்தேன் - நெடு நேரம். இன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை.

மகன் உதவாக்கரையாகிவிட்டான் என்று மனம் நொந்து வெகுண்டு, தகப்பன் மகனை ஏசுகிறான். மகன், கண்ணீர் சிந்துகிறான். அந்தக் கண்ணீரைக் கண்டதும், தகப்பனுக்குக் கோபம் எங்கோ பறந்து போய்விடுகிறது. என் மகன் அழுகிறான்! எனக்காக அழுகிறான்! என் நிலைமை கண்டு அழுகிறான்; என்னிடம் அவ்வளவு அன்பு, என் மகனுக்கு - என்று கூறி உருகிப் போகிறான். இரவு, பல முறை இந்தக் கட்டத்தைப்பற்றிய நினைவு, எனக்கு. அந்தக் குடும்பமே கண்முன் நிற்பதுபோல ஒரு எண்ணம். அந்தக் குடும்பமா? அதுபோன்ற குடும்பங்கள்!

15-4-1964

இங்குள்ள சிறை அதிகாரிகளிலே சிலர், மதுரைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும், புதிய அதிகாரிகள் இங்கு வர இருப்பதாகவும், பேச்சுக் கிளம்பிற்று. மருத்துவர்கூட மாறுகிறார் - இங்கு இருப்பவர், தஞ்சைக்குச் செல்கிறார். இன்று புதிய டாக்டர். எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். இவர் நான் 1939லில் சிறையில் இருந்தபோது இங்கு டாக்டராக இருந்தவர் - பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் இங்கு வந்திருக்கிறார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் என்னிடம் பேசிய பிறகுதான் எனக்குப் புரிந்தது.

இங்கு நண்பர்களுக்கு, சிறு சிறு நலிவுகள். மதிக்கு பாதத்தில் சுளுக்குபோல வலி - எலும்பு முறிவோ என்று சந்தேகம் - கட்டு போடப்பட்டிருக்கிறது. சுந்தரத்துக்குக் கண் வலி. அன்பழகனுக்குக் காலில் வலி, இராமசாமிக்கு வயிற்றில் வலி, பார்த்தசாரதிக்கு இரத்த அழுத்தம், பொன்னுவேலுவுக்கு இருமல், இப்படி. சிலருக்கு மாத்திரை. சிலருக்கு மருந்து என்று மருத்துவரும் தந்தபடி இருக்கிறார். எல்லா மருந்துகளும் ஒரே மாதிரியாகவே இருப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இரவு சாப்பிடுவதை நீக்கிவிட்டேன் - ஏதாகிலும் சிற்றுண்டிதான் உட்கொள்வது. அதுவே ஜீரணமாவது கடினமாக இருக்கிறது; அதற்கான மருந்து நாளுக்கு இருவேளை உட்கொள்ளுகிறேன். கை வலிக்கு, கடுகு எண்ணெய் தேய்த்துக்கொள்கிறேன் - சுந்தரம் மெத்த அக்கறையுடன் ஒவ்வொரு நாளும், பிற்பகல் "மூன்று மணிக்கு' தைலம் தேய்த்து விடுகிறார். ஓரளவு பலன் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குள் நண்பர் அன்பழகன், பிண்டத்தைலம் என்று மற்றோர் மருந்து தருவித்திருக்கிறார். சிறை அதிகாரி ஒருவர் தென்னமரக்குடி எண்ணெய்தான் இந்த வலியைப் போக்கும் என்று கூறினார் - மாயவரம் சென்று வரும்போது அந்தத் தைலத்தை வாங்கிகொண்டு வரும்படி, பரிமளத்துக்குச் சொல்லி இருக்கிறேன். கையோ, இன்னமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தூக்க முடியாதபடிதான் இருக்கிறது.

இன்று, காஞ்சிபுரம் மணி, திருவேங்கிடம், கிளியப்பன் ஆகியோரைக் காண, அவரவர்களின் வீட்டினர் வந்திருந்தனர். அதிகமான கலக்கம் காட்டவில்லை என்று கூறினார்கள். எல்லோரும் களிப்பாகவே இருக்கிறார்கள்.

16-4-1964

தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதற்காக அமைக்கப் பட்டுள்ள குழுவில் மதி ஒரு உறுப்பினர் - குழு, மே பதினோராம் நாள் கூடுகிறது. அதற்குச் சென்று கலந்துகொள்ளத்தக்கவிதமாக, விடுதலை நாள் அமையுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, மதியும் பார்த்தசாரதியும் இன்று சிறை மேலதிகாரியைக் காணச் சென்றனர். சிறையில் வேலை செய்வதற்காக, மாதத்திற்கு நான்கு நாட்கள் கழிவு உண்டு; இது மூன்று மாதத்திற்கு மேற்பட்ட தண்டனையாக இருந்தால்தான் - அதிலும் கடுங்காவல் தண்டனையாக இருக்க வேண்டும்.