அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இந்திராணி சேலை!

சர்க்கார் திட்டங்களில் ஊழல்
பார்லிமெண்ட், பத்திரிகை கருத்துகள்.

தம்பி!

புராண மதிபடைத்த ஓர் மன்னன் - மந்தகாச வாழ்வால் மதியை மங்கவைத்துக் கொண்ட மந்திரிமார்கள் - அந்தச் சபைக்கு வந்தான் ஒரு சாகசக்காரன்! "அரசே!'' என்றான், "என்ன?'' என்று தர்பார் முறையில் கேட்டான் மன்னன்!

"அரசரே! நான் எத்தனையோ இராஜாதிராஜக்களைப் பார்த்தேன், அவர்களோடு பழகினேன் - ஆனால் ஒருவருக் காவது, தங்களுக்கு உள்ளது போன்ற வீரதீரம், பராக்கிரமம் இல்லை, எனவே தங்களைக் கண்டதும், அது தங்களுக்கே உரியது என்று தீர்மானித்து விட்டேன், என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். காவலா! என்றான், காவலன், காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஒருவன் கேட்பது கண்டு மகிழ்ந்து, அங்ஙனமே ஆகுக! காணிக்கைப் பொருள் யாது?'' என்று கேட்டான்.

"ஈரேழுபதினாலு உலகத்திலும் இதற்கு ஈடு கிடையாது வேந்தே.''

"அப்படியா! மெத்தப் புகழ்கிறாயே! என்ன அது! நவரத்தின மாலையோ - முத்துப் பல்லக்கோ - தந்தக்கட்டிலோ, தங்கப் பாளமோ. . .''

"மன்னா! இதெல்லாம் சாமான்ய மன்னர்களுக்கு! தங்களுக்கு நான் தரப்போவது. . .?''

"என்ன! என்ன! அது?''

"இந்திராணி தேவியாரின் எழில் மிக்க சேலை - தங்கள் பட்ட மகிμ பூரிப்படைய!. . .''

"இந்திராணி தேவியார்!''

"ஆமாம் அரசர்க்கரசே! தேவேந்திரனுடைய பார்யாள், சாட்சாத் இந்திராணி தேவி, தவிமிருந்து பெற்ற சேலை, அதை அணிந்து கொண்டால், அரசே! வெள்ளை யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கற்பக விருட்சம், காமதேனு, குற்றேவல் புரியும், அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது. . . ''

"அப்படியா. . .நம்ப முடிய வில்லையே''

"இப்போது நம்ப வேண்டாம் மகாராஜா! சேலையை நான் இந்தச் சபையிலே. பிரித்துக் காட்டப் போகிறேனே, அப்போது நம்புங்கள் - இப்போது ஏன்! ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா!!'' "தேவேந்திரனுடைய தேவியின் சேலை. . .''

"தங்கள் திருச்சபையில் கொண்டு வந்து காட்டப் போகிறேன். . .''

"யார்? நீ?''

"உரு கண்டு எள்ளற்க, மன்னா! உண்மையைப் பொறுத் திருந்து பாரும்.''

"எப்போது கொண்டு வருவாய்?''

"ஆறேழு மண்டலம் பூஜை - அது முடிந்ததும் அந்த அற்புதமான சேலை. . .''

இந்த உரையாடலுக்குப் பிறகு, சாகசக்காரனுக்கு, அரண்மனையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டன பூஜை நடத்தி வந்தான்! மலர்களை விடப் பழங்கள் அதிகம் செலவாயின, பூஜைக்கு!! தேனும் பாலும் குடம் குடமாக! தேவ பூஜைக்குத் துணை செய்ய தத்தைகள்!! பொன், கேட்கும் போதெல்லாம். இப்படிப் போக போக்கியமாக சாகசக்காரன் இருந்து வந்தான் - ஆறு மண்டலம் முடிந்தது. ஏழும் வந்து சென்றது - மன்னன் இன்னும் ஏன் தாமதம் என்றான்; மன்னா! பூஜை முடிய வில்லையே, ஆறேழு மண்டலமாகும், என்றேனே மறந்தீரா?'' என்றான் சாகசக்காரன், "நான் எப்படி மறப்பேன், நேற்றொடு ஏழு மண்டலம், இருநூற்று எண்பது நாட்கள் முடிந்தனவே'' என்றான் மன்னன்; பெருஞ்சிரிப்பொலி கிளம்பிற்று, மன்னா, ஆறேழு மண்டலம் என்றேன் - தாங்கள் அதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்ளவில்லை - ஆறேழு - நாற்பத்திரண்டு -நாற்பத்திரண்டு மண்டலங்கள் - நாற்பத்திரண்டு நாற்பது நாட்கள் - என்று விளக்கமுரைத்தான் - மன்னன் திடுக்கிட்டுப்போனான் - எனினும் என்ன செய்வது - இந்திராணியின் சேலை - அதன் மகிமையால், வெள்ளை யானை, காமதேனு, கற்பக விருட்சம்!! சரி! - என்றான் - சாகசக்காரன் இராஜபோகத்தில் மூழ்கினான். நாட்கள் நகர்ந்தன - கடைசியில் அவன் சொன்ன நாள் வந்தது, "நாளை தர்பாரில்!'' என்று சாகசக்காரன் தவயோகி பாணியில் சொன்னான்.

மன்றம் கூடிற்று - மன்னன் ஆவல் நிரம்பிய கண்களுடன்!!

சாகசக்காரன், உள்ளே நுழைந்தான் - ஓம்! என்றான் மும்முறை! மேலே பார்த்தான், கரத்தை உயர்த்தினாள், ஆஹா! என்றான், கண்களில் ஒத்திக்கொண்டான், எழுச்சி மயமான நிலை பெற்றவன் போலாகி, என்னை நம்ப மறந்தீர்களே காவலனே! இதோ பாரும்! வானவில் இதனிடம் என்ன செய்யும்-? ஆஹா! பார்த்துக் கொண்டே யுகக் கணக்கில் இருந்துவிடலாம் போலிருக்கிறதே! என்ன பளபளப்பு! எத்தகைய ஜொலிப்பு! தொட்டால் வெண்ணெய் மீது கைபடுவது போலிருக்கிறதே'' என்று பேசலானான் - மன்னன் திகைத்தான் - மந்திரிகள் மருண்டனர் - ஏனெனில், சாகசக்காரன் வெறுங்கையுடன்தான் தெரிகிறான்!

"இந்திராணியின் சேலை. . . எங்கே. . .'' என்று மன்னன் இழுத்தாற்போலக் கேட்டான்.

"இதோ மன்னவா! என்னுடைய சித்து முறைக்கு மெச்சிச் சிவனார் அருளிய வரத்தின் விளைவு - வண்ணச் சேலை - இதோ - இதோ'' என்று கூறியபடி சேலையைப் பிரித்துக் காட்டுவது போலப் பாவனை செய்தான்!

"எனக்குத் தெரியவில்லையே. . .'' என்று ஏக்கத்துடன் கூறினான் மன்னன்.

"திகைத்தவன் போலானான் சாகசக்காரன் - பயந்தகுரலில்- "மன்னா! தங்களுக்குத் தெரியவில்லை என்றா கூறகிறீர்கள் . . . '' என்றான். "ஆமாம் தெரியக் காணோமே. . .'' என்றான் மன்னன். "ஐயகோ! ஒரு விஷயத்தைக் கூற மறந்தேன், அறிவிலி நான்! அரசே! யாருடைய அன்னை பத்தினியோ, அப்படிப்பட்டவர் களின் கண்களுக்குத்தான் இது தெரியும் உத்தமியாயிற்றே உமது அன்னை-உமக்குத் தெரிந்தாக வேண்டுமே'' என்றான் - மன்னனுடைய மாதாவின் மீது மாசு உண்டு - மன்னனுக்கும் அது தெரியும் - எனவே, குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று குமுறி, "ஆஹா!'' அற்புதம்! இதெல்லவா தேவப்பிரசாதம்!'' என்று கூறியபடி, சாகசக்காரன் கையிலிருந்து சேலையைவாங்கினான் (பாவனைதான்!) மந்திரிகளிடம் காட்டினான். அவர்களோ, மன்னனுக்கு ஒத்து ஊதினர்! சாகசக்காரன் வெற்றிபெற்றான்.

திட்டங்கள் தீட்டும் காங்கிரசாட்சியினர். இது போலவே "இந்திராணி சேலை' காட்டுகிறார்கள் தம்பி. தெரியவில்லையே என்றால், உனக்குத் தேசபக்தி இல்லை அதனால்தான் தெரியவில்லை என்கிறார்கள். நமக்கேன் இந்த வீண்பழி என்று பயந்து, பலபேர், தங்களைத் தேசபக்தர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவே, "தெரிகிறது! தெரிகிறது'' என்று குதூகலம் காட்டிப் பேசுகிறார்கள். பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ஆகஸ்ட்டு நீ பற்றிய சிந்தனையில், நீயும் இருந்தாய், நானும் இருந்தேன் - ஆகையால், உனக்கு, முன்பே இதைக் கூறமுடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் தீட்டும் திட்டங்கள், எவ்வளவு அவலட்சண மாக இருக்கிறது என்பதைப் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் காட்டிற்று.

சர்க்காருடைய "மேற்பார்வை' பெற்று, நிதி உதவி பெற்று, தொழில்களின் பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது.

தொழில்துறை நிதிக் கார்ப்பரேஷன்.

திட்டம் அருமையானது, வரவேற்கத்தக்கது.

வளர்ச்சி பெறக்கூடிய ஒரு தொழில், அதற்குத் தேவையான முதல் -பணம்-கிடைக்காததால், குன்றிப்போகக் கூடாது, சர்க்கார் அதற்கு நிதி அளித்து, அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம்.

தம்பி, தாய்ப்பால் குடிக்கிறது குழந்தை! எதுவரையில்? வேறு உணவுகளை உண்டு ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம் பெறுகிற வரையில்.

தொழில் துறைக்குச் சர்க்கார் அளிக்கும் உதவியும், அதைப் பெறும் தொழிலமைப்பு, வளரும் பக்குவத்தைப் பெறுவதற்காகத்தான்.

இந்த நல்ல திட்டம் எவ்வளவு இலட்சணமாக நடைபெற்றி ருக்கிறது, தெரியுமா? டில்லி சட்டசபையில், சரமாரியாகக் கண்டனக் கணைகள்! காங்கிரசின் எதிரிகள் தொடுத்தது அல்ல. காங்கிரஸ் உறுப்பினர்களே கணைவிட்டுத் துளைத்தனர்.

ஊழல், திறமைக் குறைவு, நெளிகிறது!

நாற்றமடிக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந்திருக்கிறது.

ஒரு கண்ணாடித் தொழிற்சாலை - வடக்கே - சோடேபூர் என்ற ஊரில்! இது, திட்டத்தின்படி உதவி நிதி கேட்டது.

சர்க்காருக்கு, இப்படிப்பட்ட திட்டங்களுக்காகப் பணம் இருக்கிறது - வெற்றி வியர்வைதான் அது!

ஏழையின் குருதி எவ்வளவு அக்ரமமாகப் பாழாக்கப்பட் டிருக்கிறது என்பதைக் கேள் தம்பி, நாம் எப்படிப்பட்ட ஆட்சியிலே சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியும். தேசியம் பேசி, நம்மிடம் பகை காட்டும் காங்கிரஸ் நண்பர்களையும், இதைப்பார்த்து, சிந்தித்து, கருத்தளிக்கச் சொல்.

சோடேபூர்க் கண்ணாடித் தொழிற்சாலைக்கு 21-இலட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள் - பல தவணைகளில்.

21 இலட்சத்தையும் வாங்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டான் பிறகு, துளியும் அச்சமின்றி, யார் நம்மை என்ன செய்ய முடியும் என்ற துணிவுடன், அந்தத் தொழிற்சாலையைக் குன்றவைத்து, அதற்குப் போட்டியாக இருந்த வேறோர் கண்ணாடித் தொழிற்சாலைக்கு, மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார்கள்!

அக்ரமத்தின் தன்மை தெரிகிறதா? பசுவுக்குப் பருத்தியும் புல்லும் வைக்கப் பணம் தருகிறான் ஒரு தர்மதாதா!

பசுவுக்கு அது தரப்பட்டால், மதுரமான பால் கிடைக்கும் என்று எண்ணுகிறான் உதவி அளித்தவன்.

அதற்காகத்தான் உதவி, "நல்ல தரமான பசு; நல்லபடி தீனி வைத்தால், கொழுத்து வளரும், தீஞ் சுவைப்பால் அளிக்கும், அதற்காகச் செலவிடப் பணம் எங்களிடம் இல்லை,'' என்று கூறித்தான் "தர்மம்' கேட்டுப் பெற்றனர்.

பசுவோ, எலும்புந்தோலுமாகி விடுகிறது.

பிறகு அதனை, "கசாப்பு' கடைக்காரருக்கு மலிவான விலைக்கு விற்று விடுகிறார்கள்.

எத்தன்! கடினசித்தன்! பொது மக்கள் துரோகி என்றெல்லாம், நீ கண்டிக்கத் துடிப்பாய். தம்பி, நீயும் நானும் என்ன, டில்லி சட்டசபையில்,

சுதேச கிருபளானி
சோதிராம் கித்வானி
தாகூர்தாஸ் பார்க்கவா
மோகன்லால் சாக்சேனா
துளசிதாஸ் கிசன்சந்து
எச். வி. காமத்
எஸ். என். தாஸ்
டி.என். சிங்

இப்படிப்பட்டவர்கள் இடித்துரைத்தார்கள்.

இவ்வளவுக்கும் குகா என்னும் மந்திரி, அமைதியாக "அது சரி! என்ன செய்யலாம்(! அவ்வளவு மோசம் இல்லை! ஊழல் ஏற்பட்டு விட்டது! கவனக்குறைவால் வந்த கேடு! அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்! போனது போகட்டும்!'' - என்று இந்த முறையில்தான் பேசியிருக்கிறார்.

ஜனநாயகம், தக்கமுறையில் தழைத்து, ஒரு பலம் பொருந்திய எதிர்க்கட்சி இருந்திருக்குமானால், குகாவும் அவருடைய கூட்டுத் தோழர்களும், வெட்கித் தலைகுனிவது மட்டுமல்ல, மிரண்டு பணிந்திருப்பார்கள்.

ஆனால், இப்போதுதான் எல்லாம் காங்கிரஸ்மயம்; காங்கிரசுக்கோ நேரு அபயம், என்று நிலைமை இருக்கிறதே!

கண்டிக்கிறார்கள்! புள்ளி விவரம் காட்டுகிறார்கள்!

பசுவோ சாகடிக்கப்பட்டு விட்டது! பாபிகளா இப்படியும் அக்ரமம் செய்யலாமா? யார் இந்தத் தீய காரியம் செய்தவர்கள்? பிடித்திழுத்து வாருங்கள் விசாரணை செய்த தண்டிப்போம், என்று பேசுகிறார்கள்.

ஆனால் அந்த ஆசாமியோ, சர்க்காரிடம் சன்மானம், விருது, சான்று பெற்று, வேறு இடம் தேடிச்சென்றிருக்கிறார்.

பொறுப்பற்றவர்கள், பொது மக்களிடம் துளியும் அச்சமில்லாதவர்கள், தட்டிக்கேட்க யார் இருக்கிறார்கள் என்றுஎண்ணும் நெஞ்சழுத்தக்காரர்கள், என்றெல்லாம் சொல்லும் போது, கோபம் கொதித்தெழுகிறது காங்கிரஸ் கட்சியினருக்கு. ஆனால் சோடேபூர் சம்பவத்துக்கு அவர்கள் என்ன சமாதானம் கூறுகிறார்கள்.?

இலட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பாழாகிறது.

பகற் கொள்ளைக்காரனாவது, போலீஸ் தாக்குமோ, ஊரார் ஒன்று திரண்டு வந்து எதிர்ப்பரோ என்று அஞ்சி அஞ்சிக் காரியம் செய்ய வேண்டி இருக்கிறது. ஏமாளித்தனம் அரச பீடத்தில் இருப்பது கண்டு, எத்தர்கள், ஒரு சிரமமுமின்றி, துளியும் நடுக்கமின்றி, அடிக்கிறார்கள் கொள்ளை ஆகுமா? என்று கேட்டாலோ, "இதோ ஆசியாவின் ஜோதியின் ரிμப விஜயம், படம் பார். பத்தாயிரம் அடி, கலர்'' என்று கூறி, இந்த "அபின்' போதும் மக்கள் மயக்க என்று எண்ணுகிறார்கள். முறையும் சரியல்ல, நீண்ட காலத்துக்குப் பலன்தரத்தக்கதுமல்ல.

"பாராளுமன்றத்தில் தொழிலுதவி நிதிக் குழுவின் நிருவாகத்தைப் பற்றி நடந்த வாதம் சில முக்கியமான கருத்துக்களை வறுபுறுத்தியுள்ளது. அவை நிருவாகத்தின் ஒழுங்கீன விவரங்களை வெளியிட்டதோடு கூட, இந்திய அரசாங்கம்அவற்றைக் குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், நிருவாகத்தை ஆராய்ச்சி செய்த விசாரணைக் குழுவின் ஆலோசனைகளுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை யென்றும் குறிப்பிடுகின்றன.

நிதிக் குழுவின் நிருவாக ஒழுங்கீனங்களை, கணக்குத் தணிக்கையாளர்கள் விளக்கிக் கூறியிருந்தும், அரசாங்கம் யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்கு ரூ.2,000,000 சிறு தொகைகளாக 21 தவணைகளில் கொடுக்கப்பட்டது சோடேபூர் தொழிற்சாலை நிருவாகம் வேண்டுமென்றே ஒழுங்கீனமாக நடத்தப்பட்டதென்றும், அதனாலே பெரு நட்டம் ஏற்பட்டதாகக் காட்டப்பட்ட தென்றும், பின்னர் அதனுடைய போட்டித் தொழிற்சாலை அதிபருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதென்றும், விசாரணைக் குழுவின் முன்னர் சான்று கூறப்பட்டது. இவ்வளவு ஊழல்களுக்கும் காரணமாயிருந்த நிருவாக ஆணையாளருக்கு, அவருடைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, ஆறுமாத ஊதியத் தொகையை இலவசமாக அளித்து, அவருக்கு ஒரு நற்சான்று பாராட்டுரையும் அரசினர் வழங்கியிருக்கிறார்கள்! பொது மக்கள் நிதி இங்ஙனம் மோசடி செய்யப்பட்டதற்கு அரசாங்கமும் உடந்தையாயிருந்ததாகத்தான் கொள்ள வேண்டு மென்று, பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காங்கிரசுக் கட்சித் தலைவர், பண்டித் தாகூர்தாசு பார்க்கவா, சுட்டிக் காட்டியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசக் காங்கிரசுக்குத் தலைவர் திரு. மோகன்லால் சாக்சேனா, காந்தி நினைவு நிதியிலிருந்து ரூ.1,65,00,000 தொழிலுதவி நிதியில் முதலீடாக வைக்கப்பட்ட தென்றும், ஏழை மக்களிடமிருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்பட்ட இத்தொகை ஒழுங்கீனமான முறையில் விரையமாக்கப் பட்டிருக்கிறதென்றும் கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தின் நேரடியான மேற்பார்வையிலிருந்த நிதியே இக்கதியை அடைந்திருக்கிறதென்றால், பொது மக்கள் யாரை நம்ப முடியும்?

"தமிழ்நாடு' தலையங்கத்தில் உள்ள கருமுத்துக்கள் இவை!

"தமிழ்நாடு' பாரதமாதாவின் முரசு அல்ல; அது அப்படித்தான் எழுதும்' என்று கூறித் தப்பித்துக் கொள்ள வெட்கத்தால் வேதனைப்படும் காங்கிரசார் முயல்வர், தம்பி, அவர்களுக்கு இதோ, இவைகளைக் காட்டு.

"கார்ப்ரேஷன் 1948 -ஆம் ஆண்டு முதல் வேலைசெய்து வருகிறது.

ஆரம்பமானது முதல் இதுவரை சுமார் ரூ. 21 கோடி கடன் தரப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு தூரம் கடன் உதவிபெற்ற ஸ்தாபனங்கள் வேரூன்றியுள்ளன என்பதைத் தெரிவித்து கொள்வதற்கான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே இந்த ஸ்தாபனம் வேலை செய்யும் விதத்தைப் பற்றிப் புகார்கள் கிளம்பி ஸ்ரீமதி கிருபளானி தலைமையில் ஒரு விசாரணைக் கமிட்டியை சர்க்கார் நியமித்ததும், அதன் யாதாஸ்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானதும் வாசகர்கள் அறிந்ததே.

அதன் நிர்வாக டைரெக்டர் தம்மிஷ்டப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பது பொதுப்படையான புகார்.

இதுவரை இருந்து வந்த ஏற்பாட்டின்கீழ் டைரெக்டர்கள் தமக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காண்பித்து அதிகாரததை துஷ்பிரயோகம் செய்வதாகப் பல மெம்பர்கள் புகார் செய்தனர்.

ஒரு கண்ணாடித் தொழிற்சாலைக்கு ரூ.21 இலட்சம் கொடுத்தும் அது வேலை செய்யாமல் நின்று போய்விட்டது.

உத்தரவாதப்படி டிவிடெண்டு தருவதற்காகச் சென்ற ஆண்டில் ரூ.4 இலட்சதுக்குமேல் சர்க்கார் தம் கையைவிட்டுத் தரவேண்டியதாயிற்று. இம்மாதிரி கார்ப்பரேஷன் ஆரம்பித்ததி லிருந்து இதுவரை இந்த வகையில் சர்க்கார் நஷ்டப்பட்ட தொகை ரூ.21 இலட்சம் இவையெல்லாம் திருப்திகரமான நிர்வாகத்தின் அறிகுறிகளல்ல.

இது சர்க்கார் பொறுப்பேற்று நடத்திவைக்கும் ஸ்தாபனம், 14 டைரெக்டர்களில் சர்க்கார் நேரடியாகவும் ரிசர்வ் பாங்கு மூலமாகவும் 6 பேரை நியமிக்கிறார்கள். இன்ஷ்யூரன்ஸ் ஸ்தாபனங்கள் கூட்டுறவு பாங்குகள் முதலியவை மற்றவர்களை நியமிக்கின்றன. எல்லோரும் பெரிய ஆசாமிகள். கடன் தருவதோ அயனான சொத்தின் ஆதாரத்தின் மீது. அதன் மதிப்பில் 60% அளவுக்குத்தான். இந்த ஸ்தாபனம் சரிவர நடைபெறாமல் சர்க்கார் வருஷா வருஷம் பையை அவிழ்க்க வேண்டியிருக்கிறது என்றால், கடன் தரும் விஷயமாக வேறு துறைகளில் சர்க்கார் பரவலாக செயல்படுவதற்கு முன் எவ்வளவு சிந்தனையும் ஜாக்கிரதையும் அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை''

"தினமணி' கக்கிடும் தீச்சுடர்கள் இவை!!

எப்படி இருக்கிறது காங்கிரசாட்சியிலே உள்ள நிர்வாக இலட்சணம்.

ஜீப்கார் ஊழல்
டிராக்டர் ஊழல்
உரபேர ஊழல்
ரெடிமெட் வீடு ஊழல்
இலண்டன் மாளிகை ஊழல்

தம்பி, எந்தச் சர்க்காரும் வெட்கப்படக்கூடிய அளவு இருக்கிறது - வளர்ந்தும் வருகிறது, சர்க்கர். துணிந்து யாராவது இத்தகைய ஊழல்களை எடுத்துக்காட்டிக் கண்டித்தால், மூடி மறைக்கவும், மிரட்டி அடக்கவும், நேருவைக் காட்டி மயக்கவும்தான் முயலுகிறதே தவிர, இத்தகைய ஊழல்களை ஒழித்துக்கட்டத் துணிவும் கொள்ளவில்லை; அத்தகைய தூய எண்ணம் இருப்பதாகத் தெரியவும் காணோம்.

நேரு பண்டிதருக்கோ இவைகளெல்லாம் கடுகு!

அவருடைய கண்ணோட்டம், உலக சமாதானத்தின்மீது ஆழப் பதிந்து விட்டதாம்.

இங்கே, நிர்வாகத்தில் ஊழல் நெளிகிறது; பொது மக்களின் பணம் விழலுக்குப் பாய்கிறது; ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுகிறது.

21 இலட்ச ரூபாயைச் சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்குக் கொட்டி அழுத இந்த அமைப்பு, இதுவரையில், 21 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது - தொழில்களின் வளர்ச்சிக்கு!!

என்னென்ன வளர்ந்ததோ! யார் கூறமுடியும்!

இந்த ஊழல்களில் நூற்றில் ஒரு பங்கு நடைபெற்றால் கூட, தம்பி, மற்ற ஜனநாயக நாடுகளில், மந்திரி சபைகள் கவிழும், மக்கள் சீறி எழுவர்!! சீனா போன்ற நாடுகளிலே, ஊழலுக்குக் காரணமாக இருந்தவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள்.

இங்கே, சோடேபூர் கண்ணாடித் தொழிற்சாலை நிர்வாகிக்கு, அவருடைய பதவிக்காலம் முடிந்தபிறகு, மேற்கொண்டு ஆறுமாதச் சம்பளம் கொடுத்து, அவருடைய அருமை பெருமையைப் பாராட்டி நற்சாட்சிப் பத்திரமும் கொடுத்து அனுப்பினார்களாம்!!

இந்த வெட்கக்கேட்டுக்கு, என்ன கூறுகிறார்கள், காங்கிரசார்!!

அன்புள்ள,

21-8-1955