அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"எங்கள் நாடு"
1

காகிதத் தொழிலில் வடநாட்டு முதலாளிகள் -
திராவிடநாடு விடுதலையின் அவசியம் -
இந்திய உபகண்ட வாழ்க்கை நிலை

தம்பி!

"எங்கள் நாடு!
இது எங்கள் நாடு!
எங்கும் புகழ் தங்கும் நாடு
வளம் பொங்கும் நாடு
வந்த எல்லார்க்கும்
இடம் கொடுத்து
ஏமாந்த நாடு!!''

கவர்னர், சேலம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இந்தப் பாட்டுக் கேட்டாராம்! பள்ளிச் சிறுமிகள் இந்தப் பாட்டுப் பாடி, அதற்குத் தகுந்த நாட்டியமாடிக் காட்டினராம். தம்பி, கவர்னர் நல்ல கலாரசிகர்! திருவல்லிக்கேணி, மயிலை, அடையாறு, இவைகள், நமது நாட்டுப் பண்பாடு இன்னதென்று அறியாத வெள்ளைக்காரர்களுக்கே "கலாரசனை' ஊட்டின என்றால், நமது கவர்னருக்கு அதை ஊட்டச்சிரமம் என்ன ஏற்பட்டிருக்கப் போகிறது. அவரும் கலா நிகழ்ச்சிகளிலே அடிக்கடி கலந்து கொள்கிறார். எனவே, பள்ளிச்சிறுமிகள் பாடிஆடிய போது, அவர் அரும்பும் - மணம் தருகிறது என்றெண்ணி இருக்கக்கூடும். கலை, கடற்காற்று வீசும் இடங்களிலே மட்டுமல்ல சிற்றூர்களிலும் சிறப்புடன் விளங்க முடியும் என்று எண்ணி மகிழ்ந்திருப்பார். கலைவளர்ச்சிக்கு இந்தச் சிறுசுகளின் சிங்கார நடனம் ஒரு எடுத்துக்காட்டு என்பதுபற்றிக் கவர்னர் எண்ணிக்கொண்டிருந்திருப்பாரே தவிர, அந்தப் பாட்டின் பொருள்பற்றி அவர் சிந்தனையைச் செலவிட்டிருக்கமாட்டார்; பொருள் தெரிந்த சிலரும், எங்கே இந்தப் பாடலின் பொருள் கவர்னர் பெருமானுக்குத் தெரிந்துவிடுகிறதோ என்றுதான் கவலைப்பட்டி ருப்பார்களே தவிர, பொருளை விளக்கி இருக்க மாட்டார்கள்.

எல்லா வளமும் பொங்கிடும் எழில் நாடு, எங்கள் தமிழ் நாடு! ஆனால் யாராரோ வந்தார்கள், வந்தவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்துக் கொடுத்து, ஏமாந்த நாடு இது என்று, இரக்கமும் வெட்கமும் எழத்தக்கவிதமான பொருள்கொண்ட பாடல் அது. "ஓர் இரவு' எனும் படக் காட்சியில் இருப்பது; பாடலைத் தீட்டியவர் முத்தமிழ்க் கலா வித்வரத்ன டி.கே. சண்முகம் அவர்கள். அவர்கூட, இன்றைய நிலையில், விரும்ப மாட்டார் என்று எண்ணுகிறேன், இப்படிப்பட்ட கருத்தமைந்த பாடலைத் தீட்டியவர் என்பதை வெளியே எடுத்துரைக்க, நிச்சயமாகக் கவர்னருக்குப் பொருள் எடுத்துரைக்கப்பட்டி ருந்தால், அவர் கலையைக்கூடக் கண்டித்து விட்டுப் போயிருப்பார்! கலையை, கவர்னர்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியும், காதுக்கு விறுவிறுப்பும், இதயத்துக்கு இன்பமும், நரம்புக்கு முறுக்கும், இரத்தத்துக்குச் சிறிதளவு சூடும் தருவதற்கான சாதனமாக்கிக்கொள்ள விரும்புவார்களே யன்றி, வேறு வகையாகப் புகுத்துவது கடினம் என்று சொல்லத்தக்க கருத்துக்களை, கலைமூலம் புகுத்தவேண்டும் என்ற நோக்கத் துடனா கொள்வார்கள்! செச்சே! கவர்னர்களுக்கு என்ன "விதியா' இப்படி அல்லற்பட! ஆனந்தமாக வாழ, அவர்கள் அரும்பாடு பட்டு, அரசர்களையும், அரசாண்ட ஆங்கிலேயரையும் விரட்டி அடித்து, அரண்மனைகளைக் கைப்பற்றிக்கொண்டு, அறுவடை கண்டு அகமகிழ்கிறார்கள். அந்தநிலையில் உள்ளவர்களிடம், மக்களின் உளநிலையை மாற்றக் கலை பயன்பட வேண்டும் என்று சொன்னால், நிச்சயமாகக் கோபிப்பர்.

கவர்னர்கள் உணரமறுப்பர். கவிதை தீட்டியோரும் அக்கருத்தினை வலியுறுத்திக்கூற விரும்பார். பள்ளியின், பொறுப் பாளர்களும், பாடலின் பொருள் அறிந்தல்ல அதைத் தேர்ந் தெடுத்தது - ஆனால், தம்பி, நம்கெல்லாம், அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, "என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்! "வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!' என்ற பாடலை, வந்தமர்ந்து கோலோச்சும் கவர்னர் எதிரே பாடிக் காட்டினரே, எவ்வளவு அருமை! எத்துணைத் திறமை!'' என்று எண்ணிப் பூரித்திடச் செய்கிறது.

வளமிருந்தும், எழில் நிரம்பியும், வரலாற்றுச் சுவடியில் நல்லிடம் பெற்றும் உள்ள நம் நாடு, வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு - என்ற உண்மையை மட்டும், நாட்டின் பிரச்சினைகளிலே நல்லார்வம் காட்டும் இளைஞர்கள் உணர்ந்து கொண்டு விடுவார்களானால். . . ! தேனென இனிக்கிறது. தம்பி, நாம் செய்ய வேண்டிய பணி, இதுநாள் வரை இதனை உணராதிருப்பவரெல்லாம், இந்த உண்மையை உணரச் செய்வதுதான்! ஓரளவுக்கு நமது முயிற்சி வெற்றிபெற்றுக் கொண்டு வருகிறது - இல்லையானால், ஏமாற்றமும் மனச்சோர்வும் நம்மை எல்லாம் மண்ணாக்கி விட்டிருக்குமே! தமது முயற்சி வெற்றி பெறுவது கண்டு மனம் புழுங்குவோர், நமது மூக்கினைச் சொரிந்துவிடவும், தமது நாக்கினைத் தீட்டிக் கொண்டு நம்மை நிந்திக்கவும் முற்படுகிறார்களல்லவா! தம்பி, நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அறிகுறிகள் அவை.

நம் நாடு - திரு இடம் - இன்று "வடவருக்கு' பல்வேறு துறைகளிலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது, என்ற பொது உண்மையை நாட்டவரில் மிகப்பெரும் அளவினர் உணர்ந்து கொண்டுவிட்டனர்; சிலர் திகைப்புற்றுக் கிடக்கின்றனர்; வேறு சிலர் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமலிருக்கும் வரையில் மனதுக்கு அமைதி இருக்கும் பிறகு புயலல்லவா புகும், நமக்கேன் வீண்வேலை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்; ஆர்வமுள்ளவர்களோ, அடிமைத்தனத்தின் பொருளைக் கண்டறிந்து விளக்கும் அரும்பணியில் ஈடுபட்டபடி உள்ளனர். ஒரு தம்பி, இதை எனக்கு அனுப்பி, வடநாட்டு ஆதிக்கம் எப்படி எப்படி வடிவமெடுத்திருக்கிறது பார், அண்ணா! என்று கூறுகிறார்.

"இந்திய உபகண்டத்தின் பெருமளவு உற்பத்தியில் ஓரளவு பெரிய பங்கு பெற்றிருப்பது காகிதத் தொழிலாகும். காகிதத் தொழிலின் முடிசூடா மன்னர்களாக இன்றைய நிலையில் காணப்படுவது - ஆளுகை நடத்துவது வடநாட்டுப் பெரு முதலாளிகளே.

இந்தியாவின் வட பகுதியில் :-
1. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்
2. டிடாகூர் பேப்பர் மில்ஸ்
3. பெங்கால் பேப்பர் மில்ஸ்
4. இந்தியா பல்ப் பேப்பர் மில்ஸ்
5. ஸ்ரீகோபால் பேப்பர் மில்ஸ்
6. பெல்லார்பூர் பேப்பர் மல்ஸ்
7. ஸ்டார் பேப்பர் மில்ஸ்
8. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ்
9. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ்
10. இந்தியா பேப்பர் மில்ஸ்
11. போபால் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்
12. குஜராத் பேப்பர் மில்ஸ்
13. அரவிந்த் பேப்பர் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்
14. *டெக்கான் பேப்பர் மில்ஸ்
15. *சிர்பூர் பேப்பர் மில்ஸ்
16. *ஆந்திர பேப்பர் மில்ஸ்
17. *மைசூர் பேப்பர் மில்ஸ்
18. *காவேரி பேப்பர் மில்ஸ்
19. *புனலூர் பேப்பர் மில்ஸ்

இன்னும் பெயர் குறிக்க முடியாத வெகு சிறிய 4 அல்லது 5-காகித ஆலைகள் இந்திய நாட்டில் உள்ளன. ஆக மொத்தம் உள்ள 23 ஆலைகளில் 4-தென்னகத்தில் உள்ளன. ஒன்று தக்காணத்தில் உள்ளது.

தென்னகத்தில் உள்ள ஆலைகளில் ஒன்று செயல்படுவது கிடையாது. மீதமுள்ள மூன்று ஆலைகளில் ஒன்று அரசாங்கத் துக்கு சேர்ந்தது - ஒன்று அரசாங்கத்தின் ஓரளவு மேற் பார்வையில் திறம்பட நடந்து வருகிறது - ஒன்று ஆங்கில முதலாளிகளுக்குச் சேர்ந்தது. தென்னக ஆலைகள் மூன்றும் - ஆந்திரத்தில் ஒன்றும் - கன்னடத்தில் ஒன்றும் - மலையாளம் (திருவாங்கூர் - கொச்சியில்) ஒன்றுமாகத் தமிழகத்தில் ஏதுமில்லாமல் வியாபித்தும் இருக்கின்றன.

ஆலைகள்தான் இல்லையென்றாலும் கூட, ஆலைகளின் "ஏஜெண்டுகளாவது'' தமிழர்களாக உண்டா என்றால் அதுவும் கிடையாது.

கண்ணாடிக் காகிதம் தயார் செய்யும் ஒரே ஒரு ஆலை மட்டும் தமிழர்களின் சொத்தாக திருவாங்கூர் - கொச்சியில் செயல்பட்டு வருகிறது - அதுவும்கூடத் தமிழகத் தேவைக்கு சிறிது கூட "சப்ளை'' செய்ய முடியாத நிலையில், வடநாட்டுக்கே பெருமளவு கட்டுப்பட்டுத் தொழில்பட வேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. எனவே அது தமிழகத்தைப் பொறுத்தவகையில் இருந்தும் இராததாகவேதான் உள்ளது.

குறிப்பாக, "அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்'களின் பட்டியலை நோக்குவோம்.

1. இந்திய நாட்டின் மிகப் பெரிய காகித ஆலைகளின் பெரியதான டிடாகூர் பேப்பர் மில்ஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், சௌத் இந்தியன் எக்ஸ்போர்ட் கம்பெனி லிமிடெட்.

2. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்ý லாலா கோபி கிருஷ்ணா கோகுல்தாஸ்.

3. பெங்கால் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: வில்சன் அண்டு கோ லிமிடெட், முன்னர் விற்பனையாளர்களாகச் சொல்லப்பட்டு வந்தனர்.

4. இந்திய பல்ப் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பேரி அண்டு கோ லிமிடெட்.

5. ஸ்ரீ கோபால் பேப்பர் மில்ஸ், பெல்லார்பூர் : ஜெய்தயாள் கபூர்.

6. ஸ்டார் பேப்பர் மில்ஸ்.

7. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளையர்ஸ் லிமிடெட், ஈஸ்ட் அண்டு வெஸ்ட் டிரேடிங் கம்பெனி, ஜெ. பி. அத்வானி அண்டு கோ லிமிடெட்.

8. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்: லாலா கோபி கிருஷ்ண கோகுல்தாஸ்.

9. இந்தியா பேப்பர் மில்ஸ்.

10. போபால் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்: பரசுராம் ஜெதானந்த்.

11. குஜரத் பேப்பர் மில்ஸ்; ஜெ. தடானி அண்டு கோ லிமிடெட்.

12. அரவிந்த் ஸ்ட்ராபோர்டு: எ. எம். ஆறுமுகம்.

13. டெக்கான் பேப்பர் மில்ஸ் லிமிடெட்.

14. சிர்பூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளையர்ஸ் லிமிடெட்.

15. ஆந்திரா பேப்பர் மில்ஸ் : டி.என். கங்கப்பா.

16. மைசூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்.

17. காவேரி பேப்பர் மில்ஸ் லிமிடெட்.

18. புனலூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: W.A. பியர்ட்செல் அண்டு கோ லிமிடெட்.

கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் பட்டியலை நன்றாகக் கவனித்து வாருங்கள். ஏறக்குறைய 24/25 ஆலைகளின் பூரண விற்பனையாளர்களாக வடநாட்டார்களாகவும், ஒரு சிலவற்றிற்கு அன்னிய நாட்டினருமே விற்பனையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தென்னாட்டின் காகித வாணிபம் அனைத்தும் வடநாட்டினரின் கைக்குள் அடக்கப்பட்டு, தென்னாட்டுக் காகித வாணிபம் அனைத்தும் "எடுப்பார் கைப்பிள்ளை'யின் நிலையை ஒத்ததாக அமைக்கப்பட்டு விட்டது - பரிதாபத்துக் குரிய செய்தி.

அவர்களின் கண்டு விரல் அசைந்தால், தென்னாட்டு காகித வாணிக மன்னர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது திடுக்கிடும் செய்தியே யானாலும், உண்மையானதே. மறுக்கமுடியாத, பரிதாபத்துக் குரியநிலை, அழிக்கப்பட வேண்டிய நிலை என்றைக்கு வருமோ, அன்றேதான் நம் வாழ்வு விடியும். அந்நாள் எந்நாளோ''

வாழ்வு விடியவேண்டும்! அந்நாள் எந்நாளோ!! - என்று ஏக்கத்துடன், இந்தக் கோவைதம்பி குமுறுகிறார்-"காகிதம்' மட்டும்தான் இங்கு கவனிக்கப்பட்டது - இதற்கேகூட, இந்த ஏக்கக் குரல் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே ஒரு எக்காளம் கேட்கிறது - வடக்கே, மற்றோர் புதிய காகித ஆலை துவக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

காகித ஆலைகள் சம்பந்தப்பட்ட மட்டும்தானா இது? இல்லை, இல்லை! எந்தத் தொழிலிலும் வடநாடுதான் ஆதிக்கம் செய்கிறது - சர்க்கார் தீட்டும் எந்தத் திட்டமும் மேலும் மேலும் வடநாட்டைக் கொழுக்கச் செய்வதாகத்தான் இருக்கிறது - சர்க்காரே வடநாடு தானே! இந்தியா ஒரே தேசம் என்ற கண்ணோட்டம் வேண்டும்; வடக்கு, தெற்கு என்று பிரிப்பது தவறு, தீது, அறிவீனம் என்று பேசுவதால் "மேதை'ப் பட்டம் கிடைத்துவிடும் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களின் தொகையும் குறைகிறது; அவர்களிடம் மக்களுக்கு அருவருப்பும் வளருகிறது!

வடநாட்டு முதலாளி - தென்னாட்டு முதலாளி என்று ஒரு பாகுபாடு உண்டா! மதியிலிகாள்! மார்க்சின் சித்தாந்தத்தை அறியாத வகுப்புவாத வெறியர்காள்! ஏழை எங்கும் வதை படுகிறான். வடக்காக இருந்தால் என்ன, தெற்கு ஆனால் என்ன? வடக்கையும் வறுமை வாட்டுகிறது, இல்லாமை, போதாமை கொட்டுகிறது! - என்று பேசுகின்றனர் கம்யூனிஸ்டுகள்! காங்கிரஸ்காரர்களைவிடக் காரசாரமாகப் பேசி, வடநாட்டுக்குக் கங்காணி வேலை பார்க்கும் இந்தக் கம்யூனிஸ்டுகளின் வாயும் அடைபடும் விதமாக நிலைமை வளர்ந்து விட்டிருக்கிறது. வடநாடு - தென்னாடு என்று பேசுவது வர்க்கப் போராட்ட சித்தாந்தத்துக்கு உகந்ததல்ல என்று பேசிவந்தவர்கள், இன்று, நாடு மெள்ள மெள்ள, ஆனால் உறுதியுடன் போர்க்கோலம் கொள்வதையும், நாட்டை வடவருக்குக் காட்டிக் கொடுப்பவர் களைக் கயவர் என்று கண்டித்து அவர்தம் கருத்தினைக் கருக்கிடவும், பிடியினை நொருக்கிடவும் துடிதுடித்துக் கொண்டிருப்பதையும் கண்டு, கிலிகொண்டு, பொது மக்களின் சீற்றத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டு விடுவோம் என்ற அஞ்சி, இப்போது, தென்னாட்டுக்குத் தொழிற்சாலைகள் வேண்டும். சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை வேண்டும், நெய்வேலி நிலக்கரியை வெளியே கொண்டு வந்தாக வேண்டும், என்று "முழக்கம்' கிளப்ப முன் வருகிறார்கள். உள்ள, இரும்புத் தொழிற்சாலைகள் போதாது, மேலும் ஒன்று வேண்டும், அது சிந்து நதி தீரத்திலோ, சீராளாவிலோ, அசாமிலோ, அமிர்த சரசிலோ, எங்கே அமைக்கிறீர்கள் என்பதுபற்றி எமக்குக்கவலை இல்லை; நாங்கள் அத்தகைய குறுகிய மனப் போக்கினரல்ல, எமது கண்ணோட்டம் பரந்து விரிந்து இருப்பது, எமக்கு வடக்கும் கிடையாது தெற்கும் கிடையாது, என்று பேசுவது மிக விரைவில், சீந்துவாரற்றுப் போகும் நிலையைத் தந்துவிடும் என்று கிலிகொண்டு, சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி என்று பேசுகிறார்கள் - எங்களைக் "காட்டிக்கொடுப்பவர்கள்'' - "கயவர்கள்'' "கங்காணிகள்'' என்று கண்டித்து எதிர்த் தொழித் திடக் கிளம்பிவிடாதீர்கள், நாங்களும், சேலம், நெய்வேலி இவை சார்பாக வாதாடுகிறோம் என்று கூறி, பல்லிளிக்கத் தொடங்கி விட்டனர்!

ஜனாப் ஜின்னா, பாகிஸ்தான் பரணி பாடியபோது, காங்கிரஸ்காரர்களை விடக் கடுமையாகத் தாக்கினார்கள், கம்யூனிஸ்டுகள். நாடு துண்டாடப்பட விடமாட்டோம் என்று முழக்கமிட்டனர். பிரிவினை எதிர்ப்பு நாள் மாநாடு - மகஜர் - வெகுஜன எதிர்ப்பு - பொதுஜன அணிவகுப்பு - என்றெல்லாம் பலப்பல அதிர்வேட்டுகள் கிளம்பினர். "ஆனானப்பட்ட காந்தியாரும், அதி வீரதீரர் படேலும், அலகாபாத் பண்டிதரும், பஞ்சதந்திரம் தெரிந்த ஆச்சாரியாரும் கிளப்பிய எதிர்புகளே முறிய ஆரம்பித்தன - அவர்களே ஜின்னாவின் "முக வாய்க்கட்டை'யைப் பிடித்துக் கொண்டு, கெஞ்சும் நிலை பிறந்தது- ஏதேது கப்பல் கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது என்று தெரிந்ததும், கம்யூனிஸ்டுகள் தங்கள் போக்கை அவசர அவசரமாக மாற்றிக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு தரத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டினர். எங்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சுகிற தீர்மானமாக இருந்தது. பத்திரிகை நிருபர்கள் ஜனாப் ஜின்னாவைக் கண்டு, கம்யூனிஸ்டு தீர்மானத்தை எடுத்துக் காட்டி, அவர் கருத்தைக் கேட்டனர். அவர் சொன்னார், "பாகிஸ்தான் திட்டத்துக்கு ஆதரவு திரண்டு வராதிருந்த கட்டத்தில், அதன் நியாயத்தை இந்த யோக்கியர்கள் மதித்து ஏற்றுக் கொண்டிருந்தால், நான் இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கு நன்றி செலுத்தி இருப்பேன்! என் திட்டத்தை விளக்கமறியாத முஸ்லீம்களும், வீம்புக்காரக் காங்கிரசாரும் எதிர்த்தபோது, கம்யூனிஸ்டுகள் அவர்களோடு சேர்ந்துகொண்டு என்மீது கல் வீசினர். இப்போது, பாகிஸ்தான் பெறப்போவது உறுதி என்ற கட்டம் பிறந்துவிட்டது. இப்போது இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவுத் தீர்மானம் போட்டு என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்! என்னுடைய நன்றியையா? பைத்தியக் காரர்கள்! அவர்களுக்கு இப்போதாவது தெளிவும் யூகமும் ஏற்பட்டதே என்று மகிழ்ச்சி அடைகிறேன் - அதுவே தவிர என் நன்றிக்கு அவர்கள் உரியவர்களல்ல'' என்று கூறினார். சுருண்டு கீழே விழுந்த அந்தச் சூரர்கள் மறுபடியும் எழுந்து அவர் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு பலமான அடிவிழுந்தது. அதே போக்கிலேதான், திராவிட நாடு விஷயமாகவும், கம்யூனிஸ்டுகள் கையாண்டு வருகிறார்கள். வடக்காவது தெற்காவது என்று "பாரதம்' பேசி வந்தவர்கள். இப்போது தெற்கிலேயும் தொழில் வளரவேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளனர்.