அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உள்ளுணர்வு
1

இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்!
காங்கிரசார் மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்!
பட்ட கடனையும் கட்ட முடியவில்லை! புதிய கடனையும் பெற முடியவில்லை!
கழகம் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண முயல்கிறது!
தொகுதி உடன்பாட்டுக்கு என் தூய்மையும் நேர்மையுமே தகுதிகள்!

தம்பி!

எப்படி வாழ்வேன் இனிமேல்!
ஏன் பிறந்தேன் இப்புவியில்!
ஏழைக்கு ஏது இன்பம்!
உழைக்கிறேன், உழல்கிறேன்!
வாழ வழியின்றித் திகைக்கிறேன்!
முதுகெலும்பு முறிய மூட்டை சுமக்கிறேன்!
குடும்பம் தவிக்கிறது, குமுறிச் சாகிறேன்!
தற்கொலை தவிர வேறு வழி தெரியவில்லை.
சாவே! வா! சர்வேசா! அழைத்துக்கொள்!

இவ்விதமான "ஓலம்' நாட்டிலே மிகுந்துவிட்டிருக்கக் காண்கின்றோம்.

வயலை வளமாக்குகிறான், அவன் வாழ்வோ "பாலை'யாகிக் கிடக்கிறது.

மலையைக் குடைகிறான்; தேக்கம் அமைக்கிறான்; பாதை போடுகிறான்; பல்வேறு பொருளை உற்பத்தி செய்கிறான்; அவனோ பசியுடன் போராடுகிறான்; பட்டினியால் தாக்கப்படுகிறான்.

காலமெல்லாம் உழைக்கிறான், கண்ணீர் வடிக்கிறான், உழைப்பின் விளைவுகள் வேறு எங்கோ சென்று முடங்கிவிடக் காண்கிறான், கலக்கம் கொள்கிறான்.

அணி அணியாகத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள், ஆலைச் சங்கு அலறியதும்; நெஞ்சற்ற இயந்திரங்களை நடத்திச் செல்கிறார்கள்; நேர்மையற்ற முதலாளிகள் கொழுத்திட இலாபத்தைக் குவித்துத் தருகிறார்கள்; குடும்பத்திற்குத் தேவைப்படும் ஊதியமும் கிடைக்கப் பெறாது நொந்து கிடக்கிறார்கள்.

நீதி எங்கே? என்று கேட்கிறார்கள். எமது நலனைக் காத்திடும் நேர்மையாளர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். பெருமூச்சு தவிர வேறு எந்த ஒலியும் பதிலாகக் கிடைக்காது தவிக்கிறார்கள்.

வேலை! வேலை! வேலை! ஓயாது வேலை! உடலையும் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்திடும் கொடுமை நிறைந்த வேலை! எல்லாம் ஒரு கவளம் சோற்றுக்காக! அதுவும் கிடைக்காது தேம்புகின்றனர்;

கொளுத்தும் வெய்யில்! கொட்டும் பனி! இடி! மின்னல்! பெருமழை! - எதையும் தாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர். பசியைத் தாங்கிக்கொள்ள முடியாதே, பட்டினி கிடக்கும் மனைவி மக்களைக் காத்திட வேண்டுமே என்ற உணர்வு சவுக்காகி விடுவதால்!

புதிய புதிய தொழிற்கூடங்கள் எழக் காண்கின்றனர்; புது மெருகு பெற்றிடும் பூமான்கள் வளரக் காண்கின்றனர்.

காகிதம் செய்வோம், ஆயுதம் செய்வோம், இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோம், எண்ணற்றப் புதுப் பொருள் சமைத்திடுவோம், செல்வம் பெருகிடச் செய்வோம், நமக்கு உரிய பங்கினைப் பெற்று வாழ்விலே சீர் பெற்றிடுவோம் என்று நம்பிப் பாடுபடுகின்றனர். மாடாக உழைத்து ஓடாகிப்போவதன்றி, வேறு நிலை காணாது, இதற்கோ இத்தனை கடினமாக உழைத்தோம் என்று ஏக்கம் கொள்கின்றனர்.

உழைப்பின் விளைவுகளாகப் பல பொருள் மின்னிடக் காண்கின்றனர் நாட்டிலே. வீட்டிலேயோ பசிக் கொடுமையால் பஞ்சடைந்த கண்ணினராகிக் கிடக்கின்றனர்.

எமக்கு வாழ்வு அளித்திடத்தக்க அரசு இல்லையே! எம்மை வாழவைத்திடா இந்த அரசினை எங்ஙனம் எமது அரசு என்போம்! நல்லரசு என்று எப்படி இதனைக் கூறுவோம் என்று கேட்கின்றனர், விம்மலுக்கு இடையில்.

ஆண்டுக்கோர் முறையோ நமது அரசு! நல் அரசு! பொது நலம் பேணிடும் அரசு! புதுவாழ்வு தந்திடும் அரசு! ஜனநாயக அரசு! சோஷியலிசம் தந்திடும் அரசு! - என்று சிந்துபாடி, கொடி ஏற்றுகின்றனர், கோலாகல விழா நடத்துகின்றனர்.

புள்ளி விவரங்களை, பளபளப்பும் வழவழப்பும் மிக்க ஏடுகளில் அச்சடித்து வழங்குகின்றனர்!

புதிய தொழில் முயற்சிகளைப் பாராட்டி அமைச்சர்கள் பேருரை ஆற்றுகின்றனர்.

நாட்டுச் செல்வத்தைப் பெருக்கிடுவீர்-உற்பத்தி முதலில், உரிய பங்கு - பிறகு என்று தத்துவ விளக்கம் தருகின்றனர் பேராசிரியர்கள்.

உலகின் பல பகுதிகளிலிருந்து புதுப் புது யந்திரங்கள், விஞ்ஞான நுணுக்க முறைகள், செயல் திறமைகள் தருவிக்கப்படுகின்றன. அதன் பயனாக ஒன்று ஒன்பதாகிறது, வளம் பெருகிக் கொண்டு வருகிறது என்று விளக்கமளித்துப் பேசுகின்றனர் அமைச்சர்கள்!

தொழில் வளம் மிக்க நாடாகிக்கொண்டு வருகிறது நமது நாடு; நமது நாட்டு உற்பத்திப் பொருள் வெளிநாட்டுச் சந்தை களுக்குச் செல்கின்றன; வெளிநாட்டுத் தொழில் விற்பன்னர்கள் நம் நாட்டு நுண்ணறிவினையும் தொழிலார்வத்தையும், தொழிலாளரின் தனித் திறனையும் வெகுவாகப் பாராட்டுகின்றனர் என்ற தேன் துளிகளைத் தெளிக்கின்றனர் நாடாளும் நல்லோர்கள்!

ஜெர்மனியே வியந்து பாராட்டுகிறது; ரμயர்ன்வ ஆர்வத்துடன் விரும்புகிறது; இங்கிலாந்தே இன்னும் அனுப்புக என்று கேட்கிறது; அந்த அளவுக்கு நமது பொருள்களுக்கு உலகிலே மதிப்பு மிகுந்திருக்கிறது; எல்லாம் எதனால்? காங்கிரசு ஆட்சியினால்! இதனை உணராமல் சிலர், எதிர்த்து வருகின்றனரே! என்ன மடைமை இது! என்ன கொடுமை இது! - என்று முழக்கம் எழுப்புகின்றனர், காங்கிரஸ் முத்திரையைப் பொறித்துக்கொண்டு நா வாணிபம் நடாத்திடக் கிளம்பிடுவோர்.

இந்தச் சிந்துக்கு இடையிலேதான் கிளம்புகிறது, ஐயோ! அப்பா! ஆண்டவனே! சாவு வரவில்லையே! ஏன் பிறந்து தொலைத்தீர்கள்! எங்காவது சென்று செத்துத் தொலையுங்கள்! - என்று அழு குரல்!

அவ்வப்போது இதழ்களிலே காணப்படும் "தற்கொலை' பற்றிய செய்திகள், நாட்டிலே கப்பிக்கொண்டுள்ள இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றன. காட்டி? கண்ணீர் வடிக்கிறோம்! கணநேரம் கலக்கம் கொள்கிறோம். அந்த நிலை நமக்கு வராமலிருக்க வேண்டுமே என்று கவலை கொள்கிறோம். பிறகோ? இந்த நிலையை மாற்றும் கடமை நம்முடையதாயிற்றே! இது மக்களாட்சிக் காலமாயிற்றே! நாமல்லவா "அரசு' அமைக்கிறோம்! அப்படி "அரசு' அமைப்பதிலே நாம் போதுமான அக்கறையும் திறமையும் காட்டினால் இந்த அவதிகளைப் போக்கிக் கொள்ளலாமே என்பது பற்றிய தீவிரம் காட்டுகின்றோமா? இல்லையே! இருந்திருப்பின் இத்தகைய இன்னலா தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும்?

தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள், அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித் தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும் இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்க முறையிலே பயன்படுத்திக்கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம். இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி, ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக்கொண்டுள்ளனர்.

நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக்கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும் கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும் குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும், இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு

மக்கள் தெளிவற்றவர்கள். துணிவற்றவர்கள். விலை கொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும்,

காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்றபோதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப்போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.

ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின் நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,

மக்களின் ஏழ்மை நிலைமை
எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும் தன்மை

என்பதிலேயே அதிகமான நம்பிக்கை கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறை பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் போதும் எழுப்பப்படும் பிரச்சினைகள், வெடித்துக் கிளம்பிடும் புகார்கள், கேட்கச் சகிக்காதனவாக உள்ளன.

அமைச்சர்களின் நடவடிக்கைகள், தொடர்புகள் கேலிக்குரியனவாக்கப்படுகின்றன

தம்பி! சின்னாட்களுக்கு முன்பு கிளறிவிடப்பட்ட ஒரு விஷயத்தைக் கூறலாம் என்று கருதுகிறேன். எதிர்க்கட்சியினர் எடுத்துக் கூறிய அந்தப் புகாரில் ஒரு பகுதியை சர்க்காராலேயே அடியோடு மறுத்துவிட முடியவில்லை.

ராஜஸ்தானத்து முதலமைச்சராக உள்ளவர் சுகாதியா என்பவர்.

திறமை மிக்கவர் என்றும், ஆட்களை வளையக் கட்டக் கூடியவர் என்றும் பாராட்டப்படுபவர்.

அவருடைய பேச்சிலேயும் அதைவிட அதிகமாக அவருடைய பார்வையிலேயும் மற்றவர்களைக் கவ்விக்கொள்ளும் தன்மை இருப்பதை நானே நேரடியாகப் பார்த்தேன்.

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தினர் ஜெய்பூரில் நடத்திய ஒரு கருத்தரங்குக்கு நான் சென்றிருந்தபோது, சுகாதியா ஒரு விருந்தளித்தார் தமது மாளிகையில்.

என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நீண்ட காலமாக என்னிடம் பழகியவர்போல கனிவு காட்டினார்.

"பாராளுமன்ற உறுப்பினர் அல்லவா அண்ணாதுரை! ராஜ்யங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் பறித்துக்கொண்டுபோய் மத்திய சர்க்காருக்குக் கொடுத்துவிடுவாரே!'' என்று வேடிக்கை யாகக் குறிப்பிட்டார்.

"இல்லை ஐயா! அதற்கு மாறாக நான், ராஜ்யங்களுக்கு முழு அளவு அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற கருத்துள்ளவன்'' என்று கூறினேன். உடனே மிக்க ஆர்வம் காட்டி, "எனக்கும் அதே கருத்துத்தான்!'' என்று கூறினார். விவரம் பேசிடலானார்.

எவரிடமும் இலகுவாகப் பழகிடும் இயல்பு படைத்த சுகாதியா ஒரு முறை தமது மாநிலத்து கனவான் ஒருவர், லால்பகதூர் அவர்களைத் தங்கத்தால் நிறுத்து அந்தத் தங்கத்தை நாட்டுப் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை தர இசைவதாகவும், லால்பகதூர் அதற்கு ஒரு நாள் குறிப்பிட்டுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்தத் "துலாபாரம்' நடைபெறவில்லை; லால்பகதூரும் இன்று இல்லை; ஆனால் வெளியாகி இருக்கும் பயங்கரமான உண்மை என்னவென்றால்,

துலாபாரம் செய்ய விரும்பிய கனவான், தங்கக் கள்ளக் கடத்தல் செய்பவர் என்றும், அந்த கள்ளக்கடத்தல் தங்கத்திலே ஒரு பகுதியைத்தான் துலாபாரம் என்ற பெயராலே சர்க்காருக்குக் கொடுத்துவிட்டு, தன்மீது சட்டம் பாயாமல் தடுத்துக்கொள்ள தந்திரத் திட்டமிட் டிருந்தார் என்பதும் இப்போது வெளியாகி இருக்கிறது.

இதிலே சுகாதியாவுக்குத் தொடர்பு உண்டா? பங்கு உண்டா? உடந்தையாக இருந்தாரா? என்பவைபற்றி எதிர்க்கட்சியினர் கிளப்பியவை ஆதாரமற்றவை, வீண் புகார் என்று எடுத்துக் காட்டப்பட்டன என்றபோதிலும், குறிப்பிட்ட அந்தக் கனவானின் மாளிகையும் தோட்டமும் சோதனையிடப்பட்டு, ஐம்பது தங்கக்கட்டிகள் - செங்கற்கள் வடிவம் கொண்டவை - கைப்பற்றப்பட்டன என்பது, சர்க்காரே ஒப்புக்கொண்டாகவேண்டிய உண்மையாகிவிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கள்ளக் கடத்தல் பேர்வழிகள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். அவர்களிலே பலர், காங்கிரசுக் கட்சியைக் காத்திடும் "தருமவான்'களாக இருப்பதும் மெய்ப்பிக்கப்படுகின்றன.

இன்று எழுத உட்காருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இதழொன்றில் பார்த்தேன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், செல்வாக்குமிக்க தொழிலதிபருமான ராம்ரதன்குப்தா என்பவரின் தொழிற்கூடம் ஒரு நாள் முழுவதும் இரகசியத் தகவல் இலாகாவினரால் சோதனையிடப்பட்டது என்ற செய்தியினை.

தொழிலதிபர்களின் தோழமையைப் பெற்றிருப்பதால் கோடிக்கணக்கில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நன்கொடைத் தொகை கிடைத்திருப்பதைக் காங்கிரசுத் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான கணக்கும் வெளியிடப்பட்டுவிட்டிருக்கிறது.

ஆக ஒரு புறத்திலே காங்கிரஸ் ஆட்சி ஏழையைத் தத்தளிக்கவிட்டிருக்கிறது. மற்றோர் புறத்திலே கள்ளக் கடத்தல் பேர்வழிகள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நன்கொடை திரட்டி அவர்களை ஆதரிக்கும் விதமான ஒரு சர்க்காரை நடத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.

இவ்வளவு வெளிப்படையாக உண்மை தெரிந்திருந்தும், மக்கள் ஆத்திரத்தால் தம்மைக் கவிழ்த்துவிடுவார்களே என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு எழக் காணோம். இது வேதனை தரும் விசித்திரமல்லவா?

தொழில் துறையிலும் ஆதிக்கம் வைத்துக்கொண்டு, ஆட்சித்துறையிலும் தொடர்பு வைத்துக்கொண்டு ஒன்றுக்கு மற்றொன்று துணையாக இருக்கும்படி செயலை அமைத்துக்கொள்ளும் சீலர்களும் இருக்கின்றார்கள்.

ஒரிசா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவரும், எந்த நேரத்திலும் முதலமைச்சர்களை உண்டாக்கித் தமது கரத்தில் வைத்துக்கொள்ளக் கூடியவருமான பட்நாயக் என்பவர் பற்றிய செய்திகளைத் தம்பி! அடிக்கடி காண்கின்றாய்.

ஒரு சில வருடங்களிலே பல கோடி ரூபாய்களைத் திரட்டிய இலாபவேட்டைக்காரர் இந்த பட்நாயக்.

இவர் பற்றிய புகார்கள் பல! விசாரணைக் குழுவிடம்கூட ஒப்படைக்கப்பட்டன இந்தப் புகார்கள்.

இந்த விசாரணையின்போது வெளிவந்த உண்மைகள், சர்க்காரின் இரகசியங்களாக இருந்துவந்தன. எதிர்க் கட்சியினர் எப்படியோ அந்த விசாரணைக் குறிப்பேட்டைக் கூட வெளியே கொண்டுவந்துவிட்டனர்! பாராளுமன்றத்திலேயே அதனை வழங்கவும் செய்தனர்.

இத்தகைய "புகார்களை' புகழாரமாகக் கொண்டுள்ள இந்தப் பெரியவரைத்தான், ஒரிசாவில் காங்கிரசுக்கு வெற்றி பெற்றளிக்கும் பொறுப்பேற்கும் தலைவராகக் காமராஜர் நியமித்துள்ளார்.

புகார்கள் பலமாக! ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர் காமராஜரின் அரவணைப்பு இவருக்கு!

எந்த அதிகாரி இந்த நிலையில் பட்நாயக்மீது நெருங்கத் துணிய முடியும்?

விசாரணையா நடத்தப்போகிறீர்கள்? பைத்தியக்காரர்களே! என்னிடம் ஒரிசாவையே ஒப்படைத்திருக்கிறார் காமராஜர்! நான் நினைத்தால் ஒரிசாவில் காங்கிரசை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எனக்கு உள்ள அந்த ஆற்றலை அறிந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் முழுப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத் திருக்கிறார்! காங்கிரசின் மந்திராலோ சனைக் கூடத்தில் எனக்கு நடு இடம் தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட என்மீது உள்ள புகார்களை விசாரிக்கவா துணிகிறீர்கள்? - என்று பட்நாயக் கேட்டிடின், எந்த அதிகாரி அஞ்சாதிருக்க முடியும்?

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று கூறிட ஒரே ஒரு நக்கீரனைத்தானே காட்ட முடிகிறது, நேர்மை அரசோச்சிய நாட்களிலேயே! இன்று யாராக இருந்தாலும் உரிய விலை கொடுத்தால் வாங்கிவிட முடியும் என்ற பேச்சு மிகச் சாதாரணமாகப் பரவியுள்ள நாட்களல்லவா! பட்நாயக்குக்குக் காமராஜர் தந்துவிட்டுள்ள "இடம்' எத்தனை உயர்வானது என்பதைப் பார்த்த பிறகும், பயப்படாமல், விசாரணை நடத்திட எத்தனை அதிகாரிகளைக் காண முடியும்.

இவ்வளவு புகார்கள் எவர்மீது எழுந்துள்ளனவோ அவரிடமா, இத்தனைப் பொறுப்பை ஒப்படைப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ், ஒரிசாவில் வெற்றி பெறவேண்டுமென்றால், பட்நாயக்கிடம் பொறுப்பை ஒப்படைப்பது தவிர வேறு வழி இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

புகார்கள் அவர்மீது எழும்பியுள்ளது மட்டுமல்ல; ஏராளமான தொகை அவர் செலுத்தவேண்டுமாம்; வருமான வரியாக! அதனை வசூ-க்க முடியவில்லை இலாகாவினால்; இன்னமும் அதுபற்றிக்கூடக் கேட்கிறார்கள். பதில் என்ன?

அமைச்சர்கள் அளித்திடும் பதில் வசூலைத் துரிதப்படுத்த முயற்சி எடுத்துக்கொள்கிறோம் என்பது.

பட்நாயக் தரும் பதில்? காங்கிரஸ் ஆளவந்தார்களையே கேலி செய்யும் விதமான பதில்! "வருமான வரி பாக்கியா? கேட்கட்டும் தருகிறேன்; நியாயமாக இருந்தால்! இருக்கவே இருக்கிறதே கோர்ட்டு! அங்குச் சந்திப்போமே'' என்கிறார்.

இவை மட்டுமல்ல தம்பி! பட்நாயக்கின் பல தொழில் அமைப்புகளிலே ஒன்று, க-ங்கா விமான கம்பெனி. இந்தக் கம்பெனியிடம், வடகிழக்கு எல்லைப் பகுதியில் போர்க் காலத்தில் பொருளை எடுத்துச் செல்லும் அலுவல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம், முறைப்படி இல்லை என்றும், வேறு கம்பெனிகள் எதிர்பார்த்ததைவிட அதிகத் தொகை க-ங்கா கம்பெனிக்கு சர்க்கார், கட்டணமாகத் தந்தார்கள் என்பதும், ஒப்பந்தப்படி இந்தக் கம்பெனி ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியானபடி செய்யவில்லை என்பதும் இதனாலே சர்க்காருக்கு வீண் நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதையும் பொதுக் கணக்குக் கமிட்டி எடுத்துக் காட்டி சர்க்காரை இடித்துரைக்கிறது.

தர வேண்டிய தொகையைவிட அதிகப் பணம், இந்தக் கம்பெனிக்கு தரப்பட்டது என்றும் கமிட்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.

இது கேட்டு பட்நாயக் பதறினாரா? பாவிகளா! இப்படியா பழி சுமத்துவது? என்னுடைய கட்சி நடத்திச் செல்லும் சர்க்காருக்கு நானா வீண் நஷ்டம் உண்டாக்குவேன்? என்னை என்ன அத்தகைய சுயநலக்காரன் என்றா எண்ணிக்கொண்டீர்கள்? பணம்தான் பெரிது என்று நானா கருதுபவன்? என்றெல்லாம் கூவினாரா? இல்லை!

பத்திரிகை நிருபர்கள் இது பற்றிக் கேட்டபோது பட்நாயக் துளியும் பதறாமல் அதிகப் பணம் கொடுத்து விட்டதா சர்க்கார் க-ங்கா கம்பெனிக்கு? சுத்த அதிர்ஷ்டக் கட்டையான சர்க்கார் ஜாக்ரதையாக நடந்துகொள்ள வேண்டும்! என்று கேலி பேசியிருக்கிறார்.

ஆட்சி நடத்தும் கட்சியிடம் நேசத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதனைப் பயன்படுத்தி தொழில் துறையிலே ஆதிக்கம் ஏற்படுத்திக்கொண்டு, முறை தவறுகளைத் துணிவுடன் செய்து, விசாரணை நடத்தப்படும் கட்டம் பிறந்திடின் உருட்டி மிரட்டிச் சர்க்காரைச் செயலற்றதாக்கி தமது செல்வாக்கு காங்கிரசுக்குப் பயன்படவேண்டுமானால், எந்தவிதமான கட்டு திட்டமும் தமக்கு விதிக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டிடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் கோடீஸ்வரர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்களை ஊட்டி வளர்த்துவிட்டதே காங்கிரஸ் கட்சிதான். இன்று அவர்கள் புருவத்தை நெரித்தால் காங்கிரசின் மூலவர் களுக்கே குலைநடுக்கம் எடுக்கிறது.

தம்பி! விளைநிலங்களிலே புகுந்து களவாடுபவர்களைக் கண்டுபிடிக்கவும், விரட்டவும், காவலாளிகளையும், வேட்டை நாய்களையும் அமர்த்துகின்றனர் பண்ணை முதலாளிகள். இந்தோனிμயர்வில், வயல்களிலே காவல் புரியவும், களவாடுபவர் நுழையாது தடுத்திடவும், நுழைந்திடின் விரட்டிடவும், பயிற்சி அளிக்கப்பட்ட புலிகளை அமர்த்தி இருக்கிறார்களாம்! விசித்திரம், ஆனால் உண்மை.