அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆலையில்லா ஊரில். . .

போராட்டங்களைப்பற்றி அண்ணா
இந்திப் போராட்டம்
பெரியாரிடம் தி.மு.க. பற்றிய தவறான செய்திகள்.

தம்பி!

நீ மிகவும் பொல்லாதவன்! ஒரு பெரிய "போராட்டம்' உருவாகிக்கொண்டிருக்கும்போது சும்மா இருந்தாய் - சரி, ஒரு சமயம் திகைப்பினால் அவ்விதம் இருக்கிறாய் என்று எண்ணிக் கொள்வோம் - போராட்டம் முடிந்து, அதன் "பலாபலன்' பற்றிய கணக்குப் பார்க்கும் இந்தக் கட்டத்திலாவது, உன் கருத் துரையைக் கூறுவாய் என்று எண்ணினேன்-நீயோ அப்படி ஒரு போராட்டம் நடந்ததாகவே கவனிக்க மறுக்கிறாய் - மிகப் பொல்லாதவன்!!

உனக்குத் தெரியுமா? நாம் அந்தப் போராட்டத்திலே கலந்து கொள்ளாததால், நம்மைக் "கோழைகள்' என்று ஏசுகிறார்கள்!!

என்னடா தம்பி. சிரிக்கிறாய். இது என்ன புதிதா! கோழைகள் என்ற வார்த்தைகளைவிட மிகமிகக் கேவலமான, நஞ்சுகலந்த நிந்தனைகளை எல்லாம் கேட்டிருக்கிறோமே, இது எம்மாத்திரம், என்கிறாய் போலும்.

உண்மைதான், நமது கழகத் தோழர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள்!!

சிறு சொல் கேட்டுச்சீறும் கட்டம், கண்டனம் கேட்டுக் குமுறும் கட்டம், போய்விட்டது.

நாம் பதில் கூறவேண்டியது நமது நெஞ்சுக்குத்தான் நம்மை வஞ்சகர் என்று கூறிடும் போக்கினருக்கு அல்ல! உடலில் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய, நாம் நமது உடலைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அடுப்படியைத் தொட்டுப் பார்த்துமல்ல, ஐஸ் கட்டியைத் தொட்டுப் பார்த்துமல்ல.

கோழைகள்!! நாம்!!

தடியுடன் உள்ள போலீஸ்காரர்கள் சிரிப்பார்கள்!

சிறை அதிகாரிகள் சிரிப்பார்கள்!

நாம் பெற்ற தியாகத் தழும்புகளுக்கு முடியுமானால், அவை இடி இடியெனச்சிரித்து, அவர்களைப் பார்த்து ஏளனம் செய்யும்!!

தம்பி, காங்கிரஸ்காரர்கள் தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் கொளுத்துதல் போன்ற முறையில் ஆகஸ்ட்டுப் போராட்டம் நடத்தினர் 1942 இல்! நாம் கலந்து கொள்ள வில்லை. நாம் என்றால் தம்பி, நானும், நீயும் மட்டுமல்ல - தி.க., தி.மு.க. என்றுள்ள இரண்டும் ஒன்றாக இருந்ததே, அந்தக் குடும்பம் பூராவும். நாம் பயங்கொள்ளிகள், அடக்குமுறைக்குப் பயந்து ஓடிவிட்டோம், என்றா பொருள்! அந்த முறைகள் சரியல்ல என்று மனதாற நம்பினோம் - வீணான கலகம் கலவரம் குழப்பம் பொருட் சேதம், இவைதான் மிச்சம் என்று எண்ணினோம். எனவே ஒதுங்கி நின்றோம். அதுபோலத்தான் இப்போது, கொடி கொளுத்தும் காரியத்தில் தி.மு.க. கலந்து கொள்ளவில்லை - இது கோழைத்தனம் என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும்.

வேண்டுமானால், தமிழ்நாட்டு அரசியலில் இது வாடிக்கை - ஒருவர் மற்றவருடைய கருத்தை அறியும் அளவுக்குக்கூட பாசம் நேசம் கொள்ளாமல் ஒரு திட்டம் தீட்டிவிட்டு, அதன் காரணமாக அதிலே கலந்துகொள்ள மறுப்பவர்களைக் கோழைகள் என்று ஏசுவது தமிழகத்தின் வாடிக்கை, என்று கொள்ளவேண்டியதுதான்! தங்கள் ஆகஸ்டில் சேராததற்காகக் காங்கிரஸ்காரர்கள் திராவிடரைக் கோழைகள் என்று ஏசினர்! இப்போது நடைபெறும் கிளர்ச்சிகளில் கொடி கொளுத்துவதில் மட்டுமல்ல, எந்தப் போராட்டத்திலாயினும் சரி, நாம் சேராமலிருந்தால், கோழைகள் என்று ஏசுகிறார்கள்! இது பொருளுள்ளது என்று கருத முடியுமா? நீண்ட காலமாக இருந்துவரும் வாடிக்கை - பழக்கம் என்றுதான் கொள்ள வேண்டும்.

நமக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. நாம் கூடிக் கலந்து பேசிச் சில பல கிளர்ச்சிகள் நடத்தியுமிருக்கிறோம். இனியும் நடத்துவதற்கான முயற்சி இருந்துவருகிறது. இதை எல்லாம் கவனிக்காமல், அவரவர்கள் துவக்கும் கிளர்ச்சிகளில் நாம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறுவதும், கலந்து கொள்ளாத போது கண்டிப்பதும், ஏன் என்று யோசித்ததுண்டா தம்பி! நாம், அவ்வளவு அருமையாகப் பணியாற்ற கூடிய பக்குவம், பயிற்சி, திறம் படைத்தவர்கள் என்ற எண்ணம், எல்லா முகாமிலும் இருக்கிறது-எனவே எல்லோர் கண்ணும் நம்மீது விழுகிறது என்று பொருள்!

ஆமாம். தம்பி, எவ்வளவு கடுமையான கிளர்ச்சிக்கும் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் என்பதை மும்முனைப் போர் நன்றாக எடுத்துக் காட்டிவிட்டது - எனவேதான், யார் எத்தகைய போராட்டம் துவக்கினாலும், நாம் வரவேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் - ஆவல் அதிகமாகி, அது நிறைவேறாதபோது கோபம் அதிகமாகிறது - கண்டனம் வீசுகிறார்கள்! வேறென்ன!

பிறர் மனம் மகிழும்படி நடந்துகொள்வது நல்லதுதான் - பண்புகூடத்தான் அது - ஆனால் தன்மானம் என்ற ஒன்றும் இருக்கிறதே, ஒரு அமைப்பின் தன்மானம், அது அழைக்கப் பட்டது. அதைக் கலந்து திட்டம் தீட்டப்பட்டது என்று நிலைமை இருந்தாலல்லவா நிலைக்கும். தழைக்கும்!

போர் முடிந்துவிட்டது! பலாபலன் தெரிந்துவிட்டது!! என்ன காண்கிறோம் தம்பி. காமராஜரின் அறிக்கை!!

யூனியன் பார்லிமெண்டு சபாநாயகர், மாவ்லங்கர் இந்தி கட்டாயத்தின் மூலம் நுழைக்கப்படாது என்ற சேலத்தில் மே 31-இல் பேசி இருக்கிறார், (மெயில்-ஜூன் 1)

இந்தியைத் திணிக்கவில்லை - திணிக்கமாட்டோம். இந்தி படிக்கும்படி தூண்டுகிறோமே தவிர, கட்டாயப்படுத்தவில்லை என்பதாக யூனியன் தொழிலாளர் மந்திரி கந்துபாய் தேசாய் மே 28-இல் திருச்சூரில் தெரிவித்திருக்கிறார். (மே29-மெயில்)

உத்தியோகத்தை நாடுபவர்களுக்குத் தொல்லை வராத படிதான் இந்தியைப் பக்குவமாகப் பரப்புவோம், என்று யூனியன்டிப்டி போலீஸ் மந்திரி தத்தார் தெரிவிப்பு, மே - 4, மெயி-ல் காணக்கிடக்கிறது.

இந்தியை மக்கள்மீது கட்டாயப்படுத்தித் திணிக்கும் பிரச்சினைக்கே இடமில்லை என்று மே 11-இல், பூரியில், யூனியன் மந்திரி கேஸ்கர் தெரிவித்திருப்பது, இந்துவில் வெளிவந்திருக்கிறது.

இந்தியைத் திணிக்கமாட்டோம் கட்டாயப்படுத்த மாட்டோம் - தமிழ்நாட்டு மக்கள் தாமாக இந்தியில் பயிற்சி பெற்று வருகிறவரையில் காத்துக்கொண்டிருப்பேன் - என்பதாக, யூனியன் மந்திரி கேஸ்கர் மதுரையில் ஜூலை-6 இல் பேசியிருக்கிறார். இந்தத் தெரிவிப்பு மெயிலில் வெளியாகி இருக்கிறது.

தென் இந்தியாமீது இந்தியைத் திணிப்பது சர்க்கார் நோக்கமல்ல என்று குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், ஹைதராபாத்தில், ஜூலையில்தான் பேசியிருக்கிறார்.

நேரு பண்டிதர், பல தடவைகளில் இந்தி வெறியர்களின் போக்கைக் கண்டித்திருக்கிறார்.

எந்த மொழியும் சொந்த மொழிக்கு ஈடாகாது என்று பலமுறை பண்டிதர் பேசி இருக்கிறார்.

வடநாட்டிலேயே, பல தலைவர்கள் வங்கம் - மராட்டியம் - கலிங்கம் - பாஞ்சாலம் - ஆகிய பகுதியினர், இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினர்.

மொழி அல்லது கல்வி சம்பந்தமான விழாக்கள் நடை பெறும்போதெல்லாம், இந்தி திணிக்கப்படமாட்டாது என்று டில்லி தர்பாரினரே பேசுகிறார்கள்; இனியும் பேசப் போகிறார்கள்.

தாலமுத்து நடராசன் உயிர் குடித்ததோடு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்டாய இந்தி மடிந்தது என்று திட்டவட்டமாகக் கொள்ளலாம்.

மத்திய சர்க்காரின் நிலையைப் பல தடவைகளில் இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்திவிட்டனர் - "ராஜ்ய சர்க்காருக்கு யுக்தம் போல்' நடந்துகொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது.

எனவேதான், ஆந்திரத்தில், ராஜ்ய சர்க்கார் இந்தியைக் கட்டாய பாடமாக்கிட முடிந்தது; சென்னை இராஜ்யத்தில். இந்தி கட்டாய பாடம் என் ஆக்கவில்லை என்று ஆந்திராவைச் சுட்டிக் காட்டி, மத்திய சர்க்கார் கேட்கவில்லை.

"கட்டாய இந்தி' மத்திய சர்க்காரின் திட்டமாகவும் இன்று இல்லை; சென்னை ராஜ்யமும் அதைத் திட்டமாகக் கொள்ளவில்லை - அது போன்ற நோக்கமோ முயற்சியோ இல்லை.

இந்த நிலையில், இந்தியைக் கட்டாய பாடமாக்குவ தில்லை, திணிப்பதில்லை என்று வாக்குறுதி ஏன் நமக்கு?

எனவே, இப்போது கொடி கொளுத்துவதாகக் கூறி ஓர் போர்ச் சூழ்நிலையை உருவாக்கி, அதனைக் காட்டி, காமராஜர் அறிக்கை என்ற "வரம்' பெற்றதாகக் கருதிப் பூரிப்படைய நமக்கு மனம் இடந்தரவில்லை - அது பெரியாருக்குப் பெருமை தருவது என்று கூறி, அவருடைய பெருமையைக் குறைத்திடவும் விருப்பம் எழவில்லை - அந்தக் காரியத்தை அவருடைய இன்றைய நண்பர்கள், ஒத்துழைப்பாளர்கள், திறம்படச் செய்து வருகிறார்கள் - அந்தச் சிரமத்துக்காகப் பணமும் பெறுகிறார்கள்!!

அந்த நண்பர்கள், பெரியாரிடம். தி.மு.க. பற்றி, மிக மிகத் தவறான கணக்குகளைத் தருகிறார்கள் - உண்மையை மறைக்கிறார்கள்.

அவர்களின் கணக்குப்படி, திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு அரை டஜன் சிறுவர்கள் கொண்டது!!

இராயபுரத்தில் எங்கோ ஒரு இடத்தில் கிடப்பது!

அது, கரைந்து கலைந்து, குலைந்து, நலிந்து மெலிந்து, மாண்டுபோகும் என்று "நல்வாக்கு' கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள் - ஆறு ஆண்டுகளாக !!

அதிலிருந்து, அவர் விலகினார், இவர் விலகப் போகிறார் என்று கரடி விட்டு, பெரியாரைக் களிப்படையச் செய்கிறார்கள்.

"அதுகளுக்குச் செல்வாக்கே இல்லை! என்கிறீர்களே, மாநாடு நடத்துகிறார்கள், ஆயிரம் பத்தாயிரம் என்று மிச்சம் காட்டுகிறார்களே, எப்படி முடிகிறது?' என்று பெரியார் கேட்கிறார் அத்துடன் விடுகிறாரா, நீங்களும் பிரமாதமாக என்னிடம் நம்பிக்கை ஊட்டிவிட்டு, மாநாடு போடுகிறீர்கள். மிச்சம் என்ன என்றால், சொச்சம் தரவேண்டி இருக்கிறதுஎன்கிறீர்கள், பந்தல்காரனுக்கும் பாண்டு வாத்தியக்காரனுக்கும்! என்று கேட்கிறார். என்ன செய்வார்கள், என்ன சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள்.

"அது. . . அவர்கள் சினிமாக்காரரை, நாடகக்காரரைக் காட்டிப் பணம் திரட்டுகிறார்கள். . . அதனாலேதான் . . . . ' என்று இழுத்துப் பேசுகிறார்கள் - அவர் அவர்களைக் கோபத்துடன் பார்த்துவிட்டுக் கனைத்துக் காட்டுகிறார் - பொருள் உண்டு அதற்கு, நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் குதிரை மீதமர்ந்தல்லவா, மாநாடுகளின் ஊர்வலம் நடக்கிறது - அது அவருக்குத் தெரியாதா - சினிமாக்காரர் கலந்து கொள் வதால், தி.மு.க. ஜொலிக்கிறது என்றால், சினிமாக்காரர்களே கண்டு பாராட்டும் நடிகவேள் இருக்கும் இடத்துக்கு அல்லவா, ஆதரவு பெருகி வழிய வேண்டும்!

இதுபோலவே, ஒவ்வோர் உண்மையும் அவரிடமிருந்து மறைக்கப்படுகிறது.

ஜனவரியோடு ஒழிந்துவிடுவார்கள்! மார்ச் வந்தால் மாண்டுபோவார்கள். ஜூனில் ஜன்னி பிறந்துவிடும் - ஜூலையில் ஒழிந்துபோவார்கள் - ஆகஸ்ட்டு அவர்களை அழித்தே போடும்- என்று சூனியக்காரன், கோழி முட்டைக்கு மஞ்சள் குங்குமம் தடவி, எதையோ முணுமுணுத்துவிட்டு, இதைக் கொண்டுபோய் மாட்டுக் கொட்டிலில் மூன்றடி ஆழக் குழியில் புதைத்துவிட்டு வந்துவிடுகிறேன், மூன்று மணி நேரத்தில் அவன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கக்கி இறந்துபடுவான் பாருங்கள் என்று கூறிவிட்டு, கூலியை வாங்கி முடிபோட்டுக் கொண்டு சாராயத்தை வெறி ஏறும் அளவுக்குக் குடித்துவிட்டுப் போகும் கதைபோல, இதோ ஏழு கட்டுரை, மூன்று பிரசங்கம் இவைகளாலேயே ஒழித்துக் கட்டிவிடுகிறேன் பாரும் என்று பெரியாரிடம் பேசி, அவரை நம்பச் சொல்கிறார்கள்.

ஒவ்வோர் ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்களின் பெயரைக் கூறி, "அவர் நமது கழகம் - தங்களிடம் நிரம்பப் பக்தி - வெளிப்படையாக வரமாட்டார், ஆனால் மனதுக்குள்ளே, நிரம்பக் கொள்கைப் பற்று - நெற்றியிலே குங்குமப் பொட்டு இருக்கும், ஆனால், குடி அரசு படிக்காவிட்டால் தூக்கம் வராது-'' என்று பெரியாரிடமும் புளுகி வைக்கிறார்கள்.

அந்த ஊரில், எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - அந்தப் பயல்களுக்கு? - என்று பெரியார் கேட்கிறார். உடனே அவர்களுக்கு ஒரு ஆள்கூடக் கிடையாது என்று கூறிவைக்கிறார்கள்

வடநாட்டுக் கடைகளை மறியல் செய்வோம் - அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள், உடனே, வடநாட்டுக் கடைக் காரனை விட்டுவிட்டு, அவர்கள்மீது பாய்வோம், ஒழித்துக் கட்டிவிடலாம், 9 கட்டுரை போதும் என்று கூறுகிறார்கள். 99 கட்டுரைகள் தீட்டுகிறார்கள், ஒழிவதாகக் காணோம் - ஓய்ந்தால் தேய்ந்தோம் என்ற அச்சத்தில் மேலும் சில கட்டுரைகள் தீட்டி, அவர்களை ஒழிக்கப் பயன்படாவிட்டாலும், நமக்கு எழுதும் பழக்கம் வளரட்டும் என்ற அளவில் திருப்தி அடைந்து இவ்வளவு எழுதும் எனக்கு இன்னும் ஓர் இருபது என்று பெரியாரிடம் சென்று இளிக்கிறார்கள்!

இவைகளைப் பெரியார் அறியாமலில்லை!

ஆனால் என்ன செய்வது? ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ, சர்க்கரை என்பார்களே! அதுதான்! தெரிகிறதா, தம்பி!!

அன்புள்ள,

14-8-1955