அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இன்றையப் பகைவர்
நாளைய நண்பர்!
1

"டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து -
நமது இலட்சியம்


தம்பி!

இனியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே, என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எனினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப் பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது?

வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம், கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்க மாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரிட, நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது'' என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்!

"காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி'' என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப, உழைத்துப் பிழைத்துப் போ! என்று உறுமிடும் முதலாளியின் குரல்போல ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன், உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்ட மளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் - அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும் பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தின னாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை - காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச் சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை.

தம்பி, இனியன என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர்.

"அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!'' என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் கலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது!

இனியன கேட்கின்
இயம்புதல் கேளீர்,
இனிது இனிது
எகிப்தின் எழுச்சி!
அதனினும் இனிது
ஆணவம் தவிர்த்து
ஆங்கில அரசு
அடி பணிந்ததுவே!

என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்!

அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நழுவ விடாது அவைதமைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு - தெற்கு என்பதாகவே இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார்.

எந்தப் பிரச்சினையின்மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப் பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிவித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் படவில்லை தம்பி! வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!

சென்னைச் சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும் திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது! நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது!! எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் - காலம் கடந்துவிடுமுன் காரிய மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன்.

வரி அதிகம்; தொழில் குறைவு; அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்க வில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள் குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை அலங்கோலமானதாக்கி வருகிறார்கள், இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம், அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் "புதியவர்களோ' நம்மை நிந்திக்கின்றார்கள் இல்லை, நமது அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள்.

எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே "பாணி' தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள்.

சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன் - கோபங்கொள்ளவில்லை.

நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும் கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிடக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட இடமில்லை.

நமது "இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம் நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!!

ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும் கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை - இன்னமும்; ஆனால் தொடுகிறது!

இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும்.

அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த "கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள்.

பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல, இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப் படவில்லை.

மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!!

தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன் சாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன் காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் "இலட்சியம்' தீதானது, கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்!

அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்பட வில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! - இலாபம்! - வேறு இருப்பதற்கில்லை.