அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெற்றிகள் குவிந்தன!
2

வெளியே செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. இங்கு வந்து அடைபட்டுக் கிடக்கிறோமே என்ற எண்ணம் தோன்றும்போதெல்லாம், கவலையாகத்தான் இருக்கிறது - ஆனால் நாம் மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையை மக்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது அறப்போர் என்று உணரும்போது, சிறையில் அடைபட்டுக் கிடப்பதும் தேவையான ஒரு திருப்பணி என்ற எழுச்சி பெறுகிறோம். ஆளுங்கட்சியும், நமது நாட்டு இதழ்களும் காரணமற்று நம்மிடம் கசப்புக் கொண்டுள்ள நிலையிலிருந்து விடுபட்டு, இந்தி எதிர்ப்புணர்ச்சி எந்த முறையில் இருக்கிறது என்பதனை இந்தி ஆதிக்கக்காரர்கள் உணருவதற்காக, நமது அறப்போர் குறித்து உண்மையை உரைப்பார்களானால், பிரச்சினையின் சிக்கலில் பெரும் பகுதி தீர்ந்துபோகும். ஆனால் ஆட்சியாளர்களின் மனம் மாற மறுக்கிறது; நாம் மேற்கொண்டுள்ள பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதனைத்தான் அவர்கள் போக்கு காட்டுகிறது.

21-3-1964

இன்று இங்குள்ள டாக்டர் எனக்கு ஊசி போட்டார் - இளைப்பு போக; டாக்டர் நடராசன் குறிப்பிட்டிருந்தாராம் இதுபோல ஊசி போடும்படி. டாக்டர் இளைஞர் என்றாலும் பக்குவம் அறிந்திருக்கிறார். மேலும் சில ஊசி போடுவார் போலிருக்கிறது.

இன்று மாலை, நாவலரும் கருணாநிதியும் அன்பழகனும் வந்து பார்த்தார்கள். கழக நிலைபற்றியும், குறிப்பாகத் தேர்தல்கள் குறித்தும், பேசிவிட்டுச் சென்றார்கள் என்று அறிந்துகொண்டேன். இருவருமே இளைத்துப்போய் களைத்துப் போய் காணப்பட்டார்கள் என்று அன்பழகன் கூறினார். வேலைப் பளுவும், பிரச்சினைகளின் சிக்கலால் ஏற்பட்டுவிடும் தொல்லைகளும் அவர்களை வாட்டி எடுக்கும் என்பதை உணருகிறேன். ஆனால் இந்தக் கட்டத்தை அவர்கள் மிகச் சிறந்த ஒரு பயிற்சி வாய்ப்பு என்ற முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். கழக நிர்வாக சம்பந்தமான அலுவல்களிலிருந்து நான் என்னை விடுவித்துக்கொண்டால், கழக வளர்ச்சிக்காக மேலும் சிறந்த முறையில் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்ற முடியும். இந்த என் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கழகத்தின் நிர்வாக அலுவல்களை மேற்கொள்ள மற்றவர்கள் முனைய வேண்டும். நான் சிறைப் பட்டிருக்கும் நாட்கள் இதற்கான வாய்ப்பாகக் கொண்டிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கழக நிர்வாகத்திலே வந்துள்ள நகராட்சிகளிலே, புது முறைகளைப் புகுத்தி, கழகம் ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்தது என்பதனை மக்கள் உணரும்படி செய்திட வேண்டும் என்று இங்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். பெல்ஜியம் நாட்டிலே, ஒரு கட்சி நகராட்சி ஒன்றிலே நடத்திக்காட்டிய நிர்வாகத்தின் தரத்தையும் திறத்தையும் கண்டு, நாடாளும் வாய்ப்பையே அந்தக் கட்சிக்கு மக்கள் அளித்தனர் என்று ஏதோ ஒரு ஏட்டிலேதான் படித்ததாகப் பொன்னுவேல் கூறினார். கட்சி மாச்சரியம் காரணமாக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திய கழகத்தின்மீது ஆளுங்கட்சியினர் அபாண்டங்கள் சுமத்தினர் என்றாலும், பொதுவாக நமது கழகத் தோழர்கள் மெச்சத்தக்க முறையிலேயே மாநகராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்தி இருக்கின்றனர் - தவறுகள் செய்திருந்தால், மேலே உட்கார்ந்துகொண்டிருக்கும் காங்கிரசு அரசு, சும்மா விட்டிருக்குமா? மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையே கலைத்து விட்டிருக்குமே! குற்றம் கண்டுபிடிக்க இயலாத முறையிலேதான் நிர்வாகம் நடத்தப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முனுசாமி நல்ல முறையிலே அமைத்திருக்கிறார் என்பதை "இந்து'' இதழேகூட எடுத்துக்காட்டியிருந்தது என்று நண்பர்கள் நினைவு படுத்தினார்கள். ஆமாம்! தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட "பட்ஜட்' என்று "இந்து' குத்தலாகக்கூட எழுதிற்று; ஆனால் மக்களாட்சி முறையில் மக்களைத் திருப்திப்படுத்தும் விதமாக "பட்ஜட்' தயாரிப்பது குற்றமல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன்.

"ஏதேதோ வீண் பழிகளைச் சுமத்துகிறார்கள்; ஒரு மாட்டை அடித்துக் கொன்றுவிட்டார்கள் கழகத்தார் - மாடு காங்கிரசின் தேர்தல் சின்னம் என்பதற்காக.''

"இது நடைபெறவே இல்லை, அபாண்டம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்; மெயில் இதழிலே வெளியிட்டிருந்தார்கள்.''

"ஆமாம் - அப்படியே முறை தெரியாத யாரோ சிலர் அதுபோலச் செய்திருந்தால்கூட, அது கண்டிக்கத் தக்கது என்றாலும், அதற்காக கழகத்தை அதற்குப் பொறுப்பாக்கிக் கண்டிக்கலாமா?'' என்றுகூட மெயில் எழுதியிருந்தது.

"இன்று பத்திரிகையிலே பார்த்தீர்களா அண்ணா! அமெரிக்காவிலே ஒரு அரசியல் கட்சி எதிர்க்கட்சியின் தேர்தல் சின்னமாக உள்ள யானையை மனதிலே வைத்துக்கொண்டு, கட்சிவிழா விருந்தில், யானைக் கறி சமைக்கப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலே வேட்டையாடிக் கொன்று, யானைக் கறியைப் பதப்படுத்தி அமெரிக்காவுக்குக் கொண்டு வர ஏற்பாடாம்.''

"இதுபற்றி கண்டனத் தலையங்கம் எழுதக் காணோம். நடக்காத ஒன்றை வைத்துக்கொண்டு நமது கழகத்தைக் கண்டிக்கிறார்கள்.''

இப்படி நண்பர்கள் பேசிக்கொண்டனர். உழைப்பாளி கட்சிக்குச் சின்னம் "கோழி' - உழைப்பாளி கட்சியும், கோழிச் சின்னம் கொண்டிருந்த சில சுயேச்சையாளரும் தேர்தலில் தோற்றபோது காங்கிரசார் நடத்திய வெற்றி ஊர்வலத்தில், கோழியை அறுத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள் என்று நான் கூறினேன்.

"நம்முடைய கழகத்திடம் மட்டும் இந்த அளவுக்குப் பகை உணர்ச்சிகொள்ளக் காரணம் என்ன?'' என்று நண்பர்கள் கேட்டனர்.

"காரணம் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளாக எதிர்த்து வந்தார் பெரியார், காங்கிரசை; காங்கிரஸ் ஒழிப்புநாள், சுதந்திரம் பெற்ற துக்கநாள் என்றெல்லாம் நடத்தினார். அவரே ஓய்ந்துபோய், நம்பிக்கை இழந்துபோய், காங்கிரசை ஆதரிக்க முனைந்துவிட்டார். காங்கிரஸ் முதலாளிகளின் முகாம் என்று முழக்கமிடும் கம்யூனிஸ்டு கட்சியும் முற்போக்கு அணி அமைப்போம் என்று கூறிக்கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பைத் தளர்த்திவிட்டது; ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்; அசோக் மேத்தா "ஆலோசகர்' ஆக்கப்பட்டுவிட்டார்; இப்படி பலப் பலர், இணைந்து போகிறார்கள். பணிந்து போகிறார்கள், இந்தக் கழகம் மட்டும் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறதே, மக்களின் பேராதரவு கழகத்துக்கு பெருகி வருகிறதே, என்பதை எண்ணிப் பார்க்கும்போது, காங்கிரசுக்கு நம்மீது கடுங்கோபம் எழத்தானே செய்யும்; அதனால்தான் பகை கொட்டுகிறார்கள், பழி சுமத்துகிறார்கள்'' என்று நான் விளக்கிப் பேசினேன். நண்பர்கள் இது குறித்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆட்சியாளர் எத்தனை பகை கக்கினாலும், மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறவரையில், நாம் கவலைப்படத் தேவை இல்லை என்று பேசிக்கொண்டோம். இரவு அறைக்குள் பூட்டப்படும்போது, மக்கள் ஆதரவு கழகத்துக்குத்தான் இருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதுபோல், ஒரு காவலாளி, "வேலூரிலும் உங்க கட்சிதான் சேர்மனாம் - யாரோ சாரதியாம்'' என்று கூறினார்.

பொதுவாக, அறையிலே எங்களைப் போகச் சொல்லி விட்டு, பூட்டும்போது, அந்த காவலாளிமீது எங்களுக்கு இலேசாகக் கசப்பு ஏற்படும். அன்று "தேன்' கொடுத்து விட்டல்லவா, அறையைப் பூட்டினார்; அதனால் மகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்தியபடி கூண்டுக்குள் சென்று விட்டோம்.

23-3-1964

இரண்டு நாட்களாக, ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதியுள்ள "வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலே குறிப்பு ஒரு நாள் எழுதவில்லை.

பகலில் படிப்பதற்கு அதிகநேரம் கிடைப்பதில்லை. காலையிலிருந்து மாலை நாலரை மணி வரையில், நூற்பு வேலை இருக்கிறது. இரவு மட்டுந்தான் படிக்க வசதி கிடைக்கிறது.

சங்கரவிஜயம் படித்து முடித்தவுடன், இந்தப் புத்தகம் - அதாவது முற்றிலும் வேறான ஒரு கருத்துலகில் உலவுகிறேன். சமுதாய வளர்ச்சியை விளக்கும் இந்த ஏடு எழுதியவர் லெனின்கிராட், சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றிய பேரறிவாளர். கதை வடிவத்தில், கி. மு. 6000-த்திலிருந்து கி. பி. 1942 - வரையில், மனித சமுதாய வளர்ச்சிக்கான விளக்கம் தந்திருக்கிறார் - பொது உடைமையாளரின் கோட்பாட்டின் அடிப்படையில்.

குறிப்பு எழுதாமலிருந்ததற்கு மற்றோர் காரணமும் உண்டு. காய்கறி நறுக்கியதால், என் வலது கரத்தின் ஆள்காட்டி விரலில் சிறிதளவு காயம் ஏற்பட்டுவிட்டது - முன்பு ஒரு நாளையக் குறிப்பிலே எழுதியிருந்தேனல்லவா, சட்டை கிழிந்து விடுவதற்கும் சதை பிய்ந்துவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று; அதனை நானே உணருவதற்கான ஒரு வாய்ப்பு. சிறிதளவுதான் சதை பிய்ந்துவிட்டதென்றாலும், எரிச்சல் அதிகமாகிவிடவே, எழுத இயலவில்லை. ஏதோ மருந்து அளித்தார்கள் - இயற்கையாகவே குணமாகி வருகிறது.

இன்று இங்கு நண்பர்கள், கழகப் பிரசாரத்துக்காக நாடகங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து மெத்த ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்பு நானும் நமது நண்பர்களும் நடத்திக்கொண்டு வந்த நாடகங்களை, இனி நடத்துவதற்கு அனுமதிக்கமாட்டார்கள் - நாடகத் தடைச்சட்டம் மிகக் கண்டிப்பான முறையிலே அமைந்துவிட்டிருக்கிறது - என்றாலும், அனுமதிக்கப்படும் அளவுக்குப் புதிய நாடகங்கள் தயாரித்து நடத்த வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

மாநகராட்சி மன்றத் தேர்தலின்போது மறைந்த நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணனின் திருமகன் என். எஸ். கே. கோலப்பன் நடத்திய "வில்லுப் பாட்டு' மிக்க சுவையும் பயனும் அளித்ததாக நண்பர்கள் கூறினார்கள். நான் இரண்டொரு முறை கேட்டிருக்கின்றேன், சுவையாகவே இருக்கிறது - தந்தையின் "பாணி' அப்படியே அமைந்திருக்கிறது என்று கூறினேன்.

திங்கட்கிழமை பரிமளம் வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் - வரவில்லை.

செவ்வாய் மாலையில், பரிமளம், இளங்கோவன், கே. ஆர். ராமசாமி வந்திருந்தனர். மூவருக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை; அதனால் என்னைக் காண வந்திருந்த அடிகள், வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டார் என்று கூறினார்கள்; வீட்டிலுள்ளோரின் நலன்பற்றியும், பொது விஷயங்கள் குறித்தும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

திரு. மா. சண்முக சுப்ரமணியம் அவர்கள் எழுதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட "தீங்கியல் சட்டம்'' என்ற நூலை, அன்பர் சுப்பைய்யா அவர்கள் தந்தனுப்பியதாகக் கூறி, அந்தப் புத்தகத்தைப் பரிமளம் தந்தான். பத்திரிகையில் அந்தப் புத்தகம்பற்றிப் படித்ததிலிருந்து அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன். நான் எதிர்பாராமலேயே அந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது, மெத்த மகிழ்ச்சி.

நண்பர்கள், டில்லி பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து மெத்த ஆவலுடன் என்னிடம் கேட்டறிந்தார்கள். அடுத்த முறை, அதிக அளவில், பாராளுமன்றத் தேர்தலில், நமது கழகம் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்று பிற்பகல் அரக்கோணம் ராமசாமி, "இரத்தக் கொடை' அளித்தார். கட்டுடல் பெற்ற அவருக்கு, அதனால் எந்தவிதமான களைப்பும் ஏற்படவில்லை. வெளியில் இருக்கும் போதே "குருதிக் கொடை'' தர விரும்பினாராம் - இங்கே அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

மேலவைகளுக்கான தேர்தல்களில் பங்குகொள்ளப் "பரோல்' பெறக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்த மதியழகன் - ராமசாமி - இருவருக்கும், இன்றைய பத்திரிகையில் முதலமைச்சர் "பரோல்' தருவது இயலாது என்று வெளியிட்டிருந்த அறிவிப்பு கிடைத்தது.

முதலமைச்சர், "பரோல்' தர மறுத்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை - எனவே அவருடைய அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது - பொதுமக்களும் இது கண்டு எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

கள்ளநோட்டு வெளியிட்டவர்களுக்குக்கூட, கேட்கும் போது "பரோல்' கிடைக்கிறது. நமது கழகத் தோழர்கள் விஷயத்திலேதான், அமைச்சர்கள் தமக்கு உள்ள கண்டிப்பு அவ்வளவையும் காட்டி வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம்போல் சிறை மேலதிகாரிகள் கைதிகளை பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறளாராய்ச்சிக்கு இடையில், நண்பர் அன்பழகன் நான் படித்து வியந்த "மாமன்னரின் மருத்துவன்' என்ற ஆங்கில நூலை (கிருத்துவ மார்க்கத் துவக்ககாலக் காதை)ப் படித்து வருகிறார்.

25-3-1964

இடது கரத்திலே வலி குறையக் காணோம். சுடுநீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டேன் - அப்போதைக்கு இதமாக இருக்கிறது. வெளியே சென்றதும், தக்க மருந்து உட்கொண்டு வலியை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் அன்புடன் கூறி, பல்வேறு மருத்துவ முறைகள் குறித்துக் கூறினார்கள்.

செங்கற்பட்டு உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தேர்தலில், கழகத்தின் சார்பில் நண்பர் ஆசைத்தம்பி ஈடுபட்டிருக்கும் செய்திபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதுபற்றிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டோம். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவரும், அந்த மாவட்டத்திலே பல ஜெமீன் குடும்ப ஆதரவு பெற்றவரும், அமைச்சர்களின் அரவணைப்பைப் பெறக்கூடியவருமான வி. கே. ராமசாமி முதலியார் போட்டியிடுவதால், மெத்தக் கடினமாகவே இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள்; எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

அண்ணன்

29-10-1964