அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அத்தர் வியாபாரம்

லெனின் கிராட் முன்னும் பின்னும்
பல்கலைக் கழகத்தில் இராதாகிருட்டிணன் கருத்துரை
திராவிடர் இழி நிலை

தம்பி!

லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினீர் - தெரியுமா உனக்கு!

உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது - இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

லெனின் கிராட் - பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது - இலட்சியபுரி அது?

மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும் பெரும்புரட்டன் ஆட்டிப்படைத்து வந்தான். தூணிலும் துரும்பிலும். கல்லறையிலும் காணாறு பாயும் காடுகளிலும், பிலங்களிலும் பிம்பங்களிலும், தேவனைக் கண்டனர்- கண் மூடிக்கிடந்த மக்கள்; காலடிவீழ்ந்து காணிக்கைக் கொட்டினர் மத குருமார்களுக்கு! கபட வேடதாரிகளோ, கைகூடாக் காதலுக்கும் பிடிபடாக் கோட்டைக்கும், நவநிதிபெறுவதற்கும், "நல்லவிளைவு' கிடைப்பதற்கும், எதற்கும் பிரார்த்தனை - ஆசி தாயத்து - மந்திரக் கயிறு கவசம் தருவர் - மக்கள் ஏமாற்றப்பட்டோம் என்று எண்ணினதில்லை, எம்மான் அருளை இவர் மூலம் பெற்றோம் என்றெண்ணிப் பூரித்தனர். வறுமை வாட்டும், குளிர் கொட்டும், குழந்தைகள் "கோ' வெனக் கதறும், குமரிகள் உடலை விற்று உருமாறி உழல்வர், - கோயிலில் மணிகள் ஒலிக்கும், குருவின் பவனி கோலாகலமாக நடைபெறும், "தர்மதாதா'க்கள் திருவிழா நடத்துவர், ஆசி அளித்திடும் அருளாளர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில், ஏராளமான எடு பிடிகளும், பொறுக்கி, எடுக்கப்பட்ட பொற்கொடிகளும் புடைசூழ கொலு வீற்றிருப்பர்!

கயற்கண்ணழகி ஒருவளைக்கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்து, பெருமூச்செறிந்து, அந்தக் கட்டழகி! கன்னல் மொழியாள்! மின்னல் இடையாள்! பேசும் பேரின்பம்! எனக்குக் கிட்டிட மார்க்கமொன்று காட்டிட வேண்டும் , மாதவம் செய்தவரே! மனிதகுலத்தை உய்விக்க வந்த மகானே! என்று இறைஞ்சி, பொன்னும் பொருளும் காலடியில் கொட்டி, கண்ணீர் சிந்தினால், மூவாசையைத் துறந்து, துறந்ததால் மூலத்தை உணர்ந்து "மேலோன்' என்ற விருதுபெற்ற "குருமார்கள்' காதற்கனியை அந்தக் கனவான் பெறுவதற்கான "ஆசி' அருளுவார்!! கட்டணம், காரிகையின் அழகுக்குத் தக்கபடி! காளையைத் துளைத்திடும் காமக் கணையின் கூர்மைக்கு ஏற்ற வண்ணம் அமைந்திருக்கும்!

ஏழை எளியோர்களை ஏறெடுத்துப் பாரார்போலும் இந்தக் "குருமார்' என்று எண்ணிவிடாதே தம்பி! ஏழைக்கும் குருமார்களுக்கு இரையாகிடும் வாய்ப்புக் கிடைத்திடும்.

"அம்மை நோய் ஐயனே, என் ஐந்தாண்டுப் பாலகனுக்கு அருகே நெருங்கவே முடியவில்லை! அவன் போடும், "ஐயோ அம்மா'வைக் கேட்க முடியவில்லை! ஆவி துடித்திடும் நிலை!'' என்று ஏழை அழுதபடி கூறுவான், அருளை விற்றிட அங்காடி வைத்திருந்த அதிசய மனிதர்கள், "சக்திக்கேற்றபடி' காணிக்கைத் தரச் சொல்லுவர் - ஜெபமாலையால் புனிதப்படுத்தப்பட்ட ஆடை, அருளாலயத் தோட்டத்து மூலிகை, அபிஷேக நீர் - இப்படி ஏதேனும் தருவர்! இவ்வளவு எதற்கு! விளைச்சல் சரியாக இருப்பதற்காக, நிலத்தில், "மந்திர நீர்' தெளித்திடும் கைங்கரியம் செய்யும் மகான்களும் இருந்தனர்!

அப்படிப்பட்ட நாட்டிலே, லெனின் பிறந்தார் - பாடுபட்டார் - வெற்றி பெற்றார் அதனை எடுத்துக் காட்டவே அந்த எழில் நகருக்கு, லெனின் கிராட் என்று பெயர்!

கூனன், ஏறு நடையோனானான்! விழியற்றவன், கனல் கக்கும் கண்ணினனானான்! ஊமை, பேசினான்! கொடுமை ஒழிந்தது! புதுமை பூத்தது! புதுமுறை ஏற்பட்டது! மதத்தைக் காட்டி ஏய்த்த மாபாவிகளை, மக்களின் திரண்டெழுந்த சக்தி மண்ணோடு மண்ணாக்கிற்று!

அத்தகைய லெனின் கிராட் நகரில், சாமான்யர்கள்கூட அல்ல, பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மதம் வேண்டும்! என்று இன்று கேட்கிறார்கள் என்று இந்தியக் குடிஅரசுத் தலைவருக்குத் துணைசெய்பவராக விருது பெற்றுத் திகழும் வேதியர், வேத வேதாந்த வித்தகர். வியாகர்ணப் பண்டிதர், தத்துவாசிரியர், இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்!

"அப்படியா! ஆஹா! ஆண்டவன் கருணையே கருணை! நாத்திகம் நசித்ததா! நாதன் அருளை நாடுகின்றார்களா! ஈசன் பெருமையே பெருமை! ஈதன்றோ அருமை! - என்று ஆதீனங்களும் அருளாலய அதிபர்களும் மட்டுமல்ல, சுட்ட சட்டியை ஏந்திப் பிழைத்திடுவோரும், காவிகட்டியதால் வயிறு நிரம்பிற்று என்று எண்ணுவோரும், மொட்டைத் தலையரும், காவடிச் சாமியாடிகளும் கூடக் களிநடனம் புரிவர்!

டாக்டர் இராதாகிருஷ்ணனேகூட, பெருமிதத்துடன்தான் பேசுகிறார் - பரோடாவில் இந்தத் திங்கள் பத்தாம் நாள்.

லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர் களையும் மாணவர்களையும், நான் என் வழிக்குக் கொண்டு வந்து விட்டேன். வாதாடினர் திறமையாக - என் எதிர் வாதம் கேட்டுத் திடுக்கிட்டனர்! கடாவினர், நான் வீசிய பதில்களைக் கண்டு கவிழ்ந்தனர்! அப்பப்பா! என்னென்ன கேள்விகள், எத்தனை குறுக்குக் கேள்விகள்! இவ்வளவுக்குப் பிறகு, அவர்கள் ஆம்! ஆம்! தாங்கள் கூறும் மதத்தை நாங்களும் விரும்புகிறோம் - ஏற்றுக் கொள்ள இசைகிறோம் என்று கூறினர் - என்கிறார்.

பாமர மக்காள்! பாமர மக்காள்! பண்டித ஜவஹர் ஏதேதோ நாடுகளில் பவனி வருகிறார், தலைவர்களைக் காணுகிறார், வெற்றி மாலை சூடுகிறார், என்றெல்லாம் பேசிக் கிடக்கிறீர்களே, நான் என்ன செய்திருக்கிறேன், எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறேன், எத்தகையவர்களை நம் வழிக்குத் திருப்பி இருக்கிறேன் என்பதை அறியாமற் கிடக்கிறீர்களே கூறுகிறேன் கேண்மின், லெனின் கிராட் நகரப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் மதத்தை ஏற்றக் கொள்ளச் செய்திருக்கிறேன் - மகத்தான வெற்றி அல்லவா, அகிலம் புகழத் தக்க வெற்றியல்லவா இது! லெனின்கிராடில் மதத்துக்கு இடம் கிடைக்கும்படி செய்துவிட்டேன்! மதம் மக்களுக்கு அபின் என்று எங்கு பேசப்பட்டதோ, அங்கு, மதம் தேவைதான் எங்களுக்கும் மதம் வேண்டும் என்று பேசச் செய்துவிட்டேன், இந்த மகத்தான வெற்றி பெற்றதும், சாமான்யமான முயற்சியால் அல்ல, மெத்தச் சிரமப்பட்டு, விளக்கமளித்து, தர்க்கம் நடத்தி, கேள்விக் கணைகளைத் தூளாக்கி, சந்தேகத்தைத் துடைத்து, பிறக வெற்றி பெற்றேன்!- என்ற கருத்துப்பட டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.

தம்பி, என்ன சொன்னதால், இந்த "வெற்றி' கிடைத்தது தெரியுமா! அதைத் தெரிந்துகொள்ள, ஒரு சிறுகதை, கூறுகிறேன் கேள்.

யாருக்கும் அடங்காத, எவரையும் எதிர்க்கும் முரடன் ஒருவன் இருந்தானாம் ஒரு ஊரில்! (ஊருக்கு ஒரு முரடன் போதுமல்லவா!) எதிரே யார் வந்தாலும், கன்னத்தில் ஒரு அறை கொடுப்பானாம். பற்கள் முப்பத்து இரண்டும் பொலபொல வெனக் கீழே உதிர்ந்து போகுமாம். அப்படிப்பட்டவனிடம் அந்த ஊரிலேயே, "தொடைநடுங்கி' என்று யாவராலும் என்ளி நகையாடப்பட்டு வந்த ஒருவன், சென்றானாம் - சவாலுக்கு! ஒரு நாள்! ஊரே அதிசயப்பட்டது! ஒரு மணி நேரத்துக்கெல்லாம், வெற்றி! வெற்றி! என்று கூவியபடி, ஊருக்குள் வந்தான். வந்தவனை ஊரார் சூழ்ந்து கொண்டு என்ன சேதி! என்ன சேதி! என்று ஆவலோடு விசாரித்தனர். அவன் பெருமையாக என்னை அவன் அடிக்கவில்லை! என் பற்களை உதிர்க்கவில்லை என்று சொன்னானாம்!

"எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கன்னத்தில் அடித்து பற்களை உதிரச் செய்பவன், உன்னைமட்டும், சும்மாவிட்ட காரணம் என்ன?'' ஊரார் கேட்கிறார்கள்!

"காரணமா? என் சாமர்த்தியம்தான்!'' என்றான் தொடை நடுங்கி.

"என்ன நடந்தது! எப்படி அவனைச் சமாளித்தாய்? விவரமாகச் சொல்லு'' என்று கேட்டனர் ஊர் மக்கள். அவன் சொன்னான்.

"நேராக அவனிடம் சென்றேன். கன்னத்தில் அடிக்க கையை ஓங்கினான்! நிறுத்து! நிறுத்து! உன்னால் என்னை அடித்து, என் பற்களை உதிர்க்க முடியாது என்றேன். என்ன சொன்னாய்! என்ன சொன்னாய்! என்று அவன் கொக்கரித்தான். நீ கொக்கரித்து என்ன பலன்? நிச்சயமாகச் சொல்கிறேன். உன்னாலே, என் பற்கள் உதிரும்படி அடிக்கமுடியாது! பந்தயம் கட்டுகிறேன் என்றேன். அவனுக்குப் பிரமாதமான கோபம், அடே அற்பப்பயலே! சுருள் கத்திசுப்பன், அரிவாள் கந்தன், சம்மட்டி சதாசிவம் போன்ற சூரனெல்லாம், என் "அறை' பட்டதால், "பொக்கை' வாயர்களாகிப் போனார்கள்! நீ சுண்டைக்காய்! என் முன்னாலே சூரத்தனமா பேசுகிறாய்! என்று மிரட்டினான், கண்களை, உருட்டினான், நான்; "அப்பா நீ அசகாயச் சூரனாக இருக்கலாம்! நீ கொடுத்த அறையிலே, வீராதி வீரனுக்கெல்லாம் பல் போயிருக்கலாம். ஆனால், என்னை அறைந்து என் பற்களை உதிரச் செய்யமட்டும் உன்னாலே முடியாது; இது உறுதி - என்ன பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன்'' என்றேன். அவனுக்குத் தலைகால் தெரியாத கோபம் வந்துவிட்டது - "ஆஹா! பந்தயமா உன் பற்களை என்னால் உதிர்க்க முடியாமல் போனால், இனி ஒருவனையும் நான் கன்னத்தில் அடிப்பதில்லை! என்றான், சத்தியமாகவா என்றேன். ஆமாம், என்று கூறிவிட்டு கையை ஓங்கினான். உடனே நான், "நிறுத்து! நிறுத்து!'' என்று கூறியபடி என் வாயைத் திறந்து காட்டினேன்! பயல் கல்லாகிப் போனான்! ஏன் தெரியுமா? என் வாயிலே ஒரு பல்கூடக் கிடையாது! எனக்குத்தான் பற்கள் இல்லையே! என்ன செய்வான்! தோற்று விட்டான்! அட பாவிப் பயலே இந்தச் சூது தெரியாமல் போய்விட்டதே? எங்கே உன்னுடைய பற்கள்? என்று கேட்டான்; பற்களை உதிரச் செய்யும் சூரப்புலி நீ ஒருவன்தானா, நேற்றிரவே என் பற்களை உதிர்த்து விட்டாள், என் மனைவி, என்றேன். உண்மையும் அதுதான் அவன் "இடி இடி' எனச் சிரித்துவிட்டு, பல்லே இல்லாதபோது, பல்லை எப்படி உடைக்க முடியும். பயலே, நீ கெட்டிக்காரன்தான், என்ற என்னைப் பாராட்டினான்.

இது அவன் சொன்ன கதை. கேட்ட ஊர் மக்களும் கை கொட்டிச் சிரித்தனர். ஏற்கனவே மனைவி கொடுத்த அறையால் பல்லை இழந்துவிட்ட காரணத்தால், அறை கொடுத்துப் பற்களை உதிரச் செய்யும் முரடனை அவனால் "ஜெயித்திட' முடித்தது. அதுபோல டாக்டர் இராதாகிருஷ்ணன், லெனின் கிராட் பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும் நடந்து கொண்டதால் வெற்றி கிடைத்திருக்கிறது.

புதிய அறிவின் காரணமாக, மதத்திலே எந்தெந்த ஆபாசங்கள் புரட்டுகள், உள்ளனவோ அவைகளெல்லாம் உதிர்ந்து போய்விட்டன - தத்துவம் மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது - அந்த தத்துவத்தைக் காட்டி, இந்து மத்தை ஏற்றுக் கொள்ள என்ன தடை என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்வார்கள்? என்ன சொன்னான் கதையில் வரும் முரடன்! அது போலத்தான்.

லெனின் கிராட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் இவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்டனர் - என்ன பதிலளித்தார் என்பதுபற்றி, இந்த வேதாந்தி தம்முடைய பரோடா சொற்பொழிவிலே கூறவில்லை.

மதம் என்றால், சத்தியத்தை, நற்குணத்தை, அழகை நாடிக் கண்டறிவது என்று சொன்னேன்; அந்தப் பேராசிரியர்களும் மாணவர்களும், சரி சரி! சந்தோஷம்! இதுதான் மதம் என்றால், அந்த மதத்தை நாங்களும் விரும்பு கிறோம் என்று கூறினர் என்று இவர் கூறுகிறார்.

பற்கள் இருந்தால், கொடுக்கிற அறையில், பொல பொல வென உதிர்ந்திருக்கும், பற்கள் இல்லை. எனவே அறைவிழ வில்லை - கதையில்.

"பாரதத்தில்' மதம் என்பதன் பெயரால் என்னென்ன இருக்கிறது, எத்தகைய இழிதன்மைகள், கொடுமைகள், மடைமைகள், ஆதிக்கம், என்பதை எல்லாம், காட்டாமல், மதம் என்றால் உண்மையை உணருவது, நற்குணத்தை நாடுவது, அழகை அடைவது என்று கூறினார். கூறவே, இதுதானா, மதம், இம்மதம் எமக்கும் சம்மதமே என்றனர், லெனின் கிராட் மக்கள்.

சத்தியம் - சன்மார்க்கம் - அழிவில்லா அழகு! இதை யார் இல்லை, என்பர் எவர் வேண்டாமென்பர்! உண்மையை உணரவும், உத்தமனாக வாழவும் வழி வகுப்பதே மதம் என்று கூறவதை யார் மறுப்பர்! லெனின் கிராட் வாசிகளிடம், "மதம்' - பாரதத்தில் என்னென்ன "வடிவம்' கொண்டு இருக்கிறது, என்னென்ன நினைப்புகளுக்கு இடமளிக்கிறது, எவ்விதமான நடவடிக்கைகளைச்செய்யச் செய்கிறது, என்பனவற்றை விளக்க, சித்தரித்துக் காட்டிவிட்டு, இதுதான் மதம், எமது மதம், எமது முன்னோர்கள் காலமுதல், சிதையாமல் இருக்கும் மதம், என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பேசிவிட்டு, பிறகு, மதம் வேண்டுமா? என்று கேட்டிருந்தால், தெரிந்திருக்கும் வேடிக்கையாகவும் இருந்திருக்கும் பற்களோடு போயிருந்தா லல்லவா, தெரிந்திருக்கும் - கதையில் நாம் கண்ட "தொடை நடுங்கி' அவன்தான், பற்களை ஏற்கனவே அவனைப் பதியாகக் கொண்டிருந்த பஜாரிக்கு அர்ப்பணித்து விட்டானே.

டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள், ஊரும் உலகமும் தம்மையும் தமது திறமையையும் மெச்சும்படியாக நடந்து கொள்வதற்காக, அங்கெல்லாம் சென்று, மதமென்றால்,

அன்பு
அறிவு
உண்மை
பண்பு
அழகு

என்றெல்லாம், பேசிவிடுகிறார்கள், இங்கு அவர்கள் காண்பது என்ன?

ஆமை
அனுமான்
வராகம்
காளை

போன்ற வாகனாதிகளிலே ஏறும் சாமிகள்!

அவைகளைச் சுமந்து, "காப்புக் காச்சி' போல உடலம் படைத்தவர்கள்! மேலே அமர்ந்து மேனியில் பூசப்பட்டுள்ள சந்தனக் குழம்பை "விசிறி' ஆறவைக்கும் விப்பிரர்.

காவடி
மோடி
சூலம்
வீதியில் புரள்வது
வேல்குத்தி ஆடுவது
மொட்டை அடித்துக்கொள்வது
கண்ட குட்டையில் புரள்வது!

இவை போன்றவைகள்!

சத்யம்
சன்மார்க்கம்
அழகு
லெனின் கிராடிலே இது பேச்சு,

வெண் பொங்கல்
புளியோதரை
தயிரன்னம்
அக்கார வடிசல்

ஆரியருக்கு

மானியம் விடுவது
காணிக்கை
கொடுப்பது

திராவிடர் செய்யும் திருப்பணி!

கேள்விகள் கேட்டனர் என்கிறார் - பதிலும் அளித்தாராம், சொல்கிறார்.

தம்பி, அங்கு என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை அவன் கூறவில்லை. போகட்டும். இங்கு, நீயோ நானோ கேட்கும் கேள்விகளுக்கு இவரும் இவரைப் போன்றாரும் பதில் கூறுவாரா, சபிப்பர்.

கேட்க வேண்டியது ஒன்றா இரண்டா, ஓராயிரம் உண்டே, எதற்குத்தான் பதிலளிக்க முடியும்.

இங்கே உள்ள குப்பை கூளத்தைக் கூட்டிச் சுத்தம்செய்ய முடியவில்லை, அங்கே போனாராம், அற்புதமாகப் பேசினாராம், வெற்றி பெற்றாராம். பளா, பளா, அடுக்களை நாற்றத்தைக் கழுவாமல் அத்தர் வியாபாரம் செய்யப் போனது போலல்லவா இருக்கிறது.

அன்புள்ள,

16-10-1955