அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கலை உலகக் காணிக்கை

புயல்
நிதி திரட்டுதல்
கழகக் கலைஞர் பணி.

தம்பி,

புயலும் வெள்ளமும் விளைவித்த வேதனையும் பெரு நஷ்டமும் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன; நெஞ்சைப் பிளக்கும் செய்திகள்.

கிராமம் கிராமமாக அழிந்து போயின - குடும்பம் குடும்பமாக இறந்துபட்டுள்ளனர் - மீதமிருப்போர் இப்போது படும் துயரம் சொல்லுந்தரத்தன்று.

எங்கு நோக்கினும் அழிவு - எப்பக்கம் பார்ப்பினும் பேரிடி, பெருநஷ்டம். ஏழை எளியவர்கள் வாழ்விலே வேதனைப்படுவதை பல காலம் கண்டு பாறை நெஞ்சினராகிவிட்டவர்கள்கூட, பதறிப் போயுள்ளனர், இந்த அழிவு கண்டு.

பழந்தமிழகத்தின் திருவும் பண்பும் சிறந்து விளங்கிய பூம்புகார், கடலால் அழிந்த காதையைப் படித்துமட்டுமே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்; இப்போது, பெருமழையும் பேய்க் காற்றும் கூடி இழைத்துள்ள கொடுமை குறித்த ‘அழிவு’ பூம்புகார் அழிந்துபட்டதை நினைவிற்குக் கொண்டு வருவதாக இருக்கிறது.

அரசு இழந்து, அதனால் வாழ்வு இழந்து வளம் வகைப் படுத்தப்படாததாலும், உழைப்பின் பலன் சுரண்டப்படுவதாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கிடக்கிறோம்; கொற்றம் இழந்தோம், கோலெடுத்தவனுக்கு ஏவலராகி இழிநிலை பெற்றோம்; விண்ணை அண்ணாந்து பார்த்து விம்முவோரும், மண்ணில் இரத்தக் கண்ணீர் சொரிவோரும், திகைப்பால் தாக்குண்டுக் கிடப்போரும், என்ற நிலைக்குத் துரத்தப்பட்டு, துயருற்றுக் கிடக்கிறோம்; இந்த அல்லலும் அவமதிப்பும் போதாதென்று, இயற்கையுமா நமது நாட்டைத் தாக்கிட வேண்டும்? கண்ணெடுத்துப் பாரீரோ! காரியமாற்ற வாரீரோ! எம் இனத்தின் பண்பறிந்து அதற்கேற்ற வாழ்வளிக்க இணங்கீரோ! - என்றெல்லாம், ஆதிக்கம் செலுத்தி வரும் வடவரிடம் உரிமைக் குரல் எழுப்பி வருகிறோம். தங்கமும் தரித்திரமும், இரும்பும் இல்லாமையும், நிலக்கரியும் நொந்த வாழ்வும், வயலும் வறுமையும், என்றுள்ள வேதனைத் தொடரினை விளக்கி, மக்களை வீறுகொண்டெழச் செய்து வருகிறோம்; விடுதலைப் பேரார்வத்தையும் அறப்போருக்கான அஞ்சாமை, இடுக்கண் வருங்கால் இதயமொடிந்து போகாமை ஆகியவற்றினையும் ஊட்டிடும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளோம்; எங்கணும் வீர முழக்கம், எவரிடமும் விடுதலை வேட்கை; இந்த நிலை கண்டு பெருமிதம் கொண்டு, பெற்ற பொன்னாட்டின் விழிப் புணர்ச்சியைக் கண்டு, இதயம் விம்மி, கண்களிலே களிநடமிடும் ஆர்வம் கண்டு, வெற்றி பற்றிய பெருநம்பிக்கை கொண்டு இறுமாந்திருக்கும் நேரத்தில், கொடுமையை வீசிற்றே கடல்! அழிவை ஏவிற்றே காற்று! பேயாகிவிட்டதே பெருமழை! என் செய்வோம்! எங்ஙனம் இதனைத் தாங்கிக்கொள்வோம். மூழ்கி விட்ட கிராமங்கள், மிதக்கும் உடலங்கள், அவர்கள் உழைத்து உருவாக்கிய திரு அத்தனையும் அழிந்த நிலை! இந்தக் கோரக் காட்சியைக் கண்டு எங்ஙனம், உள்ளத்தில் எழும் குமுறலை அடக்கிக்கொள்ள முடியும்.

“அண்ணா! சென்ற தடவை தாங்கள் இங்கு வந்திருந்த போது தங்கியிருந்தீர்களே, அழகான சோலை, அதன் நடுவே அமைந்திருந்த எனது இல்லம், இன்று அவை அழிந்துபோய் விட்டன. இந்தப் பகுதியில் நமது தோழர்கள் பெருத்த நஷ்டப்பட்டுப் போயுள்ளனர்; என் வேதனை சொல்லுந்தரத் ததல்ல,'' என்று நண்பர் பேராவூரணி அடைக்கலம் எழுதிய கடிதத்தில் என் கண்ணீர் சிந்திற்று. தம்பி! நான் அந்த அழகிய விடுதியில் தங்கியிருந்தபோது, நான் கண்ட செழுமைதான் எவ்வளவு! இன்று அழிவல்லவா காண்கிறார் நண்பர் அடைக்கலம். நானிருக்கக் குறை என்ன! என்று கேட்டு, நம்பிக்கை நாதத்தை மீட்டுவது போல, காற்றினிலே அசைந்தாடிய வாழையும் தென்னையும், அவைதமை வேலிகளாகக் கொண்டிருந்த செந்நெல் வயலும், அதனூடே சென்ற வாய்க் கால்களும், நடுவே இருந்த அழகிய விடுதியும், அங்கு அமர்ந்து எம்மை உபசரித்து, முகமலர்ச்சியை எமக்கு அளித்த அன்பன் அடைக்கலமும் - இன்று? எண்ணும்போதே, துக்கம் கரத்தைத் தடுக்கிறது, கருத்தைப் பிளக்கிறது, திவலை கண்களைக் கப்பிக்கொள்கிறது! இன்று அடைக்கலம், அழிவினை அல்லவா எங்கும் காண்கிறார். இப்படி அடைக்கலங்கள், பதின்மரா இருபதின்மரா, நூற்றுக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலல்லவா உளர்? என்ன செய்வோம்?

நிதி திரட்டுகிறோம், ஆடைகளைச் சேகரிக்கிறோம், உணவு திரட்டுகிறோம். எல்லாம் எற்றுக்கு? எல்லாம் இழந்து தவித்திடுவோர்க்கு, இவை எம்மட்டு? கணக்கறியும்போது கலக்கம் மேலிடுகிறது; ஏற்பட்டுப்போன உயிர்ச் சேதத்தை நினைக்கும் போது உள்ளம் வெடித்துவிடும் நிலை ஏற்படுகிறது.

எனினும், நாம் இந்தப் பெருநட்டத்தை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை நிலைநாட்டியாக வேண்டும். “எல்லாம் இழந்தோமே! என் செய்வோம்?” என்று கதறிடும் நமது உடன் பிறந்தார்க்கு, உடன் பிறந்தோரே! உத்தமர்காள்! குடும்பத்தில் கண்மணிகளை, கருஊலங்களை, இன்பவாரிதிகளை, இதயராணிகளை, பேசும் பொற்சித்திரங்களை, பாழும் வெள்ளத்துக்கு இரையாகக் கொடுத்துவிட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறீர். வீடிழந்தோம், வயலிழந்தோம், உடமை அனைத்தையும் இழந்தோம், வாழ்விழந்தோம் என்று கூறிடுவீர். உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை - ஆனால் அன்பர்காள்! எல்லாம் இழந்தீர் எனினும், எம்மை இழந்துவிடவில்லை - உமக்கு வாழ்வளிக்க நாங்கள் இருக்கிறோம் - எமது ஆற்றல் மிகுதியானதன்று, ஆயினுமென், இதயத்தில் பொங்கி எழும் உணர்ச்சி எமது ஆற்றலைப் பன்மடங்கு அதிகமாக்கிடும், அறிவீர்! ஊரெங்கும் செல்கிறோம், உற்ற ‘உற்பாதத்தை’ எடுத்துரைக்கிறோம், காண்போரிடமெல்லாம் கை ஏந்தி நிற்கிறோம். கல்நெஞ்சக் காரனையும் கனிய வைக்கிறோம். ஓயமாட்டோம், உறங்க மாட்டோம், உதவி திரட்டும் ஓராயிரம் வழிகளையும் கண்டறிந்து பணியாற்றுவோம்! நேரிட்ட கொடுமைக்குப் பரிகாரம் தேடிட கட்சிகளை மறந்து காரியத்தில் ஈடுபடுவோம். ஆடுவோம்! பாடுவோம்! ஊருக்கும் ஓடுவோம்! எப்பாடுபட்டேனும் உதவி திரட்டும் பணியில் வெற்றிபெற்றுத் தீருவோம். மீண்டும் உமக்கு வாழ்வு - முன்பு நீவிர் கண்டனுபவித்த குதூகலம் குறைந்துபடினும் - வாழ்வு செம்மையாக அமைவதற்கான எல்லா முயற்சியையும் எடுத்துக்கொள்ளத் தயங்கப் போவதில்லை - என்று நாமனை வரும், தம்பி! எடுத்துக் கூறிட வேண்டும்.

நாட்டிலே எந்த அளவுக்கு நற்பண்பு இருக்கிறது என்பதை நாமெல்லாம் உணரத்தக்க வகையில், உதவி திரட்டிக் குவித்திடும் காரியம் வேக வேகமாகவும், வகைவகையாகவும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஏழை எளியோரின் கஷ்ட நஷ்டத்தை நன்குணர்ந்த ஓர் நல்லவர் நாடாள்கிறார், வழக்கமாக ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிர்வாக இயந்திரமே இன்று புயல் வேகத்தில் பணியாற்றிடக் காண்கிறோம், அள்ளித்தரச் செல்வர்களுடன் சாமான்யர்கள் போட்டியிடுகின்றனர்.

தம்பி! நமது கலைச்செல்வர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சென்ற இதழிலே குறிப்பிட்டிருந்தேன், காண்கிறாயல்லவா, அவர்தம் கொடைத் திறனை!

இன்று அந்த கலைச்செல்வர்கள், வைரம் மின்னிட, தங்கம் ஒளிவிட, தந்தக் கட்டிலில் அமர்ந்து வெள்ளி வட்டிலில் இனிப்புப் பண்டம் வைத்து உண்டு மகிழத்தக்க நிலை பெற்றவர். எனினும் அவர்களில் எல்லோருமே, இல்லாமை கொட்டுவதை, வறுமை வாட்டுவதை அனுபவித்து அறிந்தவர்கள். ஏழையின் இதயக் குமுறலை நன்கு தெரிந்தவர்கள். கருணை அவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சுரக்கத்தான் செய்யும். ஆகவே, அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. சென்ற கிழமை அவர்கள் கூடி நிதி திரட்டத் துவங்கினர்; துவக்கக் கட்டமே வெற்றி அளித்திருக்கிறது: தொடர்ந்து பணியாற்றுவர்; அவர்தம் பணியின் பலன், அழிந்தது போக மீதமிருக்கும் வலிவு கொண்டு வாழ்வுடன் போராடி, உழைப்பால் மீண்டும் பொலிவு பெறும் ஏழை எளியவருக்கான அழகிய குடில்களாகக் காட்சி தரட்டும், அழிவு தோற்றோடட்டும்! நாசத்தின் கோரப் பற்களால் ஏற்பட்ட புண் ஆற்றிடும் மாமருந்து கிடைக்கும்.

நமது அருமருந்தன்ன நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் மதுரையம்பதி கடைவீதியில் சென்று, கை ஏந்தி நின்று பணமும் பண்டமும் கேட்டும் பெற்று உதவினார் என்றோர் செய்தி கேட்டு, இத்தகு இதயம் படைத்தவரை, நண்பராகப் பெற்றிருக்கிறோமே, நமது கழகத்தினராகவும், கொண்டிருக்கிறோமே என்பது எண்ணிப் பெருமைப்படுகிறேன் - பெருமைப்படுகிறேன்.

கலைச் செல்வர்களின் பணி, உண்மையிலேயே போற்றுதற்குரியதாகவே அமைந்திருக்கிறது. எனினும்....

ஆமாம், தம்பி! எனினும் என்று கூறத்தான் வேண்டி இருக்கிறது - ஏனெனில் அவர்கள் மூலம்தான் பல இலட்சங்கள் இந்த நற்காரியத்துக்கு, கேடு சூழந்துள்ள நாட்டினை மீட்டிடும் தூயதொண்டுக்கு, கிடைத்தாக வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். தமது இசையாலும், நடன மூலமும், நாடக படக் காட்சி மூலமும் நாட்டு மக்களுக்கு இன்பமும் நல்லறிவும் தந்துதவுபவரிடம் நான் சில பல இலட்சங்களை எதிர்பார்ப்பதிலே என்ன தவறு? அவர்கள் அறிவார்கள் அல்லலுறும் மக்களின் அவல நிலையைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சி எவ்வளவு மாமலை போன்றதென்பதை. எனவே நம்பிக்கையுடன் நாடு அவர்கள் உதவியை நாடலாம்.

என்ன செய்ய நண்பரே! ஒன்று இரண்டு என்று இன்று ஆயிரக்கணக்கில் கொடுத்திருக்கிறோம் - இன்னும் என்ன செய்ய? அங்காடிகளில் சென்று வசூலிக்கவா, இசை அரங்குகள், கலா, நிகழ்ச்சிகள், திறந்த வெளி நாடகங்கள் மூலம் நிதி திரட்டவா? என்று கேட்பர்; இவைகள் மூலமெல்லாம் திரட்டத்தான் வேண்டும் - இன்றே துவங்கி; தொடர்ந்து; ஆனால், இம்முறையில் பணம் குவிய, பாடும் அதிகம், காலமும் மிகுதியாகத் தேவைப்படும்.

மதுரை அங்காடியிலே நமது நண்பர் ராமச்சந்திரன் சென்ற காலை, நேரிட்டது என்ன? உதவியும் உபத்திரவமும், தோழமையும் தொல்லையும், நேசப்பான்மையும் நெருக்கடியும் போட்டியிட்டு, அவர் மேற்கொண்ட பொறுப்பான காரியத்தைக் குலைத்தே விட்டது. நடிகர்கள் அங்காடி சென்றாலே இது! நட்சத்திரங்கள் சென்றாலோ!!

எனவே, நமது கலைச் செல்வர்களுக்கு நானோர் யோசனை கூறுவேன்.

N.S. கிருஷ்ணன்
M.K. ராதா
M.R. ராதா
K.R. ராமசாமி
M.G.ராமச்சந்திரன்
T.K. சண்முகம்
T.K. பகவதி
சிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
S.S. ராஜேந்திரன்

இப்படிப்பட்ட கலைச் செல்வர்கள் (பட்டியல் பூர்த்தியானதல்ல.)

T.R. ராஜகுமாரி
லலிதா
பானுமதி
பத்மினி
அஞ்சலி
வரலட்சுமி
T.A. மதுரம்

போன்ற கலைச் செல்வியர்கள் இவர்கள் யாவரும், ஒரு சேர ஒரே படத்தில் நடித்தால் . . . . !

எந்த முதலாளிக்காகவுமல்ல, தாயகத்தின் தவிப்பைப் போக்குவதற்கு, நாலு அல்லது ஐயாயிரம் அடி அளவிலே அமைத்துவிட்டாலும் போதும், பத்தே நாளில் படம் தயாரித்து, அதனை, கலைச்செல்வர்களின் அன்புக் காணிக்கையாகப் படைத்தால். . . . . இலட்சங்கள் புயல் வேகத்தில் குவியும்.

இந்த நற்காரியத்தை ஒரு நடிகர் குழு மேற்கொண்டால், எந்தப் படம் தயாரிக்கும் அமைப்பும் இலவசமாக வசதிகளைச் செய்தளிக்கும்.

ஆர்வத்துடன் பணியாற்றினால், இரண்டு வாரத்தில், படம் தயாராகிவிடும்.

இத்தனை கலைச் செல்வர்களையும் ஒரே படத்தில் காணும் வாய்ப்பு.

இவர்கள் அனைவரும் தூய ஒரு காரியத்துக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறார்கள் என்ற மதிப்பு.

இவை போதும், இலட்சங்களைக் கொண்டுவர!

இதற்கென்று ஒரு கதை - அதிலே பல கட்டங்கள் - இது அல்ல நான் குறிப்பிடுவது.

சலிப்பாக இருக்கிறது என்று கூறிக் கண்ணை மூடிக்கொள் கிறோமல்லவா, சர்க்கார் வெளியிடும் சில செய்திப் படங்கள்.

நான் குறிப்பிடுவது செய்திப் படம் போன்றது - ஆனால், செய்திப் படத்தை சர்க்கார் வெளியிடுகிறார்களே அத்தகைய சத்தற்ற, சாரமற்ற விதத்தில் அல்ல.

கொடுமைக் காட்சிகள் - அவை பற்றி நமது கலைஞர்கள், நாட்டு மக்களிடம் முறையிடுதல்.

நாட்டுக்கு இத்தகைய நெருக்கடிகள் தாக்கும்போது, மக்கள் காட்டவேண்டிய வீர உணர்ச்சி, தியாக உள்ளம்.

இழப்புகளுக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதல் மொழி.

இவ்வகையிலே படம் அமையலாம்.

முறை அல்ல முக்கியம் - என் மனம் இருக்கும் நிலையில் அது பற்றித் தெளிவுகூட இல்லை என்னிடம் - நான் விரும்புவது, கலைச் செல்வர்களின் முயற்சி, இப்படியோர் அன்புப் படையலாக இருத்தல் வேண்டும் என்பது.

நிதி குவியவும், வேகமாகக் குவியவும், தக்க பலன் தரக்கூடிய அளவில் குவியவும், இது நல்ல முறை என்று எண்ணுகிறேன்.

சர்க்கார் இதற்கு ‘வரி’ இல்லாமல் விலக்களிக்க வேண்டும்.

கலைச் செல்வர்கள் கூடிக் குழு அமைத்தால் ஒரு திங்களில், பலன் பூத்துக் காய்த்துக் கனியும்; நாடு சுவையும் பயனும் பெறும்.

தம்பி! கலைச்செல்வர்களுக்கு, நான் கூறிடும் இந்தக் கருத்து, சரி என்று உனக்கும் தோன்றினால், நீயும் அவர்களிடம் சொல்லு.

சரி, அது போதுமல்லவா அண்ணா! என்று கூறிவிட்டு வேறு காரியத்தில் மூழ்கிவிடாதே. வாழ்விழந்து வதைபடும் நமது தோழர்களைக் கைதூக்கிவிட முயற்சியில் ஈடுபட்ட வண்ணம் இருக்க வேண்டும். ஒரு படி அரிசி; ஒரு சிறு துண்டு. . . . ஒரு சிறு பணமுடிப்பு - தம்பி! எது பெறமுடிந்தாலும், அதற்காகக் காடு கடந்திட வேண்டுமாயினும், பரவாயில்லை, பெற்று வரவேண்டும் - இத்தகைய ‘உதவிகளை’ அவரவர் தனித்தனி அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு திரட்டுவது, நமது நிதி அமைச்சருக்குப் பிடிக்கவில்லை - கிடக்கட்டும் - அவர் நாட்டு மக்களின் அமைப்புகளை நம்பவில்லை - நாம் அவரை நம்புவோம், நஷ்டமில்லை - அவர் குறிப்பிடும் இடங்களுக்கே வேண்டு மாயினும் அனுப்பிவை. நானும் அதே பணியில் என்னாலான அளவு ஈடுபட்ட வண்ணம் இருக்கத்தான் செய்தேன்.

அன்புள்ள,

18-12-1955