அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அடித்தாலும், அணைத்தாலும்....!

காமராஜரும் பெரியாரும் -
பெரியாரின் அரசியல் விளக்கம் நேருவும் திலகரும்.

தம்பி!

அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும்
பாசமது அறிந்துருகும்
என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால்
மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த
பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த
மொழிகேட்டு இன்புற்று,
மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே!
நின் நோக்கம் அறிந்தேனன்றோ!
மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ?
இது அறமோ? என்றே கேட்பர்
கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ!
உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன்
ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன்,
காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி
கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்;
கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே!
பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ?
தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்
துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான்,
பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே
பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்;
அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ!
அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ!
அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா?
அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ?
அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி
ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ?
ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ!
அறியாது போனதுமேன், அறிவற்றோனே!
அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்!
அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்!

பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச் சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி. அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு, சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப் பட்டது; பதிகம் தரப்படவில்லை.

மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது! சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப் பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்!

பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டிய துண்டு. இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது - வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.

பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது.

அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில்.

பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி.

அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே!

அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே.

அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர்.

அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்?

ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப் போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.

பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.

சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ?

அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும் ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற் கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்ப தாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக் கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா தீர்மானித்துக் கொள்வது.

வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது, நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம் பணியாற்றுகிறோம்.

காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத் தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார்.

வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்; காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில், நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள வேண்டும்.

"அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற அளவுக்கா செல்வது!

கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல வேண்டும்.

கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது! தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால், மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும், அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய், இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன், அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம் கொண்டவர்கள்!

காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர்.

காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர்.

நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர் என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று.

எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக என்னால் உணர முடியவில்லை.

பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா, அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன் வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர் என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக் கூறமுற்பட்டேன்.

பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை,

திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்?

அது அவர் கடமை!

திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க மறுக்கிறாரே, அது ஏன்?

அது அவர் நிலைமை!

இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்க வில்லையே அது ஏன்?

அது அவர் காட்டும் பொறுமை

தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச் செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு, வாளா இருக்கிறாரே, அது ஏன்?

அது அவருடைய நிலைமை!

சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும் பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர், அது ஏன்?

அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை

இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர் என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம் இருக்கிறதே, அது ஏன்?

அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!

காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும் பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக் கொஞ்சுகிறாரே, அது ஏன்?

அது அவருடைய ராஜதந்திரம்!

ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன், என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டு கிறாரே, அது ஏன்?

அது அவருக்கு மாமந்திரம்

இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும், செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம் கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி, பதிகத்தைப் படி!

இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை எழுதுகிறேன்.

அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், "பாசவலை' வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால் சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப் பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம் நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக் காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது.

திலகர் எனது மாபெருந் தலைவர்!

சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண ஓடியிருக்கிறேன்!

நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர்.

அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத்செலுத்துகிறேன்.

நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது போலப் பேசினார் இலண்டனில்.

திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார்.

நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல.

அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை!

அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை!

புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.

அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில், இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி, தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார்.

அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சசெலுத்துகிற ôர் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர் எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர்.

மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை, நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன் பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம் உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்!

மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று இருந்துவிடவில்லை.

"பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும் - அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள்.

நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள்.

பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க மிடுகிறார்கள்.

நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம் காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப் பாசவலை விரிக்கிறார்கள்.

பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும் என்றுதான் மராட்டியம் கூறுகிறது.

அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று அரசியலில் பதிகம் பாடவில்லை.

நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல.

திலகரின் பேரனுக்கு இல்லக்கிழத்தியாகியுள்ள அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார்.

திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப் படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச் செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர் மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும் கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும் பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம் கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க வேண்டும் - பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும், டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும் திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே, பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார் புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர் என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல் புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும் அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத் தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார்.

அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர் திருவிளக்கு!

அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம்.

நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின் உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர் என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும், எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள் மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர் நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர் அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும் இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின் பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது.

"திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின் பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம் செய்தனர்.''
(சு. மித்திரன்)

பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம் வெளியே தெரியாதவண்ணம் பாவனைகாட்ட மெத்தச் சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது தெரியுமல்லவா!

பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து, பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித நேருவுக்கு ஜே! என்று அல்ல!

கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக் கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர் ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை.

இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி.

இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார்.

பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, "பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம்.

இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது.

இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.

இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய கடமையைச் செய்கிறார்.

நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறிந்து விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்; அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது.

இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப் பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது மட்டும் "தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப் போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை! உனக்குப் புரிகிறதா?

ஏன்? என்ற கேட்டாலோ,
ராஜரத்தினம்
அப்பாதுரை
சுந்தரவடிவேலு

என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம் உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள்.

இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும் வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம் கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும், காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும் பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத் தோன்றவில்லை.

இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார் என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர் தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம் பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய "பெயர்' காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு "அரசியல் கூட்டு' விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய,
வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது
இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது
தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது

போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது.

தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை.

தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க "இந்தப் பசங்கள்' கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது.

உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர்.

நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர்.

சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது.

நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை

பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது.

எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள்.

அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும்.

உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன்.

அன்பன்,

காஞ்சிபுரம்
5-8-1956