அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கதைகள் - கருத்தளிக்க
1

மரங்கொத்தியும் குருவியும் -
கருத்துக் கதை -
அவரைக் கொடியும் குழந்தையும் -
மகிழம்பூவும் சுணைப்பூவும்

தம்பி!

அதற்கு என்னமோ கோபம் - பாவம்!

காரணம் என்ன கோபத்துக்கு என்றா கேட்கிறாய்? எளிதாகத் தெரிந்துவிடக் கூடியதா, கோபத்துக்கான காரணம்! கொண்டவர்களுக்கே சில வேளைகளில் தெரிவதில்லை - கண்டவர்களுக்கா தெரிந்துவிடும். மேலும் கோபம், அறிவை மாய்க்கும், ஆத்திரத்தைக் கிளப்பும் - அந்த நிலையில், கோபம் கொண்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் சொல்லத்தான் முடியுமா, சொல்லத்தான் செய்வார்களா? இயலாதே!

மெத்தப் படித்தவர்கள் என்று தம்மைப் பிறர் நம்பும்படி செய்பவர்களாலேயே, கோபத்தை அடக்கிக்கொள்ள முடிவ தில்லை. இது, பாவம், படித்தவர் பட்டியலில் சேராதது! கோபம் கொண்டதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், சொல்லவா போகிறது. மேலும் சிறிதளவு கோபம் வளரும். கீச்சுக் கீச்சென்று கத்தும்! கொத்தும்! ஓ! சொல்லவில்லையல்லவா உனக்கு - இது ஒரு குருவியின் கதை!!

மரப்பொந்தில் தாய்! பக்கத்துக் கிளையில் இது. கோபமாகத் தாயை அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தால், தன் "பிகுவு' கெட்டுவிடும் என்ற நினைப்பு - வேறு பக்கமே பார்த்தபடி, உட்கார்ந்திருக்கிறது. தாய், "எத்தனை பிகுவு என் கண்ணுக்கு!'' என்று எண்ணியபடி பரிவுடன் பார்க்கிறது.

குருவி, மரங்கொத்தி அல்ல! பழமாகக் கிடைத்தால் கொத்தித் தின்னும் - துண்டு துணுக்கு என்றால், விருப்பம் கொள்ளும் - சிரமமின்றித் தின்னலாம் அல்லவா - அதனால்.

மரங்கொத்தியின் மூக்கு, ஒரு துளைக்கருவி அல்லவா - அந்தப் பெருமை அதற்கு. பறந்து செல்லும், துளைக்கும் - வேறு இடம் பறக்கும். இந்தக் குருவிக்கு அதைக் கண்டதால், ஒரே வியப்பு!! எத்தனை பெரிய மரம் - துளைத்தேவிட்டதே! மரம், அசைந்தது ஆடிற்று; இலைகள்தான் உதிர்ந்தனவேயன்றி, மரங்கொத்தி துளைப்பதைத் தடுத்திட முடியவில்லையே, அதனால், செ! இவ்வளவுதானா, இந்த மரம்! இதற்கு இத்தனை பெரிதாக ஓங்கி வளருவானேன்! ஒரு சிறு பறவையின் மூக்குக்குத் தப்ப முடியவில்லை - துளைத்தேவிட்டது! உருவம்தான் மிகப் பெரியது; உள்ள வலிவு மிகக் குறைவு!! - என்று நினைத்தது குருவி.

முதலிலே, இந்த நினைப்பு ஒருவிதமான மகிழ்ச்சிகூடக் கொடுத்தது குருவிக்கு. மரத்தைத் துளைத்தது ஒரு பறவை - நம் இனம்!! - என்பதால் ஒரு மகிழ்ச்சி.

அதனால், குருவி, மரங்களை அலட்சியமாகக்கூடப் பார்க்கலாயிற்று. மரம் என்றால் என்ன? நான் பயப்பட வேண்டுமா!! என் இனத்தினால் துளைக்கப்படுகிறது - இந்த மரம்!! இதற்கு, நான் ஏன் பெருமை தரவேண்டும். என்னைக் கண்டல்லவா, மரம் பயப்படவேண்டும், நடுங்கவேண்டும்! ஓ! ஓ! மரம் ஆடுவது, நடுக்கத்தால்தான் போலும். ஆமாம், பயத்தால் நடுக்கம் ஏற்படுகிறது மரத்துக்கு. இதை நாம் இதுநாள்வரையில் தெரிந்துகொள்ளாமலிருந்துவிட்டோமே!! - என்றெல்லாம் எண்ணிக்கொண்டது. குருவிதானே! பாவம்!!

இந்த நினைப்பு எழுந்தது முதலில் தாய்க்குருவிக்குப் புரியவில்லை - தெரியவில்லை. குருவி, இரையைத் தின்னும் போது வேகமாகக் கொத்தக் கண்டபோதுகூட, தாய்க்குருவிக்குச் சந்தேகம் வரவில்லை - சரியான முறையிலே, தீனியைக் கொத்தித் தின்னக்கூடத் தெரியவில்லையே, இத்தனை நாளாகியும் - இது எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று எண்ணித் தாய்க்குருவி கவலைப்பட்டது.

குருவிக்கு மரங்கொத்திக்கு இருப்பதுபோன்ற "துளைக் கருவி' தனக்கு இல்லை என்ற நினைப்புக்கூட எழவில்லை. நாமும் பறவைதான் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. பறவை மரத்தைத் துளைக்கும் - நாமும் பறவை! - இவ்வளவுதான் அதன் எண்ணம். பாவம், குருவிதானே! வண்டி வண்டியாக ஏடுகளை வைத்திருக்கும் மேதைகளே, இந்த விஷயத்தில் தவறாக எண்ணி நடந்துகொள்ளும்போது, குருவிக்குக் குறை அறிவு இருந்ததில் என்ன ஆச்சரியம்.

"மரங்கொத்தி' வேறோர் மரத்திலே, துளைபோட்டுக் கொண்டிருந்தது. அதற்குக் கர்வம்! பார்! என் திறமையை! இத்தனை பெரிய மரத்தை நான் துளைத்துவிடுகிறேன். "தடியன்' போல ஓங்கி வளர்ந்திருக்கிறதே தவிர, மரத்தினால் ஏதாகிலும் செய்ய முடிகிறதா, பார்! - என்று கேட்பதுபோல, மரங்கொத்தி துளைப்பதும், சுற்றுமுற்றும் பார்த்து, கழுத்தைப் புடைப்பதும், வெற்றியைத் தெரிவிக்கும் போக்கில், கிறீச்சிடுவதும், மீண்டும், துளைப்பதுமாக இருந்தது. குருவிக்குக் கொள்ளை சந்தோஷம், உற்றுப்பார்த்தது பலமுறை! நாமும் பறவை! நமக்கும் மூக்கு இருக்கத்தான் செய்கிறது!! - என்ற நினைப்பு - உடனே, குருவியும் மரத்தைக் கொத்தத் தொடங்கிற்று; துளைக்க முடியவில்லை. குருவிக்கு வெட்கம்! அங்கே பார்த்தால் மரங்கொத்தி துளைக்கிறது! ரோஷம் குருவிக்கு! பலமாகக் கொத்திற்று - மூக்குகூடச் சிறிது வலித்தது - மரத்தின் பட்டைகூடப் பெயர்ந்திடவில்லை, பழக்கம் இல்லாததால். இப்படி இன்னும் ஒரு நாலு கொத்துப் பலமாகக் கொத்தினால், மரத்தைத் துளைத்துவிட முடியும் - ஏன் முடியாது? அதோ, நம் இனம் அங்கு துளைக்கிறதே! நாமும் பறவைதானே - என்று எண்ணிற்று - வேகமாகப் பலமாகக் கொத்தலாயிற்று. துளைக்க முடிய வில்லை. அது மட்டுமல்ல. கொத்தியதால், மூக்கு வலித்தது, மேற்கொண்டு, கொத்த முடியவுமில்லை. அங்கோ, மரங்கொத்தி வேறோர் கிளை சென்று! துளைக்கிறது. குருவிக்குக் கோபம்!!

கோபம் கொண்ட குருவியைக் கேலி செய்வதுபோல மரங்கொத்தி சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. மரத்தைத் துளைத்து விட்டேன்! துளைத்துவிட்úன்! நானும் பறவை! நீயும் அதே இனம்! என்னால் முடிந்தது! உன்னால் முடியவில்லை!! - என்று கூவுவதுபோலத் தோன்றிற்று குருவிக்கு.

இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு, நான் பறவை இனம் என்று சொல்லிக்கொள்ளவேண்டுமா! கூடவே கூடாது! பறவை இனத்திலேயே, நானோர் பாவியோ! பரிதாபத்துக்குரிய பாவியாகவா இருப்பது, கூடாது!! - என்று எண்ணிற்று. கோபம் தலைக்கேறிவிட்டது. துளைத்தேவிடுவது என்று ஆத்திரத்துடன், வேலையை, வேகமாக, கோபத்துடன் தொடங்கிற்று. ஏற்கெனவே, அலுப்பு - வலி - எனவே, மூக்கு உடைந்தது - வதாள மாட்டாமல், குருவி, பொந்துக்குள் சென்றது. தாய்க்குருவி, "உனக்கேன் வீண் வேலை! மரங்கொத்தியைப் பார்த்து, உன் மனதிலே வீணான எண்ணத்தை வளர்த்துக்கொண்டது தவறு அல்லவோ! அதற்கு உள்ள "மூக்கு' அப்படி - துளைக்கும் கருவியாக இருக்கிறது. உனக்கு ஏது, அந்தக் கருவி! உனக்கு எதற்கு அந்த வேலை?'' - என்று கேட்பதுபோலப் பார்த்து, சேர்த்து வைத்திருந்த பழத் துண்டைக் குருவியின் வாயில் கொடுத்துத் தின்னச் செய்தது. குருவிக்குக் கோபம் நீங்கிற்று - விவரமும் புரிந்தது.

எதற்காக அண்ணா! குருவிபற்றிய கதை என்று கேட்கிறாயா, தம்பி! வயதாகிறதல்லவா, அதனால் கதை சொல்லும் போக்கு இருக்கிறது எனக்கு. நானென்ன, கனடா நாட்டு அரசியலைப்பற்றி எழுதப்பட்ட 22-ரூபாய் விலையுள்ள புத்தகத்தில், 777ஆம் பக்கத்தில், ஒன்பதிலிருந்து இருபத்து ஏழாவது வரையில் கோடிட்டு, அதைப் படித்துக்காட்டி, "புத்தி புகட்டும்' ஆசிரியன் போன்றானாகத் தலைவன் இருக்கவேண்டும்; மக்களோ மாணாக்கர்களாக இருக்கவேண்டும், "பிரம்படி'க்கும் தயாராக! - என்று கூறுபவனா!' - இல்லையே! உன் அண்ணன்! அவ்வளவுதான்!

ஆனால், தம்பி! கதையைப் படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊற்றெடுத்தபடி இருக்கும்.

ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதுப்புதுக் கருத்து கிடைக்கும். பல பிரச்சினைகளை விளங்க வைக்கும்.

இந்தக் கதையிலே வருகிறதே "குருவி' - இதன் போக்கு, ஒரு மரங்கொத்தி செய்வதைத் தானும் செய்யவேண்டும். அப்போதுதான் தனக்குப் பெருமை என்று எண்ணிக்கொண்டது. பாவம் குருவிதானே!

ஆனால் குருவிகளை மட்டுமல்ல, கொல்லும் புலிகளைக் கூடக் கூண்டிலே அடைத்திடவல்ல வீரமும், குவலயத்துக்கே புத்திபுகட்டும் பேரறிவும் கொண்டிருப்பதாக எண்ணம் கொள்ளும் மனிதர்கள்கூட அல்லவா, குருவி வீணான வேலையில், காரணமின்றி ஈடுபட்டதுபோல் ஈடுபடுகிறார்கள்.

வீணான வேலையில் ஈடுபடுவது கூடாது! துளைக்கும் வேலை செய்யவென்றே, மரங்கொத்தி இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, நாமும் அதுபோல் துளைக்கவேண்டும் என்று எண்ணி மூக்கைக் கெடுத்துக்கொண்ட குருவிபோல, மனிதர் களிலும் சிலர் உளர். நாம் அதுபோல் ஆகக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கதை!!

குருவி யாரைக் குறிப்பிட? மரங்கொத்தி, எவரை மனதிலே வைத்துக்கொண்டு? தாய்க்குருவி, யார்? - என்றெல்லாம் கேட்காதே, தம்பி! அப்படி எவரையும் மனதிலே வைத்துக் கொண்டு, கட்டப்பட்ட கதை அல்ல இது. தும்பிகள் பறந்திடும் தோட்டத்திலே, மலர்களைப் பழித்திடும் வண்ணம்கொண்ட வண்டுகளும் பூச்சிகளும் இருந்திடக் கண்டேன்! சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன, சத்தமிட்டபடி! ஒலிக்குக் காரணம் யாதோ? பொருள் என்னவோ? என்று எண்ணியபடி, காட்சியைக் களிப்புடன் கண்ட நிலையில், மரங்கொத்தி கண்டேன்! மரத்தைத் துளைத்தபடி இருந்திடக் கண்டேன்! பிறகு குருவியையும் கண்டேன்! கதையாகக் கூறினேனே, அது அவ்வளவும் கண்டேன்.

மனித இனத்திலும், உள்ளதைக் குலைக்க, நல்லதைக் கெடுக்க, மொத்தத்தைத் துளைத்திடும் செயலிலேயே ஈடுபட்டபடி சிலர் இருப்பது என் நினைவிற்கு வந்தது. மரப்பொந்தில், தாயின் அன்புக் கதகதப்பில் இருந்திடவேண்டிய குஞ்சுக் குருவியும், துளைக்கும் வேலையில் ஈடுபடுவதுபோல சிலர் வீண் வேலையில், உள்ளதைக் கெடுப்பதில் ஈடுபடுவதை எண்ணிக் கொண்டேன். குருவி, துளைபோட முடியாமல் பொந்துக்குள் சென்று விட்டதைக் கண்டேன். இந்தக் கதை வடிவம் கொண்டது.

***

இன்னும் ஓர் கதை தம்பி! இதுவும் கருத்துக்காகத்தான், காலம் போக்க அல்ல! இதிலும் குருவி! ஆனால், குருவியுடன் குமரி, குமரன், குழவி!!

தோட்டத்தில் முளைவிட்ட "அவரை' கண்டு, அவன், இன்பம் சுமந்து, குங்குமநிறக் குழவி பெற்ற தாய்போல் குதூகலித்தான்.

கொடி வளரும்; பூ பூக்கும்; கொத்துக் கொத்தாய்க்
காய்க்கும், காண்போம் என்று அவன்
எண்ணி அகமகிழ்ந்தான்; என் மகவும்
ஈராண்டு ஆனதுமே, கைவீசி நடை
நடந்து மெய்சிலிர்க்க வைத்திடுவான்
என்றே தாயும், மை பூசி
பொட்டிட்டு, மதலை தன்னை மார்போடு
அனைத்துச் செல்லும் பான்மை போலே.

இவனுக்குத்தானென்ன இத்தனை களிப்பு! ஏதோ எங்கும் இல்லாத செல்வத்தை இவன் பெற்றவன்போலே, நித்த நித்தம், பார்த்துப் பார்த்து நின்று பல பேசி மகிழ்கின்றான் - பைத்தியமேதானோ இவனுக்கு என்று அண்டைப் பக்கம் உள்ளோர் பேசினர் கேலி மொழி. அதுவும் கேட்டு, மூக்கோ சப்பை இதற்கு, வாயும் பொக்கை, வண்ணம் சிவப்பல்ல, வரும் கருப்பை அறிவிக்கும் வகைதான் ஈது என்று தன் குழந்தையினை எதிர்வீட்டுப் பாட்டி ஏளனம் செய்கையிலே, கண் கெட்டதாலே பாட்டி! என் கரம் இருப்பது கட்டித் தங்கம் என்பது உனக்குத் தெரியவில்லை; உன்னைப்போல் இருக்குமென எண்ணிக் கொண்டாய்; என் செல்வம் "ராஜாக்குட்டி'. எந்தன் கலி தீர்க்க வந்தான் என்றா பேசுகின்றாள் எழில் மாது? இல்லை! இல்லை! தன் மகவை உச்சிமோந்து "இச்'சளித்து இருக்கின்றாள்; காண்கின்றோம். அஃதேபோலத் தன் தோட்டக் கொடியைக் கண்டு எவர் என்ன கூறினாலும், இவர்க்கென்ன தெரியும், போ! போ! என்றெண்ணித் தோட்டம் சென்று, இலைகளை எண்ணிப் பார்ப்பான். இன்னும் எத்தனை நாட்கள் போனபின், பூ காண்போம் என்று கணக்கெடுத்துக் களித்திடுவான், குதித்திடுவான்.

கொடி படர்ந்தது; மலர் பூத்தது; பிஞ்சுகள் இங்கும் அங்கும்!!

பேசாத கொடி ஏதேதோ சேதிகள் சொல்வதுபோன்று அருகே நின்று, அந்த அசைவிலே அகமகிழ்வான்.

கொத்துக் கொத்தாகக் காய்க்கும்; மெத்த உருசியா யிருக்கும்; பொரித்தாலும் கூட்டு வைத்துத் தின்றாலும் வாய் மணக்கும்; குழம்புக்கும் ஆகும் நன்றாய் என்றெல்லாம் எண்ணி நின்றான்.

பக்கத்து வீட்டில்தான் அந்தப் பாவை பெற்றாள் பைங்கிளி, பசும்பொன், குலக்கொடி என்றெல்லாம் கொஞ்சிடும் குழவி ஒன்று, ஆண்டு நாலைந்துக்கு முன்னம்.

அந்த அழகுச் சிலைக்கு உயிர் உண்டு. ஆதலாலே, தாய் காண ஓடி ஆடி, தளிர்க்கரம் தன்னால் கன்னத்தைக் கிள்ளும், சுண்ணத்தைக் குழப்பி அழுகுரலெழுப்பும். அது, என்னத்தைச் செய்தாலும் அவளோ, என் ராஜா! வாடா! வேண்டாம்! இதோ பார், உனக்கு நான், ஆனையொடு குதிரைப்பொம்மை அழகழகாய் வாங்கி வந்தேன்! ஆடி மகிழ வாடா, நான் வாழவந்த கோவே! என்றெல்லாம் கொஞ்சுகின்றாள். அவளுக்கு, "அவரை' அல்ல; "அஷ்ட ஐஸ்வரியமும்' அவனே!!

பக்கத்துப் பக்கம் வீடு! பாங்கான நேசம் உண்டு! அண்ணன் அவளுக்கு அவனும் - உள்ளத்தால் அவனுக்கு அந்த "அவரை' மீதுள்ள அன்பு கண்டு "களுக்'கெனச் சிரிப்பாள் குறும்பாய்.

"ராஜா' வாளாக இருத்தல் உண்டோ? வாளெடுத்துமே சென்று வழி நிற்கும் பகையை வென்று, புதிய நாடு பெற்று, புதுப்பெருமை தேடானோ! இவனும் புறப்பட்டான், தோட்டப் பக்கம், குடைக்கம்பு தூக்கிக்கொண்டு.

சிட்டுக்குருவி கண்டான் - சினமிகக் கொண்டான் - நானிங்கு இருக்கையிலே நடமாட்டமா உனக்கு? என்று கேட்டான். கைகளாட்டி; குருவியும் கீச்சுக் கீச்சென்று கெக்கசெய்து விட்டு, ஒரு செடி தன்னை விட்டு வேறொன்றுக்குத் தாவ, என்னிடம் சண்டைபோடப் பயந்துமே குருவி, பார்! பார்! ஓடுது, கூடுதேடி என்று கூறு எண்ணிச், சுற்றும் முற்றும் பார்த்தான்; யாருமில்லை. இதற்குள் குருவி, பக்கத்துத் தோட்டம் உள்ள அவரைக் கொடியினில் ஊஞ்சலாடி மகிழ்ந்தது கண்டான்; சென்று கம்பினை வீசினான்; குருவி பறந்தது; கொடி அறுந்தது!

அறுந்த கொடியைச் செல்வன் பார்க்கவில்லை; அவன் பறவையின் சிறகு அறுக்கப் பாய்கின்றான் கோபத்தோடே குருவியும், விளையாட்டுச் சிறுவன் காண, கொடி முழுதும் மாறி மாறி, குந்துவதும் பறப்பதுமாய்க் கோலம் காட்டிற்று. கோல் கரத்தில் இருக்கும்போது, கொற்றவனுக்கு என்ன குறை! வீசினான் நாலா பக்கம்! ஒவ்வோர் வீச்சும், "விர்'ரென்று பறந்திட்ட குருவிமீது விழவில்லை, கொடிமீதேதான் - ஒவ்வொன்றாய் அறுந்து வீழ்ந்தது; பூவும் பிஞ்சும் வீழ்ந்தன தரைமீதெல்லாம்.

என்னவோ வேலையாக வந்தவன், கண்டான் இதனை. சொல்லவா வேண்டும் அவனுக்கு. "சுரீல்' என்று வந்தது கோபம். என்ன காரியம் செய்திட்டான், இந்தப் போக்கிரிச் சிறுவன்! செல்லமாய் வளர்த்து வந்தேன், கொடிதனைப் பல நாளாக; எத்தனை அழகாய்ப் பிஞ்சுவிட்டது எனை மகிழ்விக்க அத்தனையையும் இந்த அறிவிலி அழித்திட்டானே! ஐயய்யோ, கொடிகள் எல்லாம் துண்டு துண்டாகக் கீழே அறுந்தன்றோ விழச்செய்தான். கோல் ஒன்று வேண்டுமோடா, குரங்கே! வாலும் எங்கே? யார் உன்னை வரச்சொன்னார்கள், இழுத்துப் போய் அறைகின்றேன் பார்! என்றவன் கூறி நின்றான்; கோவென அழுதவண்ணம் குழந்தை வீடு சென்றான்.

கொடிகளை மீண்டும் ஏதோ ஒருவகையாக அமைத்து, கொண்ட கோபம் மாறிச் சோகமாய்ப் போனதாலே, இல்லத்துக்குள்ளே வந்தான் - இருமியபடியே தாயும், என்னடா கூச்சல் என்றாள். குழந்தையாம், குழந்தை! அது கொடிகளை அறுத்துப்போட்டு அழித்தது என்றான். அடித்தாயோ? என்று கேட்டாள்; இல்லை. அடிக்கா முன்பே, அழுதது என்றான்; உற்றுக் கேட்டான், ஓயவில்லை அழுகை; தெரிந்தது.

இடுப்பினில் குழந்தையோடு வந்தனள் தாயும் அங்கு.

"என்னண்ணா! இப்படியா என் குழந்தையை இரக்கமே யின்றி அடித்துத் துன்புறுத்துவது? "அவரை'தான் ஆணிப் பொன்னால் ஆனதோ? போனால் என்ன? இதோ உமக்கு, "அவரை' அரைத் தூக்குக்கு மேலிருக்கும், கொண்டு மகிழ்ச்சி கொள்ளும். குழந்தையைக் கொடுமை செய்யவேண்டாம்'' என்று கூறி, மடியினில் கொண்டு வந்த, "அவரை'ப் பிஞ்சை அவன் எதிர்கொட்டி நின்றாள்.

வெட்கம்தான் அவனுக்கு - அதனை ஓரக்கண் பார்வை காட்டிற்று.

கொடி எலாம் அறுத்துவிட்டான். . . . . என்று கூறினான், கோபமின்றி.

"எப்படி விக்கிவிக்கி அழுகின்றான், பார் அண்ணா! இவன் எப்போதும் இதுபோல, அழுததைக் கண்டதில்லை. என் மனம் என்ன பாடுபடும் சொல்லு'' என்று கேட்டு, அவளும் கண்ணில் நீரை அழைத்திடுவாள்போல நின்றாள் - அன்றாடம் அழுதழுது குழந்தை அமர்க்களம் செய்வதுண்டு - எந்நாளும் இதுபோல் அழுததே இல்லை என்று தாய் கூறுகின்றாள் - பொய்யா? - இல்லை! அன்பு பெய்திட்ட அபத்தப் பேச்சு!! அந்தப் பொல்லாத குழந்தையும் இவனையே பார்த்துப் பார்த்து அழுதது விக்கி விக்கி.

"மாமன் அடித்தானென்று ரோஷமடி மகனுக்கு. அவனே மார்பினில் சாத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்டாலன்றி ஓயவே போவதில்லை, உனக்கென்ன தெரியும்!'' - என்று தொட்டில் தொல்காப்பியமெல்லாம் தொடர் தொடராகக் கற்ற மூதாட்டி கூறுகின்றாள்.

இங்கு வா! என்றழைத்து, குழந்தையைக் கரத்தில் ஏந்தி, "அவரை'தானே உனக்கு வேண்டும், அள்ளிக்கொள் அவ்வளவும் என்று, கீழே கிடந்ததைக் கொடுத்தான் எடுத்து. குழந்தை வீசிற்று மீண்டும் கீழே.

அழுகை ஓயவுமில்லை; இவன் செய்வித்தை எதுவுமே பலிக்கவில்லை; பார் உனக்குப் பழம் தருவேன், பசுவினைக் காட்டுவேன் வா என்று கூறித் தோட்டம் ஏகினான் குழந்தையோடு.