அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குடும்ப பாசம்
1

தி.மு.க. - வும் குடும்ப பாசமும் -
மாநில மாநாட்டு அமைப்பு முறை -
பிறரின் ஏசல்கள்

தம்பி,

நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பத்திடம் - இப்போதாவது புரிகிறதா, நான் ஏன் சங்கடப்படுகிறேன் ? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும் பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி கொண்டது.

டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான், அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது. அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன், எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன் கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான் நண்பர்களிடம், "இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட . . . . '' என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக் கேட்டேன், "இப்போதாவது புரிகிறதா? இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா? ஏன் எனக்குத் தொல்லை?'' என்று கேட்டேன்.

திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம் திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர் வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி, சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப் பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் "விடுதலை'யில் கூடிப் பணியாற்றிய காலம் அது.

விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார் - விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான் - சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டனர்.

இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில் சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு - போகும் போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது போலிருக்கிறது. ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக் கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள்.

இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித் தானா? பொறுப்பேற்கத் தயக்கமா?

இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத் தவறினால், நாடு நம்மை நிந்திக்கும்.

குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார்.

விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது.

இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக் கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத் தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன் செயலாற்ற இணங்கினேன் - ஆனால் அதே போது, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித் தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போலிருந்த, டிஸ்ரேலி படக் காட்சி என்னைத் தூக்கி வாரிப்போட்டது; அதனால்தான் பெருமூச்செறிந்தபடி சம்பத்தை, "இப்போது புரிகிறதா என் சஞ்சலத்துக்குக் காரணம் இருப்பது?'' என்று கேட்டேன். அவன் தந்த பதிலோ, காட்சியைக் கண்டதால் ஏற்பட்டதைவிட அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது - உன்னிடம் சொல்வதிலே தவறு என்ன? சிறிதளவு வெட்கம்கூடத்தான் ஏற்பட்டது. சம்பத்து மட்டுமே என்னிடம் அவ்வளவு தாராளமாகவும், சரளமாகவும் பேச முடிகிறது. சம்பத்தை மட்டுமே, நான் எவ்வளவோ முயன்றாலும்கூட, அவர் இவர் என்று கூற முடிவதில்லை!

பொறுப்பேற்றுக் கொள்வதிலே உள்ள கலக்கத்தைக் காட்டும் காட்சியையும், அதன் மூலம் பெறப்படும் கருத்தையும் நான் என் நிலைக்குக் காரணமாகக் கொண்டு, இப்போது புரிகிறதா? என்று சம்பத்தைக் கேட்டேனல்லவா - பதில் என்ன கிடைத்தது தெரியுமா? இவ்வளவு பெரிய பாரத்தை, சுமையை எப்படி நான் தாங்க முடியும்? என்றல்லவா டிஸ்ரேலி கேட்ட முறைப்படியே நான் கேட்டேன் - பதில் என்ன என்று எண்ணுகிறாய் ? "சுமையை - பாரத்தை - தாங்கப் போவது நான் ஒருவன்தான் என்று ஏன் அண்ணா! நீங்கள் எண்ணிக் கொள்கிறீர்கள்? சுமையைத் தாங்கப் போவது, நாம் - நாம் - உம்மீது மட்டுமல்ல பாரம் - '' என்றானே அந்தப் போக்கிரி! நான் உண்மையில் வெட்கப்பட்டேன். இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய சுமை - பாரம் - பொறுப்பு - அவ்வளவும் என் மீது மட்டுமே ஏற்றப்படும் - என்று எண்ணினதால்தானே, இவ்வளவு சுமையைத் தாங்க என்னால் எப்படி முடியும் என்ற கலக்கம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறானது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சம்பத்து அளித்த பதில் - அந்தப் பதிலிலே பொதிந்துள்ள தத்துவம்தான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அச்சாணியாக அமைந்திருக்கிறது - "நாம்' என்பது வலிவும் பொலிவும் கொண்டதோர் தத்துவம் - "நான்' என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம் அல்லது மனமயக்கம் என்கிறார்கள் என்றால், அரசியலில் அது அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால் ஆபத்தை, அடுக்கடுக்காகக் கிளப்பிவிடக் கூடியதுமாகும்! காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு தத்துவங்களிலும் எது மேலானது என்பதை மேதினிக்கு விளக்கிக் காட்டுகிறார்கள்.

"நான்'- என்பது தவறு - "நாம்' - என்பதுதான் நிலைமை என்பதை அன்று படக்காட்சிக் கொட்டகையில் கண்டதிலிருந்து, அந்தப் பொலிவும் வலிவும் பொருந்திய தத்துவம், கழகத்துக்கு எவ்வளவு மாண்பளித்திருக்கிறது என்பதை அறியவும், அகமகிழவும், வாய்ப்புகள் பலப்பல வந்தவண்ணமுள்ளன.

"நாம்' என்ற கூட்டுச் சக்தியை - குடும்ப சக்தியைக் காட்டிடும் அந்தச் சொல்லுக்கு எழிலோவியமாக அமைந்து விட்டது, தி. மு. க.

நானும் நீயும் - நம்மில் ஒவ்வொருவரும் - அந்த "நாம்' என்பதிலே இருக்கிறோம் - அதிலே இருப்பதன் மூலம் ஏற்றம் பெறுகிறோம் - அந்த ஏற்றம் நாட்டுக்குப் பயன்படுகிறது.

"நாம்' என்ற அந்தக் கூட்டுச் சக்தியைக் காட்டிடும் சொல்லினுள் பொதிந்துள்ள அரிய பாடம், ஜனநாயகப் பண்பாட்டுக்கே அடிப்படையாகிறது - அகில உலகிலும், எங்கு, எந்தச் சமயத்தில் எத்தகைய அரசியல் குழப்பமோ, அவல நிலையோ விளைகிறது என்றாலும், "நாம்' என்பதிலே உள்ள தூய்மையிலே ஏதோ ஓர்வித தூசு படிந்து விட்டது என்று கூறலாம் - "நான்' என்பது, "நாம் என்பதை வலுச்சண்டைக்கு இழுக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

தம்பி! "நான்' - என்பதிலிருந்து "நாம்' என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!! இவ்வளவு "பலி' வாங்கிய பிறகும்கூட, இன்றும் "நாம்' என்பதை "நான்' என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப் பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!!

திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் துறையில், பிறர் பார்த்து, பாராட்டத்தக்க (பிறர் என்பது நம்மை மனிதர் என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது) அளவில், வெற்றிபெற்று, வீரர் கோட்டமாய், தோழர்களின் கூடமாய், குடும்பமாய்த் திகழ்கிறது, அந்தக் குடும்பத்துக்குக் குதூகலத் திருவிழா மே 17, 18, 19, 20-ல், எப்படி வராமலிருக்க முடியும், குடும்பத்தில் ஒருவர் என்ற பாசம் உள்ளவர்களால்?

நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார்.

பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும் இடையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து கிளம்புகிறோம் அண்ணா! என்று "சேதி' தருகிறார் மற்றோர் தோழர்.

பல்வேறு ஊர்களிலிருந்து "சைக்கிள்' படைகள், திருச்சி வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது, தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும், "நாம்' என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான் - நான் - நான் - என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச் சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, "நாம்' பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது, வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது.

"என்னையே நம்பி' என்ற சொற்றொடருக்கு, தி. மு. க. இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது; என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக் காண்கிறோம்.

கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக் காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப் பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும் வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர் எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும் பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி. மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம்.

இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்!
இங்கு கிளை!
அங்கு கிளை!
எங்கும் தழைக்கிறது கிளைகள்!
இடைவிடாத பிரச்சாரம்!
இணையில்லா ஊக்கம்!
மகத்துறை ஊழல்களைத் தாக்குகிறாக்ள்.
ஆளவந்தாரின் போக்கை அம்பலப்படுத்துகிறார்கள்!

இழந்த இன்பத்தை மீட்போம் என்று முழக்க மிடுகிறார்கள்; சுகபோகிகளையும் சுரண்டிப் பிழைப்போரையும் சாடுகின்றனர்.

புதிய அரசு கேட்கின்றனர்.
பெரும் பத்திரிகைகளின் இருட்டடிப்பு!
பணம் படைத்தோரின் பரிகாசம்
மதப் புரட்டர்களின் சாபம்!
மாற்றுக் கட்சியினரின் தூற்றல்.
ஆளவந்தாரின் அடக்குமுறை.
இவ்வளவும் கிளம்பிக் கொக்கரிக்கின்றன - எனினும்
வளருகிறார்கள் - வளர்ந்த வண்ணமிருக்கிறார்கள்.
ஏன்? எப்படி? எதற்காக ?

நாடு கேட்கிறது இவ்வண்ணம். நமது வளர்ச்சி நாட்டிலே புதிய பிரச்சினையாகிவிட்டது. கழகம் ஒரு கேள்விக் குறியாகி விட்டது - அபாயக் குறி என்று அலறுபவர்களும் உளர். எனவே, நமது முழு உருவமும் விளங்கும் வண்ணம் மாநில மாநாடு அமைதல் வேண்டும்.

குடும்பத்திலோர் குதூகலவிழா - மாநில மாநாடு - தடையும் பணமுடையும் குறுக்கிட்டாலும், யாரும் திருச்சிக்கு வருகிற கடமையிலிருந்து மட்டும் தவற முடியாது - குடும்ப பாசம் அனைவரையும், மே 17, 18, 19, 20 நாட்களில் திருச்சிக்குக் கொண்டு வந்தே சேர்க்கும்.

நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம் சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம் நடாத்தி நவநிதியைக் குவித்த ஓர் இனம், பாபத்துக்குக் கழுவாய் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்லேந்தியின் பாதம் கழுவிய பரிதாபக் காதை, கோட்டை கட்டிக் கொற்றம் நடாத்திய ஓர் இனம், வேட்டையாடி வீரத்தைக் காட்டிய ஓர் இனம், சேட்டைகளைச் சடங்குகளாகக் கொண்டு, "கேட்டை மூட்டை' களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுத்து ஏமாளிகளாகி விட்ட இதயம் நோகச் செய்யும் காதை - இவைகளை உணராமலேயே, நாடு, இனம், மொழி, வாழ்க்கை முறை அனைத்தையும் மறந்துபோய், மாற்றானை மகேசனின் தூதுவன் எனக்கொண்டு, மதி இழந்து, மதிப்பிழந்து போன, மனதை வேகவைக்கும் காதை; கப்பிக் கொண்டிருந்த மன இருள் விடிவெள்ளியால் மெள்ள மெள்ள விலகிய வரலாறு, ஒளி கிடைத்ததும் உள்ளத்துக்கு ஏற்பட்ட உத்வேகம், அதன் பயனாக ஏற்பட்ட இயக்கம், அதன் வளர்ச்சி ஆகிய இன்றைய வரலாறு, இதன் மூலம் நாம் அடைய இருக்கும் இலட்சியம், அது அளித்திடப் போகும் இன்பம், அதன் பயனாக நாடு பெறப் போகும் ஏற்றம், அதன் விளைவாக ஏற்பட இருக்கும் பெருமிதமிக்க எதிர்காலம் பற்றிய கணக்கெடுப்பு ஆகிய இவைபற்றியெல்லாம் நாம் பேசவும், பேசுவதைக் கேட்கவும், உரையாடவும், உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்ளவும், வழிவகை பற்றி ஆய்வுரை வழங்கிடவும், திட்டம் தீட்டிடவும், செயல்படு முறைபற்றித் தீர்மானித்திடவும், நாலு நாட்கள் போதா! நாலே நாலு நாட்கள்தான்!! அந்த நாலு நாட்களுக்குள், நாம் நமது உள்ளத்திலே ஊற்றெடுக்கும் ஓராயிரம் எண்ணங்களையும், வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, செயல்படத்தக்க செம்மையினைத் தேடிப் பெற்றிடவும் வேண்டும். தலைமுறை தலைமுறையாக - பன்னெடுங் காலமாகப் பாழ்பட்டுப் போயுள்ள நிலையினை மாற்றிடத்தக்க மகத்தானதோர் பணியில் ஈடுபட்டுள்ள நாம், மாநில மாநாடு நடாத்துவது, கூடிக் கலைந்திட அல்ல - குடும்ப பாசத்துடன் கூடி, நாட்டு விடுதலைக்கான நல்லார்வத்தை எந்த அளவிலும் வகையிலும் மற்றையோருக்கு ஊட்டினோம் என்பது பற்றி ஆய்ந்தறிந்து, நமது முறைகளிலே குற்றம் குறை உளவா என்று பேசிக் கண்டறிந்து, திருத்தப்பட வேண்டியவை, நிறுத்தப் பட வேண்டியவை; புகுத்தப்படத்தக்கவை, களையப்பட வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து, நாம் ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட எழுச்சியும் விழுச்சியும் வீறுகொண்டெழுந்துள்ள இந்தக்கால கட்டத்துக்கு ஏற்ற வழிவகை கண்டறிந்தாக வேண்டும். நாலே நாட்கள் மட்டுமே உள்ளன! எனவே, ஒவ்வோர் நாளும், ஒவ்வோர் மணியும் மிக மிக அக்கறையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமாகிறது.

பொதுச் செயலாளர் நான் இந்தக் கட்டுரை தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் யூகித்துக் கொள்ளவும் முடிகிறது - பரிதாபப்படவும்தான் செய்கிறேன். இளமை எழிலளிக்கிறது, இன்பபுரிக்கு அழைக்கிறது. இயக்கமோ அவரை திருச்சிக்குத் துரத்துகிறது ! தாமரை பூத்த தடாகத்தருகே சென்று முகத்தாமரையாளிடம் அகத்துறை இலக்கணம் கற்றிட வேண்டிய காளையர்தான் - பருவத்தை எண்ணிடின் - எனினும், களம் சென்று தமிழரின் தன்மானத்தைக் காத்திட வேண்டிய கட்டம் வருகிறபோது, வல்லூறு வட்டமிடும் களத்தில், மலர்த் தோட்டத்தில் காணும் இன்பத்தைவிட அதிகமன்றோ காண்பராம், வீரத் தமிழர்கள் - வீழ்ச்சியுறாத நாட்களில், நமது பொதுச் செயலாளர், அகமும் புறமும் நன்கு பயின்றவர் - எனவே, புறநானூற்றுக் காட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றுள்ளார்.

பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது?
பாய்களை வாங்கிவிட்டீரோ?
பணிமனையில் இன்று என்ன நிலைமை?
கொடி மரம் உயரம் எவ்வளவு?

இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வோர் வேலையையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். அவர் உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற்கெனவே "சிட்டு'ப் போல் பறந்து பணியாற்றிக் கொண்டுவரும் திருச்சித் தோழர்களுக்கு, மேலும் உரமும், திறமும், தரமும் தருகிறது - வேலை மும்முரமாக நடைபெற்ற வண்ணமிருக்கிறது. வேலையோ, தம்பி, ஏராளம், ஏராளம்!! தடைபல கடந்திட வேண்டி இருக்கிறது - ஒவ்வோர் கட்டமும் புதுப்புதுப் பிரச்சினையைக் கிளப்புவதாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டானதும், வெற்றி இன்பத்தைக் கூடச் சுவைக்க முடிவதில்லை. வேறோர் பிரச்சினை கிளம்பி விடுகிறது. நாலே நாலு நாட்கள் - அப்பப்பா! கடந்த நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை. ஆனால், திருச்சி தாங்கிக்கொள்ளும்.