அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எழிலோவியம்

தலபுராணங்கள் -
குற்றாலத்தின் எழில்

தம்பி!

முத்தனையார் வரம் பழித்தோர்
முதுகுரவர்க்கு இடம் புரிந்தோர்
முக்கண்ணானை நத்தனை, நான் முகத்தோனை இகழ்ந்தோர்
பல்லுயிர் செகுத்தோர்
நன்றி கொன்றோர்
கத்தனை விட்ட மர்க்களத்திலோடினோர்,
நம்பினர்க்கு கபடம் செய்தோர்
எத்துணை பாதகரேனும்
வடஅருவி படிந்தவர்
வீடு எய்துவர்

இது தெரியாது, எனக்கு, இங்கு புறப்பட்டபோது; தெரிந்திருந்தால், வேறு சிலருக்கு முன்கூட்டியே "சிபாரிசு' செய்திருக்கலாம்; இங்கு வந்து "தலபுராணம்' படித்தபோதுதான், இது இத்தனை பெரிய "பாவமன்னிப்பு' இடம் என்பது தெரிந்தது! பாவம் செய்தவர்களுக்கே, கரை கழுவி விடப்படுகிறது என்றால், பாவி என்று பாதகர்களால் ஏவி விடப்பட்ட பாமரரால் தூற்றப்படுபவர்களுக்கு பலன் நிச்சயமாகக் கிடைக்கத்தானே செய்யும்! இங்கு, நான் பலர் குளித்துக் குதூகலிப்பதைக் காண்கிறேன். காவி உடையும் பொன்னிற மேனியும், கருத்துச் சுருண்டு கவர்ச்சிகரமாகக் காட்சி தரும் தாடியுடன் கூடிய "தருமபுர'த்தையும் காண்கிறேன், துள்ளித்திரியும் பருவத்தினர், துவண்டு போகும் நிலையினர், தொங்கு சதையினர், தோலால் எலும்புக் கூட்டினைப் போர்த்திருப்போர், சீமான்கள், அவர்களைச் சீமான்களாக்கியதால் சீரழிந்து கிடப்போர், மதி முகவதிகள், அது அற்ற நகைப்பொதிகள், பலர், பலப்பலர்! அனைவருக்கும் இன்பம் அளித்திடும் அந்த அழகிய அருவி, என்றென்றும் இதேவள்ளற்றன்மையோடு இருந்திடுவதாக என்று வாழ்த்துவதுடன், நம் திருவிடத்தில் என்னென்ன இயற்கை எழில் காணக் கிடக்கிறது என்பதை எண்ணி எண்ணிப் பூரிப்படைகிறேன்.

தலபுராணம் எத்துணையோ இடங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. படிப்போர், அகமும் முகமும் மலர்ந்து, நந்தம் நாட்டின் சிறப்புத்தான் என்னே! இத்துணை இடங்கள் உள்ளனவே பாவங்களைப் போக்க, என்று இறும்பூதெய்து கின்றனர். தம்பி-நான் உள்ளபடியே வெட்கப்படுகிறேன், வேதனையுமடைகிறேன் - இவ்வளவு இடங்கள் தேவையாக இருக்குமளவுக்கா இங்கு பாபம் மலிந்து குவிந்து வளர்ந்து கிடக்கிறது என்பதை எண்ணிடும்போது. தத்தமது பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட இடங்களை, விளம்பரப்படுத்தும் முறையில், தலபுராணங்களை ஆக்கினரேயன்றி, பிற எந்த நாட்டுக்கும் தேவையில்லாதிருக்கும்போது இங்குமட்டும் ஏன் இத்தனை பாபம் போக்கும் பதிகளும் நதிகளும்! இங்குள்ளோர் பாவச் செயல்களில் விடாமல் ஈடுபட்டுக் கிடக்கும் இழிதன்மையிலா உளர் என்பதுபற்றி எண்ணிப் பாராதாரில்லை. ஏனோ?

"ஐயோ! உம்மை போட்டோ எடுக்கப் போகிறேன்.''

"என்னையா? ஏன். . .''

"ஏன் என்பது கிடக்கட்டும். போட்டோ எடுத்துக் கொள்வதாலே உமக்கென்ன நஷ்டம், கஷ்டம், பணம் தர வேண்டாம்; இலவசமாகவே போட்டோ எடுத்துத் தருகிறேன்.''

"இலவசமாக!. . . ஆச்சரியமாக இருக்கிறதே. . .''

"நேரமாகிறது! அப்படியே அந்த மரத்தடியில் நில்லும். . . இதோ பாரும் சட்டையைக் கழட்டி விடும். . . ''

"சட்டையைக் கழற்றிவிடுவதா? ஏனய்யா! சட்டை நன்றாகத்தானே இருக்கிறது. . .''

"அடா அடா! பெரிய தொண தொணப்பு ஆளாக இருக்கிறீரே. சட்டையில்லாமல் தானய்யா போட்டோ எடுக்க வேண்டும். . . இதோ பாரும். . . ஊரெங்கும், நாடெங்கும். . . உம்போட்டோவை ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் அச்சிட்டு ஒட்டப் போகிறோம், தெரிகிறதா! எங்கும் எம் போட்டோ! மதில் சுவர்களில், மாட மாளிகைகளில், கடை வீதிகளில், வண்டி வாகனங்களில், சினிமாக் கொட்டகையில், சிங்காரப் பூந்தோட்டங்களில், எங்கும் உம் போட்டோ இருக்கும். . .''

"புரியவில்லையே. . . சரி. . . நான் போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டேன். . .''

"பத்து ரூபாய் இனாம் தருகிறேன். . .''

"உஹும். . .முடியாது. . .என்னமோ சூக்ஷமம் இருக்கிறது. ஐம்பது கொடுத்தால்தான் நான் ஒப்புக்கொள்வேன்.''

"பேராசைக் காரரய்யா நீர்! இருபது தருகிறேன். . .''

"ஐம்பதுக்குச் சம்மதமானால் பேசு. . . இல்லையானால் போகலாம். . .''

"சரி! சரி!.... கழற்று சட்டையை.... கைகளைத் தொங்க விடய்யா.... போதும்..... சிரிப்புக் வடாது.... சும்மா பாரும் போதும்....,

போட்டோ எடுக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் விளம்பரத் தாட்கள்! போட்டோ படத்தின்கீழ். . . இப்படிப்பட்ட கடுமையான குஷ்டரோகியும் எமது குஷ்ட விநாசனி தைலம் பூசிக் கொண்டால் முப்பது நாளில் பொன்னிற மேனி பெறுவர்!- என்று விளம்பரம் காணப்பட்டது. ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்ட அப்பாவியை அவனுடைய நண்பர்களே கூட "குஷ்டரோகி' என்று எண்ணி ஒதுக்க ஆரம்பித்தனர்!!

மருந்து விளம்பரத்துக்காக, அப்பாவியைக் குட்ட நோயாளனாக்கிக் காட்டியதுபோல, ஆறுகளுக்கும், திருக்குளங் களுக்கும், சோலைகளுக்கும், ஊர்களுக்கும் கீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, "தலபுராணங்கள்' புனையப்பட்டன! அதனால், அந்தத் தலங்களின் மகிமை தெரிவதைவிட, விளக்கமாக, பாவச்செயல் புரிவோர் மிகுத்திருக்கிறார்களா என்று எண்ணித்தான் நம் போன்றார் ஆயாசப்பட வேண்டி இருக்கிறது.

பாரேன் தம்பி, துவக்கத்தில் உள்ள பாடலை, பாவங்களின் பட்டியலைக் கொடுத்து, இவ்வளவு பாபங்களையும் போக்கும் பதி இது என்று கூறப்பட்டிருக்கிறது.

பாவங்களைப் போக்கிடும் என்று மட்டும் கூறினால் போதாது, என்றெண்ணி, "தலபுராணக்காரர்' எல்லாப் பருவத்தினரின் பாபமும் போக்கப்படும் என்று வேறு கூறுகிறார்.

அறியாமல் இளமையில் செய் பாவமெலாம் நண்பகலில் ஆடத் தீரும்!

காளையராய் மனதறியச் செய்த பாவம், சிறுகாலை படிந்திடில் போம்!

வறிதான புன்மாலை படிந்தார்க்கு முதுமையில் செய் மாபாவம் போம்!!

முப்பொழுது ஆடில், எழுபிறப்பும் பெயர்க்கும்!!!

இவ்வளவு மகிமை கூறப்பட்டிருக்கும் குற்றாலத்தில் இருந்து கொண்டு இதை எழுதுகிறேன், தம்பி!

இருந்துகொண்டு என்றால் சாதாரணமாகவா!

சிங்கம்பட்டி ஜெமீன்தார் மாளிகையில் இருந்துகொண்டு எழுதுகிறேன்.

அழகான மாளிகை! நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கூடம், "தர்பார்' நடத்துவதற்கான இடம்! ஜெமீன்தாரரின் உருவப்படங்கள் என்னை நோக்கியபடி!! நுழைவு வாயிலில், அவர் புலியுடன் - யானையுடன் - இருக்கிறார் - படங்கள் - வேட்டையில் அவர் சாகடித்தவை!

ஏதேது! அண்ணனுடைய நிலை ரொம்பரொம்ப! உயர்ந்து விட்டது போலிருக்கிறது, சிங்கம்பட்டி ஜெமீன் அரண்மனை யிலல்லவா இருக்கிறார், என்று எண்ணிக்கொள்வாய், தம்பி, என் நிலை உயர்ந்துவிடவில்லை, சிங்கம்பட்டி ஜெமீன் நிலை அவ்விதமாகி விட்டது!!

சிங்கம்பட்டியின் இந்தச் சிங்கார மாளிகை போடி நாயக்கனூருக்கு வந்து சேர்ந்து, இப்போது ஒருவர் மொத்த வாடகைக்கு எடுத்து, சீசனின்' போது, அன்றாட வாடகைக்கு விடுகிறார். அந்த முறையில், இந்த மாளிகையின் ஒரு பகுதியை நாளொன்றுக்கு நாலு ரூபாய் வாடகைக்கு என் நண்பர் மதுரை டாக்டர் அருணாசலம் எடுத்திருக்கிறார். அவருடைய விருந்தினன் நான்! புரிகிறதா! உன் அண்ணனுடைய நிலை உயர்ந்ததன் காரணம்!!

கட்டினால் என்ன, கட்டிடத்தில் தங்கியிருந்தால் என்ன, இடம் எழில் நிரம்பியதாக இருப்பதால், களிப்பூறத்தான் செய்கிறது. இங்கு நின்று பார்த்தால், எதிரே தெரியும் சிறு குன்று, பச்சைப்பசேலென்றிருக்கிறது. அந்தப் பச்சைப் பட்டாடை அணிந்த பாவைக்கு முத்தாரம்போல அருவி! காலையில் நீர்வீழ்ச்சி மாலையில் மக்கள் எழுச்சி!! காலையில் குளிக்கிறேன்! மாலையில் களிப்படைகிறேன்! காலையில், மாலையும் அதன் பசுமையும், அருவியும் அதன் குளிர்ச்சியும், என்னிடம் ஏதேதோ பேசிடக் கேட்கிறேன். மாலையில், இத்தகைய இன்பக் காட்சிகளின் இல்லமாக உள்ள தாயகத்தின் நிலை பற்றி மக்களிடம் நான் பேசுகிறேன்!!

செந்நெல்லுக்கு வரப்பு, வாழை!
வாழைக்கு வரப்பு, கரும்பு!
கரும்புக்கு வரப்பு, கதலி!
கதலிக்கு வரப்பு, கமுகு!
கமுக்கு வரப்பு, தாழை!

தம்பி, குற்றாலம் பற்றிய படப்பிடிப்பு இது! காண்போருக்கு கவிதை வடிவில் உள்ள காட்சி, அப்படியே தெரியத்தான் செய்கிறது.

வளம் கொஞ்சும் இடம் இங்கு குறிப்பிடத்தக்க அளவுள்ள வயல், குற்றால நாதருக்கும் குழல் வாய்மொழி அம்மைக்கும் சொந்தம்!

இந்த வயலின் செல்வம், தக்க முறையிலே "குத்தகை' விடப்படாததால், முழுவதும் நாதனுக்குச் சேருவதில்லையாம்!!

பூ! பூ! குத்தகை முறையிலே குற்றம் கண்டுபிடித்து விட்டார்களே, குறும்பர்கள்!! நமது ஆதீனத்துக் குத்தகைமுறை யினை அறியின் இம்மாந்தர் இதனினும் அதிகமாகக்கூடக் கண்டிப்பர்! ஆயினென்! இவர்தம் கண்டனத்துக்காக, எமது முறையினை மாற்றிக்கொள்ளவா இயலும், என்று கூறுபவர் போல, "தருமபுரம்' நீர்வீழ்ச்சியில் குளித்திடக் காண்கிறேன்! மூவர் உடனிருக்கிறார்கள், அவருக்கு "சேவை' புரிய. அவரோ காக்கி உடையற்ற, ராணுவ வீரர் போலவே, அந்த வழுக்குப் பாறைகளிலும், கூழாங்கற்களிலும் நடந்து செல்கிறார்? ப்யூக் கார் காத்துக் கொண்டிருக்கிறது அவருக்காக!! முறை மாறித்தான் விட்டது! ஆனால், அவருக்கு நலன் அளிக்கும் துறையில் மட்டும்தான்! அரன் அருளை, ஆயிரக்கணக்கான வேலிநில உருவில் பெற்று வாழும் ஆதீனகர்த்தா அவருடைய, "இரும்புப் பல்லக்கில்', ஏறுகிறார். திருவருள் கண்டதும் கடுவேகத்துடன் காமக்குரோத மதமாச்சாரியாதிகள் பறந்து செல்கிறதாமே, அது போல, "ப்யூக்' செல்கிறது. போகட்டும்!! இதோ நீர் வீழ்ச்சி!!

வேகம் குறைவு, சாரல் சுகம் அவ்வளவு இல்லை, தண்ணீரின் அளவும் குறைவு என்கிறார் பொன்னம்பலனார் - அவருக்குக் குறைவாக இருப்பது, எனக்கு அதிகமாகத்தானே இருக்கும்! என் உடல் சிவந்து விடுகிறது - தம்பி சம்பத் பொன்குன்றாக இருக்கிறான்!!

எல்லோரும் குளிக்கிறார்கள்! களிப்புடன் விடுதி செல்கிறார்கள்! மீண்டும் வந்து குளிக்கிறார்கள்! மீண்டும் மகிழ்ந்து விடுதி செல்கிறார்கள்!! மீண்டும் குளிக்கிறார்கள்!!

ஐந்தருவி எனும் இடத்தில் அதிகக் கூட்டம் இராது என்றனர் - ஆனால் அங்கும் பெரிய கூட்டம் குவிந்துவிட்டது - சாரல் முடிகிற நேரமாம். எனவே சந்தர்ப்பத்தை இழந்துவிட மனமில்லாதவர்கள், ஒவ்வொரு நாளும், பல்வேறு இடங்களி லிருந்து வந்த வண்ணம் உள்ளனர்!

சேல் குதிக்கும் மலர்ச் சோலை! தேன் குதிக்கும் நான்கு திக்கும்! - என்று கூறப்பட்டிருப்பது, மொழியின் அழகுக்கு மட்டுமல்ல, இடத்தின் எழிலுக்கு முற்றிலும் பொருத்தந்தான்! எரிமலை இல்லை, நீர்வீழ்ச்சி உண்டு! பாலைவனம் இல்லை, சோலைவனம் எங்கும்!! - திருவிடம் இப்படியல்லவா இருக்கிறது சொக்க வைக்கிறது காண்போரை அதன் நிலையை எண்ணிடும்போதோ நெஞ்சு நோகிறது.

தம்பி, இங்கு உட்கார்ந்து கொண்டு, எழிலைப் பருகி, இன்புற்று இருக்கும்போதுதான், ஏடா! மூடா! இதுதானா திராவிடம்! இதோ பார், உன் திராவிடம்! என்று இடித்துக் கூறுவதுபோல, நாளிதழ்கள் காட்டுகின்றன. முதலமைச்சர் காமராஜரும், நிதி அமைச்சர் சுப்பிரமணியனாரும், டில்சென்று, 400 கேட்டு 200 பெற்று, திரும்பிய சோகக்காதையை!!

கொற்றம் நம்மிடமில்லாததால், நமக்கு இழைக்கப்படும் கொடுமை இங்ஙனம் உளதன்றோ, என்ற எண்ணிடும்போது குற்றாலத்துக் குளிர்ச்சியும், உள்ளத்து வெப்பத்தைப் போக்கிட இயலாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

"என்னைக் குறை சொல்லாதே மகனே, நான் உனக்கு எல்லாம் அளித்திருக்கிறேன். இதோ பார், என் அன்புப் பெருக்கு'' என்று தாயகம் கூறுவதும் தெரிகிறது - அருவி வடிவில். சேதியோ, செந்தேளாகிறது.

வண்டாடு மலர்க் கூந்தல் வாராடுங் களப முலை
கண்டாடு மாதர் இதழ், கனியாடு மதுரமொழி
விண்டாடும் கிளிப்பிள்ளை வியந்தாடும் மடப்பூவை
கொண்டாடும் குயிற்பேடை கூத்தாடும் பசுந்தோகை.

குற்றாலம், தம்பி. குற்றாலம்! இங்கு அருவி அழகு! ஆனால் திருவிடத்தின் பொலிவு இஃதொன்றேதானா? அதோ காவேரி! இதோ தாமிரபரணி! வைகைக்குத்தான் என்ன! இந்த ஆற்றோரங்களிலே வளர்ந்த பண்பாடு எத்தகையது! இதோ உழவர், இதோ கற்றுணர்ந்த பெரியோர்கள் சிற்றறிவினரின் செயல்கண்டு வருந்தித் தலைகுனிந்து விடுதல்போல, செந்நெல் கற்றைகள். பழமுதிர் சோலைகள், வாளை துள்ளும் வாவிகள், எல்லாம், எனினும் ஆயிரம் மைல் "யாத்திரை' நடத்தியும், அரும்பெருந் தலைவரே, ஆசியாவின் ஜோதியே, என்று அர்ச்சித்தும், நமது ஆட்சியாளர்கள் பெறுகிற தொகையோ இருநூறு - ஆயிரத்தில் இருநூறு. குற்றாலம் இருந்தென்ன, கொடைக்கானல் எழில் காட்டி என்ன, ஒத்தைக் கல் மன்று, "ஊட்டி'யாகி உல்லாசமளித்தென்ன, எல்லாமிருந்தென்ன, எமக்கென்று ஓர் அரசு இல்லையே, என்றெண்ணி ஏங்கத்தான் செய்கிறது.

அவர் கூறுகிறார், தான் கண்ட அற்புதமான காட்சியை.

இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள்.

கார்நிறக் கூந்தல் என்று வண்ணத்தை மட்டுமல்ல, அது .....சுருண்டு சுழிந்து அழகுற இருக்கிறதாம்.

விழி, இலேசானதா? நெஞ்சைச் சூறையாடுகிறதாமடா, தம்பி.

குழை யேறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள்.

கேட்டாயா? கெண்டை மீன்போன்ற கண்கள் என்று மட்டும் சொல்லவில்லை, அந்தக் கெண்டைகள் நெஞ்சைச் சூறையாடுகின்றனவாம்.

அரும்பு இதழினாள், கரும்பு மொழியினால், முல்லைப் பல்லினாள், பிறை நுதலினாள்!

அழகு சரி, பருவம்? என்று கேட்பரே, இதோ அதையும் கூறுகிறார்.

மங்கைப் பருவத்தாள், மங்கைப் பருவத்தாள் என்றால் என்ன செய்கிறது தெரியுமோ அந்தப் பருவம், அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள். . . அறிவை மயக்குகிறதாம்.

மதி முகம் அவளுக்கு, முத்துப் பற்கள், அந்த முத்து வரிசையை எட்டிப் பார்ப்பது போலிருக்கிறதாம் அவள் மூக்கிலொரு முத்து - பல்லினழகை எட்டிப் பார்க்கும் மூக்கிலொரு முத்தினாள்.

உற்சாகத்தின் உச்சி சென்று அவர் கூறுகிறார். கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் இரு. . . .

குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் இப்படி ஒரு வசந்த வல்லியைக் காட்டுகிறார்.

எங்கே அந்த எழில் மங்கை? முத்துப் பல்லினாள் எங்கே? துடியிடை எவ்விடம் உள்ளாள்? கனகவல்லி எங்கே? மதி முகவதி எவ்விடம் இருக்கக் காண்கிறீர்? பூ இதழா, பொன்மேனியா, அறிவை மயக்கும் பருவத்தாள் என்கிறீரே, அவளைக் காணா முன்பே அறிவு மயக்க மேலிடுகிறதே, எங்கே உள்ளனள் அந்த ஆரணங்கு?

அவள் என் நெஞ்சைச் சூறையாடுவது இருக்கட்டும், புலவரீர்! உமது கவிதை என் நெஞ்சைச் சிதறடிக்கிறதே, எங்கே அந்தச்சிற்றிடை, கூறுக, என்று கேட்டிடத் தோன்றும், குற்றாலக் குறவஞ்சி படிக்கும்போது, நான் அந்த மாளிகைக் கூடத்திலே அமர்ந்து குறவஞ்சியைப் படித்தபோது, தம்பி, கவி தீட்டிக் காட்டிய அந்த பெண் பாவையை அல்ல, நமது திரு இடத்தைத்தான் எண்ணிக்கொண்டேன் அத்துணை எழில் நிரம்பிய நாடு. ஆயின், என்ன நிலை இன்று என்று எண்ணும் போது, இன்று திருவிடம் இருக்கும் நிலையினைப் படம் பிடித்தளிக்க ஓர் புலவர் முன்வரக்கூடாதா என்றுகூட எண்ணினேன்.

குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் தீட்டியது, வசந்தவல்லி எனும் கற்பனைக் காரிகைப் பற்றி! அந்தக் காரிகை, குற்றால நாதருக்குக் காணிக்கையாகிவிடுவது, நூலின் பொருள்.

வசந்தவல்லிபோன்றே கண்டோரை கவர்ச்சிகொள்ளச் செய்யும் எழில் ததும்பும் நம்நாடு, இன்று வடவருக்கல்லவா கால் வருடக் காண்கிறோம்.

வசந்தவல்லி வருகிறாள், பந்தாடி மகிழ்கிறாள், குற்றால நாதரின் கோலம் கண்டு காதல் கொள்ளுகிறாள், குறத்தி வருகிறாள், குறி சொல்கிறாள், நாதனைத் தேடிப் பெற்றுக் கூடி மகிழ்கிறாள், என்று நூல் எடுத்தியம்புகிறது.

அங்ஙனம் இருத்தலுக்குப் பதிலாக, இத்துணை அழகு ததும்பும் வசந்தவல்லி வந்தாள், பந்தாடி நின்றாள், அவனை ஓர் மலைப்பாம்பு விழுங்கிற்று, இடைவரை உள்ளே, மற்றப்பகுதி மேலே, அவள் அலறுகிறாள், துடிக்கிறாள், அது கேட்டு ஓடிவந்தவர்கள் மலைப்பாம்பின் அழகு கண்டு மயங்கி நின்றனர், மங்கை நல்லாளின், கண்களிலே நீர் ததும்பிற்று, அவர்களோ, மலைப்பாம்பு, மெள்ள மெள்ள அவளை உள்ளுக்குக் கொண்டு செல்லும் திறத்தினைக் கண்டு வியந்தனர், என்று நூல் இருந்திருக்குமேல், எவ்வளவு வேதனை கொள்வோம் தம்பி, தாயகத்தின் இன்றைய நிலை அங்ஙனமன்றோ இருக்கிறது. என் செய்வோம், திரு இடத்தின் எழிலை எங்கு நோக்கினும் காண்கிறோம், காணுந்தோறும் காணுந்தோறும். இத்துணை எழில்மிக்க நாடு, அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்ற எண்ணமன்றோ மேலிடுகிறது. அடிமையின் கரத்திலே ஆணிப் பொன்னாபரணம் இருத்தல்போல, வடவருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் திராவிடத்திலே எழில் இருக்கிறது அந்த எழிலோவியங்களில் ஒன்றுதன் குற்றாலம்!

அன்புள்ள,

28-8-1955