அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (5)
2

நிறவெறி ஒழிய மறுத்தது; அது கண்டு வெகுண்டெழுந்த நாட்டர்னர் நிறவெறியை விட மறுக்கும் வெள்ளையர்களை ஒழிப்பது என்று துணிந்தான், 1831-ம் ஆண்டு ஆகஸ்ட்டுத் திங்கள் 21-ம் நாள், புரட்சியை நடத்தினான். அவனுக்குத் துணை நின்றவர்கள் ஆறே ஆறு பேர்; துவக்கத்தில், பிறகோ வெள்ளையர்கள் வெடவெடக்கும் அளவுக்கு வளர்ந்தது பலாத் காரம். வெள்ளையர் வெட்டி வீழ்த்தப்பட்டனர்! பிடிபட்டான்; தூக்கிலிடப்பட்டான் டர்னர்!

டர்னர் கொல்லப்பட்டான்; ஆனால் அவன் நடத்திய பலாத்காரப் புரட்சியால் வெள்ளையர் மனதிலே மூண்டு விட்ட பீதி மடிய ஆண்டு பல ஆயினவாம். எந்த நேரத்தில் எந்தப் பக்கம் இருந்து, எந்தக் கருப்பன் கிளம்பி, குத்திக் கொல்லுவானோ, வெட்டி வீழ்த்துவானோ, சுட்டுப் பொசுக்குவானோ என்ற பீதி.

டர்னர் தூக்கிலே போடப்பட்டு ஆண்டு இருபது கழிந்த பிறகும் அந்தப் பகுதி வெள்ளையர்கள் மனதில் அந்தப் பீதி இருந்து வந்ததாம்!

டர்னரைட் இயக்கம் என்ற உடன் வெள்ளையர்கள் மனதில் இந்த டர்னர் பற்றிய நினைவும், அதன் தொடர்பாக மருட்சியும் கிளம்பத்தானே செய்யும். எனவே டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்ய டில்மன் மறுத்ததும் வெள்ளைப் பேரதிகாரிகள், அழிவை அரசபீடத்தில் அடர்த்தி விட்டோம் என்ற அச்சம் கொண்டனர்.

என்ன இருந்தாலும் டில்மன், கருப்பு இனமல்லவா! வெள்ளைப் பேரதிகாரிகள் எத்தனை வற்புறுத்தினாலும், நீக்ரோ இனத்துக்குத் துரோகம் இழைத்திட, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுக்க மனம் வருமா! தனது இரத்தத்தின் இரத்தம்! சதையின் சதை! தனது இனம் அந்த நீக்ரோ இனம் தன்மானத்துடன் வாழ்ந்திட உழைத்து வரும் ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட டில்மன் எப்படி ஒப்புவார். நிமிர்ந்து நின்று மறுத்துவிட்டார்! அது அல்லவா வீரம்! அவனல்லவா மனிதன்! பதவி கொடுத்து, பக்கம் நின்று பசப்பு காட்டி பணிய வைத்திடலாம் என்று எண்ணினர் போலும், டில்மன் பதவி கண்டு பல்லிளிப்பவன் அல்ல! அறிவு மிக்கோன்! ஆற்றல் மிக்கோன்! இனப்பற்று கொண்டோன்! ஆகவே தான், டர்னரைட் இயக்கத்துக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டான் என்று நீக்ரோ இனத்தவர் எண்ணிக் களிப்புற்றனர்.

டில்மன், நிறப்பற்று இனப்பற்று காரணமாக இந்த முடிவினை மேற்கொள்ளவில்லை. வீண் பழி சுமத்தி ஒரு அமைப்பை ஒடுக்குவது நியாயமாகாது, நேர்வழி அல்ல, சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை அழித்திடும் செயலினை மேற்கொள்ளலாகாது என்பதனால் அந்த முடிவினை மேற்கொண்டார். டில்மனுடைய இந்த நேர்மை உணர்ச்சியினை கருப்பர் - வெள்ளையர் எனும் இரு சாராருமே உணரவில்லை.

கருப்பர் உலகு களிப்பினையும் வெள்ளையர் உலகு வெறுப்புடன் கலந்த கோபத்தினையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது. டர்னரைட் இயக்கம் உள்ளபடி பலாத் காரத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிடுகின்றன. கிடைத்ததும் டில்மன், டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்திட முடிவு செய்து விடுகிறான்.

தக்க காரணமின்றி இயக்கத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறியபோது எப்படி வெள்ளை இனத்தவர் கொதிப் படைவார்களோ என்பது பற்றிக் கவலையற்று, மனச்சாட்சிக்கு மட்டுமே மதிப்பளித்து நடந்து கொண்டாரோ, அதேவிதமாகவே, அந்த இயக்கம் பலாத்காரச் செயல்களிலே ஈடுபட்டிருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டதும், அதனைத் தடை செய்தால், கருப்பு இனத்தவர் தன்னைத் தூற்றுவார்களே, வெறுப்பார்களே, எதிர்ப்பார்களே என்ற கவலையற்று, நேர்மையாக நடந்து கொள்ள முற்பட்டார். தம்பி! இதற்குத் தேவைப்படும் நெஞ்சு உரம் பொதுப்பணியினில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் முயற்சி செய்து பெற்றுக்கொண்டாக வேண்டிய ஒன்றாகும்.

கடமையைச் செய்திடும்போது, இனப்பற்று, பந்த பாசம், அச்சம், தயை தாட்சணியம் என்பவைகளுக்குக் கட்டுப்படும் போக்கு தலை தூக்குமானால், அதனைத் தூக்கி எறிந்துவிடும் துணிவு பிறந்திடவேண்டும்.

எந்த நீக்ரோ இனத்தவர் போற்றிப் புகழ்கிறார்களோ எமது ஈடு எதிர்ப்பற்ற தலைவன்! எமது இனத்தின் காவலன்! வெள்ளையரின் மிரட்டலுக்குப் பணிந்திடாத அஞ்சா நெஞ்சன்! என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்களோ, அவர்கள் கண்ணீர் ததும்பிட நிற்பார்களே, இவ்வளவுதானா இவன் ஆற்றல்? என்று கேலி பேசுவார்களே; அடிபணிந்து விட்டாயா வெள்ளையருக்கு! பதவி மோகம் தலைக்கேறி விட்டதா! இனம் அழிந்தாலும் சரி, வெள்ளை மாளிகையில் கொலுவிருக்கும் நிலை இருந்தால் போதும் என்று தீர்மானித்து விட்டானா! காவலன் என்றும் நாவலன் என்றும், வழிகாட்டி என்றும் புது வாழ்வளித்தோன் என்றும் வாய்வலிக்கப் போற்றிக் கிடந்தோமே! கருப்பரின் போற்றுதல் கால் தூசு; வெள்ளையரின் நேசமே பெரிது என்று கருதிவிட்டானா! வெற்றி பெற்று விட்டார்களா வெள்ளை நிற வெறியர்! கருப்பனைக் கொண்டே கருப்பரை அழிக்கும் காரியத்தை நடத்திக் காட்டுகின்றனரா, காலமெல்லாம் நம்மைக் கொடுமை செய்துவரும் காதகர்கள்!

வெள்ளை மாளிகையிலே ஒரு கருப்பர்! அடிமை இனத்தவன் அமெரிக்கக் குடியரசுத் தலைவன் என்று கூறிக்கூறிப் பூரித்துக் கிடந்தோமே! இதற்குத்தானா! இவன் வெள்ளை மாளிகையில் அதிபர் வேலை பார்க்கச் சென்றது, தனது இனத்தை அழித்திடத்தானா! கேட்பார் இல்லை என்ற நிலை போய்விட்டது நமது இனத்தவனே அரசாள்கிறான் என்று பெருமிதம் கொண்டோமே! அடிமை இனம், எதற்கும் தகுதியற்ற கூட்டம், என்றெல்லாம் ஏசி வந்தீர்களே, வெள்ளை இனத்தவரே! பார்த்தீர்களா, வெள்ளை மாளிகையை! யார் அங்கே வீற்றிருக்கிறார் தெரிகிறதா? ஒரு கருப்பர்! ஒரு நீக்ரோ! எங்கள் இனமணி! இப்போதாவது புரிகிறதா நீக்ரோ இனத்தின் பெருமை! இனியாகிலும் உம்முடைய மனதிலிருந்து ஒழியுமா நிறத்திமிர்; இனப்பகை! என்றெல்லாம் எக்களிப்புடன் பேசி வந்து தன் இன மக்கள் - நீக்ரோ மக்கள் - டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்திட முனைவது கண்டால், பதறிப் போவார்களே, பயந்து விடுவார்களே, பாதகா! என்று அலறிக் கூவித்துடிப்பார்களே, இனத்துரோகி என்று ஏசுவார்களே என்றெல்லாம் எண்ணி டில்மன் மனக் குழப்பம் அடையவில்லை.

வெகுண்டு எழுபவர் எவராக இருப்பின் என்ன! அவர் நிறம் எதுவாக இருப்பின் என்ன! எனக்குக் கட்டளை பிறப்பிக்கக் கருப்பருக்கும் உரிமை இல்லை; வெள்ளையருக்கும் இல்லை. என் உள்ளம் எனக்குக் கட்டளை பிறப்பிக்கிறது; தூற்றுவோர் தூற்றட்டும்; நான் என் கடமையைச் செய்திடுவேன் என்று துணிந்து நின்றான்.

தம்பி! உள்ள உறுதியுடன் நேர்மை வழி நடந்திட டில்மன் முற்பட்டபோது ஏற்பட்ட இன்னலையும் இழிவையும் படிக்கும்போது, உள்ளபடி மனம் உருகிடும்! அத்தனை இழிவுகளைத் தாங்கிக் கொள்ள முடிந்ததே அந்த நேர்மை யாளனால், நம்மால் முடியுமா, நமக்கு அத்தகைய உள்ள உரம் இருந்திடுமா என்று பொதுப் பணியினில் ஈடுபட்டுள்ளோர் ஒவ்வொருவரும் எண்ணிடுவர். அந்தவிதமாக அமைந்திருக்கிறது, அந்தக் கட்டம்! இழிவும் இன்னலும் தாக்கிடும் கட்டம்.

அழுகல் முட்டைகள் வீசப்படுகின்றன! கற்கள் பறக்கின்றன! காட்டுக் கூச்சல் கிளம்புகிறது! பேசாதே! போ வெளியே! துரோகி! காட்டிக் கொடுக்கும் கயவனே! என்று மூலைக்கு மூலை கண்டன ஒலி! தாக்கிடத் துணிந்தோர், அருகே நெருங்குகிறார்கள்! என்னென்ன ஆபத்து வருமோ என்று எண்ணத்தக்க விதமான பரபரப்பு! போலீசும் படையினரும் வளையம் அமைத்து, உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டி நேரிடுகிறது. போய்விடலாம்! நிலைமை மோசமாவதற்குள் இந்த இடத்தை விட்டுப் போய்விடலாம்! இந்தக் கும்பல் எதற்கும் அஞ்சாது! கொலைகாரக் கூட்டம்! வெறி தலைக்கேறிவிட்டிருக்கிறது! அமெரிக்கக் குடியரசுத் தலைவர், அடித்துக் கொல்லப்பட்டார் ஆத்திரமடைந்த கும்பலால் என்று ஏற்பட்டுவிடுமானால் அது நாட்டுக்கே பெரிய அவமானம்; துடைக்கப்பட முடியாத கறை! என்றெல்லாம் கூறுகிறார்கள். டில்மனை, பாதுகாப்பான இடத்திற்குப் போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.

டர்னரைட் இயக்கம், பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால், அந்த இயக்கத்தைத் தடை செய்யும் சட்டம் பிறப்பித்துள்ளேன் - என்று டில்மன் அறிவித்ததும் இத்தனை அமளி நடக்கிறது. குடியரசுத் தலைவர் உரை கேட்டு மகிழவும், அவரை வாழ்த்தவும் கூடியிருந்த பெருந்திரள், பகை கக்குகிறது, பாய்ந்து வருகிறது தாக்க! போலீஸ் மும்முரமாகிறது. விழா நடத்திட முனைந்த பிரமுகர்கள் பீதி கொள்கின்றனர். மகன் கண்களில் நீர் கொப்பளிக்க நிற்கிறான். டில்மன் போலீஸ் வளையத்திலே நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

தம்பி! இத்தனை அமளியும் நடப்பதே ஒருவர் மனதை மெத்தவும் வாட்டிவிடும்;

அதிலும் வரவேற்று வாழ்த்தி, விழா நடத்துகிறார்கள்; அந்த இடத்தில் அந்த நேரத்தில் அமளி! "கல்லெறி!' காட்டுக் கூச்சல்! இழிமொழிகள்! பழிச் சொற்கள்! என்றால் மனவேதனை மேலும் எந்த அளவு ஏற்படும்.

அதிலும், எந்தத் தகப்பன் இத்தனைப் பெரிய ஏற்றம் பெற்றிருக்கிறான் என்பது கண்டு பெருமிதம் கொண்டிருக் கிறானோ அந்த மகன் எதிரில் இந்த அமளி நடக்கிறது.

தந்தை வரவேற்கப்படுவதைக் கண்டுகளித்த கண்களால், ஆத்திரமடைந்த கூட்டம் அவரை விரட்டி அடிப்பதைக் காண்கிறான் - டில்மனுடைய மகன் கல்லூரி மாணவன்!

தன் தந்தையுடைய வருகை காரணமாக விழாக்கோலம் எழக்கண்டு களிப்படைந்திருக்கிறான் - மகன் - அவன் எதிரில் கல்லெறி - தந்தைக்கு!

நீக்ரோ இனத்தின் பெருமையை உயர்த்திய தலைவன் என்று தன் தந்தையைச் சான்றோர் வாழ்த்திடக் கேட்டான் களிப்புடன் - மகன் - அதே காதுகளில் நாராசம் பாய்கிறது.

தந்தை விழாக்கூடம் நுழையும்போது எத்தனை மரியாதை, என்னவிதமான அணிவகுப்பு, பிரமுகர்கள் முகமன்; இவைகளைக் கண்டான். அதே இடத்தில், அல்லோலகல்லோலம்! விடாதே! பிடி, அடி! குத்து! கொல்லு! என்ற மிரட்டல்! மாலைகள் அணிவித்தார்கள் அந்த மணிமாடத்தில் தந்தைக்கு! கற்களை வீசுகிறார்கள் அதே இடத்தில். காண்கிறான், கண்ணீர் உகுக்கிறான். ஆனால் அடப் பாவிகளே ஆகுமா இந்த அக்கிரமம்! அவரையா இப்படி இழிவு செய்கிறீர்கள். நமது இனத் தலைவனையா தாக்கக் கிளம்புகிறீர்கள் என்று அந்த மகனால் கேட்க முடியவில்லை, ஏன் டர்னரைட் இயக்கத்தை - கருப்பரின் பாதுகாவலனாக உள்ள அமைப்பை - ஒரு கருப்பரே தடை செய்யும்போது, இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும் என்று எண்ணுகிறான். தந்தைக்கு ஏற்பட்ட இழிவு கண்டு தத்தளிக்கிறான். ஆனால் அவர் டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்தது நியாயம் என்று அவன் உள்ளம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவன் கல் வீசவில்லை, கண்டனக்குரல் எழுப்பவில்லை; ஆனால் கல் வீசியவர்களும் கண்டனக் குரல் எழுப்பியவர்களும், என்ன கேள்வியை எழுப்பினார்களோ அதே கேள்வியைத்தான் அவனுடைய கண்ணீர் எழுப்பிற்று.

டர்னரைட் இயக்கத்திற்குத் தடை விதிப்பதாக, டில்மன் வெள்ளை மாளிகையில் இருந்தபடியே அறிவித்திருக்கலாம். அமளி செய்திடும் கூட்டம் அருகே நெருங்கியிருக்க முடியாது. அழுகல் முட்டைகள் வீசிடக் கும்பலுக்கு முடிந்திருக்காது.

ஆனால் டில்மன், தடைச்சட்டம் பற்றிய அறிவிப்பு அளித்தது, மகன் பயிலும் கல்லூரியில் நடைபெற்ற விழாவில்!

கல்லூரி விழாவில் ஒரு நீக்ரோ தலைவர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டதே, இதற்கு முன்பு நடைபெற்றிராத ஒரு சிறப்பு நிகழ்ச்சி. அந்த விழாவிலே கலந்து கொண்டு, டில்மன் டர்னரைட் இயக்கத்தின் மீது தடைவிதித்திருப்பதாக அறிவித்ததும், விழாக் கூடம் அமளிக் களமாகிவிட்டது.

எந்த இடத்தில் இதற்கு எதிர்ப்பு வெடித்துக் கொண்டு கிளம்பக் கூடுமோ அந்த இடமாகப் பார்த்து, சட்டம் பற்றி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் போலும் டில்மனுக்கு.

அமளி கண்டு மகன் கண்ணீர் சிந்துகிறான். வெள்ளையர்? எப்படி இருக்க முடியும்? ஒரு கேலிப் புன்னகை காட்டி இருப்பர்! மகத்தான வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பர்! குறும்புப் பார்வையைச் செலுத்தி இருப்பர்.

கருப்பர் தலைவனை எதிர்த்துக் கருப்பர் கூட்டம் அமளி செய்கிறது. வெள்ளைப் போலீஸ் அந்தக் கருப்புத் தலைவன் உயிருக்கு ஆபத்து வராதபடி பாதுகாப்பளிக்கிறது. இந்த வேதனை தரும் காட்சியைக் காணவா நான் இந்தக் கல்லூரியில் இருக்க வேண்டும் என்று எண்ணி, டில்மனுடைய மகன் வேதனைப் படாமல் இருந்திருக்க முடியுமா?

நிறவெறி கொண்ட வெள்ளையர் என்ன பேசிக் கொண்டிருந்திருப்பர்!

புயல் வீசுகிறது! நிலைமை புரிந்திருக்கும்.

புயல் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. போகப் போகத் தெரியும் அதனுடைய வேகம்.

கருப்பரின் அமைப்பை ஒரு கருப்பர் தலைவன் தடை செய்யும்போதே இத்தனை அமளி நடக்கிறதே, வெள்ளை இனத்தவர் தடைச் சட்டம் கொண்டு வந்திருந்தால், பயல்கள் தலையையே சீவிவிட்டிருப்பார்கள் போலிருக்கிறதே!

தலையைச் சீவுவார்களா! யார்? கருப்பரா? பீரங்கிகள் எதற்கு இருக்கின்றன, அகன்ற வாயுடன்; ஒரு வெள்ளை இனத்தவன் மீது இந்த அழுகல் முட்டை விழுந்திருந்தால், கருப்புக் கும்ப-ன் மீது குண்டுகள் பொழிந்திருக்காதா? சும்மா விடுமா படை!

நடைபெற்ற குழப்பம், அமளி டில்மன் மனதை வாட்டாம லிருந்திருக்க முடியாது. ஆனால் கடமையைச் செய்தோம்; புரிந்து கொள்ளாதவர்கள் பகை கக்குகிறார்கள். அதற்காகக் கடமையிலிருந்து தவறலாமா? கூடாது! என்றுதான் எண்ணியிருப்பான். புயல் அந்த அளவோடு நின்று விடவில்லை. அதன் வேகம் பற்றியும் வகை பற்றியும் அடுத்த கிழமை தெரிவிக்கிறேன்.

அண்ணன்,

6-3-66