அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறச்சாலை
1

தி. மு. க. மீது தாக்குதல் -
காட்கில்லின் "மராட்டியர்' உணர்ச்சி-
தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும்.

தம்பி,

சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை!

ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் "மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம் பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற "கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்' திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள், நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளை யிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல - அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன் - என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா....

தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை "திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண!

காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே கக்குகிறார், செல்லுமிடமெல்லாம்.

கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார்.

காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது - எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்!

பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான "சேவை' செய்ய முடிகிறது அவரால்!!

அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான "சாடி' கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார்.

ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, "பக்கத்துக்குப் பக்கம்', முதலமைச்சரின் "அடாணா' வாகவே இருக்கிறது!

தி. மு. க. மீது கண்டனம்
தி. மு. க.வுக்கு எச்சரிக்கை
தி. மு. க. ஒரு குழப்பக் கட்சி
தி. மு. க.வை ஒழித்துக்கட்ட வேண்டும்.

என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் - காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது "தாக்குதலை' நடத்திய வண்ணம் இருக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது.

எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப் படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது.

ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்!

அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை!

அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக!

என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம்.

அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி!

அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்!

வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்!

பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், "பழுத்த ஓலை' ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது.

எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை!

குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது.

சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் "இருப்பு'க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும்

மகளே,....
அம்மா,....
வாடி, என் அருமை மகளே!
வந்தேன் அம்மா, இதோ.

புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி.

தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த "மாதரசி' மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள்.

மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம்.

காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை.

சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்!

ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் - என்று தாய், தலையி லடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது.

"அம்மா!'' என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது.

"மகளே!'' என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது.

சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்!

மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்!

ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது!

பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை - என்று தாய் கூற - என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம்.

காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்!

அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்!

காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்!

தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதறிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார்.

மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது, இக் காட்சியினைக் காணத் தருகிறது.

காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, அறப்போர் நடத்திச் சிறைப்பட்டுள்ளனர்.

மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்!

எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்!

மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்!

கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா?

காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர்.

கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில்.

காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் - ஆற்றல் மிக்கவர்.

அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர்.

மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர்.

ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர்.

இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும்.

வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம்- எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர்.

ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது.

காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச் சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் - காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் - குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் - காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந் தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்!

அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார்.

அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள்.

காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி!

இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம்.

மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்!

அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஒர் மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை!

வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, - அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார். அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ?- என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா?

தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் - இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை "உள்ளே' அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது.

மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை - மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள்.

காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா? சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென்றாலும் துயரமில்லையாம்!

இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது.

சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது.

அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் - அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! - என்று அவரால் பேச முடிகிறது.

வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம்.