அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (6)
2

இனம், ஜாதி, குலம் ஆகியவை கெட்டுவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், "இரத்தக்கலப்பு' ஏற்படக் கூடாது; இரத்தக் கலப்பு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இரு இனத்தவர்க்குள்ளே கலப்புமணம் அனுமதிக்கப்படக்கூடாது; உடலுறவு ஏற்பட்டு விடக்கூடாது என்று அழுத்தமான நம்பிக்கை காரணமாக, கட்டுதிட்டமும் சட்டமும் சம்பிரதாயமும் அமைந்துவிடுகின்றன.

நீக்ரோக்கள் தாழ்ந்தவர்கள், அவர்களுடைய "இரத்தம்' வெள்ளை இனத்தவரின் இரத்தம் போன்றதல்ல; உயர்வானது அல்ல! என்று வாதாடினர்; அக்கிரமக்காரர்களும் அடாவடிப் பேர்வழிகளுமல்ல, கற்றவர்களே!! தம்பி! இன்று வெகு எளிதாகக் கூறிவிடுகிறோம், எல்லோர் உட-லும் ஒரேவிதமான இரத்தம்தான் ஓடுகிறது! இதிலே நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? என்று கேட்கிறோம். மறுப்பார் இல்லை!! ஆனால் அமெரிக்காவில் இன்றளவும், நீக்ரோ இரத்தம் வேறு, வெள்ளையர் இரத்தம் வேறு; இந்த இரண்டும் கலந்திடக்கூடாது என்ற முரட்டுத்தனத்தையும் குருட்டுப் போக்கையும் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் பலப்பலர்! இத்தகைய "காட்டுமிராண்டி'க் கருத்தைக் கொண்டவர்கள் முன்பு அமெரிக்காவில், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என்ற நிலையிலும், பாதிரிமார்கள் என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருந்தனர்.

ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தாலும் போதும், நீக்ரோ ஆகிவிட வேண்டியதாகிவிடும்! ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தால் போதும் தலைமுடி சுருண்டுவிடும், உதடு பெருத்துவிடும், முகம் தட்டையாகி விடும், அறிவு ஒளி அணைந்து விடும், மிருக இயல்பு மிகுந்துவிடும், நீக்ரோ தன்மை தன்னாலே வந்துவிடும்.

1906-ல் தம்பி! இப்படிக் கூறியவர் தாமஸ் டிக்சன் என்பார். கர்த்தருக்கு பூஜை நடாத்திடும் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் போக்கினராக இருந்த பல்லாயிரவரில் இந்த டிக்சன் ஒருவர்.

இவ்விதமான குருட்டுக் கோட்பாடு காரணமாக வெள்ளை இனத்தவர் தங்கள் "இரத்தம்' தூய்மையானதாக இருந்தாக வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்ததுடன், நீக்ரோக்களுக்கு உரிமை கொடுத்தால், மனிதத் தன்மையுடன் நடத்திவந்தால், மெள்ள மெள்ள அந்த இரு இனத்துக்கும் இரத்தக் கலப்பு ஏற்பட்டு விடும், பிறகு வெள்ளை இனத்தின் உயர்வும் தனித்தன்மையும் நாசமாகிவிடும் என்று கருதினர். இந்த எண்ணத்தின் தொடர்பாக வேறோர் கருத்து கிளம்பிற்று; நீக்ரோக்கள் காமவெறியர்கள்! சிறிதளவு ஏமாந்த நிலையில் இருந்திடின் போதும், வெள்ளை மாதர்களைக் கற்பழித்து விடுவர்; அவர்களின் விலங்கியல்புக்கு வெள்ளை மாதர்கள் ப-யாகிப் போவர்! - என்ற எண்ணம்!

நீக்ரோக்களைத்தான் வெள்ளையர் தமது பண்ணைகளிலே மட்டுமல்ல, வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில், கேளிக்கைக் கூடங்களில் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தனர்; கடுமையாக உழைப்பார்கள், அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள், கூ-யும் அதிகம் தரத் தேவையில்லை என்ற காரணத்தால்.

வெள்ளையருடன் - மாதருடனும் - பழகியே தீர வேண்டிய நிலை நீக்ரோக்களுக்கு.

ஆனால், வெள்ளையர்களுக்குச் சொல்லிவைக்கப்பட்ட தகவல், கருப்பரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்கள் மிருக இயல்பினர், காமவெறி கொண்டவர்கள் என்பது!

இதன் பயனாக வீணான சந்தேகத்துக்கு ஆளாகி, சித்திரவதை செய்யப்பட்ட நீக்ரோக்களைப் பற்றிய ஏடுகள் படிப்போரின் உள்ளத்தை உருக்கும்; இரத்தக் கண்ணீர் வடிப்பர்.

நிலைமையை உணர்ந்த நீக்ரோக்கள், இது விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பர். வெள்ளை மாதர்களை நெருப்பாகக் கருதுவர்! எந்த நேரத்தில் எந்த விதமான பழி சுமத்தப்பட்டு விடுமோ என்பது மட்டுமல்ல, எந்தச் சமயத்தில் என்ன விதமான பயங்கரச் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமும்கூட.

டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரானதும், இந்த நிலைமையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடை பெறுகிறது. தம்பி! படித்ததும, நம்மையுமறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது.

வெள்ளையர்கள் மனதில் நெடுங்காலமாகப் படர்ந்து கிடக்கும் வெறுப்புணர்ச்சி, ஒரு கருப்பர் குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவி பெற்றுவிடுவதாலே மட்டும், ஒரே அடியாக மறைந்து விடுமா?

தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது,
சகித்துக்கொண்டாக வேண்டும்.
வேறு வழி இல்லையே,
என்ன செய்வது,

என்று எண்ணிக்கொள்வரேயன்றி, நிறம் எதுவாக இருந்தால் என்ன, குடியரசுத் தலைவர் என்ற முறையில், அவர் நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவராகிறார் என்றா எண்ணிக் கொள்வர்; இயல்பு இலேசாகவா மாறிவிடும்!

டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவராகி, வெள்ளை மாளிகை சென்ற நாள்; முதல் நாள்.

குடியரசுத் தலைவருக்கென்று உள்ள பல அலுவலர்கள், ஒரு கருப்பரின் கீழ் வேலை செய்யவேண்டி இருக்கிறதே என்ற விசாரத்தில் மூழ்கிக்கிடக்கின்றனர். சிலர் நீக்ரோ இனத்தவரான டில்மனுக்கு அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் பணியாட்களாக இருப்பது முறையாக இருக்கும் என்று கருதி, தமது வேலைகளை ராஜிநாமாச் செய்துவிட முடிவு செய்தனர். அவ்விதம் முடிவு செய்தவர்களில் ஒருவர் எட்னா என்ற வெள்ளை மாது; குடி யரசுத் தலைவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்ப்பவர். இனி நீக்ரோ மாது ஒருத்தியைத்தான் இந்த வேலையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லவேண்டும், இன்று மட்டும் குடியரசுத் தலைவருக்கு அலுவலக முறைகளைக் கூறிவிட்டால் போதும் என்று எண்ணிக்கொண்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தயாராக எடுத்துக்கொண்டு, அன்று அவர் பார்க்க வேண்டிய அலுவல்கள் பற்றிய குறிப்புப் புத்தகத்துடன், குடியரசுத் தலைவருடைய தனி அறைக்குச் செல்கிறாள்.

டில்மனுக்கு வணக்கம் கூறிவிட்டு, அவருடைய அன்றைய அலுவல் பற்றிய குறிப்பைத் தந்துவிட்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தந்திடத் தயாராகிறாள்.

முக்கியமான ஒரு கடிதம் எழுதப்பட வேண்டும் என்ற குறிப்பினைக் காட்டுகிறார் டில்மன். அவர் கூறிக்கொண்டுவர எட்னா சுருக்கெழுத்தில் எழுதவேண்டும். இருவரும் உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக அமைந்திருந்த ஒரு சோபாவைக் காட்டுகிறார் டில்மன். உடனே எட்னா, பலகணியை இழுத்து மூடுகிறாள்; அறைக்கதவைச் சாத்தித் தாளிடுகிறாள்.

"என்ன செய்கிறாய் எட்னா?''

"கதவைச் சாத்தித் தாளிடுகிறேன். தாங்கள் கூறப்போகும் தகவல் - கடிதம் - இரகசியமானதாயிற்றே! குடியரசுத் தலைவர் தமது அந்தரங்கக் காரியதரிசியைக் கொண்டு தயாரிக்கும் கடிதத்தில் உள்ள விஷயம் வெளியே ஒருவருக்கும் தெரியக்கூடாதே....''

"அதனால் கதவைத் தாளிட்டாயா, எட்னா? வேண்டாம், கதவு திறந்தே இருக்கட்டும். ஏன் என்று திகைத்திட வேண்டாம்.... என் நிலை அப்படி.... ஒரு சம்பவம் நினைவிலே இருக்கிறது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்த அயிசனவர் ஒரு நீக்ரோவுக்கு முக்கியமான பதவி கொடுத்தார்... அந்த நீக்ரோ தனக்கு உதவியாளராகப் பணிபுரிய, வெகு கஷ்டப்பட்டுத்தான் ஒரு வெள்ளை மாதைப் பெற முடிந்தது.... வெள்ளை மாதர்கள் ஒரு கருப்பரிடம் வேலை பார்த்திட விரும்பவில்லை... பலர்.... எப்படியோ... ஒரு பெண் கிடைத்தாள்..... அவள் அலுவலகத் தனி அறையில் அமர்ந்து வேலை பார்க்கும்போது, கதவுகளைத் திறந்தே வைத்திருந்தாள். பாவம்! அத்தனை பயம், யார் என்ன சொல்வார்களோ, கருதிக்கொள்வார் களோ என்பதால்.... நான் அந்தச் சம்பவத்தை மறக்கவே இல்லை.... மறக்கவே முடியாது... எட்னா! கதவுகளைத் திறந்துவை!''

தம்பி! இந்தக் கருத்துப்பட டில்மன் கூறியதும், எட்னாவின் மனம் எப்படி உருகாமலிருந்திருக்க முடியும்? நிறம் கருப்பு என்ற ஒரு காரணத்தினால், குடியரசுத் தலைவர் பதவி பெற்ற போதிலும், வெள்ளைமாதுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருப்பது முறையல்ல, முறைமை அல்ல என்று வெள்ளை உலகம் வெகுண்டெழுந்து கூறும் என்றல்லவா கருதுகிறார் டில்மன்! நிலைமையும் வெள்ளையர் நினைப்பும் அதுபோலத்தானே இருக்கிறது! எத்தனை வேதனை ஏற்பட்டிருக்கும் தனது நிலைமையை எண்ணிப் பார்த்திடும் போது! தத்தளிக்கிறார் பரிதாபம்! இவருக்குப் பரிவு காட்டி, மனித உள்ளத்தோடு நடந்துகொள்ள வேண்டும். நிறவெறி எல்லோருக்கும் இருந்தே தீரும் என்பதில்லை; வெள்ளையரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனை மெய்ப்பித்தாக வேண்டும். அஞ்சாதீர் ஐயா! உமது நிறம் கருப்பு, என் நிறம் வெளுப்பு! இருந்தால் என்ன? ஒரு வெள்ளை மனிதர் மேலான பதவியில் இருந்தபோது நான் எப்படி நடந்து கொண்டேனோ அதுபோலவே உம்மிடம் நடந்துகொள்வேன்; பேதம் காட்டமாட்டேன்; உமது இதயத்தில் குமுறும் வேதனையை நான் உணருகிறேன்! - என்றெல்லாம் எட்னா கூறவில்லை; பார்வையின் மூலமாகவும் பெருமூச்சின் மூலமாகவும் இவ்வளவும் இதற்கு மேலும் விளக்கமாக்கினாள் போலும்!

தலைவர் அவர்களே! கதவுகள் தாளிடப்பட்டே இருக்கட்டும். அதுதான் முறை.

எப்போதும் உள்ள முறை. சரி. எட்னா! நான் பார்க்க வேண்டிய முத அலுவல் என்ன? குறிப்பு இருக்கிறதல்லவா?

முதல் அலுவல், உமது அலுவலகத்திற்கான பணியாளர்களை, உதவியாளர்களை நியமித்துக் கொள்வது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்தவரிடம் வேலை பார்த்தவர்களையே வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம்; புதிதாக நியமித்துக் கொள்ளவும் செய்யலாம்....''

அப்படியா! முன்பு இருந்தவர்களையே நியமிக்க விரும்புகிறேன்... எட்னா! முதலாவதாக உன்னிலிருந்து துவக்க விரும்புகிறேன், என்னிடம் பணியாற்றச் சம்மதமா?

நன்றி, வணக்கம். பணியாற்றுகிறேன் மகிழ்ச்சியுடன். அப்படியானால் எட்னா! குடியரசுத் தலைவராகி யுள்ள நான் முதன் முதலாகப் பிறப்பிக்கும் உத்திரவு, உன்னை வேலைக்கு அமர்த்துவதுதான்....

மெத்தவும் நன்றி, தலைவர் அவர்களே! மிக்க நன்றி, உமக்கு எல்லோருமே துணை நிற்பார்கள்; உதவி செய்வார்கள்!

அப்படியா கருதுகிறார்! எனக்கு அப்படித் தோன்றவில்லை, எட்னா!

எல்லோரும் உதவி செய்வர்! உங்கள் வெற்றிக்காகப் பிரார்த்தனை நடத்துவர். ட்ருமனுக்கும் ஜான்சனுக்கும் துணை நின்றது போல உமக்கும் துணைபுரிவார்கள், முன்பு போலவே....

முன்பு! இப்போது நிலைமை மாறி இருக்கிறது. அவர்கள் - முன்பு தலைவர்களாக இருந்தவர்கள் கருப்பர் அல்லவே... இருக்கட்டும்... யாருடைய உதவி கிடைக்காவிட்டாலும், ஆண்டவனுடைய உதவி கிடைக்குமல்லவா.... ஆண்டவன் கருப்பா, வெள்ளை நிறமா என்று நிச்சயிக்கப்படவில்லை அல்லவா!

இந்தக் கருத்துப்பட டில்மன் பேசக்கேட்ட எட்னாவால் அழுத்திவைக்கப்பட்ட, தாழ்வாக நடத்தப்பட்டு வந்த ஒரு இனத்தின் இதயத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் வேதனையை உணர முடிந்தது. டில்மன் எத்தனை நேர்த்தியான நற்குணம் படைத்தவர் என்பதையும் எப்படி உணராமல் இருந்திருக்க முடியும்? ராஜிநாமாக் கடிதத்தைக் கசக்கி எறிந்துவிட்டு, அந்த மனிதனிடம் பணியாற்றி, மனிதத்தன்மையின் மாண்பினை உயர்த்திட உறுதி கொண்டாள்.

எட்னா எனும் வெள்ளை மாதிடம் இத்துணைப் பெருங் குணத்துடன் நடந்துகொண்ட டில்மன் மீதுதான் வெள்ளைப் பேரதிகாரிகள், சாலி வாட்சன் என்ற வெள்ளை மாதைக் கற்பழிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டினர்.

சாலி என்ற அந்த வெள்ளை மாது, வாட்சன் என்ற செனட் உறுப்பினரின் மகள்! சீமானின் மகள், சீமானுக்கு வாழ்க்கைப் பட்டு அவனிடமிருந்து விடுதலை பெற்று, புதிய பூங்காவில் உலவிடத் துடித்துக் கொண்டிருந்த உல்லாசி. குறியற்ற குதூகலத்திலும் சாலி குடைந்தாடியபடி இல்லை. பெரிய இடம் தேடிக் கொண்டிருந்தாள்.

ஈட்டன் என்ற வெள்ளைப் பேரதிகாரி, குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையினன்! ராஜாங்கக் காரியதரிசி என்ற செல்வாக்கு மிக்க பதவி வகித்து வந்தவன் - மணமானவன் - மனைவியோ மலைமுகடு, கடலோரம், சந்தைச் சதுக்கம், சல்லாபக்கூடம் ஆகிய இடங்களிலே உலவிக் கொண்டிருந்தாள், இவனைத் தனியனாக்கி விட்டு! அவனைத் தன் "இனியன்' ஆக்கிக் கொண்டிருந்தாள் சாலி! இந்தச் சல்லாபியைக் கெடுக்க முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு. அவள் போக்கு அறிந்தவர்களும் அந்தப் புகார் கேட்டுக் கொதித்தனர்; ஆயிரம்தான் இருக்கட்டும், அவள் ஆடிக் கெட்டவள் என்ற பெயரெடுத்தவளாகக் கூட இருக்கட்டும், அவள் வெள்ளை இனம்! இவன் குடியரசுத் தலைவராகிவிட்டதாலேயே வெள்ளை இனத்தவனாகிவிடுவானா! கருப்பன்! நீக்ரோ! ஒரு நீக்ரோ வெள்ளை மாதைக் கற்பழிக்க....! என்ன அக்கிரமம்! என்ன அக்கிரமம்! என்று கொதித்தனர்.

டில்மன், மாசற்றவன்; பொறுப்பு மிக்கவன்; வெள்ளை இனத்தவரால் தன் இனத்தவர் மீது ஏற்றப்பட்டிருக்கும் பழிகளை நன்கு அறிந்தவன்; எட்னா எனும் வெள்ளை மாது தன்னுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருந்துங்கூட தகாத செயல் என்று "நாலுவேர்' கூறுவார்களே என்பதை எண்ணி நடுங்கினவன்; நேர்மையாளன்! அவன் மீது இந்தப் பழி! பொதுவாக நீக்ரோக்கள் மீது சுமத்தப்படும் பழி இது! அவர்கள் மனிதர்கள் அல்லவே! மிருகங்கள்! மிருகங்கள் தாக்கத்தானே செய்யும், அடக்கி வைக்காவிட்டால்!

சாலி வாட்சன் தந்திர மிக்க சதி புனைந்தாள்.

டில்மன் - ஒரு கரு நிறத்தான் - குடியரசுத் தலைவரானது அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை; ஆயினும் தானாக வலியச் சென்று "சிபாரிசு' பிடித்துக் கொண்டு சென்று டில்மனிடம் வேலைக்கு அமர்ந்தாள்; - குடியரசுத் தலைவர் அவ்வப்போது உள்நாட்டுப் பிரமுகர்களுக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் நடத்திடும் விருந்து வைபவங்களைக் கவனித்துக் கொள்ளும் காரியதரிசியாக.

பகட்டும் ஆடம்பரமும், பளபளப்பாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதற்கு மட்டுமல்ல; குடி யரசுத் தலைவருடன் நெருங்கிப் பழகவும், அவருடைய "அந்தரங்கம்' அறியவும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால்.

அதிலே என்ன ஆதாயம்? என்று எண்ணுவாய் தம்பி! ஏன் ஆதாயம் இல்லை! கண்டறியும் தகவல்களை உடனுக்குடன் தன் "காதலன்' ஈட்டனுக்குத் தந்திடலாம்; அதனைக் கொண்டு அவன் தன் செல்வாக்கை மேலும் வலுவாக்கிக் கொள்ளலாம்.... பிறகு.... பிறகு குடியரசுத் தலைவராகவே வந்துவிடலாமே, தக்கசமயம் பார்த்து. அதனால் சாலிக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்குமா? அவள் சாலி ஈட்டன் ஆகிவிடலாம்! அமெரிக்காவின் முதல் ஆரணங்கு ஆகிவிடலாம்!!

இத்தனை சதித்திட்டம் உருவாயிற்று, அந்தச் சரசிக்கு.

குடியரசுத் தலைவரின் கட்டிலறை! இரவு! ஆடை நெகிழ, மயங்கிய நிலையில், சாலி!

டில்மன் அவளை எழுப்புகிறார்; அவள் சாய்கிறாள் மேலே; மயக்கத்தில்! அவர் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்.

எப்படி நேரிட்டது இந்த நிலை? ஏன் நேரிட்டது என்று கேட்கிறாய்; புரிகிறது தம்பி! உன் ஆசை. சல்லாபச் சீமாட்டியின் சதி நாடகத்தை அவ்வளவு சாமான்யமாகவா எண்ணிக் கொண்டாய். ஒரு வாரம் பொறுத்திரு, முழு வடிவம் கண்டிட.

அண்ணன்,

20-3-66