அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெற்றிக்கவிதை பாடிடுவாய்!
2

இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர், அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும், என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.

காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக, மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! - என்று ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.

காங்கிரஸ் மேடையாகவா இருந்தது அந்த நாட்களில். ஒரு "கோஷ்டி' பற்றி ஊழல்களை மற்றொரு "கோஷ்டி' அம்பலப் படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு கோஷ்டியினர் கலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன.

அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா?

பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே காட்டினார்!

எவரெவரைப் பிடித்தால் ஆச்சாரியாரைக் கவிழ்க்கலாம் என்று வெறிபிடித்து, காமராஜர் கோஷ்டி அலைந்ததை, நாடு மறந்துவிடவுமில்லை; அப்போது பரப்பப்பட்ட நரகல் நடையையும், நாடு அதற்கு முன்பும் பிறகும் கண்டதில்லை.

திருப்பரங்குன்றத்திலே, காமராஜர் கோஷ்டிக்கும், ஆச்சாரியார் கோஷ்டிக்கும் நடைபெற்ற பலப்பரீட்சை, அரசியல் நாகரிகத்துக்கா, எடுத்துக்காட்டு!

இந்த இலட்சணத்தில் காங்கிரஸ் கட்சியை நடத்தி னவர்கள்தான், நமது கழகத்தில் காரசாரமான பேச்சும் - கடு கடுத்த பார்வையும் - வன்முறைச் செயலிலே இறங்கிவிடும் போக்கும், இரண்டோர் முறை தென்பட்டதைக் காட்டிக் காட்டிக் கேலி பேசுகின்றனர்.

தம்பி! பழைய பத்திரிகைகள் கிடைத்தால், ஆச்சாரியார் - காமராஜர் மோதுதலின்போது, எத்தனை கேவலமான வார்த்தைகள் வீசப்பட்டன, எவ்வளவு இழிமொழிகள் பழிச் சொற்கள் வீசப்பட்டன, என்பது விளங்கும். அப்படி ஆடிக் கெட்ட இவர்கள்தான், நம்மைக் கேலி பேசுகிறார்கள்.

காமராஜரும் அவருடைய கூட்டுத் தோழர்களும், ஆச்சாரியாரைக் கீழே தள்ளியது மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவாளர்களாக உள்ளவர்களில், அமைச்சர் சுப்ரமணி யத்தைப் போல், "நெளிய'த் தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்களை, மட்டந்தட்டும் வேலையிலல்லவா, மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இன்று காங்கிரஸ் கட்சியிலே பிளவு இல்லை. காரணம், காமராஜரின் தனித்திறமை என்கிறார்கள். தம்பி! எங்கள் குடும்பத்திலே பாகப் பிரிவினைத் தகறாரே, கிடையாது என்றானாம் ஒருவன்; எப்படி? என்று கேட்டானாம் இன்னொருவன்; பாகம் கேட்பதற்கு முன்பே என் தம்பியைக் கொன்று போட்டுவிட்டேன்; அந்தக் கொலை செய்தது என் அண்ணன் என்று ருஜுப்படுத்திவிட்டேன்; அவருக்கு ஆயுள் தண்டனை; ஆகவே, பாகப்பிரிவினைத் தொல்லை தர ஒருவரும் இல்லை என்றானாம், அந்தக் கொடியவன். அதுபோல, காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டு, காமராஜரின் தலைமைக்கு எதிர்ப்பு உண்டாக்கக்கூடியவர்களை எல்லாம், மிரட்டியோ, மயக்கியோ, ஒடுக்கிவிட்டு, இன்று ஒய்யாரம் பேசுகிறார்கள்.

ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று புகழ்பெற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரால், ஆட்சியை நடத்திச் செல்ல முடிந்ததா? நடத்திச் செல்ல விட்டார்களா? காங்கிரஸ் கட்சி அவருக்குத் துணை நின்றதா? கட்சியைத் தூண்டிவிட்டு, ஓமந்தூராருக்குத் தொல்லை பல தந்து, துரத்திவிட்ட "தூயவர்கள்' இன்று, காங்கிரஸ் கட்சியிலே, உட்பூசல் இல்லை, பதவிச் சண்டை இல்லை, இடம்பிடிக்கும் போக்குக் கிடையாது என்று பேசுகின்றனர். நாடு ஆண்ட அந்த நல்லவர், இன்று இளைத்துக் களைத்து, வடலூராரை வணங்கிக் கொண்டு, காலம் தள்ளிவருகிறார்!

இதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, தொண்டர்களையும் தோழர்களையும், உழைப்பால் தமது பக்கம் சேர்த்துக் கொண்டு, காங்கிரசின் தலைமையைப் பெற்றிருக்கக் கூடிய சிவஞானக் கிராமணியாரைச் சிதைத்தாகிவிட்டது.

அதற்கும் முன்பே, தென்பாண்டி மண்டலத்தில் ஈடற்ற செல்வாக்கை ஈட்டி, அதனைக் காங்கிரசுக்கு அர்ப்பணித்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மனம்வெதும்பி வெளியே போய்விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று பசும்பொன் தேவர், படுத்த படுக்கையாக இருக்கிறார். பட்டத்தரசராகி விட்ட காமராஜரின் கோஷ்டி கேட்கிறது, "எமது தலைவரை எதிர்க்கும் திறம் படைத்தவர் எவரேனும் உண்டா' என்று.

தமிழ்நாடு காங்கிரசிலே இருந்து, சூழ்ச்சியால், சதிச் செயலால், சிண்டு முடிந்துவிட்டதால், தொண்டர்களுக்குத் தூபமிட்டு எதிர்ப்பு மூட்டியதால், விரட்டப் பட்டவர்களின் "பட்டியலை'த் தம்பி! ஓய்வாக ஒரு நாள் தயாரித்துப் பார் - அப்போதுதான், எமது குடும்பத்தில் பாகப்பிரிவினைத் தொல்லையே கிடையாது என்று பேசிய "உத்தமன்' கதைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றுக்கும் உள்ள பொருத்தம் விளங்கும்.

இருக்கலாம், ஐயா! இருக்கலாம், ஆனால், காங்கிரசிலே குழப்பம், கலாம், அடிதடி, அமளி ஏற்பட்டதுண்டோ என்று கண் சிமிட்டிக் கேட்பர், காங்கிரஸ் வரலாறு கூடப் படிக்காமல், காங்கிரசில் புகுந்து கொண்ட புதியவர்கள் - புனிதர்கள்!

செருப்புகள் பறந்தன எங்கோ பொதுக்கூட்டத்திலே எவனோ கயவன் விட்டெறிந்த செருப்பு அல்ல - மகாநாட்டில் தலைவர்கள் மீது!

செருப்புகள் பறந்தன! தடிகளைச் சுழற்றினர்! நாற்காலி களை உடைத்தனர்! ஒருவருக்கொருவர் கைகலப்பு! ஒரே குழப்பம், பீதி! மூலைக்கு ஒருவராக ஓடி உயிர் தப்பினர்! மகாநாடே கலைந்து விட்டது! பிரதிநிதிகள் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்பார்களே, அவ்விதமாயினர்.

இத்துணை காலித்தனமா நடந்தது? என்று கேட்பர், கதர்க் கடைக்கு முதன்முறையாகச் சென்ற முன்னாள் கள்ளுக்கடைக் காரர், இந்நாள் மண்டலக் காங்கிரஸ் தலைவர்!

நாடே கைகொட்டிச் சிரித்தது, கண்டித்தது, அந்தக் காலித் தனத்தைக் கண்டு. மிகமிகக் கேவலமாகப் பேசினர். மகாநாடு களிலே, மாலைகள் போடுவார்கள், செருப்பா வீசுவது! தடிகளைச் சுழற்றியா அடிப்பது!! அமளி நடந்தது, அவமானப் படத்தக்க வகையிலும் அளவிலும்.

செருப்புகள் பறந்த இடம், கழிகள் பேசிய இடம், நாற்காலிகள் உடைக்கப்பட்ட இடம், சூரத் - காங்கிரஸ் மகாநாட்டில்.

கட்டுக்கடங்காத தொண்டர்கள் நடத்திய கூட்டமோ - உணர்ச்சிவயப்படக் கூடிய வாலிபர்களின் மகாநாடோ - இப்படிப்பட்ட, "ரகளை' நடந்திட என்று கேட்பர். தம்பி! டாக்டர் பட்டாபி சீதாராமய்யா எழுதிய காங்கிரஸ் வரலாறு எனும் ஏடெடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லும் - படிக்கக் கூடியவர்களை.

லோகமான்ய பால கங்காதர திலகர், ராஷ்பிகாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜீ, ஆகியவர்கள், தம்பி! காங்கிரசுக்கு, மூலவர்கள் - தியாகிகள் - மாவீரர்கள் - மேதைகள் - தலைவர்கள்!

சூரத் காங்கிரசில் இவர்கள்தான் இருந்தார்கள் - செருப்படியும் தடியடியும், நடந்தபோது.

வெறியர்களின் செயலுக்கு விவேகிகள் என்ன செய்வார்கள்? பாவம், விம்மி விம்மி அழுதிருப்பார்கள், என்று எவரேனும் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் - தம்பி! அமளியை நடத்தியவர்களே, இந்தத் தலைவர்கள்தான்!!

திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பன்னிரண்டாம் ஆண்டு இது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் கழகத்து நடவடிக்கைகளிலே நான் கண்டு வேதனைப்படத்தக்க, வெறுக்கத்தக்க இழி செயல், தீய காரியம் நடைபெற்றதில்லை. அவ்வளவு கட்டுப்பாட்டு உணர்ச்சியும், தோழமையும், மலர்ந்திருக்கிறது. கெட்ட கனவுபோலச், சருக்கு நிலத்தில் நடக்கும்போது வழுக்கிவிழுவது போலக், காய்ச்சிய பாலிலே பூச்சி வீழ்ந்து விடுவதுபோல, கழக நடவடிக்கையிலே, கசப்பும் பகை உணர்ச்சியும், வன்முறைச் செயலும், முதன் முறையாக (இதுவே கடைசி முறையுங்ககூட என்று உறுதி அளித்துள்ளனர்) தலைகாட்டிற்று. நாடே நடுக்குற்றது; நான் பதறிப் போனேன்; சம்பத், உண்ணாவிரதம் மேற்கொண்டு, மனமாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டம் செல்ல நேரிட்டுவிட்டது.

நம்மிடம் நாடு அத்துணை தூய்மையை எதிர்பார்க்கிறது.

பத்துப்பேர் கூடி நடத்தும் காரியத்திலே, கோபதாபம் எழுவதும், ஆத்திரம் அமளி மூண்டுவிடுவதும், சகசம்தான் என்று மற்றமற்றக் கட்சி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசுவோர்கூடத், திராவிட முன்னேற்றக் கழகத்திலே இப்படி நேரிடலாமா? என்றுதான் கேட்கின்றனர், பதறுகின்றனர்.

தம்பி! மூன்று நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில், தொலைபேசி மூலம் கேட்கிறார், குன்றக்குடி அடிகளார், "எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டதா? மெத்த மகிழ்ச்சி!' என்று.

நாடு, நம்மிடம் "மாசுமருவு' இருக்கவும் கூடாது என்று கருதுகிறது. நம்மிடம் அவ்வளவு அன்பு அக்கறை. கண்ணை இமை காப்பதுபோலக், கழகத்தைக் கட்டுப்பாடு காப்பாற்றி வரவேண்டும் என்று நாடு கூறுகிறது. ஆயிரத்தெட்டு அமளிகள் இருக்கத்தான் செய்யும் - கட்சிதானே! - அரசியல்தானே - என்று நமது கழகத்தைப் பொறுத்த வரையில், எவருமே கூறத் தயாராக இல்லை.

கன்று, கெட்டதைத் தின்றிடக்கூடாது என்று எவரும் கருதுவார்களேயன்றிப், பன்றி பற்றியா கவலைப் படுவார்கள்! மண் காற்று அடிக்கும்போது, கண்களைத்தான் மூடிக் கொள்வார்கள் - கை கால்களையா! அதுபோன்றே, நமது கழகத்திலேதான் துளியும கறைபடக் கூடாது என்று கூறுவர் - அவ்வளவு துல்லியமானது என்பதால். அவ்விதமாகத்தான், கண்ணுங் கருத்துமாகக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி, அரும்பு மீசை வாலிபர்களே மிகப்பெரிய அளவிலே உள்ள இந்தக் கழகத்திலேதான், எத்துணை கட்டுத்திட்டம், அடக்க உணர்ச்சி, பந்த பாசம்! அமைத்தால் இப்படியல்லவா ஒரு கழகம் அமைத்திடவேண்டும் என்று எவரும் கனிவுடன் கூறினர் - பாராட்டினர். ஆனால், எப்படியோ நாமெல்லாம் திகைக்கத் தக்க விதத்தில், அரவம் நுழைந்துவிட்டது - அது தீண்டி நம்மைத் தீர்த்துக் கட்டுவதற்குள், கண்டிறிந்தோம், கழகக் காவலர் கூட்டம் கண்டோம், வென்றோம்.

இதனை உணராதார், உரத்த குரலில், கழகத்தை இழித்துரைப்பது கேட்டுத்தான், நானே, தம்பி! சூரத் செருப்படி மகாநாடு பற்றித் தெரிவித்தேன் - முதன் முறையாக.

லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தியாவின் வழிகாட்டி என்பர்.

கோபாலகிருஷ்ண கோகலே இந்தியாவின் அறிவுக் கண் என்பார்கள்.

இந்த இருவருக்கிடையில் மூண்ட அமளி, தம்பி! மிகமிக அருவருக்கத்தக்க அளவுக்குச் சென்றுவிட்டது.

ஒருவரை ஒருவர், இழித்தும் பழித்தும், நாற்றநடையில், பத்திரிகைகளில், எழுதிக் கொண்டனர் - மான நஷ்ட வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டது.

இத்தனைக்கும் இருவரும், முதியவர்களே - முறுக்கு நிறை வயதுமல்ல, கிறுக்குத்தனத்தில் நாட்டம் வைக்கக் கூடிய வாலிபர்களுமல்ல.

தம்பி! சூரத்தில் நடைபெற்ற "செருப்படி மாநாடு'க்கு முன்பே, பகை புகைந்துகொண்டு இருந்தது. காங்கிரசுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தாண்டு; வெள்ளிவிழாக் கொண்டாட வேண்டிய வேளை; ஆனால் கொண்டாடப் பட்டதோ, வேறு விழாவாகிவிட்டது.

மராட்டிய மண்டலத்துக் காங்கிரசுக்கும், வங்கக் காங்கிரசாருக்கும், மனமாச்சரியம் மூண்டுவிட்டிருந்தது.

காங்கிரஸ் மகாநாடு - அகில இந்திய மகாநாடு - நடைபெற ஏற்பாடாயிற்று. நாகபுரியில் நடத்தலாம் என்றனர் ஒரு சாரார்; கூடாது, சூரத்தில் நடத்தலாம் என்றனர், மற்றொரு பிரிவினர், இடத்தைக் குறித்த சண்டை முதலிலேயே தொடங்கி விட்டது. கடைசியில், சூரத்தில் நடத்துவது என்று முடிவாயிற்று. வரவேற்புக் குழுவினர், வங்கத்தைச் சேர்ந்த ராஷ்பிகாரிகோஷ் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுத்தனர். மிகத் தகுதிவாய்ந்தவர், அறிவாளி, எழுச்சிமிக்க சொற்பொழிவாளர் ராஷ்பிகாரிகோஷ். எனினும், அவர் வேண்டாம், திலகர் தலைமை வகிக்கட்டும் என்று ஒரு பிரிவினர் வாதாடினர்.

"வரவேற்புக் கமிட்டியின் முடிவுக்கு, எதிர்ப்புத் தெரிவிக்க லாமா? முறையாகுமா?''

"பெரிய முறையைக் கண்டுவிட்டார்கள்! வாயைப் பொத்திக் கொண்டு இருங்களய்யா! பொல்லாத வரவேற்புக் கமிட்டி கூட்டிவிட்டார்கள். உங்கள் கமிட்டியை யார் மதிக்கிறார்கள்?''

"இது போக்கிரித்தனமான பேச்சு!''

"யாரடா, போக்கிரி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு - இல்லை - வெட்டி எடுத்துவிடுவோம். . .''

"பெரிய சூரப்புலிதான், சும்மா கிடடா. . .''

"வாடா பார்த்துக் கொள்கிறேன், நீ மகாநாடு நடத்துவதை.''

"என்ன செய்துவிடுவாய்?''

"வந்து பார், தெரிகிறது.''

போய்ப் பார்த்தபோதுதான், செருப்பு வீசப்பட்டது. தடிகொண்டு தாக்கினார்கள். நாற்காலிகளை உடைத்தார்கள். பெரிய கலகமே நடைபெற்றது.

"சரி! நமக்குள் ஏன் தகறாரு, திலகரும் வேண்டாம், ராஷ்பிகாரியும் வேண்டாம்; லாலா லஜபதிராய் தலைமை வகிக்கட்டும், என்று சிலர் யோசனை கூறினர். லாலா லஜபதிராயின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம் அது. அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்வது, தமக்குத் தரக்குறைவு அல்ல என்று, திலகர் கோஷ்டி தீர்மானித்தது. ஆனால், பாஞ்சால சிங்கம், இருதரப்பிலும் சேர மறுத்துவிடவே, ராஷ்பிகாரிகோஷ் தலைமை ஏற்றார். அவரை வழிமொழிந்து பேசினார், சுரேந்திர நாத் பானர்ஜி, அப்போது திலகர் குறுக்கிட்டு மறுப்புரை பேச விரும்பினார்; தடுத்தனர்; மீறிச் சென்றார்; கூச்சலிட்டனர். எதிர்க்கூச்சல் கிளம்பிற்று; மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பதறினர்; குழப்பம் ஏற்பட்டது; செருப்புப் பறந்தது; தடிகளைக் சுழற்றினர்; நாற்காலிகள் உடைந்தன; திக்காலொருவர் ஓடினர்; சூரத் காங்கிரஸ் குழப்பத்தில் முடிந்தது.

கூடியது நாட்டை மீட்கும் திட்டம் தீட்ட! நடைபெற்றது!

இந்திய தேசீயக் காங்கிரசின் மூலவர்கள் கூடினர், பிரச்சினைகளை அலச, ஆராய, விவாதிக்க! வார்த்தைகளை வீசிக் கொள்ளவில்லை; காதறுந்ததை வீசினர்!!

இவ்விதம் இருக்கிறது இவர்களின் "பூர்வோத்திரம்.' இவர்கள், நமது கழகத்தை ஏசுகின்றனர். பூச்சிக்கடியால் விரலில் வீக்கம் கண்டவனை, வாதத்தால் கால் பெருத்தவன் கேசெய்வதுபோல இருக்கிறதல்லவா, இது.

தம்பி! சூரத் பாணியில் இல்லையே தவிர, காங்கிரசின் நடவடிக்கைகளிலே பலமுறை, குழப்பமும் அமளியும், நடைபெற்றது. இதைக் கூறி, நம்மிடையே நுழைந்த நாசத்தை நான் அனுமதிக்கிறேன் என்று மட்டும் எண்ணாதே! காங்கிரசின் ஒழுங்கு, கட்டுப்பாடு எந்த இலட்சணத்தில் இருந்திருக்கிறது, என்பதைக் காங்கிரசின் புதியவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்பதற்கே இதை எழுதினேன்.

உத்தரப்பிரதேசத்தில், சம்பூர்ணாநந்தா கோஷ்டிக்கும், குப்தா பிரிவினருக்கும் மூண்ட மோதலினால், இரு தரப்பினரும், ஏசிக்கொண்டதன் அளவுதான் கொஞ்சமா? தரம்தான் சிலாக்கியமானதா? உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்திரிகைகளைப் பார்த்தாலல்லவா, அந்தக் "கண்றாவி' தெரியும்.

காங்கிரஸ் அமைச்சர் மீது காங்கிரஸ் தலைவர் புகார் தொடுப்பது; மகனுக்கு வேலை தேடிக் கொடுத்தான், மருமகனுக்குக் காண்ட்ராக்ட் கொடுத்தான் என்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சமா?

இதை எண்ணி எண்ணிக் குமுறிக் கிடக்க வேண்டிய இவர்கள், நம்மைப் பார்த்து ஏளனம் செய்வதா?

நடைபெற்றுவிட்டவைகளைக் கண்டிக்கத் தவறக் கூடாது - களைந்தெறியும் உறுதியுடன் கண்டிக்கத்தான் வேண்டும்; ஆனால், அதற்கு, இவர்களா பொறுப்பாளர்! இவர்கள் தூற்றித் திரிவோர்; தூய்மைப்படுத்தும் உரிமையோ திறமையோ பெற்றவர்களல்ல. எனினும், எருதுமீது உள்ள புண் மீது உட்கார்ந்துவிடும் ஈயைப்போல, இவர்கள் ஆகும்போதுதான், எருது தன் வாலால் அடித்து ஈயை விரட்டுவதுபோல, நாமும், இவர்களின் இலட்சணத்தை எடுத்துக்காட்டவேண்டி வருகிறது.

ஆனால், தம்பி! இதைக்கண்டு, நமக்குள் ஏற்பட்டது குறித்து நாம் வேதனைப்படத் தேவையில்லை, என்று எண்ணி விடக்கூடாது.

நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது, இதுதான். இத்தனை காலமாகக், கட்டிக் காப்பாற்றி வந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இப்போது தளரக் காரணம் என்ன என்பதும், மீண்டும், மாண்புபெற நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய முறைகள் யாவை என்பதும்தான். திருவொற்றியூரில், நாம், அதற்கான முறை வகுத்துக் கொண்டிருக்கிறோம் - தக்க பலன் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.

தம்பி! உன் உரையாடலிலும், மற்றவர் சொற்பொழிவிலும், எழுத்திலும், செயலிலும், கடைப்பிடிக்க வேண்டியவைகள், நிரம்ப உள்ளன.

கசப்புணர்ச்சி ஏற்படக் காரணம், கண்மூடித்தனமான போக்கும், பேச்சும். எதையும் கிளறிக் கிளறிப் பேசுவதும், எதற்கும் உள் அர்த்தங்கள் கற்பித்துக்கொள்வதும், இடையிலுள்ளோர் கூறுவனவற்றுக்குச் செவிசாய்ப்பதும்தான் தீதான மனப்போக்கை மூட்டிவிடுகின்றன.

எனவே, பொறுப்புடன் அமைதல்வேண்டும், நம் அனைவருடைய பேச்சும், எழுத்தும், செயலும்.

இதில் எவரேனும் தவறு இழைத்துவிட்டால், உணர்ந்தோர், என்னிடம் கூறுவதும், அவர்களிடமேகூட, நேச உணர்வோடு எடுத்துக்கூறித் திருத்த முற்படுவதும் ஏற்புடைய செயலாகும். அதை விடுத்துக், கண்டனம், மறுப்பு எனும் போக்கிலே ஈடுபட்டுவிட்டால், நோய் பரவுகிறது என்பது பொருள்.

தம்பி! பிளேக் போன்ற மிகப் பயங்கரமான நோய்க்கான கிருமிகளைச், சாதாரண எலிகளல்லவா பரப்புகின்றன என்கின்றனர், மருத்துவ விற்பன்னர். ஊரையே அழிக்கும் நோய் - அதனைப் பூனைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் எலி, பரப்புகிறது.

கூட்டாகப் பணியாற்றும்போது, மிகமிகச் சிறு சம்பவங் களைக், கிருமிகளாக்கிப் பரவவிடும்போது நோய் முற்றுகிறது.

எனவே, நம் பேச்சுக்களிலே, பொருளும் பொறுப்பும் காரணமும் தேவையும், தெளிவும் கனிவும் இருக்க வேண்டும்.

"அப்பா காதைத் திருகு! உம்! பார்க்கலாம் உன் சாமர்த்தியத்தை'' என்று நாலு வயது மகனுக்குக் கூறும் அதே தாய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே வார்த்தையையே சொல்லிப் பார்க்கட்டும் - எத்துணை விபரீதமான பொருள்படும்.

தம்பி! நமது கழகம் இன்று அடைந்துள்ள நிலைமை அப்படிப்பட்டது.

பொதுவாக, இப்போது மேற்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு; ஏற்பட்டுத் தீர்க்கப்பட்டுப்போன பிரச்சினைகளைப் பற்றி, உரையாடலிலோ, மேடைப் பேச்சிலோ, பத்திரிகை வாயிலாகவோ ஆராய்ச்சி நடத்துவது, அறவே நிறுத்தப்பட வேண்டும்.

எப்படித் தொடங்கிற்று? ஏன் தொடங்கிற்று? எவர் தொடங்கினர்? என்பனப்பற்றிப் பேசுவது, புதிய, தேவையற்ற, தீது தரும் விதமான, விளைவுகளைத்தான் உண்டாக்கும். எனவே, பேச்சாளரும் எழுத்தாளரும், தமது நிலையும் நினைப்பும், அறிவும் ஆற்றலும், பண்பும் மாண்பும், நமது கழகத்தை வாழ வைக்க, வளர வைக்கப் பயன்படத்தக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். பொறுப்புடன் பணியாற்றினால், கழகத்தை வளப்படுத்தலாம்; பொறுப்பினை மறந்தால், பகை புகையும் இடமாக்கிவிட்டுப், பின்னர், கை பிசைந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

கழகம் துவக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலை - அதனை எப்படி நாம் மாற்றி அமைத்தோம்.

கழகம் துவக்கப்பட்டபோது, நம்மைப்பற்றி நாடு கொண்டிருந்த எண்ணம் - இன்று நாடு காட்டும் அன்பும் ஆதரவும் பெற்றிட எங்ஙனம் முடிந்தது.

கழகத்தின்மீது வீசப்பட்ட அடக்கு முறைகள்; அப்போது அஞ்சா நெஞ்சுடன் நின்ற வீரக் காதைகள்.

கழகத்தின் வளர்ச்சிக்கு அவரவர் தத்தமது அறிவாற்றலை வழங்கிய வகை; அதனால் கழகத்தின் வண்ணமும் வடிவமும் வளர்ந்த விதம்.

கழகம், மொழி காத்திட மேற்கொண்ட முயற்சிகள், அதுபோது ஏற்பட்ட இன்னல்கள்.

கழகம், கலைத்துறையைப் பக்குவப்படுத்திப், படைக் கலனாகக் கொண்டது, அதனாலாய பயன்.

கழகம், முற்போக்குக் கருத்துக்களை ஆதரித்தது; அதன் விளைவாகப் புதிய தோழமை உணர்வுகொண்டு சமுதாயம் கழகத்தை வரவேற்ற அருமை.

கழகம், விவசாயப் பிரச்சினைப் பற்றிக் கூறிய கருத்துக்கள். ஈடுபட்ட செயல்கள் - நடத்திய கிளர்ச்சிகள் - பெற்ற வெற்றிகள்.

கழகம், தொழிலாளர் துறையிலே கொண்டுள்ள தொடர்பு; ஏற்பட்டுள்ள புதிய அமைப்புக்கள்; அதனால் காணக் கிடக்கும் புதிய நிலைமைகள்; கிடைத்த அனுபவங்கள்.

கழகம், தன் அலுவல்களைச் செய்திடப் பொதுமக்களின் ஆதரவை நாடியது; கிடைத்த அளவும், வகையும்.

கழகம், நெசவாளர் பிரச்சினையில் கொண்டுள்ள தொடர்பு; அதன் பயன்கள்.

கழகத்துக்கு ஏற்பட்ட இருட்டடிப்புகள் - அதனை முறியடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் - இன்றைய நிலைமை.

கழகம் மாணவர்களிடம் கொண்டுள்ள பாசம் நிறைந்த தொடர்பு; அதிலே கழகம் மேற்கொண்டுள்ள கண்ணியமான போக்கு.

கழகப் பணியாற்றியவர்கள், மாற்றாரால் படுகொலை செய்யப்பட்ட சோகம் ததும்பும் சம்பவங்கள் - கழகம் அந்தக் குடும்பத்தாருக்கு கைகொடுக்க முன் வந்த நிகழ்ச்சிகள்.

கழகம், மக்களைப் பாதிக்கும், வெள்ளம், பஞ்சம், நோய் போன்ற விபத்துக்களின்போது, காட்டிய அக்கறை; திரட்டித் தந்த உதவிகள்.

கழகம், தேர்தலில் ஈடுபடக் காரணம்; அதற்கான ஏற்பாடுகள்; பெற்ற வெற்றிகள்; வெற்றிகளின் தன்மைகள்; தோல்விகளுக்கான காரணங்கள்; இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை மாற்றங்கள்.

கழகம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் போக்கு; மக்கள் அதனை வரவேற்கும் தன்மை.

கழகம், காங்கிரஸ் முதலாளித்துவ அரசு அமைத்து நடத்துகிறது என்பதை எடுத்துக்காட்டி, மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தெளிவு.

காங்கிரஸ் ஆட்சியின் வரிக் கொள்கை - தொழில் கொள்கை - அடக்கு முறைப்போக்கு - சட்டங்கள் இயற்றும் போக்கு - பொருள் விரயம் - வீண் காரியம் - நிர்வாக ஊழல், ஆகியவற்றினை, மக்கள் உணரச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள்.

கழகம், சட்டமன்றம், பாராளுமன்றம், நகராட்சிகள். ஊராட்சி மன்றங்கள் ஆகிய இடங்களில் ஆற்றிவரும் நற்பணிகளும் - அவற்றால் ஏற்படும் பலன்களும்.

வடநாட்டு ஆதிக்கம், திராவிடம் படும் தொல்லைகள்.

ஐந்தாண்டுத் திட்டங்கள் - அவைகளில் உள்ள குறைபாடுகள்.

வடக்கு, தெற்கை வஞ்சிக்கிறது என்பது குறித்து, நாம் தவிர, மற்றப் பலரும் எடுத்துக் கூறியுள்ள கருத்துகள்; அவைகளுக்கான விளக்கங்கள்.

வடக்கே அமைந்துள்ள அரசு, தொழில் துறையில் தென்னகத்தைப் புறக்கணிப்பதால் ஏற்பட்டுள்ள கேடுபாடுகள்.

திராவிடத்தின் செல்வங்கள் - அவற்றினைப் பயன்படுத்தாததால், வந்துற்ற சீர் குலைவுகள்.

வெளிநாடுகளில் வேதனை நிரம்பிய வாழ்வு நடாத்திவரும் தமிழர் பற்றிய விவரம், விளக்கம்; அவர்களுக்கு உள்ள குறைகள்; நீக்குவதற்கான வழி வகைகள்; ஆட்சியாளர் காட்டும் அலட்சியம்!

பொல்லாங்கான ஆட்சி நடத்திடினும், பொதுமக்களை வசியப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் எண்ணிட உள்ள காரணங்கள் - பத்திரிகை பலம், பணபலம், ஜாதியைப் பயன் படுத்தும் போக்கு.

கழகத் தோழர்களின் உடைமைக்கும் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படுத்தத்தக்க துணிவு சிலரிடம் ஏற்பட்டிருப்பது; இதிலே துரைத்தனத்தின் கடமை என்ன, என்ற விளக்கம்.

காங்கிரசுக்குப் பக்கபலமாகப், பணம் படைத்தோர் திரண்டு நிற்கும் காட்சி - அதற்கான காரணம் - எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், என்பது குறித்த ஆராய்ச்சி.

காங்கிரசை எதிர்த்து நிற்கத் தேவைப்படும் பணவசதி - இதனைத் திரட்டும் முயற்சி - கிடைத்துள்ள பலன்கள்.

அடுத்து வரும் தேர்தலில் கழகத் தோழர்கள் வேலை செய்யவேண்டிய முறைகள்.

தம்பி! மணி விடியற்காலை நாலு ஆகிறது. கண் தன்னாலே கூட மூடிக்கொள்கிற நிலைமை. ஆனாலும், எனக்கென்னவோ, எல்லாவற்றையும் ஒரே மூச்சில் உன்னிடம் கூறிவிட வேண்டும் என்று ஓர் தணியாத ஆர்வம். உன் ஆர்வம் பழுதுபடாமருந்தால்தான், கழகம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். அந்த நோக்கத்துடன் பணியாற்றினால் பகை எழாது. பண்பு கெடாது, பாங்கான வளர்ச்சி ஏற்படும் - திருஇடம் அமைக்கும் வழி கிடைக்கும்.

திராவிடத்தின் தன்மை, வளமை, வரலாற்று உண்மை, இன்றைய தாழ்நிலை, இன்பமிகு எதிர்காலத்தை நோக்கி நாம் நடப்பது.

உலகிலுள்ள சிறிய நாடுகள் குறித்த வரலாறுகள் - விடுதலை வீரர்கள் நடாத்திய, உடம்பைப் புல்லரிக்கச் செய்யும் தீரமிக்க நடவடிக்கைகள் - மக்கள் இதன் காரணமாகப் பெற்றுள்ள எழுச்சி.

இவை குறித்துக், கோடிட்டுக் காட்டிப் பேசவே, நேரம் காணாது; ஆனால், பேசியாக வேண்டும். உன்னாலன்றி, வேறு எவரால் முடியும்? எழு! தம்பி! சோர்வு, திகைப்பு, கலக்கம் விரட்டு! வீர உணர்ச்சிக்கு வேலை செய்! வெற்றி நமதே, அஞ்சற்க!

அண்ணன்,

5-3-1961