அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!
2

கண்கொள்ளாக் காட்சி! பெரியாரின் பேராற்றலுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு! உள்ளூர எண்ணிச் சிரிக்கிறார் பெரியார், "பயல்களே! பூமிக்கும் ஆகாயத்துக்குமாகத் தாவித் தாவிக் குதித்தீர்களே! என்னை ஒழித்துவிடுவதாக உறுமிக் கிடந்தீர்களே! உலகம் போகிற போக்கு எனக்குத் தெரியாது என்று ஏளனம் பேசினீர்களே! ஊராள வந்துவிட்டதனாலேயே உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று இறுமாந்து கிடந்தீர்களே! என்னை இளித்தவாயுடையோன் என்று ஏசினீர்கள்! என் வயதுக்கும் உழைப்புக்கும், ஆற்றலுக்கும் அனுபவத்துக்கும்கூட மதிப்பளிக்க மறுத்தீர்கள்! நான் இந்த நாட்டிலே இருக்கவே தகுதியில்லை என்று வடநாட்டான் நேரு வாய்த்துடுக்குத்தனமாகப் பேசினான்; கைதட்டி வரவேற்றீர்கள்!! கோட்டையிலே கொலுவிருக்கிறோம் என்ற கர்வத்தில், எனக்கு மூட்டை தூக்கிகளாக இருந்தவனெல்லாம், கொக்கரித்தான்! எவன் இருக்கிறான் எதிர்க்க! என்று இறுமாந்து கிடந்தீர்கள்! பார்த்தீர்களா, இப்போது, நான்கூட அல்ல; என் படையிலே ஒரு பிரிவு, தி. மு. கழகம், உங்களைப் பலமாக எதிர்த்து, "பவுசு' போகும் நிலையை ஏற்படுத்திவிட்டதை!! அதுகளை அடக்க ஒடுக்க முடிகிறதா? பேந்தப் பேந்த விழிக்கிறீர்கள்! பேச வாயில்லை! சட்டியில், மா இல்லை!! என்ன செய்தீர்கள்? கடைசியில், என் காலடி வீழ்ந்தீர்கள்! வேறு கதி? போகட்டும், "அதுகளை விட இதுகள்' மேல் என்ற முறையிலே உங்களைக் காப்பாற்றித் தொலைக்கிறேன். கெஞ்சுகிறீர்கள்! கொஞ்சு கிறீர்கள்! என்ன வேண்டும்? எது வேண்டும்? என்று சோட சோபசாரம் செய்கிறீர்கள்! உங்களுடைய மந்திரிகளுக்குக் கூடக் கிடைக்காத மரியாதை எனக்குக் கிடைக்கிறது! மந்திரிகளேதான் மண்டியிடுகிறார்களே!! படம் திற என்கிறீர்கள்; பல்லக்குச் சுமக்க வருகிறீர்கள்! பல்லிளித்துக் கிடக்கிறீர்கள், பராக்குக் கூறி நிற்கிறீர்கள்! பழி தீர்த்துக்கொள்ளும் படலம்!! பாடம் புகட்டும் படலம்!

இந்த நாடு துளியாவது எதிர்பார்த்ததா? தீப்பொறி பறக்க என்னை ஏசியவர்கள் இன்று தீவட்டி தூக்கிகள் ஆவார்கள் என்று!! பொறி பறக்கப் பேசியவர்கள் இன்று போக்கிட மத்ததுகள் ஆவர் என்று! பெரியார், விவரம் தெரியாதவர் என்று எண்ணிக் கிடந்தீர்களே - புரிகிறதா என் போக்கு! நாற்பது ஆண்டுகளாக, உமது கட்சியை நையப் புடைத்தேன் - உங்க காந்தியை ரோய ரோயப் பேசினேன் - உங்கள் திட்டங்களைக் கண்டித்து வெளுத்து வாங்கினேன் - என்ன நடந்தது இறுதியில்? தாவிக் குதித்தீர்கள்! தாக்கிப் பார்த்தீர்கள்! தர்பாரில் இடம் கிடைத்ததால் என்னைத் தரைமட்டமாக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தீர்கள்! ஆனால், என்னை விட்டுத் தனியான வர்கள், கொடுத்தது பலமாகிவிடவே, ஓடோடி வந்தீர்கள் என் காலடி விழ! போகட்டும், அந்தப் பயல்கள் வளரக்கூடாது என்ற எண்ணத்தில், வந்து தொலையுங்கள் என்று, உங்களை ஏற்றுக் கொண்டேன். என்னென்ன இழிமொழி கூறினீர்கள் என்னைப் பற்றி! எத்தனை கூட்டங்களைக் கலைத்தீர்கள்! இப்போது, என் கூட்டத்துக்கு நோட்டீஸ் ஒட்ட, ஏணி தூக்கிகளானீர்கள்!!! மேடையில் துணி விரிப்பது நீங்கள், கொடியைப் பறக்கவிடுவது என் திராவிடக் கழகம்! மாலைகள் கொடுப்பது மண்டலங்கள், எண்ணிப் பார்ப்பது என் கழகம்!! என்ன கதியில் கொண்டுவந்து விட்டேன், உங்களை!

ஒரு பஞ்சாயத்துக்கூட என் கழகத்திடம் இல்லை; பார்மெண்டே எங்களிடம் என்று பேசுகிறீர்கள்; இருந்து? பல்லிளிக் கிறீர்களே என்னிடம் வந்து!

முதலிலே முடுக்காகச் சற்றுத் தொலைவாகவே இருந்து பார்த்தீர்கள் - காமராஜர் மட்டும் நெருங்கட்டும், நாம் போகக் கூடாது என்று. பிறகு? ஒவ்வொன்றாக, கோணி நாணி, என் எதிரே வந்து நின்று, எங்க பெரியார் என்று தோத்திரம் செய்கிறீர்கள்!

தம்பி! இப்படியெல்லாம் எண்ணாமலா இருப்பார் பெரியார்? காங்கிரஸ் தலைவர்களுக்கும் இது தெரியாமலா இருக்கும்? ஆனால், தெரிந்து என்ன செய்ய முடியும்? இன்று காங்கிரசுக்கு வளர்ந்துவிட்டுள்ள எதிர்ப்புணர்ச்சியில், பெரியாரின் எதிர்ப்பும் சேர்ந்துவிட்டால், காங்கிரசின் கதி, அதோகதிதானே! அதனால்தான், பெரியாரின் துணை கிடைத்தது கண்டு, அப்பா! பிழைத்தோம்! என்று ஆறுதல் அடைகிறார்கள்.

இத்தனைக்கும் இப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியைச் சிலாக்கியமான கட்சி என்று ஏற்றுக்கொள்கிறாரா? இல்லை! காமராஜர் நல்லவர், வல்லவர், நம்மவர்! - என்கிறார்! காங்கிரசை அல்ல! கதர், மூடத்தனம்தான், இப்போதும்! கைராட்டை? காட்டுமிராண்டிக் கருவி! ஆதாரக்கல்வி? பைத்தியக்காரத்தனம்! காந்தீயம்? முட்டாள்தனம்!! தேசீயம்? பித்தலாட்டம்? தியாகம்? தெகிடுதத்தம்! மதம்? போதை! பார்ப்பனர்? பகைவர்கள்! வடக்கு? முரட்டுப்பேர்வழிகள் உள்ள இடம்! நேரு? அவசரக்காரர், அறிவற்ற பேர்வழி! பெரிய மனுஷன் பிள்ளை!

"தம்பி! பெரியார் இக்கருத்துக்களை மாற்றிக்கொள்ளவு மில்லை; மறந்துவிடவுமில்லை; விட்டுவிடவுமில்லை; மாறாக அழுந்தந்திருத்தமாகப் பேசுகிறார்.

இராமன்? அயோக்கிய சிகாமணிதான்! சீதை? சோரம் போனவள்! தசரதன்? சுத்தக் கோழை! விபீஷனன்? காட்டிக் கொடுத்த துரோகி! இராவணன்? வீரன், திராவிடன்! சுப்பன்? இரண்டு பெண்டாட்டிக்காரன், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன். கணபதி? அழுக்கு உருண்டை! பரமசிவன்? சுடுகாட்டுப் பேர்வழி! கிருஷ்ணன்? திருடன், காமுகன்!!

தம்பி! இந்தப் பேச்சையும், பெரியார் மாற்றிக்கொள்ள வில்லை. மாறாகப் புட்டுப்புட்டுக் காட்டுகிறார்; புது ஆசையாலே அவரைப் புடைசூழ நிற்கும் காங்கிரசார், காது குடையக் குடைய!

முன்பு, இராமாயணத்தை ஒரு வார்த்தை கண்டித்தால், என்ன தாவு தாவுவார்கள் இந்தக் காங்கிரசார்! இப்போது? முகத்தைச் சுளித்துக்கொண்டால்கூட, முடிவில் "ஓட்டு' போடச் சொல்லாமல் பேச்சை முடித்துவிட்டால் என்ன செய்வதென்று, காது கொடுத்துக் கேட்கிறார்கள்; கழகத் தோழர்கள் கைதட்டும் போது கூடச் சேர்ந்து தட்டுகிறார்கள்; தட்டாவிட்டால், கழகத்தார் கவனித்துவிட்டுப் பெரியாரிடம் சொல்லிவிட, அவர் காமராஜரிடம் சொல்ல, காமராஜர் கடுங்கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற திகில்! பெரியாரின் கடைக்கண் பார்வைக்காக, காங்கிரஸ் தலைவர்கள், தவமிருக்கும் கோலம் இன்று!

நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரசுக்காகவே பணியாற்றிச் சொத்து இழந்து, சுகம் இழந்து, சிறை சென்று சீரழிந்து கிடக்கும் எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும், கிடைக்காத மதிப்பு, தரப்படாத உபசாரம், வரவேற்பு பெரியாருக்கு! காரணம்? - பெரியார், தி. மு. கழகத்தைத் தாக்குகிறார்!! அதற்காகக் காங்கிரசார், தங்கள் "தேசிய' தன்மானத்தையே, அவர் காலடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு அரைமணி நேரம், தி. மு. கழகத்தைத் தாக்குங்கள் என்று வேண்டி நிற்கிறார்கள்.

தம்பி! பெரியார் தாக்குவதால், மிதித்துத் துவைப்பதால், தி. மு. கழகம் அழிந்துவிடும் என்றால், காங்கிரஸ் கட்சி அல்லவா இதற்கு முன்பே அழிந்து குழைந்து கூழாகிப் போயிருக்க வேண்டும்; அவ்வளவு மிதிமிதித்தாரே பெரியார்! அவ்வளவு தாக்கி இருக்கிறாரே! நம்மைத் தாக்கும் போதாகிலும், ஒரு வேளை இல்லாவிட்டால் மற்றோர் வேளை, "அந்தப் பயல்கள் சின்னப்பயல்கள்; அவர்களை இவ்வளவு அதிகமாகப் பொருட் படுத்தக்கூடாது'' என்று தோன்றக்கூடும். காங்கிரசை அவர் எதிர்த்தபோதோ, முடுக்கும் முறுக்கும் மிகுந்திருந்த நேரம் - ஒழிக்காமல் ஓயமாட்டேன், உறங்கமாட்டேன் என்று "சபதம்' கூறிச் சமர் நடத்திய நேரம்! மிதிமிதி என்று மிதித்தும் காங்கிரஸ், அழிந்துவிடவில்லை. இருக்கிறது! காங்கிரசின் அரசியல் நிலைமை இன்று பாதிக்கப்பட்டிருப்பதும், அவருடைய எதிர்ப்பினால் அல்ல; அவர் தேர்தல் காரியத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டு பல ஆகிவிட்டன; காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைத் தேர்தல் களத்திலே இறங்கி எதிர்த்து, அதனை இளைக்க வைப்பது, களைக்கச் செய்வது, திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் அல்ல!

எனவே, பெரியாரின் எதிர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்கும் நோக்குடன்தான் நடத்தப்படுகிறது என்றாலும், உள்ளபடி, அது காங்கிரசின் கர்வபங்கமாகத்தான் ஆகிறது என்பதை, அரசியல் நுண்ணறிவு உள்ள எவரும் உணராமலிருக்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூர வெட்கப்படுகிறார்கள்; ஆனால் என்ன செய்வது? ஆசை வெட்கமறியாதல்லவா?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத கட்டுப் பாடான எதிர்ப்புத்தான், தமிழ் நாட்டுக் காங்கிரசை, பெரியாரின் காலடி விழச்செய்தது என்பதை, இருசாராரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், உண்மை அதுதான் என்பதைக் காங்கிரசார் உணர்ந்துதான் இருக்கிறார்கள். உணர்ந்து? ஊராள ஆசை இருக்கிறதே! பெரியாரின் துணையையும் இழந்து விட்டால் என்ன ஆவது நிலைமை? எனவேதான், முடி நம் தலையில் இருக்க, பெரியாரின் அடிபணிந்தாகவேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

தம்பி! நாடெங்கும் உன் உழைப்பினால் கிளம்பியுள்ள புயல், காங்கிரசை, இந்தப் பாதுகாப்புத் தேடிட வைத்தருக்கிறது.

காங்கிரசுக்கு இன்று கிடைத்துள்ள பாதுகாவலர்கள், துணைவர்கள், தோழர்கள், காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல! பெரிய பாதுகாவலராகப் பணிபுரியும் பெரியாரோ, அந்தக் கொள்கைகளையே கோமாளித்தனம் என்று கூறினவர்; கூறி வருகிறவர்.

காங்கிரஸ் கட்சி வகுப்பு வாதத்தை அடியோடு வெறுக்கிறது; இடமளிக்காது என்று காங்கிரஸ் அறிக்கைகள் கூறுகின்றன. பெரியார், தெளிவாக, ஒளிவு மறைவு இன்றி, நான் காங்கிரசை ஆதரிப்பது ஏன் என்றால், இன்று பார்ப்பனர்கள் காங்கிரசில் முக்கியமானவர்களாக இல்லை; எல்லா இடத்திலும் பார்ப்பனரல்லாதார்தான்! ஆகவேதான் ஆதரிக்கிறேன்!! - என்று பேசுகிறார். மறுக்கும் துணிவு உண்டா! காமராசருக்கு? காங்கிரஸ் தலைவர்களுக்கு? மண்டலங்களுக்கு? அதுதான் கிடையாது! முடியாது! மறுத்தால், பெரியாரின் பேராதரவு கிடைக்காது!! கிடைக்காவிட்டால், காங்கிரசுக்கு ஊராளும் நிலை கிடைக்காது! ஊராளும் நிலை கிடைக்காவிட்டால், பிறகு காங்கிரசில் இன்று உள்ளவர்களிலே நூற்றுக்கு எண்பது பேர், வெளியேறிவிடுவர்!!

காங்கிரசின் வீழ்ச்சிக்கு, வேறு எந்த ஆதாரமும் தேடத் தேவையில்லை - பெரியாரின் பாதாரவிந்தத்தில் அதன் தலை பட்டவண்ணம் இருக்கும் காட்சி ஒன்று போதும்.

மற்றோர் ஆதாரம் - காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு - இன்று அதிலே உள்ளவர்களின், முன்பின் தொடர்புகள், முறைகள், கொள்கைகள், காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரே கூறுகிறார், கண்டவர்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிட்டனர் - கதராடை போர்த்துக்கொண்டு, சுயநல வேட்டையாட! அதனால் காங்கிரசின் மாண்பு மங்கிவிட்டது, மதிப்பு மடிந்துவிட்டது'' என்று.

ஏன் சேர்த்துக்கொண்டார்கள், கண்டவர்களை? சஞ்சீவியார், பதில் கூறினாரில்லை! கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், போலிகள், சுரண்டல்காரர். இவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற முயற்சி நடந்ததா? இல்லை! ஏன்? ஆள்வேண்டுமே, தேர்தலுக்கு!!

எனவே, கண்டவர்களைச் சேர்த்துக்கொண்டாகிலும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக ஆகித் தீர வேண்டும்; இல்லையேல், காங்கிரஸ் மேலும் கரைந்தே போய்விடும் என்று கிலி பிடித்தாட்டுகிறது காங்கிரஸ் மேலிடத்தை.

இது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைக் காட்டும் மற்றோர் ஆதாரமாகும்.

இவை எல்லாவற்றையும்விட, பதினான்காண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி நாட்டைச் சுற்றிப் பார்த்து, தேசிய ஒற்றுமை ஏற்படவில்லையே என்று அறிந்து, வருந்துகிறது; தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தியும், பிரிவினைச் சக்திகளை ஒடுக்கியும், ஆடல்பாடல் மூலம் ஒற்றுமையைக் காணவும், மொழி, வாழ்க்கை வழி, உடை உணவு மூலம் ஒருமைப்பாடு தேடவும், முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.

தேசியத்தின் சின்னம் என்றனர் காங்கிரசை.

காங்கிரசாட்சி, தேசிய ஆட்சி என்று தெரிவித்தனர்.

பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, தேசிய ஒருமைப்பாடு இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

இது வெட்கப்படவேண்டிய தோல்வி என்பதைக் காங்கிரஸ் தலைவர்களிலே சிலரேகூட ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆகவே, தம்பி! பெரியாரின் பாதத்தைத் தாங்கிப் பிடித்து ஆதரவு பெற்றால்தான் பதவி பெற முடியும் என்ற பரிதாபத்துக் குரிய நிலையும், காங்கிரசின் மாண்பை, மதிப்பை மடியச் செய்பவர்களைக்கூடச் சேர்த்துக்கொண்டுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கேவலமும், ஆண்டு அறுபதுக்கு மேலாகப் பாடிய தேசிய கீதமும், பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேசிய ஆட்சியும், தேசிய ஒருமைப் பாட்டினை ஏற்படுத்தவில்லை என்று தேசியத் தலைவர்கள் என்ற பட்டம் பெற்றுள்ளவர்களே அறிவித்திருக்கும் வெட்கக் கேடான நிலைமையும், காங்கிரஸ் கட்சி அதனுடைய "உயிர்ப்பை' இழந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.

பொழுதுவிடியும் நேரத்திலும் தொழுதூரில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தை நடத்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், இந்த நிலைமையை உணர்ந்துவிட்டிருப்பதுதான், காரணம்.

தேசிய ஒருமைப்பாடு குறித்துக் கூறவேண்டுமல்லவா - கூறுகிறேன், தம்பி! ஆனால் அதற்குமுன், ஒரு விசித்திரமான பிராணியைக் காட்டுகிறேன், பார்க்கிறாயா? மனக் கண்ணால்தான்!

யானை அளவு பெரியது! சிங்கத்துக்குள்ள பிடரி! புபோலப் பாயும் சக்தி! நரிக்கு உள்ள தந்திரபுத்தி! குயிலுக்குள்ள குரலினிமை! மயிலுக்கு உள்ள தோகை, ஆடல்! மாடப்புறாவுக்கு உள்ள குலுக்கு! முயல்போன்ற வேகம்! மீன்போன்று நீந்தும் சக்தி! சிட்டுப்போலப் பறக்கும் ஆற்றல்! கிளி நிறம்!!

மறுபடியும் ஒருமுறை படித்து, உருவத்தை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்துக்கொண்டிரு; அடுத்த கிழமை, சந்திப்போம்.

அண்ணன்,

5-11-1961