அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (5)
1

ஆதிக்கத்தின் கருவி
உரிமைப் போர் - ஒரு தொடர்கதை
மால்கோமின் "ஆள்வெறுப்பு'க் கோட்பாடு
டில்மனின் பொறுப்புணர்ச்சி
புயல் வெடித்தது!

தம்பி,

ஆதிக்கம் செலுத்தும் போக்கு ஒவ்வோர் நாட்டில் ஒவ்வோர் விதமான வடிவம் கொள்ளுகிறது; கருவியைத்தேடிப் பெற்றுக் கொள்கிறது. வடிவமும் கருவியும் வகையிலே பலவாக இருப்பினும் நோக்கம் மட்டும் ஒன்றுதான்! எளியோர் தமை வலியோர் சிலர் வதை புரிவதுதான்! வலியோராகச் சிலர் இருப்பதற்குக் காரணம் பலப்பல; கட்டத்துக்குக் கட்டம், நாட்டுக்கு நாடு இக்காரணம் வேறு வேறாக இருந்திடும்.

இனம், மதம், மொழி, நிறம், பணம் என்பதை ஒவ்வொன்றும் ஒவ்வோர் காலத்தில், ஒவ்வோர் நாட்டில், ஆதிக்கக் கருவியாகப் பயன்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த ஆதிக்கத்தின் எந்த வடிவத்தை ஆராய்ந்திடினும், ஒரு பொதுவான பாடம் கிடைத்திடும். அதற்காகவே "நிறம்' காரணமாகப் புகுத்தப்பட்டுள்ள ஆதிக்கத்தைக் குறித்துச் சிறிதளவு விரிவாகவே விளக்கிக் கொண்டு வருகிறேன். நிறம் என்பது கருவியாக அமைந்திருப்பதுபோல, இனம், மதம், பணம் என்பவைகளிலே ஏதேனும் ஒன்று கருவியாக அமைந்திடினும், கொடுமையின் அளவு குறைவானதாக இருந்திடாது. எனவேதான், எங்கோ அமெரிக்காவில் கப்பிக் கொண்டுள்ள நிறவெறி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது வேறுவிதமான கருவியின் துணையுடன் இருந்து வரும் ஆதிக்கம் பற்றி எண்ணிடவும், பாடம் பெற்றிடவும் வழி காட்டும் என்ற எண்ணத்துடன் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிக்கிறேன். பிரச்சினை எங்கோ நெடுந் தொலைவில் இருப்பது என்றோ, நமக்குச் சம்பந்தமில்லாதது என்றோ எண்ணிக் கொண்டு, பெற வேண்டிய பாடத்தினை இழந்துவிடக் கூடாது.

மதவெறி குறையவில்லை, ஜாதிப்பித்தம் போகவில்லை, குலச்சண்டை ஒழியவில்லை என்று பிறநாடுகள் குறித்து மிகக் கேவலமாகப் பேசும் வாடிக்கை பொதுவாக மேனாட்டினருக்கு உண்டு. மேனாட்டினரில் புரட்சிக் கருத்துக்களையும் புதுமுறை அரசியலையும் மேற்கொண்டவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவுக்கு "மே பிளவர்' என்ற கப்பலில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, மதக் கொடுமை, அரசியல் ஆதிக்கக் கொடுமை ஆகியவற்றிலிருந்து விடுபட, கருத்துச் சுதந்திரம் பெற்றிட, மனிதத் தன்மையைப் போற்றிப் பேணிடக் கிளம்பியவர்கள், "அமெரிக்கர்கள்,' ஆனபிறகு, கொடுமையான ஒரு ஆதிக்கத்தை, நிறவெறியைக் கருவியாகக் கொண்டு புகுத்தி விட்டனர்; அதனை மிருகத்தனமாக இன்றும் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த இயல்பு, அமெரிக்கர் மட்டுமே பெற்றுள்ளது என்று எண்ணிக்கொள்ளக் கூடாது.

ஆதிக்கத்தை எதிர்த்து நின்று ஒழித்தவர்கள், கொடுமை களைத் தாக்கித் தகர்த்தவர்கள், பிறகு தாமே ஆதிக்கம் செலுத்துவோராகவும், கொடுமையாளர்களாகவும் மாறி விடுகின்றனர். எப்போது? தங்கள் நிலை, வலுவாகி விட்டது என்ற துணிவு பிறந்ததும். இதற்கான சான்றுகள் வரலாற்றுச் சுவடிகளில் நிரம்ப உள்ளன. சுவடிகளைக்கூடப் புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நம்மைச் சுற்றிலும்கூட அந்த நிலைமை இருந்திடக் காண்கிறோம்.

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூடிக் குறைகளை எடுத்துக்கூறும் சுதந்திரம், கிளர்ச்சிச் சுதந்திரம், என்று மேடை அதிரப் பேசியவர்கள், ஆர்வம் கொந்தளிக்கப் பேசியவர்கள், ஆர்வத்தை மற்றவர்களுக்கும் ஊட்டியவர்கள்தான், காங்கிரஸ் கட்சியினர். ஆனால், அவர்களின் இன்றைய போக்கு? எந்த ஆதிக்கத்தையும் கொடுமையையும் எழுச்சியுடன் எதிர்த்து நின்றனரோ, அதே விதமான ஆதிக்கத்தையும் கொடுமையையும் கூசாமல், தட்டுத்தடங்கல் இல்லாமல் செய்திடக் காண்கின் றோமே? இந்த பதினெட்டு ஆண்டுகளில் அடக்குமுறையை எதிர்த்து நின்ற இந்த ஆற்றல்மிக்கோர், தடைச் சட்டங்களைத் தூளாக்கிய இந்தத் தீரர்கள், சிறைச்சாலை என்ன செய்யும் என்று சிந்து பாடிய இந்தச் சீலர்கள், வெள்ளையராட்சியிலே வீசப்பட்ட எந்த அடக்குமுறைக் கருவியை விட்டு விட்டார்கள்? அதே குண்டாந்தடி; புதிதாகப் பித்தளைப்பூண் போட்டிருக் கிறார்கள். அதே துப்பாக்கிச் சனியன்; மாணவர்களின் மார்பினைக்கூடப் பதம் பார்க்கிறது; அதே குண்டுகள்; முன்பு விரட்டுவதற்கு; இப்போது சாகடிப்பதற்கு; அதே சிறை, அதே 144; அதேவிதமான அவசரச் சட்டங்கள், ஆள்தூக்கிச் சட்டங்கள், ஊரடங்குச் சட்டங்கள்; உடமையைப் பறிக்கும் சட்டங்கள்; நாடு கடத்தும் சட்டங்கள்; நாக்கறுப்புச் சட்டங்கள்; ஒன்றுகூட விட்டுவிட வில்லை; ஆங்கில ஏகாதிபத்தியம் தனது பாசறையில் வைத்திருந்த கருவிகள் அனைத்தையும் இன்று காங்கிரசார், பயன்படுத்து கின்றனர்; உரிமைக் குரலை அடக்கிட; கிளர்ச்சிகளை ஒழித்திட!! வெள்ளையர்கள் கொண்டிடாத அளவு துணிவுடன், நம்பிக்கையுடன்!! ஆயினும் இவர்களேதான் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆர்ப்பரித்தனர், அடக்குமுறை ஒழிக! அநியாயச் சட்டங்கள் ஒழிக! என்று.

எனவேதான் தம்பி! உரிமைக்காகப் போராடுவது, ஒரு தொடர் கதையாக, முடிவுபெறாத நீண்ட நெடுங்கதையாக இருந்து வருகிறது. விழிப்புடன் இருந்து வந்தாலன்றி, எழுச்சியுடன் இருந்து வந்தாலன்றி ஆதிக்கம் ஓசைப்படாமல் மறுபடியும் இடம் பிடித்துக் கொண்டுவிடும்! கதிரவன் ஒளி நித்த நித்தம் தேவைப் படுகிறது அல்லவா, கப்பிக்கொண்டுள்ள இருளை நீக்கிட அது போல! உரிமை வாழ்வினைப் பெற்றிட மனிதகுலம் ஓய்வின்றி உழைத்தபடி இருந்தாக வேண்டி வருகிறது.

அமெரிக்காவில் குடியேறியவர்கள், கொடுங்கோலர்களின் வழிவழி வந்தவர்கள் அல்லர்; கொடுங்கோலை எதிர்த்து நின்றவர்கள். எனினும் அவர்கள் தங்களைக் கொடுங்கோலர் களிடமிருந்து விடுவித்துக் கொண்டான பிறகு, தாமே கொடுமைகளைப் புரியத் தொடங்கி விட்டனர்; அந்தக் கொடுமைகளை எதிர்த்து நிற்பவர்களை அழித்தொழிக்க, தமது வலிவினைப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கொடுமையிலே ஒன்றுதான் நிறவெறி, இதனை எதிர்த்து நின்ற இயக்கங்கள் பலவற்றிலே ஒன்று டர்னரைட் இயக்கம். இந்த இயக்கம், பலாத்கார இயக்கமா, இரத்தவெறி கொண்டலையும் இயக்கமா என்பதனைக் கண்டறிய டக்ளஸ் டில்மன் நியமித்தவர், நிறவெறியை எதிர்த்து நின்ற மற்றோர் இயக்கத்தை நடத்திச் செல்பவர்.

பகைவனிடம் பஞ்சாங்கம் பார்ப்பது என்பார்களே அதுபோலல்லவா இருக்கிறது இது என்று எண்ணி, வெள்ளைப் பேரதிகாரிகள் ஆத்திரம் கெண்டனர்.

டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்கு முன்பு வசித்து வந்த வீட்டிலே, குடிஇருந்து வந்தார், ஒரு நண்பர். அவர் அமைதி பொறுமை, பொறுப்புணர்ச்சி, சட்டம், ஒழுங்குமுறை ஆகியவைகளுக்கு உட்பட்டு, நீக்ரோக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காவும் பணியாற்றி வர ஒரு அமைப்பு கண்டார். ஆனால் அந்த அமைப்பு, ஆற்றலற்றது. பிரச்சினையின் அடிப்படையைக் கவனிக்க மறுப்பது, கைகூப்பியும் கண்ணீர் பொழிந்தும், கர்த்தரிடம் முறையிட்டும் கருணையைக் கேட்டுப் பெற்றும் காரியமாற்றிட எண்ணிடும் கிழட்டுத்தனம் கொண்டது; ஆகவே அந்த அமைப்பு போதாது என்ற எண்ணம் கொண்டவர்கள், அமைதியுடன் பணியாற்றி வந்த அமைப்பிலிருந்து விலகி, புரட்சிகரமான, புதிய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த அமைப்பின் பெயர்தான் "டர்னரைட் இயக்கம்' என்பது.

தீவிரம் நாடுவோர், புரட்சி முறை விரும்புவோர், புதிய விறுவிறுப்பு வேண்டுவோர், ஒவ்வோர் அமைப்பிலும் இருக்கத்தான் செய்வர். குருத்தோலைகள் பழுத்த ஓலைகளைக் கேலி செய்திட முனைவது விந்தை அல்ல; நடைமுறை. தம்பி! நான் குறிப்பிட்டேனே, வெள்ளையரைத் தூக்கிலிடுவதாக நாடகம் நடத்திடும் விதமான புரட்சி இயக்கம், கிருத்துவ மார்க்கத்தையே உதறித் தள்ளிவிட்டு, புதிய மார்க்கத்தை மேற்கொண்ட இயக்கம், கருப்பு முஸ்லீம் இயக்கம்.

வெள்ளையர் நடுநடுங்க, கருப்பர் தலை நிமிர்ந்து நின்றிடச் செய்த இயக்கம், அதுவே, பிறகு மந்தமானதாக - பிற்போக்குத் தனமானதாக - கிழட்டுத்தனம் மேலிட்டு விட்டதாகக் கருதப்பட்டு, புதியதோர் அமைப்பு, கருப்பு தேசிய இயக்கம் என்ற பெயருடன், கருப்பு முஸ்லீம் எனும் அமைப்பிலே சட்டாம் பிள்ளையாக இருந்துவந்த
மால்கோம் என்பவரால் துவக்கப்பட்டது.

கருப்பு முஸ்லீம் அமைப்பின் கர்த்தாவான எலிஜா முகமது வெள்ளையரிடம் மூளையை அடகு வைத்து விட்டார் போராடும் இயல்பை இழந்துவிட்டார் என்று குற்றம் சாட்டிவிட்டு, புதிய அமைப்பைத் துவக்கிய மால்கோம், தனது இயக்கம், புரட்சிகரமானது என்பதனைக் காட்டிட வெள்ளை இனத்தவரை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்! அதிலே பெரும் அளவு வெற்றியும் கண்டார்.

பண்பறிந்து ஒழுகுதல், பகைவனுக்கும் இரங்குதல், படிப்படியாக முன்னேறுதல், மனதை மாற்றுதல் என்பவைகள் கோழைகளின் முறைகள், இரத்தத்திற்கு இரத்தம்! கொடுமைக்குக் கொடுமை! பழிக்குப்பழி! என்பதே ஆற்றல்மிக்கோர் மேற் கொள்ள வேண்டிய முறை என்று எடுத்துக் கூறிய மால்கோம் எந்த அளவுக்கு வெறுப்பை ஒரு தத்துவமாக்கிக் கொண்டார் என்றால், தம்பி! ஒரு விமான விபத்தில் 120 வெள்ளையர் இறந்துபட்ட ஒரு நிகழ்ச்சியை, அல்லாவின் அருளால் கிடைத்த அகமகிழ்ச்சி தரும் ஓர் நற்செய்தி என்று அறிவித்திடும் அளவுக்கு!

இப்படி வெறுப்புணர்ச்சியை வளர்த்திடலாமா என்று கேட்டவர்களுக்கு மால்கோம், "தவறு என்ன! வெறுப்பை வெறுப்பதிலே தவறு என்ன! பல நூற்றாண்டுகளாக கொடுமை களைச் செய்து குவித்துள்ள வெள்ளையர் மீது வெறுப்பு கொள்வது தர்மம் - நியாயம்!! என்று வாதிட்டாராம்.

வெள்ளையர்கள் எல்லோரும் பேய்கள் என்று கண்டிக்கிறீரே, அப்படியானால் ஏசுநாதரும் பேய்தானா? என்று ஒருவர் கேட்டபோது, மால்கோம் தட்டாமல் தயங்காமல் பதிலளித்தாராம்; "ஏசுநாதர் வெள்ளையர் என்று யாரய்யா உமக்குச் சொன்னார்கள்? ஏசுநாதர் கருப்பர், வெள்ளையர் அல்ல'' என்று.

உலகிலே அவ்வப்போது உலவிய புகழ்மிக்கார் அனைவருமே கருப்பர்; வெள்ளையர் அல்ல என்று வாதாடினார் மால்கோம்.

கருப்பர், மனித இனத்திலேயே மட்டம், கர்த்தர் வெள்ளை மனிதர்களுக்கு உழைத்திடுவதற்கென்றே படைத்தார் மனித உருவு கொண்ட இந்த மிருகங்களை - என்று பேசிய வெள்ளைப் பாதிரிமார்கள் உண்டு! அந்த வெறியை அடக்கப் பிறந்த வெறி என்று கூறலாம் மால்கோம் போன்றார் ஊட்டிவிட்ட வெறுப்புணர்ச்சி.

இந்த வெறுப்புணர்ச்சி, கட்டு திட்டம், வரைமுறை சட்டம் ஒழுங்கு என்பவைகளை மதித்திடத்தக்க மனப்போக்கைத் துளியும் ஏற்படுத்தாதல்லவா? சுடு! இல்லையானால் சுடப்படுவாய்! கொல்லு! இல்லையானால், கொல்லப்படுவாய்! கொளுத்து! இல்லை யானால் கொளுத்தப்பட்டு விடுவாய்! வெட்டு! இல்லையானால் வெட்டப்படுவாய்! தட்டு! திறக்க மாட்டார்கள்! உடை! தன்னாலே வழி திறந்து காணப்படும்! கேள்! கொடுக்க மாட்டார்கள்! பறித்துக் கொள், தடுத்திட இயலாது!! இந்தவிதமான பலாத்காரம் வெடித்துக் கிளம்பிற்று.

உரிமை, சமத்துவம் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் விட்டது; வெள்ளையர் நாட்டில் கருப்பருக்கு உரிமையும் சமத்துவமும் கிடைத்திடாது; ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது! ஆகவே அமெரிக்காவில் ஒரு பகுதியை, "கருப்பர் நாடு' என்று ஆக்கி அமைத்திடுக!! அங்கு கருப்பர், தமது தேசீயத்தை, தமது நெறியை அமைத்துக் கொள்வார்கள். அஃது இல்லையெனில், கருப்பர் - வெள்ளையர் பூசல் இருந்தபடியே இருக்கும்; புரட்சி பூத்தபடி இருக்கும்; இரத்தம் பீறிட்டுக் கிளம்பியபடிதான் இருக்கும்; என்று மால்கோம் போன்றார் முழக்கமிட்டனர். இந்த முழக்கம் வெள்ளையரின் மனதிலே அச்சத்தை மூட்டி விட்டது! இது அழிக்கப்பட வேண்டிய ஆபத்து என்று அலறினர். அப்படிப் பட்ட ஆபத்து இந்த டர்னரைட் இயக்கம் என்று விவரம் விளக்கம் அளித்து, அதனைத் தடை செய்யும்படி பணித்தனர் வெள்ளைப் பேரதிகாரிகள்; குடியரசுத் தலைவராகி விட்ட அந்தக் கருப்பரோ, காரணம் கண்டறியாமல், குற்றங்கள் மெய்ப்பிக்கப்படாமல், தடைசெய்ய முடியாது என்று கூறிவிட்டு, கருப்பரின் உரிமைக்காக ஒரு அமைப்பினை நடத்திக் கொண்டு வந்த தன் நண்பர் ஒருவரை, உண்மையைக் கண்டறிய நியமித்தார் என்றால், ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு கிளம்பாமலிருக்குமா! கொதித்தனர்! ஆனால் டில்மன் கலக்கம் கொள்ளவில்லை; மரியாதையாக; ஆனால் உறுதி தளராமல் பதிலளித்தார்.

தம்பி! டில்மன் காட்டிய அமைதி கலந்த உறுதி என் மனதை வெகுவாக ஈர்த்தது; பலன் தரத்தக்க, நீண்ட காலம் நிலைத்து நிற்கத்தக்க வெற்றியினை ஈட்டிட விரும்புவோர் எத்தகைய போக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடம் பெற்றிடச் செய்கிறது டில்மன் காட்டிய உறுதி, கலங்காத தன்மை., வீண் வாதிடாமை, விளைவு பற்றி பீதி கொள்ளாமை, நேர்மை பிறழாமை ஆகிய இயல்புகள், எளிதாகப் பெற்றுவிடக் கூடிய இயல்புகளா அவை!!

வேறோர் ஏட்டிலே பார்த்தேன் தம்பி! டர்னர் என்ற கருப்பு இனத் தீரன் ஒருவனைப் பற்றிய விவரத்தை. இர்விங்வாலஸ் எழுதிய "மனிதன்' என்ற ஏட்டில், "டர்னரைட் இயக்கம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்; டர்னர் என்ற புரட்சிக்காரரை நினைவிலே கொண்டுதான் வாலஸ் கருப்பரின் விடுதலை இயக்கத்துக்கு டர்னரைட் இயக்கம் என்று பெயரிட்டார் போலும்.

நான் படித்த மற்றோர் ஏட்டில், நாட்டர்னர் என்ற புரட்சியாளன் பற்றிய குறிப்பு, நெஞ்சினை உருக்குவதாக அமைந்திருக்கிறது. அந்த ஏடு கதைப் புத்தகம் அல்ல; உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு. கருப்பரின் விடுதலைக்காக ஆர்வத்துடன் பாடுபட்ட நாட்டர்னர் என்ற நீக்ரோ 31 வயதினன் தூக்கிலே தொங்கவிடப்பட்டபோது; "கருப்பு வழிகாட்டி' "ஞானாசிரியன்'; "அவதார புருஷன்' என்றெல்லாம் புகழாரம் சூட்டினர், நீக்ரோ இனத்தவர்; வெள்ளை நீதிபதிகளோ அவன் கழுத்திலே சுருக்குக் கயிற்றினை வீசினர்; குடி சூது, பொய், வஞ்சகம் எனும் எந்த விதமான கெடுமதியும் அற்றவன் இந்த விடுதலை வீரன்.

இவன் மனதிலே கொழுந்துவிட்டு எரிந்து வந்தது ஒரே ஒரு ஆர்வம், நீக்ரோக்கள் விடுதலை பெற வேண்டும், நிறவெறி ஒழிய வேண்டும் என்பது.