அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


துறவி - காவியில்லை!
3

லாண்டிரிப் சொன்னான் : "நான் வணங்கத்தக்க கடவுள் ஒருவர் உண்டு; பூவுலகத்தையும் பரமண்டலத்தையும் சமைத்தவர் அல்ல அவர்; விண்மீன்களையும் பிரபஞ்சத்தையும் படைத்தவ ரல்ல! கடியாரம் காண்கிறோம், அதை ஆக்கினவன் ஒருவன் உளன் என்பது அதன் மூலம் தெரிகிறது, என்கிறார்கள். தத்துவம் சரி! ஆனால் என் உள்ளத்துக்கு உகந்த ஈசன் பிரபஞ்சத்தைப் படைத்த பெரியவன் அல்ல, ஆக்கவும் அழிக்கவும் வல்ல பரம்பொருள் என்கிறார்களே, அதனிடம் என்மனம் இலயிக்க வில்லை. உலகின் கேடுகளைக் களைந்திட, உழைத்திடும் உத்தமனாகவும், அந்தத் திருத்தொண்டிலே, என்னைப் பங்கு கொள்ளும்படி செய்பவனாகவுமுள்ள, காப்பாளனை, உழைப்பாளனை,நான்கர்த்தனாகக் கொள்கிறேன். இது நாள் வரையில், மக்கள், தங்கள் மனதிற்குப்பட்ட வகையிலே தாமே ஆக்கிக்கொண்ட கடவுளைத் தொழுது வருகிறார்கள்; சர்வசக்தி வாய்ந்தவர்! தேஜஸ் மிகுந்த தேவாதி தேவன்! வரம் அருளும் வல்லமை படைத்தோன்! தீயோரைத் தண்டிக்கும் ஆற்றல் மிக்கோன்! என்றெல்லாம் பூஜிக்கிறார்களே, அந்தக் கடவுளை அல்ல நான் தொழுவது. என் "கடவுள்' கேட்ட வரம் அருளுபவரல்ல, அவர் என்னிடமிருந்து, அன்பு, நேர்மை, தூய்மை இவைகளைக் கேட்பவர், என்று கூறினான். அந்தனியின் மனதிலே புதிய கருத்துக்கள் தூவப்பட்டன என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய கருத்துரைகளில், இது அந்தனிக்கு ஒருவகையில் பிடித்திருந்தது.

எலினார், பிழைத்துக்கொண்டாள். ஆபத்து, விலகி விட்டது, அந்தனியின் உள்ளத்திலே சொல்லொணாத மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் பாலித்துவிட்டார். நான், ஏழைகளுக்காகத் தொண்டாற்றினேன்; தூயவர், என்பால் திருநோக்கைத் திருப்பி, என் ஆவியை என்னிடம் ஒப்படைத்து விட்டார்; என் இதயராணி பிழைத்துக்கொண்டாள். பெரியவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் முற்றிலும் உண்மைதான். சத்தியவாக்குத்தான் அவை.

நீ இன்னின்ன நல்ல காரியங்களைச் செய், நான் அதற்கு ஈடாக உன் மனைவிக்கு வந்துற்ற ஆபத்தைப் போக்குகிறேன், என்ற முறையில் ஆண்டவன் நடந்து கொண்டாரே, வியாபார ஒப்பந்தம் போலல்லவா இது இருக்கிறது - சரியாகுமா இந்த முறை - என்று கேட்பர்; ஒப்பந்தம் என்றே வைத்துக் கொண்டால்தான், என்ன தவறு! எனக்கு எலினாரிடம் உள்ள பாசத்தையே சாக்காக்கிக்கொண்டு, கடவுள், என் மூலம் ஏழைகளுக்கு நலன் கிடைக்கச் செய்திருக்கிறார்; இதிலே என்ன குற்றம் காண முடியும்? என் மக்களுக்காக நீ, இன்னின்ன நலன்களைச் செய்து கொடு, நான் உன் இல்லக்கிழத்தியின் இன்னுயிரை மீட்டுத் தருகிறேன் என்று கடவுள் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்; இதிலே தவறு என்ன - என்று அந்தனி எண்ணி மகிழ்ந்தான். ஆனால் மகிழ்ச்சியும் திருப்தியும் நிலைத்து நிற்கவில்லை, மீண்டும், அந்த நீண்டகாலச் சிக்கல்தான் தலைதூக்கிற்று.

எல்லாம் சரி, ஏன் சர்வேஸ்வரன் தன் சிருஷ்டியான கேவலம் மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுகிற முறையில் நடந்து கொள்ளவேண்டும், விநாடிப் போதில் அவர் விரும்பினால், சாதிக்கக்கூடிய காரியங்களை, ஏன் ஆண்டவன், சுற்றிவளைத்து நிறைவேற்றப் பார்க்கிறார்? துவக்கத்திலேயே, எதையும் குற்றமற்ற முறையிலே படைத்திருக்கலாமே. ஏன் ஆண்டவன் சிருஷ்டியிலே ஆயிரத்தெட்டு அலங்கோலங்கள், மனிதனை இரத்த வெறி கொண்டலையும் நிலையில் படைத்திடுவானேன், பிறகு அந்த வெறியை ஒழித்து அவனைச்சன்மார்க்கத்தில் செல்லச் செய்வதற்கு பல்வேறு வழிவகைகளை அருளுவானேன் - அந்தனியின் உள்ளத்திலே, எழும்பிய இந்த அலை அடங்க மறுத்தது.

லாண்டிரிப் சொன்ன கடவுட் தத்துவம் அந்தனியின் உள்ளத்தைத் தொட்டது.

சர்வ வல்லமை உள்ள ஆண்டவன், மனிதனிடம் எதைத்தான் எதிர்பார்க்கவேண்டும், ஏன் எதிர்பார்க்க வேண்டும் மண்பாண்டம் செய்பவனுக்கு எவ்வகையில் நன்றி கூறுவது என்று களிமண் எண்ணுவது போலல்லவா இருக்கும், சர்வேஸ்வரனுக்கு நன்றி கூறவேண்டும் என்று மனிதன் எண்ணினால்!

ஆண்டவனைத் தொழுவது, தோத்தரிப்பது, மண்டி யிடுவது. இவைகளால் அவருக்கு என்ன பயன்? நமது வாழ்த்துதலும் வணக்கமும் அவருக்கு எற்றுக்கு? எது எது எப்படி எப்படி நடைபெறவேண்டும் என்பதனைத்தையும் அவர் எப்போதோ தீர்மானித்துத் தீட்டிவைத்திருக்கிறார் என்றால், அவருடைய திரு அருளைத் தேடிப்பெறத் தொழுகை நடத்துகிறோம் என்று கூறிக் கொள்வதிலே பொருள் என்ன இருக்கிறது?

இத்தகைய கடவுட் கோட்பாட்டைவிட, லாண்டிரிப் கூறுவது, பொருத்தமுடையதாகத் தெரிகிறது.

மனிதனுக்காகப் பாடுபடும் மாவீரனாக, மனிதனை நேசிக்கும் தோழனாக, மனிதனை மாண்புள்ளவனாக்கும் மகத்தான சேவை செய்யும் நண்பனாகக் கடவுளைக் கொள்வது, சாலச் சிறப்புடையதாகத் தெரிகிறது. அத்தகைய ஈசனை அறிய முடிந்தால்? இன்பம்தான்.

இங்ஙனம் ஒவ்வொரு சம்பவத்தின்போது, அந்த அடிப்படைக் கேள்விதான் கிளம்பிற்று. ஏன் ஐயனுடைய சிருஷ்டியிலே இவ்வளவு அலங்கோலம்? ஏன் கொடுமைக் குணங்களைப் பிறந்திடச் செய்கிறார்? பிறகு மனிதனைக் கொடுமையாளனாகாதிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்? அந்தனிக்கு இது, ஆண்டவன் வேண்டுமென்றே எடுத்துக் கொண்ட வீண்வேலை என்று தோன்றிற்று. பாதிரிமார்களால், சிறுவனாக அவன் இருந்த நாள்களிலேயே, விளக்கமளிக்க முடியவில்லை. இப்போது அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள்.

பெட்டி, பலநாடுகள் சென்று வருவது வாடிக்கை.

பெட்டிக்கு, மணமாகவில்லை - அந்த நினைப்பும் எழவில்லை. எனவே, அடிக்கடி, பல நாடுகள் சென்று, அறிவுக்கு விருந்து பெற்று மகிழ்ந்தாள். ஒரு நாள், அவளிடம், அந்தனி, இந்த அடிப்படை விஷயமாகப் பேசும்போது, அவள் ஒரு விளக்கமளித்தாள்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் சான்பிரான்ஸிஸ்கோ விலிருந்து ஹாங்காங் போகையில், ஒரு சீனக்கனவானுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மனிதனுடைய முன்னேற்றத் துக்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது கடவுள்தான் என்று அந்த சீனப் பெரியவர் சொன்னார். நான் திகைத்துப் போனேன்.

"தனக்காக வேண்டியதனைத்தையும் கடவுள் தருவார்.

"நமக்கெல்லாம் புரியாத ஒரு முறையிலே, கடவுளின் திருவருள் வேலை செய்கிறது, அதன் விளைவாக, பூலோகம் சுவர்க்க பூமியாகப் போகிறது.

"மனிதன் செய்யவேண்டியதெல்லாம், பொறுத்திருக்க வேண்டும், பகவானிடம் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். அவ்வளவுதான்.''

இங்ஙனம் மனிதன் வெறும் கருவி; ஆண்டவன் ஆட்டிவைக்கிறபடி ஆடும் பதுமை, என்று நம்பித்தான் மனிதன் நாசமாகிறான்.

மனிதன் கடவுளின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு சோம்பிக்கிடப்பதை விட்டு முயற்சியில் ஈடுபடுவானானால், மண்ணுலகில் விண்ணுலகம் காணலாம். ஆனால் அதற்கு, மனிதன், தன்னலத்தை விட்டொழிக்க வேண்டும்.அது கடினமானது; எனவே மனிதன், எளிதான வழி தொழுது கிடப்பது, தேவன் எதையும் தனக்காகச் சாதித்துத் தருவான் என்று நம்பிக்கிடப்பது என்ற நிலைக்கு வந்து விட்டான். அதனாலேயே மனிதகுல முன்னேற்றம் குந்தகப்படுகிறது. கடவுளைத்தேடித்தேடி, இல்லை என்று தெரிந்து கொள்கிறான்.

கடவுள் நம் உள்ளத்திலல்லவா இருக்கிறார்.

நாம்தான் கடவுள்! மனித சக்தி மட்டற்றது. மனிதன் தன் தீயநினைவுகளைக் கட்டுக்குள்கொண்டுவரவும், களையவும் பழகிக் கொண்டால், விண்ணுலகு, மண்ணுலகில் மலரும்.

தன்னலத்தைத் தகர்தெறிவது; சாத்தியமானதுதான் வரலாறு மனிதனுடைய பாதகச் செயலையும் தவறுகளையும் காட்டும் களஞ்சியம்தான் என்றாலும், மனிதகுல முன்னேற்றத் துக்குத் தடையாக உள்ளவைகளை மனிதனால் தகர்த்தெறிய முடிந்தது என்பதை விளக்கும் சம்பவங்களும் அதிலே சுடர் விட்டுக் கொண்டுள்ளன.

அன்பு! இதைத்தான் அனைவரும் உபதேசித்து வந்தனர். அன்பு காட்டுவது எளிதுதான் - வெறுப்பை மனிதன் சிரமப் பட்டு உள்ளத்தில் வளர்த்துக்கொண்டு வருகிறான். சிறிதளவு முயற்சி எடுத்துக்கொண்டாலும், அன்பு உள்ளத்தில் ஆட்சி புரியும். இப்போது சிறுபிள்ளைப் பருவமுதல், வெறுக்கக் கற்றுத் தரப்படுகிறது.

அன்புடன் வாழவேண்டிய மக்களிடம், இனம், நிறம், நாடு, மதம், எனும் பல்வேறு காரணங்காட்டி வெறுப்பை ஊட்டி ஊட்டிக் கெடுக்கிறோம். அன்பு அரசோச்சினால் அவனியே சுவர்க்கமாகும். ஐயன் செய்து தருவார் என்று இராமல், மனிதன் முயற்சிக்க வேண்டும். அவனால் முடியும், அவன் வெற்றி பெறத்தான் போகிறான்.

சீனப் பெரியவர் சொன்ன சித்தாந்தத்தை பெட்டி, இவ்வாறு விளக்கியது, அந்தனிக்கு, ஓரளவு ஆறுதல் அளித்தது.

கடவுள் பற்றி எவ்வளவு கருத்தற்ற கொள்கைகளை மனிதகுலம் கொண்டிருக்கிறது, என்பதைச் சீனப் பெரியவர் எடுத்துக் காட்டினார். இதையே இப்போது நாம் கூறும்போது சீலர்கள் சீறுகிறார்கள் - ஆதினங்கள் ஆத்திரமடைகின்றன. ஆஸ்தீகர்கள் - அடி, உதை, என்றே கிளம்புகிறார்கள்.

பெட்டி, பேசியது கேட்ட அந்தனி சிந்தித்தான். மனதிலே புகுந்து விட்ட புனிதம் பற்றி அவன் பேசலானான்.

"உடைமைகள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்குக் கொடுத்து விடு, என்று ஏசுநாதர் ஒரு இளைஞருக்கு உபதேசித்தாரே, பெட்டி! ஏழைகளுக்காக அல்ல, அந்த இளைஞனுடைய நலனுக்காகவே ஏசு அதுபோல் கூறினார் என்று நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. ஏழைக்கு அந்த இளைஞன் தானம் தந்தால், ஏழையின் அல்லல் ஒரு கணம் துடைக்கப்படும். ஆனால் அந்த இளைஞனுக்குக் கிடைக்கும் பலனோ மகத்தானது. அவன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அவனைப் பிணைத்து வைக்கும் பொருளை எல்லாம் அவன் நீக்கிவிட்டதும், நிம்மதி பெறுகிறான். உடமைகளால் உள்ளத்துக்கு ஏற்பட்ட சுமை ஒழிந்து போகிறது. விடுதலை கிடைக்கிறது.

நான், சாத்தான் இருப்பதை நம்புகிறேன், பெட்டி! நாம் பாசுரங்களில் குறிப்பிடுகிறோமே, அந்தச் சாத்தான் அல்ல - கடவுள் சன்னிதானத்தில் கலாம் விளைவித்து அவரால் பூலோகத்துக்கு விரட்டப்பட்டுக் கிடக்கும் சாத்தான் அல்ல நம்மிடம் குடிகொண்டிருக்கும் தீய குணத்தைக் குறிப்பிடுகிறேன்.

வெறுப்புணர்ச்சி, பேராசை போன்ற தீய குணங்களை நமக்குத் தந்தது யார்?

மனிதன், கடவுளின் கட்டளைக்கா, சாத்தானுடைய கட்டளைக்கா, எதற்குக் கட்டுப்படுகிறான்? குழப்பம் ஏற்படுகிறது.

பெட்டி! தன்னல மறுப்புதான், சாத்தானை விரட்டும் வழி - உய்யும் மார்க்கம்.

நாம் போராட வேண்டும், கடவுளுக்குத் துணையாக நின்று போராடவேண்டும்.

சிலர் இந்தத் தூய பணிபுரியக் கிளம்பினால் போதும். பிறர் பிறகு வருவர்.

இன்பலோகமாம் சுவர்க்க பூமியில் இடம் பிடிக்க அல்ல, பெட்டி; உலகைக் காப்பாற்றப் பணியாற்ற வேண்டும்.

தீயகுணம் எப்படியும் தன்னால் மடிந்தொழியும், கடவுள் அதனை ஒரு நாள் ஒழித்தே தீருவார் என்று எண்ணிப் பயனில்லை. தீய குணத்தை ஒழித்திட நாம் தீவிரமாகப் பணியாற்றித் தீரவேண்டும். கடவுள் தீயசக்திகளை ஒழிப்பதில் வெற்றி பெறவில்லை. அவரை மூலைக்கு ஒதுக்கி விட்டு, தீய சக்தி, மணிமாடத்தில் கொலுவிருக்கிறது. எனவே கடவுளின் காரியத்தைச் செய்ய, தன்னலத்தை விட்டொழித்துப் பணி புரியவேண்டும். துறவிகள் வேண்டும்.''

அந்தனி விளக்கம் பெற்று விட்டான் என்பதை மட்டும் இச் சம்பவம் காட்டவில்லை. தன்னலமறுப்புக்கு அவன் துணிந்துவிட்டான் என்பதையும் இந்த உரையாடல் எடுத்துக் காட்டிற்று. பெட்டி, அவன் உள்ளத்தில் பெரு நெறி தவழ்வதை உணர்ந்தாள்; வாழ்த்தினாள்.

வெற்றி கிடைத்துவிட்டது. போர் முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் துறந்துவிடுவது என்ற முடிவுக்கு அந்தனி வந்தாகிவிட்டது. உலகின் செல்வம் அனைத்தையும் குவித்து ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்தாலும், மீண்டும் தொல்லையும், துயரமும் தலைவிரித்தாட அதிக காலம் பிடிக்காது. தன்னலம் தலைதூக்கும். பேராசை பேயாட்டமாடும்.

ஏழைகளுக்குக் காசு வீசிடும் கருணாமூர்த்திகள், பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறார்கள். ஏழைகள் தொகையோ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணம் சர்வரோக நிவாரணியல்ல. சேவை, தன்னலமறுப்பு இவை மூலமாகவே பலன் காண முடியும்.

எனவே, நான், என் தாயார் வசிக்கும் விடுதிக்குப் பக்கத்தில், ஒரு சிறு குடிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அங்குதான், ஏழைகளின் தோழனாக வாழ்க்கையைத் துவக்கப் போகிறேன். அவர்களுக்கு உதவி செய்வதே வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொள்வேன். வழக்குகள் ஏழைகளுக்குள் கிளம்பினால், வழக்கறிஞனாக நான் சமரசம் செய்து வைப்பேன். என் தேவைக்கானதை நான் சம்பாதித்துக் கொண்டு, எளியோருடன் எளியோனாக வாழ்க்கை நடத்தப் போகிறேன்.

மனைவி மக்கள் இல்லாத துறவிகள் மட்டும் போதும், தூய்மையையும் வாய்மையையும் வெற்றி பெறச் செய்ய என்று கொள்வதற்கில்லை. குடும்பத்துடன் உள்ள துறவிகள் தேவை; நான் அத்தகைய துறவி ஆகப் போகிறேன்.

எலினார், எளிய வாழ்க்கையில் ஈடுபட, எல்லாம் இருந்தும் அனைத்தையும் துறந்து விட்டு அன்றாடம் தேடிப் பெற்று வாழ்க்கை நடத்துவதை ஏற்றுக்கொள்ளுவாளா? செல்வத்தைக் கண்டவள்! சுகத்தை அறிந்தவள்! எப்படிஇவைகளை விட்டுவிட மனம் வரும், என்றெல்லாம் அந்தனி எண்ணிக் குழப்பமுற்றான். ஆனால் அந்தக் குணவதியோ, அவன் கூறியதே செந்நெறி என்று உணர்ந்தாள்; தன்னல மறுப்பு, ஏழையர்க்குத் தொண்டாற்றுதல், உடைமைகளைக் கட்டிக்காத்து அவைகளுக்கு அடிமையாகிச் சிதைந்து போகாதிருத்தல், இவையே உண்மைத் துறவியின் இலட்சணம் என்பதை, அந்தனி மூலம் அறிந்தாள்; அகமகிழ்ச்சி யுடன், அவன் துவக்கத் தொடங்கிய புதிய வாழ்க்கையில் துணை நிற்க இசைந்தாள். துணைவியுடன் ஏழையர்க்குத் தொண்டாற்றக் கிளம்பினான். அந்தத் துறவி.

தம்பி, "தருமபுரத்தைக்"கண்ட அன்று, நான் கதையில் இந்தத் "துறவி'யைச் சந்திக்கிறேன் என்றால், என் உள்ளம் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்!

"வயலூரிலிருந்து நெல் வண்டிகள் வந்து விட்டனவா?

கோட்டையூரார் குத்தகைப் பணத்தைக் குறைவின்றிக் கொடுத்துவிட்டாரா?

பட்டணப் பிரவேசத்துக்கு இந்த ஆண்டு, செலவு எவ்வளவு என்று புள்ளி போட்டாகி விட்டதா?

வாழைத் தோட்டத்திலே புதிய வாயிற்படி வைத்தாகி விட்டதா?

முல்லைத் தோட்டத்திலே ஊஞ்சல் அமைத்து விட்டார்களா?

சென்னை வழக்கு எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

கல்கத்தாவிலிருந்து மருந்து பார்சல் இன்று வந்துவிட்டதா?

கனகாம்பரக் கலர் ஆடை வாங்கியாகிவிட்டதா?

கை வளைகள் எங்கே? தோடு மேலும் இரண்டு ஜதை வேண்டும்! தொங்கட்டம், பார்வையாக இல்லை!

தில்லைத் தாதன் வந்ததும் எனக்குச் சொல்லு,

கொல்லைப்புறக் கதவைத் தாளிட்டுவிட வேண்டும்.

பல்லைக்காட்டி நிற்கும் பாக்கியத்துக்கு, பத்து கொடுத்துத் துரத்து.

ஏன், உரத்த குரலில் கத்திக் கத்தி என் உறக்கத்தைக் கெடுக்கிறார்கள், நால்வரின் பாடல்களை மனதுக்குள் படித்திடச் சொல்லு.''

இன்றையத் துறவிகள் இங்ஙனம் பேசி இருந்திடக் காண்கிறோம்.

கதை மூலம், உண்மைத் துறவி எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பது குறித்து, ஒரு ஆங்கில ஆசிரியர் காட்டுகிறார்.

வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா - என்றுதான் தம்பி உன்னைக் கேட்கிறேன். நமது இயக்கத்தால் நாட்டிலே தாத்தீகம்தலைவிரித்தாடுகிறது என்று நாப்பறை கொட்டும்
நல்லவர்களைக் கேள்
தம்பி, துறவியின் இலட்சணம் என்ன என்று. காதிலே குண்டலம், கழுத்திலே தாவடம், சேவடியில் பாதுகை, உடலில் காவி, என்று கூறுவர். சரி ஐயன்மீர்; கோலம் கிடக்கட்டும், உள்ளம் எப்படி இருக்கவேண்டும் என்று கேள்.

உடைமைகள், அவை பற்றிய உரிமைகள், இவை பற்றிய எண்ணம் கொண்டிருப்பது, துறவு ஆகுமா? என்று கேள்.

இன்றைய ஆதினங்கள் அந்தனி போன்ற துறவுகொண்டு தூய்மையான தொண்டாற்ற முன்வருவாரா என்று கேள்.

சிவனருளால், எமது காலம் வரையில், இந்தச் சுகபோகம் நிலைத்து இருந்தால்போதும் என்று எண்ணுவோரும், விடை ஏறும் பெருமானுடைய அருளால், வழக்கும் வல்லடியும் தாக்காதிருந்தால்போதும் என்று எண்ணுவோரும் துறவிகளாகத் "தர்பார்' நடத்த அல்லவா காண்கிறோம்.

தம்பி, நான் ஏட்டிலே சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். உனக்கும் அப்படித்தான் தோன்றும், தேடினால் கிடைப்பார்களா என்று எண்ணுவதைவிட, தம்பி நாம் அப்படிப்பட்ட "துறவிகளாகிவிட வேண்டும். குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது. துணைவி இருப்பாள், நமது தொண்டுக்குத் துணைபுரிய. குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த. தொழிலில் ஈடுபடுவோம். வாழ்க்கை நடத்த, ஆனால் உடமைகளுக்குக் கட்டுப்பட்டுவிடாமல், தன்னலத்துக்கு ஆட்பட்டுவிடாமல், சுகபோகத்திலே ஆழ்ந்து விடாமல், வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா, என்ற கேட்கும் ஆற்றலையும், அத்கைய கேட்டினைக் களைந்திட அறப்போர் நடாத்தும் திறத்தினையும் பெற்ற, மடம் தேடாமல், தாவடம் அணிந்த சடம் ஆகாமல், காவி, தேடாமல், அதனுள் மறைந்திடும் காமி ஆகாமல், தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத்திலே இடம் பிடிக்க அல்ல நமது இதயத்திலே அன்புக்கு, இடமளித்து, அறநெறியை நாட்டிலே புகுத்தி, மக்களைப் புதியதோர் இன்பம் பெறச் செய்யும் புனிதத் தொண்டாற்றும் துறவியாக வேண்டும். நாட்டிலே இத்தகைய துறவிகளேஇன்று அவசரமாகத் தேவை. ஏழையின் அழுகுரலை எளியோரின் கண்ணீரை பதிகம் பாடியும் மணி அடித்தும் போக்கிட முடியாது, தம்பி! முடியாது. துறவிகள் வேண்டும், புதிய துறவிகள். வெள்ளை உடை போதும். காவி தேடி அலைய வேண்டாம். காவிகளைத்தான் பார்க்கிறோமே!

அளக நிரை குலைய விழி குவிய வளை கல கலென
அமுத மொழி பதறி யெழ அணியாரம்
அழகொழுகு புளகமுலை குழைய இடை துவளமிக
அமுத நிலை அதுபரவ அதி மோகம்
உள முருக வரு கலவி தரு மகளிர் கொடுமையெனு
முறுகபட மதனில் மதி அழியாதே

என்று உலகுக்கு உருக்கமாக உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள்! உபதேசம்!

நாம், தொண்டாற்றும் துறவிகளாக வேண்டும்.

தருமபுரத்தையும் கண்டுவிட்டு, அந்தனி ஜான் என்ற ஏட்டையும் படித்த பிறகு, இந்த எண்ணந்தான் எனக்கு ஏற்பட்டது.

அன்புள்ள,

4-9-1955