அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


காகிதக் கப்பலில்
கவனம் செலுத்தாதே தம்பி

இரண்டாவது மாநில மாநாடு -
பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன்

தம்பி!

"கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'' - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் "அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா?

ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு "பாஸ்போர்ட்' கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும். "பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்'' என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு!

ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை!

ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது.

நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்!

எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்!

நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு அருமையான "கட்டம்' வந்திருக்கிறோம் என்பது விளங்கும்.

நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்!

தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று - எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ள மெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம் கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி.

தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம்.

ஓராண்டுக்கு முன்பு இலங்கை "சுதந்திரன்' ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன் - அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார்.

நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலானவர்கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு - எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக் கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூதுவிடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் "சைவத்' தைத் தாங்கிக் கொண்டிருந்தேன்!!

அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கியமான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புருவத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள்.


துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர்
நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.

உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!

அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்,தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!!

என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!!

தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும்.

கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார் - தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து - ஆயினும் என்ன செய்வது?

நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!

நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.

என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது.

என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்.

சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல "கனவுகள்' - விழித்தபடி - நான் கண்டு கொண்டி ருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.

இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும்.

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்துதான்! பெரியாரின் "சர்டிபிகேட்டே' உண்டு இதற்கு.

திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம்.

(யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு பெரிய மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! - என்று பேசினார்.

அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப்பட்ட போதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண்டிய வர்கள் பகைக்கும்போதும் சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. "விளையாட்டுப் பிள்ளைகள்' என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்!

சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல, அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.

குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு.

தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை.

அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான தல்ல!

ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்!

இடைவிடாத பொதுமக்கள் தொடர்பு கொண்ட இயக்கம்.

களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள்.

விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம் - இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன் - பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார்.

நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன் - மகிழ்கிறீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வருவதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவருடைய "நாட்களில்' நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும்.

நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகிறோம் - ஆனால் நான் எவ்வளவு முயன்றும் "நம் நாடு' பெரிதாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப்போது, அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை.

மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்க
வேண்டும்.
இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செயலாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக்கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம்.

நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக்கிறது.

இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்புகளைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்!

இதுகளாவது - கட்சி நடத்துவதாவது - என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!!

இதுகளாவது ஒன்றுகூடி வாழுவதாவது - என்ற சாபம் மிரட்டிற்று.

ஒன்றுகூடி வாழ்வது மட்டுமா - ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம் - தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம். நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமானதல்ல!!

ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர் - இதோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன்.

தம்பி! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன்.

வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை.

ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன்.

ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவதுடன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு, புதிய கட்டம், புதிய பொதுச் செயலாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு - அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது.

அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள் - பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும்.

புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத்தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,
தம்பி! முயற்சி எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான்.

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில் - நடு நாயகமல்லவா, அதனால்.

அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகிதக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக்கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போதிருந்தே உள்ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி! - பணமும் அனுப்பு!


அன்புள்ள,

05-08-1955