அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெந்த புண்ணில் வேல்
1

தருமபுரியில் தோற்கடிக்கப்பட்டோம்
தோல்வி நமக்கொரு பாடம்; வெற்றிக்கு வழி அமைக்கும்.
மெய்யும் பொய்யும் குயிலும் காகமும் போல!
கழகத்தவர் இருட்டில் ஒளி எழ விளக்கு ஏற்றியவர்கள்.

தம்பி!

கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிய காளை, பயிரைப் பாழாக்கி, குழந்தைகளைக் குத்திக் குற்றுயிராக்கி அட்டகாசம் செய்வது கண்டு, அதனை மடக்கி அடக்கி, மற்றவர்க்கு ஏற்படக் கூடிய ஆபத்தைத் தடுத்திட வேண்டும் என்று முயன்றவனை, அந்தக் காளை தாக்கிவிட்டு தப்பித்துக்கொண்டு கனைத்துக் கொண்டு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு, வாலைத் தூக்கியபடி ஓடுவதைக் கண்டதுண்டா? காளைக்குப் பேசத் தெரியாது; தர்மபுரியில் வெற்றி கிடைக்கப் பெற்ற எக்களிப்புக் கொண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, வாய் இருக்கிறது; ஆகவே வார்த்தைகள் குபுகுபுவெனக் கிளம்புகின்றன; பொழிந்து தள்ளுகிறார்கள்! கேட்டுக்கொள்கிறேன் காது இருப்பதால்; பொறுத்துக்கொள்கிறேன், அவர்களின் போக்குப் புரிவதால்; கூறிவைக்கிறேன், உன் கடமையை உனக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதால்.

புள்ளிமானை அடித்துத் தின்றிடும் புலி உறுமுவதும், ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொன்றிடும் ஓநாய் கத்துவதும், காட்டிலே. நாட்டிலே, சில வேளைகளிலே அக்கிரமக்காரர்கள், சூது பல செய்து நீதியைச் சாய்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பதுண்டு, அவர்களின் எண்ணம் எல்லாம் முடிந்துவிட்டது என்பதால். பேதமையான எண்ணம் மட்டுமல்ல, தலை சுற்றும் அளவுக்குத் தற்பெருமை ஏறிவிட்டது என்பதும் அந்த ஆர்ப்பரிப்பின் பொருளாகும்.

என்னை எதிர்க்க இனி எவனால் ஆகும்!
எதிர்த்து நின்றவன் என்ன கதியானான் காணீர்!
தாக்கினேன்! தகர்ந்துபோனான்!
பொடிப் பொடியானான் போரிட வந்தவன்!

இவ்விதம் ஆர்ப்பரித்தவர்கள் ஒவ்வொருவரும், தமது வல்லமை பற்றித் தவறான கணக்குப் போட்டுக்கொள்பவர்களே என்பதனை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் எண்ணற்றன உள்ளன வரலாற்றுச் சுவடிகளில்! எக்காளமிடுவோர் இதனை நினைவிற்கொள்வதில்லை.

தரம் குறைந்தவர்கள் மட்டுமல்ல, ஓரளவு தரம் உள்ளவர் களுக்கேகூடச் சில வேளைகளில் வெற்றி தந்திடும் மகிழ்ச்சி, போதையாகிவிடுவதுண்டு.

பிறகோர் நாள் வீழ்த்தப்பட்ட ஜுலியஸ் சீசர், களம் சென்று வெற்றி கண்டது குறித்துத் தன் நாட்டவருக்குச் "சேதி' அனுப்பிய போது, சென்றேன்! கண்டேன்! வென்றேன்! என்று குறிப்பிட்டிருந்தான் - தனது வல்லமையின் அளவுபற்றி அவனுக்கு அத்தனை பெரிய கணக்கு.

ஜுலியஸ் சீசராவது, சென்றேன் - கண்டேன் - வென்றேன் என்றார்! முதலமைச்சர் பக்தவத்சலமோ, சென்றேனில்லை! வென்றேன் காண்பீர்! என்று பேசுகிறார்! பேசுகிறாரா? முழக்கமிடுகிறார்! களம்கூடச் செல்லாமல் - வெற்றிபெற்ற வேந்தர் வேந்தே! வாழ்க உமது வீரம்! வளர்க உமது தீரம்!! என்று வளைந்துபோனவர்கள் சொல்லாரம் சூட்டுகின்றனர்.

காணாததைக் கண்டவர்கள்! என்று பேசிடுவோரும், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்றும், திருச்சொங்கோட்டையும், திருவண்ணா மலையையும், சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் மண் கவ்வியதையும் மறந்துவிட்டார்களோ என்றும், பேசிடும் பொதுமக்கள் உளர். ஆனால், நான் அவர்களைப்போலக் காங்கிரஸ் தலைவர்களின் ஆர்ப்பரிப்பைக் கண்டிக்கவோ, திருச்செங்கோடு திருவண்ணாமலையைக் கொண்டு தருமபுரியை மறைக்கவோ போவதில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் - காரணம் பல காட்டி இது உண்மையில் தோல்வி அல்ல என்று வாதாடப்போவதில்லை; தோல்வி கண்டோம் என்பதனை ஒப்புக்கொள்ளத் தயங்கப்போவதில்லை. கேரளத்தில் கண்ட தோல்வியை மறைத்திடப் புள்ளி விவரக் கணக்குத் திரைக்குப் பின்னே ஒளிந்துகொண்ட காமராஜர்போல, தருமபுரியில் முன்பு பெற்றதைவிட அதிக வாக்குகள் கழகம் பெற்றிருக்கிறது என்று கணக்குக் காட்டிடும் தந்திரத்தையும் மேற்கொள்ள முற்பட வில்லை. ஆமாம்! தோற்றுவிட்டோம்! தோற்கடிக்கப்பட்டோம்! என்பதனைக் கூறிட அச்சம், தயக்கம் கொள்ளவில்லை; தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

தோல்வியை ஒப்புக்கொள்வது மட்டுமல்ல; அந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி, காங்கிரஸ் தலைவர்கள் பேசிடும் இழிமொழிகள், எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகள், ஒழித்தே விடுவோம் என்ற மிரட்டல்கள் ஆகியவற்றை வரவேற்கிறேன்.

நான், எனது கழகத் தோழர்களின் கண்முன்பும் பொது மக்களுடைய கண்முன்பும், தோற்கடிக்கப்பட்ட கோலத்திலேயே நிற்க விரும்புகிறேன் - அவர்கள் காண - காண்பதனால் பெற வேண்டிய கருத்துக்களைப் பெற்றிட!

வளைந்தவாள்! நொறுங்கிய கேடயம்! பிய்த்தெறியப்பட்ட கவசம்! குருதி கசிந்திடும் வடுக்கள்! - இவைகளைப் பட்டுப் பீதாம்பரத்தாலோ, இரவல் மினுக்காலோ மறைத்துக்கொண்டு, என் தோழர்களின் முன்பு போலியான ஒரு காட்சிப் பொருளாக நிற்கப்போவதில்லை; தருமபுரியில் காங்கிரசால் தோற்கடிக்கப் பட்டவன் என்ற நிலையை மறைத்துக்கொள்ளாமல் நிற்க விரும்புகிறேன்; அந்த நிலையில் என்னை என் தோழர்கள் காண வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களே! உங்களால் முடிந்த மட்டும் இழிமொழிகளை மாலையாக்கி எனக்களியுங்கள் என் தோழர்கள் என்னை அந்த நிலையிலே காணட்டும்!

அடைபட்டுக் கிடந்த சேற்று நீர், கல் பெயர்க்கப்பட்டு ஒரு துளை தோன்றியதும் அதன் வழியாகக் கிளம்பி வேகமாகப் பாய்ந்தோடி வருவதுபோல, தருமபுரியில் வெற்றி கண்டதால் உங்களுக்குக் கிளம்பியுள்ள எக்களிப்பைக் காட்ட, என்னை ஏசுங்கள்! தூற்றுங்கள்! கேவலமான வார்த்தைகளை வீசுங்கள்! அவைகளை நான் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, உம்மால் எனக்கு அளிக்கப்படும் அந்த விருதுகளுடன், நான் என் தோழர்கள் முன் நிற்க விரும்புகிறேன்.

அதிலே எனக்குக் கேவலம் வரும் என்று எண்ணுகிறீர்கள் - மக்களின் மனப்பாங்கு அறியாததால்!

அவைகளைத் தாங்கிக்கொள்ள நான் அஞ்சுவேன் அல்லது கூச்சப்படுவேன் என்று எண்ணுகிறீர்கள் - என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்!

நமது அண்ணன் கேவலப்படுத்தப்படுகிறான், தருமபுரியில் கழகம் தோற்றதால், என்பதனை எவ்வளவுக்கெவ்வளவு விளக்கமாகத் தெரிந்துகொள்ளுகிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு நல்லது - எனக்கு மட்டுமல்ல - கழகத்துக்கு.

இன்று நீங்கள் வீசும் இழிமொழி, நாளைய எதிர்காலத்தை எமக்கு ஒளி நிரம்பியதாக்கிட உதவட்டும்; தெம்பு இருக்கும் போதே திட்டித் தீர்த்துவிடுங்கள்; பொன்னான வாய்ப்பு அல்லவா இது உங்களுக்கு; எமது எதிர்காலம் பொற்காலமாக இருக்க வேண்டுமானால் இப்போது உம்முடைய இழிமொழிகளை நாங்கள் பெற்றாக வேண்டும்; நாராசநடை வல்லவர்களைக் கொண்டு நன்றாகத் தூற்றுங்கள், எங்கள் உள்ளத்தில் பாய்ந்திடும் விதமாக! எமது தோழர்களின் கண்கள் குளமாகும் விதமாக! தோல்வி ஏற்பட்டால் என்னென்ன கொடுமைகள் விளைந்திடும், எவை எவைகளைத் தாங்கிக்கொள்ளவேண்டிவரும் என்ற உண்மையினை உணர்ந்திட!

தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும், தொடர்ந்து, இல்லையெனில், ஒரு இடத்தில் நாம் தோற்றாலும் நம்மை இழிவாகப் பேசிடவும், இதுதான் முடிவு என்று ஆரூடம் கணித்திடவும், பொதுமக்கள் மனத்தில் பீதி மூட்டிடவும் காங்கிரசின் பெருந்தலைவர்கள் முனைவார்கள் என்று நான் என் தோழர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் நாடியினை முறுக்கேற்றிவிடுவதனைவிட, கழகத்தின் தோல்வியைக் காட்டி, நீங்கள் ஏச ஏச, என்னைப்பற்றி இழிவாகப் பேசப் பேச, இடம் பிடித்தான்கள் குடம் குடமாகத் தமது தூற்றல் சேற்றை இறைக்க இறைக்க, என் தோழர்கள், வேதனை அடைவார்கள்; அந்த வேதனையிலிருந்து வெளிக்கிளம்பும் "சக்தி' இருக்கிறதே, அது சாமான்யமானதாக இராது; நான் அதனைப் பெற விரும்புகிறேன். என்னையும் கழகத்தையும் இழிவாகப் பேசி ஏசுவதன் மூலம், என் வேலைப் பளுவைக் குறைக்கிறீர்கள்; என் கழகத் தோழர்களின் உறுதியையும், ஊக்க உணர்ச்சியையும் வலுவாக்கி வைக்கிறீர்கள்; வசவாளர்களே! நீவிர் வாழ்க! வாழ்க! நுமது நாவு நீள்க! நீள்க! உமது தூற்றல் அகராதி பெரிதாகுக! பெரிதாகுக!

ஒரு வெற்றி கிடைத்திட்டால், காங்கிரசார் எவ்விதமாக ஆர்ப்பரிக்கின்றனர் என்பதனைக் காணட்டும், கழகத்தவர் மட்டுமல்ல, பொதுமக்களும்.

ஒரு தோல்வி கழகத்தைத் தாக்கினால், அதன் விளைவாக என்னென்ன இழிமொழிகளைக் கழகம் தாங்கிக்கொள்ளவேண்டி வருகிறது என்பதனை உணர்ந்திட, நான் ஆயிரம் விளக்கம் தருவதைவிட, உம்முடைய ஒரு அரை மணி நேரத் தூற்றல் பேச்சு மிக மிகப் பலன் தருவதாக அமையும். எனவே தூற்றுங்கள், எமது தோழர்களின் இதயத்தைத் துளைக்கும் அளவுக்கு. அவர்களின் கண் கலங்கட்டும், நெஞ்சு பதைபதைக்கட்டும், இரத்தத்தில் சூடு ஏறட்டும்; அது கழகத்தின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தி வைக்கும்.

தருமபுரி தீர்ப்பளித்துவிட்டது என்கிறார்கள் - பெருந் தலைவர்கள்!!

திருச்செங்கோடும், திருவண்ணாமலையும், சென்னை மாநகரமும் தீர்ப்பளிக்கும் திருத்தலங்கள் அல்ல போலும்! அங்கெல்லாம் மக்கள், காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டியது, தீர்ப்பு அல்ல போலும்! தருமபுரியில் மட்டுந்தான் தீர்ப்பு தெரிகிறதோ! பந்தாடும் சிறுவனும் கைகொட்டிச் சிரிப்பான்!!

தருமபுரி தீர்ப்பளித்துவிட்டது என்று பேசிடும் காங்கிரசின் பெரிய தலைவர் திருவண்ணாமலையின்போது என்ன சொன்னார்? திருவண்ணாமலை தீர்ப்பு அளித்துவிட்டது என்று கூறி, கன்னத்தில் போட்டுக்கொண்டாரா? காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டுக் காட்டினாரா? புத்தி வந்தது புத்தி வந்தது என்று சொல்லித் தலையில் குட்டிக்கொண்டாரா? தெரியுமே பொதுமக்களுக்கு, அவர்கள் காட்டிய போக்கும், பேசிய பேச்சும்!

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மக்களை ஏமாற்றி, கழகம் வெற்றிபெற்றுவிட்டது என்றார்.

கழகம் வெற்றி பெறும்போதெல்லாம், "இல்லாததும் பொல்லாததும்' சொல்லிப் பெற்ற வெற்றி! காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தால் அது தீர்ப்பு! நாக்குத்தானா அவர்கள் பேசப் பயன்படுத்தும் கருவி!

தருமபுரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது "தீர்ப்பு' என்றால் திருச்செங்கோட்டிலும், திருவண்ணாமலையிலும் கழகம் வெற்றி பெற்றதும் "தீர்ப்பு'தானே!

திருச்செங்கோடு, திருவண்ணாமலைத் "தீர்ப்புகளை' மதித்துக் காங்கிரஸ் கட்சி என்ன காவி உடுத்திக் கமண்டலம் எடுத்துக்கொண்டு காடேகிவிட்டதா! இல்லையே! போனால் போகட்டும், மற்றோர் சமயம் பார்த்துக்கொள்வோம் என்று இருந்துவிட்டது. இந்த இலக்கணம் எல்லோருக்கும் பொதுதானே! அப்படியிருக்க, தருமபுரியில் கிடைத்த வெற்றியால் மட்டும், ஏன் அவர்கள் தீர்ப்பு! தீர்ப்பு! என்று நாவாட, தலையாட, நாற்காலி மேஜையாட, ஒலி பெருக்கி உடனாட உரையாற்று கின்றனர்? காரணம் இருக்கிறது, தம்பி! காரணம் இருக்கிறது.

அவர்களுக்குத் தாங்கள் குற்றம் செய்திருக்கிறோம் என்ற அச்சம் நிரம்ப இருந்திருக்கிறது.

நமது குற்றம் வெளிபட்டுவிடும்; தண்டிக்கப்பட்டு விடுவோம்! என்ற அச்சம் இருந்திருக்கிறது.

மறுக்க முடியாததும் மறைக்க முடியாததுமான குற்றங்களைச் செய்துவிட்டிருக்கிறோமே, மக்கள் எப்படி அவைகளை மறந்துவிடுவார்கள், எப்படி மன்னித்துவிடுவார்கள்? நிச்சயமாக நம்மைத் தண்டிக்கத்தான் போகிறார்கள் என்ற திகில் கொண்ட நிலையிலேதான் அவர்கள் தருமபுரி வந்தனர்.

ஆனால், தருமபுரியில் வெற்றி அவர்கட்கு என்றதும், அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; சந்தேகத்துக்கு இடமற்ற தன்மையில் குற்றம் மெய்ப்பிக்கப்பட வில்லை என்ற காரணம் காட்டி, கொலையாளி விடுதலை செய்விக்கப்பட்டால், அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக் கொந்தளிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்; அந்த நிலையில் உள்ளனர்! நல்ல தீர்ப்பு! நல்ல தீர்ப்பு! என்று பாடுகின்றனர். நாங்கள் வென்றோம்! நாங்கள் வென்றோம்! என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

தருமபுரியில் அவர்கள் வெற்றியை எதிர்பார்க்கவில்லை; வெற்றிக்கு உரியவர்கள் தாமல்ல என்ற எண்ணம் அவர்களிடம்.

அந்த நிலையில் வெற்றி என்று ஏற்பட்டதும், அவர்களால், நிற்க முடியவில்லை, நினைத்துப் பார்க்க முடியவில்லை; வாயைத் திறக்கிறார்கள், வார்த்தைகள் உருண்டோடி வருகின்றன.

"இவன்தான் களவாடினான் என்பதற்குப் போதுமான சான்று இல்லை; மெய்ப்பிக்கப்படவில்லை'' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

குற்றக் கூண்டிலே நின்றவன் மகிழ்ச்சிப் பெருக்கடைந்தான், தன் நிலையையும் மறந்தான்.

"அப்படியானால் அந்தத் தங்கச் சங்கிலியை நான் திருப்பித் தரவேண்டியதில்லையே?''

என்று கேட்டுவிட்டானாம், தீர்ப்பளித்த நீதிபதியே, தான் எவ்வளவு பெரிய தவறான தீர்ப்பளித்துவிட்டோம் என்பதை உணர்ந்து திகைத்திடத்தக்க விதமாக.

அவன் விவரமறியாத குற்றவாளி! காங்கிரஸ் தலைவர்கள் எல்லாத் திறமையும் பெற்றவர்களாயிற்றே. ஆகவே, குளறிக் கொட்டவில்லை, தீர்ப்புப் பிரமாதம் என்று பேசித் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

தருமபுரியில் மட்டுமல்ல, எத்தனையோ இடங்களில் எத்தனையோ தடவைகளில், எத்தனையோ விவரமறிந்தவர்கள் கூட மெய்போன்ற பொய்யை ஆதாரமாகக் கொண்டு தவறான தீர்ப்பு அளித்துவிடுவதுண்டு.

கள்வனைக் கொண்டுவா! என்று கூறவேண்டிய மாமன்னன் கள்வனைக் கொன்று வா!

என்று கூறியபோது, மன்னன் தீர்ப்பு - நீதிநெறி வழுவாத மன்னன் தீர்ப்பு - செங்கோல் வளையாச் சிறப்புடையான் தந்த தீர்ப்பு என்றுதான் அவையோர் கருதினர். கோவலனைக் கொடுமைக்கு இரையாக்கிய கெடுமதியாளன், "இஃதன்றோ நல்ல தீர்ப்பு'' என்றுதான் பெருமிதத்துடன் கூறியிருப்பான்.

உண்மையான தீர்ப்பு பிறகல்லவா கிடைத்தது, ஒற்றைச் சிலம்பேந்திய கண்ணகி சிலம்பினை உடைத்து உள்ளே உள்ள பரல்களைக் காட்டி, தன் கணவன் குற்றமற்றவன் என்பதனை மெய்ப்பித்தபோது!

எனவே, திருவண்ணாமலையையும் திருச்செங்கோட்டையும், சென்னை மாநகரையும் தீர்ப்பளிக்கும் தகுதி பெற்ற இடங்களல்ல என்று கருதிக்கொண்டு, தருமபுரி மட்டுமே தீர்ப்பளிக்கும் இடம் என்று காங்கிரசார் கூறினாலும் - அது சொத்தை வாதம் - அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதான் என்றோ, முடிவானது தான் என்றோ கூறிவிடுவது எங்ஙனம் பொருந்தும்?

தரப்பட்ட ஆதாரங்களைக் கொண்டும், காட்டப்பட்ட சான்றுகளை நம்பியும், எடுத்துக் கூறப்பட்ட வாதங்களைக் கொண்டும், தருமபுரி மக்கள் அந்த விதமான தீர்ப்பு அளித்துவிட்டனர்.

இதனாலே நான் தருமபுரி மக்கள்மீது குற்றம் கூறவில்லை; அவர்களின் நேர்மையையும் திறமையையும் சந்தேகிக்கவில்லை; நான் கூறிக்கொள்வது, நாம் வழக்கை எடுத்துரைத்ததிலும், சான்றுகளை விளக்கியதிலும் குற்றத்தை மெய்ப்பித்துக் காட்ட வாதாடியதிலும், தேவைப்படும் அளவு திறமையைக் காட்டாததால் வழக்கின் வடிவம் கெட்டுவிட்டது; தீர்ப்பு வேறு விதமாகிவிட்டது என்றுதான் கருதுகிறேன்.

நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டுமேயன்றி, தருமபுரி மக்கள்மீது வருத்தப்பட்டுக்கொள்வது முறையாகாது.

நியாயம் காங்கிரசின் பக்கம் இருந்ததாலும் அல்ல; நீதிபதிகள் தவறான போக்கினர் என்பதாலும் அல்ல; வழக்கை எடுத்துரைப்பதில், நாம் வெற்றி பெறாததாலேயே தீர்ப்பு காங்கிரசுக்குச் சாதகமானதாகத் தரப்பட்டுவிட்டது.

இது தோல்வியை மறைத்திடக் கூறப்படும் தத்துவம் அல்ல; நான் தோல்வியை ஒத்துக்கொண்ட பிறகே இதனைக் கூறுகிறேன்; உண்மை நிலைமையினை உவகைக் கூத்தாடும் காங்கிரஸ் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குக்கூட அல்ல; நமக்கே உண்மை நிலைமை புரிய வேண்டும் என்பதற்காக.

பிரச்சாரத்தில் திறமை மிக்கவர்களாயிற்றே, நீங்களா போதுமான முறையிலே வழக்கை எடுத்துரைக்கத் தவறி வீடுவீர்கள்! என்று நையாண்டி செய்வார்கள்; உணருகிறேன். நான் கூறுவது, நமது பிரசார முறை செம்மையாக இல்லை என்பது அல்ல; வழக்கு மிக எளிதானது; சிக்கலற்றது; இதனை விளக்க நாம் அதிகமான முயற்சி எடுக்கத் தேவையில்லை, குற்றம் புரிந்துவிட்டது காங்கிரஸ் கட்சி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும், ஆகவே, தண்டிக்க முற்படுவர் என்ற நம்பிக்கையை, அளவு கடந்த முறையிலே வைத்துக்கொண்டு தீர்ப்பு நிச்சயமாக நமது பக்கம்தான், இதிலென்ன சந்தேகம், என்ற முனைப்புடன் தருமபுரி சென்றோம். அதைக் கூறுகிறேன்.

அச்சத்தோடு வந்தவர்கள், குற்றத்தை மறைத்திடத் திறமை காட்டினர், தமக்கு ஆதரவான தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

தீர்ப்பு நம் பக்கம்தான் என்ற நம்பிக்கையை மிக அதிக அளவு கொண்டிருந்ததால், நாம் மெத்தனம் காட்டினோம்; தோற்கடிக்கப்பட்டோம்.

இது தோல்வி அல்ல என்று வக்கணை பேச அல்ல இதனை நான் குறிப்பிடுவது.