அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!
1

தேர்தல் நேரம்
புகமுடியா இடமெல்லாம் கழகக் கழனிகள்
சிதறியவைகளின் தூற்றல் பாணம்
பெரியார் காலடியில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்குக் கர்வபங்கம்

தம்பி!

உள்ள வலிவு மேற்கொண்டுள்ள வேலைக்குப் போதுமான தாக இல்லையே என்ற கவலை என்னைக் குடைந்த வண்ண மிருக்கிறது - வயது ஆக ஆக இப்படித்தான் எண்ணம் எழும் என்று வாலிப முறுக்குடனுள்ளவர்கள் பேசுவர்; புன்னகை புரிவர்; உண்மையிலேயே செய்து முடித்தாக வேண்டிய எல்லா அலுவல்களையும் செம்மையாகச் செய்திட தேவைப்படும் உடல் வலிவு இல்லை என்று கவலைப்படுகிறேன்; உள்ளம் எதையும் தாங்கிக்கொள்கிறது; ஏசல்களை, இழிமொழிகளை, பழிச்சொற் களை எல்லாவற்றையும்; பழகிப்போய்விட்டது; ஏன் சிலர் அதுபோலப் பேசிவருகிறார்கள் என்பது புரிந்துவிட்டிருப்பதால், வருத்தம் ஏற்படுவதுமில்லை; திடுக்கிட்டுப்போவதுமில்லை. எவெரவர் என்னால், தமது ஆதிக்கம், சுயநலம், சதித்திட்டம், தகர்க்கப்படுகிறது என்று எண்ணிக்கொள்கிறார்களோ, அவர் களெல்லாம் ஆத்திரப்படுவதும், தூற்றித் திரிவதும், எதிர் பார்க்கப்பட வேண்டியதுதானே! அதிலும் இது தேர்தல் நேரம்! நரகல் நடைக்கு ஏகப்பட்ட "கிராக்கி' அல்லவா!! அதனைக் கொட்டிக்காட்டி, "எடு கட்டணம்' என்று கேட்டு வாங்கும் காரியத்திலே பலர் ஈடுபடுகிறார்கள். பெரிய பெரிய திட்டங் களைப்பற்றித் தனித்தன்மை வாய்ந்த தத்துவங்களைப்பற்றி, மக்கள் மனத்திலே மூண்டுகிடக்கும் முடை நாற்றமடிக்கும் மதியீனங்கள் பற்றியெல்லாம் பேசி அறிவுத் தெளிவு அளிக்க வேண்டியவர்களெல்லாம், இன்று அவை அத்தனையையும் மூட்டைகட்டித் தூக்கித் தூர வைத்துவிட்டு, தம்பி! உன் அண்ணாவைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டி நேரிட்டு விட்டதே, கவனித்தனையா!! பரிதாபமாகக்கூட இருக்கிற தல்லவா!! அவ்வளவு பெரியவர்களின் இன்றைய அலுவல், உன் அண்ணனைத் தூற்றித் திரிவது என்றாகிவிட்டது. ஏன், தம்பி! விளங்கவில்லையா? உன் ஆற்றல்மிக்க உழைப்பினால் உருவாகி விட்டுள்ள சக்தி, அவர்களின் கண்களை அவ்வளவு உறுத்து கிறது; கருத்தைக் கலக்கிவிட்டிருக்கிறது. இந்தச் சக்தியை, எப்பாடுபட்டேனும், எந்த முறையைக் கையாண்டேனும், எவருடன் கூடிக்கொண்டேனும், அழித்தாகவேண்டும் என்ற எண்ணம், தீயாகி அவர்களின் நெஞ்சினைத் தகிக்கிறது. துவக்கத்திலே அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது; நமது நிலை என்ன? ஆற்றலென்ன? இந்தப் பயல், பொடியன்! இவனை எதிர்க்கவா, நாம் நமது நிலையைவிட்டுக் கீழே இறங்கிவருவது! செ! கூடாது கூடாது! நமது ஆற்றல், அவனியுளோர் மெச்சிடத் தக்க அருங்கருத்துகளைப் பரப்பிடவன்றோ பயன்படுதல் வேண்டும், இந்த "ஏனோதானோ'வை தாக்கவா! - என்று எண்ணிக்கொண்டிருந்தனர். நமது அறிவாற்றல், தாக்கும் திறமை, புட்டுப் புட்டுக் காட்டும் வல்லமை, ஓட ஓட விரட்டும் துணிவு, இவை, கைலாயம், வைகுந்தம், இவைகளைக் கதி கலங்கச் செய்ய வேண்டும் - செய்து வருகிறது! - புத்தரும் ஏசுவும் செய்யத் துணியாததை, சாக்ரடீசின் கருத்துக்கு எட்டாததை, நாம் உலகுக்கு எடுத்தளிக்க வல்லமை பெற்றுள்ளோம். நமது வாழ்நாளில், ஜாதியை ஒழிப்போம், மதத்தை அழிப்போம்! மற்றதுகள் ஜாதிபேதத்தை ஒழிப்போம், மத ஊழல்களை அழிப்போம் என்று மட்டுமே பேசுகின்றன; நாம் அப்படி அல்ல; ஜாதியை மதத்தை அடியோடு அழிப்போம்; அதற்கே நமது அறிவாற்றல்! அதற்கே நேரம், நினைப்பு!! - என்றெல்லாம் எண்ணிப் பணியாற்றி வந்தனர். பாவம்! அவர்களெல்லாம் இன்று, தி. மு. கழகத்தின் வளர்ச்சியை அழித்தால் போதும்; பிறவி எடுத்ததன் பயன் அஃதே! என்று, கூச்சத்தைவிட்டுக் கூறிக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டனர். தி. மு. கழக வளர்ச்சி, அத்துணை வேகமும் வடிவமும் கொண்டுவிட்டது; எங்கும், எதிலும் எப்போதும், தி. மு. கழக வளர்ச்சிதான் தெரிகிறது. எனவே பலர், இன்று, தி. மு. கழகத்தைத் தகர்க்க, என்னைத் தாக்குகிறார்கள். இது எனக்குப் புரிவதால், நான் ஆத்திரமோ, வருத்தமோ அடைவதில்லை! சில வேளைகளில், சிலர், மிகத் தரக்குறைவான முறைகளைக் கையாண்டு தீரவேண்டி வருகிறதே என்று பரிதாபமாகக்கூட இருக்கிறது. "தோடி' பாடினால் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கலாமா என்று தோன்றும். அவ்வளவு இனிமை அத்துணை தரம் இருக்கும் என்று பல்லோரும் புகழ வாழ்ந்து வந்த இசைவாணன், குரல் கெட்டு, நோய்வாய்ப்பட்டு, ஈளைகட்டி இருமிக்கிடக்கும்போது, என்ன தோன்றும்? தோடி பாடிக் கேட்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தியவரின் நிலை, இன்று இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணி இரக்கம் காட்டச்செய்யும். வேளைக்கு இரண்டு படி தந்துகொண்டிருந்த பசு, வத்தலாகித் தொத்தலாகி, அடிமாட்டு மந்தையிலே இடம் பெற்றிடக் கண்டால், என்ன தோன்றும்? இடிந்த மாளிகை, இரசம்போன கண்ணாடி, ஊசல் பண்டம், உடைந்த வாள், பிரிந்துபோன கூடை, திரிந்த பால் - இவைகள், ஏளனம் அல்ல, தம்பி! இரக்கத்தை எழுப்பத்தக்க பொருட்கள்! காலத்தாலும் கருத்தற்ற போக்காலும், கயவர் கரம் பட்டதாலும், வகையும் வடிவமும் கெட்டதற்குச் சான்றுகள். தம்பி! இதைக் கவனித்தனையோ, இல்லையோ!

குரல்கெட்ட பிறகுதான், கும்பலில் குரலெழுப்பி, கொடுத்ததைக் கொடு என்று கேட்டுப் பெறுவார், இசை வாணனாக இருந்தவர்!

முனை உடைந்த பிறகு, வாள் மாற்றானை மாய்க்க அல்ல, மரப்பட்டையைப் பெயர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஊசல் பண்டம், குப்பைமேடு செல்கிறது! அங்கும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி! காக்கைகள்! கோழிகள்! பூச்சி புழுக்கள்! குக்கல்! பன்றி! - இவைகளுக்கெல்லாம் பெருவிருந்தன்றோ. ஊசாமல், உள்ளே இருந்தபோது, மனையில் உள்ளோருக்கு விருந்து! ஊசியபிறகு விருந்துதான், வேறு வகையினருக்கு!!

அதனால்தான் தம்பி! என்ன ஏமாற்றம் ஏற்பட்டாலும், எதிர்ப்புக்கள் குறுக்கிட்டாலும், சலிப்பு புகுந்து குடைந்தாலும், அவசரம் ஆத்திரத்தை மூட்டினாலும் கொண்ட கொள்கையைக் குலைத்துக்கொள்ளக்கூடாது. உரிய நோக்கத்தை உருக்குலைய விடக்கூடாது, ஊசல் பண்டமாகக் கூடாது, முனை ஒடிந்த வாளாக, திரிந்த பாலாக ஆகக்கூடாது என்று, நான் அடிக்கடி, நமது தோழர்களுக்கு வலியுறுத்திக் கூறி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் இந்த உறுதியுடன் பணியாற்றி, கழகத்துக்கு ஏற்றத்தைத் தேடித்தரும் எண்ணற்ற தோழர்களைக் காணுகிறேன்; மகிழ்ச்சி பெறுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கைப் படகை நடாத்திச் செல்வதிலே, எத்துணையோ இன்னல்களைக் காண்கின்றனர்; எனினும், கழக வளர்ச்சிக்காக உழைக்கத் தவறுவதில்லை; கண்ணுங்கருத்துமாகப் பாடுபடு கின்றனர். பட்டி தொட்டி ஒன்றுகூட விட்டுவைக்கவில்லை; எல்லா இடங்களிலும், கழகக் கொள்கை இடம்பெறச் செய்து வருகின்றனர். இதனை நான், தம்பி! விருத்தாசலம், நல்லூர், வளவனூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இரண்டு நாட்கள் சென்றபோது கண்டு பெருமிதம் கொண்டேன். நம்புகிறார்களோ இல்லையோ, தம்பி! மாலை 7 மணிக்குத் துவங்கிய, சுற்றுப் பயணம், விடியற்காலை 5-30க்கு முடிவுற்றது. இருபது கூட்டங்கள்; சிற்றூர், பேரூர் ஊராட்சிமன்ற வரவேற்புகள்; கிளைக்கழகத் துவக்க விழாக்கள், கொடியேற்று விழா, ஊர்வலக் கோலாகலங்கள், இப்படித் தொடர்ந்து நடைபெற்றது. திட்டக் குடியில் மிகப் பெரிய கூட்டம்! நேரம், இரவு இரண்டு மணி, திட்டக்குடி தவிர, மற்ற இடங்களெல்லாம் சிற்றூர்கள். அரசியலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு, அது பட்டினங்களி லுள்ள படித்த சிலருக்குப் பொழுதுபோக்கு என்று எண்ணிக் கொண்டிருந்த கிராமத்து மக்களெல்லாம் நள்ளிரவுக்குப் பிறகும், விழித்திருந்து விழாக்கோலம் காட்டி, வரவேற்று வாழ்த்தளித்து, அரசியல் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கேட்கிறார்கள். பொருள் விளங்குகிறதா, தம்பி, போகமுடியாத இடம் புக முடியாத இடம்! என்றெல்லாம், ஆளுங்கட்சியினர் கூறிக்கொண் டிருந்தனரே, அந்தக் கிராமப்புறங்கள் இன்று கழகக் கழனிகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஊரின் பெரிய குடியின் பேச்சுத் தான், கட்டளை என்று இருந்துவந்த இடங்களிலெல்லாம் இன்று, உலகநிலை, ஊராள் முறை, மக்களாட்சியின் மாண்பு என்பவைகள் பற்றிய தெளிவும், மக்களாட்சியை மாண்புடைய தாக்கியாகவேண்டும் என்ற உறுதிப்பாடும் மிகுந்து காணப்படு கிறது. பதப்படுத்துவதிலும், முறைப்படுத்துவதிலும், நாம் வெற்றி பெற்றோமென்றால், தேர்தலில் நமது கழகம் ஏற்றமிக்கதோர் நிலை பெறும் என்பதிலே ஐயமில்லை. கதிர் முற்றி இருக்கிறது! விளைந்த காட்டுக் குருவிகள் வட்டமிடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். வழி? விழிப்போடிருப்பதுதான்! கழகத் தோழர்கள் தமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், கட்டுச்சோற்று மூட்டையுடன், கிராமம் சென்று, குளத்தங்கரை அமர்ந்து உணவுண்டான பிறகு, களத்துமேடும் கழனிப்பக்கமும், தெருக்கோடியும் சாவடியும், மரத்தடியும் மதகடியும் உலாவி, உரையாடி, கழகப்பணி புரியலாம் - இன்று முதலே! நிலைமை அவ்வளவு பக்குவமாக உளது. நாட்டு நிலை அறிய, கிராமத்து உழைப்பாளிகள் அத்துணை ஆர்வத்தோடு உள்ளனர்.

இதனைக் கண்டு பெருமிதம் கொண்டு, ஒவ்வோர் இடத்து நிகழ்ச்சியினையும் வேக வேகமாக முடித்துக்கொண்டு, தம்பி! நண்பர்கள் செல்வராஜ், பிச்சமுத்து, கோவிந்தசாமி, மற்றும் கழகக் காவலர்கள் பலருடன், தொழுதூர் சென்றோம். நேரம் என்ன? தம்பி! தொழுதூர் வந்தோம்! பொழுது விடிந்தது!! கோழிகள் கூவின! காக்கைகள் கரைந்தன! புள்ளினம் சிறகடித்துக் கிளம்பின! உழவர்கள், வயல் நோக்கி நடந்தனர்! தாய்மார்கள் கூட்டி மெழுகலாயினர். விளக்கொளி, மங்கலாக! ஒலிபெருக்கி, குரலெழுப்பாமல்! ஊராட்சி மன்றத்தார் உறக்கம் துறந்து, மேடையில்! இந்நிலையில், நாங்கள் அங்குச் சென்றோம்.

இரவு முழுவதும் எதிர்பார்த்தவண்ணம் இருந்திருக்கின்றனர்.

விடியும்போதுகூட, விளக்கை அணைத்துவிட்டு, வீடு போய்ப் படுப்போம் என்று அவர்கள் எண்ணவில்லை. எப்படியும் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தபடி, வரவேற்பு ஏற்பாடு களுடன் இருந்தனர். என்னென்பேன் அவர்களின் உள்ளன்பை, நேரம் ஆக ஆக, ஏமாற்றம் எரிச்சலை அல்லவா மூட்டிவிடும்; இவர்களோ நல்லவர்கள், நமது நிலைமையை நன்கு உணர்ந்தவர்கள், எனவே எரிச்சல் கொள்ளவில்லை, ஏக்கம் கொண்டிருந்தனர்.

சென்றோம்! ஒலிபெருக்கு மூலம், இசை! அங்கும் இங்கும், மக்கள் நடமாட்டம்! பரபரப்பு! நானே அவர்களிடம், சிறப்பான முறையில் மற்றோர் நாள் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறி, ஆறுதலளித்து, பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டு, வரவேற்பு இதழைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுக்கொண்டேன் - காலை மணி ஆறு, தம்பி! ஆமாம்! அதற்குப் பிறகுதான், உணவு! இரவுச் சாப்பாடும் காலைச் சிற்றுண்டியும் சேர்த்து! நெடுஞ்சாலையில்! மோட்டாரில் இருந்தபடி! தம்பி! இந்த விதமான உணர்ச்சிப் பெருக்கினை, உள்ளன்பினைப் பார்க்கும்போது, ஊரே திரண்டு நம் பக்கம் நிற்கிறது என்று தோன்றுகிறது; தேனென இனிக்கும் எண்ணம் கொள்கிறோம். ஆனால், காங்கிரஸ்காரரோ, வெள்ளித் தோட்டாக்களைக் காட்டுகின்றனர் நம்மை மிரட்ட; காங்கிரசுக்குக் கிடைத்துள்ள புதுப் புது வகையான ஆதரவாளர் களோ, தூற்றல் பாணம் தொடுத்தே நம்மைத் துளைத்து விடுவதாகக் கூறுகின்றனர். சில வேளைகளிலே நமது தோழர் களிலே சிலருக்கு, பணம் போதுமான அளவு இல்லையே, ஏழை எளியவர்களை, கடைசி நேரத்திலே பணம் கொடுத்து படிய வைத்துவிடுவார்களோ என்ற பயமும் பிடித்துக் கொள்கிறது.

மக்களின் அரசியல் தெளிவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலேயும், நமது கழகக் கொள்கைக்காக, எதையும் இழக்கும் உறுதியுடன் பணியாற்றுவோரின் தொகையும் வளர்ந்தவண்ணமிருக்கிறது என்பதிலேயும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால், நம்மிலே எவருக்கும், தேர்தல் முடிவுகள் பற்றியோ, விளைவுகள் குறித்தோ அச்சம் ஏற்படக் காரணம் இல்லை.

தேர்தலில் ஈடுபடுவது, ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமை.

கொள்கைபரப்பவும், கேடான முறைகளைக் கண்டிக்கவும், ஆதிக்கம் கொண்டு இறுமாந்து கிடக்கும் கட்சியின் இடுப்பை முறிக்கவும், மக்களாட்சி முறையினை மாண்புடையதாக்கவும், தேர்தல், ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

மேலும், காங்கிரசுக்குப் பல்வேறு வகையான "வலிவுகள்' இருப்பினும், "எதிர்ப்பு' அலட்சியப்படுத்த முடியாத அளவிலும் தரத்திலும் வளர்ந்திருப்பது மிக நன்றாகத் தெரிகிறது; மேலுக்குச் சில காங்கிரஸ் தலைவர்கள், தி. மு. கழகம் பற்றி அலட்சியம் காட்டுவதுபோலப் பேசுகிறார்களேயொழிய, உள்ளூர அவர்கள், அச்சம் பிடித்தலையும் நிலையில்தான், உள்ளனர்; அமைச்சர்களின் சுற்றுப்பயணமும், ஆள் பிடிக்கும் படலமும், பணம் திரட்டும் போக்கும், தூற்றல் பிரசாரமும், கழகத்திலிருந்து சிதறியவைகளைத் தூக்கிவைத்துக்கொள்வதும், துதிபாடுவது மாக உள்ள போக்கும், வேறு எதைக் காட்டுகிறது?

எல்லா எதிர்க்கட்சிகளும் கூடிக் கூட்டணி அமைத்தாலும் எங்களை என்ன செய்துவிட முடியும்? என்று வீராவேசமும் பேசுகிறார்கள்; அதேபோது ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள், "கூட்டுச் சேரலாமா?' என்றும் கேட்கிறார்கள்; கேரளத்தில், "கூட்டு' இருப்பதுபற்றி வாய்மூடிக் கிடக்கிறார்கள்.

தி. மு. கழகத்தார் ஒரு ஐந்து பேர் வெற்றி பெறக்கூடும் என்று "ஆரூடம்' கணிக்கிறார். அமைச்சர் சுப்பிரமணியம்; ஆனால், அவருடைய ஆரூடம் எவ்வளவு அபத்தமானது என்பது அவருக்கே தெரியுமாதலால், அலைகிறார், திரிகிறார், ஆர்ப்பரிக் கிறார், அறைகூவுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார், நாள் தவறாமல் ஊரூர் சென்று.

ஐந்து பேர்களே வெற்றி பெறக்கூடும் என்று கூறத்தக்க அளவுக்குத்தான், தி. மு. கழக வளர்ச்சி, செல்வாக்கு இருக்கிறது என்றால், இந்த அசகாய சூரர் ஏன் இப்படி அலையவேண்டும்? பழுது என்று கூறிவிட்டுத் தடி எடுத்து ஓடுபவர் பற்றி என்ன எண்ணுவீர்கள்? வெண்ணெய் வெட்ட வாள் தேடுபவரை, என்ன பெயரிட்டழைப்பது?

தானாக எதிர்ப்பது மட்டுமல்ல, எத்தனை எத்தனை "இரவல் படை' தேடிப் பெறுகிறார்கள்; அதற்காக என்னென்ன வற்றை, பாவம், இழக்கிறார்கள் பார்த்தனையா, தம்பி!

கம்யூனிஸ்டுகளைக் கண்டால் கள்ளக்கும்பிடுகள் போட்டு, இந்தியாவைத் துண்டாட விரும்புவோருடன் கூட்டா, சேச்சே! இது என்ன அறிவீனம்! - என்று பேசுவது எதற்காக? முடிந்தால், கம்யூனிஸ்டுகளை நம்மீது ஏவிவிட!!

கழகத்தை விட்டுப் பிரியும் பேர்வழிகளுக்கு, வரவேற்பு, உபசாரம்! விலகியவர், வீரர், விவேகி!! ஆமாம்! அவருடைய சபலத்தைத் தூண்டிவிட்டு, பேச வைப்பது, ஏசச் சொல்லிக் கேட்டு இன்புறுவது.

எல்லாவற்றையும்விட இன்று கரை சேர்க்கவைப்பவர், ஈடேற்ற வந்தவர், வழிபடத்தக்கவர், பெரியார் என்ற நிலை பிறந்திருக்கிறது.

ஆயிரம் திட்டட்டும், என்னையும் உன்னையும், பொருட் படுத்த தேவையில்லை; பெரியார், இன்று காங்கிரசைப் பழி வாங்குகிறாரே, அதைப் பார்க்கும்போது தம்பி! உள்ளபடி எனக்கு அளவிட முடியாத களிப்பு.

அமைச்சர்கள் ஆலவட்டம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள், சுற்ற! அர்ச்சிக்கிறார்கள்! காங்கிரஸ் தலைவர்களே கதிநீயே பெரியோய்! கடும்புயல் வீசும் வேளையில் காப்பாற்றிடுவாய்! என்று அலறிக் கூவுகிறார்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள்.

நகராட்சிகள் வரவேற்கின்றன! மண்டலக் காங்கிரசு மண்டியிடுகிறது! காங்கிரசு வேட்பாளர்கள் வெண்சாமரம் வீசுகிறார்கள்! பெரியார் இன்று பெற்றுள்ள செல்வாக்கான நிலையில், ஒருநாள், காங்கிரசு தலைவர்கள் பூட்டப்பட்ட "இரதத்தில்' அவர் உலா வரப்போகிறார் என்று தோன்றுகிறது.

முடிசூடா மன்னரே! முத்தமிழின் காவலரே! பேரறி வாளரே! பெம்மானே! பெரியோய்! பிழை பொறுத்திடுக! வழி அமைத்திடுக! என்று போற்றித் திரு அகவல் பாடுகின்றனர்.

எந்தப் பெரியாரை, நாத்திகர் என்றும், துவேஷ புத்திக்கார ரென்றும், பித்தர் என்றும் நாடு கடத்தப்பட வேண்டியவ ரென்றும், முஸ்லிமின் கைக்கூலி என்றும், வெள்ளையரின் அடிவருடி என்றும், விளங்காத கொள்கையைக் கூறிக் காசு பறிப்போரென்றும், ஏசினரோ, அவரைத் தம்பி! இன்று அதே காங்கிரஸ் தலைவர்கள், புகழ்வதும் போற்றுவதும், பொன்னாடை போர்த்துவதும், போர்க்குணத்தை வாழ்த்து வதும், புனிதரே! பூஜ்யரே! என்று அர்ச்சிப்பதும் காண்கிறோம்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, நாக்குத் தழும்பேற நிந்தித்த காங்கிரசார், இந்த நாலு ஆண்டுகளில், பெரியாரை நத்திப் பிழைத்தால்தான் வாழ்வு உண்டு என்று உணர்ந்து கொண்டு, காலடி வீழ்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி நிற்கிறார்கள்.