அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்ஹெலிகாப்டரும் இரதமும்!
1

வேதகாலமும் விஞ்ஞானப் பொருள்களும் -
நாய்பூஜை -
புல்கானின் வரவேற்பு.

தம்பி,

ஊரெல்லாம் ஒரே விழாமயம், பார்க்கிறாயல்லவா!! ஆசியாவின் ஜோதி வந்தார் - விழா காட்டப்பட்டது! ஒரு திங்களாயிற்று. இதோ பாபு ராஜேந்திர பிரசாத் பவனிக்கான விழா நடைபெறுகிறது! இது கண்டு மகிழ்வோரின் மனம், விழாக் கோலத்தைக் கலைத்துக்கொள்வதற்குள், புல்கானின் வருகிறார். பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது. அவருக்கு நடத்தப்படும் விழாவிலே இன்னின்ன வண்ணம் தெரியவேண்டும் என்று திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கும்போதே, நேபாள நாட்டு மன்னரும், மஹா ராணியாரும் வரவேற்கப்படவேண்டிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாலம் விமான நிலையத்தில் வரவேற்பு - குழந்தைகள் பூச்செண்டு அளித்தல் -முப்படைப் பிரிவினரைப் பார்வையிடல், நேரு பண்டிதரின் கைகுலுக்குதல், ராஜ கட்டம் சென்று காந்தியார் சமாதியில் மலர் சொரிதல், ஜனாதிபதி மாளிகையில் விருந்து, அதை அடுத்து பார்லிமெண்டில் பேச்சு, அதை அடுத்து ஒரு விருந்து, பிறகு தாஜ் மஹால், ஜூம்மா மசூதி, தங்கக் கோயில் ஆகிய காட்சிகளைக் கண்டு வியப்படைதல், இடையிடையே இன்னிசை, நடனம் - பிறகு பக்ரா -நங்கல், சிந்திரி, சித்தரன்ஜன், இப்படிப்பட்ட ‘க்ஷேத்திரங்களைக்’ கண்டு மகிழ்தல், பிறகு தெற்கே திருவிழாக் கோலம், திரும்பவும் டில்லியில் கோலாகலம், இறுதியில் வந்தவரும் பண்டிதரும் சேர்ந்து உலகுக்கு அறிக்கை வெளியிடுவது. இது ‘விழா’ முறையாக இருந்து வருகிறது! புல்கானினுக்கும் இதுதான், டல்லசுக்கும் இதுவே தான்!! நேபாள மன்னர் இந்தச் ‘சுவை’யினை ரசித்துக் கொண்டிருக்கிறார். புல்கானின் வந்து போன பிறகு, சவுதி அரேபிய மன்னர், இந்தச் சுவைகளைப் பெறப்போகிறார். சவுதி அரேபிய மன்னர், உலகிலே உள்ள பெரும் பணக்காரரில் ஒருவர்! அவருக்குச் சொந்தமாக உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலமாக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். புல்கானின் ‘விஜயம்’ செய்து, அதன் பயனாக இங்கு ‘சமதர்மம்’ மணம் நமக்கெல்லாம் மகிழ்வூட்டியதும், சவுதி அரேபிய மன்னர் வருவதும், அவருடைய ‘விஜயம்’முதலாளித்துவ, மோகத்தை தேவைப்படுவோருக்கு ஊட்டுவதுமாக எவ்வளவு நேர்த்தியான முறையிலே அமைந்திருக்கிறது. பாரீர், பாரதப் பண்பாடு. எதற்கும் இடம் உண்டு, எதுவும் எதனுடனும் இருக்கும், இது இன்னாருக்கு உரியது என்று இராது.

பர்ணசாலை என்றால், அங்கு, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மூவாசையைத் துறந்திடவும், மூலத்தை உணர்ந்திடவும், முறையும் நெறியும் கிடைக்கும் இடம் என்றுதான் கூறுவர் - பாரதப் பண்பாடு அப்படி அல்ல! - இங்கு பர்ண சாலையில் துஷ்யந்தன் சகுந்தலையை அடைகிறான்! நல்லது மட்டுமே சொல்கிறேன், கல்லான கதையை விட்டுவிடுகிறேன். அந்த நாள் தொட்டு இந்த நாள் வரை எது செயல் முறை, எதைக் கொள்ளல் வேண்டும் எதைத் தள்ளிட வேண்டும், என்பதைப் பற்றி அதிகமான அளவு அக்கறை காட்டாமல், கிடைப்பதை இருப்பதுடன் சேர்த்துக்கொள்வதும், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று’ என்று திருப்தி அடைவதுமாகவே காலந்தள்ளி வந்திருக்கிறார்கள்; இதைப் பெருமைக்குரியதாகவும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பிரிட்டிஷ் - அமெரிக்க முதலாளிகள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள், ‘இந்தியா’ தொழிற்கூடமாவதற்கான முயற்சிக்குப் பணம் பெரும் அளவுக்கு நாங்கள் போடத் தயாராக இருக்கிறோம் - ஆனால், தொழில்களைத் தேசிய உடைமை ஆக்குவது என்ற திட்டமோ, அன்னியநாட்டாருக்கு இங்கு பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம் இருத்தல் ஆகாது என்ற திட்டமோ கிடையாது என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்.

தொழிலில் கிடைக்கும் இலாபத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்குத் தங்கு தடை இருக்கக் கூடாது என்று கேட்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள பாரதப் பிரதிநிதியும், இங்குள்ள நிதி மந்திரியும், ‘ததாஸ்து’ - என்கிறார்கள். அதாவது, அன்னிய நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக இந்த நாட்டை குத்தகைக்கு விடுவதற்குச் சம்மதிக்கிறார்கள்.

அதேபோது, ஆவடித் தீர்மான மூலம், சமதர்மம் அளிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

இந்த முரண்பாடு சரியா என்று கேட்டாலோ, இதுதான் பாரதப் பண்பாடு, நாங்கள் மிகச் சிரமப்பட்டுக் கண்டறிந்துள்ள "சீலம்' என்றும் பேசுகிறார்கள்.

புல்கானினும் வருகிறார், சவுதி அரேபிய மன்னரும் வருகிறார்; இருவருக்கும் விழா; இருவரும் குதூகலமடை கிறார்கள்; இருவருக்கும் நேரு பண்டிதர் நண்பர்!

சவூதி அரேபியா மன்னர் விஜயம் செய்வது தவறு என்று கூறுவதற்காக இவ்விதம் எழுதவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கும் நேர்மையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமலேயே எவரிடமும் இன்முகம் காட்டி. எதற்கும் இசைவு அளித்துக்கொண்டு செல்லும் போக்கிலே நாடு நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.

கடவுள், மனிதனின் சிருஷ்டி! மதம், மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட மனமயக்கம்.

என்று சென்ற திங்கள், மாஸ்கோ "ரேடியோ' தெரிவித்தது என்று இங்குள்ள ஏடுகளெல்லாம் அறிவித்தன!

அந்த நாட்டு புல்கானின் வருகிறார் - அவருக்குக் கல்கத்தாவில் இராமாயணம் நிழல் நாடகமாக உதயசங்கர் நடனக் குழுவினரால் நடத்திக் காட்டப்பட ஏற்பாடாகி இருக்கிறது.

ஒரு பெரும் தலைவருக்குப் பொழுதுபோக்குக்காக நடத்திக் காட்டப்படும் ‘காட்சி’யைப்பற்றி, நான் வலிந்து பொருள் கொள்வதாகக் கருதாதீர்கள். காரணமின்றி அல்ல, இராமாயணம் காட்டப்படுவது!

காளிதாசரின் ‘சாகுந்தலம்’ காட்டப்பட்டால், இளங்கோவின் சிலப்பதிகாரம் காட்டப்பட்டால், இதுபோல் ஒவ்வோர் மொழியிலும் உள்ள கலை ஓவியங்கள் காட்டப்பட்டால், வெளி நாட்டுத் தலைவருக்கு இந்நாட்டுக் கலைக்காட்சி நடத்திக் காட்டப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம். நடத்தப்படுவது இராமாயணம்!

இது போலவேதான், ‘பாரதப் பண்பாடு’ பல்வேறு முனைகளிலும் தலைவிரித்தாடுகிறது.

டில்லிப் பட்டணத்தில், ஆசியா கண்டத்திலேயே இதுவரை இப்படிப்பட்ட ஓர் பிரம்மாண்டமான காட்சி நடத்தப் பட்டதில்லை என்று எவரும் வியந்து கூறத்தக்கதான ‘பொருட்காட்சி’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் ரμயாவும் பிரிட்டனும் பிற நாடுகளும், தத்தமது தொழில் திறமையை, விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்கிடும் வகையில் பொருள்களைக் காட்டியும், பொருள் செய்முறைகளை விளக்கியும் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காண்போர், முற்போக்கு நாடுகள் தொழில் துறையிலே எவ்வளவு ஆச்சரியகரமான முன்னேற்ற மடைந்துள்ளன என்பதைப் பாராட்டுகின்றனர். நேரு பண்டிதர், இந்தப் பொருட்காட்சியின் தத்துவத்தை விளக்கி விரிவாகப் பேசியுமிருக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் சென்று காண்கின்றனர்.

கண்ணாடி மனிதன் என்றோர் காட்சிப் பொருள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள மனித உடல்! மனித உடலுக்குள்ளே என்னென்ன உறுப்புக்கள் என்னென்ன முறையிலே அமைந்து, எவ்வகையிலே இயங்குகின்றன என்பதை, கண்ணாடி மனிதன் மூலம் பாமரனும் கண்டறியலாம். இரத்தக் குழாய்கள் தெரிகின்றன. இரத்தம் எப்படி எப்படி ஓடுகிறது என்பது காட்டப்படுகிறது. இதயத்துடிப்பு, மூளையின் அமைப்பு, நரம்புகளின் படைப்பு - எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, கண்ணாடி மனிதன் மூலம்!

பொருட்காட்சியிலே இந்த விஞ்ஞானப் பாடம் அளிக்கப் பட்டு வரும் இதே நேரத்தில், பாரதத்தின் மற்றோர் பகுதியில்,வேத காலத்து இரதங்கள் ஓடுகின்றன! அதை இலட்சக் கணக்கான மக்கள் கண்டுகளித்து ஆரவாரம் செய்கின்றனர்.

விஞ்ஞான அறிவளிக்கும் பொருட்காட்சியை நேரு பண்டிதர் திறந்து வைக்கிறார் - இந்த வேதகாலக் காட்சியைத் துவக்கிட, பம்பாய் கவர்னர் மேதாப் முன் வருகிறார்.

உலகில் சாந்தி, சமாதானம், சுபீட்சம் ஆகியவை ஏற்பட ஐ.நா.சபை, நால்வர் மாநாடு, ஜினிவா மந்திராலோசனை, பாண்டுங் முயற்சி, நேருவின் பஞ்சசீலம், இவை ஒன்றும் முறையாகாது - கோடிக்கணக்கான மக்கள் சமாதானம் கோரலாம், பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து சென்று பண்டிதர் உலக சமாதானம் பற்றி உள்ளத்தை உருக வைக்கலாம், புல்கானின் வாக்களிக்கலாம், சூயென்லாய் சமரசம் பேசலாம், மாலடோவ் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கலாம், அமெரிக்காவும் சமாதானம் பேசலாம், ஆனால் இவையெல்லாம் உலக சமாதானத்தை ஏற்படுத்தா - உலகிலே சாந்தி நிலவ இதோ நாங்கள் தொண்டு புரிகிறோம் பாரீர் என்று கூறுவது போலச் சில பண்டிதர்கள் கிளம்பி, யாககுண்டங்களை வெட்டச் செய்தார்கள், டன் டன்னாக விறகும் டின் டின்னாக நெய்யும் கொண்டுவரச் செய்தார்கள், ‘கோஷ்டி கோஷ்டி’யாகக் கிளம்பிச் சென்று வேத பாராயணம் செய்து, வாஜபேயயாகம் செய்தனர்!

யாகம் நடைபெற்ற இடத்திலே, இப்போதும் வெப்பம் இருக்கக் கூடும் - புல்கானின் வருகிறார்.

பூனா நகரில், வாஜபேய யாகம் பிரஜாபதி தேவனுக்காக நடத்தப்பட்டிருக்கிறது.

ஏழு நாட்கள் நடைபெற்றன, மூன்று நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த யாகம் நடைபெற்றதில்லையாம்.

நூற்றுக்கணக்கான புரோகிதர்கள், யாக குண்டத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, வேதமந்திரங்களைச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் ‘பூஜை புனஸ்காரம்’ செய்து புண்ணியம் தேடிட, பம்பாய் மாகாண கவர்னர் அரிகிருஷ்ண மேதாப் இந்த யாகத்தின் மேன்மை பற்றித் தமது மேலான கருத்தினைக் கூற, ஆனே எனும் பழம் பெரும் தேச பக்தர், நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அங்கு படுக்கையுடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டு, அவரும் தமது உரையை அருள, இலட்சம் மக்கள் கண்டு கழிபேருவகை பூத்தனர், இந்தத் திங்களில்.

பூனாவில் இந்தப் புண்ய யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நேரு பண்டிதர், என் க்ஷேத்திரம் அணையும் தேக்கமும், தொழிலும் வளமும் என்ற தமது பேச்சை அமிருதசரசில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

வாஜபேய யாகத்தை முடித்துக்கொண்டு, பாரதத்தின் பழைய காலமுறைப்படி, வேதகால இரதங்கள் ஜோடித்து, பலர் ‘ரிμகளாகக்’ காட்சி தந்து, இரத சாரத்யப் பந்தயம் நடத்திக் காட்டினராம்!! கடைசி நாளன்று.

இராமனும் கிருஷ்ணனும், சேதி நாட்டரசனும், அவந்தி தேசாதிபதியும், கர்ணனும் சகுனியும், சகாதேவனும் "சல்லியனும், அபிமன்யுவும் பிறரும் புயலெனச் செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட இரதங்களிலே சென்றனர் என்று புராணம் படிக்கிறார்களல்லவா, அந்தச் செல்லரித்த ஏடுகளிலே காட்டப்படும் காட்சிகளைக் காண, வேதகால இரத சாரத்யக் காட்சியை ஏற்பாடு செய்து காட்டினர் - பல்லாயிரவர் கண்டனர் - பரவசமடைந்தனர்.

அதேபோது டில்லிப் பட்டணத்தில் வேறோர் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. புல்கானின் விஜயத்தின் போது, உற்சாக மிகுதியால் இலட்சக்கணக்கில் கூடிடும் மக்கள் கட்டுக்கடங்காது போவர் என்ற கவலையால், போலீஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானத்தில் ஏறிக்கொண்டு, மேலே தாழ்வாகப் பறந்து கொண்டே, மக்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் தயாரிக்கிறார்கள்.

புனாவில், வேதகால இரதம் ஓடிக்கொண்டிருக்கிறது,
டில்லியில் ஹெலிகாப்டர் விமானம் தயாராகிறது!!

‘பாரதம்’ எவ்வழி செல்கிறது என்று கூற முடியும். யாக குண்டமும் தெரிகிறது. விஞ்ஞானக் கூடமும் அமைக்கப்படுகிறது! இரதமும் ஓடுகிறது. ஹெலிகாப்டரும் பறக்கிறது! புல்கானின் வரவேற்கப்படுகிறார். சவுதி அரேபிய மன்னருக்கும் இராஜ உபசாரம் தயாராகிறது.

மேதாப் பேசுகிறார், பாரதம் யாக யோகாதிகளிலே சிறந்த தேசம் - என்று.

நேரு பண்டிதர் அதே கிழமை வேறோர் பகுதியிலே பேசுகிறார், இன்னமும் நாம் சாணியுகத்தில்தான் இருக்கிறோம் - என்று.

உலகம் அணுயுகத்தில் இருக்கிறது - பாரதம் சாணியுகத்தில் இருக்கிறது என்று கூறுகிறார் நேரு பண்டிதர் - மனம் நொந்து கூறுவதுபோலத்தான் இருக்கிறது.

அவர் இவ்விதம் கேலியும் வேதனையும் கலந்த குரலில் எந்தச் சாணியுகம் பற்றிக் குறிப்பிடுகிறாரோ, அதைச் சிலாக்கியமானது என்று புகழ்ந்து பேசி, வாஜபேய யாகத்தைத் துவக்கி வைக்கிறார் கவர்னர் மேதாப்! எல்லாம், பாரதத்தில். எது தான் நமக்கு உரியது? எவ்வழிதான் நல்வழி? எந்த முறையைப் பின்பற்றப் போகிறீர்கள்? என்று கேட்டாலோ, தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள் - குழப்பம் அடைகிறார்கள். இவர்கள் இவ்விதம்தான் ‘பத்தாம்பசலிகள்’; பண்டிதர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்தான் காசி அரித்துவாரம் சேது சீரங்கம், திருப்பதி தில்லை, இவைகளல்ல என் திவ்ய க்ஷேத்திரங்கள்; என் திவ்ய க்ஷேத்திரங்கள், தேக்கம் அணை சிந்திரி, சித்தரன்ஜன், என்ஜின் எழில் என்று பேசுகிறாரே! அவர் நாட்டினை, அறிவுலகத்தின் சார்பில் நடத்திச் செல்வார், விஞ்ஞானப் பாதை வழி நடத்திச் செல்வார் என்று எண்ணித்தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம் என்றாலோ, இவ்வளவு பகுத்தறிவும் பேசிவிட்டு, அவரும் இராமலீலா, பார்க்கச் செல்கிறார், பேரப் பிள்ளைகளுடன்! அவரும் இவ்வளவுதான் என்று தெரிகிறபோது ஆயாசப்படாமல் என்ன செய்வது?

அந்த வாலிபன் பதறினான் இளம் பெண் பதைபதைத்தது கண்டு! அவள் அழுகுரல், அவன் இதயத்தைத் துளைத்தது. ஐய்யோ! என்று அணங்கு அலறுகிறாள். அந்தோ! கொடுமை! கொடுமை! என்று கூவுகிறான் இளைஞன்.

பெரு நெருப்பிலே பெண்ணை இறக்கினர். புத்தாடை உடுத்துக் கொண்டாள் பூவை-மஞ்சள் குங்குமம் இட்டுக் கொண்டு, மாங்கலியத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டு, மாமி மாமன் காலில் விழுந்து வணங்கிவிட்டு, சூழநின்ற சுற்றத்தாரைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் பிணக்குழியைப் பற்றிக் கொண்ட பெரு நெருப்பை மும்முறை வலம் வந்து, “ஈசா! இதோ நானும் என் நாதனுடன் வருகிறேன், ஏற்றுக்கொள். பதியை இழந்து பாவை புவியில் வாழ்வது பெரும் பாபம். எனவே இதோ, உடன்கட்டை ஏறுகிறேன். உன் திருவடியில் சேர்த்துக் கொள்!” என்று பிரார்த்தனை செய்கிறாள்.

“உத்தமி உடன்கட்டை ஏறுகிறாள், பத்தினி, பர்த்தாவுடன் செல்கிறாள் - அவளுடைய பாததூளி பட்டாலே பாபம் சம்ஹரிக்கப்படும். உடன்கட்டை ஏறிடும் காட்சியைக் கண்டோருக்குக் கர்மம் கழுவப்படும்; கடவுளருள் கிட்டும்' என்று பயபக்தியுடன் பேசுகின்றனர்.