அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆலிங்கனமும் - அழிவும்!
1

ஆலிங்கனமும் -
அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் -
காங்கிரசில் முதலாளிகள்

தம்பி!

"இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்'' என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க,

"இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேரு கிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!'' என்று தாமாக, வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கொண்டிருக்க,

"அடுக்குமொழிபேசி, ஆளைமயக்கி, ஆகாத திட்ட மெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்பு வாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப் போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே; தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைச் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!'' என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட,

"அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், "பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச் சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது? என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட,

நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்!

கோட்டை! அகழ் - அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.

இந்தக் "கோட்டை'யை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு,

பாருக்குள்ளே நல்ல நாடு
எமது பாரதத் திருநாடு

என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று,

கோட்டையும்
கொத்தளமும்
கோலும் கொடிமரமும்

எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர்.

இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன், கொக்கரித்தானல்லவா!

இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்!

இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் - காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் - கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் - எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, "வந்தே மாதரம்' எனும் "கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது!

அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் - உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!

தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் "கோட்டை'யிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன்.

அவனே, "எதிர்காலம்' இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான் என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், "எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும்.

குற்றம் அவர்கள்மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்துபட்டனர்!

"கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்!

பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் - ஒரு மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று... ...!! - என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன்.

வாழ்த்தொலி! ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன - எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிட!!

இந்தப் "பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா... என்ற அலட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர்.

கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று பேசினோம் - நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று, ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு, ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம்.

மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது.

அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் - என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன!

அந்த "நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 - 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று - இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த "ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் - இந்தக் கட்டம் வரையில், வளர முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே, நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன்.

இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் - அவர் களுக்குப் புரியாது; இந்தக் "கட்டம்' வந்தடைவதற்கு முன்பு, நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு "மகாத்மாவின்' "மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமானமூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!!

கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க் குடி கெடுத்துக் கொண்டே, "உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரை களை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேசுகிறதுகளாம்' என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப் பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல, இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் - மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!

அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர்.

அவர்களுக்கு, அவர்களுடைய "முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம் - வியாபாரம் - முதலியன!!

அவர்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தார்கள் - "ராஜோப சாரம்' பெற்று வளர்ந்தார்கள்!!

அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், "சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள்.

இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும். "மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கலக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய "சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் - சுவைக்கத் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!!

நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு "வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் - வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது "வாழ்க!' என்றனர். பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது!

இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் - காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம் இடம் தரவில்லையே, என் செய்ய!

அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்ய!

இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S.இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!

நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் கதரணிந்து, காமராஜரைக் கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு, ஆளுங்கட்சியினரின் பகுதியில் அமருகிறார் - இதோ நான், அந்த நெடும்பலத்தாருடைய அரசியல் நடவடிக்கைகளிலே நேசத் தொடர்புகொண்டு காங்கிரசை எதிர்த்து வருபவன்!

தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசின் வலிவு முழுதும் திரட்டி, நெடும்பலத்தாரைத் தாக்கினர்.

தேர்தலில் தோற்றாலும் தோற்பேனேயன்றி, என் உள்ளத்துக்கு ஒத்துவராத கொள்கையை, உடன்பாடு உடையதுதான் என்று தலையாட்டிவிட்டு, தப்பிப் பிழைக்க விரும்பவில்லை- என்று துணிவுடன் கூறினவர் - தொல்லை பலவற்றினுக்கு ஆளானவர் - ஆனால் தலை இறக்கம் கூடாது என்று இறுதி வரையில் வீரமாகவே இருந்தவர்!

இதோ, அவர் மகன் அமர்ந்திருக்கிறார் - ஆற்றல்மிக்க அவர் தந்தையால் சாதித்துக் கொள்ள முடியாததை, மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார், என்றா என்னை வாழ்த்தச் சொல்லுகிறாய்.

எதிர்ப்புக்கு அஞ்சாத அந்த அடலேறு, வீழ்த்துபட்டதி லேயும் ஓர் வீரம் காணக்கிடந்தது! எங்ஙனம் அதனை மறந்திடச் சொல்லுகிறாய்! எக்காரணம் காட்டி, N.S. இராமலிங்கனாரைக் காங்கிரஸ்காரர் என்று கூறச் சொல்லுவாய்!

காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டவர் - அவ்வளவுதான் கூறலாம்!!

இவர் போன்றார்தானே பெரும்பகுதி - அந்த 150ல்!!

நான் சிறுவனாக இருந்தபோது, கடைவீதியில், "கலர்' சாப்பிடச் சென்றேன் ஒரு தடவை. அந்தக் கடையில் இரு பக்கங்களிலும், அழகழகான கலர் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்றைக்காட்டி, "அது கொடு' என்றேன், கடைக்காரர் சிரித்துக் கொண்டே, "தம்பி! அது, சும்மா அழகுக்காக கலர் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறது - சாப்பிட அல்ல' என்று கூறிவிட்டு, உள்ளே இருந்து ஒரு கலர் கொண்டு வந்து கொடுத்தார்.

காமராஜரின் முறையும் அதுவாகவே இருக்கிறது!

காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்!