அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


துறவி - காவியில்லை!
1

அந்தனிஜான் கதையில் சிறுசிறு சம்பவங்கள் மூலம், ஆசிரியர், அரிய கருத்துக்களை அள்ளித் தருகிறார்.

இந்தச் சம்பவங்களின் மூலம், படிப்படியாக, அருள்நெறி எவ்வகையில் இருக்கும் என்பதையும், கடவுட் கொள்கை பற்றிய கருத்துக்களில் எவ்வளவு பொய்ம்மையும் பொருளற்றவையும் உள்ளன என்பதையும் ஆசிரியர் அழகுற எடுத்து விளக்குகிறார்.

அந்தனி சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் - கவனி தம்பி! கருத்துக்கு விருந்து!

ஒரு மாலை, ஆறேழு பேர்கூடி, பஜனை செய்துகொண்டிருந்தனர்.

கடவுள், பரமண்டலத்தில் இருக்கிறார். அவருடைய சன்னிதானத்தின் முன்பு அனைவரும் தொழுது நிற்கவேண்டும். ஆண்டவனிடம் "பயபக்தி விசுவாசம்' இருக்க வேண்டும்- என்று ஒரு மாது கூறினார்கள்.

சிறுவன் அந்தனிக்கு, தொழிலகக் கதவைத் திறந்து வைத்துவிட்ட நினைவு வந்தது; ஓடிச்சென்று கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்தான்.

அருள் பாலிக்கும் ஆண்டவன்

அனைவரும் போற்றுதும் வாரீரோ

என்று பஜித்தனர்.

அந்தனியின் தாயார், அடிக்கடி வெளியே சென்று, பல பண்டங்களை பெற்றுக்கொண்டு வருவதுண்டு. எங்கே, யார் தருகிறார்கள், என்பது சிறுவனுக்குத் தெரியாது. ஆனால் நல்லதைத் தருபவர் ஆண்டவன் என்று பஜனை நடத்தியோர் கூறிடக் கேட்டதால், தன் தாயாருக்கு இந்தப் பொருளைத் தருபவரும், ஆண்டவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அந்தப் பிஞ்சு உள்ளம் எண்ணிற்று.

அவனுக்கு எப்படியும் ஆண்டவனைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே ஆவல்.

அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஐயன் என்றல்லவா அனைவரும் பஜிக்கின்றனர்; அத்தகையவரைக் காண வேண்டும் என்று ஒரே துடிப்பு.

ஆண்டவனல்லவா, நம் தாயாருக்குப் பண்டம் அளிக்கிறார்; அவரை தரிசிக்கவேண்டும் - என்று எண்ணிக் கொண்டான்.

"அம்மா! இன்று என்னையும் அழைத்துக்கொண்டுபோ'' என்று கெஞ்சினான்; தாயும், அந்தனியை உடன் அழைத்துச் சென்றனர்.

நீண்டதூரம் சென்ற பிறகு ஒரு மாளிகையை அடைந்தனர்; அங்கு ஒரு முதியவர் இருந்தார்; தாய் அவருக்கு வணக்கம் கூறினாள், முதியவர் சிறுவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, பணம் கூடக் கொடுத்தார்.

தாயார் உட்பக்கம் சென்றுவிடவே, சிறுவன் கூடத்தில் இருந்தான். வேறு மாதர் சிலர் அவனுக்குப் பாலும் பலகாரமும் கொடுத்தனர். சிறிது நேரம் கழித்துத் தாயார், ஒரு சிறு மூட்டையுடன் வந்து, சிறுவனை அழைத்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சிறுவன், "அவர் அப்படி ஒன்றும் பிரமாதமான தேஜசுடன் இல்லையே அம்மா!' என்றான், "யார்?'' என்று தாயார் கேட்டாள்; "ஆண்டவன்!'' என்று சிறுவன் கூறினான். தூக்கிவாரிப்போட்டது தாயாருக்கு. என்னடா சொல்லுகிறாய்? ஆண்டவன் கீண்டவன் என்று என்னமோ சொல்கிறாயே, என்ன அது? என்று அவள் கேட்க, சிறுவன், மாளிகையைச் சுட்டிக்காட்டி "அவர் தானம்மா, ஆண்டவன்! அவர்தானே நமக்கு நல்ல பொருளெல்லாம் தருகிறார் ஆண்டவன்தான் அனைவருக்கும் நல்லது தருகிறார் என்று பேசிக்கொண்டிருந்தீர்களே நீங்களெல்லாம். நான் கேட்டுக்கொண்டுதானே இருந்தேன்'' என்று அந்தனி விளக்கமளித்தான் அவன் தாய்க்கு நீண்ட நேரம் வரையில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

"அவர் ஆண்டவன் அல்ல! சர். வில்லியம் கூப்பர்! அவரிடம் நான் ஊழியம் செய்திருக்கிறேன்'' என்று நீண்ட நேரத்துக்குப் பிறகு கூறினாள்.

"ஒரு விதத்தில் நமக்கு இந்தப் பொருளை ஆண்டவன் தான் கொடுக்கிறார் என்று கூறவேண்டும். சர். வில்லியம் மனதிலே ஆண்டவன்தானே, கருணை பிறக்கச் செய்கிறார்; அதனால் தானே நமக்கு சர். வில்லியம் இந்த உதவியை செய்கிறார்; எனவே நமக்கு ஆண்டவன் தான் இந்தப் பொருளை எல்லாம் தருகிறார் என்று சொல்ல வேண்டியதுதான்!'' - என்று மேலும் விளக்க முரைத்தாள் அன்னை.

சிறுவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, "ஆனால், அம்மா! இந்தப் பொருள், சர். வில்லியமுடையதுதானே'' என்று கேட்டான்.

"ஆமாம்! ஆனால் ஆண்டவன்தான் அவருக்கு அவைகளைக் கொடுததார்'' என்று தாயார் கூறினாள்.

கடவுள் இப்படி சுற்றி வளைத்து நடந்துகொள்வது சரியான வழியாக அந்தோனிக்குப்படவில்லை.

"ஏனம்மா, கடவுள் நமக்கு இந்தப் பொருள்களைத் தர மாட்டேனென்கிறார்! நம்மிடம் அவருக்கு ஆசை இல்லையா?'' என்று சிறுவன் கேட்டான்.

என்ன பதில் கூறமுடியும்! பாபம்! அந்த மாது சரி, சரி, இப்படியெல்லாம் கேட்கக்கூடாது; தெரிகிறதா; என்று கூறித்தான் சிறுவனை அடக்க முடிந்தது! ஆனால் மனம்? சிந்தனை?

இன்னும் சர்வ சாதாரணமாக "மேதைகள்' கூறிடும் வகையிலேதான், அந்தனியின் தாயார் பேசுகிறார்கள்!

கொடுக்கும் ஆள் யாராக இருந்தாலும், கொடுக்கும் கரம் ஆண்டவனுடையது என்பதுதான், எங்கும் எவரும் பேசும் தத்துவம்! அந்தத் தத்துவத்தைக் கூறிவிட்டு, அந்த மேதைகள் தமது அறிவுத் திறனைக்கண்டு, தமக்குத் தாமே பாராட்டிக் கொள்கிறார்கள்!

சிறுவனல்லவா, கேட்கிறான் - ஏனம்மா! ஆண்டவன், இப்படி சுற்றிவளைத்து வேலை செய்கிறார். நமக்கு உதவி செய்ய விரும்பினால், ஏன் நேரடியாகச் செய்யக்கூடாது!- என்றல்லவா கேட்கிறான்.

அவன் வாயை, அன்னை அடக்கிவிடுகிறார்கள்! அந்த அன்னை மட்டுமா - இன்று மேதைகளும் சிக்கலான, சங்கடமான, அடிப்படையை ஆராயும் விதமான கேள்விகளைக் கேட்பவர்களின் வாயை அடைக்கத்தான் முனைகிறார்கள்.

வாய் மூடிக்கொண்டான், அந்தனி! ஆனால் மனம்? சிந்தனை? சும்மாவா இருக்கும்! அடக்க, அடக்க வேகமாக வேலை செய்கிறது.

நியூட் மாமாவை, நாஸ்திகன் என்று பலரும் கூறினர், அந்தப் பாளையத்துக்குப் பணியாற்றவந்த பாதிரிமார்கள் ஒவ்வொருவரும், இந்த நாத்திகனைத் திருத்தி வெற்றி காண வேண்டும்மென்று வெகு பாடுபட்டனர். ஆனால் நியூட் மாமாவோ, பிடிவாதமாக இருந்து வந்தார்!

நரகத்தில் சிக்கி அவன் நாசமாகப்போவது திண்ணம் என்று பலர் பேசுவர்; நரகம் என்றால் கொடியவர்களைத் தண்டிக்கும் இடம் என்று அந்தனி கேள்விப்பட்டிருக்கிறான்! நியூட் மாமாவைப் பார்த்தாலோ, கொடியவராகவே தெரிய வில்லை! எனினும் அவர் நரகத்தில் தள்ளப்படப்போவது நிச்சயம் என்று மாமியே கூறுகிறார்கள்!

"மாமி! மாமா, மிகவும் கொடியவரா?''

"கொடியவரல்லடா? எவ்வளவோ கொடியவர்களை நான் பார்க்கிறேன், உன் மாமா அப்படிப்பட்டவரல்ல''

"அப்படியானால், அவர் ஏன் நரகம் செல்லவேண்டும்?''

"போகத் தேவையே இல்லையே! அவராக அல்லவா, பிடிவாதம் பிடிக்கிறார்! நம்பிக்கை கொண்டாரானால். காப்பாற்றப்படுவார்! நரகம் போகத் தேவையே இல்லையே''

"நம்பிக்கையா? எதை நம்பச் சொல்கிறீர்கள்?''

"விவரமாகச் சொல்ல எனக்கு நேரமில்லை சொல்வதை நம்பினால் போதும்; உன் மாமா அதைத்தான் செய்யமாட்டே னென்கிறார்''

"யார் சொல்வதை நம்பவேண்டும் என்கிறீர்கள்?''

"எல்லோரும் சொல்வதைத்தான். நானே எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் - கேட்டால்தானே. ஏதேது நீயும் உன் மாமனைப்போலவே கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போகிறாயே. இப்படி எல்லாம் பல கேள்விகள் கேட்கக்கூடாது - தெரிகிறதா!''

சிறுவனுடைய வாயை மாமி அடக்கிவிட்டாள். ஆனால் மனம்? சிந்தனை? தூங்கிவிடுமா என்ன? அது கொதித்துக் கொண்டேதான் இருந்தது.

அன்னையும், மாமியும் சிறுவனுடைய சந்தேகத்தைத் துடைக்கவில்லை. விருப்பம் இல்லாததால் அல்ல, அவர்களால் இயலவில்லை! இப்போது மட்டுமென்ன? எந்த மேதை, விளக்கம் அளிக்கிறார் - சந்தேகத்தை நீக்குகிறார். சீறுகிறார், சபிக்கிறார். போக்கிரித்தனமான பேச்சு இது, நாத்திகப் போக்கு, என்று நிந்திக்கிறார்.

"மாமா! நீ, ஏன் நம்பிக்கை கொள்ளக் கூடாது.?''

"எதை நம்பவுது?''

"எல்லோரும் நம்புவதைத்தான்''

"அவர்களை நம்பாதே அந்தனி, நம்பாதே. அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையில், அவர்கள் யாருக்கும், நம்பிக்கை கிடையாது. சும்மா, அப்படிச் சொல்லி வைக்கிறார்கள். ஏதோ அந்த நம்பிக்கை மூலம் பலன் கிடைக்குமென்று எண்ணி அவ்விதம் சொல்கிறார்கள்.''

சிறுவனுடைய சிந்தனையையும் கிளறிவிட்டான்; அருகே இருந்த நெருப்பையும் கிளறிவிட்டபடி, மாமன் மேலும் பேசலானான்.

"அவர்கள் எதெதில் நம்பிக்û இருப்பதாகச் சொல்கி றார்களோ, அவற்றிலே அவர்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், இந்த உலகமே உத்தமபுரியாகி இருக்குமே! அதைத்தான் நான் அவர்களிடம் பல முறை கேட்கிறேன். பதில் கூறினதில்லையே அவர்கள், கூறமுடியாதே!''

மாமன், பேச்சை நிறுத்தவில்லை.

"போகப்போக நீ அவர்களுடைய போதனைகளை எல்லாம் தெரிந்துகொள்வாய்.

உன்னைப்போல் பிறரையும் நேசி

அனைத்தையும் ஏழை எளியோருக்கு கொடு

அவர்களுக்கு ஆண்டவன் கூறுவது இது. அவர்கள் அது போல நடந்துகொள்வதை நீ கண்டது உண்டா? அவர்கள் நம்பிக்கை கொள்வதைக் காண்கிறபோது, நானும் நம்பிக்கை கொள்வேன்.''

பஞ்சம், வேலை நிறுத்தத் தொல்லை, குளிர் கொட்டுகிறது. வறுமை போட்டியிடுகிறது. நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அப்பாடா, என்று ஆறுதல் கூறுவதற்குள் எஃகுத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் கிளம்பிவிட்டது, மொத்தத்தில் ஏழைகளுக்குக் கடுமையான சோதனைக் காலமாக இருந்தது. அந்தனிக்கு, கடவுள் ஏன் இதை அனுமதிக்கிறார் என்று ஆச்சரியம். மாமியிடம் பேசுகிறான்.

"கடவுள் ஏன் இதனைத் தடுத்து நிறுத்தக்கூடாது!!''

"எதை நிறுத்துவது?''

"வேலை நிறுத்தத்தைத்தான் மாமி! ஏன் கடவுள் அனைத்தையும் சரியாக வைத்திருக்கக்கூடாது? அவரால் முடியாதா.''

"ஏன் முடியாது நிச்சயமாக முடியும். அவர் மனது வைத்தால் ஆகாத காரியம் உண்டா?'' " ஏன் அவர் மனது வைக்கவில்லை, மாமி! அனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்ப வில்லையா!''

"அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பது தானடா, அவருடைய விருப்பம். ஆனால் மக்கள் கெட்டவர் களாக இருக்கிறார்கள்; பிறக்கும் போதே கொடியவர்க ளாகிறாôகள்!''

"ஏன் நாமெல்லாம் பிறக்கும்போதே கொடியவர்களாகப் பிறக்கிறோம். ஆண்டவன்தானே நம்மை எல்லாம் படைக்கிறார்!''

"அனைவரையும் அவர்தான் படைத்தார், அதிலென்ன சந்தேகம், எல்லாம் அவர் சிருஷ்டி!''

"ஏன், அவர் நம்மை நல்லவர்களாகப் படைக்கவில்லை?''

"அவர், நல்லவராகத்தான் அனைவரையும் படைத்தார் ஆதாமும் ஏவாளும். அவர் படைத்தபோது பரிசுத்தப் பிறவிகள்! ஆனால் அவர்கள் ஆண்டவனுடைய கட்டளையை மீறி, (பாபப்) பழத்தைத் தின்று தொலைத்தனர். இல்லையானால் நாமெல்லாம் நல்லவர்களாகவும் பிறந்திருப்போம். ஆனந்த மாகவும் வாழ்ந்து கொண்டிருப்போம்.''

"ஆதாம் என்பவன்தான் முதல் மனிதன்! அப்படித் தானே மாமி!''

"ஆமாம்! ஆண்டவன் ஆதாமைப் படைத்தார், நல்லவ னாகத்தான்.''

"எவ்வளவு காலத்துக்கு முன்பு நடந்தது மாமி, இந்தச் சிருஷ்டி.''

"ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!''

"மாமி! தவறு செய்துவிட்டேன், மன்னித்து அருளுக! என்று ஏன் ஆதாம் கூறி, ஆண்டவனுடைய மன்னிப்பைப் பெறவில்லை?'

"விபரீதம் நேரிட்டுவிட்டதே, ஆதாம் என்ன செய்ய முடியும்? பழத்தைத் தின்றான் பிறகு, பகவானிடம் முறையிட்டு என்ன பலன்?''

"சாத்தான், ஆதாமையோ ஏவாளையோ, கெட்ட நினைப்புக்கொள்ளும்படி தூண்டினானே, ஏன் கடவுள் அதைத் தடுக்கவில்லை? கடவுள் சர்வசக்தி உள்ளவர்தானே! சாத்தானை ஏன் அழித்திருக்கக் கூடாது!''

மாமி, மருண்டு போனாள்! போக்கிரிப்பயல், என்னென்ன கேள்விகளைக் கேட்கிறான்! என்று கோபங்கூட வருகிறது.

"சரி, பள்ளிக்கூடத்திற்கு நேரம்மாகிறது. போ, போ''என்று கூறி, அவனை அனுப்பிவிடுகிறார்கள். அந்தனியும் வாயை மூடிக்கொண்டு செல்கிறான்! வாய் மூடிக்கிடக்கிறது! ஆனால், மனம்? சிந்தனை?

மாமி மருண்டு போகிறாள் மேதைகள் இன்று மிரட்சியுற்று "ஈதேது பயங்கரமான புரட்சி தலைவிரித்தாடுகிறதே!' என்று பேசுகிறார்களே, அதுபோல.

ஆனால் அந்தனியின் உள்ளத்திலே ஊறிய எண்ணங்கள் மாமியும் பிறரும் அடக்க அடக்க, வேகமாக வளர்ந்தது.- மடியவில்லை. அந்தனி உழைப்பால் உயர்ந்து, ஊராரின் நன்மதிப்பைப் பெற்றான் - ஆனால் சுயநலம் அவனை அடிமைப்படுத்திவிடவில்லை - சுகபோகத்தில் அவன் மூழ்கிவிடவில்லை. பக்தர்களின் பேச்சிலே சகல அறிவும் இருப்பதாகக் கருதும் போக்கினனாக அந்தனி இருந்திருந்தால், செய்த புண்ணியத்தின் பலனாக ஆண்டவன் தனக்கு இந்த நல்ல நிலையை அருளினார், எனவே அவருக்கு மேலும் சேவைசெய்ய வேண்டும் என்று கருதி, ஆலயத் திருப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு, பெரிய பக்திமான் என்று விருந்து பெற்றிருக்கக்கூடும்! ஆனால் அவனோ ஒரு சந்தேகி! சிறு பருவ முதலே. எனவே அவனுக்கு மனதிலே சிக்கல் குறைய வில்லை! எல்லாம் அவன் விட்டவழிப்படி நடக்கும் என்று எண்ணி, சோம்பித் திரியவில்லை.

துணைவி நோய்வாய்ப்பட்டதால் அந்தனி துயர்க்கடலாழ்ந்தான். ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டால் அவர் ஆபத்தைப் போக்குவார், எதையும் சாதிக்கவல்லவரல்லவா சர்வேஸ்வரன், என்று எண்ணிடுபவனல்லவே! எனவே, அந்தனி "பூஜை'கள் செய்து, தன் துயரைத் துடைத்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, ஏழைகளுக்கு இதம் தரும் தொண்டாற்றினால், அதன்மூலம் இறைவனுடைய அருளைப் பெற இயலும் என்று எண்ணி, மும்முரமாக அந்தப் பணியில் ஈடுபடலானான்.

ஏழை மக்களின் இருப்பிடம்தான், சேச்சே! எவ்வளவு கேவலமாக இருக்கிறது! எங்கும் ஒரே அசுத்தம்! நோய் அவர்களைப் பிய்த்துப் பிடுங்காமலா இருக்கும்! படுகுழிகள்! அதன்மீது படுதாக்கள் போர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சேரிகளை ஒழித்திடவேண்டும். இந்த "நரகத்துக்கும்' ஏழைகள் எவ்வளவு "வாடகை' கொட்டி அழவேண்டி இருக்கிறது, பணம் பிடுங்கும் செல்வர்களுக்கு! இந்த அக்ரமத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். ஏழைகளைக் கசக்கிப் பிழியும் கொடுமையாளர்களிடமிருந்து மீட்கும் திட்டம் காணவேண்டும். மலிவான, அதேபோது சுத்தமான விடுதிகள் அமைக்கவேண்டும். ஏழைகளின் வாழ்வில் ஒரு குளிர்ச்சியும் மலர்ச்சியும் காணவேண்டும் - என்று எண்ணினான். அந்தனி.

லாண்டிரிப் என்பான் கட்டிட வேலையில் நிபுணன், அந்தனிக்கு நண்பனானான். திறமையுள்ளவன் மட்டுமல்ல, புதிய தத்துவங்களில் நாட்டமுள்ளவன், லாண்டிரிப்.

மக்கள் பணியே மகேசனுக்கு உகந்த பூஜை!

ஏழைகள் இதயத்தில் களிப்பூட்டும் பணிபுரிதலே பகவானுக்குத் தேர், திருவிழா, யாவும்!

தூய உள்ளமே கோயில்! நலிந்தோரைத் தேற்றுவதே தோத்திரம்!

மக்களிடம் சகோதரத்துவம் மலரவேண்டும்; அதற்க அன்பு ஆட்சி செய்தல் வேண்டும்.

ஒரு பகுதி மக்களைச் சேற்றிலும் சகதியிலும் நெளியும்படி விட்டு வைப்பது சமுதாய முழுவதையுமே நாசமாக்கும்.

பிறரையும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்தால்தான், நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இவைகளே லாண்டிரிப் போற்றி வளர்த்துவந்த கருத்துக்கள்.

சர்வ வல்லமை உள்ளவர், சர்வேஸ்வரன், ஏன் மனிதனை அறிவுச் சூனியனாகவும் குற்றங்கொள் கலமாகவும் படைக்க வேண்டும்!

சுயநலம், பேய்க்குணம், வெறிச்செயல், இவைகளிலே மூழ்கிடும் போக்கினனாகும் நிலையில் மனிதனைப் படைக்காமல் துவக்கத்திலேயே மனிதனை, "நித்யானந்தத்தை! அனுபவிக்கத் தக்க, ஆற்றலைப் பெறக்கூடியவனாகவும், அருங்குணவானாகவும், ஏன் படைத்திருக்கக் கூடாது!

இது, அந்தனியின் மனதிலே நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கல்.

கிறிஸ்துவின் புனிதக் காதை மூலம், இந்தச் சிக்கலைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்துவின் புனித மொழிகளின்படி நடந்து கொள்பவர்களே, மிகமிகக் குறைவு! மேலும், தவறுகளைச் செய்துவிட்டுப் பிறகு அதனைத் திருத்தும் நிலையில் ஏன் கடவுள் இருக்க வேண்டும், முறை அல்லவே என்று அந்தனி எண்ணினான்.