அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


ரங்கோன் ராதா
15
             

சாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்டு; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ, கேட்டோ, வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகி விட்டது ஒரு கால்கட்டுக் கட்டிப்போட்டால்தான், வாழ்க்கையில் படிந்து இருப்பான்; இந்தச் சமயத்திலே அவனைக் கண்டிப்பதோடு மட்டும் விட்டுவிட்டால், அவன், நமது கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டு, கண்டபடி ஆடிக்கெடுவான்; ஆகவே, அவனுக்கு விரைவில் ஒரு கலியாணத்தைச் செய்துவிட வேண்டும் காலாகாலத்திலே செய்யவேண்டிய காரியத்தைச் செய்தால் தான் எதுவும் வழியாக வரும் என்று பேசுவார்கள். பையனுக்கு நல்வார்த்தை கூறிக்
கொண்டிருக்கும் போதே, நல்ல இடமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் கப்பலுக்கு நங்கூரம் போடுவதுபோல, வாழ்க்கைப் படகை வழிதவறிச் செலுத்தாமலிருக்க, ஒரு கட்டுத் திட்டம் என்றுதானே கலியாணத்தைக் கூறுவர். அதேபோல, பெரும்பாலும் ஆடவர்கள், கல்யாணமானதும், எப்படியாவது தமது பழைய நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு, பழைய சிநேகிதர்களிலேகூடச் சிலரை ஒதுக்கிவிட்டு, புதிய முறையை ஆரம்பிப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பெட்டியிலிட்ட பாம்பு போலாகிவிட்டான் பார்த்தாயா, மாலை வேளைகளிலே மரகதத்தின் வீட்டிலேயே கிடப்பானே, இப்போது பார்த்தாயா, எவ்வளவு அடக்க ஒடுக்கமாகிவிட்டான். அந்தத் தெருப்பக்கமே கூடப் போவதில்லை என்றெல்லாம் பேசுவார்கள். “எங்கே சார், உங்களைப் பார்க்க முடியவில்லை இப்போதெல்லாம்?” என்று ஒரு நண்பர் கேட்டால், புதிதாக மணமானவர் புன்சிரிப்புடன், பதில் என்ன கூறுவதென்று தெரியாமல் நிற்பார். வேறோர் நண்பர், “அவர் எப்படி முன் போல இருக்க முடியும்! நம்மைப் போல அவர் என்ன ஒண்டிக் கட்டையா? அவருக்குக் கலியாணம் ஆகிவிட்டது; இனிஎப்படி அவர், நம் கண்ணிலே பட முடியும்” என்று கேலி பேசுவார்.

கலியாணம் செய்துகொள்ளுமுன், கண்ணையும் கருத்தையும் கெடுத்துக் கொள்ளும் ஆண்களே அதிகம். மணவறையில் வரும்வரை பிரம்மசாரியாகவே இருந்தவர் என்று உறுதியாகக் கூறக்கூடிய நிலையில், ஆயிரத்திலொரு ஆடவர் தேறுவாரோ என்னவோ! ஆனால், எப்படிப்பட்ட அலைச்சல்காரரும், கலியாணமானதும், கொஞ்சம் திருந்திவிடுவதைத்தான் சாதாரணமாகப் பார்க்க முடியும். சிலது உண்டு. கலியாணமான பிறகும் பழைய குருடியாக உள்ளதுகள். உன் அப்பாவின் போக்கோ தனி ரகமாக இருந்தது. அவருக்கு மோக வெறி, பருவம் கடந்து ஏற்பட்டது. எனவே தான் அளவுக்கு மீறிப் போகலாயிற்று. ஆகவேதான், சிந்தாமணி - சிந்தாமணி - என்று சதா பஜனை செய்து கொண்டிருந்தார் நம்ம ராதா ஒரு கதை சொல்லுவாள். யாரோ ஒருவீராதி வீரனாம், உலகையே ஜெயித்து ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்று எண்ணினானாம். பல தேசங்களையும் ஜெயித்தானாம்; புகழ் ஓங்கி வளர்ந்ததாம். அப்படிப்பட்டவனுக்கு, முதிய பருவம் வருகிற நேரத்தில், ஒரு அகு ராணியிடம் அமோகமாக ஆசை பிறந்ததாம். அதனை அறிந்து கொண்ட அந்த ராணி அசகாய சூரனைத் தன் ராஜ்யம், ரணகளம், கீர்த்தி முதலியவற்றை எல்லாம் மறந்து அவளிடம் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பதே வேலையாகக் கொண்டு, அதன் பயனாகக் செல்வாக்கையும் மதிப்பையும் இழந்தானாம். பெயர் என்னவோ ஜூலியஸ் சீசர் என்று சொல்வாள். அதுபோலக் கொஞ்சம் வயதான பிறகு, இந்தக் காதல்நோய் ஏற்பட்டால், அதைத் தீர்த்துக் கொள்ளும் மருந்தும் கிடைப்பது கஷ்டம். மருந்து கிடைத்தாலும், சுலபத்திலே வேலை செய்யாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே, அதுபோல முதிய பருவத்திலே மோகம் பிறந்தால் அதன் வேகத்தைத் தாங்க மாட்டாமல், அவர்கள் நிலையையே இழந்துவிடுமளவு ஆடுவர். உன் அப்பாவுக்கும் அந்தக் கதிதானோ என்று நான் அஞ்சினேன். இவளெவளோ சிந்தாமணியும்! தங்கத்திடம் கொண்ட ஆசையால் அவர் என்னை இவ்வளவு பாடுபடுத்தினார். இன்னும் சிந்தாமணியும் வந்து சேர்ந்தால், தீர்ந்தது. என் கையில் திருவோடு கொடுத்துத் துரத்தியும் விடுவார்கள் என்று பயந்தேன். சொல்ல முடியாது, மகனே! மோகத்தால் பிடித்தாட்டப்படும் ஆடவர்கள் எவ்வளவு மோசமாக நடக்க ஆரம்பிப்பார்கள் என்பதை அளவறிந்து கூற முடியாது - சொந்த மகன், மகள், அண்ணன், தம்பி ஆகியோரையும் தன்னிடம் பிரியமுள்ள ஊழியர்களையும் ஊதாசீனம் செய்யத் துணிவார்கள். பழைய பாசம், நேசம் அவ்வளவும் பாழாகும். கவலைப்பட மாட்டார்கள். எது வந்தாலும் சரி, எது போனாலும் சரி என்று துணிந்து விடுவார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்று மனதை மரக்கடித்துக் கொள்வார்கள். மகனே! இரண்டாந்தாரம் செய்துகொண்ட குடும்பத்திலே வளரும் பிள்ளைகளிலே பல கொடுமைக்கு ஆளாவதைப் பார்க்கிறோமே, மாற்றாந்தாய்க் கொண்டுமை என்று அதனைக் கூறுவார்கள். ஆனால் குற்றம், அந்த இரண்டாம் மனைவி மீது அதிகம் இராது; ஆடவன் மீது தான் இருக்கும். அதைத் கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் புரியும். ரங்கோனில் அப்படித்தான். எங்கள் பக்கத்து வீட்டிலே, ஒரு பிள்ளை இருந்தார். அவருக்கு வயது வந்த ஒரு பெண்; மனைவி இறந்துவிட்டாள். மறு கலியாணம் செய்து கொண்டார். கொஞ்ச நாட்களுக்குள், அவருடைய மகள் கண்ணீர் விடலானாள். மாற்றாந்தாய்க் கொடுமை என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன். படு பாவி, எங்கிருந்தோ ஒருத்தி வந்து சேர்ந்தாளோ, குழந்தையின் வாழ்க்கையைப் பாழ்படுத்த என்று கூடச் சபித்தேன். ராதாதான் சூட்சமத்தைக் கண்டறிந்து சொன்னாள், கொடுமை அவளால் உண்டாகவில்லை, அந்த ஆடவனாலேதான். ஒரு சம்பவம் கேள்; ராதாதான் சொன்னாள். ஒரு நாள் அவன் ரோஜோச் செண்டு வாங்கி அனுப்பினானாம். வீட்டுக்கு, வேலைக்காரனிடம். அதனை யார் எடுத்துக் கொள்வது என்ற சிக்கல் வந்து விட்டது. மாற்றாந்தாய் கொடுமைக்காரி என்கிறோமே அவள்தான். அன்புடன் அந்தச் செண்டைப் பெண்ணுக்குக் கொடுத்தாளாம். பெண் பயந்துகொண்டே அதைப் பெற்றுக் கொண்டாள். பிறகு அவன் வீட்டுக்கு வந்திருக்கிறான். பெண்ணின் ஜடையிலே ரோஜா இருந்திடக் கண்டான் - முகம் மாறிவிட்டது. அவ்வளவு விரைவிலே அவன் மனம் கெட்டுவிட்டது. பெண்கள் விஷயந்தானே என்று விட்டுவிட்டானா? அதுவுமில்லை; கிளறத் தொடங்கினான். இரண்டாந்தாரமாக வந்த பெண் ரோஜாவையும் மறந்து விட்டாள், அதை யார் வைத்துக் கொள்வது என்று சர்ச்சை நடந்ததையும் மறந்து விட்டாள். ஏதோ வேறு நினைவிலே இருந்தாள். புருஷனோடு பேசவில்லை. இந்தப் புருஷன், நாடகத்திலே கதையிலே வருவது போல, தன் மனைவி சிரித்துக் கொண்டே தன் எதிரில் வந்து நின்று, “பிராணநாதா! தாங்கள் அன்புடன் எனக்களித்த மலரை நான் பிரியத்துடன் என் பின்னலிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் பாரீர்” என்று கூறிக் கொஞ்வாள் என்று நினைத்தான் போலும். கடையிலே ரோஜா மலர் வாங்கும் போதே அவனுக்கு அந்த நினைப்பு இருந்திருக்கும். வயதானவனல்லவா! தான் வாங்கி அனுப்பிய ரோஜாவை, தன் மகள் சண்டை போட்டுத் தனக்கென்று எடுத்துக் கொண்டாள்; அதனாலேயே தன் மனைவி தன்னிடம் சரியாகப் பேசக்கூட இல்லை என்று இவன் தவறாக எண்ணிக் கொண்டான். மனதிலே இந்தத் தப்பெண்ணம் கொண்டதும், கோபிக்கவும் ஆரம்பித்தான். தன் மனைவியின் மனதை மகிழச் செய்ய வேண்டுமானால், மகளை அவன் எதிரில் கண்டித்தாக வேண்டும் என்று இவனாகத் தீர்மானித்துக் கொண்டான். பாவம், அந்தப் பெண்! இவனுடைய இரண்டாந்தாரம், இவனுக்குக் கலகமூட்டவுமில்லை; அவளுடைய மனதிலே, அவ்விதமான களங்கமே கிடையாது. இவனாக அவளுக்கு இன்னதுதான் திருப்தியாக இருக்குமென்று எண்ணிக் கொண்டான். உடனே, தன் மகளிடம், அனாவசியமாகக் கோபித்துக் கொண்டான். ஏன் இப்படிக் கத்துகிறாய் - கழுதை மாதிரி - நாய்களுக்குப் புத்தியே கிடையாது - சனியனைத் தொலைத்துவிடலாம் என்றால், எந்தத் தடியனும் கிடைக்கவில்லை என்று இப்படிப் பேசினான். அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும். தன்னிடம் தன் தகப்பனார், ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறார். நாம் ஒரு தவறும் செய்யவில்லையே என்று அந்தப் பெண் யோசித்தாள். ஒரு காரணமும் தெரியவில்லை. தெரியாததால், அவளுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது. ஒரு வேளை, மாற்றாந்தாய் ஏதாவது கலகமூட்டி விட்டார்களோ, என்று எண்ணினாள். அப்படியும் அவளுக்குக் கோபம் வரும்படியான காரியமும் ஒன்றும் செய்யவில்லை; ஏன் கலகமூட்டப் போகிறாள் என்றும் எண்ணிப் பார்த்தாள். அதே யோசனையில் ஈடுபட்டிருந்தபோது, ரோஜா ஜடையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. உடனே அதை எடுத்து மறுபடியும் செருகிக் கொள்ளலானாள். செருகுவதற்கு முன்பு ரோஜாவில் இரண்டோர் இதழ்களைக் கிள்ளி வாயில் போட்டு மென்றாள் - சின்னப் பெண்தானே - விளையாட்டாகச் செய்தாள். எங்கள் ராதா, ரோஜா ரோஜாவாகவே கூடத் தின்று விடுவாள். இந்தப் பெண் இரண்டு இதழைக் கிள்ளினதுதான், பார்த்துக் கொண்டே இருந்த தகப்பன், பளார் பளார் என்று அடித்து விட்டானாம். அந்த அடிகூட அல்ல அந்தப் பெண்ணுக்குத் துக்கம் தந்ததும்; அடித்துக் கொண்டே அவன் சொன்ன வார்த்தைதான் அவள் உயிரையே துடிக்கச் செய்தது. “சனியனே! ஆடு தழையைத் தின்பதுபோல ரோஜோ புஷ்பத்தைத் தின்றாயே, ரோஜாயின் அருமை தெரிந்தால் செய்வாயா இப்படி? உனக்கு ஏது அந்த யோக்யதை! நான் அந்தத் தடிக் கழுதையிடம் சொன்னேன், ரோஜாவை அம்மாவிடம் கொடடா என்றால் கழுதை உன்னிடம் கொடுத்துத் தொலைத்தான் போலிருக்கு. நீ அதை இப்படிப் பாழாக்குகிறாய். இப்படிப் பாழாக்கினாலும் ஆக்குவது, சின்னம்மாவுக்குத் தருவதில்லை என்ற அளவுக்குக் கெட்ட எண்ணம், இந்த வயதில்” என்று கூறினான். பாவம் அந்தப் பெண் பதறினாள், கதறினாள். அது முதல் தகப்பனுக்கும் மகளுக்கும் சரியானபடி பேச்சு வார்த்தை கிடையாது. அந்தப் பெண் அழுதபடி கிடந்தாள். பலர், இது மாற்றாந்தாய்க் கொடுமை என்று எண்ணினார்கள். நான்கூட அப்படித்தான் எண்ணிக் கொண்டேன். ராதாதான், நடந்தது என்ன என்று அந்தப் பெண்ணிடம் பேசி, இந்தச் சூட்சமத்தைத் தெரிந்து எனக்குக் கூறினாள்.

என்மீதுதானே, உன் அப்பாவுக்குக் கோபம், வெறுப்பு, விரோதம் எல்லாம். தங்கத்திடம் பிரமையோடுதானே இருக்கிறார். அவளிடம் அடங்கிக் கிடப்பார். ஆகவே அவளுக்கு இரகசியத்தைக் கூறி அனுப்பினால், அவள், அவரைத் தடுப்பாள், கோபத்தால் முடியாவிட்டால், புன்சிரிப்பால்-; இரண்டினாலும் முடியாவிட்டால் கண்ணீரால், என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது. தனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமையைக் கெடுப்பதற்காக நான் ஏதோ சூது செய்கிறேன் என்று அவள் நினைத்துவிடுவாளோ என்று நினைத்தேன். உண்மையாகவே, யாருக்கும் அம்மாதிரியான நினைப்புத்தானே தோன்றும். தங்கத்தினிடம் அன்பு கொண்டா, நான் சிந்தாமணியைப் பற்றி அவளுக்குக் கூறவேண்டுமென்று எண்ணினேன். எனக்கு இருந்த செல்வாக்குத் தங்கத்தால் பறிக்கப்பட்டுப் போய்விட்டது. அதனைப் பறித்துக் கொள்ளச் சிந்தாமணி வருகிறாள், எனவே சிந்தாமணியைப் பற்றித் தங்கத்துக்கு எச்சரிக்கை செய்வோம் என்று நான் நினைத்தேன். அவள் எப்படி நான் நல்ல கருத்தோடு இக்காரியம் செய்கிறேன் என்பதை நம்புவாள். சந்தேகப்பட்டால்? நம்ப மறுத்தால்! இவ்விதம் எண்ணிக் குழம்பினேன்.

இவ்வளவும் செய்தது, என் பொருட்டு அல்லடா மகனே! நான் அவரால் வெறுக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்டுப் போனேன். நான் குடியிருந்த அவருடைய மனதிலே தங்கம் குடியேறிவிட்டாள். அவளைத் தள்ளிவிட்டு, சிந்தாமணியாவது வரட்டும் காந்தாமணியாவது வரட்டும் என்று நான் இருந்துவிடக் கூடும். எனக்கு அது இலாப நஷ்டம் அற்ற விஷயம். ஒரு விதத்திலே பார்த்தால் இலாபமுங்கூட. சிந்தாமணியுடன் அவர் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையிலே, தங்கம் அழுது கொண்டிருப்பாளல்லவா! என்னை அழ வைத்தவளே! இதோ உன் முறை வந்துவிட்டது அழு! அறிவற்றவளே! அன்பால் பிணைக்கப்பட்டிருந்த எங்களைப் பிரித்தாய், உன் சாகசத்தால். பார்த்தாயா, உன் சந்தோஷம் நிலைத்ததா? வந்துவிட்டாள் பாரடி உனக்கொரு சக்களத்தி! என்று கூறிக் கேலி செய்யலாம். நான் ஏதோ கெட்ட சுபாவக்காரி, ஆகவேதான், அவர் என்னை வெறுத்துத் தள்ளிவிட்டுத் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டார், என்று பேசுகிறார்களே ஊரார்; இப்போது என்ன சொல்வார்கள்! தங்கம், மகா அழகி, என்னைப் போல அவளுக்கொன்றும் பேயும் இல்லை, நோயும் இல்லை. அன்பு கொண்டுதானே அவளை மணந்து கொண்டார். அப்படி இருந்தும் அவளை விட்டு வேறோர் மாதைத் தேடிக் கொண்டாரே, என்று பேசும்போது, என்னைப் பற்றிக் கொண்டுள்ள தவறான கருத்தை நீக்கி விடுவார்கள். குற்றம் அவர்மீதுதான், என் மீதல்ல, என்று உணருவார்களல்லவா. அதுகேட்டு நான் ஆனந்தமடையலாம்; பெருமையுமடையலாம். சிந்தாமணியின் பிரவேசம். எனக்கு அந்த விதத்திலே கவனித்தால் இலாபந்தான். ஆனால் மகனே! நான், என்னை மறந்துவிட்டேன் நீ பிறந்ததும் என் சுகம், அந்தஸ்து இவைகளைப் பற்றிய எண்ணமே எனக்குப் போய்விட்டது. நான் வாழ்வது என்று தீர்மானித்ததே உன் பொருட்டு. உனக்காக என் சபதத்தைக்கூட நான் கைவிட்டு விட்டேன். இந்தக் காரியத்தின்போதும், நான் உன்னைப் பற்றித்தான் எண்ணினேன். உனக்காகத்தான், சிந்தாமணி வரக்கூடாது என்று தீர்மானித்தேன். அவளும் வந்து சேர்ந்துவிட்டால் என் வாழ்வு மேலும் சீரழியுமே என்று இலேசாக என் மனதிலே பயம் தோன்றிய போதுகூட, ஒரு கணம் என்னைப் பற்றிய நினைப்பு வரும். மறுகணம் உன்னைப் பற்றியே எண்ணுவேன். நான் சீரழிந்தால், சீந்துவாரற்றுப் போனால் என் செல்வம் என்னாவது? என் நிலை என்ன ஆகும்; தந்தை காமவெறி தலைக்கேறி, குடும்பத்தை மறந்து திரிய, தாய் அழுதுகொண்டிருப்பாளானால், குழந்தையின் நிலை என்ன ஆகும்! தெருக் கோடியில் கூவும் சிறு பிள்ளைகள், சுவரேறிக் குதிக்கும் பையன்கள், சிறு பொருளைத் திருடிவிட்டு அடிபடும் பாலர்கள், எல்லாம் குடும்பத்திலே உள்ள கோணலின் விளைவுகள்தானே. சிறுவயதிலேயே, கடைவீதியிலும், சந்தைகளிலும், இரயிலிலும் பாடிக் கொண்டு வரும் பிச்சைக்காரப் பயல்களை நான் பார்த்திருக்கிறேன்; வயிற்றிலடித்துக் கொண்டு, வறண்ட குரலிலே வாய்க்கு வந்ததைப் பாடிக் கொண்டு, வௌவால் போல, ரயிலுக்கு ரயில் தாவி, ரயில்வே அதிகாரிகளிடம் உதைபட்டு ரயிலில் போகிறவர்களிடம் அடிபட்டுக் கிடக்கும் அந்தச் சிறுவர்களின் முகத்திலே காணப்படும் சோகமும், உடலிலே உள்ள புண்ணும், காணச் சகியாததாக இல்லையா! அந்தச் சிறுவர்கள், குடும்ப ஒழுங்கு இல்லாததால், ஏற்பட்ட கேடுகளின் பயனாகத்தானே இங்ஙனமானார்கள் என்று நான் பல தடவை எண்ணியதுண்டு. அணைத்து ஆதரிக்க அன்னையும் தகாதவழி போகாமல் தடுத்து நல்வழி காட்டத் தந்தையும் இருந்திருந்தால் இவ்வளவு சிறுவயதிலே இந்தப் பயல்கள், இப்படி அலையவேண்டி நேரிடாதல்லவா என்று எண்ணி வருத்தமடைந்திருக்கிறேன். அதனாலே அந்தச் சிறுவர்களுக்குக் காலணா கொடுக்கலாம் என்று எண்ணுபவள், அரையணாவாகக் கொடுப்பேன். “இந்தத் திருட்டுப்பயல்களுக்குச் சோத்துக்கு என்று நீ கொடுக்கிறாயம்மா, இதுகள் பீடி வங்கிப் பிடித்துப் பிடித்து மாரை உலர வைத்துக் கொள்கின்றன. இதுகளுக்குக் காசு கொடுப்பதே தவறு” என்று எனக்குப் புத்தி கூறுவார்கள். அவர்கள் சொல்வதுபோல அந்தப் பயல்களும், கெட்ட வழக்கத்தைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் முதலிலே அவர்கள் அந்தக் கதியானதற்குக் காரணம், குடும்பம் சரிவர இல்லாததுதான் என்பதேஎன் எண்ணம். யாரோ ஒரு பெரிய பிரசங்கியாம். சீமையிலே இருந்து வந்தாராம். அவர்கூட, இது போலத்தான் பேசினாரென்று, ஒரு தினம் எங்க ராதா கூடச் சொன்னாள்.

சிந்தாமணியின் பிரவேசத்தால் உன் அப்பாவின் சுபாவம் அடியோடு மாறிவிடுவதுடன், சொத்தும் போய்விட்டால் உன் கதி என்ன ஆகும் என்பதை எண்ணியே நான் ஏங்கினேன். குடும்பத்தை மறந்து, சொத்தை இழந்து, சிந்தாமணியின் பொம்மையாகிவிட்டால், பிறகு உன்னைக் கவனிக்க முடியுமா அவரால்! சொத்து முழுதும் பாழாகி விட்டால், பிறகு உனக்கு என்ன நிலை இருக்க முடியும். அதனாலேதான் நான் பயந்தேன். சிந்தாமணியால் உன் வாழ்வு கெட்டு விடுமே என்று அஞ்சினேன், உன்னைப் பராரியாக்கிவிடுவாரே அந்தப் பாவி என்று பயந்தேன். அதனாலேயே தங்கத்துக்காவது விஷயத்தைச் சொல்லி அனுப்பி, இந்த ஆபத்தைத் தடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அந்த எண்ணம், வேகமாக வளர்ந்தது. கிழவியிடம் யோசனை கேட்டேன். அவளும் அது சரியான யோசனை தான் என்றாள். ஆனால், ஒரு திருத்தம் செய்தாள். “அம்மா! நீ எவ்வளவு நல்லவர்களிடம் சொல்லி அனுப்பினாலும், அவர்கள் ஒன்றுக்கு இரண்டாக்கித்தான் சொல்லிவிடுவார்கள். அதனால், காரியம் கெட்டுவிடக் கூடுமே. எதற்கும் விஷயம் முக்கியமான
தாக இருப்பதால், குழந்தையின் நன்மையை உத்தேசித்து, நீயே சென்று தங்கத்திடம் சகல விஷயத்தையும் கூறினால், பலன் இருக்கும். இல்லையானால் கெட்டுவிடும்” என்று சொன்னாள். யோசித்துப் பார்த்ததில் அவள் யோசனை சரியென்றே எனக்குப் பட்டது. உன் பொருட்டு நான் அந்தத் தங்கத்திடம் சென்று வருவது என்று துணிந்தேன். என் வாழ்வைக் கெடுத்தவள்தான் தங்கம். இருந்தாலும், உன் வாழ்வு கெடாதபடி தடுக்கும் சக்தி அவளுக்கு இருந்தது. அதற்காக அவளை அடுப்பது என்று துணிந்தேன். சென்றேன். துளிகூட என்னை அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா! திடுக்கிட்டுப் போனாள், ஒரு விநாடி. மறுவிநாடியே சமாளித்துக் கொண்டு, “வா அக்கா!” என்று வாய் குளிர அழைத்தாள்; அவள்தான் அந்த வித்தையிலே கைதேர்ந்தவளாயிற்றே. கொஞ்ச நேரம் பேசவே இல்லை நான். பிறகு சர்வ சாதாரணமான விஷயங்களைப் பேசினோம். “என்மீது உனக்குக் கோபம் இருப்பது சகஜம் அக்கா. ஆனால், நான் வேண்டுமென்றே உனக்கு ஒரு கெடுதியும் செய்ததில்லை. நீ அதை நம்பமாட்டாய்” என்று உபசார வார்த்தை பேசினாள். நான் பதில் கூறவில்லை. என்ன கூற முடியும்? அவள் பசப்புகிறாள். எனக்கு அது பழக்கமில்லை. “அக்கா குழந்தையை வந்து பார்க்க வேண்டுமென்று கொள்ளை ஆசை எனக்கு. வரலாம் என்று பல தடவை புறப்பட்டேன். வந்தால், என்னுடன் நீ முகங்கொடுத்துப் பேசுவாயோ மாட்டாயோ, குழந்தையைத் தொடக்கூடாது என்று கூறிவிடுவாயோ என்று எண்ணினேன். அத்தானை மட்டும் அடிக்கடி கேட்பேன், குழந்தை எப்படி இருக்கிறானென்று” என்றாள். அத்தானைக் கேட்பாளாம்! அத்தான் என்ன பதில் கூறி இருக்க முடியும். உன்னைத்தான் அவர் கையிலே எடுத்ததே இல்லையே! சரி என்னவோ சாகசம் பேசுகிறாள். பேசட்டும் என்று நான் எதற்கும் பதிலே கூறாமல் இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் மெள்ள விஷயத்தை ஆரம்பித்தேன். “தங்கம்! உன்னிடம் அவர் பிரிய
மாக நடந்துகொள்கிறாரா?” என்று கேட்டேன். அவள் பதில் கூறவில்லை. முகத்தில் தோன்றிய புன்னகை பதில் அளித்தது. “அக்கா அவர் உன்னைக் கொடுமைப்படுத்துவதற்கு நானல்ல காரணம். இது சத்யம்; நீ நம்ப மாட்டாய். கூடப் பிறந்தவளைக் கொடுமைக்கு ஆளாக்க வேண்டுமென்று எந்தக் கள்னெஞ்சக்காரியும் எண்ண மாட்டாள். ஆனால், நான் என்ன சொன்னாலும் உனக்கு நம்பிக்கை ஏற்படாது” என்று தங்கம் சமயத்தை நழுவவிடாமல் தன் கட்சியைப் பேசலானாள். நான் இடைமறித்து, “என் சுகதுக்கம் என்னோடு இருக்கட்டும் தங்கம்; யாரல் எனக்கு இந்தக் கதி வந்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியை மறந்துகூட நெடுநாளாகி விட்டது. என்னவோ என் கதி அது போலாகிவிட்டது. நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதுகூடக் கிடையாது” என்று கூறினேன். என் பேச்சிலே காணப்பட்ட சோகத்தை அவள் நன்றாகத் தெரிந்து
கொண்டு கொஞ்ச நேரம் அசைவற்று இருந்தாள். பிறகு, நான் மெதுவாக விஷயத்தின் முக்கிய பகுதிக்குள் புகுந்தேன்.

“தங்கம்! ஆண்களின் சுபாவம் ஒரு நிலையானதல்ல. உன் அத்தான் என்னிடம் காட்டிய ஆசையைக் கண்டவர்கள், அவர் என்னை இப்படிக் கைவிடுவார் என்று கனவிலும் கருதியிருக்க முடியாது. அதுபோலவே உன்னிடம் அவர் வைத்திருக்கும் அன்பு எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணிவிடாதே” என்றேன். பாவம்! அவள் என்ன பதில் கூறுவாள் அதற்கு. நான் வேண்டுமென்றே வலுச்சண்டைக்கு வந்திருக்கிறேன் என்றுகூட எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். “அது சரி அக்கா! இந்த ஆண்களே இப்படித் தான்” என்று பொதுவாகப் பேசினாள். அவள் முகத்திலே இலேசாகப் பயம் தட்டியிருந்ததைக் கண்டேன். சரி என்று மேற்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

“எதற்காகக் கூறுகிறேனென்றால், தங்கம்! அவரை நீ என்னைவிட்டுப் பிரித்து, உன்னிடம் சேர்த்துக் கொண்டாய். அந்தக் காரியத்தை வேறே ஒருத்தி இப்போது செய்யக் கிளம்பிவிட்டாள். திகைத்து என்னடி பயன்! ஆண் மனம் அப்படிப்பட்டதுதான். என்னிடம் கொஞ்சிக் குலாவுகிறாரே அவர் ஏன் வேறோர் மாதைத் தேடப்போகிறார் என்று சொல்லுவாய், பைத்யம்! உன்னை அவர் விரும்பியதற்கு ஒரு காரணம் இருக்கும். உன் அழகிலே மயங்கினது போல இன்னொருத்தியின் பாட்டிலேயோ நாட்டியத்திலேயோ மயங்கி இருக்கக்கூடும்” என்றேன். “அக்கா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே” என்றாள்.

“இது புரியவில்லையா உனக்கு. உன் அத்தானுக்குச் சிந்தாமணி என்றொருத்தி சொக்குப்பொடி போட்டு வருகிறாள். சதா சர்வகாமமும் சிந்தாமணி ஸ்மரணைதான். அவளைப் பற்றிக் கூற ஒரு தூதன் இருக்கிறான். அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறார் இவர். அவளிடம் அவர் கொண்டுள்ள மோகத்தின் அளவு சொல்லுந்தரத்ததல்ல. அவளிடம் அவர் தஞ்சமடையத் தயாராகிவிட்டார். அப்படி நேரிட்டுவிட்டால், பிறகு உன் கதியும் என் கதியேதான். குடும்பம் பாழாகும் - சொத்து அழியும் - பிறகு நாமெல்லாம் பாராரிகளாக வேண்டும், அல்லது அந்தச் சிந்தாமணிக்குப் பணிவிடை செய்துகொண்டு உயிர் வாழ வேண்டும். இந்த ஆபத்துத் தலைமீது இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பிறகு குடும்பமே நாசமாகும் என்பதைக் கூறிப் போகவே வந்தேன். எனக்கு அந்தச் செல்வாக்கு இல்லை. உனக்காவது அவரைத் திருத்தும் செல்வாக்கு இருக்குமென்று நம்பி வந்தேன். நாம் கெட்டுவிடுவதோடு முடியாது. நாளைக்கு உனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதுவும் நடுத்தெருவிலே நிற்க வேண்டியதுதான். அந்தவிதமான கதி வரக்கூடாதே என்பதற்காகத்தான் நான் எச்சரிக்கை செய்து போக வந்தேன். அவளிடம் ஒரேயடியாக அவர் தஞ்சமடைவதற்குள், தடுத்துவிடு; இல்லையானால்” என்று நான் சொன்ன உடனே தங்கம் - மேலும் பயந்தாள். “யாரக்கா அந்தச் சிந்தாமணி? எப்படி இருப்பாள்? எந்த ஊர்? என்ன வயது? எப்படி இவருக்குத் தெரிந்தாள்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் போட்டாள். “எனக்கென்ன தெரியும், அவளைப் பற்றி, அந்தப் பாவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டேன். அவ்வளவுதான். அவர் அவளைப் பற்றிப் பேசும்போது உருகுவதைக் கண்டு, நானாக யூகித்துக் கொண்டேன். அவள் யாரோ பலே கை கைகாரியாக இருக்கவேண்டுமென்று, அவளை நான் பார்த்ததில்லை” என்றேன். “என்னக்கா செய்வது இதற்கு? எப்படித் தடுப்பது?” என்று தங்கம் என்னையே யோசனை கேட்கலானாள். “பயப்படாமல் அவரைக் கேள், எனக்கும் துரோகம் செய்யாதே. ஒருத்தியைக் கெடுத்தது போதும், அவள் பொறுத்துக் கொண்டாள். நான் அவ்விதம் இருக்க மாட்டேன். ஊரறியக் கூறி உம்முடைய மானத்தை வாங்கிவிடுவேன். ஒன்று இரண்டு இருக்கிறது; மூன்றாவது தேடப் போகிறார், இதுதான் யோக்கியதையா? ஊரிலே பெரிய மனிதர் என்ற பெயர் இந்த லட்சணத்தில்! என்று கண்டித்துக் கேளேன். என்ன பயம்” என்று யோசனை கூறினேன். “கேட்கலாம் அக்கா. இன்னும் இதைவிடக் காரமாவும் கோபமாகவுங்கூடக் கேட்கலாம்; ஆனால், பலிக்க வேண்டுமே” என்றாள்.
“தங்கம், நீயாக யோசனை செய்! என்ன திட்டம் போடுவாயோ தெரியாது. எப்படியாவது இந்த ஆபத்து ஏற்படாதபடி தடுத்தாக வேண்டும். அடி அம்மா! என் பொருட்டு அல்ல இவ்வளவும். நான் ஒரு குழந்தை வைத்திருக்கிறேன். அதன் நன்மைக்காகத்தான் நான் வெட்கத்தை விட்டு உன்னிடம் வந்து குறையைக் கூறினேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். தங்கத்தின் கண்களிலும் நீர் ததும்பிற்று.