அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வந்திடு! ஒளி தந்திடு!
1

கட்சிமாறிகளின் நா வாணிகம் குறித்துக் கவலை கொளல் வீண்!
ஜென்கின்ஸ் காதுப் போர் தரும் படிப்பினை!
வதந்திகளுக்கு மதிப்பளிப்பது நேரக்கேடு; மறுப்பது அறிவுக்கேடு!
உதயசூரியன் நமக்கு ஏற்ற இயற்கைச் செல்வச் சின்னம்!
இந்தியைத் தீயாக்கி இன்தமிழை அழித்திட இயலாது!
எழுஞாயிறே! திருச்சிக்கு வந்திடு! ஒளி தந்திடு!

தம்பி!

"விருந்தா! அங்கேயா? கர்மம்! கர்மம்! வேளா வேளைக்கு வெந்ததோ நொந்ததோ ஏதோ ஒரு வகையானது கிடைத்தால் போதாதா? விருந்து போட்டிட்டான், விலாப் புடைக்கத் தின்று கிடந்தேன் என்றா எண்ணிக்கொண்டுள்ளீர், வேதனை! வேதனை!'

"சுவை மிக உண்டு! உண்போர் மறவார்! ஊரோரே! வாரீர்! என்றெல்லாம் முன்பு பேசிடுவீரே; கேட்டிருக்கிறேனே, அதனால்தான், அங்கு விருந்துச் சுவை உண்டு போலும் என்று எண்ணிக்கொண்டேன்.'

"அங்கு இருந்தபோது நான் பேசியதையா நம்பிவிட்டீர்கள்! ஐயோ! ஐயோ! அவன் கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவது என்னை அவ்விதமெல்லாம் பேசவைத்தது.'

"அப்படியானால் அங்கு ஒரு நலனும் இல்லை, பெற்றிடவில்லை என்று சொல்லுங்கள்'? அதற்கு என்ன ஐயம்! ஒரே வறட்சி! ஓயாத தொல்லை. சிற்சில வேளைகளிலே சீர் தலைகாட்டும்; அஃது நான் அளித்தது; அவனிடமிருந்து பெற்றது அல்ல.'

"போதுமான அளவு பண்டங்களே கிடையாதோ அங்கு.'

"அங்கு என்ன உண்டு? பண்டம் பலவற்றைப் பாடுபட்டு நான் தேடிக்கொண்டு போய்த் தருவேன்; பாவிப் பயல் அருமை தெரியாமல் அத்தனையும் பாழடிப்பான்! பண்டம் இருந்தால் மட்டும் போதுமா? பாங்காகச் சமைத்திடத் திறம் இருக்க வேண்டாமோ? ஏது திறம்? எல்லாப் பண்டந்தனையும் கூட்டிக் குழப்பிக் கொதிக்க வைத்துத் தந்திடுவான்! என் செய்வேன் நான், இடமறியாது இங்கு வந்து சிக்கினேனே, விடுதலை நாள் என்றோ என்றெண்ணி ஏங்கிக் கிடந்திடுவேன். வேறு வழி.''

"கூட்டுடன் குழம்புண்டு, வறுவல் பொரியலுடன் வகையான சுவையான பல உண்டு என்றெல்லாம் கூறுவரே.'

"கூறினேன் நான் கூசாமல்; கூறாதே இங்குள்ள குறையையெல்லாம் என்று கூப்பிடுவான் கரந்தன்னை, என் செய்வேன்! கொதிப்பை அடக்கிக்கொண்டு, குளிர்ச்சோலை! மணமாலை! தேன் அருவி! கனிச்சாறு! என்றெல்லாம் கூறி வந்தேன் அன்று.

"இன்று இங்குக் கண்டிடும் நிலை உமக்கு மனநிறைவு தருகிறதோ?'

"மனநிறைவா! நன்று! நன்று! இன்றே காண்கிறேன் இனிமை எல்லாம்! என்னென்று இயம்பிடுவேன் என் மகிழ்வை! மல்லிகைப் பூவின் நிறம், மணம்! மாதுளையின் சுவை! மாத்தமிழ்போல் இனித்திடுது இவ்வுணவு! செம்பொன்னை உருக்கியோ வைத் துள்ளார் என்றன்றோ எண்ணிக்கொண்டேன், குழம்புதனைக் கண்டபோது! ஒவ்வொன்றும் இனிக்கிறது! ஒவ்வொன்றும் என்னை இவ்விடத்துடன் பிணைக்கிறது. இஃதன்றோ விருந்து! இதுவன்றோ இல்லம்! இங்கன்றோ நான், நானாக இருக்கின்றேன்.'

"தலைவாழை இலை இல்லை என்று குறை காண்பீரோ! தயிரன்னம் தன்னில் நீரதிகம், வெண்ணெய்ப் பசை குறைவு என்றெண்ணிக் கவலைப்படுவீரோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன்.'

"தவறு! பெருந்தவறு! தரணியெங்கும் எடுத்துரைப்பேன் இங்குள்ள மாண்பதனை: தங்க நிகர் குணம் உமக்கு! அங்குள்ளோன், வெறும் ஈயம்! பலாச்சுளைப் பேச்சு இங்கு; அங்கோ பழைய சோறு! உப்புண்டா அளவோடு அங்கு? இங்கு, தாங்கள் தொட்டாலே போதும், தித்திப்பு ததும்பிடுதே! என்னென்பேன் தங்கள் இன்முகத்தின் காட்சிதனை! எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம் அங்கு! எழுதிடுவேன் ஓவியம் நான் என்றெண்ணுவோன் இஃதன்றோ இனியமுகம் என்றன்றோ கூறிடுவான்; இத்திருமுகத்தைக் கண்டக்கால் நல்ல இடம்! நல்லோர் உள்ள இடம்! நான் நாள் பலவாய் அலைந்தலைந்து கண்டறிந்தேன் இத்திரு இடத்தை! இனி இவ்விடத்துப் பெருமைதனைப் பாரறியச் செய்திடுவேன்! பாவிமகன் இருக்கின்றானே அப்பாழிடம், அதன் கொடுமை அவன் அறிந்திட வைப்பேன்! அஃதே இனி என் பணி! ஆம்!'

***

விருந்து கிடைத்திடும் இடம் எதுவோ அது நல் இடம், நம் இடம் என்று கூறிடும் இயல்பினன், ஓரிடத்தில் இருந்து விட்டுப் பிறிதோரிடம் வந்தடைந்தால் முன்னைய இடத்தைப் பற்றிப் பல பழியும் பேசி, புதிய இடத்தார்க்குப் பூரிப்புத் தந்திடவே முனைவான்.

அவன் பேச்சைக் கேட்டிடும் புது இடத்தார், புத்தி கெடாத நிலையில் இருப்பாரேல், "ஏதேது இவன் காலின் கீழ்போட்டு மிதிக்கின்றான், முன்பு கண்ணில் ஒத்திக் கொண்டதனை! ஏத்தி ஏத்தித் தொழுததனை இன்று பிய்த்துப்போடுகிறான்! இவன் இயல்பு, ஆபத்தைத் தருவதன்றோ! அந்த இடம்பற்றி இந்த இடம் வந்தவுடன் இதனைக் கூறுபவன், இந்த இடம்விட்டு ஏகிடும் நிலை பிறந்திடின், எந்தெந்த இடம் சென்று ஏதேது கூறுவனோ! துணிந்த பேர்வழி இவன் போன்றார் தம்மைச் சற்றுத் தொலைவினிலே நிறுத்திவைத்திட வேண்டும். அருகே வந்திவனும் அணைப்பைப் பெற்றிடின், நானறிவேன் எல்லாம்; நவில்வேன் கேளீர் என்றே நாலு பேரிடம் சென்று நம்மைப் பற்றி நாராசம் பேசிடுவான்; நல்லது தாராது இவன் நட்பு! என்றறிந்து அதற்கேற்றபடி நிலையை அமைத்துக்கொள்வார்!

அஃதன்றி, பழி பேசக் கேட்பதிலே பாகுசுவை கண்டு மகிழ்ந்திடும் குறைமதியாளனெனின், குறை கூறுவோனைக் கூடத்திலே அமர்த்தி, குதூகலமும்தான் ஊட்டி, கூறு! கூறப்பா! குறைகளை எல்லாம் கூறு! எனக் கேட்டு மகிழ்ந்திருப்பார். இன்று ஒருவருக்கு! நாளை, நமக்கே இவன் பகைவனாகிவிடின், இஃதே போல இழித்தும் பழித்துமன்றோ பேசிடுவான் நம்மைப்பற்றி என்பதனை அறிந்திடாமல்.

***

முடியுடை மூவேந்தராட்சி மறைந்து நாடெங்கும் சிற்றரசரும், பாளையக் காவலர்களும் ஆங்காங்குக் கொலுவிருந்த நாட்களில், ஒரு சிற்றரசனிடம் கைகட்டி நின்றும், களிப்பூட்டி வந்தும், காலந்தள்ளிடும் பேர்வழிகள், அங்குப் பசை குறைவு, வேறு பசை தேடிடுவோம் என்று எண்ணிப் புதிய இடம் போய்ச் சேருவதும், அங்கு, முன்பு இருந்த இடந்தன்னைப் பற்றித் தூற்றிக்கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. அந்த நிலையினை விளக்குவதே, மேலே காட்டியுள்ள உரையாடல்.

***

இன்று, கட்சியைவிட்டுக் கட்சி தாவிடும் கண்ணியவான்கள், இந்த "மரபு' கெடாமல் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்! காண்கின்றாயே, தம்பி! இங்கு இருந்தபோது அவர்களுக்கு எல்லாம் இனித்தது, சுவைத்தனர்; இந்த இடம்விட்டுச் சென்றதும், புதிய இடத்துள்ளார் முன், புகழ்பாடிக் கிடப்பதுடன் இருந்துவிட்டு வந்த இடம் பற்றி இழித்துரைத்திடுவதனைக் கலையாக்கி, நல்ல விலைக்கும் விற்கின்றார்! நா வாணிகம், நல்லபடி நடக்கிறது. அவர் பேச்சு பற்றிச் சிற்சிலர் என்னிடம் கூறிடக் கேட்கின்றேன். சூழ்நிலை இன்று போலன்றி சிறிதளவு நல்லதாக இருந்த காலந் தன்னிலேயே, விருந்தளித்த இடம்பற்றிப் புதிய விருந்தளிப்பான் மாளிகையில், பழி பேசிப் பிழைத்து வந்த பலர் பற்றி நினைக்கின்றேன்; சிரிக்கின்றேன்: வாழ்வுபெற, செச்சே! அஃதும் அல்ல; வாழ்வை நடத்திச் செல்ல, என்னென்ன செய்கிறார் என்றெண்ணி - அவர்க்காக இரங்குகின்றேன்! ஏதோ பாவம், இது செய்தேனும் இருக்க நினைக்கின்றாரே, அஃதேனும் அவர் விருப்பத்தின் அளவுக்கு நடைபெறட்டும்; இங்கு இருந்துவிட்டுச் சென்றவர் அல்லவோ அவர்! எப்படியோ சுவை பெறட்டும், சுகப்படட்டும்!! என்றும்கூட எண்ணிக் கொள்கின்றேன். ஆனால் தம்பி! ஒன்றுமட்டும் புரிவதில்லை எனக்கு; ஆகவே கவலை கொள்கின்றேன். என்னவெனில், எது உண்மை, எது நடிப்பு; இங்கு இருந்தபோது அவர் குலவியது உண்மையா, அன்றி அங்குச் சென்று தடவித் தருகின்றனரே, அஃது உண்மையா, எது உண்மை, எது போலி! என்பதுதான் புரியவில்லை. ஏனெனில், இங்கு அவர் இருந்த காலை சொரிந்த அன்புரையும் வரைந்த வாழ்த்துரையும், கொஞ்சமல்ல! அவை அவ்வளவும் அவர் உள்ளத்தில் ஊறிவந்தனவா, வெறும் உதட்டசைவா? உதட்டசைவே என்று கொண்டிடின், இன்று அவர் அங்குச் சென்று உரைத்திடுபவை உள்ளத்தில் ஊற்றுப் பெருக்கெடுத் தோடி வருபவை என்கின்றார். ஆயின் இங்கு இருந்தபோது அஃதே சொன்னார்! எனின் இன்று அங்கு உள்ளம் உரைப்பது என்றுரைப்பவை தம்மை நாளை உதட்டசைவே! என்று கூறிடமாட்டார்கள் என்பதற்கு எது உறுதி!!

உண்மை எது, போலி எது என்று எண்ணிடும் போதன்றி, பிறிதோர் நேரம், அவர் கூற்று பலபற்றி நான் பொருட்படுத்திக் கொண்டில்லை. உலகம் என்றால், பல இருக்கத்தான் செய்யும் என்றெண்ணி இருந்து வருகின்றேன். அஃதே போல, இவர் போன்றார் நிலைகண்டு, உலகின் போக்கை உணர்ந்துகொள் தம்பி! என்றுனக்கும் கூறுகின்றேன். அவர் பேச்சு, அவர் நிலையின் விளைவு என்பதனை அறிந்துகொள்ளின், அப்பேச்சுதனைக் குறித்துக் கவலைகொளல் வீண் என்ற உணர்வு பெற்றிடலாம்.

என்னென்ன விந்தையான மாறுதல்களைக் காண் கின்றோம் என்பதனை எண்ணிடும்போது, நகைத்திடக்கூடத் தோன்றும். அந்த வகையில் அவர்கள் நம்மிடம் இல்லாமலேயே, நமக்குப் பொழுதுபோக்குத் தந்திடும் வேலையையும் செய்து வருகின்றனர் என்றும் கொள்ளலாம். நான் அவ்விதமாகத்தான் எண்ணிக் கொள்கின்றேன்.

தேர்தல் நெருங்க நெருங்க, தம்பி! இவர் போன்றாரின் வேலை சுறுசுறுப்படையும். "அங்கு இருந்த பேர்வழி' என்பதனையே ஓர் "தகுதி' யாக்கிக் கொண்டு தூற்றிடுவர்; அதற்காகத் தானே இவர்களை இங்கு அமர்த்தி இருக்கிறோம் என்ற எண்ணத்தில் புதிய இடத்துத் தலைவர்களும் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவர். இந்த நிலைமையினை நன்கு உணர்ந்து கொண்டால், இருந்துவிட்டுப் போனவர்களின் தூற்றல் பற்றிக் கவலைப்படக்கூடாது என்ற தெளிவு பிறந்திடும். அதற்கே இதனை விளக்கினேன்.

தம்பி! கோட்டான்கள் அனைத்தையும் தொலைத்தா லொழிய நமது இசையின் இனிமையையும் அருமையையும் எங்ஙனம் மாந்தர் உணர்ந்திட முடியும் என்று குயில் எண்ணுகிறதோ! இல்லையே! எத்தனை எத்தனையோ கத்தல், கதறல், உறுமல், குமுறல் இருந்திடினும் நமது குர-னிமையை நுகர்வோர் நுகர்வர் என்றன்றோ மாங்குயில் பூஞ்சோலையில், கூவி இன்பத்தை வழங்குகிறது.

கோட்டான் பற்றிய குறிப்பினைத் தந்ததும், நான் படித்த ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது; தருகிறேன்.

முகிலன் என்பார், "தமிழ் மலர்' எனும் சிங்கப்பூர் நாளிதழில் தந்ததிது :

அந்தக் காடு, மனிதர்களின் நடமாட்டமின்றி அமைதி பெற்றிருந்தது, பல்வகையான பறவை இனங்கள் அங்குமிங்கும் பறந்து கொண்டும், அது அதற்குரிய ஓசைகளை எழுப்பிக் கொண்டும் இருந்தன.

காட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கோட்டான், எதையோ நினைத்து வேகமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தது!

அப்பக்கமாகப் பறந்து வந்த ஆந்தை, இந்தக் கோட்டானின் குரலைக் கேட்டு அதற்கெதிரே வந்தமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தது.

"நம் குரலின் இனிமையைக் கேட்டுத்தான் இந்த ஆந்தை இங்கு ஓடி வந்திருக்கிறது' என்று நினைத்த கோட்டான், மேலும் மேலும் வேகமாகக் கத்த ஆரம்பித்தது.

இந்த அலறலைக் கேட்ட ஆந்தை, "இது என்ன வெறும் அலறல்?' என்று கேட்டது.

"என்ன அலறலா? என் குரல் உனக்கு அப்படியா தோன்றுகிறது? என்று கேட்டுவிட்டு ஆந்தையை வெறுப்புடன் பார்த்தது!

"அலறல் என்பது எனக்குத்தான் உரியதென்று இருந்தேன்! ஆனால், இப்போது நீயும் அலற ஆரம்பித்துவிட்டதால், அதை நான் வேறுவிதமாகச் சொல்ல முடியவில்லை' என்று ஆந்தை பதிலளித்தது.

நான் உன் குரலுக்கு முயலவில்லை! என் குர-லேயே ஏற்றமுறத்தான் பயிற்சி செய்கிறேன். அந்த முயற்சியை நீ பாராட்டாவிட்டால், உனக்கு "ரசனையே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்!' கோட்டான் இப்படிக் கூறிவிட்டு மேலும் அதை ஆணவமாகப் பார்த்தது!

"ஆமாம் ஆமாம் எனக்கு "ரசனை' தெரியாதுதான். ரசனை தெரிந்த நீ, என் குரலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று ஆந்தை கூடுவிட்டு அலற ஆரம்பித்தது!

ஆந்தையின் அலறலைக் கேட்ட கோட்டான், "பரவாயில்லையே! இந்த அளவுக்கு உன் தகுதி உயர்ந்திருக்கு மென்று நான் நினைக்கவேயில்லை!' என்று பாராட்டுக் குரல் எழுப்பியது.

கோட்டானின் பாராட்டைக் கேட்டதும் ஆந்தைக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை! "நண்பா, இன்று முதல் உனக்கு நானாகவும் எனக்கு நீயாகவும் பாராட்டிக் கொண்டு வாழ்வதுடன், இந்தக் காட்டிலேயே - ஏன் வேறு எந்தக் காட்டிலும் நம் புகழை நிலைநாட்ட நாம் பாடுபடுவோம்!' என்று கூறியது.

கோட்டானுக்கு ஆந்தையின் நட்புக் கிடைத்ததும் அதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அந்தச் சமயம் அங்கு வந்த குயில், பக்கத்திலிருந்த மரத்திலமர்ந்துகொண்டு, தன் குரலின் இனிமையை அடக்கமாகப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்திலிருந்த மற்ற குருவிகள், அந்தக் குரலைக் கேட்டுப் பலவகையான பாராட்டுக்களை எழுப்பிக் கொண்டிருந்தன.

இந்தக் காட்சியைக் கண்ட ஆந்தையும் கோட்டானும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன.

"என்ன நண்பா, இந்தக் குயிலின் குரலை உன்னால் ரசிக்க முடிகிறதா?' - ஆந்தை கோட்டானைப் பார்த்து இப்படிக் கேட்டது!

நம் குரலையே நாம் ரசிக்க நேரமில்லாதிருக்கும் போது, இவற்றுக்கெல்லாம் நமக்கேது நேரம்? அந்தக் குயிலைச் சுற்றிக்கொண்டிருக்கும் மற்றவற்றுக்கு "ரசனை' என்றால் ஏதாவது தெரியுமா? தெரிந்திருந்தால் இப்படிக் காட்டுக் கூச்சலைக் கேட்க ஓடுமா? என்று கோட்டான் ஆரம்பித்தது!

"நமக்கு மற்றவற்றைப் பற்றி அக்கறையில்லை! அதுகள் ஒரு வழி என்றால் நாமும் அவ்வழியில்தான் செல்ல வேண்டுமா? நமக்கென ஒரு வழி இருக்கும் போது நாம் ஏன் அவ்வழியை நாட வேண்டும்?' - ஆந்தையின் இந்தப் பதில் கோட்டானுக்கு குதூகலத்தையளித்தது!

"ஆம் நண்பரே' நம் திறமையை நாம் புரிந்திருக்கும் போது, பிறர் புரிந்தாலென்ன புரியாவிட்டால் என்ன நீ உன் குரலை எழுப்பு, நான் ரசிக்கிறேன். நான் என் குரலை எழுப்புகிறேன் நீ ரசி!' என்று கோட்டான் கூறியதும் இரண்டும் சேர்ந்து ஏக காலத்தில் அந்தக் காட்டில் குரலெழுப்ப ஆரம்பித்தன.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. குயிலின் புகழுக்கு இணையாக வரவேண்டுமென்று நினைத்த ஆந்தையும் கோட்டானும், எங்கெங்குப் பறந்து சென்று கத்த முடியுமோ அங்கெல்லாம் சென்று கத்திப் பார்த்தன! அலறிப் பார்த்தன!

அலறலையும் ஆரவாரத்தையும் கண்ட மற்ற புள்ளினங்கள் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் சென்று கொண்டிருந்தன!

***

மற்றோர் வகையினரும் உண்டு; இவர்கட்கும் தேர்தல் நேரம், சுறுசுறுப்பு மிக்க நேரம். இவர்களின் வேலை, வதந்திகளைக் கட்டிவிடுவது.

தெரியுமா, தெரியுமா? என்று துவங்கிச் சிப்பிக்குள் முத்து இல்லை, செந்தேள் குட்டி உளது; கண்ணுக்குள் கருமணி இல்லை, கண்ணாடித்துண்டு உளது என்று எதை எதையாவது மூட்டிவைப்பர்.

தாம் கூறுவதை, மற்றவர் நம்பிட வேண்டும் என்பதற்காகக் கூட அல்ல, நம்புவார்கள் என்ற எண்ணம் கொண்டுகூட அல்ல, சில நேரமாகிலும் வதந்தி நெளியட்டும், பலர் காணட்டும், அதுபற்றிப் பேசட்டும், அந்தப் பேச்சிலிருந்து ஏதேனும் புகை கிளம்பட்டும், பகை மூளட்டும் என்ற கெடு நினைப்புடன்.

அவரும் அவரும் கூடிக்கூடிப் பேசுவது ஏன்?

இவருக்கு உள்ள திறமை அவருக்கு உண்டா என்பது பற்றிப் பலமான விவாதம் நடக்கிறதாமே?

எவர் பற்றியும் எனக்குக் கவலை இல்லை என்று அவர் மிகக் கடுமையாகப் பேசினாராமே?

அவர் பக்கத்தில் நான் அமரமாட்டேன் என்று இவர் பிடிவாதம் செய்தாராமே?

இப்படிப்பட்ட பேச்சுக்களை அவிழ்த்துவிடுவர், அமைதியுடன், துளியும் பரபரப்புக் காட்டாமல், ஏதுமறியாதார் போன்ற கோலம் புனைந்து கொண்டு.

அப்படியா? என்று சிலர் கேட்பார்கள்.
அண்டப்புளுகு என்று சிலர் கூறுவார்கள்.
இருக்கவே இருக்காது என்று சிலர் சொல்லுவார்கள்.
ஆதாரம் காட்டு என்று சிலர் அறைகூவல் விடுப்பார்கள்.

ஆக மொத்தம், அந்த வதந்தியை அவிழ்த்துவிடுவதன் மூலம், பலருடைய கவனத்தை ஈர்த்திட முடிகிறது. பலவிதமான எண்ணங்கள் எழச் செய்ய முடிகிறது அல்லவா; அதுவரையில் இலாபம் என்ற நினைப்புடன் பேசிடும் போக்கினர், தேர்தல் நெருங்க நெருங்க, வேகத்துடன் வேலை செய்வர்.

தம்பி! வெறும் வதந்தியைப் பரப்பியே, இங்கிலாந்து நாட்டைப் போரிலே இழுத்து விட்டுவிட்ட சம்பவம் ஒன்று உண்டு.

அந்தப் போருக்கே, ஜென்கின்ஸ் காது பற்றிய போர் என்று பெயர்.

ஜென்கின்ஸ் என்ற பிரிட்டிஷ் கடற்படைப் பிரிவினைச் சேர்ந்த ஒரு வீரனை, மடக்கிப் பிடித்துப் பிரான்சுக்காரர்கள், அவனுடைய காதை அறுத்துப் போட்டுவிட்டார்கள் என்று எவனோ ஒரு வதந்தியைக் கட்டிவிட்டான்.

அப்படி நடந்திருக்குமா? யார் கண்டார்கள்? ஜென்கின்சு என்ன சொல்கிறான் என்றெல்லாம் யோசிக்கக்கூட இல்லை. வதந்தி வேகமாகப் பரவப் பரவ, சிந்தனை பாழ்பட்டது, சீற்றம் மிகுந்தது, காது அறுத்த கயவர்களை விடக்கூடாது! பழிக்குப் பழி! இரத்தத்துக்கு இரத்தம்! காதுக்குக் காது! என்ற காட்டுக் கூச்சல் கிளம்பிற்று. போரே மூண்டது. போர் முடிவுற்ற பிறகுதான், ஜென்கின்ஸ் என்ற பெயருடையான் எவனும் பிரிட்டிஷ் கடற்படையில் இல்லை; எவனுடைய காதையும் பகைவர் துண்டித்துப் போடவில்லை; அது வெறும் கட்டுக்கதை என்பது தெரிந்தது. ஆனால் அதற்குள் ஒரு போரே நடந்தேறி விட்டது;

இது போன்ற வதந்திகளைத் தமது தனிச் சரக்கு ஆக்கிக்கொண்டுள்ள விபரீத வியாபாரிகள் தேர்தல் சமயத்தில் தமது கடையினை விரிப்பர்; பரபரப்பு தன்னாலே மூண்டுவிடும் நேரம் இது என்பதாலே.

எவரெவர் நமது கழகத்தின் பொறுப்பினை ஏற்றுக்கொண் டுள்ளனரோ, அவர்கள் நமக்குத் தெரிவிக்க வேண்டியவைகளை, தெரிவிக்கவேண்டிய நேரத்தில், தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவிப்பார்கள்; நமது கழகப் பொறுப்பிலே ஈடுபாடு கொள்ளாதவர்கள் எதை எம் முறையில் கூறிடினும், நாம் அது குறித்துக் கவலை கொள்ளக் கூடாது என்ற திடமனம் கொண்டிட வேண்டும். நமது தோழர்கள் அத்தகைய திடமனம் கொண்டோ ராக இருந்திடுவதாலேயே, பல ஆண்டுகளாக, தனித் திறமை காட்டிக் கட்டிவிடப்பட்ட வதந்திகள், மூட்டிவிடப்பட்ட கோள்கள், நமது கழகத்தை ஏதும் செய்திட இயலாது, வீழ்ந்து பொடிப் பொடியாகிவிட்டன.

இந்தியாவுக்குக் கிடைத்திடும் "சுயராஜ்யம்' துக்க ராஜ்யம் என்று பெரியார் கருதி, ஆகஸ்ட்டு பதினைந்தாம் நாளைத் துக்க நாள் என்று நடாத்திட அறிக்கை விடுத்ததை நான் மறுத்ததனை அறிந்திருப்பாய்.

தம்பி! அப்போது என்னைப்பற்றிக் கட்டிவிடப்பட்ட வதந்திகள் கணக்கில் அடங்கா!

இப்போது எண்ணிக் கொண்டாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது.

ஒரு வெடிச் சிரிப்புக் கிளப்பிவிட்டுக் கேட்பார் ஒருவர்

என்ன விலை கெஜம்! நேர்த்தியாக இருக்கிறதே சட்டைத் துணி? கதர்தானே!

கதர் அல்ல ஐயா வழக்கமாக நான் போடும் கைத்தறித் துணிதான்.

கதர் என்று பார்த்தேன், கைத்தறித் துணியா!

தம்பி! கேலி புரிகிறதல்லவா? ஆகஸ்ட்டு பதினைந்து துக்க நாள் அல்ல என்று நான் எழுதியதால், நான் காங்கிரசாகிவிட்டேன் என்று பொருள் கொண்டு, பலப்பல வதந்திகளைக் கிளப்பினர்.

நான் மட்டும் வதந்திகளின் தன்மையையும். அவற்றினைக் கிளப்பிவிடுவோரின் போக்கினையும் ஓரளவு தெளிவாகத் தெரிந்துகொண்ட நிலையினனாக இல்லாதிருந்திருப்பின், என்னென்ன நேரிட்டிருக்கக்கூடும் என்பதை எண்ணும்போது நடுக்கமே எடுக்கிறது.

வதந்திகளைக் கிளப்புகின்றவர்கள், பொறுப்பான பதவியினராக இருந்திடினாவது, அவர்களைக் கேட்கலாம், இது சரியா, முறையா என்று.

தவறானவைகளைக் கூறிடினோ, பழி சுமத்திடினோ, குற்றம் சாட்டிடினோ, வழக்கேகூடத் தொடுக்கலாம்,

அவ்விதமான பேச்சுகளை, பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவதில்லை. பேசிடுவோரோ எதுபற்றியும் கவலையற்ற நிலையினர். அவர்களிடம் வாதாடுவதோ, மறுப்பு உரைப்பதோ, விளக்கம் கேட்பதோ வீண் வேலை.

மேடைமீது ஏறி, அத்தகைய ஒருவர்

உங்கள் அண்ணாதுரைக்கு வலக் கண் கெட்டு விட்டது; பெயர்த்து எடுத்துவிட்டார்கள்; இப்போது உள்ளது கண்ணாடியால் செய்யப்பட்டது.

என்று பேசுகிறார் என்று வைத்துக்கொள். உடனே நான் பதறிப்போய், ஊரூருக்கும் ஓடி, ஒவ்வொருவர் முன்னாலும் நின்று. ஐயா! என் கண்ணைப் பாருங்கள்! வலக் கண்ணை! கண்ணாடி அல்லவே! - என்றா கேட்டுக் கொண்டிருக்க முடியும்?

அப்படியே கேட்டிடின் என்ன எண்ணிக்கொள்வார்கள்? கண் சரியாகத்தான் இருக்கிறது ஆனால், ஐயோ பாவம், மூளைதான், என்னவோ போலாகிவிட்டது என்று கூறிப் பரிதாபப்படுவார்கள்.

ஆகவே தம்பி! வதந்திகளுக்கு மதிப்பளிப்பது நேரக்கேடு. அவைகளை மறுப்பது, அறிவுக்கேடு என்பதனை உணர்ந்திடின், அவை பற்றிய கவலையைக் கொள்ளாதிருக்கலாம்.

தம்பி! நமது கழகத் தோழர்களின் மனத்தைக் குழப்பிட, இதுவரையில் எண்ணற்ற வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன; எவற்றினையும் நமது தோழர்கள் பொருட்படுத்திடவில்லை. பொழுதைப் பாழாக்கிக் கொள்ளவில்லை என்று தெரிந்தும் பார்க்கலாம்! இந்த முறை பார்க்கலாம்! இந்த வதந்தியாவது ப-க்கிறதா பார்க்கலாம் என்ற ஆசைகொண்டு அலைவோர் நிரம்ப உள்ளனர். அவர்தம் வேகம் அதிகமாகும் காலம் இது. தேர்தல் காலம். ஏற்கெனவே உன்னிடம் உள்ள தெளிவும் திடமனமும் மேலும் நேர்த்தியானதாகிட வேண்டும். அதற்கே இதனைக் கூறுகின்றேன்.