அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உள்ளுணர்வு
2

புலி பதுங்கிப் பாயும். மோப்பம் பிடித்து ஆளைத் தாக்குமல்லவா? அப்படிப்பட்ட புலிகளை வயல்களிலே காவலுக்கு வைக்கிறார்களாம்! களவாட வருபவனை புலிகள் கண்டுபிடித்து, கடித்துப் போடும் அல்லவா? அதற்காக!

பயிற்சி அளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், களவாட வருபவனைத் துரத்திவிடும். அல்லது இலேசாகக் காயம் உண்டாக்கி விரண்டோடச் செய்திடும். புலி ஆள் பிடிபட்டால் விட்டா வைக்கும்? விரட்டி அடிப்பதோடா நின்றுவிடும்? கடித்துக் குதறி, இரத்தத்தைக் குடித்துவிடும்! ஆள் பிழைப்பானா?

புலியை ஏவி ஆளைச் சாகடிக்கும் கொடுமையை, வயலைக் காத்திடும் முறை என்று கருதி, இந்தோனிμயர்விலே சிலர் மேற்கொண்டுள்ளனர் என்று ஒரு இதழில் படித்தேன். அந்த இதழ், இந்தக் கொடுமையைக் கண்டித்து எழுதியிருந்தது.

காங்கிரசின் மூலவர்கள், தமது கட்சிக்குத் தேர்தலிலே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கின்றனர்!!

இந்த மனிதப் புலிகள் ஏழையின் குருதியைக் குடித்துச் சுவை கண்டு கொழுத்துக் கிடக்கின்றன.

வெறி முற்றிய நிலையில் இந்த மனிதப் புலிகள், தம்மை ஊட்டி வளர்ப்பவர்களே சிறிது உருட்டி மிரட்டினால், உறுமிடவும், மேலே பாய்ந்து கடித்திடவும் தயங்கப்போவதில்லை.

என்னை மனிதப் புலிகள் விரட்டிவிட்டன என்று முன்பு டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறினார். கவனமிருக்கிறதல்லவா?

இப்போது வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளான குல்சாரி லால் நந்தாகூட, பெரிய முதலாளிகளின் சதி காரணமாகவே தனக்குப் பதவி பறிபோயிற்று என்ற கருத்துப்படப் பேசி இருக்கிறார்.

ஆகவே காங்கிரசுக் கட்சியை ஆட்டிப் படைக்கும் ஆதிக்கத்துடன் முதலாளிகள் உள்ளனர் என்பதும், அவர்களிலே கள்ளக் கடத்தல் பேர்வழிகளும், ஆட்சியாளர் களின் நேசத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களும், சட்டத்திற்கு ஒவ்வாத முறையிலே பணம் திரட்டி சட்டத்தின் பிடியிலே சிக்கிடாது தப்பித்துக் கொள்பவர்களும், சர்க்காருக்கு விரயம் ஏற்படுத்துபவர் களும், சர்க்காருக்கு அஞ்ச மறுப்பவர்களும், எமது தயவில்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சி சர்க்கார் அமைக்க முடியும் என்று இறுமாப்புடன் கேட்பவர்களும் இருக்கின்றனர், கொட்டமடிக்கின்றனர்.

இந்த நிலையில் மக்களின் உரிமையைக் காத்திடவல்ல ஜனநாயகமோ, வாழ்வினைச் செம்மைப்படுத்தவல்ல சோஷியலிசமோ எப்படிக் காப்பாற்றப்பட முடியும்? எங்ஙனம் வெற்றி பெற முடியும்? இத்தகையவர்கள் குறித்தும், இவர்களின் போக்கினாலே ஏற்படும் பெரு நஷ்டம் குறித்தும், பாராளுமன்றத்திலே அடிக்கடி பேசுகிறார்கள். தயக்கம் கலந்த சமாதானம்தான் தர முடிகிறதே தவிர காங்கிரஸ் அமைச்சர்களால், இவைகளை அடியோடு மறுத்துப் பேச முடியவில்லை.

இன்று இதழிலே பார்த்தேன், மற்றும் ஒரு ஊழல் என்ற தலைப்பிலே எழுதப்பட்டுள்ள ஒரு கண்டனத்தை.

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான மோட்டார் டையர்கள், சுமார் 25 இலட்ச ரூபாய் பெறுமானமுள்ளவை, சர்க்கார் நடத்தும் வணிகத் துறையினால் விற்கப்பட்டிருக்கிறது. இந்த டையர்கள் பழுதானவை! இவை இலாயக்கில்லை என்று பாதுகாப்பு அமைச்சகத் துறையினரே அறிவித்துமிருந்தனர். என்றாலும் அந்த அறிவிப்பை வேண்டுமென்றே அனுப்பவேண்டிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்காமல், கெட்டுப்போன டையர்களை பாதுகாப்பு இலாகாவின் தலையிலே கட்டிவிட்டனர்!

இந்த கெட்டுப்போன டையர்களை ஐரோப்பிய நாடொன்றில் இருந்து தருவிக்கும் ஏஜண்டாக வேலை பார்த்தது ஒரு தனிப்பட்ட முதலாளியின் கம்பெனி.

அந்தக் கம்பெனியுடன் கூடிக்கொண்டு, கெட்டுப்போன டையர்களைப் பாதுகாப்பு இலாகாவுக்கு விற்று, பொருள் நஷ்டம் ஏற்படுத்துவதற்கு, சர்க்காரின் வணிகத்துறை உடந்தை யாக இருந்திருக்கிறது.

ஏஜண்டு வேலை பார்த்த கம்பெனி, டையர்களை சோதனை பார்த்த அதிகாரி, விற்ற அதிகாரி ஆகியவர்கள் கூட்டாக இந்த மோசடியைச் செய்தனர் என்று பொது கணக்குக் கமிட்டி சுட்டிக் காட்டி கண்டித்திருக்கிறது.

இதுபோல நிர்வாகம் மோசமாகிக்கொண்டு வருவது எடுத்துக் காட்டப்படுகிறது.

காங்கிரஸ் சர்க்காரின் பெரிய சாதனை என்று விளம்பரம் செய்யப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள்பற்றி அவர்களே முன்பு காட்டிய ஆர்வத்தைக் காட்ட முடியவில்லை. ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன் ஏழைகளுக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டுள்ளனர். இப்போது அவர்களிலேயே பலர் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்ததாகத் தீட்டப்படவில்லை என்றும், அவைகளை நிறைவேற்றுவதிலே போதுமான திறமை காட்டப்படவில்லை என்றும், திட்டங்களுக்காகச் செலவிடப்படுவதற்காகக் குறிக்கப்பட்ட பணம் மட்டும் அதே அளவு செலவாகி விட்டிருக்கிறதே தவிர, திட்டத்தின் மூலமாக அடையப் போவதாகச் சொன்ன "இலக்குகளை' அடைய முடியவில்லை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

நிதி ஆண்டு 1965 - 66

திட்டமிட்டது
கிடைத்தது
விவசாயப் பொருள்
100 மிலியன் டன்
74 மிலியன்
எண்ணெய் வித்து
9.8 மிலியன் டன்
7 மிலியன்
சணல்
62 இலட்சம் பேல்கள்
33.6 இலட்சம் பேல்கள்
பருத்தி
70.55 இலட்சம் பேல்கள்
52.65 இலட்சம் பேல்கள்
பொறுக்கு விதைத் திட்டம்
204 மிலியன் ஏக்கர்
164 மில்லியன் ஏக்கர்
பாசன வசதி
29.5 மில்லியன் ஏக்கர்
18 மிலியன் ஏக்கர்
மின்சார சக்தி
29.5 மிலியன் கிலோவாட்
10.5 மிலியன் கிலோவாட்
எஃகுப் பொருள்
9.2 மிலியன் டன்
6.6 மிலியன் டன்
பயிர்ப் பாதுகாப்பு
50 மிலியன் ஏக்கர்
40 மிலியன் ஏக்கர்
பத்திரிகைத் தாள்
1.20 இலட்சம் டன்
30,000 டன்
சிமிட்டி
13 மிலியன் டன்
10.4 மிலியன் டன்
நிலக்கரி
98.6 மிலியன் டன்
66 மிலியன் டன்
இரும்புக்கனி
30 மிலியன் டன்
16 மிலியன் டன்
சர்க்கரை ஆலை இயந்திரம்
140 கோடி ரூபாய் மதிப்பு
77 கோடி ரூபாய்
காகித ஆலை இயந்திரம்
65 கோடி ரூபாய் மதிப்பு
18 கோடி ரூபாய்
டிராக்டர்கள்
10000
4000
வீடுகள்
4 இலட்சம்
2.2 இலட்சம்
டீசல் என்ஜின்
1.66 இலட்சம்
84,800

போக்குவரத்து வண்டிகள்
60,000

40,000

உடனடியாகப் பலன் தர முடியாத திட்டங்களுக்காகப் பெரும் பணத்தைச் செலவிடுவது, பண வீக்கத்தை உண்டாக்கி, அதன் காரணமாக விலைகளை அதிகப்படுத்தி, ஏழைகளை வாட்டி வதைக்கிறது என்பதையும் அவர்களே இப்போது ஒப்புக்கொண்டு பேசுகின்றனர்.

பெரிய அளவிலேயே திட்டங்கள் இருந்தாக வேண்டும் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டாக வேண்டும் என்று இப்போது பேசுகின்றனர்.

உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் நீண்ட காலமாகக் கூறிக்கொண்டிருப்பது இப்போதுதான் இவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டிலே தலைமைப் பேருரையில் காமராஜரே இது பற்றிப் பேசி நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காகக் குறிக்கப்படும் தொகையின் அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும், உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களையே முதலிலே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. பொருட்படுத்தியதாகக்கூடத் தெரியவில்லை.

திட்டத்துக்கான தொகை பெரிய அளவிலேயே அமைந்திருக்கிறது.

திட்டங்களும் உடனடிப் பலன் தருவனவாக அமைக்கவில்லை.

இவ்வளவுதானா என் பேச்சுக்கு நீங்கள் தரும் மதிப்பு, மரியாதை என்று காமராஜர் கேட்பதாகவும் தெரியவில்லை.

திட்டம் தீட்டுபவர்கள் தமது காரியத்திலே குறுக்கிடும் தகுதி காமராஜருக்கு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லையே தவிர நடவடிக்கை மூலம் அதைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள்.

நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் நாட்டுக்குப் பெரிய வளம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு விடாதீர்கள் என்று நமது மாநிலத் தொழிலமைச்சர் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

இந்த இலட்சணத்திலே உள்ள இந்தத் திட்டத்துக்கு, வெளி நாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய கடன் தொகை, உதவித்தொகை எந்த அளவு இருக்கும், எந்தெந்த முறையிலே கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட முடியவில்லை.

அமைச்சர்கள் "யாத்திரை' சென்றவண்ணம் உள்ளனர்; வரம் தருவதிலே காட்டும் ஆர்வம் நிறைவேற்றப்படுவதிலே காட்ட, பல நாடுகள் முன் வரவில்லை.

உதவி அளித்திட உருவாகியுள்ள அமைப்பு அடிக்கடி கூடுகிறது, விவாதிக்கிறது; புதிய புதிய பிரச்சினைகளை எழுப்புகிறது; உதவி அளித்திடுவதிலே தீவிரம் காட்டக் காணோம். கொடுத்த கடன் பெரிய அளவு - திருப்பித் தந்திடும் வாய்ப்பு எந்த வகையில் இருக்கிறது என்று உதவி தந்திடும் நாடுகள் பேசிக்கொள்கின்றன.

அமெரிக்காவால்தான் இவ்வளவு பெரிய தொகை கடனாகவோ, உதவியாகவோ தர முடியும் என்று பிற நாடுகள் கூறுகின்றன.

எல்லாப் பளுவையும் எம்மையே சுமக்கச் சொல்லாதீர்கள்; மற்ற நாடுகளும் தத்தமது வசதிக்கேற்ப உதவித் தொகை தந்திட வேண்டும் என்று அமெரிக்கா பிற நாடுகளுக்குக் கூறுகிறது.

வாணிபம் நடாத்தி நொடித்துப்போய்விட்டவனிடம், பச்சாதாப உணர்ச்சி காட்டி, அவன் ஒரே அடியாக அழிந்து போய்விட்டால், முன்பு கொடுத்த கடனே திருப்பிப் பெற்றிட முடியாது. ஆசாமியை நடமாடவிட்டு வாணிபம் நடத்தவிட்டால்தான், ஏதாகிலும் சம்பாதித்து கடனை அடைக்க முடியும், அதற்காக அவன் வாணிபம் நடத்துவதற்குத் தேவைப்படும் பணம், கடனாகக் கொடுத்துத்தானே ஆகவேண்டும் என்று பெரிய புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசுவதுபோல இந்தியா பற்றி பணம் படைத்த நாடுகள் இன்று பேசுகின்றன.

நாட்டின் தன்மானம் மிகவும் சீரழிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.

நாணயத்தின் மதிப்பைக் குறைத்தது, இந்தச் சீரழிவை அதிகமாக்கிவிட்டிருக்கிறது.

சொல்வதற்குக் கூச்சமாகக்கூட இருக்கிறது. பாகிஸ்தானுக்குக் கடன் தருவதிலே இருக்கும் ஆர்வமும் கொடுத்த கடனைத் திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கும் அளவுக்கு இந்தியா விஷயத்திலே பிற நாடுகளுக்கு ஏற்படவில்லை.

பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரம் நலிவற்றதாகக் கருதப்படுகிறது; இந்தியாவின் பொருளாதார நிலைபற்றி அவ்விதமான எண்ணம் இல்லை.

சென்ற திங்கள் டில்லியில் நடைபெற்ற கலவரங்களை பற்றிக் கவலை தெரிவித்து எழுதிய வெளிநாட்டு இதழ்களெல்லாம்,

இத்தனைக் குழப்பத்தில் நாடும் நிர்வாகமும் இருக்கும்போது, மேலும் மேலும் கடன் கொடுத்தபடி இருக்கலாமா என்ற கேள்வியே எழுப்பிவிட்டிருக்கின்றன.

ரூபாயின் மதிப்பைக் குறைப்பதன் மூலம், ஏற்றுமதியை அதிகமாக்கிவிடலாம், அதன் பலனாக அன்னிய நாட்டுச் செலாவணித் துறைக்கு வலிவு தேடிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
ஏற்றுமதி வளரவுமில்லை.
இறக்குமதி குறையவும் இல்லை.

நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததாலே, முன்பு நாலாயிரம் கோடி என்ற அளவுக்கு இருந்து வந்த கடன் - வெளிநாடுகளுக்குச் செலுத்தவேண்டிய கடன் - இப்போது ஐயாயிரம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும்,

இந்த ஆண்டு வட்டியாக 120 கோடி ரூபாய் கட்டித் தீர வேண்டும் என்றும் இந்தியப் பேரரசின் நிதி அமைச்சர் சவுத்ரி, நாலு நாட்களுக்கு முன்பு தெரிவித்துமிருக்கிறார்.

இதனைக் கவனிக்கும்போது, காங்கிரசாட்சி

பட்ட கடனையும் கட்ட முடியாமல்,

புதிய கடனையும் பெற முடியாமல் திண்டாட்டத்தைத் தேடிப் பெற்றுக்கொண்டு விட்டிருக்கிறது என்பதும் விளக்கமாகிறது.

இப்படி எந்த முனையிலிருந்து பார்த்திடினும், எந்தத் துறையை எடுத்துப் பார்த்திடினும், உற்சாகமோ நம்பிக்கையோ கொள்வதற்கு முடியாத நிலை இருந்து வருவது தெரிகிறது.

கவலையும், கலக்கமும், கசப்பும் மிகுந்திருக்கிறது மறைக்க முடியாத அளவில்!

இந்த நிலைமையிலும், மக்களிடம் "ஓட்டு' வாங்கிட முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம்? ஏழைகளை மயக்கிடும் சக்தியைத் தேடிப் பெற்று கொண்டுள்ளோம் என்பதும், நாட்டிலே காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள சக்தி, ஓருருவாக இல்லாமல், பல கட்சிகளாக உள்ளன என்பதிலே ஏற்படும் தெம்புமேயாகும்.

பல்வேறு கட்சிகள் ஒரே நாளில் ஒன்றுபட்டு ஒரே கட்சியாக ஆகிவிடப்போவதில்லை.

காங்கிரசிலிருந்து பிரிந்து வந்தவர்களேகூட புதிய தனிக் கட்சி அமைத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே உள்ள ஏதாகிலும் ஒரு கட்சியில் சேர்ந்து அதனை வலுவுள்ளதாக்கிடும் செயலில் ஈடுபடவில்லை.

இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும், தத்தமது எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் முதல் நோக்கமாகவே கொண்டு செயல்படுகின்றன.

காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பொது நோக்கத்தில் அவை அக்கறையும் ஆதரவும் காட்டுகின்றன என்றாலும், ஒன்றாகிவிட இசையவில்லை. இசைவது முடியாத தாகவும் இருக்கிறது.

ஆகவே அவை ஒன்றாகாமல், பலவாக நின்று ஓட்டுகளைப் பங்கு போட்டுக்கொள்ள முனைகின்றன; இதன் காரணமாகக் கிடைத்திடும் ஓட்டுகளில் அதிக அளவுள்ள ஓட்டுகள் நமக்குத்தானே கிடைக்கும், நாமே மீண்டும் ஆட்சிக்கு வந்து அமர்ந்துவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

கழகம், இந்த நிலை ஏற்படாது தடுத்திட இதய சுத்தியுடன் பாடுபட முனைகிறது. தோழமைத் தொடர்பு தேடுகிறது. தோழமைத் தொடர்பு தேடுவதாலே, நாங்கள் கேட்டிடும் தொகுதிகளை எமக்குத் தந்துவிட வேண்டும் என்று பிற கட்சிகள் கேட்பது கண்டுகூட கழகம் கவலைப் படவில்லை. ஆனால் கழகத்திடம் கேட்டுப் பெற்றிடும் இடங்களிலே வெற்றி பெற்றிடும் வாய்ப்பும் வலிவும் அந்தக் கட்சிகளுக்கு இல்லாத நிலையில், தொகுதிகளைக் கேட்கின்றனவே என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகிறது.

தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண வேண்டும் என்ற நிலை உருவாகாத முன்பேகூட, கழகம் வேண்டுமென்றே மும்முனைப் போட்டியை மூட்டிவிடக்கூடாது என்பதிலே அக்கறை காட்டி வந்திருக்கிறது.

இப்போது கழகம் கூடுமானவரையில், மும்முனைப் போட்டியை எந்த அளவுக்குத் தவிர்க்க முடியுமோ அந்த அளவு தவிர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே பணியாற்றுகிறது.

தொகுதி உடன்பாடு ஏற்பட முடியாத நிலையிலே கூட, மும்முனைப் போட்டியை மூட்டிவிடும் பாதகத்தையும் பழிச் செயலையும் மேற்கொள்ளக் கழகம் விரும்பப் போவதில்லை.

ஆனால் காங்கிரஸ் எதேச்சாதிகாரம், எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும் நிலைமை எப்படியும் தனக்குச் சாதகத்தைத் தேடித்தரும் என்ற கணக்கினைத்தான் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலைமை எந்த அளவுக்குக் கவலை தராததாக ஆக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வெற்றி பெற்றிட வாய்ப்பு இருக்கிறது.

இதிலே தம்பி! கழகத்துக்கு உள்ள பொறுப்பும் பங்கும் மிகப் பெரிது என்பதனை உணர்ந்து நடந்துகொண்டாக வேண்டும்.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே உருவம் கொண்டிட இயலாத நிலையில், நான் வலியுறுத்தி வந்திடும் விகிதாச்சார ஓட்டு முறை செயல்பட முடியாத நிலையில், எதிர்க்கட்சிகள், தமக்குள் தோழமைத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது ஒன்றுதான், மேற்கொள்ளக்கூடிய முறையாக இருக்கிறது. இந்த முறை வெற்றி பெறவேண்டுமென்பதற்காக நாம் நேர்மையுடன் நடந்துகொள்ள உறுதிகொண்டிருக்கிறோம். ஆனால் அதேபோது, அமையும் எந்த ஏற்பாடும் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தத்தக்க வலிவு எங்கெங்கு எவரெவருக்கு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே, தொகுதி உடன்பாடு அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.

இதன் மூலம் ஒரு பத்து இடங்கள் கழகத்துக்கு அதிகம் கிடைத்திட வேண்டும் என்பது அல்ல நமது நோக்கம். நிச்சயமாக அந்த எண்ணம் எழக்கூட இல்லை.

எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், உள்ள எதிர்க் கட்சிகளில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கழகந்தான் அதிக இடங்களிலே காங்கிரசை எதிர்த்திடவும் வீழ்த்திடவும் வலிவும் வாய்ப்பும் பெற்றிருக்கிறது என்பதனை எவரும் மறுத்திட மாட்டார்கள்.

எத்தனை இடங்கள் என்பது அல்ல பிரச்சினை. எந்த இடங்கள் என்பதுதான் பிரச்சினை. எந்தெந்த இடங்களில், நீண்டகாலமாகக் கழகம் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி காங்கிரசை வீழ்த்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறதோ, அந்த இடங்கள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே, காங்கிரசை வீழ்த்தும் காரியம் வெற்றிகரமாக முடியும்.

இந்த நோக்கத்திலே உள்ள தூய்மையையும் நேர்மையையும், பிற கட்சிகள் உணரும்படி செய்வதிலே எனக்குப் போதுமான திறமை கிடைக்குமா என்பதை என் மனத்தினைக் குடைந்திடும் கேள்வி.

இதிலே எழக்கூடிய சிக்கலையும் சங்கடத்தையும் நான் உணராமலில்லை.

காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான முறையினை வகுத்திட, தொகுதி உடன்பாட்டினை அதற்கு ஏற்றபடி அமைத்திட, பிற கட்சிகள் மட்டும், நம்பிக்கை வைத்து, என்னிடம் ஒப்படைக்க முன்வருமானால். . . !

பிற கட்சிகளிடம் என்னிடம் ஏற்பாட்டினை வகுத்திடும் பொறுப்பினை ஒப்புவித்துப் பாருங்கள் என்று கூறிடும் பெரிய நிலையும் செல்வாக்கும் எனக்கு இல்லை.

என்னுடைய தூய்மையையும் நேர்மையையும் மட்டுமே நான் தகுதிகளாகக் காட்ட முடியும்.

தொகுதிகளுக்கான உடன்பாட்டு ஏற்பாட்டினுக்கு மட்டும், எனக்குப் பொறுப்பினை, மனமுவந்தும் நம்பிக்கையுடனும் பிற தோழமைக் கட்சிகள் அளித்திடுமானால், வெற்றிக்குப் பிறகு அமைக்கும் ஆட்சியிலே, கழகம் பிற கட்சிகளுக்கு முன் வரிசை இடமளிக்கும் என்ற உறுதியைக்கூட நான் தர விரும்புகிறேன்.

காங்கிரசை வீழ்த்தியான பிறகு அமைக்கும் ஆட்சியிலே கழகத்துக்கு, அதன் வலிவுக்கும் எண்ணிக்கைக்கும் தகுந்த அளவு பங்கும் இடமும் கிடைக்குமா என்பதிலே எனக்கு இருக்கக்கூடிய அக்கறையைக் காட்டிலும் காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற முறையில், பல்வேறு கட்சிகளுக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துத் தருவதிலே என் நோக்கத்திற்கு மற்றக் கட்சிகள் நம்பிக்கையுடன் இசைவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதிலேதான் நான் மிகுதியான அக்கறை கொண்டுள்ளேன்.

என் இதயத்தைக் காணும்படி செய்திடும் வழி யாது என்பதறியாது திகைக்கின்றேன். காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான போர் முறையை வகுத்திடுவதாகக் கருதி தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதிலே என் கருத்தினைப் பிற கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களானால், வெற்றி பெற்றிட முடியும் என்ற ஓர் உள்ளுணர்வு வலிவுடன் இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்க ஓர் வாய்ப்பு அளிக்கும்படி தோழமைக் கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணன்,

11-12-66