அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அரிமா நோக்கு!

தூய்மையும் தூற்றலும் -
சுதந்திரம் பெற்ற நாடுகள்-
திராவிட நாடு.

தம்பி,

ஒரு கருத்தளிக்கும் காட்சி காண அழைக்கிறேன் - பல நூற்றாண்டுகட்கு முன்பு நடைபெற்றதோர் காட்சி. எனினும் இன்றும் எனக்கும் உனக்கும், ஏன், கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்போது என்ன கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், எத்துணை மன எரிச்சலூட்டப் பட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரத்தக்கதோர் கருத்தளிக்கும் காட்சி.

பொன்னிற மேனியன், அருளொழுகும் கண்ணினன், சித்தார்த்தனாகப் பிறந்து புத்தனான பெரியோன், அமைதியாக நிற்கிறார் - எதிரே, உலகமே என் கால் தூசுக்குச் சமம் என்று கூறுமளவு ஆணவம் கக்கும் கண்கள் கொண்ட வேத மார்க்கத்தவனொருவன், ஆத்திரத்துடன் நின்றுகொண்டிருக்கிறான்.

வேத மார்க்கம் அழிந்துபட்டுக்கொண்டு வந்த காலம் அது. கபில வஸ்துவிலிருந்து கிளம்பிய கருத்துக் கதிர், இருட்டறிவை விரட்டி அடித்துக்கொண்டிருந்த வேளை. வேள்விகள் வீண் ஆரவாரம், வேத ஒலி வெற்றுரை, சடங்குகள் சத்தற்றவை என்ற எண்ணம், மக்களிடம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட காலம், இந்த மாறுதலுக்குக் காரணமாக இருந்த புத்தர், அவர் எதிரே இந்த மாறுதலின் காரணமாக மதிப்பிழந்த மமதைக்காரன். புத்தருடைய உள்ளத்திலே ஓர் உக்கிரமான புயல் கிளம்பும், கடுஞ்சொற்களை அவர் அள்ளி வீசுவார், உடனே காகூவெனக் கலாம் விளைவிக்கலாம் என்பது அக் கபடனின் கருத்து. அக் கசடன் எண்ணியபடியா புத்தர் இருப்பார்! அதற்கா அவர் புத்தர் ஆனார்!

"அன்பரே! ஒன்று கேட்கிறேன். ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்பாக ஒரு பொருளை அளிக்கிறார். ஆனால் மற்றவரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். அப்போது அந்தப் பொருள் யாருக்கு உரியது?'' என்று புத்தர் கேட்டார்.

வேத மார்க்கத்தவனுக்கு இந்தக் கேள்வியே வேடிக்கையாகப் பட்டது. வேதத்தின் உட்பொருள்பற்றிய கேள்விகள் உபநிஷத்திலே சில சந்தேகங்கள், இப்படி ஏதேனும் கேள்வி கேட்கக்கூடாதா - என் பாண்டித்தியத்தைக் காட்டி இருப்பேனே! இந்தப் புத்தர், சிறுவர்களுக்கும் எளிதில் விளங்கும் விஷயமாக ஒரு கேள்வி கேட்கிறாரே! சேச்சே! என்ன கேவலம் இது - என்று எண்ணிக்கொண்டு அலட்சியமாக

"ஒருவர் தந்த பொருளை மற்றவர் வேண்டாம் என்று கூறிவிட்டால், அப்பொருளை அளிக்க முற்பட்டவருக்கே அந்தப் பொருள் உரிமையாகும்'' என்று பதிலளித்தான்.

"சரி இப்போது நீர் எனக்கு அளித்த வசைமொழிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதை நீரே வைத்துக் கொள்ளும்'' என்றார் புத்தர். வேத மார்க்கத்தவன் திகைத்துப் போனான் - வெட்கமுமடைந்தான் - ஏனெனில் தந்த பொருளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், தந்தவருக்கே அப்பொருள் மீண்டும் வந்து சேர்ந்துவிடும் என்ற தத்துவத்தின்படி, புத்தர்மீது புரோகித மார்க்கத்தான் பூட்டிய வசை மொழிகள் அத்துணையும் திரும்ப அவனிடமே அல்லவா வந்துவிடுகின்றன! அந்த வசை மொழிகளுக்கு அவனே அல்லவா உரிமையுள்ளவனாகி விடுகிறான். எவ்வளவு கேவலமான வசைமொழிகளை வீசினான்.

கெடுமதியாளன்
மதத் துரோகி
வேத நிந்தகன்
நாத்திகன்
நாசமாய்ப்போவான்
நரகம் சேர்வான்

அவன் வீசிய வசைமொழிகளிலே, இவை தரத்தில் சிறிதளவு உயர்ந்தவை! இவையும் இவற்றினைவிட மட்டமான இழி மொழிகள் அத்தனையும், புத்தர் திருப்பி அல்லவா தந்துவிட்டார்! யாரிடமிருந்து கிளம்பினவோ, அவனிடமே அல்லவா அவை வந்து சேர்ந்துவிட்டன! வெட்கப்பட்டான் -- அது மட்டுமல்ல - புத்தருடைய பேரறிவு, அவன் மனதை வென்று விட்டது. எத்துணை அடக்கம்? என்ன விநயம்? எவ்வளவு திறம்பட என் கேவலத் தன்மையை நானே உணரும்படிச் செய்துவிட்டார்! இவர் உத்தமர், ஐயமில்லை! உயர்ந்தோர், அட்டியில்லை! புத்தர் இவரே, புவி எங்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றெல்லாம் அவன் உள்ளம் எண்ணிற்று.

தம்பி! அடிக்கடி என்னிடம் நீ மல்லுக்கு நிற்கிறாய் - மாற்றார்கள்-உற்றார்களாக இருக்கவேண்டியவர்கள் கூட - தம் மனம்போன போக்கிலே நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள் - பழிச்சொற்களை வீசுகிறார்கள்-இழிவாகப் பேசுகிறார்கள் - கேட்கச் சகிக்கவில்லை - வேதனையாகவும் இருக்கிறது - ஏன் நாம் பதிலளிக்கக்கூடாது - ஏன் நாம் அவர்களின் குட்டுகளை உடைத்திடத் தயங்க வேண்டும் - அவர்களிடம் உள்ள கொள்கைக் குழப்பங்களையும் முரண்பாடுகளையும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கேவலப் போக்கினையும், சொல் வேறு செயல் வேறாக இருக்கும் தன்மையினையும் ஏன் அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்கிறாய் அல்லவா! எனக்கு, நான் இப்போது உனக்குக் காட்டினேனே காட்சி, இதிலே உள்ள கருத்துத்தான், வேதனை பிறக்கும்போதெல்லாம் துணை நிற்கிறது.

நமது உள்ளத்தில் தூய்மை இருந்தால், தூற்றல்பற்றி நமக்கென்ன கவலை - அது நம்மை என்ன செய்துவிடும்?

தம்பி! தூற்றல் நம்மை என்ன செய்துவிட்டது? நம்முடைய எந்த முயற்சியைக் குலைத்துவிட்டது? எந்த வேலையைக் கெடுத்துவிட்டது? எந்தத் திட்டம் பட்டுப்போயிற்று? வளர்ச்சி பாழ்பட்டதா-கவர்ச்சி கெட்டொழிந்ததா? தூற்றுவோர் தூற்றித் தூற்றி, தமது தூற்றல் ஆற்றலற்றுப் போவது கண்டு மனம்புழுங்கி மேலும் தூற்றிக்கொண்டே காலம் கடத்தி வருகிறார்களே தவிர, இந்தத் தூற்றலின் காரணமாக, நாடு, நம்மிடம் காட்டவேண்டிய நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டதா? ஆதரவும் அன்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதைத்தான் காண்கிறோமே தவிர, பரிவும் பாசமும் வளரத்தான் காண்கிறோமே ஒழிய, நமக்கு என்ன குந்தகம் ஏற்பட்டுவிட்டது? ஒன்றுமில்லை.

"போதுமா, போதுமா?'' என்றுதான் கேட்கிறார்கள். மிகப் பெரிய அளவில், திருச்சியில் தோழர் சாம்புவின் மேற்பார்வை யிலே போடப்பட்டு வரும் கொட்டகையைக் கண்டு. "எதற்காக இவ்வளவு பெரிய கொட்டகை?' என்று எவரும் கேட்கக் காணோம். நமது வளர்ச்சி, தூற்றலால் துளைக்கப்பட்டிருந்தால், சாம்புவுக்கு இத்தனை பெரிய அல்லல் ஏற்பட்டிராதே! - நிம்மதியாக - கெம்பீரமாக - திருச்சி தேவர் மண்டபத்தில் கூடிக் கலைந்துவிட்டிருக்கலாம். இப்போது தமிழகமே அல்லவா தம்பி, மாநாட்டு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. துண்டு வெளியீடுகளை ஊரூருக்கும் தருகிற தொண்டிலும், அங்காடிகளிலும் சதுக்கங்களிலும் அழகான விளம்பரத் தட்டிகள் அமைத்திடும் காரியத்திலும், அலுவலகத்திலே என்னென்ன காரணம் காட்டி விடுமுறை பெறுவது என்ற வித்தையிலும், இந்தச் செலவைக் குறைப்போமா, அந்தச் செலவை நீக்குவோமா, என்ன செய்தால் இருபதோ முப்பதோ மாநாட்டுச் செலவுக்காகக் கிடைக்கும் என்று சிக்கனம் பயில்வதிலும் ஈடுபட்டுள்ளவர்களின் தொகை கொஞ்சமா! இவர்கள் அனைவரும் யார்? தூற்றுவோரின் அகராதிப்படி

துரோகிகள்
மாபாவிகள்
அப்பாவிகள்

தூற்றல் நம்மைத் துளைத்துவிட்டது என்றா பொருள்? நாம் காணும் இந்த எழுச்சியுடன் மகிழ்ச்சியும், தூற்றுவோர் குறித்துக் கவலை கொள்ளற்க, நாங்கள் அந்தத் தூற்றலை ஏற்றோமில்லை, பொருட்படுத்தினோமில்லை, அணிவகுத்து நிற்கிறோம், அறப்போரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம், அழைப்பை ஏற்றுக்கொண்டு களம்புகத் தயாராகிவிட்டோம், திட்டம் தயாராகட்டும், தியாகத்துக்குப் பஞ்சமில்லை, தீரருக்குக் குறைவில்லை, திருவிடம் தலைநிமிர்ந்து நிற்கிறது - என்று நாடு, நம்மை நோக்கிக் கூறுகிறது என்றல்லவா பொருள்?

நடந்தே வரப்போகிறோம்.
சைக்கிள் படை கிளம்புகிறது.
மாட்டு வண்டிகளில் வருகிறோம்
தனி இரயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம்.

என் அருமைத் தம்பி! தூற்றல் நமது வளர்ச்சியைக் கெடுத்துவிடுமோ, குலைத்துவிடுமோ என்பதல்ல-நமக்குக் கிடைத்துள்ள இந்த வளர்ச்சியின் வேகத்தையும், அளவையும், தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொண்டு, அதை நல்லமுறையில் பயன்படுத்தி குறிக்கோள், வெற்றிபெறச் செய்ய வேண்டுமே அதற்கான அறிவுடைமை நமக்கு ஏற்பட வேண்டுமே, அதற்குத் தகுந்த கூட்டு எண்ணம், கூட்டு முயற்சி, நம்மிடம் குன்றாமல் குறையாமல் நின்று நிலவ வேண்டுமே என்பதுதான்.

ஐந்து ஆறாயிரம் தோழர்கள் நம்மில் சிறை சென்றிருக்கிறோம்.

144 தடைகளைத் தூளாக்கி இருக்கிறோம் - போலீஸ் தடியடி நம்மில் நூற்றுக்கணக்கானவர்களைப் பதம் பார்த்து விட்டது!

துப்பாக்கியும் துளைத்துவிட்டிருக்கிறது.

இவைகளைத் தாங்கிக்கொள்ளும் "சக்தி' நமக்குக் கிடைத்திருப்பது மட்டுமல்ல நாம் கவனிக்க வேண்டியது, இப்படிப்பட்ட "அடக்குமுறை' மூலம் நம்மை அடக்கித் தீரவேண்டும் என்ற நிலைக்கு ஆட்சியாளர் வந்து தீரவேண்டி இருக்கிறதே. அதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

பதவிப் பிரியர்கள் பல்லிளித்துக் கிடக்க, பணக்காரக் கூட்டம் பாதசேவை செய்ய, பத்திரிகை முதலாளிகள் பராக்குப் பாட பவனி வருகிறது, பாரத மாதாவின் ஆசி பெற்ற ஒரு கூட்டம். இதனை, பஞ்சையும் பராரியும் பகல் பட்டினியும் பக்கிரியும் எதிர்க்கிறது. அதிகார வெறியரால் அலட்சியப்படுத்த முடியவில்லை, அடக்குமுறை வீசித்தான் இந்த எதிர்ப்பை ஒழிக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கிறது.

தோள் வலியும் வாள் வலியும் கொண்ட அரசுகளே, புரட்சிப் புயலில் சிக்கியகாலை பொடிப் பொடியான செய்தியைச் சுவைபடக் கூறுகிறது வரலாறு. சூதுச் சூலில் தோன்றி வஞ்சனைத் தொட்டிலில் ஆடி, சூழ்ச்சிப் பள்ளி பயின்று, கெடுமதியைத் தோழனாகக்கொண்டு, கொடுங்கோலைக் குருவாக்கிக்கொண்ட ஒரு கொற்றவன், சீறி எழும் மக்களின் அறப்போரை எதிர்த்து நிற்கவா முடியும்! அங்ஙனம் எண்ணுவது பேதமை! ஆயினென்! பெரும்பாலும் கொடுங்கோலர், பேதமையைத்தான் பெருந்துணையாகக் கொள்கின்றனர். எனவேதான் வீழ்ந்துபடுகின்றனர். எனினும் வரலாறு அறியா மக்கள் இங்கு ஏராளம் என்ற எண்ணத்தால் ஓர் அசட்டுத்தனமான துணிவு பெற்று, இன எழுச்சியை, விடுதலைக் கிளர்ச்சியை எதிர்த்தொழித்திடக் கிளம்புகின்றனர், சொந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சுகபோகிகள்.

திருச்சி மாநில மாநாடு - அரிமா நோக்கு - என்றார் நம் நாவலர்.

காட்டரசனாம் சிங்கம் நடந்து செல்வதிலே காணப்படும் கெம்பீரத்தை மட்டுமல்ல, அதன் பார்வையிலே காணக்கிடக்கும் வீரம் மட்டுமல்ல, அவர் குறிப்பிடுவது, சென்று கொண்டிருக்கும் காட்டரசன் ஓரிடத்திலே நின்று, தான் நடந்துவந்த வழியினை ஒரு முறை பார்த்துவிட்டு, மேலால் நடக்குமாம். அதபோலத் தம்பி, நாம் மாநில மாநாட்டிலே கூடி, இதுவரை நாமாற்றியுள்ள பணியினைப்பற்றி எண்ணிப் பார்த்து, எழுச்சிபெற்று, மேற்கொண்டு நமது பணியினைத் தொடங்கப்போகிறோம். நாம் கடந்து வந்த இடம், சாதாரணமானதல்ல. இன்னல்கள் பலவற்றினைச் சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம். இதயம் எதையும் தாங்கும் வலிவு பெற்றுவிட்டது.

அல்ஜீரியா, தூனீசியா, மொராக்கோ, சைப்ரஸ் - எங்கும் விடுதலைக் கிளர்ச்சி முழக்கம் கேட்கிறது.

அங்கெல்லாம், இரத்த வெள்ளத்திலே நீந்துகின்றனர் விடுதலை வீரர்கள்.

தாயகத்தை மீட்பேன்! - என்று சூளுரைத்திடும் வாலிபன் சுட்டுத் தள்ளப்படுகிறான். குண்டுமாரி பொழிந்து, கொடியோர் விடுதலைக் கிளர்ச்சிகளை ஒடுக்கிடத் துணிகின்றனர்! கொடுமைதான் - எனினும் மாற்றான் முன் மண்டியிடுவதைக் காட்டிலும், அவன் வீசும் குண்டுக்குப் பலியாகி வீழ்வதே மேல் என்று வீரர்களால் துணிவுபெற முடிகிறது. இங்கு நடைபெறுவதோ, அத்தகைய கொடுமை அல்ல; கேவல மானதோர் போக்கினை, மாற்றார் அல்ல, உற்றார், உடன்பிறந்தோர் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியை இழித்துரைத்திடவும், மாற்றானுடன் கூடிக்கொண்டு சொந்த நாட்டவனைக் காட்டிக் கொடுக்கவும் முன் வந்துள்ளனர்.

வடநாட்டு ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும், திராவிடம் தனி அரசாகவேண்டும் என்று நாம் பரணி பாடும்போது, வடநாட்டார் வரிந்து கட்டிக்கொண்டு நம்மை எதிர்த்திடக் கிளம்பினால், நாம் திகைத்திடமாட்டோம்-திராவிடர்களிலேயே சிலர்-தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள மறுக்கும் சிலரன்றோ, சீறி எழுகின்றனர், சதிபுரிகின்றனர், விடுதலைக் கிளர்ச்சியை ஒழித்திடத் துடிக்கின்றனர். இந்த வேதனை தரும் கொடுமை, வேறு எங்கும் இல்லை! அல்ஜீரியாவுக்கு இப்போது ஏன் விடுதலை? பிரான்சு ஆட்சியிலேயே இருக்கட்டும் என்று பேசிட அந்நாட்டிலே பக்தவத்சலங்கள் இல்லை!! இங்கு அத்தகையோர் ஆளவந்தார்களாகி உள்ளனர்.

ஐஸ்லந்து
காஸ்ட்டா ரிகா
ஜோர்தான்
லக்சம்பர்க்
லிபியா
நைகார்குவா
பனாமா

இவைகள் யாவும் ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினர்களாகி உயர்வு பெற்றுள்ளன. எமது சிங்கப்பூர் இந்த நாடுகளை விட அளவிலே பெரிது.

நியூஜிலாந்து, ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினரான போது, அந்த நாட்டிலே இருந்ததைக் காட்டிலும் அதிகமான குடிவளம் சிங்கப்பூரில் இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையிலே உறுப்பினராக உள்ள சுதந்திர நாடுகள் 16 சிங்கப்பூரின் வருவாயைவிட குறைந்த அளவு வருவாய் கொண்டன.

எனவே, சிங்கப்பூர் தனி அரசு நடாத்த சகல உரிமையும் வசதியும் கொண்டதேயாகும்.

எனவே, சிங்கப்பூர் இனியும் பிரிட்டிஷ் காலனியாக இருக்கும் இழிநிலை இருத்தல் கூடாது - சுதந்திர நாடாக வேண்டும்.

சிங்கப்பூர், மலேயா போன்றே, பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இடம் பெற்று வாழ விரும்புகிறது - ஆனால் சுதந்திர நாடாகவேண்டும்.

டேவிட் மார்ஷல் இதுபோல, சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்று இப்போது இலண்டனில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிங்கப்பூரின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனுடன் பேசி முடிவு காண்பதற்காக, 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு தூதுக்குழு சென்றிருக்கிறது, டேவிட் மார்ஷல் தலைமையில்.

இந்தத் தூதுக் குழுவில் எல்லா அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன - சிங்கப்பூர் முதலமைச்சராக உள்ள டேவிட் மார்ஷல் தலைமை வகிக்கிறார்.

பேச்சு வெற்றி அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மலேயாவின் சுதந்திரத்துக்காக, இதுபோல, பிரிட்டனில் உள்ள ஆட்சியாளர்களிடம் பேசி வெற்றி கண்டார் துங்குரகிமான். அதுபோன்றே டேவிட் மார்ஷலின் முயற்சியும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

சுதந்திரம் கேட்கிறது சிங்கப்பூர்!

தன்னைவிட அளவிலே - எந்தெந்த நாடுகள் சிறியவை - அவைகளெல்லாம் சுதந்திர நாடுகளாகத் திகழ்ந்து, ஐக்கிய நாடுகள் சபையிலேயும் இடம்பெற்று, ஏற்றம்பெற்று வாழ்வதை ஆதாரமாகக் காட்டி சுதந்திரம் கேட்கிறது.

துணிவுடனும் உரிமையுடனும், கட்சிப் பாகுபாடுகளை மறந்தும், நாட்டுப் பற்றுகொண்டு, விடுதலை உணர்ச்சி கொண்டு, சுதந்திரத்துக்காக முழக்கமிடும் சிங்கப்பூரின் ஜனத்தொகை 12,00,000!

"திராவிட நாடு என்ற நமது இலட்சிய நாட்டிலே, தமிழர்கள் மட்டும் இரண்டு கோடி!!

பன்னிரண்டு இலட்சம் மக்கள் கொண்ட சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டுமென்று கேட்கிறது, - திராவிட நாடு என்பது, துண்டு போடும் திட்டம் - சிறு நாடாக்கிச் சீரழியும் திட்டம் என்று இங்கு பேசுவதற்குக் கட்சிகள் உள்ளன!

பன்னிரண்டு இலட்சம் மக்களே கொண்ட நாடாயிற்றே, இதற்கோ சுதந்திரம் என்று ஐயம்கொள்ள வேண்டாம். இதனினும் குறைந்த ஜனத்தொகைகொண்ட ஜோர்தானும், லிபியாவும், லக்சம்பர்க்கும் பிறவும் சுதந்திர நாடுகளாக உள்ளன அறிந்துகொள்மின் என்று டேவிட் மார்ஷல் எடுத்துரைக்கிறார், மாற்றுக் கட்சிகள் எல்லாமும் "மற்றப் பிரச்சினைகளிலேதான் மாறுபாடான கொள்கை எமக்கு உண்டு, நாடு சுதந்திரம் பெறும் பிரச்சினையில், எமக்குள் கருத்து வேற்றுமையே கிடையாது. சிங்கப்பூர் சுதந்திர நாடாக வேண்டும் என்பதிலே எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமனப்பட்டு உள்ளன' என்று கூறுகின்றன. இங்கு திராவிடநாடு திராவிடருக்கு என்றால், திராவிட நாடாவது சுடுகாடாவது என்று பேச கட்சிகள் உள்ளன.

சிங்கப்பூருக்கென்று ஒரு வரலாறு -பண்பாடு - மொழி - மார்க்கம் - ஏதேனும் தனியான சிறப்பு அளிப்பதாக இருக்கிறதா என்றால் - இல்லை.

திராவிடமோ, பிற பல நாடுகள் வடிவமும் வண்ணமும் வாழ்வும் வளமும் பெறாத நாட்களிலேயே, தனிச்சிறப்புடன் திகழ்ந்ததற்கு வரலாறு காணக்கிடக்கிறது. எனினும், இங்கு, "தமிழ்நாடு என்ற பெயர் எப்போது இருந்தது' என்று தமிழில் கேட்டிட ஓர் தமிழர் இருக்கிறார்!!

தொல்காப்பியம், அகம், புறம், சிலம்பு, மணி-எவையும் சிங்கப்பூருக்குக் கிடையாது. அங்கு இளங்கோவோ, காக்கைப் பாடினியாரோ, கபிலரோ, வள்ளுவரோ, கம்பரோ காளமேகமோ இருந்ததில்லை - எனினும் அந்தச் சிங்கப்பூர் சுதந்திர நாடாக விரும்புகிறது, இங்கோ வடவருக்கு அடிபணிந்து, நமது நாவலர் அடிக்கடி எடுத்துக்கூறுவது போல, "சோற்றா லடித்த பிண்டங்களாக'' இருந்திடச் சம்மதம் அளித்து, அதையே "தேசியம் என்று தெகிடுதத்தம் பேசிட ஓர் கூட்டம் இருக்கிறது-அக்கூட்டம் கோலோச்சும் நிலையையும் கைப்பற்றிவிட்டிருக்கிறது.

தம்பி! இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கித் தீர வேண்டும். கோலோச்சும் நிலையினின்றும் இக்கெடுமதி யாளர்கள் விரட்டப்பட்டாக வேண்டும். விடுதலைக் கிளர்ச்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக இந்தக் காட்டிக் கொடுக்கும் கயவர் கூட்டத்தினைக் கருவறுத்திட வேண்டும். அதற்கான திட்டமெல்லாம் தீட்டி, தம்பி! நண்பர் குழாத்துடன், திருச்சி வந்து திரு இடத்து மணிவிளக்கென ஒளி தந்து, மாநாட்டினை மகத்தான வெற்றிகரமாக்கு.

மாநாடாமே... இதுகளுக்கு?... என்று இன்றும் ஏளனம் பேசுவோர் உளர்! அவர்கள், கண்டு திகைத்திடத்தக்கதோர் பிரம்மாண்டமானதோர் அணிவகுப்பு கூடியாக வேண்டும் திருச்சியில்.

அன்பன்,

29-4-56