அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (6)
கருப்பு நட்சத்திரம்
1

நம்பிக்கை நட்சத்திரம் "கார்வி'
சாதியைக் காத்திடக் கொலை !
"இரத்தக் கலப்பா? - கூடவே கூடாது !'
எட்னா என்னும் இனியவள்
சதியும் விழித்திருக்கிறது !

தம்பி,

"நான் படித்த எல்லா இலக்கியங்களிலேயும் என் உள்ளத்தில் அதிக அளவு எழுச்சியூட்டியது மார்கஸ் கார்வியின் தத்துவம் பற்றிய இலக்கியமே''

என்று ஆர்வத்துடன் கூறினார் கனா நாட்டு அதிபராக இருந்து அகற்றப்பட்ட நிக்ருமா, 1958லில். நீக்ரோக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் போராடியவர்களிலே மிகத் தீவிரவாதி இந்தக் கார்வி. இவர் பற்றிப் பெரு மதிப்புக் கொண்டவர் நிக்ருமா. அக்ராவில் 1958லில் நடைபெற்ற அகில ஆப்பிரிக்க மக்கள் காங்கிரசில் பேசும் போது கார்வியைப் பெரிதும் பாராட்டிப் பேசியதுடன், கனா நாட்டுத் துரைத்தனம் அமைத்த வியாபாரக் கப்பல் அணிக்கு, நிக்ருமா, "கருப்பு நட்சத்திர அணி'' என்று பெயருமிட்டர். எந்தக் கார்வியிடம் நிக்ருமா அத்தனை மதிப்பு வைத்திருந்தாரோ, அவர் பொறிபறக்க பேசினவர் புதுப்புதுத் திட்டம் தீட்டியவர் - துணிவுடன் போராடியவர். ஆனால் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திச் செல்லாமல் தோல்வி கண்டவர்.

பல ஆண்டுகள் கார்வியின் புகழ் நாடு பலவற்றினிலே பரவி நின்றது. கருப்பரின் கஷ்டமெல்லாம் இனித் தீர்ந்து போகும், விடுதலையும், புதுவாழ்வும் கிடைத்துவிடும் என்று எண்ணற்ற நீக்ரோக்கள் நம்பினர். மார்கஸ் கார்வி, நீக்ரோக்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு அல்லலையும் இழிவையும் தாங்கிக் கொண்டிருப்பானேன், அவர்களுக்கென்று தாயகம் இருக்கிறது, ஆப்பிரிக்கா! அங்கு சென்று உரிமையுடன் வாழ்ந்திடலாம்! எழுக! என்னுடன் வருக! ஆப்பிரிக்கா சென்றிடு வோம், அங்கு நமது அரசு கண்டிடுவோம்! என்று அழைத்தார். எழுச்சி ததும்பிற்று. மேற்கிந்தியப் பகுதியில் பிறந்த இந்தக் கார்வி அமெரிக்க நீக்ரோக்களின் மாபெரும் தலைவரானார். ஆப்பிரிக்கா சென்றிடுவது என்ற அவருடைய திட்டம், சொல்லளவுடன் இருந்துவிடவில்லை; ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் தயாரிக்கப்பட்டன; பெருநிதி திரட்டப்பட்டது; பல இலட்ச நீக்ரோக்கள் புனிதப் பயணத் துக்குத் தயாராயினர், மூன்று கப்பல்களே கிளம்பின! அந்தப் பயணக் கம்பெனிக்கு கார்வி சூட்டிய பெயர்தான் "கருப்பு நட்சத்திரம்' என்பது. அந்தப் பெயரைத்தான் ஆட்சியில் அமர்ந்த போது நிக்ருமா கனா நாட்டுக் கப்பல் அணிக்குச் சூட்டினார்.

நின்ருமாவுக்கு எழுச்சியூட்டத்தக்க சிறப்புப் பட்டங்கள் பல உண்டு; அதுபோலவே கார்விக்கும் தளபதிகளாக்கப் பட்டவர்களுக்கும் விதவிதமான பட்டங்கள்.

ஆப்பிரிக்க மாமன்னர் - மன்னர் - அமைச்சர் - தளபதி - என்றெல்லாம் பட்டங்கள். எல்லாம் அமெரிக்காவில் இருந்து கொண்டே! கார்வி ஆப்பிரிக்காவில் காலடி வைத்ததே இல்லை; ஆனால் பல ஆண்டுகள் அமெரிக்காவில் அவரைச் சுட்டிக் காட்டுவர் பெருமிதத்துடன், ஆப்பிரிக்க மாமன்னர் என்று!

பட்டங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கேற்ற விதமான பகட்டுடைகள்! பவனிகள்! பராக்குகள்!

கார்வி தோற்ற பிறகு இவைபற்றிப் பலர் ஏளனம் செய்தனர்; ஆனால் அவர் புனிதப் பயணம் பற்றிய திட்டத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது, ஏளனம் செய்தவர் எவரும் இல்லை. எங்கும் எழுச்சி மயம்!!

அப்போது நிக்ருமா, அமெரிக்காவில் மாணவர்!

அந்த இளம் உள்ளத்தில் பதிந்துவிட்ட எழுச்சி காரணமாகவே, "நிக்ருமா ஆட்சிக்கு வந்தபோது, கார்வியே தனக்கு "வழிகாட்டி'யாக விளங்கிவந்தார் என்று கூறிடச் செய்தது.

அடிமைப்பட்டு, இன்னலையும் இழிவையும் தாங்கித் தாங்கிக் குமுறிக் கிடக்கும் மக்களுக்கு, விடுதலை ஆர்வம் ஊட்ட, எழுச்சி உண்டாக, ஒரு நம்பிக்கை எழவேண்டும். அந்த நம்பிக்கையைத் தரத்தக்க ஒரு மாவீரன் வேண்டும்.

கார்வி அந்த மாவீரனாக விளங்கினான். ஆனால் எழுச்சியூட்டப் பயன்பட்ட அந்த மாபெருந் தலைவன் தானே எழுச்சி வயப்பட்டு, நடைமுறைக்கு ஏற்றதல்லாத திட்டம் தீட்டி, தோல்வி கண்டான்; சிறையிலேயே தள்ளப்பட்டான்; நாடு கடத்தப்பட்டான்.

நீக்ரோ இனத்தவரை அழைத்துச் சென்று மாபெரும் ஆப்பிரிக்கப் பேரரசு அமைக்கப் போவதாக அறிவித்து, அணிவகுப்பு நடத்திய கார்வி தன் கடைசி நாட்களை, இலண்டன் நகரில் கழிக்க வேண்டியதாயிற்று; கனவு கலைக்கப்பட்ட நிலையில்; மனம் உடைந்த நிலையில்; கவனிப்பாரற்று! நட்சத்திரம் கருப்பாகி விட்டது!

இலட்சியங்களைக் கொண்டு எழுச்சி யூட்டுவதிலேயே வெற்றி கிட்டியான பிறகு, மக்களை அணி திரட்டியான பிறகு, செயலில் ஈடுபட்டு, இலட்சியத்தை நிறைவேற்றிட முனையும் போது ஏற்படும் ஏமாற்றம் தோல்வி வரலாற்று ஏட்டினிலே பலப் பல காணக் கிடக்கின்றன. இலட்சியம் காண்பதில், அதனை மக்கள் ஏற்று கொள்ளச் செய்வதில் வெற்றி கண்டவர்களிலேயே பலர், இலட்சியத்தை நடைமுறை வெற்றியாக்கிடும் முயற்சியில் தோல்வியால் தாக்குண்டு போயுள்ளனர், காலம் ஏற்றதாக அமையாததாலும் கருவிகள் செம்மையாகக் கிடைக்காததாலும், புதிய சூழ்நிலைகள் எதிர்பாராதவகையிலே வடிவமெடுத்து விடுவதாலும், அத்தகைய தோல்விகள் ஏற்பட்டு விடுகின்றன.

அந்தத் தோல்விகள் எல்லாமே இலட்சியம் சரியானதல்ல என்பதற்குச் சான்றுகள் என்று கொண்டுவிடக் கூடாது.

தோல்வி தாக்கிடும் என்று அஞ்சி இலட்சியங்களை மேற்கொள்ளாதிருப்பதும் தவறு; நடைமுறைக்கு ஏற்றதோ அல்லவோ என்பது குறித்த கவலையற்று காலமும் கருவியும் தக்கவிதமாக அமைகின்றனவா என்பதுபற்றிப் பொருட் படுத்தாமல், வெறும் இலட்சியமுழக்கம் எழுப்பியபடி இருந்து வருவதும் பயனற்ற வேலையாகிவிடும்.

குழுவின் துளைகள் சரியானபடி அமைத்து விடுவதாலேயே அதனைக் கொண்டு எவரும் இன்னிசை எழுப்பிடலாம் என்று எண்ணுவதும் தவறு; அதுபோலவே திறமைமிக்க இசைப் புலவன் நான்! எனவே குழ-ன் துளைகள் எப்படித் தாறுமாறாக இருப்பினும் இனிய இசையினை எழுப்பிட என்னால் முடியும் என்று இறுமாந்து கூறுவதும் தவறு.

மக்கள் நம்முடன் வருவார்களா அவர்களால் முடியுமா கடினமான பயணம் மேற்கொள்ள என்று எண்ணி எண்ணித் தயங்கிப் பயணத்தைத் துவக்காமல் இருந்து விடுவதும் தவறு. மக்கள் தன்னோடு வருகிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலையற்று பயணத்தை மேற்கொண்டு விடுவதும் பயனற்றதாகிவிடும்.

ஆர்வம் காரணமாக, எந்தத் திட்டமும் எளிதாக நிறைவேற்றிவிடக் கூடியது என்ற "மனமயக்கம்' ஏற்பட்டு விடுவதுண்டு; ஆனால் அந்த மயக்கம் பீடித்து கொண்ட நிலையிலே செய்துவிடும் செயல் வெற்றிக்கு வழி அமைப்பதில்லை.

அச்சகத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கிய கார்வி ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக கொடி, படை, முழக்கம் அமைத்துக் கொண்டு "ஆப்பிரிக்கப் பேரரசு அமைத்திடுவேன்' என்று சூள் உரைத்துக் கிளம்பியபோது, வெற்றி நிச்சயம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்.

பச்சை - கருப்பு - சிகப்பு - என்ற விதமான மூவர்ணக் கொடியினைப் பறக்கவிட்டார் கார்வி! கருப்பு, இனத்திற்குச் சின்னம்; சிகப்பு இரத்தம் சிந்தியேனும் வெற்றி காண்போம் என்பதனை உணர்த்த; பச்சை, வளமான வாழ்வு அமைந்திடும் என்பதற்கான அடையாளம்!

கிட்டத்தட்ட பத்து இலட்சம் டாலர்கள் திரட்டினார், புனிதப் பயணத்துக்காக. கப்பல்கள் கிளம்பின! வழியிலேயே இன்னல், இழப்பு! திரட்டிய பணத்தைக் கொண்டு செம்மையான அமைப்பை நடத்திட முடியவில்லை. பணம் திரண்டதும், பசப்பித் திரிவோர், பல்லிளிப்போர், பறித்துத் தின்போர் மொய்த்துக் கொண்டனர். பணம் பாழாயிற்று. பொதுமக்களிடம் பணம் திரட்டி மோசம் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டு, கார்விக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டாண்டுச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு, கார்வியை அமெரிக்க அரசு நாடு கடத்திவிட்டது. அவ்வளவோடு அவர் "கதை' முடிந்தது.

கார்வியை, மாணவ நாட்களிலே கண்டு களித்து, எழுச்சி பெற்ற நிக்ருமாவும், தனது நாட்டை வாழவைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெறியும் உள்ளத்தினர்; அதிலே ஐயமில்லை. ஆனால் நடைமுறைக்கு ஏற்றதா அல்லவா என்பதுபற்றி எண்ணிப் பார்த்திடாமல் திட்டம் பல மேற்கொண்டதுடன், எவருடைய கருத்தையும் மதிக்க மறுத்து, ஜனநாயகத்தைச் சிதைத்து ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தைத் திணித்தார்; எல்லாம் நாட்டின் நன்மைக்காகவே!! ஆனால் நாடு தாங்கிக் கொள்ள மறுத்து விட்டது. எந்த நாட்டிலே அவரை "வழிபட்டு' நிற்க மக்கள் துடித்துக் கிடந்தனரோ, அதே நாட்டிலே அவர் இனி "படையுடன்' வந்து போரிட்டு வெற்றி பெற்றாலன்றி "பவனி' வந்திட முடியாது என்ற நிலை.

ஜனநாயகம் சிதைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய கேட்டினைக் கனா நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது; அது போன்றே ஜனநாயகத்தை போலியானதாக்கி, ஆட்சி செய்பவரை "தலையாட்டி' யாக்கிட தருக்கர் சிலர் முனையக் கூடும்; அதிலும் நிறவேறி காரணமாக அந்தத் தருக்கு ஏற்பட்டிருப்பின் எத்தகைய அக்கிரமத்தையும் துணிந்து செய்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார் இர்விங் வாலாஸ், தாம் எழுதிய கருத்தாழம் மிக்க மனிதன் என்ற ஏட்டின் மூலம்.

வெள்ளையருக்கு அஞ்சி அநீதிக்கு அடிபணியவும் மாட்டேன்; கருப்பர் என்ற இனப்பாசத்திற்காகவும் அநியாயத் துக்குத் துணை நிற்கவும் மாட்டேன் என்று டில்மன் பேச்சால் அல்ல, செயலால் காட்டியது கண்டு வெகுண்ட வெள்ளைப் பேரதிகாரிகள், அவர் மீது "கண்டனம்' தொடுத்தனர்.

தகுதியற்றவர்
தருக்கர் காமவெறி பிடித்தவர்
சதிகாரருக்குத் துணை நிற்பவர்

என்ற பல்வேறு வகையான குற்றங்களைச் சுமத்தினர்.

தம்பி! இனம், ஜாதி, குலம், செல்வம் என்பவை காரணமாக அமைக்கப்பட்டுவிடும் பேத உணர்ச்சி இருக்கிறதே, அதனால் ஆட்டிப்படைக்கப்படுபவர்கள், சொல்லிடவும் கூசும் கொடுமைகளைச் செய்திடவும் துணிவர்; இனப்பெருமை காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, கொலையும் துணிந்து செய்திடுவர்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் - ஜாதிப் பிடிப்பு இன்றுள்ளதைவிட பயங்கரமான அழுத்தத்துடன் இருந்தது; அந்த நாட்களில், ஜாதி வெறிபிடித்தவர்கள் எத்தகைய கொடுமையைச் செய்யத் துணிவர் என்பதனை எடுத்துக் காட்டும் ஒரு பயங்கரச் சம்பவம் நடை பெற்றதாகக் கேள்விப்பட்டு கிடுகிடுத்துப் போனேன்.

தன்னை சற்று மேல்ஜாதி என்று கூறிக் கொண்டு தமது மகளை மண முடித்துக் கொண்டவன் உள்ளபடி தம்மை விடச் சிறிதளவு "மட்டமான' ஜாதி என்று அறிந்து கொண்ட பெண் வீட்டார், என்ன செய்தனர் தெரியுமோ! தா-யை அறுத்துப்போடு! அந்தத் தகாதவனுடன் செய்து கொண்ட திருமணம், சாஸ்திர சம்மதம் பெற்ற திருமணம் அல்ல!! - என்று கூவிக் கொக்கரித்து "மாப்பிள்ளை'யை விரட்டிவிட்டு, பெண்ணைத் தமது வீட்டோடு வைத்துக் கொண்டார்கள் என்று எண்ணிக் கொள்ளுவாய். அவ்விதம் செய்யவில்லை! ஊரிலே கேள்வி பிறக்காதா? ஏன் பெண் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகவில்லை? என்ன தகராறு சம்பந்திகளுக்கு? என்று கேள்விகள் துவங்கி, கடைசியில் "மட்டஜாதி'க் காரனுக்குப் பெண்ணைக் கொடுத்து விட்டார்களாம் என்ற உண்மை அம்பலமாகி, ஊர் ஏசுமே, ஏளனம் செய்யுமே! காலத்துக்கும் இருக்குமே அந்தக் கறை!! ஆகவே வெளியே சொல்லவில்லை. உண்மை தெரிந்துவிட்டது என்று மாப்பிள்ளையே கூடத் தெரிந்துகொள்ள விடவில்லை. புன்னகை காட்டியபடி இருந்தனர். மாப்பிள்ளை "விருந்து' சாப்பிட வந்தவர், மாலையில் உலவப் போனார்! இரவு பிணத்தைத்தான் தூக்கிக் கொண்டு வந்து போட்டனர்; யாருக்கும் தெரியாமல், ஆளைவிட்டு அடித்துக் கொன்று போட்டு விட்டனர். மகளை விதவை யாக்கினர், ஜாதி கெடக்கூடாது, ஜாதி காரணமாக இருந்து வந்த மதிப்பு மடியக் கூடாது என்பதற்காக; கொலையே செய்தனர், குலப் பெருமையைக் காப்பாற்றிக்கொள்ள! பெரிய இடம்! ஒரு துப்பும் கிடைக்க வில்லை! ஒரு புகாரும் எழவில்லை!! இங்கு மங்குமாக, மெள்ள மெள்ளப் பேச்சுக் கிளம்பிற்று.

இருக்கும்! இருக்கும் என்றவர்களும்,
இதை எல்லாம் யார் கண்டனர் என்றவர்களும்'
இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது என்றவர்களும்

நிரம்ப இருந்தனர்; இந்த அக்கிரமம் ஆகுமா என்று கேட்க எவரும் கிளம்பவில்லை. அதுமட்டுமல்ல, தம்பி! ஜாதியைக் கெடுத்துக்கொள்ள எவனய்யா சம்மதிப்பான்? என்று கேட்டனர்களும், "வேறே வழி! தீர்த்துக் கட்டுவது தவிர வேறே வழி?'' என்று "நியாயம்' பேசியவர்களும், அவன் செய்த அநியாயத்துக்கு அவனை வெட்டி வெட்டியல்லவா போட்டிருக்க வேண்டும் என்று கொதித்துக் கூறியவர்களும், கொலை! கொலை! என்று பேசுகிறார்களே!! பாம்பைச் சாகடிக்காமல், படுக்கையில் புரளவிடுவார்களா! ஜாதியைக் கெடுக்க வந்தவனைக் சாகடித்துப் போடாமல், சந்தனத் தாம்பூலம் கொடுப்பார்களா! என்று பேசியவர்களும் இருந்தனர், பெரிய புள்ளிகளாக! ஊருக்கு நியாயம் வழங்கும் பெரியவர்களாக!!

ஒரு கருப்பு இனத்தவன் நாட்டை ஆள்வது, எஜமானர் இனமான வெள்ளையர் அடிபணிந்து கிடப்பது இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? இது சட்ட சம்மதமானது என்று சொல்லுகிறீர்களா? அரசியல் வேறு? இன இயல் வேறு என்று விளக்கம் கூற முற்படுகிறீர்களா? இந்த வாதமும் விளக்கமும் கோழைத்தனத்தின் விளைவு, மதிப்பறியா நிலையின் விளைவு; நான் அவ்விதம் இருக்கமாட்டேன்; இந்தக் கருப்பனை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டி அடிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன், நிம்மதியாக உறங்கமாட்டேன் என்று துவக்கமுதலே உறுமிக் கொண்டிருந்தான், நிறவெறியை ஒரு தத்துவம் தர்மம் என்று நம்பிய வெள்ளை இதழாசிரியன் ஒருவன். அவன் போன்றவர்கள், டில்மன்மீது வழக்கு தொடரப்பட்டதும் களிநடமாடினர். விரட்டி விடுவதைவிட, வீழ்த்தி விடுவதைவிட, அவன்மீது குற்றம் சுமத்தி, தண்டித்து வெளியே துரத்துவதுதான் அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய "இனத்துக்கே' - இன்று மட்டுமல்ல, என்றென்றும் துடைக்கப்பட முடியாத கறையை ஏற்றிவைக்கும் என்று கருதி மகிழ்ந்தனர் நிறவெறியர்கள்.