அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


காடு இது-நாடு அல்ல!

கே.வி.கே. சாமியின் குண இயல்புகள் -
சாமிக்குப் பின்


தம்பி!

தூத்துக்குடி சென்றிருந்தேன், துயரக் கடலில் வீழ்ந்து உழலும் நம் தோழர்களைக் கண்டு ஆறுதல்கூற; ஆனால் எனக்கு ஆறுதல் அளியுங்கள் என்றுதான் என்னால் கேட்க முடிந்தது.

சாமியின் திருமணக் கோலத்தைக் கண்டு களித்து, வாழ்வில் எல்லா இன்பமும் எய்தி மகிழ்ந்திடவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கச் சென்றிருக்கவேண்டிய நான் தம்பி தகுதியும் திறமையும் படைத்தவன், அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், ஏழையின் இதயத்தை நன்கு அறிந்தவன், மாளிகையில் மந்தகாச வாழ்வு நடாத்திக்கொண்டு குடிசை வாழ்வோரின் குமுறல் குறித்துப் பேசி உருகிடும் போக்கினன் அல்ல, அவர்களோடு கலந்து உறவாடி அவர் தம் கஷ்ட நஷ்டம் இன்னது என்று கண்டறிந்தவன், பாட்டாளி ஆலையில் வெந்து கருகுவதையும், உழவன் உழைத்து உருக்குலைந்து போவதையும், நடுத்தரக் குடும்பங்கள் வாழ்க்கைத் தொல்லை எனும் சுமையைத் தாங்க மாட்டாமல் வளைந்து போயிருப்பதனையும் கண்டு குமுறும் நெஞ்சினன், இவர்தம் இன்னலைத் துடைத்திட வேண்டும் என்ற பேரார்வம் கொண்டுமட்டுமல்ல, துடைத்திட இயலும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் உத்தமத் தொண்டன், மேதா விலாசத்தைக் காட்டுவதற்காக "மேடை' ஏறுபவனல்ல, பொதுநலத் தொண்டாற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் பேசும் போக்கினன், மக்களின் வாழ்வு செம்மை பெற எது செயல்வேண்டும், எங்ஙனம் அதனைச் செயல்வேண்டும் என்ற முறை அறிந்து ஓயாது உழைத்து வருபவன், அத்தகைய சாமி, உங்கள் தொகுதியின் உறுப்பினனாகி, சட்டசபையில் வீற்றிருந்தால், உமக்கு உற்ற குறை எல்லாம் தீரும், நலன் பல வந்து எய்தும் என்று எடுத்துக்கூறி ஆதரவு திரட்டிட தேர்தல் கூட்டத்தில் சென்று பேசிடவேண்டிய நான், காலத்தின் கொடுமையை என்னென்பது, சாமியின் சவக்குழியைக் காணவும், அங்கு நின்று பேசவும், அனுதாபக் கூட்டத்தில் கதறவும் வேண்டியதாயிற்று. என்மீது தீராப்பகை கொண்டோரும், இந்த அளவுக்கு என்னை வாட்டி வதைத்திருக்க முடியாது. சவக்குழியைக் காணச் சென்றேன் - சண்டமாருதம் என்றனர் சாமியின் ஆர்வம் கண்டோர், சளைக்காத உழைப்பாளி என்றனர் அவன் அல்லும் பகலும் அனவரதமும் பாடுபடக் கண்டோர், நகராட்சி மன்றத்திலே உறுப்பினராக அமர்ந்து நற்பணியாற்றி வரும் திறம் கண்டு வியந்து பாராட்டினர், அத்தகைய என் தம்பியின், சவக்குழியைக் காணச் சென்றேன் - கண்ணீரைச் சுமந்துகொண்டு சென்றேன் - வெடித்துவிடும் நிலையிலிருந்த இதயத்தோடு சென்றேன் - எந்த தூத்துக்குடிக்கு நான் சென்றால், அண்ணா! என்று வாய்நிறைய அழைத்து, வாஞ்சனையுடன் பேசி மகிழ்ந்து மகிழச் செய்வானோ, அந்தத் தம்பியின் சவக்குழியைக் காணச்செல்வது என்றால், இதனைவிட எனக்கு நேரிடக்கூடிய கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்? சென்றேன், கண்ணீர் வெள்ளத்தில் உழலும் தோழர்களைக் கண்டேன், கண்ணீர் வடித்தேன், கண்ணீர் வடித்தனர்.

தூத்துக்குடி செல்லும் பாதை நெடுக, நான் பன்முறை சாமியுடன் சென்ற நினைவுகள், அப்போதெல்லாம் கழகம் குறித்து நடத்திய உரையாடல்கள், ஆங்காங்கு உள்ள கழகத் தோழர்களைக் கனிவுடன் சாமி இன்னின்ன காரியத்தை இப்படி இப்படிச் செய்யுங்கள் என்று பணித்திட்ட பாங்கு ஆகிய நினைவுகள் என் நெஞ்சில் எழும்பின, வாட்டி வதைத்தன. சாமி மறைந்துவிட்டார் - மாவீரன் கொல்லப்பட்டார் - மாபாவிகள் அந்தக் காளையை வெட்டிச் சாய்த்துவிட்டனர் - சாமி இல்லை, சவக்குழியை அல்லவா காணச் செல்கிறோம் என்று எண்ணிய உடனே, நெஞ்சில் பெரு நெருப்புத் தோன்றும் - ஆறுதல் பெற எண்ணி இப்பக்கம் திரும்பினால், அழுத கண்களுடன் நடராசன், பிறிதோர் பக்கமோ, மனம் குலைந்த நிலையில் மதுரை முத்து-ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளமுடியாத நிலையில் இருந்தோம் என் செய்வது? நமது கழகம் தோன்றி வளர்ந்து வரும் இந்த எட்டு ஆண்டுகளில், பலப்பல கொடுமைகளுக்கு ஆளானோம் - மனம் பதறப்பதறப் பழி மொழியும் இழி சொல்லும் வீசினர் - எத்தனையோ விதமான தாக்குதல்களை நடத்தினர் - இழிப்புகள் பல - இடிகள் ஏராளம் - ஈனத்தனமான செயல் புரிகிறோமே, அடுக்குமா என்ற எண்ணமுமின்றி, பகை கொப்பளிக்கும் உள்ளத்தினர் எதை எதையோ செய்தனர் - நமது தோழர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் - தம்பி! இவை எதுவும் சாதிக்க முடியாததை, இந்தப் பேரிடி சாதித்துவிட்டது - வேதனை என்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்குக்காட்டிவிட்டது. யாருடைய திருமணப் பந்தலுக்கும் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் நான் சென்று களிப்பும் பெருமையும் பெற்றிருக்க வேண்டுமோ, அந்தச் சாமியின் சவக்குழி கண்டேன். தம்பி! தம்பி! என்று பரிவுடன் பாசத்துடன் சொந்தம் கொண்டாடினேன் - என் தம்பி சவக்குழி சென்றுவிட்டான் - தவிக்கிறேன் - தவிப்பு தீரவுமில்லை, குறையவுமில்லை - என்றைக்கேனும் தீருமா என்று ஐயமே கொள்ளவேண்டி இருக்கிறது.

சாமியிடம் சொன்னால் காரியம் முடிந்துவிடும்.

சாமியால் மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க முடியும்.

சாமிக்குத்தான் இந்தக் காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உண்டு.

சாமி சாதித்த வெற்றி இது காணீர்.

சாமியின் திட்டப்படி இந்தக் காரியம் துவக்கப்பட்டது - அதனால் வெற்றி கிட்டிற்று.

இவ்விதம் பேசாதவர் இல்லை - பேசும்போது அலாதி யானதோர் மகிழ்ச்சிகொள்ளாதார் இல்லை. வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்று பேசுவர்; பலர் விஷயத்திலே அது ஆர்வத்தினால் பிறந்திடும் அன்புரை என்றோ, வெறும் சொல்லலங்காரம் என்றோ மட்டுமே கூறப்படவேண்டும் - சாமியைப் பொறுத்தமட்டில், அந்தப் பேச்சு முழுக்க முழுக்க உண்மை ஒவ்வொரு நாளும். நாளில் ஒவ்வொரு மணி நேரமும், தொண்டு - தொண்டன்றி வேறில்லை - கழகத் தொண்டு, பாட்டாளிகளுக்கான பணிமனை அமைக்கும் தொண்டு - பள்ளிக்கூடம் நிறுவும் தொண்டு, நகராட்சிக்கான நற்றொண்டு - என்று இப்படி வகை வகையாக இருக்கும் - தொடர்ந்து நடந்தேறிவரும். ஒரு காரியம் வெற்றியானால் மற்றொன்று, அது வேறோர் காரியத்தைத் துவக்க வழி காட்டும் - இப்படி இடைவிடாது தொண்டாற்றிவந்த இளவல் சாமி, காதகரின் கத்தி தன் உயிரைக்குடிக்கும் - அதுவும் விரைவில் - என்று முன் கூட்டியே அறிந்து - அந்தக் கொடுமையான முடிவு வந்து சேருவதற்குள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் தொண் டாற்றி, சமூகத்துக்கு நன்மை காணமுடியுமோ அத்தனையையும் விரைந்து செய்துமுடித்து வெற்றி காணவேண்டும் என்று திட்டமிட்டதுபோல, அந்தப் பாண்டிமண்டலப் பாசறைக் காவலன், முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வீரன், ஆர்வத்தால் உந்தப்பட்டு, செயல், செயல், செயல், என்று ஈடுபட்டிருந்தான்.

நாசகார உலகம் இது! நன்றி கெட்ட நாடு இது! நயவஞ்சகர் கொட்டமடிக்கும் காலம்! நல்லது செய்பவரை நாசமாக்கும் நச்சு நினைப்பினர் உலவும் காடு இது - நாடு அல்ல! நன்றி கூறவேண்டியவர்கள், நட்புக் காட்டவேண்டியவர்கள், பாராட்ட வேண்டியவர்கள், பரிவுகாட்டவேண்டியவர்கள் இவர்களே, நற்றொண்டு ஆற்றும் நல்லோனை, வெட்டுவர், குத்துவர், கொல்வர் - என்று அறிந்ததாலோ என்னமோ, நமது சாமி, அந்த நாசகாலர்கள் தன்மீது பாய்ந்து சாய்க்கு முன்பு, நம்மாலான நல்ல காரியமனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்து செயலில் ஈடுபட்டான். வயது முப்பதாகி ஈராண்டுகளே உருண்டன - சவக்குழி புகுந்துவிட்டார் சாமி. அவர் ஆற்றலால் வீரரான, உறுதியுடன் பாடுபடும் பண்பாளர்களான, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களான, கட்டிளம் காளைகள் ஆயிரக்கணக்கில் அழுது நிற்கின்றனர் - அந்த ஆற்றல்மிக்கோன் சவக்குழி சேர்ந்து விட்டான். கொடுமையாளர்களால் கொலை செய்யப்பட்டு, மறைந்தான் - கொப்பளிக்கிறது கண்ணீர்.

"அண்ணா -'' என்றனர் அழுகுரலில் - சூழ வந்து நின்ற தோழர்கள் - நான் என்ன சொல்லுவேன்.

நோய்நொடியால் இறந்துபட்டார் என்றால், தக்க மருத்துவம் பார்த்திடவா இயலாது போயிற்று? என்று கேட்பேன். இறந்துபட்ட சாமிக்கு அறுபது வயது என்றால் பழம் கீழே உதிர்ந்தது, பதறி அழுது என்ன பயன் என்பேன். காட்டு மிருகங்கள் அவர் உடலைக் கிழித்தெறிந்து உயிரைக் குடித்தது என்றால் வேட்டையாடி அவைகளை வீழ்த்திடும் வீரம் உமக்கு எங்கே போயிற்று என்று கேட்பேன், அடக்குமுறைக்கு அவர் பலியானார் என்றால்கூட, சாமியின் உயிர் குடித்த ஆணவ ஆட்சியின் ஆதிக்கத்தை அழித்தொழிப்போம், வாரீர், என்று அழைத்து, சூள் உரைத்திடச் செய்வேன் - சாமி, சாகவில்லையே - கொல்லப்பட்டார் - படுகொலை அல்லவா செய்யப்பட்டார். பெரியதோர் பயங்கரக் கலகமாம், இருதரப்பினரும் ஆயுதம் எடுத்துப் போரிட்டனராம், எதிர்த் தரப்பிலே ஏழெட்டு பிணமாம், சாமியின் இதயத்திலே ஈட்டி பாய்ந்ததாம், சாய்ந்து பட்டாராம் கீழே என்று இருந்தால்கூட, சோகத்துக்கு இடையிலேயே ஒரு பெருமை உணர்ச்சிகூடம் பளிச்சிட்டிருக்கும் - கேட்கவே கூசும், கொடுமையல்லவா நடைபெற்றுவிட்டிருக் கிறது - இரவு மணி பத்து ஆகவில்லை - ஊர் உறங்கவில்லை - ஆள் ஆரவம் அடங்கவில்லை - வீடு செல்கிறார் - வழியில், முட்டுச் சந்தில் அல்ல, காட்டுப் பாதையில் அல்ல, பனைமரச்சாலையில் அல்ல, பயங்கரப்பாதையில் அல்ல, நெடுஞ்சாலையின் நடுவே, எத்தனைபேர் தாக்கினரோ - ஏழெட்டு என்கிறார்கள் - கத்திக்குத்து மட்டும் பதினெட்டாம் - பாதையில் மடக்கிக்கொண்டு, பதைக்கப் பதைக்க வெட்டிக் கொன்றுவிட்டனரே - இதைக் கேட்டு நெஞ்சம் கொதிப்படைவதன்றி - "அண்ணா' என்று அழுகுரலில் என்னை அழைத்த தோழர்களிடம் நான், என்ன சொல்லுவது. பதறாதீர்கள் என்பதா - நானே பதறிப்போயல்லவா இருக்கிறேன். அழாதீர்கள் என்பேனா, நான் அழுதுகொண்டு அல்லவா இருக்கிறேன். நான் அவர்களின் கண்ணீரைக் கண்டேன் - அவர்கள் நான் அழக் கண்டனர்.

சாமியின் இல்லம் சென்றேன் - உள்ளே நுழையும்போதே - இங்குதானே சில திங்களுக்கு முன்பு நம்மை அழைத்துவந்து இருக்கச் செய்து - உபசாரம் நடத்தி - உவகையுடன் உரையாடினார் - என்று எண்ணினேன் - கால்கள் பின்னிக்கொண்டன. உள்ளே படுக்கையில், செயலற்ற நிலையில் அமர்ந்திருந்தார், சாமியின் தந்தை, முதியவர், அவரிடம் சென்றேன் - ஐயோ! தம்பி! நான் எப்படி எடுத்துச் சொல்வேன், அந்த இதயம் வெடிக்கும் காட்சியை.

ஐயா! ஐயா! என் அருமை மகனைக் கொன்றுவிட்டார் களய்யா!

என் மகன் போய்விட்டானய்யா, போய்விட்டான்.

ஊருக்கு உழைக்கிறான், உத்தமனென்று பெயரெடுக் கிறான் என்று பூரித்துக் கிடந்தேன் - கொலை செய்துவிட்டார் களய்யா - கொன்று போட்டு விட்டார்களய்யா - என்று கூறிக் கதறினார் - என்னைக் கட்டிப் பிடித்தபடி, தம்பி! அந்த ஒரு கணம் நான் அடைந்த வேதனை, பகைவனுக்கும் வரலாகாது - நிச்சயமாகக் கூடாது.

உன்னிடம்தானே ஒப்படைத்தேன் - உலுத்தனே - எங்கே என் மகன்? - என்று கேட்கிறது, அந்த முதியவரின் கண்ணீர். நான் என்ன பதில் அளிப்பேனடா, தம்பி? என்ன பதில் அளிப்பேன்?

உங்கள் கழகத்தில்தானே என் மகன் ஈடுபட்டு, குடும்பத்தை மறந்து, தொண்டு செய்வதிலே மூழ்கிக் கிடந்தான் - அவன் கொல்லப்படுவதைத் தடுத்திடும் வக்கு அற்றுப் போனீர்களே? நீங்கள் மனிதர்கள்தானா!!! - என்று கேட்கிறது அந்த முதியவரின் கதறலொலி! நான் என்ன பதிலளிப்பேன். மார்புடன் சேர்த்து அணைத்துக்கெண்டேன். எங்கள் இருவரின் கண்ணீரும் கலந்தன - சூழ நின்றோர் கதறினர்.

"ஐயா! சாமியைப் பறிகொடுத்துவிட்டோம் - கதறுகிறோம் - வேறு என்ன செய்யமுடியும் - ஐயா! சாமி போய்விட்டார் - என்னை உங்கள் "சாமி'யாக ஏற்றுக்கொள்ளுங்களய்யா!'' என்று கூறிக் கதறினேன் - பெரியவர், ஐயா! ஐயா! என் மகன்! என் மகன்! என்று கதறியவண்ணம் இருந்தார்.

வயோதிகத்தால் இளைத்துக் கிடக்கும் அந்தப் பெரியவரின் மடியிலே, சாமி பெற்றெடுக்கும் செல்வங் களல்லவா தவழ்ந்திருக்க வேண்டும்! அந்தப் பேரப்பிள்ளைகளை வாரி எடுத்து மார்போடு அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு கண்ணே! மணியே! என்று கொஞ்சிட வேண்டிய அந்த முதியவர், தன் மகன் படுகொலை செய்யப்பட்ட கொடுமையைக் காண்பது என்றால் ஐயய்யோ! அதைவிட இம்சை வேறு என்ன வேண்டும்! இருவரும் சென்றோம், சவக்குழி காண.

உடன்வந்தோர் உருகி அழுதனர் - சுற்றுப்புறமிருந்து வந்திருந்தோர் அனைவரும் பதறி அழுதனர் - நடராசன் தேம்பித் தேம்பி அழுதார் - முத்து சிறிதளவு சமாளிப்பார் என்று எண்ணினேன் - அவரும் கதறுகிறார். என்னுடன் வந்திருந்த நண்பர் பாபுவும், சென்னைத் தோழர் தேவராசன் அவர்களும், கண்ணீர் பொழிந்தனர்.

சவக்குழி - தம்பி - சாமியின் முயற்சியால் உருவாகி எழிலுடன் விளங்கும் பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்!! - ஒருபுறம் சாமியின் வெற்றி - மற்றோர்புறம் அவருடைய சவக்குழி - பணியின் உருவம் அந்தப் பள்ளிக்கூடம் - பாதகரின் காதகச் செயலின் உருவாக அமைந்தது சவக்குழி அதனைக் காண நேரிட்ட கண்கள் - புண்கள், கண்டோம் - நாடு, காடுதான் சிற்சில வேளைகளில் - நல்லாட்சியும் நாகரிக மேம்பாடும், சட்டமும் சமூகக் கட்டுக்கோப்பும் எல்லாம் உள்ளன என்றுதான் பெருமையாகச் சொல்-க்கொள்கிறோம் - ஆனால் இதோ சவக்குழி படுகொலை செய்யும் பாதகர்கள் - எதிர்த்துப் போரிடவோ, தப்பிப் பிழைக்கவோ முடியாத நிலையில் சிக்கிக் கொண்டவனை வெட்டிக் கொல்லும் வெறியர்கள், உலவு கிறார்கள் என்ற வெட்கக்கேடான நிலையைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலையிலே நின்று நாசகாரர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள் - தடுத்திட ஒருவர் இல்லை - துணைக்கு யாரும் இல்லை. துரைத்தனம் கொடிகட்டி ஆள்கிறது - பல்லாயிரக்கணக்கிலே, ஆடவரும் பெண்டிருமாகக் கூடினர் - அழுத கண்களுடன் - அனுதாபக் கூட்டத்தில். ஆறுதல் அளிக்க வந்தேன் - எனக்கு ஆறுதல் அளியுங்கள் - என்று கேட்டுக் கதறினேன். ஒருவருடைய முகத்தலும் ஈயாடவில்லை.

படுகொலைக்குக் காரணம் என்ன? இந்தப் பயங்கரச் சூழ்நிலைக்குக் காரணம் யாது? - அனைவரும் கேட்கின்றனர் - ஒருவரும் இன்னதுதான் என்று கூறமுடியாமல் திகைக்கின்றனர்.

சோகமும் திகைப்பும் தூத்துக்குடியைக் கப்பிக்கொண் டிருக்கிறது. தமிழகமெங்கும் இதுவே நிலைமையாகிக் கிடக்கிறது.

"போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்குக் குந்தகம் ஏதும் விளைந்திடலாகாது, படுகொலை மர்மம் விளக்கப்பட வேண்டும், நாட்டிலே தலைவிரித்தாடும் காட்டுப்போக்கு அடக்கப்பட்டாக வேண்டும்,'' என்று தூத்துக்குடி வட்டாரமே கேட்கிறது.

தம்பி! என் வாழ்நாளில் இது போன்றதோர் கொடுமையை நான் கண்டதில்லை. நாங்கள் கூடத்தான் இப்படிப்பட்ட "நீசத்தனமான காரியத்தைக் கண்டதில்லை என்று அறுபது வயதினரும் கூறுகின்றனர்.

அதிர்ச்சியிலிருந்து நமது தோழர்கள் மீண்டிடவே சில காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது-கலம் கவிழ்ந்து, பச்சிளம் குழந்தை பிணமாகிக் கடலில் மிதந்திடக்காணும் தாய், கதறுவது போலக் கதறுகின்றனர், நமது கழகத் தோழர்கள்.

ஆண்டு எட்டு ஆகிறது நமது கழகத்துக்கு - இந்த அறியாப் பருவத்திலே இப்படிப்பட்ட அக்ரமம், கொடுமை நமது கழகத்தைத் தாக்கியிருக்கிறது.

தாங்கிக்கொள்ள இயலுமா? இந்தச் சோகத்திலிருந்து திகைப்பிலிருந்து நாம் மீளமுடியுமா? அல்லது, திகைப்பு நம்மைச் செயலற்றவர்களாக்கி விடுமா என்றுகூட, சில வேளைகளிலே எண்ணிடத் தோன்றுகிறது.

எத்துணை மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம் - இன்னல் பல வந்துற்றாலும், இழிமொழியாளர் எதிர்த்தாலும், தொல்லை பல துரத்திவந்து தாக்கினாலும், அவைதமை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தோம். இந்தப் "பேரிடி'யைத் தாங்கிக் கொள்ள முடிகிறதா, பார்! என்று காலம் கேட்டுவிட்டதே, என் செய்வோம்?

சாமி, தனி ஆள் அல்ல! தந்தைக்கு மகன் என்பதான நிலையினன் மட்டுமல்ல! நம் கழகத்துச் செல்வன் - நம் குடும்பத்துப்பிள்ளை - நமது இலட்சியத்தின் காவலன். அவனைக் கொன்றதானது நம் ஒவ்வொருவரையும் வாட்டும் கொடுஞ் செயல்.

துரைத்தனத்தின் துப்பாக்கிக்கும், தடியடிக்கும், தூற்றிக்கிடப்போரின் இழிமொழிக்கும் ஈடுகொடுத்துக்கொண்டு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று இலட்சியம் பேசிக்கொண்டு திரிகிறீர்களே, இதோ உங்கள் சாமியைப் படுகொலை செய்கிறோம், தாங்கிக் கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று கேட்பது போலல்லவா, இந்தக் கொடுமை நடந்துவிட்டது தம்பி! நாம் என்ன செய்வது?

எனக்கு ஒன்று தோன்றிற்று, தூத்துக்குடியிலிருந்து திரும்புகையில். நாம், வளர வளர, கொடுமை பலப்பல, பல்வேறு வகையில் நம்மைத் தாக்கத்தான் செய்யும் என்று தோன்றிற்று. நாம், மிகச் சாமான்யர்கள் - சிறுவர்கள் என்றுகூடச் சொல்கிறார்கள் - நமக்கு ஏற்பட்டுவிட்ட வளர்ச்சியின் அளவுக்கு வளர்ச்சி காண, அனுபவ மிக்கவர்கள் அரை நூற்றாண்டு பாடுபட்டால்மட்டுமே பெறமுடிகிறது, பிற கட்சிகளால்.

கொழுந்துவிட்டெரியும் ஆர்வம் காரணமாகவும் கொள்கைப் பற்றுடன் பணியாற்றும் திறனாலும், கொதிப்பு மூட்டுவோர்பற்றிப் பொருட்படுத்தாது பணியில் ஈடுபடும் பண்பினாலும், நாம், மிக உன்னதமானதோர் வளர்ச்சியைக் கண்டோம். இதுகண்டு பொறாதாரும், இதற்கு நாம் தகுதி அல்ல என்று எண்ணுவோரும், இது நமக்குக் கிட்டாமற் போயிற்றே என்று ஏங்குவோரும் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலர் வெளியில் இருந்து நமக்கு வேதனை விளைவிக்கப் பல்வேறு முறைகளில், முனைகின்றனர். உடனிருந்து கொண்டே வேதனை விளைவிக்கவும் சிலர் உளர் போலும். எது எப்படி இருப்பினும், இந்தக் கட்டத்தையும் நாம் கண்டாகவேண்டும்போல் தோன்றுகிறது. "பயல்கள் இதனால் மருளட்டும், மனம் உடைந்து போகட்டும்,' என்று எண்ணுவோரும் இருக்கக்கூடும். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? நான் எண்ணி எண்ணிப்பார்த்தேன் - ஒன்றுதான் எனக்குப்பட்டது - அதைத்தான் தம்பி, உனக்கும் கூறுகிறேன். எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் எத்தகைய காதகச் செயலுக்குப் பலியாக நேரிடுமோ என்ற நிலைமை இருக்கிறது - அந்த நிலைமையின் ஒரு அறிகுறிதான் சாமி - படுகொலைச் சம்பவம் - அந்த நிலைமை நமக்குக் குழப்பத்தையும் கிலியையும் மூட்டுவதாக இருத்தலாகாது - அப்படிப்பட்ட ஆபத்து எந்த நேரத்திலும் நேரிடக்கூடும், ஆகையால், ஒவ்வோர் நாளும், நாளை என்ன ஆகுமோ இன்றே நாம் நம்மாலான நல்ல தொண்டினைச் செய்து முடித்துவிடுவோம், என்ற பொறுப்பைத்தான் நமக்கு அளிக்க வேண்டும். அதற்கென்ன பிறகு செய்யலாம் - நாளையத்தினம் பார்த்துக்கொள்வோம் - அவசரம் எதற்கு - என்று நாம், யாரும், காலதாமதம் செய்வதுகூடாது - ஒவ்வோர் நாளும் பணியாற்றும்போது, இதுவே நமதுகடைசி நாளாகிவிட்டால் என்ன செய்வது, இன்றே நம்மாலானதைச் செய்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணியாற்றவேண்டும். அது ஒன்றுதான், நாம் மேற்கொள்ள வேண்டிய முறை - இப்போதைய சோகச் சம்பவம் நமக்குக் காட்டவேண்டிய பாடம்.

சாமி, சவக்குழியில்; நாம் வெளியில்.

சவக்குழியினின்றும் ஒருவரும் தப்பித்துக்கொள்ளப் போவதில்லை - ஆனால் அங்கு கொண்டுசெல்லப்படுமுன், நமது தொண்டு, பார்த்தோர் பாராட்டத்தக்க விதமான பட்டியல் ஆக இருத்தல் வேண்டுமல்லவா. அதனை மனத்திலிறுத்தி நாம் அனைவரும் நித்தநித்தம் மெத்தவும் பாடுபட்டு, நமது பங்கினைச் செலுத்திவிடவேண்டும். நாளை, நாளை என்று கூடாது! நாளையத் தினம், யார். நம்மைச் "சாமி'யாக்கிவிடுவார்களோ. யார் கண்டார்கள் - எனவே இன்றே நாம் நமது கடமையைச் செய்யவேண்டும்.

கண்ணீர் தளும்பும் நிலையில் இருக்கிறோம் - கடமை வீரனைப் பறிகொடுத்ததால். நாம் நமது கடமையை விரைந்து செய்தல் வேண்டும் என்பதைக் காட்டும், கொடிய ஆசானாகிறது, அந்தச் சவக்குழி.

அன்பன்,

7-10-1956