அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெற்றிபுரி செல்ல...
2

வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன்.

ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர்.

ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் "சலாமிடும்' ஆட்சி, வெளிநாடு களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி.

என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதி யில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளையவைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிற போதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே - ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன்.

தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அது போலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம் பொதுமக்களிடம் ஆற்றி வரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க லாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள்.

தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறு கொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை - அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவதாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர் - எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன் - பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள், தம்பி - நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார் - என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன் - அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான் - அதுபோலானேன்!

நமது கழகத்தில் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல்.

நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல. ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச் சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்த துண்டு. எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!!

பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை "உள்ளே' போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்!

ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு - உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல - எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி, நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும்.

இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன்.

பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் - என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - என்று, சென்னை முத்தியாலுப்பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன்.

அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான் நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றி விட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவதானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால்கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் "ஆரூடம்' பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு "ஆயுள்' - இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன் - ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம் முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம் - பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போ தெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா - அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும் போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே "அறிவகம்' - அச்சகம் - திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள் - இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான் அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்ல வேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது - எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணிமனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துனை பொலிவு பெற்றது.

இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக் கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!!

ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது, என்ன ஆகுமோ தெரியவில்லை - என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக்கொண் டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான் - நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான் - ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும், என்று நாம் திகைத்தும் செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம் - நமக்கு நம்பிகை வளருகிறது.

பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே! என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம்.

நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப் பார்த்து, அதற்குத் தக்கபடி "கீர்த்தி - கித்தாப்பு' தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது - எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.

அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள் - ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும்.

இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள், வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது.

இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும்.

"என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்'' என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே.

அன்பன்,

9-12-1956