அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இனியன பல இனி!
1

பிரிவும் இலக்கியமும் -
பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம்.

தம்பி!

முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்!

ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாம லிருக்கக் காரணம் என்ன?

என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்?

அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது, நியாயம்; ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா?

"ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன, என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி, என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிட! - இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன், மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!'' என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய், அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு. என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா வழி? பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும் நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாயப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்... போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது... நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே... போதும் போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன... கண்டித்துத்தான் பேசுவேன்... ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்...''

தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக் கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது! எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே - தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது - அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது பழமொழி - புதுமொழி, பிரிந்தவர் கூடினால் பேச்சுக்குப் பஞ்சமா? என்பது.

தம்பி! உன்னிடம் ஒளிக்காமல் ஒன்று கூறிவிடட்டுமா - காரணம் ஏதேனும் காட்டவேண்டும் என்பதற்காகக் கூறுவதாக எண்ணிக் கொள்ளாதே - முழு உண்மை! உன்னைச் சில நாள் சந்திக்காததற்குக் காரணம், உனக்காக வேறு ஒரு முக்கியமான அலுவலிலே ஈடுபட்டிருந்ததுதான்! உனக்கு நான் ஏதேதோ ஆக்கித் தரவேண்டுமென்ற "கடமை' உள்ளவனல்லவா? அதன் காரணமாக, நீண்ட நாட்களாக - ஆண்டு பலவாக - உன் அருமை பெருமைகளையும், நீயும் நானும் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வண்ணமிகு வரலாற்றினையும், பிற மொழியாளர்கள் அறிந்து, ஆர்வம் கொண்டு நமது இலட்சியத்தை உணர்ந்து ஒன்றுபடச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு அல்லவா - அதற்கான பணியில், மும்முரமாக ஈடுபட வேண்டி இருந்தது - அப் பணியின் துவக்கக் கட்டம் செவ்வனே நடைபெற்றிருக்கிறது - ஆங்கில வார இதழ் வெளியீட்டினைத்தான் குறிப்பிடுகிறேன் - அந்தப் பணி எனக்குச் சற்று அதிகமான சிரமத்தையும், செலவினையும் அளித்தது - அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்வதிலே ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. என்றாலும், அந்தப் புதிய பொறுப்பிலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நான் உன்னைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்புகளை இழந்திட நேரிட்டது! உன்னைக் கண்டு என் உள்ளத்தைத் திறந்து பேசுவதைவிட, எனக்கு வேறு எதிலே இன்பம் இருக்கமுடியும்! எனவே, உன்னை இதுநாள்வரையில் காணாததன் காரணம், உன்னை மறந்ததால் அல்ல, மறவாமல், உனக்கு மற்றோர் துணை தேடிடும் காரியத்தில் ஈடுபடவேண்டி இருந்ததால்!

ஆனால், காரணம் பல கூறினாலும், கடுமை குறைந்திடாது. உணருகிறேன், தம்பி! நன்றாக உணருகிறேன்! உணருவதால் தான், ஊரெல்லாம், உறங்கும் இந்த நேரத்தில் உன்னைக் காண்கிறேன் - எழுதிக் கொண்டிருக்கும்போதே!!

பிரிவு - தம்பி! நமது இலக்கியத்திலே, மிகச் சிறந்த சுவைமிகு பாக்களை நாடு பெற உதவிற்று! அறிவாய்!

நோம் என் நெஞ்சே!
நோம் என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற
சிறிஇலை நெரிஞ்சி
கட்கு இன் புதுமலர்
முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல்
நோம் என் நெஞ்சே!

தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்!

நமதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்கு வதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக இல்லை! நெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும் நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும், நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும் காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில் தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது.

நோம் என் நெஞ்சே
நோம் என் நெஞ்சே!

என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது - ஆனால் முன்பு அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் - கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்... ...!!

பிரிவு - குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன.

நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை, பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே - அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார்.

தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தூற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!'' என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் "யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள்; பதில் அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே, அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை; சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத் "தோட்டத்துக்கு வா!' என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் - சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை காட்டுவதுபோல இருந்தது'' என்றேன்.

அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், "அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப் பேசுகிறார்கள்!'' என்று பேசினார். கண்டனம்! அகம், புறம். என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் - அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள் எண்ணி அமுல் நடத்தும் நாள்!!

தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு தான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி, வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும்.

எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு "தமிழ்நாடு' எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று எண்ணிப் பாரேன்!

தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது.

உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரலிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச் செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத் தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக் கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர்.

எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்!

இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி, விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு!

வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல், நலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு, மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக் கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப் பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும், அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே!

இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்'' வீரக் குரலெழுப்புவது கேட்க, வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்டசபையில் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த மகிழ்ச்சியைவிட, காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

நீ அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்பு களைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்ன வென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந் தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட. அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் "கூடிக் கொண்டதாலேயே' மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும், "கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா' என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான், உள்ளபடி சிரிப்பு வருகிறது!!

மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம் ஆடுவது போலிருக்கிறதல்லவா!!

சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது - இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு, "பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் "பாயைச் சுருட்டிக் கொண்டேன்'' என்று கூறிப் பார்க்கிறார்.

அமிர்த பஜார் பத்திரிகை
பிரீபிரஸ்
இந்துஸ்தான் டைம்ஸ்

போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும் தாக்குகின்றன.

எனக்கு உள்ளபடி வருத்தம் - அமைச்சர் தமது உள்ளத் திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளாகிவிட்டது! என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட்டி வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன. காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார் சொல்வது உண்மையாகத்தானே இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!

நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது - நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும், அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் - தீர்ப்பு அளிப்பாய்!

ஆங்கில இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும் மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன் உறவாட! அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்.

"திராவிட நாடு' மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் - பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப் பட வேண்டும்.

இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!!

தித்திப்பான செய்தி - "அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை - இவன் எம். ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள் நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி, இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ - அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா?

எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, "திராவிட நாடு' பதினாறாம் ஆண்டு பெறுகிறது.

இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக "அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன - வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும்,

உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது.

தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும், அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, "வட்டியும் முதலுமாக' திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி.

அண்ணன்,

21-7-'57