அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1
2

மிக உச்சிக்குச் சென்று அமர்ந்துகொண்டவர்களும், சட்ட மன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்ல முடியாது கிடப்போரும், செய்திடும், "உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை.

முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட்டு அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? - என்ற கருத்துப் பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார்.

குடிஅரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடிஅரசாக இருக்கவேண்டும் - ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார்.

பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம்.

அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும்.

"இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது. 14 வருஷங்கள்'' என்று பேசி இருக்கிறார்.

இதைக் கவனிக்கும்போது, அவர், இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக்கொண்டுள்ள வெறுப்புத் தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சிமுறை களிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்க மாகிறது.

***

பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்தமற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப்படுகின்றன, என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்டமன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா!

சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு,. "ஓட்டு' அளிக்கவும், சில தகுதிகள் இருக்க வேண்டும் அல்லவா? அதாவது, வயது வந்த எல்லோருக்கும் "ஓட்டு' என்ற முறை இருக்கக் கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணு முணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக்கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக எதேச்சாதிகாரம், பிற்போககு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர்.

இப்போது எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும்.

சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக் கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்!

***

எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை. ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல் கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் - மற்றவை தலைகாட்டக் கூடாது என்று கூறிவிட்டார்.

அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது.

அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ளவேண்டும்; இல்லை யென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார்.

உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார், ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!!

தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக்களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை சாத்தியமோ, பிடித்தமோ, அவை மட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது.

உலகப் பெருந்தலைவர்கள் கூடிப், போர்க் கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க் கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குத் சாத்தியமாகாத எந்தப் போர்முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும்.

1932-இல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியதுபோலவே, போர்க் கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார்.

அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார்.

"காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தபடி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும் என்று கூறிற்று; புலி யானையைப் பார்த்தபடி, ஒழிக்கப்பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியை பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக் கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் - கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு - எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிறது, கட்டித் தழுவிக் கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று.

தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது, எனவே, கரடி, அதுமட்டும் இருக்க வேண்டும், மற்றவை ஒழிய வேண்டும், என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர்.

அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால், இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான்.

போர்க் கருவிபற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடைய தாகவே இருந்து வரக் காண்கிறோம்.

***

நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப் பேச ஏன் முன்வந்தனர், பாபு போன்றார்! மக்கள், குடிஅரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது.

அதனைத் தெரிந்து கொண்டே பெருந்தலைவர்கள், இது போலப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.

மக்களுக்குத் திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது.

எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி, மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது.

உலகுக்கே சாந்தி போதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார் நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்?

சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச், சிறையிலே சுட்டுத் தள்ளப்பட்டனர்.

வரியோ, ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி! நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு!

என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடு களைச் செய்திடும் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது.

இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.

என்ன தேர்தல்!
என்ன சட்டசபை!
என்ன குடிஅரசு!
எந்த அரசு வந்தும் நமது கஷ்டம் போகக் காணோம்.

என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர்.

***

பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில் கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டிருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர்.

விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை. விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர், மயக்கவும், மிரட்டவும் முடிகிறது என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக் காரர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்!

மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடிகிறது.

நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக் கொண்டும், எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது "பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக் கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மக்கள் "ஓட்டு' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட்டு அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச் சந்து பொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் - அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!!

இந்த முறையில்தானே தம்பி! காரியம்.

மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புதுத் தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம், பெற்றுக்கொள்க என்று பேசுகின்றனர்.

ஐயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர், புதுப் புதுத் தொழில் வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர்; என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர்களுக்கு. அப்படியானால், தொழில் வளர வேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா! - என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள்.

தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. என்பதற்கான தகவல். திகைத்தே போனேன், சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல், காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில்தானே, காந்தியாரே சுட்டுக் கொல்லப்பட்டார்! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்தவரையிலே, முற்றிலும், உண்மை.

ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப் பிரதேசத்தில், மிகப் பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார்.

தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்துகொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிருக் கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இதுகூடத் தெரியவில்லை, இந்த தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கி ன்றனர்.

ஆனால், தம்பி! பிர்லா, அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே, அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப்பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவில் இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!!
இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினியமாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!'' என்று அழகாக, எந்த நாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார்.

பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப்பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும் இணைக்கிறது.

டெல்லியில், பிர்லா பஞ்சாலை!

பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை.

குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை.

கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை.

மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை.

ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை.

ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை.

பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில்.

ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை.

கல்கத்தாவில், நெசவாலை யந்திர உற்பத்திச் சாலை.

கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற்சாலைகள்.

கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தணை பெயர்களில் சர்க்கரை ஆலைகள்.

பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில்.

வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியண்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில்.

ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை.

ஓரியண்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.

பம்பாயில் ஹிண்ட் சைக்கிள் தொழிற்சாலை.

கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை.

ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை.

பம்பாயில், உருக்கு உலை.

கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற் சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை, இவ்வளவும்.

போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை.

தேடத்தேடத், தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது?

காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன?

இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக் கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட "ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்?

காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கரை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கரை கோடிகளாகின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது.

குடிஅரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா?

பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செல விடப்படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளி களுக்குத்தான் சேருகிறது - அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக.

"முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே - இதிலே, பல தொழில்களை அமைத்துக் கொண்டு, ஏகபோக பாத்தியதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர்களிடம் போய்ச் சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச், சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே, இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்?

தொழில் உலகில், வல்லரசு அமைத்துக் கொள்ளப் பெரிய முதலாளிகளால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை.

தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்.''

என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால் தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச் செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன - "சூளைக் கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படிதானே!

***

தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடி அரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சியாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும் தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது - ஆட்டி வைக்கிறபடி ஆடும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்!

குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும் படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனேகூட, குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும்.

அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம்.

அண்ணன்,

30-10-1960