அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இயற்கை கொஞ்சுகிறது !
இல்லாமை கொட்டுகிறது !!
1

உழைப்பும் சிக்கனமும் -
"தினமணி'யின் விளக்கம் -
தமிழ்நாட்டுத் தொழில் நிலை

தம்பி!

கடந்த ஒரு திங்களாகத் தமிழகத்தின், மாமழை பொழிந்த வண்ணமிருப்பதனால், இப்போது எங்கு பார்த்தாலும், இயற்கை கொஞ்சுகிறது - ஏறி குளங்களில் எழில் வழிகிறது - வயல் வரப்பு களிலே வண்ணம் காணப்படுகிறது - மரம் செடி கொடிகள் யாவும் பசுமை பொழிகின்றன. பாங்கான காட்சி தெரிகிறது. வரண்டுகிடந்த இடங்கள், வெடித்துக்கிடந்த வயல்கள், தூர்ந்து கிடந்த வாவிகள் வாய்க்கால்கள் எல்லாம் புதுக்கோலம் காட்டி நிற்கின்றன. எங்கள் மாவட்டத்தில், பாலாறுகூட "கலகலென'ச் சிரித்துவிட்டது என்றால் பாரேன்!! பத்துப் பதினைந்து ஆண்டுகளாக, ஈரம் காணாது, இருந்த ஏரிகளெல்லாம் இன்று நிரம்பி வழிகின்றன. "வெறிச்சென்று' இருந்துவந்த வெளிகள் பெருமழையால் வெள்ளக்காடாயின; மழை நின்றதும், சதுப்பாகி, இப்போது ஈரம் அழகளிக்கும் தோற்றம் தெரிகிறது. வரண்ட மனதினர் போன்றிருந்து வந்த குன்றுகளே இப்போது வளமளிக்கும் வகை பெற்ற நிலையில் இருக்கின்றன! அடவிகளின் நிலையைக் கூறவா வேண்டும்! நள்ளிரவில், நான் நண்பர்களுடன் கூட்டம் முடித்துக்கொண்டு வருகிறபோது, "சலசல' வென்ற ஒலி சூழ்ந்து கேட்கிறது! கதிரவனின் பொன்னிறக் கதிர் கிளம்பியவுடன், இயற்கையின் கோலம் காண்கிறேன்; உண்மையிலேயே இயற்கை கொஞ்சுகிறது. துரைத்தனத்தாரின் அலட்சியப்போக்கின் காரணமாகச் சிற்சில இடங்களில் "உடைப்புகளும்' "சேதங்களும்' ஏற்பட்டுவிட்டன; பட்டிகள் பலவற்றிலே மக்கள் அல்லற்பட நேரிட்டது; எனினும் மொத்தத்திலே, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது! இந்தப் பேருண்மை தெரியாமலா, "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!' என்று மனம் கனிந்து பாடினார் இளங்கோ அடிகள்! வெண்ணிற மேகங்கள், உலவிய வண்ணம் உள்ளன - ஆடலழகிகள் நீலநிறத் திரைகொண்ட அரங்கிலே அன்னமென ஊர்ந்தும், அழகு மயிலென நடந்தும் காட்டும் பான்மைபோல! சூல் கொண்ட மங்கை புது எழில் பெறுதல்போல, மழை முத்துக்களைக் கருவிற்கொண்டு கருநிறம் பெறுகின்றன - காணக் காட்சியாகின்றன - பிறகு, முறையும் நெறியும் மறந்தோரின் பிடியிலே சிக்கிவிட்ட நாட்டவருக்கு நாமேனும் இதம் அளித்திடல் வேண்டுமே என்ற நோக்கு கொண்டதுபோல, இயற்கை தன் அன்பைச் சொரிந்திடக் காண்கிறோம்.

வாரி வாரி இறைக்கிறார்கள் தம்பி, பணத்தை, கோடிக் கணக்கில். கிராமப்புனருத்தாரணம் என்கிறார்கள், தேசிய விஸ்தரிப்புத் திட்டம் என்கிறார்கள், சீரமைப்பு என்று செப்பு கிறார்கள், சமாஜப் பணி, மாணவர் சேவை, என்று ஏதேதோ பேசுகின்றனர் - எனினும் இயற்கை மழை பொழிந்தானதும், தம்பி, பல கிராமங்கள் தீவுகளாகிவிடக் காண்கிறோம் - பாதைகள் வாய்க்கால்களாகி விடுகின்றன - கிராமங்கள் சகதிக் காடாகி விடுகின்றன! அந்த இலட்சணத்திலே இருக்கிறது, துரைத்தனம் அமைத்துள்ள பாதைத் தொடர்புகள்! பாலங்கள் ஓலமிடுகின்றன! மழை நீர் ஒழுங்காகச் செல்வதற்கான வழிகால்கள் சரியாக அமைக்காததால், ஆங்காங்கு குப்பை கூள மேடுகள் கிளம்புகின்றன! இத்தனை கேடுபாடுகளையும் நாம் மறந்திடச் செய்யும் விதத்தில், இயற்கை கொஞ்சுகிறது - இன்ப வாழ்வுக்கான வழி அளித்திருக்கிறேன் - வளம் கொழித்திட வகை தந்துவிட்டேன் - மகிழ்ச்சிப் பெருக்கெடுத்திடவேண்டும் என்பதற்காக மாமழை பெய்வித்துள்ளேன், மாந்தரே! காண்மின்! என்மீது குறை ஏதுமில்லை அறிமின்! வாழ்வில் இன்பம் பெறுவதற்குத் தடையாக நான் இல்லை என்பதை உணருமின்! உமக்கு உள்ள கொற்றம், குடிமக்களின் நல்வாழ்வு காணும் குறிக்கோள் கொண்டதாக அமைந்தால், உமக்கு வாழ்வில் இடர் ஏதும் வருவதற்கில்லை. என் கடமையைக் கனிவுடன் செய்துள்ளேன், காண்மின்! அதோ அருவி! இதோ ஏரி, குளம், மடுவு, வாய்க்கால்! எங்கும் பசுமை! வளம்பெறுவதற்கான வாய்ப்புகள்!! - என்று இயற்கை பெருமிதத்துடன் பேசுகிறது!!

ஆமாம், தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, எனினும், இல்லாமை கொட்டுகிறது! என் பயணங்களில் நான் இரண்டையும் காண்கிறேன்! எல்லோரும் இன்புற்று வாழ்வதற்குத் தேவையான அளவு செல்வம் செழித்திடத்தக்க சூழ்நிலையை இயற்கை அளிப்பதும் தெரிகிறது! மிகப் பெரும்பாலான மக்கள், இல்லாமையால் இடர்ப்படுவதும் தெரிகிறது!! இயற்கையின்மீது குற்றம் காண்பதற்கில்லை. நில நடுக்கமேற்பட்டு நாசம் விளைதல், நெருப்பைக் கக்கி நாசம் ஏவுதல் போன்றதேதுமில்லை! வெள்ளச் சேதம் சிற்சில இடங்களில் காண்கிறோம். அரசுக்கு ஆற்றல் இருந்தால் தடுத்து, சேதம் ஏற்படாது செய்திருக்க முடியும் என்பதும் தெரியத்தான் செய்கிறது.

இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது! காரணம் என்ன?

வயலிலே பசுமை தெரிகிறது, உழைப்பாளியின் உடலிலே பசைகாணோம்! இயற்கையின் அழகொளி எங்கும் தெரிகிறது! ஏழையின் கண்களோ இருண்டுதான் உள்ளன, ஒளி இல்லை!

இயற்கை வளமளிப்பதாக இருந்தும், இல்லாமை இந்நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலோரைக் கொட்டுகின்ற இந்த நிலைக்குக் காரணம் யாது, இந்த நிலையினை மாற்றிட வழி என்ன, இந்த வழியினைக் கண்டறிந்து கடமையினைச் செய்து வெற்றிகாணும் பொறுப்பை ஏன் துரைத்தனம் ஏற்றுக்கொள்ள வில்லை, அங்ஙனம் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாத துரைத்தனத்தை, மக்கள் எங்ஙனம் அனுமதித்துள்ளனர், ஏன் சுமந்து கிடக்கின்றனர், என்ற இன்னபிற எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும், பயணத்தின் போதெல்லாம்.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, சுற்றுப்புறங்களிலிருந்து, பத்து, இருபதுகல் தொலைவிலிருந்தெல்லாம் இளைஞர்கள், இருவர் மூவர் உந்து வண்டிகளில் வந்து குழுமிடக் கண்டு களித்ததுண்டு; இப்போது இலட்சியம் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமல்ல, தம்பி, உழைத்து உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், தாய்மார்கள் வருகிறார்கள்! கண்டதும் எனக்குக் கவலை குடைகிறது! ஆமாம், கவலைதான்! அவர்கள், உழைப்பின் பெருமையை உற்சாகத்துடன் பேசி வரும் தலைவர்களின் துரைத்தனத்தினால், என்ன கதிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது, கவலை குடையாமலிருக்க முடியுமா! கவனித்தாயா, தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப இருக்கிறது, இருந்தும், இல்லாமை கொட்டுகிறது!

மானும் மயிலும் மட்டுமல்ல, பாம்பும் புலியும் பிறவும் பெறுகின்ற வாழ்க்கை வாய்ப்புகள்கூட, இந்தக் கள்ளமில்லா உள்ளம் படைத்த மக்களுக்கு, துரைத்தனம் அளித்திட மறுக்கிறது. அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது.

பட்டினியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இருந்திடல், அறமல்ல, அந்த அவல நிலையைக்கண்டும் மாற்றிட முனையாத துரைத்தனம், நாகரிகமுள்ளதென்று எவரும் கூறார். இங்கோ இயற்கை அன்பு சொரிகிறது, மக்கள் வியர்வையைக் கொட்டுகிறார்கள். எல்லாம் பதவியில் உள்ளோருக்கும் அவருக்குப் பராக்குக்கூறி வாழ்ந்திடும் செல்வர்களுக்கும் குளித்திடப் பன்னீர் ஆகிறது; உழைத்தும் வாழ்வில் சுகம்காணா மக்கள், கண்ணீர் பொழிகின்றனர்; கண்ணீர்த்துளிக் கட்சி என்று நம்மைக் கேலி செய்வதாக எண்ணிக்கொண்டு சிலர் செப்பு கின்றனரல்லவா, இந்த மக்கள், கண்ணீர்த்துளி கட்சி என்றால், அது நம்கட்சி, இனம் இனத்தோடு என்றபடி கண்ணீர் கண்ணீருடன் கலந்து உறவாடலே முறை என்று எண்ணிக் கொண்டனர்போலும்; பல்லாயிரக் கணக்கிலே கூடுகின்றனர்.

ஏத்தாபூர் என்றோர் சிற்றூரில் நான் பேசிக்கொண் டிருந்தேன் - நண்பர் N.V. நடராசன் சென்ற கிழமை முழுவதும், என்னைக் "கிட்டி' போட்டு வேலை வாங்குவது என்பார்களே, அதுபோல வேலை வாங்கினார்; செல்லுமிடமெல்லாம், தேர்தல் நிதி திரட்டு, நன்கொடைகள், மேலும் மேலும் கேட்டு வாங்கு, பொதுச்செயலாளர் ஐந்து இலட்சம் கேட்கிறார், நிதிதிரட்டு, உடனே, இங்கேயே, பணம் திரட்டிக்கொடு என்று "சிமிட்டா' கொடுத்தபடி இருந்தார்; நான்கூட குடந்தைக் கூட்டத்தில் சொல்லியும் விட்டேன். N.V. நடராசன் என்பதற்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே! நன்கொடை வாங்கும் நடராசன் என்பது பொருள் - என்று!

ஏத்தாபூர் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது, கிராமத்து உழைப்பாளி ஒருவர் - முப்பது வயது இருக்கலாம் - அவர் மேனி உழைப்பால் கருத்து இருந்தது போலவே, அவர் கட்டியிருந்த ஆடை காலத்தால் கருப்பாகிக் கிடந்தது - மேடைக்கு வந்தார் - தேர்தல் நிதி என்று கூறி, தொகையின் அளவு கூறாமல் பணம் கொடுத்தார் - தம்பி, ஒரு அணா!! ஆமாம்! அவ்வளவுதான் இருந்தது அந்த உத்தமனிடம். அதையேனும் கொடுத்தாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சி இருந்தது அந்தக் கண்ணியவானுக்கு. கனவான்களுக்கு உதிக்க முடியாத கடமை உணர்ச்சி அல்லவா அது! அந்த ஒரு அணாவை, நான் ஒரு இலட்சமாக மதித்து மகிழ்ந்தேன். உபசாரப்பேச்சு அல்ல! அந்த ஒரு அணாவை என்னிடம் கொடுக்கும்போது, நான் அந்த உழைப்பாளியின் முகத்தை நன்றாகக் கவனித்தேன் - இதயம் ஒரு அணாவாக வடிவெடுத்து வந்ததை உணர்ந்தேன். அன்று இரவு பசி நீக்கிக்கொள்ளப் பயன்பட்டிருக்கும், களைப்புப் போக்க தேனீர் அருந்தப் பயன்பட்டிருக்கும், ஆனால் அந்தக் கண்ணியமிக்கவன், நாடு மீளவும் கேடுமாளவும் நான் என்னாலான காணிக்கையை இதோ செலுத்துகிறேன் என்ற எண்ணத்துடன் தருகிறான் ஒரு அணா!

இத்தகைய நல்ல மனம் படைத்தோரெல்லாம், இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப தரப்படுகிறது என்ற நிலை இருந்தும், இல்லாமையால் கொட்டப்படுகிறார்கள்.

இவர்களை ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ, ஏழைகளை ஈடேற்ற, அவர்களுக்குத் தொழில் தந்து துயர்துடைக்க, ஏற்கனவே இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டு விட்டார்கள், இன்னும் ஒரு ஆறு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள்!!

உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்களே! உங்களுக்கு உள்ள தரித்திரத்தைப் போக்க, துரைத்தனத்தார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அறிவீரா? என்று நான் பொதுக்கூட்டங்களில் எடுத்துச் சொல்லிவிட்டு, இவர்களின் முகத்தைப் பார்க்கிறேன் - திகைத்துப் போகிறார்கள் இந்த மக்கள். இரண்டாயிரம் கோடியா! எமக்காகவா! ஏற்கனவே செலவிட்டாகிவிட்டதா! நிஜமாகவா? எனய்யா இப்படிக் கேசெய்கி றீர்! வெந்த புண்ணிலே வெந்தழலைப் போடுகிறீர்! பகல் பட்டினி இராப்பட்டினி என்ற நிலையில் இங்கு நாங்கள் அவதிப்படுகிறோம், எங்களிடம் வந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் எமக்காகச் செலவிட்டாகிவிட்டதென்று சொல்கிறீர்களே என்று, கேட்பது போலிருக்கிறது அவர்கள் பார்வை!

இந்த இலட்சணத்தில் துரைத்தனத்தை நடத்தும் கட்சியினர் கல்கத்தாவில் கமிட்டி நடத்தி, மக்களுக்குப் புத்திமதி கூறுகின்றனர்! என்ன அறிவுரை அளித்துள்ளனர் அறிவாயோ, தம்பி, கேள்! கேட்டால், கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும்.

சிக்கனமாக வாழவேண்டும்

செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

இதுதான், கல்கத்தாவில் சமதர்மச் சீமான்கள் கூடிக் கலந்து பேசித் தயாரித்த புத்திமதி.

வயிறாரச் சோறின்றி, மானமார ஆடையின்றி, குடியிருக்கக் குச்சிலின்றி, நோய் தீர மருந்தின்றி இருக்கிறார்களே இவர்களைப் பார்த்துத்தான் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கனம் என்ற அறிவுரை கூறுகிறார்கள். மிக மிக நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் இதற்கு! இருக்கிறது, இத்தகைய நெஞ்சழுத்தம், சீமான்களுக்கு!

"எப்போதும், உனக்கு இந்தப் பஞ்சப்பாட்டுதான்! சாமி! சாமி! பணம்! பணம்! பணம்! செச்சேச்சே! இப்படியாடா உயிரை வாங்குவது. கையைப்பிடிப்பது, காலைபிடிப்பது பணத்தை எப்படியாவது, கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்வது; பிறகு கண்ணை மூடிக்கொண்டு, வீண்செலவு செய்வது இதே உனக்கு வழக்கமாகிவிட்டது.'' என்று எலும்பு உடையப் பாடுபடும் ஏழை உழவனுக்கு இதோபதேசம் செய்துகொண்டே, வெற்றிலைச் சாறைக் காரித்துப்புகிறாரே, வடபாதிமங்கலத்தார், குன்னியூரார், கோட்டையூரார், கொடிக்காலுடையார், அந்தச் சாற்றிலே, குங்குமப்பூவும் கிராம்பும், ஏலக்காயும் சாதிக்காய் ஜாபத்திரியும், இருக்கிறது, தம்பி! புளித்துப்போன கஞ்சிக்கு, உறைப்புக் குறைந்துபோன மிளகாய்த் துண்டைத் தேடித் தவிக்கும் உழைப்பாளிக்கு, வீண் செலவு செய்யாதே என்று புத்தி கூறுகிறார்கள். கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில், இதே உபதேசம் தரப்பட்டது.

தினமணிக்கே பொறுக்கவில்லை. எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருந்தால், ஆளவந்தார்களின் இருமல் உறுமலைக்கூட இன்னிசை என்று கூறி, கூடச் சேர்ந்து தாளம் தட்டும் தினமணிக்கே கோபம் ஏற்பட்டு, வீண் செலவு செய்யாதீர் என்று ஊராருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டுமய்யா ஊராள்வோரே! முதலில் உங்கள் ஊதாரித்தனத்தைச் சற்றுக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும், என்பதை எண்ணிப்பார், தம்பி.

"பொதுமக்களுக்கு உபதேசம் செய்யும் அநாவசியச் செலவுத் தவிர்ப்பையும் சிக்கனத்தையும், மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்கார்களும் முதலில் தாமே பின்பற்றி பிறருக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்''

தினமணியின் திருவாசகத்தில் ஒரு துளி இது!

என்ன பொருள் கிடைக்கிறது இதிலிருந்து? ஊதாரித் தனமாகச் செலவிடுகிறது சர்க்கார் என்ற உண்மை. எப்படிப்பட்ட சர்க்கார் இப்படிப்பட்ட ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறது? எம்மை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை. எமக்கு நிகர் யாமே! - என்று தம்பட்டமடிக்கும் கட்சியினர். உலகத்திலேயே உத்தமர் என்று பெயரெடுத்த காந்தியாரால், மாணிக்கங்களாக்கப் பட்ட மண்ணாங்கட்டிகளெல்லாம், தம்மை இயற்கை மாமணிகள் என்று கூறிக்கொள்கின்றன! அவர்தம் ஆட்சியிலே நடைபெறும் ஊதாரித்தனம், தினமணிக்கே பிடிக்கவில்லை; குமட்டலெடுக்கிறது!!

தினமணிக்கு ஏதோ கோபம், அதனால்தான் "எதிர்க்கட்சி' பேசுகிறது, என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, மேலும் விளக்கம் அளிக்கிறது, அந்த ஏடு.

"சர்க்கார்களின் முயற்சிகளில் வீண்செலவு அம்சம் ஒரு அளவு இருக்கிறது என்பது உலகமறிந்த விஷயம். தணிக்கைக் கமிட்டிகள் இவற்றை ஒருவாறு புலப்படுத்தியுள்ளன. இவற்றிற்குமேலாக தண்டச் செலவுகளும் இருக்கக்கூடும். ஏராளமான அதிகாரிகளும், கமிட்டிகளும், கோஷ்டிகளும், ஜமாக்களும், ஆலோசனைகளும், அதிகாரிகளின் மகாநாடுகளும், நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போகவேண்டும். இதில் ஏற்படும் வீண்செலவும் வேலை நஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல.''

தம்பி! இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது! இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளவர்கள், "ஜமாக்கள்' அமைத்துக்கொண்டு தண்டச்செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். இது உலகறிந்த விஷயம் என்று தினமணி கூறுகிறது.

ஒவ்வொரு முறை தணிக்கைக் கமிட்டி தன் கருத்துரையை வழங்கும்போதும், நடைபெற்ற ஊழல்களை இடித்துக்காட்டுகிறது! எனினும், தண்டச் செலவும், தர்பார் போக்கும் துளியும் குறைவது கிடையாது. எதற்கு எடுத்தாலும் ஒரு கமிட்டி! எந்த விஷயத்தைப் பற்றிப் பரிசீலிக்கவும் ஒரு "ஜமா' - ஒவ்வொன்றுக்கும் படிச்செலவு! ஒன்றை ஒன்று மிஞ்சும் விதத்தில் செலவு! ஒரு கமிட்டியின் கருத்துக்கு நேர்மாறாக மற்றோர் கமிட்டியின் கருத்து! இந்தவிதமான ஆட்சியைச் செய்துகொண்டு, பணத்தைப் பாழாக்கி வருகிறவர்கள்தான், பாட்டாளிகளுக்கு சிக்கனமாக வாழ்க்கை நடத்துங்கள்! வீண்செலவு செய்யாதீர்கள்! என்று உபதேசம் செய்கிறார்கள். இந்த அபாரமான கண்டுபிடிப்புக்காகக் கல்கத்தாவில் கூடினர்! நாடெங்கும் கொட்டமடித்துக் கிடக்கும் எந்தக் காட்டரசனுக்கும் தெரியுமே இந்த உபதேசம்.

பொதுப்படையாகப் பேசுவது போதாது - சுட்டிக்காட்டி யாவது இவர்களைத் திருத்தவேண்டும் என்றுகூடத் தினமணிக்குத் தோன்றி இருக்கிறது. எனவே, துரைத்தனம், எப்படியெப்படி தண்டச் செலவு செய்கிறது என்பதைப் படம் பிடித்துக்காட்டவே முற்பட்டிருக்கிறது.

"ஒரு சிறிய பள்ளிக்கூடத்துக்கு கால்கோல் விழா, சிறிய ஓடைப்பாலத் திறப்புவிழா போன்ற சாதாரண ஸ்தல பணிகளுக்கு மந்திரிகள் அழைக்கப்படுவதும், அநேகமாக எல்லா ஜில்லா அதிகாரிகளும் வரவேண்டியிருப்பதும், சகஜமாகிவிட்டது. இதனால் ஏற்படும் செலவுகள் முற்றிலும் அநாவசியமானவை''

இவ்வளவு பச்சையாக எடுத்துக் காட்டியாவது, திருத்தலாம் என்று தினமணி கருதுகிறது.

அமைச்சர்களுக்குக்கூடச் சிறிதளவு கோபம் உண்டாகும். திண்ணைப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவும், ஓடைப்பால அமைப்பு விழாவுக்கும் நாம் சென்று வீண் செலவிடுகிறோம் என்று தினமணியே கேலிசெய்கிறதே என்று வருத்தமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற ஒவ்வோர் விழாவையும், மக்கள் காண நேரிடும்போது எத்துணை வேதனை அடைகிறார்கள் என்பதை இந்த அமைச்சர்கள் உணர்ந்தால்தானே! எத்தனை எத்தனை வீண் விழாக்கள்! தண்டச் செலவுகள்! எத்தனை கால்கோள் விழாக்கள்! கட்டடம் என்றென்றும் எழுப்பப் போவதில்லை என்பது, ஊராருக்கும் தெரியும், இவர்களும் அறிவார்கள், எனினும் அதற்கும் ஓர் விழா! மக்களைக் காணவும், மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துள்ள புதிய மதிப்பைக் காட்டிக்கொள்ளவும், மாவட்ட கலெக்டர் முதற்கொண்டு, தமது ஏவலர்களாகக் கைகட்டி வாய்பொத்தி நிற்பதைக்காட்டவு மன்றோ இந்த விழாக்கள் நடக்கின்றன. வீண் விழாக்கள்! தண்டச் செலவு! என்று கண்டிக்கும் இதே தினமணிகள், இந்த விழாக்களின் கோலத்தை விளக்கத் தனி நிருபர்களை அனுப்புவதும், படம்போட்டுப் பாராட்டுவதும் கொஞ்சமா! இப்போது, நாற்றம் தாளமுடியாததாகிவிட்டதால், இந்தத் தண்டச் செலவுகள் ஏன் என்று கேட்டுத்தீர வேண்டி வந்தது இந்த ஏட்டுக்குக்கூட!

"பிறர் நாலணாவில் செய்யக்கூடியதை சர்க்கார் செய்தால் எட்டணா ஆகிறது என்ற பழிச் சொல்லுக்கு இடங்கொடுக்கலாகாது. தாம் தரும் வரிப்பணம் அதிகபட்ச சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுகிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்படவேண்டும்''

என்று "இரத்தினச் சுருக்கமாக' இன்றைய ஆட்சிமுறையின் யோக்கியதையைத் தினமணி அம்பலப்படுத்துகிறது.

இன்றுள்ள ஆட்சிமட்டும் காங்கிரஸ் கட்சியுடையதாக இல்லாமலிருந்தால், தினமணியின் எழுத்திலே தீப்பொறி காண்போமே!

ஜஸ்டிஸ் கட்சிக் காலமாக இருந்தால், என்னென்ன எழுதத்தோன்றும், இந்தத் தேசிய ஏடுகளுக்கு!

ஏழை அழுகிறான்; அவனைக் கொள்ளை அடித்துக் கொட்டமடிக்கிறார்கள்.

கமிட்டி கமிட்டி என்று அழைத்துக்கொண்டு, ஏழையின் பணத்தைப் பகற்கொள்ளை அடிக்கிறார்கள்.

திறப்பு விழாவாம்! மூடு விழாவாம்! இதற்கு பணம் கொள்ளை போகிறது!

இந்தத் "தூங்குமூஞ்சிகளை' யார் காண விரும்புகிறார்கள்! எதற்காக இதுகள் விழா நடத்த வரவேண்டும்!

நாலணா செலவுக்கு நாலு ரூபாய் எடுத்துக்கொண்டு கொழுத்துவிட்டார்கள்!

என்று காரசாரமாக, நடையை நாராசமாக்கி எழுதுவர்! இப்போது தமது சொந்தக்கட்சியே இத்தகைய கேவலமான நடத்தையில் ஈடுபடுவதால், தினமணியால், இப்படியும் அப்படியுமாகத்தான் இடித்துக்காட்ட முடிகிறது. ஆனால், உண்மையை ஊரார் அறிந்து கொள்வதற்கு இவ்வளவே போதும் இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது, அதற்கான காரணத்தில் ஒன்று ஊராளும் பொறுப்பும் வாய்ப்பும் ஒரு ஊதாரிக் கூட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பது. இதனை உணர்ந்துகொள்ள, தினமணியின் கண்டனம் போதுமானதுதான்.