அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றெல்லாம் கேட்கிறது!

நாகநாட்டு விடுதலைக் குரல் -
திராவிட நாட்டுப் பிரிவினை.

தம்பி,

அமைச்சர் வருகிறார்! நேரு பண்டிதரிடம்கூட நெரித்த புருவத்துடன் பேசும் நிலைபெற்ற அமைச்சர் வருகிறார்!!

உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு யாரிடம் இருக்கிறதோ, அப்படிப்பட்ட அமைச்சர் வருகிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு என்றால், சாமான்ய மானதா! இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் விதித்திடும் ஆற்றல் இந்த அமைச்சரிடம் இருக்கிறது என்பது பொருள்!

"ஜாலியன்வாலா' நடக்கட்டும் என்று அவர் உத்தரவிட்டால் போதும், நூற்றுக்கணக்கான ‘டயர்கள்’ ஓடோடி வந்து தமது திறமையினைக் காட்டி, பட்டமும் பதக்கமும் பெற்று அவருக்குப் பணிவிடை புரியக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பொருள்!

வீடுகளைத் தரைமட்டமாக்குங்கள்! விம்மிடுவோருக்கு விலங்கிடுங்கள்! வீரம் பேசுவோரின் விலாவை நொறுக்குங்கள்! கண்டனக் குரல் கிளம்பினால், காட்டு மிருகங்களை வேட்டை யாடுவது போல், துரத்தித் தாக்குங்கள் என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பிக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறவர் என்று பொருள்!

இந்தியத் துணைக்கண்ட முழுவதும் உள்ள ‘போலீஸ் படைகள்’ அவர் சுட்டுவிரல் காட்டும் திக்கு நோக்கித்தாவும்! அது போதாதென்று அவர் கருதினால், பட்டாளத்தையும் வரவழைக்க முடியும்.

கடும் தண்டனை!
கடும் தண்டனை!
காலை மாலை கன்றுக்குட்டிக்குப்
பாலை ஊட்டாதே!
இந்தக் காவலன் இட்ட தடையை மீறி
வாலை ஆட்டாதே!
ஆட்டினால், கடுந்தண்டனை!

என்ற உடுமலைக் கவியின் பாடலைச் "சொர்க்க வாசலில்' கேட்ட துண்டல்லவா - அது போன்ற தடை உத்தரவுகள் போடவும், கடுந் தண்டனைகளை விதிக்கவும் "உரிமை' பெற்றவர் என்பது பொருள்!

பேச்சிலே, காரம் அதிகம்! போக்கு, பாதுஷா போன்றது!

இத்தகைய அமைச்சர் பண்டித பந்த் பவனி வருகிறார், உமது பிரதேசத்தைப் பார்வையிட வருகிறார் பராக்! பராக்! பச்சைப் பந்தல்களைப் போடுங்கள்! பாதைகளைச் செப்பனிட்டு வையுங்கள்; தோரணங்கள் கட்டுங்கள்! மலர்களை வாரித் தூவுங்கள்! மாலைகள் பலப்பல தொடுத்திடுங்கள்! அவர் அக மகிழ்வது உமக்குத்தான் நல்லது! புன்னகை பூத்த முகத்துடன் அவரை வரவேற்றால், புதுவாழ்வு கிடைத்திடும் உங்கட்கு. புகை கிளம்பக் கூடாது; பகை தெரியக்கூடாது. வருகிறவர், சாதாரண அமைச்சர் அல்ல; போலீஸ் மந்திரி!

தம்பி! நாகநாடு சென்றார், டில்லியில் தர்பார் நடாத்தும் பண்டித பந்த். அவர் ‘விஜயம்’ பற்றி செய்தியை மிகச் சிரமப்பட்டு அசாம் சர்க்கார் பரப்பி, பண்டிதரின் பவனியை இரம்மியமானதாக்க முயன்றனர்.

நாகநாடு, உனக்குத் தெரியும் - விடுதலைக் கிளர்ச்சித் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இடம் என்பது.

குற்றேவல் புரிந்து கிடந்திடும் வர்க்கமல்ல நாங்கள், நத்திப் பிழைத்திட மாட்டோம், கோடி கொட்டிக் கொடுத்தாலும் மாற்றானின் அடிவருட மாட்டோம், எமக்கு வீரவாழ்வு வேண்டும், தனி அரசு வேண்டும் என்று கூறிடும் விடுதலை வீரர்கள், அசாம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டுக் கிடக்கும் குன்றுகள் சூழ்ந்த நாகநாட்டிலே உள்ளனர். அவர்களின் விடுதலைக் கிளர்ச்சி காலை அரும்பி மாலை கருகும் என்று டில்லியில் பலமுறை ‘ஆரூடம்’ கணித்தனர். எல்லா ஆருடமும் பொய்த்துப் போய்விட்டன. விடுதலைக் கிளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது - ஏன் வளராது! குன்றேறி அந்நாட்டுக் குமரர்கள் காணும் தாயகத்தின் எழில், அடவிகளில் அருவிகளில், வயல்களில் வாழ்க்கை முறைகளில் தெரியும் தனித்தன்மை அவர்களைத் தன்னரசு பெற்றாகவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்ளச் செய்கிறது. பதவிக்குப் பல்லிளிக்கும் போக்கும், அடக்கு முறைக்கு அஞ்சிடும் தன்மையும், மலைக் காற்றினை உண்டு வளம்பெற்றுத் திகழும் அந்தமக்களிடம் எழமுடியாதல்லவா! தங்கத்தால் செய்த கூண்டு எனினும் தத்தை சிறையை விரும்புவதில்லையே. இரும்பை ஒடித்திடும் ஆற்றல் இல்லை என்பதையும் அறியாமல், சிறகடித்த வண்ணமல்லவா இருப்பது காண்கிறோம்.

பச்சைப் பசுங்கிளியே! உனக்குப் பாலும் பழமும் தந்திடுவேன்! என்று கொஞ்சினாலும் கிளியின் நினைவு அத்தனையும், பூங்காமீது இருக்கும் அளவுக்கு அன்பு பொழிந்திடும் அந்தப் பூவையிடம் இருப்பதில்லையே!

பூனைக்கு, நித்த நித்தம் ஒரு கிள்ளை‘யைக் கொடுத்துக் கொண்டேனும், எஜமான் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நாகநாட்டிலே இல்லை!

மனிதர்களின் தலையைச் சீவி, மண்டை ஓடுகளை மாலைகளாக்கி போட்டுக்கொள்ளும் மகா பயங்கரமான காட்டு மிராண்டிகள் இந்த நாகர்கள் என்று இழிமொழி பேசுவோர் உளர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்று ஈடுபட்டிருப்பது தலைகளை நொறுக்கிடும் தன்னிகரற்ற தூய பணியில் - தலைகளை வெட்டும் வேலையில் அல்ல!

நாகநாடு நாகருக்கே! என்கிறார்கள்; டில்லிக்கு வியப்பாக இருக்கிறது!

மலையும் காடும், ஒரு நாடா? பொன்னும் பொருளும் குவிந்தா கிடக்கின்றன? தொழிலும் வாணிபமும் பெருகியா இருக்கின்றன? மாடமாளிகை கூடகோபுரம் உண்டா? மணி அணி அணிந்திடும் சீமாட்டிகளும் அவர்தம் மஞ்சத்தில் மிஞ்சு சுகம் காணும் பிரபுக்களுமா உள்ளனர்?

ஒரு டாடா, ஒரு பிர்லா, ஒரு டால்மியா உண்டா? பசும் புல் சோலை இருக்கிறது; பல பொருள் தரும் ஆலை உண்டா? பெற்றெடுத்த செல்வத்தைத் தாய்மார் முத்தமிடுவது இருக்கலாம், எழிலரசிகளின் மார்பகத்திலே புரளும் முத்து மாலைகள் உண்டா? இராஜ பவனங்கள் இல்லை! இரசாயனச் சாலைகள் இல்லை! இந்நிலையில் உள்ளபோது, நாகநாடு நாகருக்கு என்று முழக்கமிடுகிறார்களே! என்ன பேதைமை! என்ன பேதைமை! என்று டில்லி வியப்படைகிறது. நாகர்களோ, என்னென்ன இல்லை இல்லை என்று கூறி இழித்தும் பழித்தும் பேசுகிறார்களே, அவைகளையும் அவைகள் அனைத்தையும் மிஞ்சக் கூடியனவற்றையும் பெற்றிடும் பேராற்றல் எமக்கு உண்டு. கட்டுண்டு கிடந்தால் இழி நிலைதான் நீடிக்கும். எமக்கென்று ஓர் கொற்றம் அமைந்திடின், ஏற்றம் பெறுவோம் - இதிலே சந்தேகம் கொள்வோர் எமது கட்டுடலைக் காண்பீர், கனல் கக்கும் கண்களைக் காணீர்; தோள் வலுவைக் காண்பீர், இயற்கை எமக்கென்று அளித்துள்ள ஓர் நில அமைப்பைக் காணீர், என்று கூறுகின்றனர்.

கடலில் முத்து, காட்டிலே சந்தனம், வயவில் எருதுகள், வாவியில் அன்னங்கள். ஆறுகளில் வாளைகள், அவைகளை மயக்கிடும் குவளைகள், தாமரை பூத்த குளம், தேன் சிந்தும் தோட்டம் வேழமும் வேங்கையும் ஒன்றோடொன்று போரிட்டுக் களம் அமைக்கும் காடுகள், அவைகள் மயங்கிடும் வண்ணம் பார் முழுதும் ஏர் முனையிலே என்று பண்பாடும் உழவர் தரும் செல்வம், தங்கம், இரும்பு, நிலக்கரி - காவிரி பெண்ணை, கோட்டை கொத்தளம், சிலம்பு மேகலை, செழியன் வள்ளுவன், - எனும் எதை எதையோ காட்டி, திராவிடநாடு திராவிடருக்கே, என்று நாம் முழக்க மிடுகிறோம்!

புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னார் இழையும் துகிலும் பூண்டு - நமது மாதர் காட்சி தருவதைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர். புல்லர்கள் இக் காட்சி கண்டு மாசு கொண்ட மனத்தினராகிவிடுவரோ என்று அஞ்சுபவர் போல, எமது தாயகத்துத் தையலர் பொன்னாடை பூண்டவர், பொழிலினில் உலவிடுபவர், ஆனால் அப்பா! அவர்கள் கனிமொழி பேசி இல்லறம் நாடும் காதல் மாதர் என்று இயல்பை எடுத்துக் காட்டுகிறார்! இவ்வளவும் கேட்டுவிட்டு, இறுமாந்து கிடக்கும் வடவர், நாக நாட்டினரின் முழக்கத்தை மட்டுமா எளிதில் கவனிப்பர்! எங்கோ ஓர் மூலையில் கிளம்பும் காட்டுக் கூச்சல் என்றுதான் அலட்சியமாகக் கருதுவர், என்றுதான் தம்பி! நீ எண்ணிக்கொள்வாய். உண்மை அதுவல்ல! நம்மைவிட, நாகநாட்டினரால் டில்லி அதிபர்களின் கவனத்தை ஈர்த்திட முடிந்திருக்கிறது மட்டுமல்ல - டில்லிக்குக் கலக்கமே ஏற்பட்டிருக்கிறது. நாடுகளிலே நல்லறிவுப் பிரசார முறைகளின் மூலம் நடைபெறும் விடுதலைக் கிளர்ச்சியை, அப்பாவிகளைத் தட்டிக்கொடுத்தும், அற்பர்களுக்கு ‘பவிஷு’ கொடுத்தும், அடுத்துக் கெடுப்போரைத் தூக்கி விட்டும், கெடுத்திட, குலைத்திட முடிகிறது, ஓரளவுக்கேனும்! காணும் காட்சி அனைத்தும் நெஞ்சு உரத்தை வழங்கும் தன்மையில் அமைந்துள்ள அந்த மலை மண்டிலத்து மக்களிடம், இந்த முறைகள் பலன் தரவில்லை!

டில்லி, புன்னகை காட்டுகிறது, பொன்னை வீசுகிறது - நாகநாடு ஏறெத்துப் பார்க்க மறுக்கிறது.

நண்பர்களே! நாகர்களே! எங்கே இருக்கிறீர்கள்? உங்களைக் காணவே வந்துள்ளோம் - என்று உபசார மொழி பேசுகிறது டில்லி. குன்றுகளிலே, இங்கும் அங்கும் தெரிகிறார்கள். சிறிது நேரத்தில் எல்லாக் குன்றுகளிலும் தெரிகிறார்கள், பாதைகள், மலைகளுக்கிடையில்! மலைகளுக்குத் துணையோ காடுகள்! இடையிடையே உள்ள சிற்றூர்களிலேயோ, நாகர்கள். அவர்களின் உள்ளமோ, வீரம் நிரம்பி பெட்டகம். டில்லி திகைக்கிறது.

நாகர்களின் தலைவன் பிசோமீது டில்லி, வகை வகையான கணைகளை வீசிப் பார்த்தது, பாராளுமன்றத்தின் பளபளப்பு, இராஜபவனச் சிறப்பு, பதவிப் பசை - எதனாலும் இந்த மாவீரனை மயக்க முடியவில்லை.

வெளிநாட்டாரின் கையாள் என்று பழி சுமத்தினர் - வெற்றுரை என்று கூறி, எள்ளி நகையாடினர் நாகர்கள்.

கிருஸ்தவப் பாதிரிமார்கள் சிலர் தூண்டிவிடும் கிளர்ச்சி இது என்றனர் - இப்பொய்யுரையைக் கூறிட உங்கட்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டனர், நாகர்.

நாகநாடு, வளமும் வசதியும் குறைந்த நிலையில் இருக்கிறது - நல்ல பாதைகள் - நவீன சாதனங்கள் - சமூக சேவை அமைப்புகள் - இவைகளுக்கெல்லாம் நாங்கள் பணம் தருகிறோம் வேண்டியமட்டும் - பெற்றுக்கொண்டு, நாட்டை அழகுபடுத்தி மகிழுங்கள் என்று டில்லி கூறிப் பார்த்தது. வழுக்கி விழுந்த வனிதை அல்லவா, மாலைக்கும் சேலைக்கும் மயங்குவாள்? நாகர்கள், டில்லியின் உதவித் தொகையைத் தீண்ட மறுத்தனர்.

ஊராட்சி மன்றங்கள் அமைக்கிறோம் - அவைகளிலே அமர்ந்து உங்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொண்டு, உரிமையைச் சுவையுங்கள் என்றனர்! கெண்டையை வீசி வராலைப் பிடித்திடும் தந்திரம் என்று கண்டு கொண்டனர்; தேர்தல்களை வேண்டாமென்றனர்.

டில்லியின் ஒப்பற்ற தலைவர்கள், ‘இராணுவம்’ புடை சூழப் பவனி வந்தால், காட்சி கண்டு கவர்ச்சி அடைவர் என்று எண்ணி, அந்த முறையையும் கையாண்டு பார்த்தனர் - பலன் இல்லை.

பிசோ, நாகர்களை மலைச்சாரல்களில், அடர்ந்த காடுகளில், சிற்றூர்களில், திரட்டினான் - தாயக விடுதலை ஆர்வத்தை ஊட்டிய வண்ணமிருந்தான். இப்புறமிருந்து டில்லியின் படைகள் தாக்கியதால், மலைப் பாதைகள் வழியாகக் காடு பல கடந்து, பர்மா சென்றனர் நாக நாட்டு விடுதலை வீரர்கள்; இந்தியாவின் நேசத்துக்குப் பாத்திரமாக இருக்கும் பர்மாவைத் தட்டிக் கொடுத்து, அங்குத் தஞ்சம் புகுந்த நாகர்களைத் துரத்திப் பிடித்தது டில்லி. இந்த முறைகளால் பலன் கிடைக்காது போகவே, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் திட்டத்தைக் கையாண்டு, நாகர் தேசியக் கழகம் எனப்படும் பாசறையில் பிளவு ஏற்படுத்தி, அதன் பயனாக விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கலாம் என்று முனைந்தது டில்லி - பத்து தலைவர்கள் கிடைத்தனர் என்று மகிழ்கிறது! அவர்களையோ நாகர்கள், ‘துரோகிகள்,’ ‘தூர்த்தர்கள்’ என்று கூறுகின்றனர்.

இந்தப் பத்துத் தலைவர்களும், நாகநாடு கோரிக்கையை மறுக்கவில்லை! பிசோவின் பலாத்கார முறையைக் கண்டிக்கிறார்கள்! ஆனால் பிசோ பலாத்காரம் என் கொள்கை அல்ல என்று முன்பே திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

அசாம் மாகாண முதலமைச்சர் விஷ்ணுராம்மேதி என்பவரைக் கண்டு பேசிப் பலாத்காரத்தைக் கண்டித்து பிசோ அறிக்கையே தந்திருக்கிறார்! எனினும் நாகர் விடுதலைக் கிளர்ச்சி என்பது பயங்கரமானதோர் பலாத்தார இயக்கம் எனவே அதனை ஒடுக்கியே தீருவோம் என்று டில்லி கொக்கரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையிலேதான், தம்பி! பண்டித பந்த் கிளம்பினார் நாக நாட்டுக்கு வருகிறார். அமைச்சர், வரவேற்பு வளைவுகள் அமையுங்கள். என்று அசாம் சர்க்கார் மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாகர்களில் மயக்கத்தில் சிக்கக்கூடியவர்களைப் பிடித்திழுத்து வைத்து பழகிய யானையைக் கொண்டு காட்டிலே யானைகளைப் பிடிக்கிறார்களாமே, அந்த முறைப்படி வேலைசெய்து பார்த்தனர் நாகர் விடுதலைக் கழகமோ, அமைச்சருக்காக ஏற்பாடாகும் வரவேற்பு வைபவங்களில் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டது. நெஞ்சு உரத்தையும் நேர்மைத் திறத்தையும் கவனித்தாயா தம்பி! வருகிறவர், பெரிய தலைவராக இருக்கலாம் - புகழ் தாங்கியாக இருக்கலாம் - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனும் சிங்கத்தை அதன் குகைக்குள்ளே பிடரியைப் பிடித்தாட்டிய பெரு வீரனாக இருக்கலாம் - ஆனால், நாகர்களைப் பொறுத்த வரையில், அவர் வெறுக்கப்படவேண்டிய பகைவன் என்பதிலே ஐயமில்லை. ஆகவே, வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நாகர் தலைவன் கூறுகிறார் - டில்லி அறிக்கையே, நாகர் தலைவனின் அறிக்கை வெற்றி பெற்றது ஓரளவுக்கு என்று குறிப்பிடுகிறது. தம்பி! இதற்குப் பொருள் என்ன தெரிகிறதா? பண்டித பந்த் பவனி வந்தார் - தோரணங்களைக் கண்டார் - கொடி அலங்காரம் தெரிந்தது -அதிகாரிகள் அசடு வழிய நின்றனர் - ஆனால், நாகர்கள் சீந்தவில்லை. இஃதல்லவா நாட்டு விடுதலை உணர்ச்சி வீறுடன் இருப்பதற்கான அறிகுறி! இங்கே? எண்ணும்போது வெட்கமும் பிறக்கிறது. வேதனையும் கொட்டுகிறது. டில்லி பாராளுமன்ற உறுப்பினர், திருச்சிப் பிரமுகர், கொடை பல தந்த குணவான், பெரியாரின் பேராதரவு பெற்ற சீமான், நேரு பண்டிதர் வந்தபோது, அவருக்கு மாலை சூட்டி, மகிழ்வூட்டி, பெருமிதம் அடையத் துடியாய்த் துடித்தாராம் - மனுச் செய்துகொண்டு, மாலை தயாரித்து மாளிகையை அலங்கரித்து விட்டு மாவீரன் நேரு வருகிறார். அவருக்கு மரியாதை செய்வோம் என்று ஆவலுடன் இருந்தாராம் - மனு நிராகரிக்கப்பட்டது - எமது மாபெருந் தலைவருக்குத் தாங்கள் அணிவிக்க விரும்பும் மாலையை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பதை அறிவித்துக்கொள்கிறோம் என்று சர்க்கார் அதிகாரிகள் கூறிவிட்டனராம்!

தம்பி! மதுரம் M.P. தரும் மாலையை ஏற்றுக்கொள்ள நேரு பண்டிதருக்கு நேரம் கிடைக்கவில்லை - பாட்டுக்கார அம்மாளைக் காணவும், ஆட்டம் ஆடும் அம்மாவிடம் பேசவும் இத்தனை பெரிய தலைவருக்கு நேரம் கிடைத்தது! என்று பெரியார் பேசினது தெரிந்தபோது, எனக்குக்கூட உருக்கமாகத்தான் தெரிந்தது! ஆனால், வேறொன்றைப் பார்க்கும் போது, வேதனைதான் பிறக்கிறது! நாகநாட்டுத் தலைவரிடம் எழுந்துள்ள நாட்டுப்பற்றுணர்ச்சி விடுதலை வேட்கை. வீராவேசம், மதுரம் அவர்களிடம் இருந்திருந்தால், மாலையும் கையுமாகவா காத்துக்கொண்டிருந்திருப்பார்? இங்கே மாலையும் கையுமாக மதுரம்! நேரமில்லை இதற்கெல்லாம் என்று கூறி அலட்சியப்படுத்தும் நேரு! தம்பி! நாகநாட்டிலே, வருகிறார் அமைச்சர், வரவேற்று உபசரியுங்கள் என்று சர்க்கார் சங்கு ஊதுகிறது; நாகநாட்டுத் தலைவன், நமக்கு அந்த வரவேற்பிலே வேலை இல்லை என்று கூறுகிறார்; நாகர்கள் நமது விடுதலைக் கிளர்ச்சியை ஒடுக்கும் பகைவனை நாம் வரவேற்பதா-மானக் கேடல்லவா என்று கூறுவதுபோல, வரவேற்பிலே கலந்து கொள்ளாது ஒதுங்கி விடுகிறார்கள்.

நாக நாடு! திராவிட நாடு ஒப்பிடும்போது, என்ன தோன்றுகிறது, தம்பி?

தம்பி! அதுமட்டுமல்ல, கோலாகலமாகப் பவனி வந்தார் அமைச்சர் - நாக நாட்டு விடுதலை வீரன், அவரைச் சட்டை செய்ய வில்லை - சென்று பார்க்கவில்லை!

நாக நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பண்டித பந்த் தெரிந்துகொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்?

நாக நாடு நாகருக்கே! என்ற திட்டத்தை விட்டுவிடுகிறேன். (டில்லி ஆதிபத்தியத்துக்கு) இந்திய குடியாட்சிக்குக் கட்டுப்படுகிறேன் என்று வாக்களித்துவிட்டு, அமைச்சரைப் பேட்டி கண்டு பேசலாம் என்றனராம் அதிகாரிகள். பிசோ இணங்கவில்லை, என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது! இணங்காததை வார்த்தைகளால் சொல்லி இருக்கமாட்டார் தம்பி! ஒரு அலட்சியமான புன்னகை மூலமே பதிலளித்திருப்பார்! பைத்தியக்காரர்களே! நாக நாடு நாகருக்கே எனும் என் இதயகீதத்தை இழந்துவிட்டு, இந்த உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கவா? என்ன பைத்தியக்காரத்தனம்! வெள்ளையனை எதிர்த்துச் சுயராஜ்யப் போர் நடத்தினீர்களாமே. உங்களுக்கு விடுதலை உணர்ச்சியின் மாண்பு விளங்காத காரணம் என்ன? கண்ணை விற்றுவிட்டுச் சித்தரம் வாங்குவதாம்! என்றெல்லாம் புன்னகை பேசியிருக்கும்,

“வறுமையை ஓட்டுவோம் - வாட்டத்தைத் துடைப் போம் - புது வாழ்வு அளிப்போம் - மான்யம் தாராளமாகவும் ஏராளமாகவும் அளிக்கிறோம் - தயக்கமின்றிக் கேளுங்கள் - தனி நாடு என்று மனப்பான்மை கூடாது - இந்தியாவில் இருந்தால் எல்லா வசதியும் கிடைக்கும்”-என்றெல்லாம் பண்டித பந்த் பேசினாராம்.

அமைச்சரைச் சூழ்ந்து நின்றிருந்த அதிகாரிகள், இடையிடையே (ஏற்பாட்டின்படி) கை தட்டி ஆரவாரம் செய்திருப்பர்! ஆனால், நாகநாட்டு விடுதலை வீரன் பிசோ? எந்தக் குன்றின்மீது நடந்து சென்றுகொண்டே வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர், வேறொன்று வேண்டுவரோ! என்ற பண் பாடியபடி புதிய பாசறைகளை அமைப்பதற்காக ஏறு நடை போட்டுக்கொண்டிருந்தானோ! இங்கே அலங்காரப் பந்தலின்கீழ் அமர்ந்து, அமைச்சர், படை பலம், பண பலம் ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது,

“தோழனே! விடுதலை கிடைத்திடும் அறிகுறி தெளிவாகி விட்டது....''

"வீரத்தலைவனே! மெத்த மகிழ்ச்சி; என்ன அறிகுறி கண்டிர்....''

“அறியாயோ, அதனை! நம்மை அடிமைகொண்ட அரசின் தலைவருள் ஒருவன் பவனி வருகிறான், நாக நாட்டில்”

“பெருமைக்குரியவரே! இதனையா நற்குறி என்கிறீர்? நமது தாழ்நிலையையன்றோ காட்டுகிறது இக்காட்சி?”

“இல்லை, நண்பனே! இல்லை! எதேச்சாதிகாரி பவனி வருகிறான், பவனியில் நமது மக்கள் இல்லை! பேசுகிறான் பிரமாதமாக, கேட்கும் நாகர் இல்லை!”

“மகிழ்ச்சி! மகிழ்ச்சி!”

“சீந்துவார் இல்லை!''

“தாங்கள் ஊட்டிய வீர உணர்ச்சி வீண் போகுமோ வீரத் தலைவ!”

“சீறினர்-சிந்தை நைந்தோமில்லை! தாக்கினர் அழிந்துபட வில்லை. பிளவு மூட்டினர் - பதர் பறந்தது! மயக்க வந்தனர் - மன்றத்தில் நாகர் இல்லை. மகத்தான எழுச்சி, மகத்தான உணர்ச்சி! மலைகளே, கேண்மின்! வெண்மேகங்களே, காண்மின்! நாக நாடு நாகருக்கே! அந்தப் பிறப்புரிமையைப் பறித்திடப் படையும் பணமும், சிரிப்பும் சீற்றமும், பவனியும் விழாவும் பயன்படுமா, கூறுக!”

“நாக நாடு நாகருக்கே!”

“ஆமாம்! நண்பனே! நாக நாடு நாகருக்கே, என்ற முழக்கம், குன்றெல்லாம் கேட்கட்டும், குறைமதியுடையோர்கள் தெளிவு பெறும் அளவுக்குக் கேட்கட்டும்! எங்கும் எழட்டும் அந்த இலட்சிய முழக்கம்.”

தம்பி! இதுபோல உரையாடிக் கொண்டிருந்திருப்பர், நாகர்கள்!!

அங்கே அது! தம்பி! இங்கே நாம்,
மாலையிட வந்தபோது - எந்தன்
மன்னவன் மறுத்துவிட்டானே

என்று சோக கீதம் கிளம்பக் காண்கிறோம்! திரு இடமே! நாக நாட்டினைப் பார்த்தேனும் வீறுகொண்டெழு என்று கூறத் தோன்றுகிறது, பண்டித பந்த் நாகநாடு சென்று சீந்துவாரற்றுத் திரும்பிய "சேதி' யைப்படித்தபோது. நான் மட்டும் முயன்றால் முடிகிற காரியமா? ஆகவேதான் தம்பி! உன்னிடம் கூறுகிறேன்! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அல்லவா!!

அன்புள்ள,

13-11-1955