அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெற்றிக்கவிதை பாடிடுவாய்!
1

தி.மு.க.வில் கசப்புணர்ச்சி -
காமராஜர் ராஜாஜி சண்டை -
சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு -
கழகமும் மக்கள் தொடர்பும்

தம்பி!

பக்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா! என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு. தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன். பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம், களிநடமிடும் கண்கள் போதும், வெற்றிக் கவிதை பாடிட! ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க, தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன், பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள் பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது, காணீர்! என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக, மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம் கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு, வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால், எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான், தாய் மாண்டாள். என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கலகலத்துப் போய்விட்டது என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ!

தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த் திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல். ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் -குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக, வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது. மண்டலக் காங்கிரசில் கூடி. இடிஇடியெனச் சிரித்தபடி, தொலைந்ததுகள் பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப் பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல, எங்களுக்குச் சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது. வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும் கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள், விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப் பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள், என்ற ஆர்வமிகு எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட்டது. அமைச்சர்களின் அரவணைப்பினால் அகமகிழ்ந்தோர், ஆதாயம் பெற்றோர், நிலையினை உயர்த்திக் கொண்டோர், என்போரைக் காணும் போதெல்லாம், நமது கழகத் தோழர்கள், கடுகடுத்த பார்வையைக் கூட விட்டுவிட்டனர் - கனிவுகூடக் காட்ட ஆரம்பித்தனர் - உமக்கும் சேர்த்துத்தான், நாங்கள் கேட்கும் விடுதலை - திருஇடம் விடுபடின், உமக்கும் நத்திப் பிழைக்க வேண்டிய நிலை இராது, என்று எடுத்துக் கூறுவதுபோல, நம்பிக்கையூட்டுவது போலப் பார்த்தனர், பேசினர். இந்த நெருக்கடி வந்துற்ற போதோ, காங்கிரசாரை மட்டுமல்ல, நம்மவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடக் கூச்சம் ஏற்பட்டு விட்டது. பார்த்திடின் பேச வேண்டிவரும், பேசிடின் உள்ள வேதனை அதிகப்படும், புதிய கிலி கொள்ளத்தக்க "சேதி' ஏதேனும் கேள்விப்பட நேரிடலாம் - எனவே, பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம், என்றே எண்ணிக்கொண்டனர். நாலு தலைமுறையாக நம்முடைய குடும்பத்திடம் இருக்கம் மாடிவீடு, அங்கு மகிழ்ச்சி தரும் மணவிழாக்கள் நடந்திருக்கின்றன. மனம் உருக்கும் வேறு நிகழ்ச்சிகளுந்தான்; அந்தக் கூடத்திலே, ஊர்ப் பெரியவர்கள் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்தனர். இசை கேட்டு இன்புற்றனர் - இவன்தான் என் மகன்! என்று கூறிட, பெயர்? என்று பெரியவர் கேட்டிட, நான் நடக்கும் நடை காட்டவில்லையோ என் பெயரை என்று கூறுவது போலச் சிறுவன், அரசனென நடந்துகாட்டியதும் அந்தக் கூடத்திலேதான்; ஆரூயிர் அனையாள் முல்லையும் மல்லியும் சூட்டிக்கொண்டு, சரி பார்த்துக் கொண்டதும், அந்தக் கூடத்திலே உள்ள நிலைக் கண்ணாடி முன்தான்; சூட்டியதைச் செல்வன் பிய்த்தெறிந்து வீசிவிட்டுக், கலகலவெனச் சிரித்திட, எவரும் எளிதிலே செய்திட இயலாத வீரச் செயலைத் தன் மகவு செய்துவிட்டதுபோல எண்ணி, அவன் கன்னத்தை முத்தமிட்டுக் கருப்பஞ்சாறு பருகிய தாய் உலவியதும் அந்தக் கூடத்திலேதான்; பல் முளைத்துவிட்டது என்று பாலகனை வாயைத் திறக்கச் சொல்லிக் காட்டி மகிழ்ந்ததும் அந்தக் கூடத்திலேதான்; பொக்கைவாய்ப் பாட்டி சிரித்திடக் கண்டு சிரித்ததும் அங்குதான் - அப்படிப்பட்ட இல்லம், நாளைக் காலையிலே, கடன் கொடுத்தவன் கரம் தரப்பட இருக்கிறது; அதற்கான அலுவலருடன் வரப்போகிறான், விடிந்ததும், என்று முன்னாள் இரவு கேள்விப்பட்ட, வீட்டுக்குடையவர்கள், அங்கு எப்படிப்பட்ட உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! நமது கழகத்திலே பேரிடி விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் பூரித்துக் கிடந்தனர். திருவொற்றியூரில் நாம் கூடித், தேன் பருகி மகிழ்கிறோம் - அதே நாளில், அதே போது, அவ்விதம் நடைபெற வழி ஏற்படாது என்ற எண்ணத்தில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கழகம் ஒழிந்துவிட்டது! நமக்குச் சிரமம் கொடுக்காமல். அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து அழித்துக்கொண்டனர். எவனுக்குக் கண் போயிற்றோ, எவனுக்குக் கால் உடைந்ததோ, யாருக்குக் கத்திக்குத்தோ, எல்லாம் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்! - என்று வெறி அளவுக்கு மகிழ்ச்சி கொண்டவர்கள் - தம்பி! தலைவர்களேதான்!! - பேசினராம், சிரித்தனராம், கைகொட்டி னராம், கண் சிமிட்டினராம் - ஏகப்பட்ட அமர்க்களமாம்!! ஏனிருக்காது, தம்பி! கள்ளிக் காட்டிலே காய்ந்த வயிறோடு கிடக்கும் கழுகுக்குப், பிணநாற்றம் கிளம்புவது தெரியவேண்டியது தானே தாமதம், தன் பெருஞ் சிறகுகளை விரித்து, அடித்துக் கொண்டு, பறந்து வந்து விடுகிறதல்லவா? காங்கிரஸ் வட்டாரத்தினர் அவ்வளவு எதிர்பார்த்தார்கள். இருக்குமல்லவா, அவர்களுக்கு எரிச்சல். அக்குதொக்கு அற்றவர்கள், வக்கு வழி இல்லாதார், சொக்க வைக்கும் பார்வையோ, விலை கொடுத்து ஆள் வாங்கப் பணமோ இல்லாதவர்கள். ஏடு ஏது இவர்தம் சொல்லைச், செயலை நாடு அறியச் செய்ய; ஊர் வளைக்கும் வழி அறியார், பேர்பெற்ற குடும்பத்தினருமல்ல; அன்னக்காவடிகள்; இதுகளால் ஆவது என்ன? என்று எண்ணிக் கெக்கலி செய்தனர் காங்கிரசார், கழகம் துவக்கியபோது. ஆனால், அவர்களே கண்டு மலைக்கத் தக்க மாபெரும் வடிவம் கொண்டது கழகம்; அதன் வண்ணம் மற்றவர்க்குப் பாடம் தரவல்லதாயிற்று; கழகப் பேச்சு, கழக எழுத்து, கழகக் பாடல், கழக நாடகம் என்று, கழகம் என்ற சொல்லே அடைமொழி, என்றாகிவிட்டது. எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும், காங்கிரசாரால்! எள்ளி நகையாடிப் பார்த்தனர், பேச்சுக் கச்சேரியால் என்ன ஆகும் என்று! பிறகு, பேசத்தெரிந்தவர் நீவிர் மட்டுமோ? என்று கூறிக் கிளம்பினர் பேச! நாடகம் நடத்தினர், மாநாடு கூட்டினர், பாடகர்களைத் துணைக்கு அழைத்தனர், பலப்பலவும் செய்துபார்த்து அலுத்துப் போயினர். பிறகோ? நமது கழகத்தில், கசப்புக் காரணமாகவோ காரணமற்ற பூசலின் விளைவாகவே, எவரேனும் வெளியேறினால், கொக்கெனக் காத்திருந்து கொத்திக்கொண்டு போகலாயினர். தம்பி! கழகத்தான் என்பதுமட்டுமல்ல, சிறப்புக் குரியதாக இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே, சிறப்புக்குரியதாக்கப்பட்டது; மக்களை ஈர்க்கப் பயன்பட்டது. அதாவது, தம்பி! நம்மை மறத்துப் பேசக்கூட, நமது "பாணி'ப் பேச்சே தேவைப்பட்டது. அவ்விதம், நமது கழகம், பின்பற்றத் தக்க, வழிமுறைகளை ஆக்கித் தரத்தக்க, மாமன்றமாயிற்று. இவ்வளவும் காணும் காங்கிரசாருக்கு, எப்போது, நாம் வீழ்ந்து விடுவோம் என்ற எண்ணம்தானே, எப்போதும், மனதிலே இருந்தபடி இருக்கும். இயற்கைதானே! எனவேதான், தமது கழகத்திலே, பேச்சுப் பெருங்கூச்சலாகாதா, பெருங்கூச்சல் பேதம் வளர்க்காதா, பிளவு தோன்றாதா, அழிவு வாராதா, கண்டு அகமகிழலாமே என்று எண்ணியபடி, நோட்டமிட்டிருந்தனர். ஒரு பத்து நாட்கள் அவர்கட்குப் பஞ்சாமிர்தம்! நாக்கைத் தொங்கவிட்டபடி, நாடெங்கும் சுற்றினர்; நண்பர்களே! கேளுங்கள், நமக்கு இருந்து வந்த ஆபத்துப் போய்விட்டது, நம்மை ஒழிக்கக் கிளம்பிய கழகம் அழிகிறது! அங்கு, பதவிச் சண்டை, பணச்சண்டை, கலைச்சண்டை, கருத்துச் சண்டை, ஒன்றல்ல, இரண்டல்ல ஏற்பட்டுவிட்ட உட்குழப்பம்; ஒழிந்து போய்விடுவார்கள்! - என்று பேசினர், பெருங்களிப்புடன். நமது கழகத்துக்கு உள்ள வலிவின் அளவே, மாற்றார்கள், நமது குலைவுக்காகக் காத்திருந்ததிலிருந்தும், அது ஏற்படும் என்ற அறிகுறிக்காக அலைந்து கிடந்ததும், கிடைத்ததாகத் தென்பட்ட வுடன், களி நடமாடியதும், எடுத்துக்காட்டிற்று. உட்குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, நாம் அழிந்துபோனாலொழியக் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற பேருண்மை, அவர்கள், நமது கழகத்திலே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகக் கூவிக் களித்ததிலிருந்தே நன்கு தெரிகிறது. நமக்கே நமது வலிவின் அளவு நன்கு தெரிய வந்ததும், நம்மைப் பற்றி நாள் தவறாமல், நாடாளும் அமைச்சர்களே நாப்பறை அறைந்து கிடப்பதைக் கண்டதால்தான், தம்பி! உன் உழைப்பால் அமைந்துவிட்ட கழகம், காங்கிரசை அந்த அளவுக்குக் கதிகலங்க வைத்துவிட்டிருக்கிறது. உனக்கும் அது தெரியும்; எனவேதான், கழகம் உருக்குலையும் விதமாக உட்குழப்பம் ஏற்படக்கூடாது என்பதிலே, நீ அத்துணை அக்கரைகாட்டி நின்றாய். உன்னைக் கலங்கச் செய்யும் விதமாகச் சில நிலைமைகள் வளர்ந்து விட்டதற்காக, நான் வருத்தப்படுகிறேன் - பொறுத்தருளக் கேட்டுக்கொள்கிறேன்.

தம்பி! கழகம் கலகலத்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும், அகமகிழ்ச்சியுடன் ஆடலாம், பாடலாம், ஆட்சி நமதே என்று கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரசியாரின் வருகையின்போது, நாலு பேரி நடுவில் நான் நிற்பதைக் கண்டு, குத்தல் பேச இதுதான் தக்க சமயம் என்ற எண்ணத்துடன், என்னிடம் வந்தார், ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ.; என் அடக்க உணர்ச்சிதான், எவரும் எளிதாகக் கேலி செய்யும் அளவிலும் வகையிலும் இருப்பது, உனக்குத் தெரியுமே; அதுவும் அவருக்கு ஒரு வாய்ப்பு! அருகே வந்தார்; பலருடைய செவியில் விழுகிறபடி, "என்ன அண்ணா! உங்க கட்சியிலே பெரிய பிளவாமே! பலர் வெளியோ போய்விடப் போகிறார்களாமே!!'' என்று கேட்டார். கேலி வெளிப்படையாகத் தெரியும் விதமாகப் பேசி இருந்தால்கூட எனக்கு வேதனை அவ்வளவு அதிகமாகத் தெரியாது. பொது வாழ்க்கையிலே ஈடுபட்ட பிறகு, சிறு துரும்பும் மேலே விழாமல் என் பெற்றோர் என்னைப் பரிவுடன் வளர்த்திருந்தார்கள் என்றாலும், நான், எத்தனையோ கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன். அப்படிப்பட்ட எனக்கே எரிச்சலேற்பட்டு, அந்த காங்கிரசாரின் பேச்சைக் கேட்டு - தம்பி! அவரை நான் காங்கிரசார், என்று கூறுவதைவிடக், காங்கிரசில் உள்ளவர் என்று கூறுவதுதான், பொருத்தம், காதில் விழாதபடி இருந்தேன். அவர் விடுவாரா? அதற்கென்றே நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துவிட்டாரே!! மறுபடியும் கேட்டார். சிறிது கோபமாக, "ஏன்? உங்கள் கட்சிக்கு ஆள்பஞ்சமோ? இருந்தால் சொல்லுங்கள், சிலரை அனுப்பி வைக்கிறேன்'' என்று கூறினேன், மறுகணமே, சிறிது கடுமையாகக் கூறிவிட்டேனோ என்று எண்ணி வருத்தப்பட்டேன். தம்பி! உன்னையே, ஊர்க்கோடியிலும், ஓய்விடங்களிலும், அங்காடியிலும், கடலோரத்திலும், எத்தனை எத்தனை பேர் என்னென்ன பேசிக் குடைந்திருப்பார்கள், குத்தல் பேச்சு எவ்வளவு இருந்திருக்கும், எவ்வளவு கொதித்திருப்பாய், குமுறி இருப்பாய் என்பதை எண்ணி மன மிக வாடினேன். கழகத்துக்கு, நீ உன்னையே ஒப்படைத்தாய் - உனக்கு நான் எப்படி எப்படியெல்லாமோ நன்றிகாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் - ஆனால், உனக்கு கிடைத்தது என்ன? உள்ளத்துக்கு அதிர்ச்சி, மாற்றாரின் ஏச்சு, பேச்சு, மன்னார்சாமிகளின் வம்புப்பேச்சு, வேதனை, இவை! தத்தளித்துத்தான் போயிருப்பாய், தம்பி! ஆனால், நான் என்ன செய்ய? உன்னோடு சேர்ந்து, வேதனையை பங்கிட்டுக் கொள்வதன்றி, வேறுவழி?

இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம் அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டு விட்டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தின்ன வேண்டும், அப்போதுதான் தமது பெரும்பசி தீரும் என்று எண்ணிக் கொண்டனர்.

கலிங்கத்துப் பரணியில் தம்பி! போர்க்களக் காட்சியை எடுத்துக் காட்டும்போது, ஜெயங்கொண்டார் (பரணி பாட வேண்டிய முறைப்படி) பிணக்குவியலைத் தேடி, உண்டு களித்து நடமிடப் பேய்கள் வருவது பற்றி, வேடிக்கையாகப் பாடி இருக்கிறார். கலிங்கப் போர் நடக்கிறது, இரத்தம் ஆறென ஓடுகிறது, பிணங்கள் வீழ்ந்து கிடக்கின்றன, மலை மலையாக! ஓடி வாருங்கள்! வயிறு புடைக்கத் தின்னலாம்! - என்று பேய்களைக் கூவிக் கூவி அழைக்கிறதாம் வேறோர் பேய்.

குறுகிய வடிவம் கொண்ட பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! கோடரிப் பல்லழகி! கொட்டாவி விட்டபடி உள்ள பேய்! - இப்படிப் பேய்கள் பல வகை. எல்லாவற்றுக்கும் நல்ல வேட்டை அல்லவா, சுவையான விருந்தல்லவா?

தெரியுமா சேதி, ஒரே ரகளை! வெள்ளையன் சொன்னான். ஒருவர் மீது ஒருவர் பகையைக் கக்கிக் கொண்டார்களாம், சின்னையன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே கேட்டானாம் உனக்குத் தெரியுமா சேதி, ஊர்க் காவலா! கூப்பிடு, குப்பனை, கூறுவோம் சேதி! எங்கே, எரிச்சலூரான், சேதி கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவான்! - என்றெல்லாம் பேசிக் கொண்ட, காங்கிரசுக்காரர்களை நினைவுபடுத்திக் கொள், தம்பி!

ஜெயங்கொண்டாரின் பரணியில் உள்ளதைக் கூறுகிறேன் கேள்.

குறுமோடி!
நெடு நிணமா லாய்!
குடை கல தீ! கூர் எயிறி!
நீலி!
மறிமாடி!
குதிர் வயிறீ!
கூழட வாரீர்! கூழட வாரீர்!

கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்படி ஆக்கித் தந்திருக்கிறேன்.

கூழட வாரீர்! கூழட வாரீர்! - என்று பெரிய பேய், மற்றப் பேய்களை அழைக்கிறது. கூழட வாரீர்! என்றால், சமைக்கலாம், வாருங்கள் என்று பொருள், களம் நிறையப் பிணங்கள்! விருந்து உண்ணலாம், சமைக்க வாருங்கள் - கூழட வாரீர்! - என்று கூவி அழைக்கிறது பெரும் பேய், எவரெவரை?

குட்டைப் பேய்!
நெட்டைப் பேய்!
கொழுப்பு மாலை அணிந்த பேய்!
இரத்த வெள்ளத்தில் குளிக்கும் பேய்!
கூரிய பற்களை உடைய பேய்!
நீலிக்கண்ணீர் விடும் பேய்!
ஆடு விழுங்கும் பேய்!
குதிர் போன்ற வயிறு உள்ள பேய்!

இப்படி உள்ளன பேய்கள்! பேய்கள் மட்டுமா, தம்பி! பெரியவர் களிலேயோ பலர் இவ்விதம் இருக்கிறார்களே, தெரியுமே உனக்கு!

களத்திலே வீழ்ந்த பிணத்தைக், குட்டைப் பேயும் நெட்டைப் பேயும், குதிர்போல் வயிறு உள்ள பேயும், பிய்த்துத் தின்னக் கூவி அழைக்கப்படுவதுபோல, நமது கழகச் செய்திகளை, தாவிக் கவ்விச் செல்ல, மென்று தின்று உமிழ்ந்திட, பிய்த்துப் பிய்த்துக் காட்டிடப், பல பத்திரிகைகள் கிளம்பின! கூழட வாரீரோ! கூழட வாரீரோ! என்று பெரிய பேய் அழைத்த பிறகே, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் வந்தன. பத்திரிகைகளை நடாத்தும் பெரியவர்களுக்கு, அழைப்புக்கூடத் தேவைப்பட வில்லை. மோப்பத் திறமை நிரம்ப!

பறிந்த மருப்பின் வெண் கோலால்
பல்லை விளக்கிக் கொள்வீரே!
மறிந்த களிற்றின் பழு எலும்பை
வாங்கி நாக்கை வழியீரே!

தம்பி! பேய்கள் என்றால், அவைகளுக்கு மட்டும், சுத்தம் வேண்டாமா? பல் விளக்க வேண்டும்! நாக்கிலே ஒட்டிக் கொண்டுள்ள பசையை வழித்தெடுத்துவிடவேண்டும்! பிறகுதானே, விருந்து சுவைக்கும்! யானைத்தந்தம் பல் விளக்க! விலா எலும்பு நாக்கு வழிக்க! பேய்களுக்கு வந்த "யோகத்தை'ப் பார்த்தாயா தம்பி! ஒரு ஆலம் குச்சி வேலம் குச்சி தேடி அலைகிறோம், குளக்கரைகளில். எங்கே கிடைக்கிறது? எல்லாம் மரம் நடு விழாவுக்காக ஒடித்துப் போட்டாகி விட்டது!! பேய் களுக்குப் பார்த்தாயா, யானைத் தந்தம் கிடைக்கிறது பல் விளக்க!! வீழ்ந்துபட்டால், எப்படிப்பட்ட வலிவும் வடிவமும் கொண்டதாயினும், இந்தக் கதிதான்! நமது கழகமும், வீழ்ந்து பட்டதும், இப்படித்தான், பல் விளக்க, நாக்கு வழிக்க, எதெதை எடுத்து உபயோகிக்கலாம் என்று திட்டமிட்டபடி இருந்தனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.

ஆனால், நீ, தம்பி! மிகமிகப் பொல்லாதவன்! காங்கிரஸ் வட்டாரத்தினருக்கு, ஆசை, வெறி அளவு ஏறச்செய்துவிட்டு, ஒரே நொடியிலே, பிடி மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாயே! பெரிய பேய், கூழட வாரீர்! கூழட வாரீர்! என்று கூவி அழைத்தது கேட்டு, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் ஓடிவரக், களத்திலே களிறோ கர்த்தபமோகூடப் பிணமாகிக் கிடக்கவில்லை யென்றால், வந்த பேய்களுக்கு, பசியுடன் கோபமும் கலந்து கொதிப்பை உண்டாக்குமல்லவா? திருவொற்றியூரில் நடைபெற்ற "கழகக் காவலர்' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாடே வரவேற்கிறது. நல்லவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, காங்கிரஸ் வட்டாரத்துக்கு, மிக்க கசப்பு, கோபம். செச்சே! இதுகள் இப்படிப்பட்ட "கொதி' தாங்காததுகள் என்று அறியாமல், ஏதேதோ நடைபெறப் போகிறது என்று பன்னிப் பன்னிச் சொல்லிவிட்டோமே! இப்போது நமது முகத்திலல்லவா, கரி பூசிவிட்டனர், இந்தக் கழகத்தினர் என்று எண்ணி அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.

வன்முறை தலைகாட்டாது!
ஒன்றுபட்டுப் பணிபுரிவோம்!
கட்டுப்பாடு குலையவிடமாட்டோம்!
பகை உணர்ச்சி எழாது!

என்று, திருவொற்றியூரில் கழகக் காவலர் கூட்டத்திலே தோழர்கள், எழுப்பிய முழக்கம், இதுபோது, நாடெங்கும், நம் தோழர்கள் ஒலித்துவரும் முழக்கமாகி வருகிறது. தம்பி! இவை ஒலி நயம் கருதி அல்ல, நாம் நமது பண்பு காத்திட மேற்கொண்டு விட்ட, அறநெறி. அறிநெறி தவறிடின், நாம் நடத்துவது கழகமாக இராது. குத்திக் குடலெடுப்போன், கூரையைப் பிரித்து உள்ளே குதிப்போன், படுத்துறங்கும் வேளையிலே பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போடுவோன் என்று கூறத்தக்கவர்களின் முகாமாகிப் போகும். துôய தொண்டாற்றி வருகிறோம். தூய்மை கெடத்தக்க பேச்சோ செயலோ தலை தூக்கிடலாகாது. தலைதூக்க விடமாட்டோம் என்ற உறுதி அளித்தனர் - காத்து நிற்பர் என்ற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது.

காங்கிரசாரோ, ஏதேதோ எதிர்பார்த்து ஏமாந்ததால், வெட்கப்படுகின்றனர் - ஆனால் அந்த வெட்கத்தை மறைப்பதற் காகவாகிலும், கழகம் முழுவதையுமே சாடுவர். அத்திப் பழத்தைப் புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பது போலிருக்கிறது இந்தக் கழகம்; ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள் ஓர் நாள்; மறுநாளோ, சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். பேதம் என்கிறார்கள், பிளவு என்கிறார்கள் ஓர் நாள்; மறுநாளோ எங்களைப் பிரிக்க எவராலும் முடியாது; நாங்கள் ஒரே குடும்பம் என்கிறார்கள். சே! இதுகளை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்! - என்று பேசிக்கொள்வர். ஆனால், மொத்தத்திலே, கழகமே கெட்டவர்கள் உள்ள இடம் என்று ஏசுவர்.

கழகத்திலே கலகம் நடந்தது; அடிதடி நடந்தது; அமளி நடந்தது; என்று பலப்பல பேசுவர்; பேசிக் கொண்டும் வருகின்றனர்.

காங்கிரஸ் புனிதமான, பகையோ பூசலோ அற்ற இடம் போலவும்; அதிலே உள்ளவர்கள் எல்லாம், தன்னலம் மறந்தோர் போலவும்; போட்டியும் பொறாமையும் எழுந்ததில்லை என்பது போலவும், பேசுவர்; பெருமை சொட்டச் சொட்ட.

தம்பி! ஒரு இடத்திலே முறைகேடுகள் இருந்திடின், அது போல் எங்கும் இருக்க வேண்டும் என்று வாதாடுவதாக எவரும் எண்ணக்கூடாது. நமது கழகத்தைப் பொறுத்தவரையில், எத்தகைய முறைகேடும் முளைக்க இனி இடம் கொடுக்கப் போவதில்லை. இது உறுதி.

எனினும், இவ்வளவு பத்தினித்தனம் பேசிக் கழகத்தைப் "பரிகாசம்' செய்யும் காங்கிரஸ் கட்சியின், இன்றைய நிலைமை என்ன? இரண்டு "காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப் படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர்' என்று சொல்லத்தக்க நிலை. பகை கொப்பளித்தபடி .இருந்து வருகிறது. கூடவே இருந்து குழிபறிப்பது, அடுத்துக் கெடுப்பது, ஆகாவழி அழைத்துச் சென்று, பிறகு அழிவை மூட்டுவது போன்ற இழி செயல்கள்தான், பாரதமாதாவுக்கு இவர்கள் படைக்கும் "நித்திய நைவேத்திய'மாகிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான குழப்பம் - நெருக்கடி.

தமிழ்நாடு காங்கிரசிலே மட்டும் குழப்பம் இல்லை, கொந்தளிப்பு இல்லை, அது காமராஜரின் தனித்திறமைக்கு எடுத்துக் காட்டு என்று பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரசில் பிளவு வெளிப்படவில்லை என்று மட்டும் கூறலாம் - ஆனால், அதற்குக் காரணம் இருக்கிறது - அந்தக் காரணம், காமராஜரின் தனித் திறமை என்று கூறுவது முற்றிலும் சரியானது அல்ல.

காமராஜர் முதலமைச்சராக முடி சூட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்களிலே, காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஒவ்வொன்றும், கட்சி உட்பூசல் காரணமாகக் கவிழ்க்கப்பட்டனவேயன்றி, வேறென்ன என்று கேட்டுப் பாரேன்!

பிரகாசம்
ஆச்சாரியார்
ஓமந்தூரார்
குமாரசாமி ராஜா

என்று, எப்படி, முதலமைச்சர்கள் மாறிமாறி வந்தனர், ஒருவரை நீக்கிவிட்டு, மற்றொருவரை அமர்த்த, எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டுகள், திட்டங்கள், சதிவேலைகள் யாருக்குத் தெரியாது?

காமராஜருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட மோதலும், பதவி பிடிக்க ஏற்பட்டதே தவிரக் கொள்கை அடிப்படையிலா? ஆச்சாரியாரைக் கீழே தள்ளும் வரையில், ஊண் உறக்கம் மறந்து, அலைந்து கொண்டிருந்தவர் காமராஜர் என்பதையும், அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியிலும் "இரு கோஷ்டிகள்' இருந்தன என்பதும், ஊரறிந்த இரகசியமல்லவா?

வெளிப்படையாகவே காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் பகை உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட வில்லையா?

"பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேசெய்து, "கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று சிலர் மிரட்டவில்லையா?

அப்போதெல்லாம், ஒரே பரபரப்பு உணர்ச்சி. மேடை களிலே மட்டரகமான பேச்சுத்தான்! பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல் எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்!