அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


ரங்கோன் ராதா
4
             

“நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்து கொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும் சொன்னால், கேட்பதற்கு எவ்வளவு திகைப்பு இருக்கும். நான் இருந்த நிலையைக் கண்டு என் தாயார் மெள்ளச் சிரித்துவிட்டு, “தமபி! என் கதையைக் கேட்டுக் கலக்க மடைகிறாய். ஒருவேளை எனக்கு மூளை புரண்டுவிட்டதோ என்று எண்ணுகிறாயோ என்னவோ. நீ மட்டுமா, யாரிம் சொல்லப் போனாலுந்தான் இப்படித் திகைப்பார்கள். ஆனால், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் உன்னிடம் நான் உண்மையை, முழு உண்மையைக் கூறுகிறேன். இன்னொருவர் நம்பவேண்டும். அதனால் எனக்கொரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக அல்ல, என் நெஞ்சிலே நெடுங்காலமாக இருந்துவரும் பாரத்தைப் போக்கிக்கொள்ள. ஆகவே, ஆச்சரியம் திகைப்பு எது ஏற்பட்டாலும், பொருட்படுத்தாமல் என் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்” என்று கூறிவிட்டுக் கதையைத் தொடர்ந்து கூறலனார்கள்.

“கோட்டையூர் மக்களுக்கெல்லாம், நான் இறந்து விட்ட தாகத்தான் எண்ணம். என் அப்பா வீரராகவ முதலியாரும் அப்படியே நினைத்தார். உற்றார் உறவினரும் அது போலவே தான் எண்ணிக்கொண்டனர். மயானத்துக்குக் கோட்டையூர் மக்கள் வந்ததும், அந்த நினைப்போடுதான். ஆனால், உண்மை, எனக்கும், உன் அப்பாவுக்கும் மட்டுமே தெரியும். இறந்து போனது நானல்ல என்பது, அவருக்கும் எனக்கும் தெரியும். நாங்கள் இருவரும் கலந்து பேசியே நான் இறந்து போனதாகக் கூறிவிடவேண்டும் என்ற முடிவு செய்தோம்.

இரவு மணி பத்துக்குப் பிணம் வேகத் தொடங்கிற்று. அதே நேரத்தில் நான் வேகமாக, ஊரைவிட்டு வெளியேறிக் கொண் டிருந்தேன். முடி தரித்த மன்னரும் முடிவிலொரு பிடி சாம்ப லாகப் போவர் என்ற பழமொழிப்படி, நான் வெந்து நீறானேன் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்த சமயம், காவி உடையுடன், கையில் திருவோட்டுடன், காளி கோயில், காத்தவராயன் கோயில் ஆகிய இடங்களிலே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். கூந்தல் கிடையாது. மழுங்க மொட்டைய
டித்துக் கொண்டிருந் தேன். ஆமாமடா கண்ணே! உன் அன்னை இந்த அலங்கோல உருவிலே அலைந்துகொண்டிருந்தபோது உன் அப்பாவிடம் ஊரார், “என்ன செய்யலாம் நீங்கள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். புண்யவதி உமது மனைவி. பூவோம் மஞ்சளோடும் போய்ச் சேர்ந்துவிட்டாள் பாவம்” என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். நான் இறந்துவிடவில்லை; ஓடிவிட்டேன்; அவருக்கத் தெரிந்தே ஓடிவிட்டேன், என்பது உன் அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். எப்படித்தான் அவர் தன்னிடம் தேறுதல் மொழி கூறவந்தவர்களோடு பேசினாரோ, எனக்குத் தெரியாது. கோட்டையூர் மக்கள், நான் இறந்துவிட்டேன் என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால், பாவம், இறந்தது உண்மையில் ஒரு பிச்சைக்காரி! இறக்கக்கூடவில்லை, கொல்லப்பட்டாள். ஆமாம், கண்ணு! சாந்தசீலர், சத்தியவந்தர் என்று புகழப்படும் உன் தகப்பனாரால் கொல்லப்பட்டாள். என்னைக் கொல்ல, அவர் ஒரு ரகசிய ஏற்பாடு செய்திருந்தார். அதிலே அவள் சிக்கி கொண்டாள்; பாபம், செத்தாள். கேள், உன் தகப்பனாரின் கெடுமதி சென்ற விதத்தை. கொஞ்சம் பழைய கதை கூறவேண்டும் இதற்கு.

கோட்டையூர் வீரராகவ முதலியார், அதாவது உன் தாத்தா வுக்கு இரண்டு பெண்கள். ஆண் வாரிசு கிடையாது. நான் மூத்தவள். இரண்டாவது பெண்தான் உன் சிற்றனை தங்கம்.

என்னை, உன் அப்பாவுக்கு ஏற்பாடு செய்தபோது வீரராகவ முதலியாருடைய மிட்டா சம்பந்தமாகப் பெரிய கேஸ் நடந்து தோற்றவிட்டது. கொஞ்சம் அவர் நொடித்துப் போயிருந் தார். ஆகவே, என் கலியாணத்தின்போது, அதிகமான சீர் செய்யவில்லை. ஆடம்பரம் அவ்வளவும் உன அப்பாவின் செலவிலேயே நடந்தது. விசாரத்தில் மூழ்கிய வீரராகவ முதலியார், கேஸ் தன் பக்கம் ஜெயித்திருந்தால், எனக்கு மாங்காய் மாலையும், மரகத மணியும், கல் இழைத்த ஒட்டியாணமும், காசு மாலையும் பூட்டி இருக்கலாம்; கச்சேரியும் காலட்சேபமும் வைத்திருக்கலாம் என்று கூறினார். ஒன்றும் செய்ய முடியாத நிலை. பெரிய குடும்பம். நல்ல பரம்பரை. ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட இடத்திலே சம்பந்தம் கிடைத்ததே ஒரு பெருமை என்று உன் அப்பா இருந்து விட்டார். அவருடைய குடும்பம் பரம்பரைப் பணக்காரக் குடும்பமல்ல. உன் அப்பாவின் திறமையால் சொத்துச் சேர்ந்தது.

என்னைக் கலியாணம் செய்துகொண்டதால், சந்தோஷமும் பெருமையும் அடைந்தார் உன் அப்பா. என்னை அன்பாகவே நடத்தினார். வீட்டை மிக அக்கறையாகக் கவனித்து வந்தார். பிறந்த இடத்திலே இருந்ததைவிட அதிக சந்தோஷமாகவே புகுந்த இடத்திலே வாழ்க்கை இருந்தது. சொத்துப் போனாலும் கவலையில்லை. எனக்குத் தங்கமான மருமகன் கிடைத்தான்; என் மகள் ரங்கம் அங்கு ராஜாத்திபோல் இருக்கிறாள். ஒரு குறையும் இல்லை. அவள் நிம்மதியாக வாழ்வதைக் கண்குளிரக் காண்கிறேன்; அதுவே போதும் எனக்கு என்று, என் அப்பா சொல்லுவார். நான் சில வருஷங்கள் மிகவும் சந்தோஷமாகக் காலங் கழித்தேன். கனவிலும் நான் எண்ணியதிலலை, என் கதி பிறகு இப்படி எல்லாம் மாறும் என்று சீமாட்டிபோலிருந்து வந்த நான் கேவலம் நாடோடியாகி, நாதியற்றவளாகி, குடிகாரனுக்குக் கூத்தியாகிப் பாழாவேன் என்று எண்ணியதில்லையடா அப்பா. எப்படி நான் எண்ண முடியும்? இப்போது அந்தக் காட்சி; நன்றாகக் கவனமிருக்கிறது. உன் அப்பா நாலைந்து வீடுகளுக்கு அப்பால் நடந்து வரும்போதே, எனக்கு ஜாடை தெரிந்து விடும்! அவருடைய கால் செருப்பு, ஒருவிதமான ‘கிறீச்’ என்ற சத்தம் கொடுக்கும். அந்தச் சத்தம் எனக்குச் சங்கீதம். அதைக் கேட்டதும் முகம் மலரும். துள்ளி எழுந்திருப்பேன். கண்ணாடி முன் நிற்பேன். குங்குமத்தைச் சரிபடுத்திக் கொள்வேன். வாசற்படியில் கால் வைக்கும்போதே அவர் வாஞ்சையுடன் ‘ரங்கம்!” என்று அழைப்பார். ஓடிப்போய், கால் கழுவச் செம்பில் நீர் தருவேன். அவர் கழுவி முடிப்பதற்குள் கை துடைக்கத் துணி தருவேன். துடைத்துக் கொண்டிருக்கும்போதே தலைவாழை இலையில் தண்ணீர் தெளிப்பேன். மணை போடுவேன். அவர் நெற்றியில் விபூதி தடவிக்கொண்டு, வந்து உட்காருவார் மனையில். ஒரு மணி நேரமாகும் சாப்பிட்டு முடிக்க, இடையிடையே அவ்வளவு வேடிக்கையாகப் பேசுவார்! மகனே! அந்த இன்ப வாழ்விலே ஈடுபட்டிருந்தபோது, இந்தக் கதி எனக்கு நேரிடும் என்று எப்படியடா, எண்ணம் பிறக்க முடியும்? குடும்பம் என்று இருந்தால், தர்மலிங்க முதலியார் வீட்டுக் குடும்பம் போலிருக்க வேண்டும் என்று கோட்டையூரில் பேசிக்கொள்வார்கள். எனக்கு மாமி, நாத்தி, மைத்துனர் யாரும் கிடையாது நானும் அவரும் தான். வேலைக்கு ஆள் உண்டு. ஆள் அடிக்கடி மாறுவதுண்டு.

தரகு மண்டி தர்மலிங்க முதலியார் என்றால் யாருக்கும் ஒரு பற்றுதல், மரியாதை, நம்பிக்கை. இதற்கு முக்கிய காரணம், அவருக்குப் பணத்தாசை கிடையாது என்பதுதான். நான்கூட மற்றவர்களைப்போலவே, உன் அப்பாவுக்குப் பணத்தாசை கிடையாது என்றே நினைத்தேன். அவ்வளவு திறமையாக உன் அப்பா நடித்து வந்தார். உள்ளமோ ஒரே ஆசைக்காடு. அது பிறகுதான் எனக்கே தெரியவந்தது. ஊராருக்கு இப்போதாவது தெரியுமோ என்னவோ.

நிம்மதியாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோது என் அப்பா, என் தங்கை தங்கத்துடன், தன் வீட்டில் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். கேஸ் தோற்ற பிறகு அவருக்கு ஊரிலே முன்பு இருந்ததைவிட மதிப்பு அதிகம். அது ஒரு விசித்திரந்தான். கேஸ் யார் பக்கம் ஜெயித்ததோ, அவர்கள் கடனாளியாகக் கஷ்டப்பட்டார்கள். அப்பாவுக்குச் சொந்தமான மிட்டா அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததே தவிர, கேஸிலே ஜெயிப்பதற்காக அவர்கள் படட அலுப்புத் தீரவில்லை. அப்பாவோ தன் கவலை வெளியே தெரிய ஒட்டாதபடி நடந்து கொண்டார். எப்போதும் போலச் சரிகைத் துப்பட்டதான், வெள்ளிப் பூண் போட்ட தடிதான், ஊர்ப் பெரியதனக்காரராகவே வாழ்ந்து வந்தார். இரண்டொரு ஏக்கர் நிலம் மிச்சமிருந்தது? அது மண் போட்டால் பொன் விளையும் பூமி என்பார்கள். அவ்வளவு நல்ல நிலம். அதிலே கிடைக்கும் வருமானமே ஜீவன ஆதாரம். இந்தக் கஷ்டத்துக்கிடையே தங்கம் கொடிபோல வளர்ந்து வந்தாள். அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாள். எனக்கு அவளிடம் அபாரமான ஆசை. அவளும் அப்படியே இருப்பாளென்று பைத்தியக்காரி நான் நினைத்தேன். அது தவறு என்பதைக் கண்டுபிடிக்க ரொம்ப நாளாயிற்று. வீட்டுக்கு வந்ததும், ‘அக்கா’ என்று ஆசை வழியக் கூப்பிடுவாள், ‘வாடி கண்ணே!’ என்று நான் அழைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவேன். என் கூடவே இருந்து சமையல் வேலையைக் கவனிப்பாள். பிறகு அவளுக்கு நான் தலை சீவி அலங்காரம் செய்து, என் நகைகளை அவளுக்குப் போட்டு அழகுபடுத்தி, அவர் வருகிறபோது அவளிடம் காபியோ, வெற்றிலைத் தட்டோ, எதையாவது கொடுத்து அனுப்புவேன். அவர் அவளைப் பார்த்ததும், “பலே தங்கமா! எவ்வளவு அழகடி ரங்கம் உன் தங்கை” என்று கூறுவார். “அக்கா! அத்தானைப் பாரேன், கேலி செய்கிறார்” என்று தங்கம் சொல்லுவாள். “என்னாங்க! நம்ப தங்கத்துக்கு இந்த நகை எல்லாம் போட்டா, எவ்வளவு அழகாக இருக்கு, பார்த்தீங்களா?” - நான் கேட்பேன். “அதுக்கென்ன சந்தேகம்! இப்ப என் தங்கத்துக்கு ஒரு தனவந்தன் புருஷனாகக் கிடைத்து விட்டா, வைரமாக இழைத்துவிடுகிறான். தங்கம் அதிர்ஷ்டக்காரிதான். பாரேன்” என்று அவர் சொல்லுவார். தங்கம் வீட்டுக்குப் போகும்போது, நகைகளைக் கழற்றி என்னிடம் கொடுப்பாள். கொடுக்கும்போது சொல்லுவாள்: “அக்கா! அத்தான் சொன்னாரே எனக்கு அதிர்ஷ்டம் என்று; அந்த அதிர்ஷ்டம், எனக்கு இப்படி என்றைக்காகவது ஒரு நாளைக்கு அட்டிகையும் செயினுமாகக் கொடுத்து உடனே மறுபடியும் திருப்பி வாங்கிக் கொள்ளுது, பார்த்தாயா?” என்பாள். எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கும் அதைக் கேட்க. “ஏண்டி கண்ணே! போட்டுக்கொண்டு தான் போயேன் வீட்டுக்கு” என்று நான் சொல்வேன். “போக்கா போ” என்று கூறிவிட்டுத் தங்கம் போய்விடுவாள்.

நகைகளைப் பூட்டி நான் அவளுடைய அழகைக் கண்டு ஆனந்தப்பட்டு வந்த சமயங்களிலெல்லாம், அவள் அசூயை கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. சிறு வயதிலேயே அவள் மனதில் பொறாமை அவ்வளவு குடியேறி விட்டது. வீட்டிலே தனக்குத் தரித்திரமும், எனக்கு என் புருஷன் வீட்டிலே தனபாக்கியமும் இருந்தது அவளுக்குப் பொறுக்க வில்லை. நாளாகவாக அவள் மெள்ள மெள்ளக் கேலி பேசும் பாவணையிலே தன் பொறாமையைக் கொட்டத் தொடங்கினாள். இந்தச் சமயத்திலேதான் வஅள் பருவமடைந்தாள். என் கண்களுக்கு ஒரு பெரிய விருந்தாக விளங்கினாள். அவளுக்கு நீராட்டின அன்று, நான் அடைந்த பெருமையும் பூரிப்பும் இவ்வளவு அவ்வளவு என்று கூறமுடியாது. என் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், அவளுக்குப் பூட்டி அழகுபடுத்த வேண்டுமென்று நான் ஆவலாகச் சென்றேன். அவளோ, ஒரேயடியாக அவைகளைப் போட மறுத்து விட்டாள். அப்பா, என் புருஷர், யார் சொல்லியும் கேட்கவில்லை.

“என்னடி தங்கம்! இன்று நல்ல நாள். இன்று சந்தோஷமாக இருக்கவேண்டும். நமக்கு இருக்கும் நகைகளைப் போட்டுக் கொண்டு மகிழ்வாக இருக்கவேண்டிய தினம். நீ ஏன் இன்று இப்படி முரட்டுப் பிடிவாதம் பேசுகிறாய்” என்று நான் கொஞ்சம் கோபத்தோடு கேட்டேன் அந்தப் பொறாமைக்காரி கொஞ்சங்கூடத் தயங்காமல் சொன்னாள், “அக்கா வேண்டா மென்றால் விட்டுவிடு. ஏன் என் உயிரை வாங்குகிறாய். எனக்கு நகைநட்டு வேண்டாம். இரவல் நகைகளைப் போட்டு மினுக்கிக் கொள்ள வேண்டுமா என்ன? சந்தோஷம் சந்தோஷம் என்று சொல்லுகிறாயே, யாருக்குச் சந்தோஷம், உனக்கா, எனக்கா? உன் நகைகளை எனக்குப் போட்டு, ஊரார் அதைப் பார்த்து, தங்கம் போட்டுக்கொண்டிருக்கும் நகைகளெல்லாம், ரங்கத்துடையது என்று கூறும்போது கேட்டு நீ சந்தோஷம் அடைகிறாய். அதற்குத்தானே இவ்வளவு தூரம் பேசுகிறாய். இதிலே எனக்கு எப்படிச் சந்தோஷம் இருக்கும்?” என்றாள். நான், கண்களில் நீர் ததும்ப நின்றேன். வயது பதினைந்துதான் பூர்த்தியாயிற்று தங்கத்துக்கு. அவள் மனதிலே இவ்வளவு பொறாமை நெளிவது கண்டு நான் திடுக்கிட்டுப் போனேன். நான் மேற்கொண்டு ஏதும் பேசவே இல்லை. ஒரு வார காலம், என் மனம் படாதபாடு பட்டது. பிறகு நானாகச் சமாதானப் படுத்திக் கொண்டேன். தங்கம் சிறுபெண், நகைநட்டு இல்லையே என்ற மனக் கஷ்டத்தால், ஏதோ உளறினாள். கிடக்கட்டும்; அவள் சுபாவம் அப்படி இருக்கிறது என்று. இருந்தாலும் தங்கம் என்னிடம் பொறாமை கொண்டிருக்கிறாள் என்பது விளக்க மாகத் தெரிந்துவிட்டது. வேதனை உண்டாயிற்ற. உன் அப்பா
விடம் இதைப்பற்றிப் பேசினேன். அவர், இது சர்வ சாதாரணம் என்று அலட்சியமாகச் சொல்லி விட்டார். எனக்கு இது அவ்வளவு அலட்சியமாகக் கருதக்கூடிய விஷயமாகத் தோன்றவில்லை. கவலையே இல்லாமலிருந்து வந்த என் மனதிலே ஒரு கவலை பிறந்துவிட்டது.

என் மனதிலேயும் தங்கத்திடம் அசூயை தோன்றிவிட்டது. அதற்கு முன்பெல்லாம், உன் அப்பா, என் வீட்டுப் பக்கம் போய் வராமல் ஒரு நாள் இருந்துவிட்டால், நான் அவரிடம் கோபிப்பது வாடிக்கை. “அது என்னங்க, அப்பாவும் தங்கமும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவரக் கூடாதா? நாலைந்து தெருவுக்கு அப்புறம் இருக்கிறார்கள். பத்து மைலா, எட்டு மைலா? வீட்டுக்கு வருகிறபோது ஒரு நடை அப்படியே போய் வரக்கூடாதா?” என்று கேட்பேன். அவர், கடையில் வேலை, கணக்கப்பிள்ளை வீட்டில் காரியம் என்று ஏதாவது சாக்குச் சொல்வார். அப்படிப்பட்ட நான், அவராக, ‘இன்று உன் அப்பாவைப் பார்த்தேன்’ என்று கூறும்போது ‘கடைவீதியிலா?’ என்று கேட்பேன். ‘இல்லை, வீட்டுக்குப் போயிருந்தேன்’ என்பார். உடனே எனக்கு முகம் ஒருவிதமாக மாறிவிடும். முதலிலே எனக்கு அந்தச் சுபாவம் பிடிக்கத்தான் இல்லை. ஆனால், அது வளருவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. ‘ரங்கம்! வெள்ளரிக்காய் என்றால் தங்கத்துக்கு இஷ்டமல்லவா? கிராமத்திலிருந்து நாளைக்கு ஒரு கூடை கொண்டுவரச் சொல்லி இருக்கிறேன். கொண்டு போய்க் கொடு தங்கத்துக்கு’ என்பார் உன் அப்பா. எனக்குத் திடீரென்று கோபம் வரும். காரணமின்றி நான் கோபித்துக் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக்கொள்வார். ‘தங்கத்துக்கு எது பிடிக்கும்?’, ‘என்ன தேவை’ என்பதிலே இவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? எனக்கு மாம்பழம் என்றால் உயிர், ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறேன். அது ஒரு அரை டஜன் வாங்கி வரக் காணோம் அவளுக்கு வெள்ளரி பிடிக்குமாம், ஒரு கூடை வருகிறதாம். இதை நான் சுமந்துகொண்டு போய். அவளுக்குத் தருவதாம்’ என்று எண்ணுவேன் கோபம் பொங்கும் மகனே! இந்தப் பொறாமை இருக்கிறதே, அதைப் போல வேகமாக பரவும் நெருப்பு வேறே கிடையாது. நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்கிறது. என் உள்ளத்தை அந்தத் தீ வேகவைத்தது. ‘வெள்ளரி வேண்டுமென்று தங்கம் கேட்டாளா?’ என்று நான் கேட்டேன். புருஷனை மனைவி கேட்பதைப் போல அல்ல, குற்றவாளியை அதிகாரி கேட்பதுபோல, அவர் சாதாரணமாகவே, ‘அவள் கேட்கவில்லை. நீதானே சொல்லுவாய், தங்கத்துக்கு வெள்ளரி என்றால் பிரியம் என்று’ என்று சொன்னார். என் கோபம் குறைவதற்குப் பதிலாக வளர்ந்தது. ‘அவள் ஏதோ வாய் திறந்து வெள்ளரி வேண்டுமென்று கேட்டாள்; ஆசைப்பட்டுக் கேட்ட பிறகு எப்படி வாங்கிக் கொடுக்காமல் இருப்பது என்று எண்ணி இவர் வெள்ளரி வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. அவள் கேட்கவே இல்லையாம். இவராக அவளுக்கு எந்த வஸ்து மேல் பிரியம் என்று யோசித்து நான் எப்போதோ சொன்னதைக் கவனம் வைத்திருந்து, வெள்ளரி தருவிக்கிறாறே, எவ்வளவு அக்கறை அவள் விஷயத்திலே? ஏன்?” என்று யோசிக்கிறேன் போக்கிரித்தனமும் கலந்தது ‘தங்கத்துக்கு எது எது இஷ்டம் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியிலே மும்முரமாக ஈடுபட்டுவிட்டீர்களோ?’ என்று கேலியாகக் கேட்டேன் ‘அத்தான் என்றிருந்தால் அந்த அக்கறை இராதோ?’ என்று அவர் பதில் கூறினார் அது என்னைச் சவுக்கால் அடித்தது போல இருந்தது கொஞ்ச நேரம் மரம் போல நின்றேன். பிறகு கேட்டேன். “ஆமாம்! நேற்றுப் போயிருந்தீர்களா வீட்டுக்கு” என்று. “இல்லையே, நாலு நாளாகிவிட்டது நான் போய்” என்று அவர் கூறினார். என் ஆத்திரம் கட்டுக்கு அடங்கவில்லை. “ஐயையோ! ஏன் பாவம் இவ்வளவு கஷ்டம்! இப்போதே ஓடிப்போய் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன் தலைகிலை வெடித்துவிடப் போகிறது” என்று சொல்லிவிட்டுச் சரேலெனச் சமையற்கட்டுக்குப் போனேன். அவர் கூடத்திலே சிரித்துக் கொண்டிருந்த சத்தம் என் காதிலே விழுந்தது நான் வற்றல் வறுப்பதற்காக, வாணலியில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்தேன். அடுப்பெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தேன். சடசடவெனச் சத்தம் கேட்டது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் அழுதுகொண்டிருந்தது. கொதிக்கும் எண்ணெயில் என் கண்ணீர் வீழ்ந்து அந்தச் சத்தம் உண்டாயிற்று. அதுவரையில் நான் அழுததில்லை, புருஷன் வீட்டிலே! அன்று அழ ஆரம்பித்தேன். அந்த அழுகை இன்னும் ஓயவில்லை; இனியும் ஓயாது.