அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எரிகிற தழலில்...!
1

தேர்தலுக்கு நேரு வருகை -
அரியலூர் விபத்து -
பெரியாரும் காமராஜரும்

தம்பி!

நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார்.

"கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!'' என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!!

எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு.

சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர் இரயில் விபத்து நேரிட்டது - சர்க்கார் கணக்களித்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் "கனம்'கள்.

அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!! - என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப் போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும். - இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர்.

நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும் துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை.

அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்!

வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்! - என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக் காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; "மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள் - அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை "ஓட்டு' நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள் - எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள் - இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன் - இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள் - என்று கூடப் பேசுவார்.

தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவி லிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்.

ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை.

தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்!

தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார் - ஆனந்தத்தோடு வருகிறார்!

சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்!

கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்! திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட் டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்!

தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!- என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்!

எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார் - விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால் வருவது இல்லை. வரவேண்டும் - ஆறுதல் அளிக்கவேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான்.

நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது - அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது - விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது - அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது.

வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ்காரரும் சொல்லிவிட முடியாது.

கோசி நதியால் வெள்ள விபத்து

கட்சு பூகம்ப விபத்து

அசாமில் வெள்ள விபத்து

உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து.

இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும்.

அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் - வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!!

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே - அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை.

ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது.

"நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வை யிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று''

இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது.

அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது.

அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட, காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்! - என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேரு பண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது.

தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளி களையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார் - அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக் களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டுகூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள் - காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே! - என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்!

இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!!

சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேரு பண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள் - எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத்தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்!

பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார் - செய்யட்டும் - ஆனால் அது போதாது - காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும் - அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது'' இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம்.

பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும் போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோμயலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே!! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப் போகிறார்கள்!

"நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்'' என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மனவேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்துவிடமாட்டேன். நான், ஏன் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.

எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய - அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின் போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்கவைக்கட்டும் - தம்பி - எனக்கு அதுபற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப்படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது!

ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம் - ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள் - ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை - மாற்றாந்தாய் மனப்பான்மையை - மாற்றிடப் பொதுவான, பலமான, முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த்தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார்.