அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)
1

தம்பி!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்,
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்''

என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா!

அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள், எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது.

1956-57ஆம்ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலை குறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப் பட்டது.

வேறு எந்தச் செயலிலே காட்டத் தவறினாலும் காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரைகளைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிக மிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு, வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம் - அளவில் குன்று! பலன்? குடிஅரசுத் துணைத் தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கை யில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக் கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்; தொகுதி மூன்று 121 பலன் ஏதும் விளையவில்லை!!'' - என்று மெத்த வேதனையுடன் பேசினார்.

ஆளவந்தார்கள், குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலாவருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறு கின்றன; அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடு கிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்பட வேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது.

அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு, நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கை களிலே ஒன்றுதான் 1956-57ஆம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங்குடிமக்கள், இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராமராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது.

***

3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உழவுத் தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக் கொண்டு அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும் பகுதி, உழவுத் தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும்.

அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது?

உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்து கொண்டு வருகிறது.

நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது.

உழவுத் தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப் பட்டுப்போயிருக்கிறது.

முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர் களுக்கு, இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன.

உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன. காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக (!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர் - தாய்மார்கள்.

சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 53!

கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி!
கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி!

என்று, "மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது, ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.

1951ஆம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம், 1957ஆம் ஆண்டில் கணக்கெடுக்கும்போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக் கிறதாம்!!

கோழி கூவாமுன்பு எழுந்திருந்து சென்ற, கோட்டான் கூவும்வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக் கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத்திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன.

நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள! நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட! இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர், உழுது கிடப்போர்! வருவாய் குறைந்து விட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்து விட்டிருக்கிறது!

உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனையூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகி விட்டிருக்கிறது.

முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக் கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு, ஆண்டொன்றுக்கு, 618-ரூபாய் பிடிக்கிறதாம்.

***

தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை!

உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது.

இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டு, பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது,

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்

என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்துவிடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!! - என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு. ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேசவருகிற அமைச்சருடன்தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள், இப்படி ஒரு படையே வருகிறதே! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக் கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்?

அதோ அமைச்சரின் கால் தூசு தன் மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக் கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுதுகிடப்பவர்களை! "கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப் பிழைக்கிறான், உழவன்; அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூற முடியும்?

"காங்கிரசாட்சியிலே ஆதிதிராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது.'

என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார்.

ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கிகளுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்?

***

அஞ்சி அஞ்சிச் சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

என்றல்லவா, பாரதியார் பாடினார்.

அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும்.

அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ள முடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக் கொண்டிருக்கிறது.

குடிஅரசு முறை, மக்களிடம் "ஓட்டு' வாங்கி நடத்தப் படுவது.

ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர்களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்?

செய்தவைகளை எடுத்துக்காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஒட்டுக் கேட்க வேண்டும்.

அப்படிக் கேட்டுப் பெரும் அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும்.

அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, "ஓட்டு' வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைக் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர்.

***

கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது.

விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத் தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன்; கட்சி வளர்ச்சிக்காக அல்ல.

***

"மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை, என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக், குடிஅரசு முறையைத் தேடினர்; குடிஅரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஓட்டுக் கேட்பது, முடி அரசு முறையின் கேடு பாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.

எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மைnயான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டுமானால், பொதுத் தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னா லாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியை விட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, "ஓட்டு' கேட்க வேண்டும்.

***

"முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார்.

அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக்கூடங்கள், ஏற்றிய விளக்குகள் - இவைகளுக்காக வாங்கிய வரித்தொகை - இந்தக் கணக்கைக் காட்டி, "ஓட்டு' வாங்கிவிடட்டும், பார்க்கலாம்!!

தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக் கூடத் தூய்மைப்படுத்த மிக மிகத் தேவை.

எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள் முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்தவேண்டும்.

ஏதோ ஓரளவுக்காகிலும், குடிஅரசு முறை பலன் தர வேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆக வேண்டும்.

பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர் களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார் - அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப்படுவது, மக்களை மிரட்டி "ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது.

தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற "அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக்காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும்.

***

கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே, நெஞ்சின் குமுறலை அடக்கிக் கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை.

குடிஅரசு முறையிலே செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து, பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன் - என் வார்த்தையைக் கேட்டு விட்டு, அமைச்சர்களுக்கு, "ரோஷம்' பொத்துக் கொண்டு வந்துவிடும். "அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த் துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும் - நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் "ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக் கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ் செருப்பு - வீசி எறிந்து விட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறி விடுவார்கள். என்ற நம்பிக்கையுடன் இதைக் கூறவில்லை. நாடு அறியட்டும், இவர்கள் நிலைமையை-மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும் - பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள் - அதுதான் முறை - எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்று தத்துவம் பேசுகிறீர்கள் - ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக் கேட்க நீவிர் வருகிறபோது, நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டி இருக்கிறது - நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்க வேண்டி நேரிடுகிறது - எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு, பதவி தரும் பலம் தெரிகிறது - திகில் பிறக்கிறது - ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள் - இது குடிஅரசு முறை அல்ல - தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள் - காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்கவேண்டியவைகளைக் கேட்கிறோம் - அதுதான் முறை - என்று மக்கள் கூறவேண்டும் என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன்.