அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வந்திடு! ஒளி தந்திடு!
2

பிறிதோர் வகையினரும் உளர். அவர்தம் தொழில் திறனையும் நான் காணுகின்றேன்.

உங்களுடைய கல்யாணி, மிக அருமை! மிகமிக அருமை! தோடியில் ஒரு கிருதி பாடினீர்களே அது முதல் தரமாக அமைந்திருந்தது. ஆனால், சற்று தாளத்தை மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும்; அடிக்கடி தவறுகிறது! தாள ஞானம், சங்கீதத்துக்கு அடிப்படை அல்லவா!!

இவ்விதம் ஒரு இசைவாணனிடம் பேசி, அவரைப் பாராட்டவும் செய்கிறேன், கண்டிக்கவும் செய்கிறேன்; நான் நடுநிலை நின்று "குணதோஷம்' காண்பவன் என்று கூறிடுவோர் உண்டு!

ஒரே மொத்தமாகக் கண்டித்தால், இவருக்கு அவரைப் பிடிக்காது என்று ஒதுக்கிவிடுவார்கள். அந்த விமரிசனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதனால், புகழவும் செய்கிறேன், கண்டிக்கவும் செய்கிறேன் என்று போலிப் போக்குக் காட்டி, தமது பேச்சுக்கு ஒரு இடம் தேடிப்பிடித்துக் கொள்பவர்கள் உண்டு; இசைத் துறையிலே மட்டுமல்ல; நமது துறையிலும்.

அவர்கள், கழகத்தின் தொண்டர்கள் அருமையான வர்கள், அவர்கள் உழைப்பு தரமானது, இலட்சியப் பிடிப்பு நேர்த்தியானது. இது போன்ற தொண்டர்களை எங்கும் காண முடியாது. ஆனால்... ஆனால்... பாவம், அவர்களுக்கு விவரம் புரிவதில்லை, தெளிவு இருப்பதில்லை. எவனெ வனையோ தலைவன் என்று தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றனர்!

என்று குத்திவிடுவர். தொண்டர்கள் தரமானவர்கள், தலைவர்கள் படுமோசம்! என்று கூறி, தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே ஒரு "பிளவை' உண்டாக்கி வைப்பதாக ஒரு மயக்க உணர்ச்சி அவர்களுக்கு.

இலட்சியப் பிடிப்பு, நேர்த்தியான உழைப்பு கொண்ட இயல்பினராகத் தொண்டர்கள் இருக்கும்போது, அவர்கள் தெளிவு அற்றவர்களாகவும், விவரம் புரியாதவர்களாகவுமா இருப்பார்கள்? பொருந்தவில்லையல்லவா!

அதனால்தான் தம்பி! அவர்களின் அந்தப் பேச்சு பொருளற்றது என்பதனையும், பொச்சரிப்பைத் தனி முறையில் காட்டிக்கொள்ளும் பேச்சு அது என்பதனையும் நமது கழகத் தோழர்கள் உணர்ந்துகொண்டு விட்டுள்ளனர். அந்த விதமான பேச்சு, பலன் தராது போயிற்று.

ஓரிரு திங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

புதிதாகக் காங்கிரசில் சேர்ந்தார் ஒருவர்; கழகத்தவர்கூட அல்ல; கழகத்துடன் நேசத் தொடர்பு வைத்துக் கொண் டிருந்தவர்.

கழகத் தோழர் எவரும் அவரைக் கண்டு, கண்ணீர் மல்கிட நின்று எமை விட்டுப் பிரிந்தீரே ஐயா! என் செய்வோம் இனி நாங்கள் சொல்வீர்! - என்றெல்லாம் கேட்டிடவில்லை.

அவரே ஓர் நாள், முடி திருத்தகம் சென்றார்; சென்றவர் நான் யார் தெரியுமா என்றும் கேட்டார், முடிதிருத்தகத்திருந்த தோழரை.

அறிவேன் ஐயா! காங்கிரசில் புதிதாகத் தாங்கள் சேர்ந்த செய்தியையும் படித்துள்ளேன் ஐயா! என்று கூறினார். புகுந்தவருக்குக் கோபம்.

ஆமாம்! காங்கிரசில் சேராமல் என்ன செய்வது? உங்கள் அண்ணாதுரைதான் கழகத்தைக் கெடுத்து விட்டானே, நான் சொன்ன நல்ல யோசனைகளைக் கேட்க மறுத்துவிட்டானே, அதனால்தான் நான் காங்கிரசில் சேர்ந்தேன் என்றாராம்.

கடை உரிமையாளர், மெள்ளச் சிரித்தபடி,

கழகத்தைப் பற்றிக் கழகத்தார் கவனித்துக் கொள்வார்கள். ஐயா! தாங்கள் காலமெல்லாம் நான் சுயேச்சையாகவே இருந்திடுவேன் என்று பேசி வருவீரே! இன்று காங்கிரசில் சேர்ந்தீரே! ஏனோ? என்று கேட்டு விட்டு, கழகம் வளர நல்ல நல்ல யோசனைகளை எல்லாம் அண்ணாதுரையிடம் சொன்னதாகவும் அவர் கேட்க மறுத்ததாகவும் செப்பினீரே, கழகத்தில், யோசனைகள் கூறப்படும் இடத்திலே நான் தங்களைக் கண்டதே இல்லையே, ஒரு நாளும். பொதுக் குழுவில் பேசுவர், யோசனைகள், திட்டங்கள் பற்றி. அங்கு நான் கண்டதில்லை தங்களை. எப்படி எனக்கது தெரியும் என்கின்றீரோ! நான் பொதுக்குழு உறுப்பினன்!! என்று கூறிடவே, புதுக் காங்கிரசாருக்குக் கோபம் கொப்பளித்து வந்ததாம். முடிதிருத்தகம் நடத்து, அரசியல் பேசாதே என்று கூவினாராம்! வாருமய்யா, திருத்துகின்றேன் முடிதன்னை என்று அத்தோழர் இரு பொருள் கொண்ட பேச்சைத் தந்தாராம்.

கழகத் தோழர்களின் தெளிவினை விளக்கிடத் தக்க நிகழ்ச்சிகள் இதுபோலப் பல உண்டு.

என்றாலும், மூட்டிவிடுவோர் கடைசி மூச்சு உள்ளவரை முயற்சி செய்தபடியேதான் இருப்பர். அது அவர் வேலை! அல்ல! அல்ல! அருங்கலை!! ஆகவே தம்பி! அவர் போன்றார் உளர் என்ற உணர்வுடன், விழிப்புடன் இருந்திடல் நன்று.

***

மற்றும் ஓர் வகையினர் உண்டு. அவர்கள் கழகத்தின் கொள்கை, வளர்ச்சி இவை பற்றிக் குறையேதும் கூறார்; மாறாகப் பாராட்டவும் செய்வர்; செய்துவிட்டு, "ஆனால்' எனும் பதத்தை ஒட்டவைத்துச் செப்புவர்,

இன்னும் கொஞ்சம் முறையாக, மேலும் சற்றுத் தரமாக, இன்னமும் சற்றுக் கண்டிப்புடன்.

கழகத்தை நடத்திச் சென்றிடின் இன்றுள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு செல்வாக்கு வளரும் கழகத்துக்கு என்பர்.

இந்த அளவு கழகம் வளர்ந்ததற்கு, ஒப்பி உழைத்திடாதார்,

கழகம், இன்னல் பல ஏற்றுத் தத்தளித்த நாட்களிலே நேசக் கரம் நீட்டிடாதார்,

கழகத்தின் அமைப்பு முறை ஏற்பட்ட வரலாறு தன்னை அறிந்திடாதார்,

இன்று வளர்ந்துள்ள நிலை கண்டு, பாசம்தனை வருவித்துக்கொண்டு பேசிடுவார் புது முறைகள்பற்றி.

உடன் இருந்து பணியாற்றிட வரமாட்டார்.

எது செய்தால் என்ன ஆகும் என்ற கணக்குப் பற்றி ஆய்ந்திடவும் ஒப்பமாட்டார். ஆனால் நல்ல நல்ல யோசனைகள் தந்திட மட்டும் முனைவார்.

அவர் போன்றார் பேச்சு, பயன் ஏதும் தாராது மாறாக, ஓஹோ! நாம் நமது கழகமதில் புதுமுறை புகுத்திடாமல் இருந்து வருவது தவறு என்றோர் துடிப்புணர்ச்சி ஏற்பட்டு, ஏதேனும் மாற்றங்கள், திட்டங்கள், முறைகள்தமைப் புகுத்திட முனைந்திடின், நல்லது வந்திடுமோ உள்ளது கெட்டிடுமோ என்பது யாரறிவார்!

பாராட்டுத் தெரிவித்து, பரிவும் காட்டி, பல புதுத் திட்டம் பேசிடும் போக்கினரோ, பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார். கழகத்தின் வடிவம் குலைந்தாலும், வலிவு கெட்டாலும் வருந்தவும் செய்யமாட்டார். ஏனெனில் அவர் உழைப்பால் அமைந்தது அல்லவே இக்கழகம்! இதன் உயிர்ப்புச் சக்தி எங்கு உளது? இதன் வளர்ச்சியின் கட்டங்கள் எவையெவை என்பதனை, தூர நின்று கொண்டிருந்த அவர் எங்ஙனம் அறிவார்? நீ அறிவாய் உன் உழைப்பைக் கொட்டி உருவாக்கிய கழகம் இது என்பதனால். ஆயினும் உனக்கும் எனக்கும் தம்பி! உற்ற நண்பர்போல நடித்துக் கூறிடுவார் யோசனைகளைப் பொதி பொதியாக! ஏனோ வென்றால், சிற்சிலருக்கேனும், இவ்விதமாகவெல்லாம் கழகம் நடந்திட வேண்டும் என்ற எண்ணம் குடையாதா; குடைச்சல் காரணமாக மனக் குறை வளராதா; மனக்குறை காரணமாகக் கழக வளர்ச்சி குன்றாதா எனும் ஓர் நப்பாசை. உடனிருந்து திட்டம் முறை தந்து உழைத்திட முன்வருவோர் என்றால், அவர் பேச்சைப் போற்றிடத்தான் வேண்டும். அப்பேச்சுக் குறித்து நாம் கலந்துரையாடிடத்தான் வேண்டும். பிறகு அதற்கேற்பச் செயல்படவும் வேண்டும். தேவை முறை நியாயம். ஆனால் உடனிருக்க மாட்டாதார் ஓராயிரம் கூறிடினும், பயன் என்ன? பயன்கூடக் கிடக்கட்டும், கூறுவதன் நோக்கமென்ன? நாம் செய்யும் காரியத்தில் நமக்கே ஓர் மனக்குறை மூட்டிடச் செய்வதற்கு நன்றா அஃது. அல்ல! அல்ல! இதனை அறிந்திடும். தோழர் அணி மிகப் பெரிது. ஆகவேதான், இப்போக்குக் கொண்டோரின் முயற்சிகளும் பலிக்கவில்லை!

தம்பி! இலட்சியப் பயணம் வெற்றியுடன் நடைபெற வேண்டுமெனில், அதற்கான பாதை அமைவதுடன், பார்வை யைக் கவரத்தக்க சூழ்ச்சிகளின் தன்மையை அறிந்துகொண்டு அவற்றினைத் தவிர்த்திடும் திறனும் பெற்றிட வேண்டும். எனவேதான், உன்னைச் சூழத் தூற்றித் திரிந்திடுவோர், இட்டுக்கட்டிப் பேசிடுவோர், வதந்தி கிளப்பிடுவோர், மயக்கமூட்டிடுவோர், பேதம் விளைவிக்க முயற்சிப்போர், தட்டிக் கொடுத்துத் தடுமாறவைத்திடுவோர் ஆகிய பல்வேறு இயல்பினர் உள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டினேன், விழிப்புடன் இருந்திட வேண்டும் என்பதற்காக.

ஆனால் தம்பி! உன்னுடன் இருப்போரும் சாமான்ய மானவர்கள் அல்ல. எந்த அரசுக்கும் அடித்தளமாக அமைந்திடுவோர் எவரோ அந்த ஏழையர் உன்னுடன் உள்ளனர்.

எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து உளம் வெதும்பியுள்ள பாட்டாளித் தோழர்கள், உன்னால் தம் குறை தீரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அவர்களிடம் பொன்னும் பொருளும் இல்லை, அதே போல் பொய்யும் புரட்டும் இல்லை.

அவர்களிடம் உறுதி இருக்கிறது; உள்ளன்பு காட்டுகின்றார்; உன் தொண்டு விரும்புகின்றார்.

கள்ளங் கபடமறியாத நல்லோர்கள் அவராவார். இன்னலைப் போக்கடிக்க இழிவுதனைத் துடைத்திட என்ன வழி என்று கேட்டு நிற்கின்றார். உனக்கு எல்லாத் துணையினையும் தந்திட முனைகின்றார்.

காட்டாட்சி நடாத்திடவே கனவான்கள் முயலுவதும். கனவானின் பேழை பலம் தமக்குண்டு எனும் துணிவால், எதிர்ப்பற்ற ஆட்சியினை அமைத்திடலாம் எனும் நினைப்பால் காங்கிரசார் முனைவதுவும் அவர் அறிவார்.

அஞ்சற்க என்று கூறுகின்றார்; பேச்சுடன் நின்றார் இல்லை; ஆதரவு தருகின்றார்.

ஆலைக்கு அரசர்களும் சீமான் சிற்றரசர்களும் புடைசூழ நின்றிடும் நிலை பெற்ற காங்கிரசை எதிர்த்து நிற்கும் சாமான்யர்களாம் நமக்கு, வாரி வழங்கியுள்ளார் முப்பது இலட்சத்துக்கும் மேலாக ஓட்டுக்களை,

உதயசூரியன் எமக்கு ஒளி அளிப்பான், வாழ்வளிப்பான், எமக்கு ஏற்ற சின்னம், இயற்கைச் செல்வச் சின்னம் என்கின்றார்; அறிவாய் நீயும்.

தர்பாரில் இடம் பெற்றார் எந்தத் "தகத்தகாயம்' காட்டிடினும் உதயசூரியன் அளிக்கும் ஒளிக்கு நிகரல்ல என்றுரைத்து திரட்டித் தந்துள்ளார் ஆதரவு பெருமளவு.

இத்தனைக்கும் தம்பி! ஏழெட்டுத் தலைமுறைகள் உண்டு எம் தலைவர்கள் காண்! கோபாலகிருஷ்ண கோகலேயும் திலகர், பானர்ஜியுடன் லாலாலஜபதிராயும், வங்கத்துச் சிங்கம் போல் வகை வகையாய் உண்டெமக்கு பர்டொலி வீரரவர் சர்தார் படேலுடனே, பந்துலுவும் பிரகாசம் பற்பலரும் எம் தலைவர். எல்லோர்க்கும் மேலாக எம்மான் காந்தி உண்டு. எட்டுத் திக்கதனில் புகழ் பரப்பி வந்திட்டார் எமது நேருவுமே; அவர் பாதை நடந்திட்டார் மறைந்த லால்பகதூரும். அவரெல்லாம் அளித்திட்ட வரலாறு எமக்குண்டு என்று காங்கிரசில் இடம் பெற்றோரெல்லாம் இயம்பிடுவதுபோல, நாம் கூறிட பாங்கு வாய்ப்பு இல்லை.

இன்றுள்ள காங்கிரசார் - இல்லை இல்லை -இன்றைய காங்கிரசில் உள்ளோர்கள் - பண்டைப் பெருமையினை, மிகு வரலாற்றுச் சிறப்பதனைக் காட்டிக் கண்சிமிட்டி உள்ளம் கவர முனைகின்றார்.

நாமோ, வல்லோர்கள் சமைத்தளித்த வரலாற்றின் மீது நின்று, எத்தனை உயரம் நாங்கள் பாரீர் என்று கூறிடவில்லை. ஆனால் வரலாறு சமைக்கின்றோம்.

ஏழெட்டுத் தலைமுறைகள் பெற்றளித்த பெருநிதியால் பொலிவு பெறுகின்றார், இன்றுள்ள காங்கிரசார்; பொலிவினை அழித்தும் வருகின்றார். நாமோ புதியதோர் காலம் தன்னை உருவாக்கி வருகின்றோம்.

தியாகம் பல செய்து சுதந்திர ஜோதி கண்டார் பெரியோர் - இன்று அதனைப் பயன்படுத்தி வெளிச்சம் போட்டு உலவுகின்றார் காங்கிரசில் இன்றுள்ளார். நாமோ, தியாகத் தீயினில் நிற்கின்றோம் தொடர்ச்சியாக.

எனவேதான், பழங்கதை பேசுவோர் பக்கம் நின்றிடாமல், பணியாற்றிடும் நமக்குப் பக்கபலம் தந்திடவே திரண்டு வருகின்றார் ஏழையர் எல்லோரும்.

நமக்குள்ள வலிவினையும் நமைக் கெடுக்க நினைப்போர்கள் செய்யும் முறையும் எடுத்துக் கூறிவிட்டேன். இக் கணக்கை ஆய்ந்து பார்த்திடுவாயேல், விழிப்பு தேவை. அஃதேபோல் வெற்றி நம் பக்கம் எனும் நம்பிக்கை கொண்டிடவும் வாய்ப்பு உண்டு என்பதையும் உணர்ந்திடுவாய். உணர்ந்ததனை நான் உரைத்தேன்.

பயணம் - பாதை - பக்கம் உள்ளோர் - பாழ்படுத்த முனைவோர்கள் - இவை யாவும் காட்டுவதன் நோக்கம் தம்பி! தெளிவுடன் தொடர்ந்து நம் பணி தன்னைச் செய்திடத்தான்.

உனைச் சூழ உள்ளோரின் உள்ளம் அறிந்திடுவாய், அவர் முறையும் தெரிந்துள்ளாய். உன்னுடன் உள்ளோர்கள் உளம் அறிவாய்! அவர் உள்ளன்பும் தெரிந்துள்ளாய்.

ஆகவே உவகை கலந்ததொரு உறுதியுடன், விழிப்புடன், ஏறு! முன்னேறு? ஏறே! நீ முன்னேறு! முன்னேற்றப் பாதையிலே நடைபோடும் நல்லோனே! நாடு உன்னிடம் எதிர்பார்ப்பது நிரம்ப. அதற்கேற்ற தன்மையுடன் தொண்டாற்றிட முனைவாய். அந்தத் தொண்டு புரிந்திடுவோர் ஆயிரவர், ஆயிரவர்! பேரூரில் சிற்றூரில் வாழ்கின்ற உழைப்பாளர்; ஏர் பிடிப்போர் சீர் அளிப்போர், உன் தோழர்! வருகின்றார் அவரெல்லாம், மாநாடு மாண்புபெற.

நத்திப் பிழைத்திடாத நல்லோர்கள் வந்திடுவார்!

கத்தும் கடல் அடக்கிக் கலம் விட்ட முன்னோரின் "மரபு' இதுவென அறிந்து மார்தட்டி நிற்போர்கள், மறவர் வருகின்றார் மாநாடு மேன்மை பெற.

அரசியல் சதுரங்கம் ஆடுவோர் அல்ல நாங்கள்; அன்னைத் திருநாட்டின் வாழ்வு வளம் பெற்றிடவே எமதுயிரும் ஈந்திடும் வீரர் குழாம் யாமென்று கூறிப் பவனி வரும் குன்றனைய நெடுந்தோளர் வருகின்றார் நீடுபுகழ்த் திருச்சிப் பதி தன்னில் திரண்டிடும் தீரருடனிருக்க.

மாநாடு திருச்சியிலே; மணம் எழும் தமிழகமெங்கணுமே. எழிலார்ந்த அம்மாநாட்டில், இன்ப ஒளி கண்டிடலாம்.

எமதூரில் இது நிலைமை; மாற்றார் மருள்கின்றார், வெற்றி எமக்கே என்று பல்வேறு பக்கம் வாழ்வோர்கள் பேசிடுவர்; அந்தப் பாகு பருகிடவே, வந்திடுவாய் தம்பி! உன் உடன் பிறப்பு புடை சூழ.

ஆங்காங்கு நம் கழகக் கோட்டைகள் அமைந்த விதம் பாங்காக எடுத்துரைப்பார்; பழச்சாறாக இனிக்கும் அச்சேதியுந்தான்.

இன்ன தொகுதியிலே இன்றிந்த நிலைமை தோழா! இன்னாரின் "இருப்பு' இல்லாது போயினதால், இழுக்கப் பார்க்கின்றார். இன்னொரு பெரும் புள்ளியினை என்ற விவரம் பேசிடுவர், நாட்டு நிலை உணர்ந்திடலாம்.

ஆங்காங்கு தாம் சென்று ஆற்றிய உரை கேட்ட மக்கள் கொண்டுள்ள உணர்ச்சியின் வேகமதை பேச்சாளர் எடுத்துரைப்பார், பார்த்திடுவாய் தமிழகந்தன்னை.

ஆட்சி முறை தன்னின் இலக்கணமும், அது வழுவியதால் இன்றுள்ள ஆளவந்தார் தந்துள்ள அவதியதும், கூறிடுவர் நம் தோழர், கூர்த்த மதி படைத்தோர்; கருத்துக்கு விருந்தாகும்; பெற்றிடவே வந்திடுவாய்; பெறட்டும் மற்றவரும், உடன் அழைத்து வந்திடுவாய்.

கன்னலின் சுவையன்றோ, காவிய நடையன்றோ, பூங்காற்று வீசுதன்றோ, புல்லரைச் சாய்க்கவல்ல புயலன்றோ என்றெல்லாம் சொலத்தக்க உரையாற்றி, உள்ளம்தனில் உவகை ஊட்டி, உறுதியினை மேன்மையாக்க வருகின்றார் கழகமதன் காவலர்கள்: காண்பாய், தம்பி! கண் குளிர!!

எங்குள்ளோம், எவ்வாறுள்ளோம், எத்தகைய திறனதனைப் பெற்றுள்ளோம், எந்த நிலை உளது நம் அணி வகுப்பு, என்பதெல்லாம் கண்டிடவே மாநாடு; அறிவாயே அதனை "அரிமா நோக்கு' என நாவலர் கூறியதை; வா! வா! தம்பி! உன் வருகை, மாநாட்டின் நிலை உயர்த்தும், நம் நோக்கம் ஈடேற வழி அமைக்கும்; மாற்றார்க்கு நாம் யார் என்பதனை எடுத்துக் காட்டும்

கருத்துக்கு விருந்து உண்டு என்றேன்; தம்பி! இசையும் உண்டு! கூத்து உண்டு! இவற்றினுக்கும் மேலாக, நாம் காண விரும்பும் எதிர்கால ஓவியத்தைக் கண்டிடவும் வாய்ப்பு உண்டு.

தமிழர் விரும்பிடும் ஓர் நல்லாட்சி எது என்றும், அந்த நல்லாட்சி அமைத்திடவே யாது செய்திடல் வேண்டுமென்றும், கூறிடும் உரிமை பெற்றோய்! கொடுமைதனை வீழ்த்தவல்ல கூர்வாளே! குருட்டறிவைப் பொசுக்குகின்ற ஒளி விளக்கே! உன்னைக் காண, வழிமீது விழி வைத்து நிற்கின்றேன்; அறிவாய் நீயும்.

மாநாட்டில் வந்தமரும் மாத்தமிழர் முகமதனை கண்டிடும் பேறு பெற்றிட்ட போதினிலே, மாற்றார்கள் குவித்துள்ள மாநிதியும் கடுகாகத் தோன்றிவிடும்; மனம் திறந்து நீ பேசிடினோ, அவர் மூட்டும் சூழ்ச்சியெலாம் தூளாகிப் போகும், தூற்றல் தூசு ஆகிப் போகும்; தூய தொண்டுதனை நல்கத் தொகை தொகையாய் இருக்கின்றார் உடன்பிறந்தார் என்பதறிந்தவுடன், உள்ளத்தில் ஓர் எழுச்சி தோன்றும்; வீரம் பொங்கும்.

"உண்மை! இது உண்மை! உயிரனையீர்! நெஞ்சத்தில் திண்மை இருந்தால்தான் வெற்றிச் சுடர் தெரியும்! சாவா? சந்திப்போம், வாழ்க்கை நமக்கென்ன பூவா?

புறப்படுவோம்; புல்லியரைத் தூள் செய்வோம்''

என்ற முழக்கமிட்டுக் கிளம்பினாரே நம் தோழர். இன் தமிழைக் காத்திட. என்னானார்? பசி தீர்க்கப் பயன்பட்டார், பக்தவத்சலனார் ஆட்சிதன்னில் வாய் திறந்து காட்டிற்றே துப்பாக்கி, அதன் பசி தன்மை.

மொழிக் கிளர்ச்சி நடாத்தியதில், மொய்குழலாள் வீழ்ந்தழவே, வீழ்ந்தனர் வீரர் பலர்.

நடை அழகும் நா நல அழகும் பெற்றோன் நான் பெற்ற திருமகனும் என்று பூரித்துக் கிடந்த தாய் காதில் போட்டனர், சுட்டார் ஆளவந்தார்! சுருண்டு வீழ்ந்தான் உன் மகனும்! செத்தான் ஒருவன்! மற்றவர் எங்கே எனக் கொக்கரித்தார் கொடியோர் எனும் சேதியினை.

அன்னை மொழி காத்திடவே ஆற்றலற்று நானிருந்திடப் போவதில்லை. என்னையே நான் தீயிலிட்டு இறந்துபடுகின்றேன், மறந்திடாதீர், என்னை; தமிழ் வாழச் சாகின்றேன்; சாக விட்டிடாதீர் நம் தமிழை என்று செப்பினர், சிங்கத் தமிழர் சிலர். சிந்தினோம் கண்ணீர்; வேறென்ன செய்தோம்?

எங்கும் அடக்குமுறை! என்றும் நடந்தறியாப் பயங்கரங்கள். எல்லாம் தமிழ் தனக்கு இடர்வந்துற்றதுவே என்ற ஏக்கம் காரணமாக.

அவர்கள் அளித்திட்டார் தம் இன்னுயிரை! நாம்?

திரண்டெழுந்து நின்றேனும், போனவர் போக, மிச்சம் உள்ளோர் காண், பெருவெள்ளம்! இந்தியைத் தீயாக்கி இன்தமிழை அழித்திடவே இயலாது அறிந்திடுவீர்! என்றேனும் எடுத்தியம்ப வேண்டாமோ, இறந்துபட்ட இணையற்ற வீரர்தம் மரபினரே நாம் என்பதனை மறக்கப்போமோ!

அந்தப் பெரும் கிளர்ச்சிக்குப் பிறகு, தம்பி! முதன் முறையாய்க் கூடுகின்றோம் திருச்சி மாநாட்டில்; உணர்கின்றாயா அதன் பொருளை?

தமிழ் எந்தன் உயிர் என்போர், உரிமை காக்க உலை நெருப்பிலும் வீழ்வேன் எனும் உறுதி பூண்டோர், நாட்டினில் ஏற்புடைய ஆட்சியது அமைந்தாலன்றி ஏழையர்க்கு வாழ்வில்லை, இன்பம் இல்லை எனும் உண்மைதனை உணர்ந்தோர் வருகின்றார். எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திடோம், விளைந்த காட்டுக் குருவியாகிட ஒருப்படோம், தமிழர் காணீர்! என்று இயம்பிடுகின்றாய், தம்பி! செந்தேன் பாய்கிறது என் செவியில். உன்போல் உள்ளோர்கள் தொகை தன்னை ஒரே இடத்தில் காண்பதற்கு என்போலத் துடித்தபடி உள்ளோர் பலர். எனவே எழு ஞாயிறே! வந்திடு! ஒளி தந்திடு! திருச்சி அழைக்கிறது தீந்தமிழின் சுவைக்கு நிகர் இயல்பினனே! நானும் அழைக்கின்றேன்; வந்திடு! ஒளி தந்திடு!

அண்ணன்,

12-6-66