அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உன்னால் முடியும்! - (2)
1

நந்தனாருக்கு வேதியர்; நமக்கோ காமராசர் !
மன அரிப்பின் விளைவு !
உழைக்கும் உத்தமர் நம்மிடம் !
கழகம் காமராசரைத் "தண்டால்' போட வைக்கிறது !

தம்பி!

உன்னிடம் ஒரு பாட்டுப் பாடிக் காட்டவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது; ஆனால், துணிவுவர மறுக்கிறது; என்னிடம் இத்தனை பரிவும் பாசமும் கொண்டுள்ள உனக்குச் சங்கடத்தைத் தந்திட மனம் இடந்தரவில்லை. ஆகவே, பாட்டுபற்றிக் குறிப்பு மட்டும் தருகிறேன்.

"சிதம்பர தரிசனமா! நீ அதைச் சிந்திக்கப்போமா...'' என்ற ஒரு பாட்டு உண்டு; நந்தனார் பற்றிய பாடல். அந்தப் புத்தகம் கிடைத்தால் படித்துப்பார், தம்பி! பாடக் கூடியவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டுப்பார், சுவையான சந்தம்! இனிமையாக இருக்கும், இசைக்கு ஏற்ற குரல்வளம் உள்ளவர்கள் பாடினால்.

பாட்டின் கருத்து பற்றித்தான் நான் இப்போது கூற முற்படுகிறேன்.

சேரியில் வாழ்ந்துகொண்டிருந்த சீலமிக்க நந்தனாருக்குச் சிதம்பரம் சென்று ஆடலரசனைத் "தரிசனம்' செய்திட வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக,

"தில்லை அம்பலத் தலமொன்றிருக்குதாம்
அதைக் கண்டபேர்க்கு
ஜனனமரணப் பிணியை அறுக்குதாம்''

என்று மனம் உருகிய நிலையில் வேதியர்முன் பாடி,

"போய்வர உத்தாரம் தாரும் ஐயனே!''

என்று கேட்கிறார், அய்யர், நந்தனாரின் ஆண்டை. ஆகவே அவருடைய உத்தரவு தேவைப்படுகிறது. "வேதியர்' அனுமதி மறுப்பதற்காக என்று அமைந்துள்ள பாட்டு நான் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

"சிதம்பர தரிசனமா? நீ அதைச் சிந்திக்கப்போமா!' என்று கேட்பது மட்டுமல்ல, நந்தனார் என்னென்ன செய்து காலந்தள்ள வேண்டும், எது முறை, எவை அவருக்கென்று ஏற்பட்டுள்ள "நியதி' என்று விளக்கமாகவும் "வேதியர்' எடுத்துரைக்கிறார்.

காடு கழனியை உழுதிடு
கள்ளுத் தண்ணியைக் குடித்திடு
காடன் மாடனைக் கும்பிடு''

என்ற கருத்துப்பட, நந்தனாருக்காகவென்றே சாஸ்திரமும் சம்பிரதாயமும் வகுத்து வைத்துள்ள முறைகளை எடுத்துக் கூறுகிறார் வேதியர்.

அந்த வேதியரின் நினைவுதான் வருகிறது, தம்பி! காமராஜர் நம்மைப்பற்றிச் சின்னாட்களுக்கு முன்பு பேசியதனை அறிந்தபோது.

கடவுளை எதிர்த்துப் போரிடு
பார்ப்பன ஒழிப்பை நடத்திடு

இவைகளை விட்டுவிட்டு, தேர்தலிலே ஈடுபடுவதா! காங்கிரசை எதிர்ப்பதா! ஆட்சியிலே அமர்ந்திட முனைவதா! - என்று கேட்கிறார்.

நாம் எதைச் செய்யக்கூடாது என்பதனையும் கூறுகிறார், எதையெதைச் செய்திட வேண்டும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு அக்கறை, நம்மிடம்!

இன்பத் திராவிடம் கேட்பதை விட்டுவிட்டார்கள்! கடவுளை ஒழிப்பதை விட்டுவிட்டார்கள்! பிராமண எதிர்ப்பை விட்டுவிட்டார்கள்! கொள்கைகளை விட்டு விட்டார்கள்! என்று கோபத்துடன் பேசுகிறார்; பேசுகிறாரா? ஏசுகிறார், எரிச்சல் காரணமாக.

அந்தக் கொள்கைகளை விட்டுவிட்டார்களே என்று கடுங்கோபங்கொண்டு, அந்த மதியி-கள் விட்டுவிட்டால் என்ன, இதோ நான் இருக்கிறேன், அறிவுக்கரசன்! ஆற்றல் மிக்கோன்! நான் இனி அந்தக் கொள்கைகளை ஆதரிக்கத் தலைப்பட்டு விட்டேன்! அவனியோரே! இதனை அறிந்து கொள்ளுங்கள்! என்றுகூறி, துந்துபி முழங்கட்டும்! என்று கட்டளையிட்டுவிட்டு, சல்லடம் கட்டிக்கொண்டு, தோள்தட்டி, துடைதட்டிக் கிளம்புகிறாரோ, களம் நோக்கி இந்த வீராதிவீரர் என்று கேட்கிறாயோ, தம்பி! இல்லை! இல்லை! அவர் எப்போதும்போல,

ஓட்டு வேட்டை நடத்துவார்
ஆட்சியை அமைப்பார்.
பராக்குக் கூறிடுவோர்
புடைசூழப் பவனி வருவார்!
இலட்ச இலட்சமாக நிதி திரட்டுவார்.

நம்மைத்தான் செய்யச் சொல்கிறார் "ஒழிப்பு' வேலையை.

ஏன்? அந்த வேலைகளில், அந்தக் கொள்கைகளிலே அவருக்கு அவ்வளவு விருப்பமோ என்று கேட்பாய். விருப்பம் அல்ல; விருப்பம் இருந்தால், யார் செய்தாலும் செய்யாது விட்டிடினும், இதோ நான் செய்தே முடிப்பேன், செய்து முடித்திடாமல் ஊண் உறக்கம் கொள்ளேன் என்று சூளுரைத்தல்லவா கிளம்புவார், வாளை உருவிக்கொண்டு. விருப்பம் அல்ல, நம்மை அவர் உசுப்பி விடுவதற்கான காரணம்.

இன்பத் திராவிடம் கேட்டிடுவோர், தேர்தலிலே ஈடுபட முடியாது. அப்படி ஒரு சட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு விட்டிருக்கிறார் அல்லவா? அதனால், இன்பத் திராவிடத்தை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்டு, நம்மை உசுப்பி விடுவதன் மூலம், தேர்தலிலே நாம் ஈடுபடுவதைத் தடுத்துவிடலாம் அல்லவா! அந்தத் தந்திர புத்தியால், ஏன் இன்பத் திராவிடத்தை விட்டு விட்டீர்கள் என்று கேட்கிறார்.

அதுபோலவேதான், கடவுள் ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு இவைகளை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று இவர் கேட்பது, அவைகளிலே ஈடுபட்டுக்கொண்டு காலந்தள்ளுங்கள், தேர்தலிலே ஈடுபட்டு என் ஆதிக்கத்துக்கு ஆபத்தை உண்டாக்காதீர்கள் என்ற கருத்துடன்தான்.

இன்பத் திராவிடம் கேட்கிறார்கள் இந்தக் கழகத்தார்; ஆனால், இவர்கள் கேட்பதை, ஆட்சி மன்றத்தினர் ஒருவர்கூட ஆதரிக்கவில்லை என்று கூறுவார். ஏனெனில், இன்பத் திராவிடம் கேட்பவர்கள்தான் தேர்தலிலே ஈடுபடக்கூடாது என்று சட்டம் இருக்கிறதே!

கடவுளை எதிர்த்திடும் கயவர்கள், பார்ப்பனரைப் பழித்திடும் பாதகர்கள், இவர்களையா ஆதரிப்பர் என்று ஒரு போடுபோட்டு, தேர்தலிலே நம்மைத் தாக்கித் தகர்த்திடலா மல்லவா! அந்த நப்பாசை.

ஆகவேதான், நந்தனாருக்கு வேதியர் சொன்ன விதமாக நம்மைப் பார்த்துச் சொல்கிறார், நாடாளும் வாய்ப்பை இழந்துவிட வேண்டிவந்து விடுமோ என்று நடுக்கம் கொண்டுள்ள காமராஜர், ஏன் கொள்கைகளை விட்டுவிட்டீர்கள் என்பதாக.

தோட்டம் காடு பார்த்துக்கொண்டு, மாடு கன்றுகளைக் கவனித்துக்கொண்டு, கிராமத்திலே இருந்து கொண்டு, கோயில் குளத்தை வலம் செய்துகொண்டு நிம்மதியாகக் காலந்தள்ளுவதை விட்டுவிட்டு, இங்கு ஏனடா வந்தாய்! என்று கேட்பது உண்டல்லவா அண்ணன், தம்பி பட்டணம் வந்தது கண்டால். அது போலப் பேசுகிறார் காமராஜர். அவர் பேச்சு எனக்குக் கோபத்தைக் கிளறவில்லை; மாறாக, சிரிப்பைத்தான் மூட்டுகிறது.

வெட்ட வெளியிலே நின்றுகொண்டு,. அது சொத்தை இது சோடை என்று பேசிக் கொண்டிருப்பானேன் - வந்து பாருங்களேன் சட்டசபைக்கு! நின்று பாருங்களேன் தேர்தலுக்கு! கேட்டுப் பாருங்களேன் ஓட்டுகளை!! என்றெல்லாம் முன்பு சொன்னார்! இப்போதோ, இந்தப் பாவிகள் ஓட்டுக் கேட்க முழங்கவேதான் நமது ஆதிக்கத்திலே ஓட்டையும் ஒடிசலும் விழுந்து விடுகிறதே என்ற கிலிகொண்டு, ஏன் தேர்தலிலே ஈடுபடுகிறீர்கள், கடவுள் ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு ஆகியவைகளை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று கேட்கிறார்.

கடவுளை ஒழிக்கட்டும், பரவாயில்லை; பிராமண எதிர்ப்பு நடத்தட்டும் பரவாயில்லை; தனி நாடு கேட்கட்டும் பரவாயில்லை; பாவிப் பயல்கள் "ஓட்டு' அல்லவா கேட்கிறார்கள், நமது ஒய்யார வாழ்வுக்.கு அல்லவா உலைவைத்து விடுவார்கள்போல இருக்கிறது என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் பேசுகிறார்.

அன்றும் இன்றும், தம்பி! கடவுள் ஒழிப்பு எனும் காரியத்திலே தி.மு. கழகம் ஈடுபட்டதில்லை; ஆனால் கடவுள் பெயர் கூறிச் செய்யப்படும் கபட நாடகங்களை அம்பலப் படுத்துவதிலும், கடவுள் பெயர் சொல்லிக் காதகர் செய்திடும் கயமைகளைக் கண்டிப்பதிலும் தயக்கம் காட்டியதில்லை; தயக்கம் காட்டவில்லை.

தி..மு. கழகம், தீப்பந்தம் ஏடுகள் அக்ரகாரத்தைக் கொளுத்த என்று சொன்னதுமில்லை, அக்காரத்திலுள்ளவர்கள் "பூதேவர்கள், ' நாம் அவர் அடிவருடப் பிறந்தவர்கள் என்ற அக்கிரமத்தை ஏற்றுக்கொண்டதுமில்லை.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற நெறியைத் தேர்தலில் ஈடுபட்ட பிறகு அல்ல, தேர்தலைப் பற்றிய நினைவே எழாது நாள் தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு ஒழுகி வருகிறது. இதனை நாடு அறியும், நல்லோர் பாராட்டியுமுள்ளனர்.

தி.மு. கழகம், திராவிடர் கழகத்தைப் போல கடவுளின்மீதும், பிராமணர்மீதும் போர் தொடுத்துக் கொண்டு இருந்திடாமல், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தின் மீது போர் தொடுத்திருக்கிறதே, அதற்குத் தேவைப்படும் வல்லமையும் வளர்ந்துகொண்டு வருகிறதே, அந்தப் போரிலே வெற்றி கிட்டுவதற்கான குறிகளும் பளிச்சிட்டுக் கொண்டுள்ளனவே என்பதைக் காணும்போது பெரியவர் கடுங்கோபம் கொள்கிறார்.

அவருடைய நோக்கம் மக்களிடம் தோழமைத் தொடர்பு கொண்டு, நாடெங்கும் நல்ல முறையிலே பரவி வளர்ந்துள்ள தி.மு. கழகத்தைத் தேர்தல் களத்தை விட்டுத் திசை திருப்பி விடவேண்டும் என்பதாகும்.

ஆலவட்டங்களுக்குத்தான் கணக்குப் புரிவதில்லை; அவருக்குக் கணக்குப் புரிகிறது.

ஐம்பத்து ஆறு இலட்சம்
முப்பத்துநாலு இலட்சம்

என்ற அளவிலேதான் 1962ல் ஓட்டுகள் விழுந்துள்ளன, காங்கிரசு க்கும் கழகத்துக்கும் என்பது.

இந்தக் கணக்கு கிளப்பிவிடும் கிலி காரணமாகவே அவர் நம்மை வேற வேலைகளைப் பார்த்திடுவதுதானே என்கிறார்.

நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பதையும்,

காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவது என்பதையும்,

காங்கிரசுக்கும் பணக்கார வர்க்கத்துக்கும் ஏற்பட்டு விட்டிருக்கிற எழுதாத ஒப்பந்தத்தைக் கிழித்து எறிவது என்பதையும்.

திராவிட முன்னேற்றக் கழகம், தனது கொள்கையாக, வேலைத் திட்டமாக மேற்கொண்டு விட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லத்தக்க வலிவும் வாய்ப்பும் பெற்றிருக்கிறது.

இந்த உண்மை காமராஜருக்கு நன்றாகப் புரிகிறது. எரிச்சல் பிறக்கிறது. துடிக்கிறார்: நம்மைத் தூற்றுவதன் மூலம் அந்த அரிப்பை அடக்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்பி! அரிப்பு எடுத்த நிலையினர் என்னென்ன செய்து அந்த அரிப்புத் தொல்லையைப் போக்கிக்கொள்ள முனைவார்கள் என்பதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும்: அதிலும் நல்ல கோடை காலத்தில், முதுகுப் புறத்திலே அரிப்பு எடுத்துவிட்டால் பாவம் நெளிவான், வளைவான்; கையை வளைத்து அரிப்பு எடுத்த இடத்தருகே கொண்டு செல்வான்: முடியாமற் போய்விடும்; விசிறிக்காம்பைக் கொண்டு கீறிப்பார்த்திடுவான்; எந்த இடத்தில் அரிப்பு எடுக்கிறதோ அந்த இடத்தருகே விசிறிக்காம்பு செல்லாது; மேலும் துடிப்பான்; கொஞ்சம் சொரிந்து விடுங்கள் என்று யாரிடமாவது கெஞ்சுவான்; அவர்களும் எந்த இடத்தில் அரிப்பு எடுக்கிறது என்பதை அறிந்து பக்குவமாகச் சொரிந்துவிடவில்லை என்றால், கூச்சத்தைத் துரத்திவிட்டுச் சுவரிலே போய்த் தேய்த்துக் கொள்வான்; அரிப்புத் தீருமட்டும்; இரத்தம் கசிகிறவரையில்! பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

உடல் அரிப்புக்கே இந்தப்பாடு, இந்தத் தவிப்பு என்றால், உள்ளத்து அரிப்பு ஏற்பட்டுவிட்டால், தவிப்பு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்? காமராஜர் அந்தத் தவிப்புத் தவிக்கிறார்; பாபம், அவருடைய சமீபகாலப் பேச்சுகள்

அவர் அடைந்துள்ள உயர்ந்த நிலை

அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படும் வல்லமை

அவருக்குக் கிடைத்திருந்திருக்க வேண்டிய அனுபவம்

அவருடைய கட்சியிடம் அவருக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை ஆகிய எதற்கும் ஏற்றதாகவோ பொருத்தமானதாகவோ காணோம். ஒரே தூற்றல்! எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு! எல்லாம் எனக்குத் தெரியும் என்ற போக்கு! எவனால் என்ன ஆகும் என்ற கேள்வி! என்ன செய்துவிடுவேன் தெரியுமா என்ற மிரட்டல்!

எல்லாம் அவருக்கு ஏற்பட்டுவிட்டுள்ள மன அரிப்பின் விளைவு! அதனால்தான் தம்பி! எனக்கு அவரிடம் கோபம் வரவில்லை; பச்சாத்தாபம் பிறக்கிறது.

எவ்வளவு பெரிய இடத்திலே அமர்ந்திருக்கிறார்; என்றாலும் எவ்வளவு பதைக்கிறார், பதறுகிறார், படபடக்கிறார்.

அமைச்சர்கள், நிரம்பிய அணிவகுப்பு!

கோடீஸ்வரர்கள் கொடி பிடிக்கிறார்கள்

கொலு மண்டபத்திலே இலட்சாதிபதிகள் சாமரம் வீசுகிறார்கள்,

கேட்டதும் எந்த அளவுப் பணமும் கொட்டிக் கொடுக்க முதலாளிகள் காத்துக் கிடக்கிறார்கள்!

அவர் பாதையிலே புழுதி இருந்தால் பாதம் அழுக்காகி விடுமே என்று பயந்து பரிவு காட்டித் தமது பட்டாடையை விரிக்கிறார்கள், இதன்மீது நடந்து செல்லுங்கள் என்று!

பத்து மோட்டார், முன்னாலே! பத்து, பின்னாலே! படகு மோட்டாரிலே இவர்! வைரமோதிரக்காரர்கள், பக்கத்தில்! ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுப் போடப்பட்ட அலங்கார வளைவுகள்! சர்க்கார் சிப்பந்திகள் இரவெல்லாம் கண்விழித்துக்கொண்டு வேலைசெய்து எழில்கூட்டித் தந்த மேடை அமைப்புகள்!

மாளிகைகளிலே விருந்து! மகோன்னதமான வரவேற்பு வைபவம்!

ஆண்டு பல செலவிட்டு மருத்துவம் கற்றுக் கொண்ட வித்தகர்கள், அவர் எடுத்துக் கூறும் பொருளற்ற பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்கிறார்கள்.

அரசியல் - பொருளாதாரம் - ஆகிய துறைகள் பற்றிய ஆய்வுரை நடத்தியவர்கள் அவர் தரும் "அறிவுரை' கேட்டு, இது போலப் பேருரை ஆற்றியவர் பலகாலும் படித்த கல்லூரிகளிலே இருந்ததில்லையே! என்று கூறிடக் கூட ஒருப்படுகிறார்கள்.

இவ்விதமான ஏற்றம்! இந்த மே-டம்! இதிலே இருந்து கொண்டு, பாவம் அவர் தமது இயல்பை மறந்திட முடியாமல், தூ, தூ! சே! சே! என்ற அவருடைய தனிச்சிறப்பைத்தான் விளக்கிக் காட்டிக் கொண்டு வருகிறார் என்றால், தம்பி! பரிதாபமாகத்தானே இருக்கும்!

கெம்பீரமான யானை! அதன்மீது உயர்தரமான அம்பாரி! அதிலே அமர்ந்துகொண்டு பவனி வந்து கொண்டிருக்கும் போது, வழியிலே நிறுத்து! நிறுத்து! என்று ஊர்வலத்தை நிறுத்தச் செய்து கீழே குதித்து, அங்குச் சிதறிக் கிடக்கும் ஈச்சம் பழங்களை எடுத்து வாயிலே போட்டுக் குதப்பிக் கொண்டே, என்ன சுவை! என்ன சுவை! என்று கூறிக் குதூகலித்திடின், பார்ப்போர் என்ன எண்ணுவர்! பாவம்! எல்லாச் செல்வமும் இருந்தும், இப்படி இருக்கிறதே மனம்! - என்று எண்ணிப் பரிதாபப்படுவர்! வேறென்ன செய்வர்!

காமராஜரிடம் உள்ளன்பு கொண்டவர்கள்கூட, அவர் இத்தனை மேலான இடம் சென்றும், தரத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் தாறுமாறாகப் பேசுகிறாரே என்று வருத்தப்படுவார்கள்.

தொத்தலும் வத்தலுமாக உள்ளதுகள் மட்டுமே "பெரியவர்' நம்ம "பாணி'யைப் பழகிக் கொண்டுவிட்டாரே என்று எண்ணிக் களிநடமிடக்கூடும்.

தம்பி! காமராஜருக்குக் கிடைத்துள்ள வசதிகளில் நூற்றிலே ஒரு பாகம் நமக்குக் கிடைத்தாலும் போதும், நாம் கண்டபடி பேசிடாமல், காரியத்தைக் கன கச்சிதமாக முடித்துக் கொண்டிட முடியும்.

நமக்கு உள்ள வசதிக் குறைவுகளை நாடறியும்.

கனதனவான்கள் நம்மிடம் இல்லை, இருக்க வேண்டுமென எதிர்பார்க்கவும் உரிமை இல்லை, நியாயமுமில்லை.

நமது கூட்ட மேடைகளிலே வந்து அமருகிறவர்கள் அனைவருமே உழைத்தால் மட்டுமே பிழைக்கக் கூடியவர்கள். நிலபுலம் பற்றி, வட்டி வாடகை பற்றி, பேசிக் கொண்டிருக்கக் கூடியவர்கள், வைரக் கடுக்கன்களும், வெள்ளிப் பூண்போட்ட தடி பிடித்து நடப்பவர்களும், பாண்டியாக்குகளும் ப்யூக்குகளும் பண்ணைகள் கொண்டோரும் பர்மிட் பெற்றோரும் நம்மிடம் இல்லை. மாதச் சம்பளக்காரர்கள், தினக்கூலி பெறுவோர், வாடகை வீட்டிலே வசிப்பவர்கள், பெட்டிக்கடை நடத்து பவர்கள், மூட்டை சுமந்து விற்பவர்கள், இப்படிப்பட்ட உழைக்கும் உத்தமர்கள் நம்மிடம். எடு அரை இலட்சம் என்று கேட்டால், கொடுத்தேன் இப்போதே என்று கூறக் கூடியவர்கள் அல்ல; கொளுத்து அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவை என்று கழகம் கட்டளையிட்டால், இதோ! இப்போதே! என்று ஆர்வத்துடன் கூறிச் செயலாற்றும் செம்மல்கள்! நாம் யானைமீது அம்பாரி அமைத்து அதிலே அமர்ந்து பவனி வந்து அரசபோகம் அனுபவித்திடுவோர் அல்ல; உச்சி வேளையில் கால் கடுக்க, மண்டையிலே வெப்பம் தாக்க, வியர்வை பொழிய, கல்லும் முள்ளும் நிரம்பிய பாதையிலே நடந்து சென்றிடுவோர்.

என்றாலும், நாம் நமது பேச்சிலும் செயலிலும் ஒரு தரம் இருக்க வேண்டும், ஒரு கண்ணியம் இருக்கவேண்டும், பொறுப்பும் பண்பும் இருக்கவேண்டும் என்பதிலே மிக்க கவலை எடுத்துக் கொள்கிறோம். காமராஜரோ, யானை மீது அம்பாரி கட்டி அதில் அமர்ந்து பவனி வருபவன் பாதை ஓரத்திலே உள்ள பழத்தை எடுக்க யானையை நிறுத்திவிட்டு கீழே குதித்திடும் போக்கின ராகிறார். ஏனோ. பாவம் !

தி. மு. கழகத்தாருக்கு மானம் இல்லை என்கிறார்.

தி. மு. கழகத்தார் கூலிகள், காலிகள் என்று ஏசுகிறார்.

தி. மு. கழகத்தார், ஆச்சாரியாருக்கு அடிமையாகி விட்டார்கள் என்று தூற்றுகிறார்.

தமிழக மக்களில் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் எந்தக் கழகத்திற்குத் தமது ஆதரவைத் தந்திருக்கிறார்களோ, எந்தக் கழகம் தமிழகச் சட்டமன்றத்திலே அதிகாரம் பெற்ற எதிர்க் கட்சியாகப் பணியாற்றிடும் நிலை பெற்றிருக்கிறதோ, எந்தக் கழகம் தாய்மொழி காத்திட அறப்போர் நடாத்திப் பல ஆயிரவர் சிறைக் கோட்டம் சென்று வாடிட வேண்டிய நிலையிலே கிளர்ச்சி நடத்திற்றோ, எந்தக் கழகத்தின் சொல்கேட்க ஒவ்வொரு நாளும் பல்லாயிரவர் ஆர்வத்துடன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கூடத் திரண்டு வருகின்றனரோ, அந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரை மானமற்றவர்கள் என்று ஏசுகிறார்; மதிகெட்டதால் அல்ல; மமதை அதிகமாகி விட்டதால்.

எடுத்தெறிந்து பேச, ஒன்றுக்கு ஒன்பதாகத் திருப்பித்தர, கடுமையும் கொடுமையும் நிரம்பிய வார்த்தைகளை உமிழ்ந்திட, தி.மு.கழகத்தில் யாருமே இல்லை என்பதல்ல நிலை; நாம் பெற்றுள்ள வளர்ச்சியும் அடைந்துள்ள இடமும், பொதுமக்கள் தந்துள்ள ஆதுரவும் நமது நினைப்பையும் நேர்த்தியானதாக்கி பொறுப்பையும் உயர்த்தி இருப்பதாலே, இழிமொழி உமிழ்வது நமது தகுதிக்கு ஏற்றதல்ல என்ற தெளியுவுடன் கழகத் தோழர்கள் நடந்து கொள்கின்றனர். அவரோ? மேலிடத்தில் தமக்கு இடம் கிடைத்து விட்டதாலேயே எவ்வளவு தரக்குறைவான பேச்சையும் வீசலாம், நாடு தாங்கிக்கொள்ளும் என்ற துணிவுடன் பேசுகிறார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இவருக்குப் பத்திரிகைகளிலே தரப்பட்டுள்ள அளவுள்ள, வகையுள்ள விளம்பரம் - மேய்ப்பு தேய்ப்பு - தி.மு. கழகத்திற்குக் கிடைத்ததுண்டா?

காமராஜர் நடக்கிறார்; காமராஜர் படுக்கிறார்; காமராஜர் படிக்கிறார்; காமராஜர் திறக்கிறார். காமராஜர் சிரிக்கிறார் - என்ற இப்படிப் பல கோலங்களை நித்தநித்தம் இதழ்கள் காட்டிக் காட்டி இவரை ஊட்டி வளர்த்து வருவதுபோல - அதே அளவுகூட வேண்டாம், அதிலே நூற்றிலே ஒரு பங்கு என்ற அளவேனும் - கழகத்துக்குக் கிடைத்ததுண்டா? இல்லை என்பதை எவரும் மறுத்திட முன்வர மாட்டார்கள். இன்று வரையில் ஏழாம் பக்கம், மூன்றாம் பக்கம், கடுகு எழுத்து என்ற அளவிலேதான் கழகத்தாரின் பேச்சு இதழ்களிலே வெளியிடப்படுகின்றது.

மூன்று மணி நேரம் வாதத்திறமையுடன் பேசியிருக்கலாம் கழகத் தோழர்; மூன்றே வரியிலே முடித்துவிடும், இதழ்கள்!

பேச்சுக்கு மதிப்பளிக்க மறுத்திடும் அதே இதழ்கள், அந்தப் பேச்சினை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதிலே அக்கறைகாட்ட மனமில்லாத இதழ்கள், கழகக் கூட்டத்திலே ஒரு பன்றி புகுந்து விட்டால், அந்தப் பன்றிக்குக்கூட அக்கறை காட்டி விளம்பரம் தேடிக்கொடுக்கின்றன! இந்த நிலையிலே! கழகம் அடைந்துள்ள வளர்ச்சியைக் காணும்போதுதான் உண்மைக்கு மதிப்பளித்திடும் பண்பினர், கழகத்தைப் பாராட்டுகின்றனர்; அதன் வளர்ச்சி கண்டு வியப்படைகின்றனர்.

எப்படி முடிகிறது இவர்களால் இந்த அளவு வளர்ச்சி அடைய என்பதுபற்றி ஆச்சரியப்படுவோர்களும்,

எந்தவிதமான வசதியுமின்றி எப்படி இவர்கள் இவ்வளவு பணபலம் படைத்த காங்கிரசை எதிர்த்து நிற்க முடிகிறது, தொடர்ந்து போரிட முடிகிறது, குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டிட முனைகிறது என்று கேட்டுக் கேட்டு, உண்மைக் காரணம் புரியாததாலே வியப்பிலாழ்ந்திடுகின்றனர்;

அதே நிலைதான், காமராஜருக்கு எரிச்சலையும், அருவருப் பையும், அடக்க முடியாத பொச்சரிப்பையும், அணைய மறுக்கும் வெறுப்பையும் கிளறிவிட்டு விடுகிறது; அந்த எரிச்சலைப் போக்கிக்கொள்ளவே ஏதேதோ பேசுகிறார்.